நெக்லஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெக்லஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 20, 2020

பொன்னித் தீவு-19 (நிறைவுப்பகுதி)

பொன்னித் தீவு-19

      -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்     

  முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(19) நெக்லஸ்.நெக்லஸ்

வாசுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையின் உரிமையாளரோ,   அல்லது வாடிக்கையாளர்கள் யாராவதோ பாம்பைப்  பார்த்து விட்டால் போதும், உடனே தாவிப் பிடித்து, நாலு காசு பார்த்து விடலாம். ஆனால் ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. நேரம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அந்தப் பாம்பு அசையாமல் அதே இடத்தில் இருந்ததே ஆச்சரியம்தான்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக ஆப்பிள் பழங்கள் இருந்த இடத்திற்குப் போன வாசு, யாரும் கவனிக்காத விதமாக, தலையைக் கீழே குனிந்து கொண்டு “ஐயோ, பாம்பு! பாம்பு!”  என்று அலறினான். அத்துடன் ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கருவேப்பிலைக் குவியலின் மீது யாரும் அறியாதபடி வீசினான்.

அவ்வளவுதான், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடலானார்கள். அதுதான் சாக்கு என்று வாசு ஓடிச்சென்று தன்னுடைய பாம்பைத் தானே கெட்டியாகப் பிடித்து வெளியே எடுத்தான். அதற்குள் கடை உரிமையாளர் ஓடி வந்தார். வாசுவின் கையில் பாம்பைப் பார்த்தவுடன் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது.

"யாரப்பா நீ?  உனக்கு பாம்பு பிடிக்கத் தெரியுமா? சரி சரி, உடனே வெளியே போ" என்று பின்வாசல் வழியாக அவனை முன்னே தள்ளிக்கொண்டு, தான் பின்னே போனார். பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது போதாதா வாசுவுக்கு?

கடவுள்தான் காப்பாற்றினார் என்று மிகுந்த சந்தோஷத்துடன் “ரொம்ப நன்றிங்க! நல்லவேளை நான் ஆப்பிள் வாங்க வந்தேன். இந்தப் பாம்பைப்  பிடிச்சேன். இல்லாவிட்டால் எந்தக் குழந்தையை  இது கடித்திருக்குமோ, என்ன ஆகியிருக்குமோ?" என்று மிகவும் கவலை கொண்டவன் போலப் பேசிவிட்டு வேகமாக நடையைக் கட்டினான்.

ஒரு முள் புதரில் பதுக்கி வைத்திருந்த தன் பாம்புக் கூடையை எடுத்து அப்பாம்பை அதில் அடைத்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன் தாயிடம்,"அம்மா பாம்புக்கு மாஸ்க் போட மாட்டாங்களா?"  என்றான்.

***

கையில் மாம்பழங்களுடன் செம்பகமும் அகிலாவும் யமுனா வீட்டினுள் நுழைந்தார்கள். பாம்பு களேபரத்தில் தனக்கு வேண்டிய கறிவேப்பிலையை எடுக்க மறந்த ஆச்சி, தன் பங்குக்குச் சில மாதுளம் பழங்களை வாங்கி வந்திருந்தார். செல்வம் அனைவரையும் வரவேற்றான். ராஜா வாசலிலேயே நின்று கொண்டான்.

வாய் பேச முடியாத செம்பகம், தன் முக பாவத்தின் மூலமும் சைகையின்  மூலமும் யமுனா கருவுற்றிருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகத்  தெரிவித்தாள்.

அகிலா தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக யமுனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். "அக்கா, நீங்கள் அம்மா வீட்டுக்குச் செங்கல்பட்டுக்குப் போகும்வரையில் உங்களை வாரம் ஒருமுறை நான் வந்து கவனித்துக் கொள்வேன்" என்றாள்.

"ரொம்ப நன்றி அகிலா" என்றான் செல்வம்.

கொஞ்ச நேரத்தில் சந்திரனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். தன்னை எதற்காக அகிலா  வரச்சொன்னாள் என்று அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. ஆச்சியும் இருப்பதைப் பார்த்தவுடன் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் இருந்தது. அதேசமயம், நெக்லஸ் விஷயத்தில் தனக்கு எந்த இலாபமும் ஏற்படவில்லை என்பதால் பழி சுமக்கும் வேலையும் தனக்கு இருக்காது என்று நம்பினான்.

அவனை விடவும் அகிலாவின் நெஞ்சம்தான் குற்ற உணர்வால் குறுகுறுத்துக்கொண்டிருந்தது. யமுனாவின் நெக்லஸை பாரஸ்மல்லிடம் விற்றவள் அவள்தானே! இப்போது பணம் தன்னிடம் இருக்கிறது; ஆனால் அந்த நெக்லஸை பாரஸ்மல் யாருக்கோ விற்றுவிட்டாராமே!

அகிலா எழுந்து உள்ளே போனாள். அனைவருக்கும் யமுனா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோளில் கை வைத்து, "அக்கா ஒரு விஷயம் உங்களிடம் பேச வேண்டும், வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று குசுகுசுத்த குரலில் கூறினாள்.

பெரிய பாத்திரத்தில் டிகாக்ஷனில் பாலைக் கலந்து சர்க்கரை போட்டு ஆற்ற ஆரம்பித்த யமுனா, அகிலாவை உற்றுப்பார்த்தாள்.

