ஆச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 25, 2020

பொன்னித்தீவு-13


பொன்னித்தீவு-13

 -இராய செல்லப்பா
(13) சந்திரன் சந்திரன்

அகிலாவிடமிருந்து போன் வருமென்று சந்திரனுக்குத் தெரியும். உண்மையில் ஆச்சியிடமிருந்து மிஸ்டு கால்கள் இருந்தபோதே அவனுக்குப் புரிந்துவிட்டது, தன்னைத் தேடுகிறார்கள் என்று.

இது அவனாக விரும்பி மாட்டிக்கொண்ட சிக்கல் அல்ல. அவன்மேல் திணிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதிலிருந்து காயம்படாமல் வெளிவருவது முடியக்கூடிய காரியமாக அவனுக்குத் தோன்றவில்லை. தன்னுடைய எதிர்காலமே ஆபத்தில் இருப்பது புரிந்தது.

அப்படி அன்று என்னதான் நடந்தது என்று மனதிற்குள் அசைபோட்டான்.
 
மார்ச் முதல் வாரத்திலேயே பாடங்களை முடித்துவிட்டார்கள். ஏப்ரலில் வரும் செமெஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டுமானால் இப்போதிலிருந்தே படித்தாகவேண்டும். ஆனால் சில என்ஜினீயரிங் பாடங்கள் எளிதில் புரிகிற மாதிரியில்லை. கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆர்வமில்லாத நிலை. பாவம், அவர்கள் கையெழுத்துப் போடுவது ஒரு சம்பளம். கணக்கில் கிரெடிட் ஆவதோ அதில் பாதியளவுதானே!

மொட்டை மாடியில் நடந்துகொண்டே படித்தால் கடினமான பாடமும் மூளையில் நன்றாகப்  பதிந்துவிடுமென்று நண்பர்கள் சொன்னது ஒரு நம்பிக்கைக்  கீற்றாக அவன் கண்ணில் தெரிந்தது.

காலை ஆறுமணிக்கே மெயிண்ட்டனன்ஸ் ஆபீசில் இருந்து சாவியைப் பெற்றுக்கொண்டு, மொட்டை மாடியின் கதவைத் திறந்தான். தனது நோட்ஸ்களையும், சில  தடிமனான என்ஜினியரிங் புத்தகங்களையும் கையிலெடுத்துக்கொண்டு வந்திருந்தான். முதலில் ‘டெக்ஸ்ட் புக் -பிறகு நோட்ஸ்’ என்ற வரிசைப்படி நடந்துகொண்டே படிக்கலானான்.

கிழக்கில் உதித்த இளஞ்சூரியன் இன்னும் கடுமை காட்டத்  தொடங்கவில்லை. சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த கொன்றை மரங்கள் இலேசான காற்றைத் தூவிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமமின்றி மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டான் சந்திரன். நண்பர்கள் சொன்னபடியே பாடங்கள் எளிதாக மனதில் ஏறத் தொடங்கிவிட்டன. அடடா, இவ்வளவுநாள் இந்த இரகசியம் தெரியாமல் போய்விட்டதே!

ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவனுக்குப் பின்னால் ‘தொப்தொப்’பென்று  ஐந்தாறு குரங்குகள் கொன்றை மரங்களில் இருந்து குதித்தன.  ஆண்குரங்கு, பெண் குரங்கு, குட்டிக்குரங்குகள் என்று ஒரு குடும்பமே அங்கிருந்தது. சந்திரனுக்கு நடுக்கமெடுத்தது. தனியொருவனாக அந்த வானரப்படையை எப்படிச் சமாளிப்பதென்று அவனுக்கு விளங்கவில்லை.

திடீர் யுக்தியாகத் தன் கையிலிருந்த தடித்த புத்தகத்தைக் கீழே போட்டான் சந்திரன். அதனால் எழுந்த ஓசையில் அதிர்ச்சியடைந்த குரங்குகள் வேகமாகப் பின்வாங்கி ஓடின. அவர்கள் பற்றிக்கொண்ட கொன்றை மரத்தின் கிளைகள் ஆவேசமாக அசைந்தன.

அதற்குமேல் மொட்டைமாடியில் நிற்பதற்கு சந்திரனுக்குத் துணிச்சல் இருக்கவில்லை.  மொட்டை மாடியில் படிக்கச் சொன்ன நண்பர்கள், குரங்குகளைப் பற்றி சொல்லாதது ஏன் என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது. 

ஒருவேளை அவர்கள் குடியிருப்புகளை குரங்குகள்  ஆதரிப்பதில்லையோ என்னவோ!

விறுவிறுவென்று இறங்கினான். அவசரத்தில் மாடிக்கதவைத் தாழ்போட மறந்துவிட்டான்.

