(14) ராஜா ராஜா
காலை நாலு மணிக்கே விழிப்பு வந்துவிடும் ராஜாவுக்கு.
காரணம், காலை ஐந்தரைக்கு அவன் ஆபீசில் ஆஜராகிவிடவேண்டும். சென்னையின் மையமான பகுதிகளில்
சுமார் நூறு குடியிருப்புகளில் அவன் கம்பெனிக்குக் குப்பை அகற்றும் ஒப்பந்தம் இருந்தது.
காலை ஆறரை மணிக்குள் அந்தக் குடியிருப்புகளில்
இருந்து முதல்நாள் குப்பையை அகற்றியாகவேண்டும். கம்பெனிக்குச் சொந்தமான குப்பைக் கூண்டுகள்
போதுமான அளவில் ஒவ்வொரு குடியிருப்பிலும் வைக்கப்பட்டிருந்தன. அதற்கான ஆட்கள் அந்தந்தப்
பகுதியிலிருந்தே நியமிக்கப்பட்டிருந்ததால் தாமதமின்றி வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஆனாலும் காலை ஷிஃப்டுக்கு அதிகாரி என்ற முறையில் ராஜாவுக்கு முக்கியப் பொறுப்பு இருந்தது. பத்து நிமிடத் தாமதம் மட்டுமே - அதுவும் மாதத்தில்
ஒருநாள் மட்டுமே - அனுமதிக்கப்படும். எனவே காலை ஐந்தே முக்காலுக்குள் அப்படி வராத ஊழியர்களுக்குப்
பதிலாகத் தற்காலிக ஊழியர்களை அனுப்பும் கடமை ராஜாவினுடையது. விடிந்தும் விடியாத பொழுதில் மணித்துளிகளோடு போட்டிபோட்டுக்கொண்டு
முடித்தாக வேண்டிய அப்பணியில் ராஜா என்றுமே சோடை போனதில்லை.
அன்றும் அப்படித்தான். காலை ஆறுமணி சுமாருக்கு அட்டெண்டன்ஸ்
எடுத்தான் ராஜா. என்றும் இல்லாத அதிர்ச்சியாக அன்று சுமார் ஐம்பது குடியிருப்புகளில்
அவனது ஆட்கள் வேலையைத் தொடங்கவில்லை என்று சம்பந்தப்பட்ட குடியிருப்பு நலச் சங்கங்களில்
இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
உடனே தன் உதவியாளரிடம் விளக்கம் கேட்டான்.
“தலைமை அதிகாரியைத்தான் கேட்கவேண்டும். நேற்று இரவு
பத்துமணியளவில் சுமார் இருபது ஊழியர்கள் கூட்டமாக வந்து அவரிடம் ஏதோ பேசியிருக்கிறார்கள்.
அதன் விளைவுதான் இது. மற்றப்படி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் அந்த இளைஞன்.
உடனே தலைமை அதிகாரி அபிநவ்வைத் தொடர்புகொண்டான் ராஜா.
இணைப்பு கிட்டவில்லை. ஆனால் சில நிமிடங்களில் இன்னொரு ஊழியரின் போன் மூலம் அவரே பேசினார்.
“ராஜா, திடீரென்று
ஒரு சிக்கல் உண்டாகியிருக்கிறது. உன்னிடம் நேராகப் பேசவேண்டும். நீ அண்ணா நகருக்குக்
கிளம்பி வா. அதற்கு முன்னால், எந்தெந்தக் குடியிருப்புகளில்
இன்று நமது சேவைகள் தடைப்படுமோ, அவர்களிடம் பேசி பொறுத்துக்கொள்ளச் சொல். மாலைக்குள்
சரிசெய்துவிடுவோம் என்று உறுதி கொடுத்துவிடு” என்றார் அபினவ்.
***
அண்ணா நகரின் ஒரு வளமையான பூங்காவில் ராஜாவை வரவேற்றார் அபினவ். அவருடன் இன்னும் சில அதிகாரிகளும் இருந்தார்கள்.
எல்லாரும் ராஜாவின் அந்தஸ்தில் இருப்பவர்களே. எதிரில் சுமார் இருபது முப்பது ஊழியர்கள்
கம்பெனியின் சீருடையில் நின்றுகொண்டிருந்தார்கள்.