"அக்கா,  உங்கள் நெக்லஸ்  தொலைந்து விட்டதாமே, உண்மையா?" என்று கேட்டாள்.

யமுனாவின் முகத்தில் சற்றுமுன்வரை இருந்த மகிழ்ச்சி மறைந்து ஆழமானதொரு வருத்தம் படரத்தொடங்கியது. ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

அதற்குள் அங்கு வந்த செல்வம், "இவள் போய் போலீசில் புகார் வேறு செய்திருக்கிறாள். அவர்கள் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாக என் மாமனார் வந்து விஷயத்தை முடித்து வைத்தார்" என்றான்.

முழு கடப்பாரையைச் சோற்றில் வைத்து விழுங்கும் திறமைசாலியான ஆச்சி, "அப்படியில்லை செல்வம்! புஷ்பா வந்தபோது நான்தான் அவளிடம் பேசி, கொடுப்பதைக் கொடுத்து விஷயத்தை முடித்தேன்" என்றார். யமுனாவும் ஆம் என்று தலையசைத்தாள்.

"அப்படியா ஆச்சியம்மா?" என்று கிண்டலாகக் கேட்டான் சந்திரன்.

ஒருவேளை,  தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று ஆச்சிக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்வதற்காக, "அது ஒரு பெரிய கதை! நீ படிக்கிற பையன், உனக்கு  ஏன் அதெல்லாம்?" என்று கண்டித்தார்.

யமுனா அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். தானும் காப்பி  டம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

அகிலாவும் செம்பகமும் தன்னிடம் மாம்பழங்களைக் கொடுத்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி தெரிவித்தாள்.

ஆனால் ராஜா, "மேடம் அதற்குள்ளாகவே நன்றி சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

செம்பகமும் சைகையால் அதையே சொன்னாள். அவள் கையில் சிறிய துணிப்பை இருந்தது.

அகிலாவும் யமுனாவைப் பார்த்து,"ஆமாம் அக்கா, எனக்காகவும் நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும். ஒரு விஷயம் இருக்கிறது" என்று தன் கைப்பையைக் காட்டினாள்.

செல்வம் ஆச்சரியத்துடன் அகிலாவையும் செம்பகத்தையும் மாறிமாறிப் பார்த்தான்.

அகிலா முந்திக் கொண்டாள். "செல்வம் சார்! தொலைந்துபோன நெக்லஸைக்  கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அது பணமாக மாறி விட்டது" என்று தன் கைப்பையிலிருந்து ரப்பர் பேண்ட் போட்ட ரூபாய் நோட்டுக் கற்றையை வெளியே எடுத்தாள்.

உடனே ராஜா, "அது எப்படி முடியும்? அந்த நெக்லஸ் கொஞ்சமும் அலுங்காமல் நசுங்காமல் என்னிடம் இருக்கிறதே!" என்றான்.

யமுனாவும் செல்வமும் சந்தோஷ மிகுதியால் இவர்கள் பேசுவதை ஆர்வத்தோடு கேட்க முற்பட்டார்கள். ஆனால் ஆச்சியோ, தன் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் உணர்ந்தவராக, சந்திரனைக் கூப்பிட்டு, "ஒரு பத்து நிமிடம் என் வீட்டுக்கு வந்து போயேன்! சுவர்க் கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற வேண்டும்" என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்.

யமுனாவின் நெக்லஸ் ராஜாவிடம் இருப்பதான செய்தியைக் கேட்டதும் அகிலாவுக்குப் புல்லரித்தது. "ராஜா நீங்கள் சொல்வது உண்மையா? பாரஸ்மல் லிடமா வாங்கினீர்கள்?" என்றாள் மகிழ்ச்சியுடன்.

ராஜா விஷயத்தை விளக்கினான். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் புரிந்த சேவைக்காகத் தன் கம்பெனி கொடுத்த பரிசுத் தொகையில் அந்த நெக்லஸை வாங்கி, செம்பகத்தின் ஒரே நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியதைச் சொன்னான்.

செம்பகம் ஒரு பேப்பரை எடுத்து "ஆமாம் அகிலா! யமுனா அக்காவின் நெக்லஸைத் தான் அவர் எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்" என்று எழுதிக்காட்டினாள்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது அகிலாவுக்கு. தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக் கற்றையை ராஜாவிடம் கொடுத்தாள்.

"ராஜா, தயவுசெய்து இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நெக்லசை என்னிடம் கொடுங்கள். மேற்கொண்டு பணம் தேவை என்றாலும் நான் தந்து விடுகிறேன். இது யமுனாவுக்குச் சேரவேண்டியது" என்று பணிவோடு கூறினாள்.

ராஜாவும் செம்பகமும் சிரித்தார்கள். "நாங்களும் அதற்காகத்தான் வந்திருக்கிறோம். இதை மிஸ்டர் செல்வம் ஒரு மார்வாடி இடம் அடகு வைத்திருந்தார். பிறகு அவருக்கே விற்றுவிட்டார். அதைத்தான் நான் பணம் கொடுத்து வாங்கி வந்தேன். இது செல்வம் வீட்டு நெக்லஸ் தான்" என்றான்.

"ஆனால் இந்த நெக்லஸைத் திருப்பிக் கொடுப்பதற்காக எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாம்" என்று அவன் சொன்னதும் அகிலா ஆச்சரியத்துடன் யமுனாவைப் பார்த்தாள்.