***
வக்கீல்  மாமிக்காக மொட்டைமாடியில் வடாம் உலர்த்த வந்தாள்  செம்பகம்.   லிஃப்டில்   நான்காம் தளத்தை அடைந்ததுமே மொட்டைமாடிக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். யாராவது ஆண்கள் இருக்கக்கூடும். தனியாகப் போவது பாதுகாப்பற்றது.

ஆகவே, வடாம் தட்டுக்களைக் கையிலிருந்து இறக்காமல், அதே தளத்தில் இருந்த ஆச்சியின் வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவைத்திறந்த ஆச்சியிடம் கண்களாலேயே விஷயத்தைச் சொன்னாள்.

“இரு செம்பகம், எனக்கும் மிளகாய் வற்றல் உலர்த்தவேண்டும். எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று ஆச்சி தானும் இரண்டு பெரிய தட்டுகளில் மிளகாயுடன் மொட்டை மாடிக்கு வந்தார்.

மாடியில் அப்போது யாரும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சந்திரன் பெயர் எழுதப்பட்ட ஒரு நோட்டு அங்கே இருந்ததால் அவன் வந்துபோயிருக்கவேண்டும் என்று நினைத்தார் ஆச்சி. அதைக் கையில்  எடுத்துக்கொண்டார்.

அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த தட்டுகளை நன்றாக வெயில் வரும் இடமாகப் பார்த்து வைத்தார்கள்.

“சரி, நீ போகலாம் செம்பகம்! நான் கதவைச் சாத்திக்கொண்டு போகிறேன். நாலு மணிக்கு வா, அதற்குள் இதெல்லாம் நன்றாக உலர்ந்துவிடும்” என்றார் ஆச்சி.

புன்னகையின் மூலம் பதில் சொல்வதுதானே வாய்பேச முடியாத செம்பகத்தின் வழக்கம்! ஆச்சியைப் பார்த்துப் புன்னகைத்தபடி கதவுப்புறமாகத் திரும்பினாள். அப்போது அவள் கண்ணில் பட்டது, சுற்றுத் தொலைவில்  சிதறிக்கிடந்த பல பொருட்கள். குரங்குகளின் வேலை. ஆச்சியிடம் காட்டினாள்.

தேங்காய்மூடிகள், மேகி நூடுல்ஸ் பேக்குகள், சில ஸ்பூன்கள், நெய் வைத்த கிண்ணங்கள்,  ஒரு கிழிந்த துணிப்பையும் அதிலிருந்து சிதறிக்கிடந்த வேர்க்கடலைகளும்  ….. என்று என்னென்னவோ தென்பட்டன. அவற்றைத்தாண்டி அட்டைப்பெட்டி ஒன்றும் கிடந்தது. அதைக் கொண்டுவந்து ஆச்சியிடம் கொடுத்தாள் செம்பகம். அது ஒரு நகைப்பெட்டி என்பதும், நகைக்கடையின் பெயர் அதன்மீது எழுதப்பட்டிருப்பதும்  அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆச்சி விஷயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “பாருடி செம்பகம், இந்தக் குரங்குகள் பண்ணும் அட்டகாசத்தை! ஊரில் இருக்கும் குப்பையை எல்லாம் இங்கே கொண்டுவந்து கொட்டிவிட்டது! நான்தான் இதையெல்லாம் க்ளீன் பண்ணவேண்டும். தலைவிதி!” என்று அலுத்துக்கொண்டார்.

வழக்கம்போல் புன்னகையுடன் செம்பகம் லிஃப்டை நோக்கி நடந்தாள். 

அந்த அட்டைப் பெட்டியை மட்டும் தூக்கியெறிந்துவிட்டு, உள்ளிருந்த நகையை -அது ஒரு நெக்லஸ்- புடவைக்குள் மறைத்துக்கொண்டு மாடிக்கதவைச்  சாத்தினார் ஆச்சி.

பிறகு சந்திரனுக்கு போன் செய்தார்.

***
“ஆச்சியம்மா, என்னை வம்பு வழக்கில் மாட்டிவிட மாட்டீர்களே?” என்று தயக்கமும் பயமுமாகக் கேட்டான் சந்திரன்.

ஆச்சியின் கையில் ஒரு நெக்லஸ் இருந்தது. “இதோ பார் சந்திரா! இந்த நகையை ஒரு குரங்கு எடுத்துவந்து மொட்டை மாடியில் போட்டது என்றால் யாராவது நம்புவார்களா?”

மாட்டார்கள் என்றுதான் சந்திரனுக்குத் தோன்றியது.

“ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் இது யாருடையது தெரியுமா?”  
          
“உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.   இதுமாதிரி ஒரு நெக்லஸை யமுனாவிடம் பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அவள்தான் நகைகள் விஷயத்தில் எப்போதுமே அலட்சியமாக இருப்பாள்!”
 