“ராஜா, இப்போது நாம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறோம்.
அதற்கு நீயோ, நானோ, இவர்களோ காரணமில்லை…” என்று இழுத்தார் அபினவ். ஐ.ஐ.ட்டி.யில் பொறியியலும்
ஐ.ஐ.எம்.அகமதாபாத்தில் எம்பிஏ வும் படித்து சுமார் ஐந்தாண்டுகள் இந்துஸ்தான் லீவரில்
பணியாற்றியபின் சொந்தத் தொழிலாக இதைத்தொடங்கியவர். அறிவொளி வீசும் களையான முகம். நம்பிக்கையூட்டும்
உடலசைவுகள். கொஞ்சமாகப் பேசியே எதிராளியை வசப்படுத்தும்
உத்தி இயற்கையாகவே அவருக்கு இருந்தது. தன்னை சி.ஈ.ஓ. என்றோ சார் என்றோ அழைப்பதைவிட,
அபினவ் என்றே அழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டதில் ஊழியர்கள் மத்தியில் அவருக்கு
மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது.
ஊழியர்கள் சீருடையில் இருந்தது ராஜாவுக்குச் சற்றே நிம்மதியளித்தது.
சுலபத்தில் தீர்த்துவிடக்கூடிய சிக்கலாகத்தான் இருக்கவேண்டும். இல்லையேல் சீருடையில் ஏன் வரவேண்டும்?
பூங்காவின் மையத்தில் இருந்த பசுந்தரையில் உட்கார்ந்தார்
அபினவ். அவரைத் தொடர்ந்து அனைவரும் அமர்ந்தார்கள்.
அனைவருக்கும் சூடான காப்பி வந்தது. சிலர் டீ தான் வேண்டும்
என்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள். சைக்கிளில் வந்த வியாபாரிக்கு அன்று திடீர் அதிர்ஷ்டம்.
“ராஜா, நாடு முழுவதும் கொரோனா பரவ ஆரம்பித்திருப்பதை
நீங்கள் அறிவீர்கள். நமது ஊழியர்களில் பலர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். குடும்பத்தைப்
பிரிந்து வசிப்பவர்கள். அதிலும் சில பெண் ஊழியர்கள் கர்ப்பமாகவும் இருக்கிறார்கள்.
ஆகவே தொழிலை விடவும் தங்களின் பாதுகாப்பையே
முக்கியமாகக் கருதவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கான
வாக்குறுதியை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இந்த நிமிடமே அந்த நம்பிக்கையை
ஊட்டினால்தான் இன்று தொழிலுக்குப் போவார்கள். எஞ்சியிருக்கும் ஊழியர்களும் இவர்களின்
செயலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். அதனால் நாளை நமது தொழில் முழுவதுமாக
முடங்கிவிடக்கூடும்” என்று ஆங்கிலத்தில் ராஜாவிடம்
கூறினார் அபினவ், முகத்தில் கவலையோடு.
ஊழியர்கள் ராஜாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு
இருந்தார்கள்.
ராஜா எழுந்து நின்றான். “அன்புள்ள நண்பர்களே! “ என்று
எப்போதும்போல் ஆரம்பித்தான். அனுபவ்வின் பேச்சுக்களில்
இருந்து அவனுக்கும் ஓரளவு பேச்சுத்திறன் வந்திருந்தது.
“கொரோனாவின் காரணமாக நீங்கள் பயம் கொண்டிருப்பது நியாயமானதே.