தனக்குத் தெரியாமல்  நெக்லஸை அடகு வைக்கும் அளவுக்குத் தன் கணவனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்திருக்க முடியும் என்று யமுனா திகைத்தாள். இது ஒன்று மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது நகைகளையும் அடகு வைத்து இருக்கிறானா என்று அவநம்பிக்கை எழுந்தது.

செல்வம் துடித்துப் போனான். "மிஸ்டர் ராஜா! வார்த்தையை அளந்து பேசுங்கள். நான் எதற்கு என் வீட்டு நகையையே திருடி அடமானம் வைக்க வேண்டும்? என்ன உளறல் இது?" என்று அவனை அடிக்கவே போய்விட்டான்.

உடனடியாக அவன் அருகில் வந்து சமாதானப்படுத்தினாள் அகிலா. "இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!" என்று கூறி நிறுத்தினாள்.

அப்போது சந்திரனும் ஆச்சியும் வந்து சேர்ந்தார்கள்.

நிச்சயம் தன்னுடைய பெயரைத்தான் சொல்லப் போகிறாள் என்று ஆச்சி நடுநடுங்கி விட்டார். நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. சந்திரனும் அச்சத்தில் ஆழ்ந்தான்.

"மனிதனும் மிருகமும் சேர்ந்த செய்த காரியம் இது" என்று சிரித்தாள் அகிலா.

"ஆமாம் யமுனா! மொட்டைமாடியில் நானும் சந்திரனும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குரங்குப் பட்டாளம் நிறைய வீடுகளில் இருந்து பல சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து போட்டது. அதில் இந்த நெக்லசும் ஒன்று. அதனால் இதை யாருடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? யார் வேண்டுமானாலும் தங்களுடையது என்று கூறலாமே! ஆகவே உண்மையைக்  கண்டுபிடிக்கும் வரை என்னிடமே இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டேன்" என்று அகிலா முடித்தவுடன் ஆச்சி மறுஉயிர்  பெற்றவர் போலத் தெம்புடன் நெற்றியைத் துடைத்துக் கொண்டார். சந்திரனும் அதுபோலவே உணர்ந்தான். எப்படியும் அகிலா தன்னை காட்டிக் கொடுக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.

அதன் பிறகு நடந்ததை எல்லாம் வரிசையாகச் சொன்னாள் அகிலா. ஓர்  ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி கட்டணம் செலுத்துவதற்காக நகையை வைத்து பணம் பெற்றதையும், தகப்பனாரிடம் இருந்து பணம் வந்தவுடன் அதை மீட்டு விடலாம் என்று இருந்ததையும் ஆனால் மேற்கொண்டு செலவு ஏற்பட்டபோது நகையை விற்றுவிட நேரிட்டதையும் வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அந்தப் பெண் தொழிலாளிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளை ராஜாவின் கம்பெனி முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டதால், அந்தப் பணத்தை இப்போது யமுனாவுக்குக் கொடுப்பதற்காகவே இங்கு வந்ததாகவும் அகிலா கூறினாள்.

செல்வத்துக்கு மட்டுமல்ல ராஜாவுக்கும் இந்த விஷயம் இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. ஒரு திருட்டுப் பழியைத் தன்மேல் சுமந்துகொண்டு அகிலா மனத்தாலும் தொழில் திறமையாலும் மீராபாய்க்கு  ஆண் குழந்தை நலமாகப் பிறப்பதற்குக் காரணமாக இருந்ததை எண்ணும்போது அவனுக்கும் செம்பகத்திற்கும் கண்கள் பனித்தன.

"ஆனால் இந்த நெக்லஸை உங்கள் பணத்திற்கு நாங்கள் விற்பதாயில்லை. அப்படித்தானே செம்பகம்?" என்று மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான் ராஜா. அவளும் ஆமாம் என்பதுபோல் மலர்ச்சியோடு சிரித்தாள்.

தன்மேல் வரவிருந்த பழி எப்படியோ விலகிப் போனதை அறிந்த ஆச்சி, நெக்லஸ் விஷயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று துடித்தார். 

"ஏன் அப்படிச் சொல்கிறாய் செம்பகம்? உன் கணவர் எவ்வளவு ரூபாய்க்கு இந்த நெக்லஸை மார்வாடியிடம் இருந்து வாங்கினாரோ,  அந்தப் பணத்தை அகிலாவிடம் இருந்து நீ வாங்கிக் கொள்ள வேண்டும் தானே! அதில் என்ன சிக்கல்?" என்றார் ஆச்சி.

"சிக்கல் இதுதான் ஆச்சியம்மா! இந்த நெக்லஸை யமுனா அக்காவுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரிசாக அளிக்கப்போவதாகச் செம்பகம் முடிவு செய்திருக்கிறாள்" என்று ராஜா சொன்னவுடன் அங்கிருந்த அனைவர் முகத்திலும் நம்ப முடியாத ஆச்சர்யம் தோன்றியது.

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னுடைய நெக்லஸ் தன்னிடம் வந்து சேர்ந்தால் போதும் என்று தோன்றியது. தன்  கணவன்மீது  எந்தக் குற்றமும் இல்லை என்பதே அவளுக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது. 