சந்திரன் துள்ளிக் குதித்தான். “இப்பவே நான் போய் இந்த நெக்லஸை யமுனா அக்காவிடம் கொடுத்துவிடுகிறேன். அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா?”

அவனை ஏளனமாகப் பார்த்தார் ஆச்சி. “முட்டாள்தனமாகப் பேசாதே! இந்த நெக்லஸ் காணாமல் போனதே அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ! அதனால் இதைக் கொண்டுபோய்க் கொடுத்தால் உன்னைத்தான் திருடன் என்று நினைத்துக்கொள்வாள். அது மட்டுமல்ல, வேறு என்னென்ன ஐட்டம்களைத் திருடினாய் என்று கேள்விவரும்!  உன்னை  போலீஸ் பிடித்துக்கொண்டுபோகும்!”
  
“ஏன்? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்றான் சந்திரன் வெகுளியாக. “நீங்கள்தானே சொன்னீர்கள்,  குரங்குதான் தூக்கிக்கொண்டுபோட்டதென்று.”

“ஆனால் குரங்கை ஜெயிலில் போட முடியாதே! ஆகவேதான் உன்னைப் பிடிப்பார்கள்” என்று சிரித்தார் ஆச்சி.

சந்திரனுக்குப் பயம்போய்,  பைத்தியம் பிடிக்கும்போல் ஆகிவிட்டது. “ஆச்சியம்மா, நீங்கள் இதை என்னவாவது செய்துகொள்ளுங்கள். நான் போகிறேன்” என்று கிளம்ப  முற்பட்டான்.

“அவ்வளவு எளிதாக உன்னைப் போக விடுவேனா?” என்றார் ஆச்சி. “நீ போய்விட்டாலும் என்றாவது ஒருநாள் யமுனா நகை காணாமல் போனதைக் கண்டுபிடிக்கும்போது உன்னைத்தான் பிடிப்பார்கள் என்பதை மறந்துவிடாதே! நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன்!” என்று கோபத்துடன் கத்தினார்.

“அப்படியானால் நான் என்னதான் செய்யவேண்டும்?” என்று விரக்தியுடன் கேட்டான் சந்திரன்.

பீரோவில் இருந்து தனது லாக்கர் சாவியை எடுத்தார் ஆச்சி. “நமது குடியிருப்பிலேயே  லாக்கர் சர்வீஸ் இருப்பது தெரியுமல்லவா? இதோ இந்த நகையை நீயே போய் எனது லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டு  சாவியைக் கொடு” என்றார். நெக்லஸை ஒரு புதிய அட்டைப்பெட்டியில் வைத்துக்கொடுத்தார்.

பிறகு லாக்கர் சர்வீஸ் மேனேஜருக்குப் போன் செய்தார். தான் நேரில் வரமுடியாததால் தன் மகனை அனுப்புவதாகவும் அவனை அனுமதிக்கும்படியும் கூறினார். அந்தக் குடியிருப்பிலுள்ளவர்களுக்கு மட்டுமேயான லாக்கர் சர்வீஸ் என்பதால் இம்மாதிரி கோரிக்கைகளை மேனேஜரால் மறுக்கமுடிவதில்லை. சரியென்றார்.

கால்மணி நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு ஆச்சியிடம் சாவியைத் திருப்பிக்கொடுத்தான் சந்திரன்.

ஆனால் நெக்லஸ் பெட்டியை அவன் உள்ளே வைக்காமல் தன்னிடமே வைத்துக்கொண்டது ஆச்சிக்குத் தெரியவா  போகிறது?

ஆனால் அகிலாவுக்குத் தெரிந்துவிட்டது. நெக்லஸை அவளிடம்தானே கொடுத்தான் சந்திரன்!

(தொடரும்)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

சனி, மே 23, 2020

பொன்னித்தீவு-12

பொன்னித்தீவு-12

 -இராய செல்லப்பா

(12) ஆச்சி ஆச்சி


சதுர அடிக்கு இரண்டு ரூபாய் வீதம் மாதாமாதம் மெயின்டனன்ஸ் சார்ஜ் வசூலிக்கும் குடியிருப்பு அது. காலை ஏழு மணி முதலே மெயின்டனன்ஸ் ஆபீஸ் என்ற பெயரில் ஒரு ஆபீஸ் இயங்கிக்கொண்டிருக்கும்.  நானூறு  சதுர அடியில் நான்கைந்து பேர் பணிபுரிந்து கொண்டு இருப்பார்கள். குடியிருப்பாளர்கள் அங்கிருந்த பெரிய ரிஜிஸ்டரில் தங்கள் குறைகளை எழுதி வைத்து விட்டுப்  போகலாம். வரிசைக் கிரமப்படி அந்தக் குறைகளை ஆள் அனுப்பிச் சரி செய்வார்கள். 