ஆனால் இப்படித் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தால் நமது தொழில் என்ன ஆகும்? நம்மை
நம்பி நூறு குடியிருப்புகளும் ஒவ்வொன்றிலும் டன்
கணக்கில் குப்பைகளும் நம்மை எதிர்பார்த்துக்
காத்திருக்கின்றன. நாம் மனிதர்களை ஏமாற்றலாம். குப்பைகளை ஏமாற்றலாமா? நமக்குச் சோறு போடுவதே அக்குப்பைகள் தானே!...” என்று கூறி நிறுத்தி
அவர்களின் முகங்களை ஆராய்ந்தான். கம்பெனியில்
இருக்கும் ஒவ்வொரு ஊழியனுடைய பெயர், வயது, குடும்பம் உள்பட ராஜாவுக்குத் தெரியாத தகவல்
இல்லை என்பதால் ராஜாவின் கண்களைச் சந்திக்க முடியாமல் அவர்களின் கண்கள் தாழ்ந்தன. கர்ப்பமாக
இருந்த இரண்டு பெண் ஊழியர்கள் மட்டும் ‘உடனே ஏதாவது செய்யுங்கள்’ என்று கண்களால் கெஞ்சினார்கள்.
ராஜாவால் இந்தச் சிக்கலை நிச்சயம் சமாளிக்க முடியும்
என்று நம்பினார் அபினவ். ஆகவே அடுத்து அவன் பேசப்போவதை உன்னிப்பாகக் கவனித்தார்.
“ஆகவே நண்பர்களே, எனக்காகத் தயவுசெய்து நாளை மாலை வரை
பொறுத்துக் கொள்ளுங்கள். நானும் அபிநவ்வும்
முதலில் கலெக்டரையும் பிறகு முதலமைச்சரையே கூட சந்திக்கமுடியுமா என்றும் பார்க்கிறோம்.
நமது கைகள் குப்பையை அள்ளினாலும் நமது உள்ளம் தூய்மையான அன்பினால் ஒன்றாகி இருப்பதை
நீங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்குமே யன்றித் தாழ வைக்காது.
எனவே அமைதியாக இன்று உங்கள் அலுவல்களைக் கவனியுங்கள். இது என் சார்பாகவும் அபினவ் சார்பாகவும்
அதே சமயம் உங்களால் பயன்பெற்றுக்கொண்டிருக்கும் குடியிருப்புகளில் வாழும் ஆயிரக்கணக்கான
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சார்பாகவும் செய்யப்படும் வேண்டுகோள் ஆகும்” என்றான் ராஜா.
பெரும்பாலானவர்கள் எழுந்து கலையத் தொடங்கினார்கள்.
சிலர் மட்டும் எழவேயில்லை.
“உங்களுக்கு என்மீது நம்பிக்கை இல்லை என்று தோன்றுகிறது.
அப்படித்தானே?” என்றான் ராஜா.
விசுக்கென்று அனைவரும் எழுந்தனர். “ராஜா சார்! இது
உங்களைப் பற்றிய விஷயம் அல்ல. கொரோனா எப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று யாருக்கும்
தெரியாது. இத்தாலியிலும் ஸ்பெயினிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் விழுவதைப்
பார்த்தால் எங்களுக்கு உலகத்தின்மீதே நம்பிக்கை போய்விடுகிறது. யாரும் இல்லாத அனாதைகள்
நாங்கள்!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.
அபிநவ்வும் ராஜாவும் அவனைச் சமாதானப்படுத்தினார்கள்.
“இன்று வேலைக்குப் போங்கள். நாளை இரவுக்குள் ஒரு முடிவு கிடைத்துவிடும்” என்றான் ராஜா.
தற்காலிகமாகச் சிக்கல் தீர்ந்தது. ஊழியர்களும் பிற
அதிகாரிகளும் கலைந்து சென்றனர். அபினவ் ராஜாவைப் பாராட்டினார். இருவரும் தங்கள் தலைமை
அலுவலகத்திற்குப் புறப்பட்டனர்.
****
அவர்கள் நிறுவனம் குப்பை அகற்றும் பணியில் இருக்கும்
ஒரு குடியிருப்பில் கலெக்டரின் மனைவியின் மூத்த சகோதரி வசித்துவந்ததால், அவர்மூலம்
உடனே கலெக்டரைச் சந்திக்க முடிந்தது ராஜாவால்.
“இவ்வளவு அவசரம் என்? நம் நாட்டில் கொரோனாவின் தாக்கம் இத்தாலி, ஸ்பெயின் அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்று சுகாதாரத்துறை
கருதவில்லை. ஆகவே இன்னும் ஒரு வாரம் பொறுங்கள். அதன்பிறகு யோசிக்கலாம்” என்றார் கலெக்டர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும்
முதல் மாவட்டமாகத் தன் மாவட்டம் அமைந்துவிட்டால் முதல்வரின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமே
என்ற அச்சம் அவருக்கு.