ராஜா கூறினான்: "செல்வம் சார்! நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எப்போதும் மற்றவர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள். இந்தக்  கொரோனா காலத்தில் எங்கள் கம்பெனியில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நான் செய்த மனப்பூர்வமான சேவைக்காக கம்பெனி எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறது. அதில்தான் இந்த நெக்லசை வாங்கினேன்.

"ஆனால் இந்த நெக்லஸ் வந்த சில நாட்களிலேயே கடவுள் எங்களுக்கு இன்னொரு பரிசையும் கொடுத்துவிட்டார். ஆகவேதான் அந்த இரண்டாவது பரிசை நாங்கள் வைத்துக்கொண்டு,  முதல் பரிசை யமுனா அக்காவிற்கே கொடுத்து விடுவது என்று முடிவு செய்தோம்" என்றான்.

யமுனா, செம்பகத்தின் நல்ல மனதை அப்போதுதான் புரிந்து கொண்டவளாக, அருகில் வந்து அவளைக் கட்டிக்கொண்டாள். "செம்பகம், அந்த இரண்டாவது பரிசு என்னவென்று சொல்ல மாட்டாயா?" என்றாள்.

"போங்க அக்கா" என்று சொல்வதுபோல் செம்பகத்தின் உதடுகள் அசைந்தன. முகத்தில் நாணம் படர்ந்தது. உடனே அதைப் புரிந்துகொண்ட ஆச்சி, "அப்படியா விஷயம்? கள்ளி! நீ உண்டா யிருப்பதைச் சொல்லவே இல்லையே!" என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினார்.

செம்பகம் தன் பையிலிருந்து நெக்லஸை எடுத்து யமுனாவிடம் கொடுத்தாள். அவள் அதை செல்வத்திடம் கொடுத்தாள்.

அகிலா முடியவே முடியாது என்பது போல் தலையை ஆட்டினாள். "இந்தப் பணம் அந்த நெக்லசுக்கான விலை. இதை  ராஜா பெற்றுக் கொண்டே ஆகவேண்டும்" என்று அவன் கையில் திணித்தாள்.

"ஆமாம் ராஜா! உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கிறது. கடவுள் உனக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தில் புது நெக்லஸ் வாங்கிச் செம்பகத்துக்குப் போடு!" என்று முடித்து வைத்தார் ஆச்சி.

குடியிருப்பு சங்கத்தின் செயலாளரான ஹரிகோபால் செல்வத்தோடு பேசுவதற்காக வந்தவர், இதுவரை நடந்த சுவாரசியமான உரையாடலை கவனித்துக்கொண்டிருந்தார்.  "ராஜா செல்வம் நீங்கள் இரண்டு பேரும் செய்ய வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் நாளை வியாழக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு போய் ஒரு வடை மாலை சாத்தி விடுங்கள். இல்லையென்றால் இந்த நெக்லஸை ஞாபகம் வைத்துக்கொண்டு மறுபடியும் அந்த ஆஞ்சநேயர் நம் குடியிருப்பில் ஏதாவது விளையாட ஆரம்பித்து விடுவார்" என்றார்.

எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

செல்வம் தன் கையாலேயே நெக்லஸை யமுனாவுக்கு அணிவித்தான். "இனிமேலாவது ஜாக்கிரதையாக இரு" என்றான்.

சந்திரன் சற்றே சத்தமாக "யாராவது உடனே ஐந்நூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். "நாளைக்கு வடைமாலை என்றால் இன்று போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டாமா?"

செம்பகம் கருவுற்றிருப்பதை அறிந்த வக்கீல் மாமிக்கு அளவற்ற சந்தோஷம். அகிலாவைப் பார்த்து, "நீ எம்பிபிஎஸ் முடிப்பதற்குள்ளேயே கைராசியான டாக்டர் ஆகிவிடுவாய் போலிருக்கிறதே! வாரம் ஒரு முறை யமுனாவைப் பார்க்க வரும்போது செம்பகத்தையும் பார்த்துவிடவேண்டும், சரியா?" என்றார்.

அகிலாவின் முகத்தில் சம்மதப்  புன்னகை மிளிர்ந்தது.

(முற்றும்)

திங்கள், மே 25, 2020

பொன்னித்தீவு-13


பொன்னித்தீவு-13

 -இராய செல்லப்பா
(13) சந்திரன் சந்திரன்

அகிலாவிடமிருந்து போன் வருமென்று சந்திரனுக்குத் தெரியும். உண்மையில் ஆச்சியிடமிருந்து மிஸ்டு கால்கள் இருந்தபோதே அவனுக்குப் புரிந்துவிட்டது, தன்னைத் தேடுகிறார்கள் என்று.

இது அவனாக விரும்பி மாட்டிக்கொண்ட சிக்கல் அல்ல. அவன்மேல் திணிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதிலிருந்து காயம்படாமல் வெளிவருவது முடியக்கூடிய காரியமாக அவனுக்குத் தோன்றவில்லை. தன்னுடைய எதிர்காலமே ஆபத்தில் இருப்பது புரிந்தது.

அப்படி அன்று என்னதான் நடந்தது என்று மனதிற்குள் அசைபோட்டான்.
 