அந்த ஆபீஸில் ஆச்சிக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. காரணம் அவருடைய வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் அங்கு பணி புரிந்தார்கள். தான் செய்யும் இனிப்பு வகைகளையும், பரிசோதனை முயற்சியாகச் செய்து பார்க்கும் பிற தின்பண்டங்களையும் அவர்களுக்கு மிகுந்த அன்போடு கொடுப்பார் ஆச்சி. மறுநாள் அவர்கள் உடல்நலத்தோடு பணிக்கு வந்தார்களா என்று நேரில் வந்து தெரிந்தும் கொள்வார். அதன்மூலம் தொலைக்காட்சியில் நடிகைகள் தயாரித்துக்காட்டும் புதிய உணவுப்பண்டங்களைத் தானும் தயாரித்துப் பார்க்கும் தன்னம்பிக்கை மேலும் மேலும் அவருக்கு ஏற்பட்டது.  

முதல் நாள் இரவு ஹரிகோபால் குழுவினருடன் மொட்டை மாடிக்கு யமுனா சென்று வந்ததைக் கேள்விப்பட்ட ஆச்சி, விடிந்ததும் விடியாததுமாக மெயின்டனன்ஸ் ஆபீசுக்கு ஓடினார்.

ஆபீஸ் கதவு வழக்கம்போலவே அடையா நெடுங்கதவாகத் திறந்திருந்தது. முழுவேகத்தில் இரண்டு காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. மூன்று இளைஞர்கள் லுங்கி, பனியனோடு தரையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை விரித்து அதன்மேல் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பாமல் பூனைபோல நடந்து சென்று, கம்ப்ளெயிண்ட் ரிஜிஸ்டரைத் திறந்தார் ஆச்சி.

முதல் பக்க அட்டவணையில் எட்டாவது பொருளாக ‘மொட்டை மாடி’ இருந்தது. அந்தப் பக்கத்தைத் திருப்பினார்.

கடந்த நான்கு மாதங்களில் மொட்டை மாடிக்குப் போன ஒரே ஆள் யார் என்பதைத் தெரிந்து கொண்டார். சற்றே அதிர்ச்சியடைந்தார். "மொட்டை மாடியில் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை அகற்றிச் சுத்தப்படுத்த வேண்டும்" என்று அந்த நபர் எழுதிக் கையொப்பமிட்டு இருந்தார். அந்தப் புகார் இன்றுவரையும் தீர்க்கப்படாமல் இருந்தது. ஏனெனில் தீர்க்கப்பட்டிருந்தால் புகார் எண் சுழிக்கப்பட்டு சிவப்பு மசியால் 'குறை தீர்த்த தேதி' எழுதப்பட்டிருக்கும். 

அவசரமாக யமுனாவைச் சந்தித்தார் ஆச்சி. சந்திரனுக்கு ரீடைரக்ட் ஆகி வந்த கடிதத்தை அவன் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிந்தது. அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். கடந்த மூன்று நாட்களாகவே அவன் தன் அறைக்கு வரவில்லை. கொரோனா  கெடுபிடியில்  வேறு எங்கு போயிருப்பான்?

இந்தக் குடியிருப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் போனாலே அடுத்த மாவட்ட எல்லை வந்துவிடும். ஒருவேளை மாவட்ட எல்லையில் இவனைத் தடுத்துத்  தனிமைப்படுத்திவிட்டார்களோ?  யாரிடம் கேட்பது?

"ஆல்பகோடாப் பழம் சாப்பிட்டாயா?" என்று சம்பிரதாயத்திற்காக யமுனாவிடம் கேட்டுவிட்டுத் தன் வீட்டுக்கு விரைந்தார் ஆச்சி.

சந்திரனை அலைபேசியில் அழைத்தார். மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அப்போது 'நீங்கள் அழைத்த நபர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற பதிவுச்செய்தி  வந்தது.

'ஒரு வேளை…?' என்று அலைபேசியில் இன்னொரு எண்ணை அழைத்தார் ஆச்சி. அந்த எண்ணும் 'பிசி'யாகவே இருந்தது.

ஆச்சியின் சந்தேகம் உறுதியானது. 

அரைமணிநேரம் கழித்து அதே இரண்டு எண்களை அழைத்தார். மறுபடியும் அதே பதில்: ‘ ….வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.’ இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கிறார்களோ? 

மொட்டைமாடி விஷயம் தீவிரமாவதற்குள் சந்திரனைப் பார்த்துவிட வேண்டும் என்று துடித்தார் ஆச்சி. அல்லது  அகிலாவையாவது.    