அபிநவ்வுடன் ஆலோசித்தான் ராஜா. “நமக்கு இரண்டு வழிகள்தான்
உள்ளன. ஒன்று இவர்களை இங்கேயே இருக்குமாறு வற்புறுத்தவேண்டும். அல்லது, இவர்கள் தங்களுடைய
சொந்த மாநிலங்களுக்குச் செல்ல உதவிசெய்யவேண்டும்” என்றான்.
“முதல் வழிதான் நல்லது. ஏனென்றால், இவர்களைப் போக விட்டுவிட்டால் மறுபடியும் எப்படி வரவழைப்பது? கொரோனா எப்படித்
தாண்டவமாடும் என்று யாருக்கும் தெரியாது. போனவர்கள் வராமலே இருந்துவிட்டால்? உள்ளூர்
ஆட்கள் நம் தொழிலுக்கு வரமறுக்கிறார்கள். வந்தாலும் கீழ்ப்படிதல் குறைவு!” என்றார்
அபினவ்.
ராஜாவுக்குத் தலையே சுழல்வதுபோல் இருந்தது. ஒரே சமயத்தில்
இவ்வளவு பேர்கள் தொழிலைவிட்டுப் போய்விட்டால், பதிலுக்கு அதே போன்ற பயிற்சிபெற்ற ஆட்களை
எங்கிருந்து கொண்டுவருவது? அதிலும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும்போது அசுத்தமான தொழிலுக்கு
யார் முன்வருவார்கள்?
“இல்லை அபினவ்! இவர்களை நாம் விட்டுவிடக்கூடாது. மிஞ்சி
மிஞ்சிப் போனால் கொரோனா இரண்டு மூன்று மாதங்கள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்!
அதுவரை இவர்களை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் நம் செலவில் குடியிருக்க வைத்தால் பிரச்சினை
தீர்ந்துவிடுமே! குடியிருப்பு சங்கங்களில் பேசினால் அவர்களும் முடிந்தவரை உதவி செய்யக்கூடும்”
என்று யோசித்தான் ராஜா.
அபினவ் ஆமோதித்தார். “ஆனால் நம்மிடம் அந்த அளவுக்கு
நிதி வசதி இல்லையே! சுமார் முன்னூறு பேர்களை அவ்வளவு காலம் சாப்பாடுபோட்டு இருக்க இடம்
கொடுப்பதென்றால் பல லட்சங்கள் செலவாகுமே, அதைக் கவனித்தீர்களா?” என்றார்.
ராஜா சிரித்தான். “விஷயம் அவ்வளவு பெரியதில்லை அபினவ்!
நாம் பிற மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் சுமார் அறுபது பேர்களை மட்டும் கவனித்துக்கொண்டால்
போதும். மற்றவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்தான்.
அவர்களுக்கு வீடு வாசல் உண்டு” என்றான் ராஜா.
“அப்படியா?” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அபினவ்.
“ஆமாம், அவசரத்தில் அதை மறந்தே போனேன். உண்மையில், பிற மாநிலத் தொழிலாளர்களை மூன்றில்
ஒரு பங்குக்கு மேல் எடுக்கவேண்டாம் என்று அப்போது ஆலோசனை கொடுத்ததும் நீங்கள்தானே!
உங்களுக்கு என் விசேஷமான நன்றிகள்!”
****
ராஜா வீடு திரும்பியபோது இரவு மணி பத்து.
எந்த ஊழியரும் தங்கள் மாநிலத்திற்குத் திரும்பவேண்டாம்
என்றும் கொரோனா பிரச்சினை தீரும்வரையில் இங்கேயே தங்குவதற்கு கம்பெனி செலவில் -உணவு
உள்பட- சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் செய்தி
அனுப்பினான்.
செம்பகம் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் அவனை வரவேற்றாள். “ஓ,
இன்று வெள்ளிக்கிழமையா?” என்று அவள் கன்னத்தை மெல்லத் தடவினான் ராஜா. வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை மணத்தில் மயங்கி அவளை முத்தமழையில் நனைப்பது ராஜாவின் பழக்கம்.