மார்ச் முதல் வாரத்திலேயே பாடங்களை முடித்துவிட்டார்கள். ஏப்ரலில் வரும் செமெஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டுமானால் இப்போதிலிருந்தே படித்தாகவேண்டும். ஆனால் சில என்ஜினீயரிங் பாடங்கள் எளிதில் புரிகிற மாதிரியில்லை. கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆர்வமில்லாத நிலை. பாவம், அவர்கள் கையெழுத்துப் போடுவது ஒரு சம்பளம். கணக்கில் கிரெடிட் ஆவதோ அதில் பாதியளவுதானே!

மொட்டை மாடியில் நடந்துகொண்டே படித்தால் கடினமான பாடமும் மூளையில் நன்றாகப்  பதிந்துவிடுமென்று நண்பர்கள் சொன்னது ஒரு நம்பிக்கைக்  கீற்றாக அவன் கண்ணில் தெரிந்தது.

காலை ஆறுமணிக்கே மெயிண்ட்டனன்ஸ் ஆபீசில் இருந்து சாவியைப் பெற்றுக்கொண்டு, மொட்டை மாடியின் கதவைத் திறந்தான். தனது நோட்ஸ்களையும், சில  தடிமனான என்ஜினியரிங் புத்தகங்களையும் கையிலெடுத்துக்கொண்டு வந்திருந்தான். முதலில் ‘டெக்ஸ்ட் புக் -பிறகு நோட்ஸ்’ என்ற வரிசைப்படி நடந்துகொண்டே படிக்கலானான்.

கிழக்கில் உதித்த இளஞ்சூரியன் இன்னும் கடுமை காட்டத்  தொடங்கவில்லை. சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த கொன்றை மரங்கள் இலேசான காற்றைத் தூவிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமமின்றி மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டான் சந்திரன். நண்பர்கள் சொன்னபடியே பாடங்கள் எளிதாக மனதில் ஏறத் தொடங்கிவிட்டன. அடடா, இவ்வளவுநாள் இந்த இரகசியம் தெரியாமல் போய்விட்டதே!

ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவனுக்குப் பின்னால் ‘தொப்தொப்’பென்று  ஐந்தாறு குரங்குகள் கொன்றை மரங்களில் இருந்து குதித்தன.  ஆண்குரங்கு, பெண் குரங்கு, குட்டிக்குரங்குகள் என்று ஒரு குடும்பமே அங்கிருந்தது. சந்திரனுக்கு நடுக்கமெடுத்தது. தனியொருவனாக அந்த வானரப்படையை எப்படிச் சமாளிப்பதென்று அவனுக்கு விளங்கவில்லை.

திடீர் யுக்தியாகத் தன் கையிலிருந்த தடித்த புத்தகத்தைக் கீழே போட்டான் சந்திரன். அதனால் எழுந்த ஓசையில் அதிர்ச்சியடைந்த குரங்குகள் வேகமாகப் பின்வாங்கி ஓடின. அவர்கள் பற்றிக்கொண்ட கொன்றை மரத்தின் கிளைகள் ஆவேசமாக அசைந்தன.

அதற்குமேல் மொட்டைமாடியில் நிற்பதற்கு சந்திரனுக்குத் துணிச்சல் இருக்கவில்லை.  மொட்டை மாடியில் படிக்கச் சொன்ன நண்பர்கள், குரங்குகளைப் பற்றி சொல்லாதது ஏன் என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது. 

ஒருவேளை அவர்கள் குடியிருப்புகளை குரங்குகள்  ஆதரிப்பதில்லையோ என்னவோ!

விறுவிறுவென்று இறங்கினான். அவசரத்தில் மாடிக்கதவைத் தாழ்போட மறந்துவிட்டான்.

***
வக்கீல்  மாமிக்காக மொட்டைமாடியில் வடாம் உலர்த்த வந்தாள்  செம்பகம்.   லிஃப்டில்   நான்காம் தளத்தை அடைந்ததுமே மொட்டைமாடிக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். யாராவது ஆண்கள் இருக்கக்கூடும். தனியாகப் போவது பாதுகாப்பற்றது.

ஆகவே, வடாம் தட்டுக்களைக் கையிலிருந்து இறக்காமல், அதே தளத்தில் இருந்த ஆச்சியின் வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவைத்திறந்த ஆச்சியிடம் கண்களாலேயே விஷயத்தைச் சொன்னாள்.

“இரு செம்பகம், எனக்கும் மிளகாய் வற்றல் உலர்த்தவேண்டும். எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று ஆச்சி தானும் இரண்டு பெரிய தட்டுகளில் மிளகாயுடன் மொட்டை மாடிக்கு வந்தார்.

மாடியில் அப்போது யாரும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சந்திரன் பெயர் எழுதப்பட்ட ஒரு நோட்டு அங்கே இருந்ததால் அவன் வந்துபோயிருக்கவேண்டும் என்று நினைத்தார் ஆச்சி. அதைக் கையில்  எடுத்துக்கொண்டார்.

அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த தட்டுகளை நன்றாக வெயில் வரும் இடமாகப் பார்த்து வைத்தார்கள்.

“சரி, நீ போகலாம் செம்பகம்! நான் கதவைச் சாத்திக்கொண்டு போகிறேன். நாலு மணிக்கு வா, அதற்குள் இதெல்லாம் நன்றாக உலர்ந்துவிடும்” என்றார் ஆச்சி.