*** 
“அகிலா அட்ரஸ் எனக்குத் தெரியும்” என்றான் ஸ்ரீவாஸ்தவா. அதே குடியிருப்பில் வாடகைக்கு இருந்துகொண்டு மருத்துவம் பயிலும் பல மாணவர்களில் ஒருவன். வங்காளி. இந்த மூன்று வருடங்களில் தமிழை  நன்றாகப் பேசப் பழகிக்கொண்டுவிட்டவன். அகிலா முதலாம் ஆண்டு மருத்துவம் படிப்பவள். மடிப்பாக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். 

ஸ்ரீவாஸ்தவாவின் காரில் டாக்டருக்கான இலச்சினை ஒட்டப்பட்டிருந்ததாலும், அவனுடைய கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் தொங்கிக்கொண்டிருந்ததாலும்  கொரோனா போலீஸ் வழியில் பல இடங்களில் இடைமறித்தாலும்  அவனது பயணம் தடைப்படவில்லை. 

ஆனால், லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்த பின்தான் தெரிந்தது, அது மூடப்பட்டு ஒருமாதம் ஆகிவிட்டதும், தங்கியிருந்தவர்கள் எல்லாரும் சொந்த ஊர்களுக்குப் போய்விட்டதும்!    

“ஆமாம் ஆண்ட்டி! எங்கள் காலேஜ் மூடியே ஒரு மாதம் ஆகிவிட்டதே! எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே! சாரி” என்றான் ஸ்ரீவாஸ்தவா. 

“எப்படியாவது அவளைக் கண்டுபிடிக்கவேண்டும். போன் செய்தாலும் எடுக்கமாட்டேன் என்கிறாள்!” என்றார் ஆச்சி.  “வேறு ஏதாவது ஐடியா தோன்றுகிறதா உனக்கு?”

அதற்குள் ஸ்ரீவாஸ்தவா இன்னொரு மாணவனுக்குப் போன் செய்தான். அவனிடம் ஆச்சி நம்பரைக் கொடுத்து உடனே அகிலாவைப் பேசுமாறு தகவல் அனுப்பச் சொன்னான். அவனுடைய  டீமில்தான் அகிலா ப்ராஜக்ட் செய்துகொண்டிருந்தாள். “ஆகவே கட்டாயம் போனை எடுப்பாள்” என்றான் ஸ்ரீவாஸ்தவா.

அடுத்த சில நிமிடங்களில் ஆச்சியின் அலைபேசியில் வந்தாள் அகிலா. சொந்த ஊருக்குப் போக இரயிலோ பஸ்சோ இல்லாததால் தனது தூரத்து உறவினர் வீட்டில் வேளச்சேரியில் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்தால் தன்னைச் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தாள். ஸ்ரீவாஸ்தவாவும் சரி என்றான். 
*** 
வேளச்சேரியில் சாக்கடையும் சதுப்புநிலமும் கொசுக்களின் படையும் சூழ்ந்திருந்த  பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் பின்னணியில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஏழுமாடிக் குடியிருப்பின் ஐந்தாம் மாடியில் அகிலாவைப் பார்த்தார் ஆச்சி.  

ஊரெங்கும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும் வேளையில் ரிஸ்க் எடுத்துக்கொண்டு ஆச்சியம்மா தன்னைப் பார்க்க வரவேண்டிய அவசரம் 
என்னவாக இருக்கும் என்று அகிலாவுக்குப் புரியவில்லை.

நான்கு படுக்கையறை கொண்ட வீடு. அகிலாவுக்குத் தற்காலிகமாக ஒரு தனியறையைக் கொடுத்திருந்தார்கள். 

ஸ்ரீவாஸ்தவாவை ஹாலில் உட்காரவைத்துவிட்டு ஆச்சியுடன் தன்  அறைக்குச் சென்றாள் அகிலா.

ஆச்சி அவளுடைய காதருகில் நெருங்கி மெல்லிய குரலில் ஆனால் திடமாகப் பேசினார்: “அகிலா, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா? எத்தனை முறை நான் உன்னை எச்சரித்திருக்கிறேன்?”

ஒருவாறு புரிந்தது அகிலாவுக்கு. சந்திரன் விஷயமாகத்தான் ஆச்சி வந்திருக்கிறார்.  

ஆச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டு புன்னகைத்தாள் அகிலா. “அம்மா, நான் உங்களை மீறி நடப்பேனா? உங்களை என் அம்மாவைப் போலவே மதிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.

“இல்லை. இல்லை. எனக்குத் தெரியாமல் என்னென்னவோ நடந்திருக்கிறது. இப்போது அவன் எங்கிருக்கிறான்? மூன்று நாட்களாக அவன் அறைக்கே  வரவில்லை. போனையும் எடுக்க மறுக்கிறான்.”