விளக்கு அணைந்தது. செம்பகம் தானே ஒரு மாலையாய் அவனைச் சுற்றிக்கொண்டாள்.
(தொடரும்)
வெளிமாநிலத் தொழிலாளர்களை முதலாளிகள் கைகழுவி விட்டதைத்தான் நிதர்சனத்தில் பார்த்தேன். கூட்டம் கூட்டமாக காவல் நிலையங்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கு வித்தியாசமான சூழல்.
பதிலளிநீக்குநாம் எப்பொழுதும் பாசிட்டிவ் ஆகத்தானே எழுதுவோம்!
நீக்குஅடுத்து நெக்லஸை காணாம்...!
பதிலளிநீக்குஆசை, தோசை, அப்பளம் வடை!
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குகொரோனா பற்றி ஓரிருவர்தான் பகிர்ந்திருக்கிறார்கள் ப்லாகில். நீங்கள் அதை நாவலாகவே தொடர்வது இப்போதுதான் பார்த்தேன். அருமை.
பதிலளிநீக்குமகிழ்ச்சி தேனம்மை அவர்களே! நம்காலத்தின் மாபெரும் அரக்கன் கொரொனா தானே! ஆகவே அதைக் கருவாகக் கொண்டு கதை எழுதுவது புதுமையாகவே இருக்கும் அல்லவா?
நீக்குஆஹா...எங்கெங்கோ கதை போகிறதே என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் முடிவாக சட்டென நெக்லஸில் வந்து நிறுத்தி முடித்தத விதம் அருமை..
பதிலளிநீக்குஒவ்வொரு விஷயத்தையும் டீடெயிலாக நீங்கள் அலசுவது பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்குஎது ஒன்றிலும் இவ்வளவு உள் விஷயங்களா என்று உணர்ந்து வாசிப்பவர்களை அவை திகைக்க வைக்கும். அவை பற்றித் தெரிந்து கொள்வதற்கான அறிவைக் (knowledge) கொடுக்கும்.
பெரும்பாலும் ஆங்கில நாவல்களில் தாம் காணப்படும் இப்படியான கள ஆய்வுகள் தொடருக்கு சிறப்பு கூட்டுகிறது.
மிக்க நன்றி ஐயா!
நீக்குதொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி ஐயா!
நீக்குகொரானா நுழைந்தது; இனி கதை சூடு பிடிக்கும்.
பதிலளிநீக்குகொரொனாவுடன் ரங்கதுரையும் நுழைந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? இரண்டு மடங்கு சூடு பிடிக்கும்தான்! பார்க்கலாம்!
நீக்குஇப்போதைய தனியார் சுத்தம் செய்யும் தொழில் பற்றிய விளக்கங்கள், அபார்ட்மென்ட் பற்றிய விவரங்கள் எல்லாமே நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் சார். சஸ்பென்ஸ் தான் இன்னும் ஊகித்தலிலேயே போகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆஆஆஆஆஆ இன்னும் சஸ்பென்ஸா....ஆனால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது சார். இனி ஊகிப்பேனா? நோ நோ..ஊகித்தாலும் இங்கு சொல்ல மாட்டேனே!!!
பதிலளிநீக்குகீதா
நெக்லசை விட்டு விட்டு குப்பை அள்ளுவதைப் பற்றியும், தொழிலாளர் பிரச்சினை பற்றியும், புலன்பெயர் தொழிலாளர் பற்றியும் நாட்டு நடப்பை ஒரு அலசு அலசிவிட்டீர்களே...பாராட்டுகிறோம். ஆனால் இதனால் கதையில் இருந்த பழைய விறுவிறுப்பும் tempo வும் குறைந்துவிட்டது.
பதிலளிநீக்குஅன்பு நண்பரே! முதல் இரவில் இருந்த விறுவிறுப்பை நூறாவது இரவிலும் எதிர்பார்ப்பது நியாயமா? கதை முடியவேண்டாமா?
நீக்கு👍👍👍🙏
பதிலளிநீக்குExcellent story on present situations