புன்னகையின் மூலம் பதில் சொல்வதுதானே வாய்பேச முடியாத செம்பகத்தின் வழக்கம்! ஆச்சியைப் பார்த்துப் புன்னகைத்தபடி கதவுப்புறமாகத் திரும்பினாள். அப்போது அவள் கண்ணில் பட்டது, சுற்றுத் தொலைவில்  சிதறிக்கிடந்த பல பொருட்கள். குரங்குகளின் வேலை. ஆச்சியிடம் காட்டினாள்.

தேங்காய்மூடிகள், மேகி நூடுல்ஸ் பேக்குகள், சில ஸ்பூன்கள், நெய் வைத்த கிண்ணங்கள்,  ஒரு கிழிந்த துணிப்பையும் அதிலிருந்து சிதறிக்கிடந்த வேர்க்கடலைகளும்  ….. என்று என்னென்னவோ தென்பட்டன. அவற்றைத்தாண்டி அட்டைப்பெட்டி ஒன்றும் கிடந்தது. அதைக் கொண்டுவந்து ஆச்சியிடம் கொடுத்தாள் செம்பகம். அது ஒரு நகைப்பெட்டி என்பதும், நகைக்கடையின் பெயர் அதன்மீது எழுதப்பட்டிருப்பதும்  அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆச்சி விஷயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “பாருடி செம்பகம், இந்தக் குரங்குகள் பண்ணும் அட்டகாசத்தை! ஊரில் இருக்கும் குப்பையை எல்லாம் இங்கே கொண்டுவந்து கொட்டிவிட்டது! நான்தான் இதையெல்லாம் க்ளீன் பண்ணவேண்டும். தலைவிதி!” என்று அலுத்துக்கொண்டார்.

வழக்கம்போல் புன்னகையுடன் செம்பகம் லிஃப்டை நோக்கி நடந்தாள். 

அந்த அட்டைப் பெட்டியை மட்டும் தூக்கியெறிந்துவிட்டு, உள்ளிருந்த நகையை -அது ஒரு நெக்லஸ்- புடவைக்குள் மறைத்துக்கொண்டு மாடிக்கதவைச்  சாத்தினார் ஆச்சி.

பிறகு சந்திரனுக்கு போன் செய்தார்.

***
“ஆச்சியம்மா, என்னை வம்பு வழக்கில் மாட்டிவிட மாட்டீர்களே?” என்று தயக்கமும் பயமுமாகக் கேட்டான் சந்திரன்.

ஆச்சியின் கையில் ஒரு நெக்லஸ் இருந்தது. “இதோ பார் சந்திரா! இந்த நகையை ஒரு குரங்கு எடுத்துவந்து மொட்டை மாடியில் போட்டது என்றால் யாராவது நம்புவார்களா?”

மாட்டார்கள் என்றுதான் சந்திரனுக்குத் தோன்றியது.

“ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் இது யாருடையது தெரியுமா?”  
          
“உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.   இதுமாதிரி ஒரு நெக்லஸை யமுனாவிடம் பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அவள்தான் நகைகள் விஷயத்தில் எப்போதுமே அலட்சியமாக இருப்பாள்!”
 
சந்திரன் துள்ளிக் குதித்தான். “இப்பவே நான் போய் இந்த நெக்லஸை யமுனா அக்காவிடம் கொடுத்துவிடுகிறேன். அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா?”

அவனை ஏளனமாகப் பார்த்தார் ஆச்சி. “முட்டாள்தனமாகப் பேசாதே! இந்த நெக்லஸ் காணாமல் போனதே அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ! அதனால் இதைக் கொண்டுபோய்க் கொடுத்தால் உன்னைத்தான் திருடன் என்று நினைத்துக்கொள்வாள். அது மட்டுமல்ல, வேறு என்னென்ன ஐட்டம்களைத் திருடினாய் என்று கேள்விவரும்!  உன்னை  போலீஸ் பிடித்துக்கொண்டுபோகும்!”
  
“ஏன்? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்றான் சந்திரன் வெகுளியாக. “நீங்கள்தானே சொன்னீர்கள்,  குரங்குதான் தூக்கிக்கொண்டுபோட்டதென்று.”

“ஆனால் குரங்கை ஜெயிலில் போட முடியாதே! ஆகவேதான் உன்னைப் பிடிப்பார்கள்” என்று சிரித்தார் ஆச்சி.

சந்திரனுக்குப் பயம்போய்,  பைத்தியம் பிடிக்கும்போல் ஆகிவிட்டது. “ஆச்சியம்மா, நீங்கள் இதை என்னவாவது செய்துகொள்ளுங்கள். நான் போகிறேன்” என்று கிளம்ப  முற்பட்டான்.

“அவ்வளவு எளிதாக உன்னைப் போக விடுவேனா?” என்றார் ஆச்சி. “நீ போய்விட்டாலும் என்றாவது ஒருநாள் யமுனா நகை காணாமல் போனதைக் கண்டுபிடிக்கும்போது உன்னைத்தான் பிடிப்பார்கள் என்பதை மறந்துவிடாதே! நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன்!” என்று கோபத்துடன் கத்தினார்.

“அப்படியானால் நான் என்னதான் செய்யவேண்டும்?” என்று விரக்தியுடன் கேட்டான் சந்திரன்.