“சந்திரனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா! அவன் பத்திரமாகத்தான் இருப்பான். அவனுக்கும் ராஜா என்பவருக்கும் ஏதோ பிரச்சினையாம். போலீஸ்வரை போயிருக்கிறதாம். அதனால்தான் அவன் போன் நம்பரைக்கூட மாற்றியிருக்கிறான். சீக்கிரம் அவனை உங்களுடன் பேச வைக்கிறேன்” என்றாள்  அகிலா.

சீக்கிரம் அவன் பேசாவிட்டால் மொட்டைமாடிக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ள  பிரச்சினையும் போலீசுக்குப் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டார் ஆச்சி.  

அகிலா ஆச்சியைக் கட்டிக்கொண்டு விடைகொடுத்தாள். “கவலை வேண்டாம் அம்மா, எல்லாம் நன்றாகவே முடியும்” என்றாள்.   

பிறகு இருவருக்கும் லெமன் ஜூஸ் கொடுத்தாள். தன்  சீனியரான ஸ்ரீவாஸ்தவாவுக்கு நன்றி சொன்னாள். அவனுடைய பெற்றோர்களைப்  பற்றியும், தங்கள் கல்லூரியைப் பற்றியும், முடிவில் கொரானாவைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினாள்.   

“சந்திரனிடம்  உடனே பேசு. நாளை வரைதான்  பொறுத்துக்கொள்வேன் என்று சொல்” என்று எழுந்தார் ஆச்சி. 

“அகிலா, உனக்கு மீண்டும் சொல்கிறேன். நீ அந்தஸ்துள்ள பெண். உன் அப்பா பெரிய வியாபாரி. சந்திரன் குடும்பமோ ரொம்ப சாதாரணமானது. அத்துடன் நீ மெடிக்கல் படிக்கிறாய். அவனோ எதற்கும் பயனில்லாத ஒரு எஞ்சினீரிங்கில் இருக்கிறான். உங்கள் இரண்டு பேருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. புத்திசாலியாக இரு. அவ்வளவுதான் சொல்லமுடியும்.” 

அகிலாவின் முகம் சற்றே இருண்டது. 

(தொடரும்)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செவ்வாய், மே 19, 2020

பொன்னித்தீவு -10


பொன்னித்தீவு -10
  
    -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(10) ஆச்சி ஆச்சி 

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியதும், ஆதார் கார்டின் எண்களை ஒப்பிட்டுப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமசிவம், செல்வத்தை அழைக்கும்படி யமுனாவிடம் சொன்னார்.

அவன் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ செய்துகொண்டிருந்தான். குறிப்பாக, அந்த நிமிடம்தான் லேப்டாப் மூலம் ஒரு வெளிநாட்டு கான்ஃபரன்ஸ் காலில் இணைந்திருந்தான். ஆகவே எழுந்து கதவைத் திறக்கமுடியவில்லை.

யமுனா மிக லேசாகக் கதவைத் தட்டினாள். அதிகம் தட்டினால் அவனுடைய வேலை தடைப்படுமோ என்று பயந்தாள். ஆனால் அடுத்த ஒருமணி நேரம் அவன் திறக்கவேயில்லை. பிறகு அவனாகவே வெளிவந்தான்.

அதுவரை யமுனா பொறுமையிழந்தவளாகக் கதவருகிலேயே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தாள். பரமசிவமோ இன்னொரு சூடான காப்பியைக் குடித்துவிட்டுத் தயாராக இருந்தார், அவனை  எதிர்கொள்வதற்கு.  

“சாரி யமுனா! கான்ஃபரன்ஸ் காலில் இருந்தேன். ஒரு நல்ல செய்தி தெரியுமா? எனக்கு புரொமோஷன் கொடுத்திருக்கிறார்கள்” என்றான்.

பரமசிவம் மகிழ்ச்சியோடு அவனருகில் வந்தார். “அப்படித்தான் நடக்கும். குழந்தைச் செல்வம் என்பது எப்போதும் தனியாக வராது. கூடவே பெற்றோர்களுக்குச் சீரும் சிறப்பையும் கொண்டுவரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்” என்று யமுனாவைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.

செல்வம் அவனுடைய கம்பெனியின் அம்பத்தூர் கிளைக்கு மேலாளராகப்  போகவேண்டுமாம். கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சாதாரணமான பின் போய் ‘சார்ஜ்’ எடுக்கவேண்டும்.  பதவி உயர்வு என்பதால் சில ஆயிரங்கள் சம்பள உயர்வும் கிடைக்கும். கார் அலவன்ஸ் என்று ஆறாயிரமும் உண்டாம். சில வியாபார நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு நாள் விடுமுறையாகத் தெற்காசிய நாடுகளுக்கு மனைவியுடன் சென்றுவரும் சலுகையும் கிட்டுமாம்.  செல்வம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்துகொண்டிருந்தான்.

இந்த நேரம் பார்த்து நெக்லஸ் விஷயம் பேசுவதா என்று யோசித்தார் பரமசிவம். சரி, மாலையில் பேசலாம் என்று ஒத்திப்போட்டார்.

“பதவி உயர்வு என்றால் சுகமான சுமை என்று உன் தாத்தா சொல்வார். முதலில் சுமக்கத் தயாராகவேண்டும். அதுவே பழகிப்போய் சுகமாக முடியும். ஆனால் எல்லாரிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருங்கிய நண்பர்களே ஆனாலும் ஆராயாமல் நம்பிவிடக் கூடாது. அதே சமயம் கண்மூடித்தனமாக மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவும் கூடாது. ஏனென்றால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள்  நம்மை ஆபத்தில் சிக்கவைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று தன் அனுபவ அறிவைச் செல்வத்துடன் பரிமாறிக்கொண்டார்.

செல்வம் அவரை நன்றியுடன் பார்த்தான். யமுனா அதற்குள் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்தவள், கையில் இரண்டு தம்ளர்களில் சேமியா பாயசத்துடன் வந்தாள். “இது புரொமோஷன் பாயசம் -அட்வான்ஸாக!” என்றாள்.

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஆச்சியம்மாவுக்கு எப்படியாவது மூக்கில் வேர்த்துவிடும். இலேசாகத் திறந்திருந்த வாசற்கதவின்மேல் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளேவந்தார். அவர் கையில் ஒரு கடித உறை இருந்தது. இருவரும் பாயசம் குடிப்பதைக்கண்டு வியப்போடு பார்த்தார். யமுனா அவருக்கும் ஒரு தம்ளரில்  கொடுத்தாள்.

“மாப்பிள்ளைக்கு புரொமோஷன் வரப்போகிறது!” என்றார் பரமசிவம் புன்சிரிப்புடன்.

“வாழ்த்துக்கள்” என்று செல்வத்தைக் கைகுலுக்கப் போன ஆச்சி, கொரோனாவை நினைத்துப் பின்வாங்கினார்.

அதற்குள் செல்வத்திற்கு மீண்டும் ‘கால்’ வரவே, உள்ளே நுழைந்து கதவைச்  சாத்திக்கொண்டான்.

அங்கிருந்த நாற்காலியில் சுதந்திரமாக அமர்ந்து கொண்டார் ஆச்சி. “யமுனா வா, உட்காரும்மா” என்று கனிவுடன் அவளைத் தன் அருகில் இருத்திக்கொண்டார். “உங்க அம்மா செங்கல்பட்டில் என்ன செய்கிறார்? இப்படிப்பட்ட சமயத்தில் பொண்ணைத் தனியாக விடலாமா? பார்த்துப்  பார்த்துச் செய்யவேண்டாமா? ஆசைப்பட்டதைச் சமைத்துப் போடவேண்டாமா? பாவம், உனக்கு மாமியாரும் இல்லையே ….” என்றார்.

“நீங்கள் சொல்வது நியாயம்தான். இன்னும் சில வாரங்களுக்குப் பார்வதி இங்கேயே இருந்து பார்த்துக்கொள்வாள்” என்றார் பரமசிவம்.

“அதுதான் நல்லது” என்ற ஆச்சி, “யமுனா, எனக்கொரு உதவி செய்கிறாயா? நான் 72 பிளாக்கில் ஒரு துக்கம் விசாரிக்கப் போகவேண்டும். ரொம்ப வேண்டியவர்கள். திரும்புவதற்கு இராத்திரி ஆகிவிடும். அதனால் இந்த லெட்டரை சந்திரன் வந்து கேட்டால் கொடுத்துவிடுகிறாயா?” என்று கடித உறையை அவளிடம் கொடுத்தார். “அவனுடைய பழைய முகவரிக்கு வந்ததை யாரோ ரீ-டைரக்ட் செய்திருக்கிறார்கள்!”

அதை வாங்கிக்கொண்ட பரமசிவம், “யார், அந்த செகண்ட் இயர்  எஞ்சினீரிங் பையனா? தெரியுமே! வந்தால் கொடுத்துவிடுகிறேன்” என்றார். 

ஆச்சி கிளம்பியவுடன் ஏனோ அதன் மேலிருந்த முகவரியைப் பார்க்கவேண்டும்போல் தோன்றியது. செம்பரம்பாக்கம் முகவரி. அதைச் சிவப்பு மசியால் அடித்துவிட்டு, இந்த முகவரியை எழுதியிருந்தார்கள்.  