பீரோவில் இருந்து தனது லாக்கர் சாவியை எடுத்தார் ஆச்சி. “நமது குடியிருப்பிலேயே  லாக்கர் சர்வீஸ் இருப்பது தெரியுமல்லவா? இதோ இந்த நகையை நீயே போய் எனது லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டு  சாவியைக் கொடு” என்றார். நெக்லஸை ஒரு புதிய அட்டைப்பெட்டியில் வைத்துக்கொடுத்தார்.

பிறகு லாக்கர் சர்வீஸ் மேனேஜருக்குப் போன் செய்தார். தான் நேரில் வரமுடியாததால் தன் மகனை அனுப்புவதாகவும் அவனை அனுமதிக்கும்படியும் கூறினார். அந்தக் குடியிருப்பிலுள்ளவர்களுக்கு மட்டுமேயான லாக்கர் சர்வீஸ் என்பதால் இம்மாதிரி கோரிக்கைகளை மேனேஜரால் மறுக்கமுடிவதில்லை. சரியென்றார்.

கால்மணி நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு ஆச்சியிடம் சாவியைத் திருப்பிக்கொடுத்தான் சந்திரன்.

ஆனால் நெக்லஸ் பெட்டியை அவன் உள்ளே வைக்காமல் தன்னிடமே வைத்துக்கொண்டது ஆச்சிக்குத் தெரியவா  போகிறது?

ஆனால் அகிலாவுக்குத் தெரிந்துவிட்டது. நெக்லஸை அவளிடம்தானே கொடுத்தான் சந்திரன்!

(தொடரும்)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வியாழன், மே 21, 2020

பொன்னித் தீவு-11

பொன்னித் தீவு-11

   -இராய  செல்லப்பா
(11) பரமசிவம் பரமசிவம்

“இது உங்கள் மகள் வீடா? அப்படியானால் யமுனாதான் உங்கள் மகளா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

“ஆமாம், என் மருமகன் செல்வம் ஒரு ஐ.ட்டி. கம்பெனியில் வேலைசெய்கிறார். அது சரி, யமுனாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று பரமசிவமும் அதே ஆச்சரியத்துடன் கேட்டார்.

அப்போது அந்தக் குடியிருப்பின் செயலாளர் ஹரிகோபால், “யமுனா இருக்கிறார்களா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார்.  இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், “வணக்கம் மிஸ்டர் கண்ணன்! எங்கே இவ்வளவு தூரம்?” என்றார்.
 
கண்ணனை முந்திக்கொண்டு பரமசிவம் பதில் சொன்னார்: “சார் எங்க ஊர்தான்! ரொம்ப நல்ல மனுஷர்! தராதரம் தெரிந்தவர்! நாலு பேருக்கு நல்லது செய்வதென்றால் இவருக்கு கற்கண்டு சாப்பிடுவதுபோல!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஹரிகோபால் சார்!  நம்ப கடமையை நாம செய்யறோம், அவ்வளவுதான்!” என்றார் கண்ணன்  சற்றே குழைந்த குரலில்.

“இன்று அசோசியேஷனில்  அவசரமான மீட்டிங் இருக்கிறது. பக்கத்து பிளாக்கில்தான் நடக்கிறது. வழக்கமாக யமுனா மேடம்தான் இந்த பிளாக் பிரதிநிதியாக வந்து கலந்துகொள்வார். இன்னும் அரைமணியில் வந்தால் போதும். அவரிடம் சொல்கிறீர்களா? நான் மற்றவர்களையும் ரிமைண்ட் செய்யவேண்டும்” என்று பரமசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஹரிகோபால்.

ஹாலில் பேச்சரவம் கேட்டு யமுனா மெதுவாக எழுந்துவந்தாள். அவளைப் பார்த்து இன்ஸ்பெக்டர் “வணக்கம் மேடம்! எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டது, நீங்கள் பரமசிவம் சாரின் மகள் என்பது! வெரி சாரி” என்றார்.

பிறகு, ராஜாவை வெளியே நிற்கும்படி கூறிவிட்டு, இன்னொரு அறைக்குள் சென்று பரமசிவத்துடன் பேசினார் கண்ணன். “சார், நெக்லஸோ என்னவோ காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அதுதான் வருத்தமாக இருக்கிறது. அதைப் பற்றிப் பேசலாமா?” என்றார்.

பரமசிவம் திடுக்கிட்டார்.

யமுனா போலீசுக்குப் போன விஷயம் பரமசிவத்துக்குத் தெரியாது. அதே போல, பரமசிவம் மார்வாடியிடம் சென்று நெக்லஸைப் பற்றி விசாரித்து, விஷயம் சேகரித்தது இன்ஸ்பெக்டருக்குத் தெரியாது.

ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு, “அந்த விஷயம் சரியாகிவிட்டது. நெக்லஸ் கிடைத்துவிட்டது! இப்போது யமுனா கர்ப்பமாயிருக்கிறாள் என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. ஆகவே மற்ற விஷயங்களை விட்டுவிடலாம்!” என்றார் பரமசிவம் பொத்தாம்பொதுவாக.

இன்ஸ்பெக்டர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.  யமுனாவை உற்று நோக்கினார்.

தகப்பனாரின் பேச்சு அவளுக்கும் திகைப்பாகவே இருந்தது. நெக்லஸ் கிடைத்துவிட்டதா? எப்படி? அது செம்பகத்தின்  கழுத்தில் அல்லவா இருக்கிறது? ஆனாலும் தகப்பனார் சொன்னதில் ஏதாவது காரணம் இருக்கும் என்று புரிந்தவளாக, “ஆமாம் சார்! இந்த விஷயத்தை நீங்கள் க்ளோஸ் பண்ணிவிடுங்கள். சரி, என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா, இல்லை ஜுஸா?” என்றாள்.