துணுக்குற்ற பரமசிவம், பாரஸ்மல் இடமிருந்து எழுதிக்கொண்டுவந்த முகவரியை எடுத்துப் பார்த்தார். அதே முகவரிதான்! வீட்டு எண்ணும் அதே, தெருப்பெயரும் அதே, பின்கோடும் அதே!  

அப்படியானால்…நெக்லஸை பாரஸ்மல் கடையில் அடகுவைத்தவன் சந்திரனா?  வேண்டுமென்றே பெயரை மட்டும் மாற்றிக் கொடுத்திருக்கிறானா? அவனுக்கு எப்படி நெக்லஸ் கிடைத்தது?

ஒருவேளை செல்வமே இவனிடம் கொடுத்து அடகுவைக்கச் சொல்லியிருப்பானோ? அந்த அளவுக்குச் செல்வம் துணிய மாட்டான் என்பதுடன், யமுனாவுக்குத் தெரியாமல் அவனுக்கு எந்தப் பெரிய செலவும் ஏற்பட்டிருக்கமுடியாது என்றும் பரமசிவத்துக்குப் புரிந்தது.

அப்படியானால், ஒரே வழி, சந்திரனே இந்த நகையைத் திருடியிருக்கவேண்டும்.

பரமசிவத்திற்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. சந்திரனை ஓரிருமுறை பார்த்திருக்கிறார். பெற்றோர்கள் கிராமத்தில் இருப்பதாகவும், இவனும் சில நண்பர்களும் ஓர் அறை எடுத்துக்கொண்டு இதே குடியிருப்பில் இன்னொரு பிளாக்கில் இருப்பதாகவும் கேள்விப்பட்டதுண்டு.

மாலை ஆறுமணி ஆயிற்று. அதுவரை சந்திரன் வரவில்லை. பரமசிவத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. அந்தக் கடிதத்தை எடுத்துச் சட்டை பாக்கெட்டில் மடித்துவைத்துக்கொண்டு அவனுடைய அறையை நோக்கி நடந்தார்.

***
பரமசிவம் அந்த அறையைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவில்லை. நான்காம் மாடியில் இரண்டோ மூன்றோ அல்லது நான்கோ மாணவர்கள் வாடகைக்குத் தங்கி இருப்பதாகவும், இரவில் அவர்கள் அடிக்கும் கொட்டத்திற்கு அளவில்லை என்றும், பலமுறை எச்சரித்தும் பயனில்லை என்றும் அவர்களின் கல்லூரிக்கே புகார் எழுதியிருப்பதாகவும் ஒரு பெரியவர் சொன்னார்.

சந்திரன் மட்டுமே எஞ்சினீரிங் மாணவன் என்றும், மற்றவர்கள் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் என்றும் தெரிந்தது. இரவு டியூட்டி முடிந்து வரும்பொழுது சில மாணவிகளையும் அவர்கள் அழைத்துக்கொண்டுவருவதாக இன்னொரு பெண்மணி கூறினார். அவர்கள் சிலமணி நேரம் இருந்துவிட்டுப் போய்விடுவார்களாம்.

பரமசிவம் திடுக்கிட்டார். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைப் பற்றியே அவர்களின் கவனம் இருந்ததால் சந்திரனைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. 

கொரோனா ஊரடங்கின் காரணமாக மருத்துவக் கல்லூரி மூடப்பட்டுவிட்டதால், மாணவர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்களாம். சந்திரன் மட்டும்தான் தற்போது இருக்கிறானாம்.

அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்திரன் எப்போதுவருவான் என்று யாரிடம் கேட்பது?  எனவே ஒரு காகிதத்துண்டில் ‘சந்திரன், ப்ளீஸ் காண்டாக்ட் மீ’ என்று தன் அலைபேசி எண்ணை எழுதித் தாழ்ப்பாளில் செருகிவைத்துவிட்டுக் கிளம்பினார், பரமசிவம்.

அவர் வீடு திரும்பியபோது, இன்ஸ்பெக்டர்  கண்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து ராஜாவும் இறங்கினான்.

பரமசிவத்தைக் கண்டதும், ஆச்சரியத்துடன், “குட் ஈவினிங் பரமசிவம் சார்! என்ன இது திடீர் விசிட்?” என்றார் கண்ணன்.

“அதை நானல்லவா கேட்கவேண்டும்? இதுதான் என் மகள் வீடு! உள்ளே வாருங்கள்” என்று அழைத்துப்போனார் பரமசிவம்.

செல்வம் இன்னும் ‘காலில்’ இருந்தான். அறைக்கதவு திறக்கப்படவில்லை. யமுனா அசதியோடு உறங்கிக்கொண்டிருந்தாள்.

முள்மேல் நிற்பதுபோல் அமைதியற்ற மனநிலையில் ராஜா இருந்ததை  அவன் முகம் தெளிவாகக் காட்டியது.   

(தொடரும்) 


இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்