காப்பி வந்தது. பரமசிவம் இன்ஸ்பெக்டரிடம் தணிந்த குரலில் சில நிமிடங்கள் ஏதோ பேசினார். “அப்படியானால் சரி! விஷயம் உங்களுக்குத் திருப்தியாக முடிந்துவிட்டால் போதும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ராஜாவை இனிமேல் விசாரிக்க வேண்டாம் அல்லவா? மீண்டும் அவன்மீது புகார் வராதல்லவா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இல்லை இல்லை. அவனை விட்டு விடுங்கள். பாவம் அவனுடைய மனைவிக்குப் பேசவராது என்று எனக்கே இப்போதுதான் தெரிந்தது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறான். அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று இன்ஸ்பெக்டரை வழியனுப்பிவைத்தார் பரமசிவம். 
 
கிளம்புமுன்பு பரமசிவத்தின் கைகளைப் பிடித்து நன்றி சொன்னான், ராஜா.

அவர்கள் போனதும் யமுனா, அசோசியேஷனின்  அவசரக் கூட்டத்துக்குப்  புறப்பட்டாள்.  செல்வம் ஒரே ஒரு நிமிடம் வெளியேவந்தவன், “இன்னும் அரைமணிநேரம் என்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று மீண்டும் உள்ளேபோய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டான்.

பார்வதி கணவனிடம் வந்தாள். பேசவில்லை. ஆனால் அவள் பார்வையில் ‘நெக்லஸ் கிடைத்துவிட்டதாக ஏன் பொய் சொன்னீர்கள்’  என்ற கேள்வி இருந்ததைப் பரமசிவம்  புரிந்துகொண்டார்.  ‘உஷ்!’ என்று வாய்மேல் விரலை வைத்து அவளை அடக்கினார்.

செல்வத்தின்மீது போலீசின் சந்தேகக்குறி விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்பதை அவளுக்குப் பின்னால் விளக்கினால் போயிற்று. குடும்ப கௌரவம்தானே முக்கியம்! 

***
அன்றைய அவசரக் கூட்டத்தின் தேவையை ஹரிகோபால் உறுப்பினர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

“கொஞ்ச காலமாகவே நமது குடியிருப்பில் குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும். நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும்,  அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் புதிய ஹாஸ்டல் கட்டுவதற்காகவும் பல மரங்களை வெட்டிப்போட்டுவிட்டார்கள். அதனால் குரங்குகளின் வாழ்வாதாரம் சிதைந்துவிட்டதால், வேறு வழியின்றி அவை உணவுக்காக நமது குடியிருப்பிற்குள் குடும்பம் குடும்பமாகப்  படையெடுத்து வருகின்றன. இதை எப்படிச் சமாளிப்பது என்று ஆலோசிக்கத்தான் நாம் கூடியிருக்கிறோம்!” என்றார்.

“முன்பு தெருநாய்களின் பிரச்சினை இருந்தது. ப்ளூகிராஸில் சொன்னோம். பார்த்துக்கொண்டார்கள். பாம்புகள் பிரச்சினை இருந்தது. சுற்றுப்புறத்தைத் தூய்மைசெய்தவுடன் அது முடிந்துவிட்டது. ஆனால் குரங்குகளை என்னசெய்வது?” என்றார் ஒரு முதியவர்.

“என்னால் கிச்சன் சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. பெரிய குரங்கு வெளியே நின்றுகொண்டு, குட்டிக்குரங்கை உள்ளே அனுப்பிப்  பழங்கள் மற்றும் பொருள்களைப் பறித்துக்கொண்டு போகிறது” என்றார் ஒரு பெண்மணி.

“ஹாலில் புகுந்து என்னுடைய பர்ஸை ஒருநாள் தூக்கிக்கொண்டு போய்விட்டது. நல்லவேளை, கொஞ்ச தூரம் போய் வீசியெறிந்துவிட்டது. பிடித்துக்கொண்டேன்!” என்றாள் ஓர் இளம்பெண்.
 
வழக்கமாக நான்காம் மாடியின் மேல் இருக்கும் மொட்டைமாடியின் கதவு பூட்டப்பட்டே இருக்கும். சாவி அசோஸியேஷனிடம்தான் இருக்கும். யாருக்காவது அப்பளம், வடாம் அல்லது மிளகாய் வற்றல், ஊறுகாய் போன்றவை உலர்த்த வேண்டியிருந்தால் காலையில் சாவியைக் கேட்டு வாங்கி, மாலையில் பூட்டியபின் திருப்பித்தந்துவிட வேண்டும்.

“சமீப காலமாக யாரும் மொட்டை மாடியைப் பயன்படுத்தவில்லைபோல் தெரிகிறது. இன்று மாலை நான் தற்செயலாகப் போய்ப் பார்த்தபோது ஏராளமான பொருள்கள் இறைந்து கிடந்தன. மருந்து பாட்டில்களும் அட்டைப்பெட்டிகளும் பிஸ்கட் போன்றவையும் இருப்பதைப் பார்த்தால் குரங்குகள்தான் அவற்றைக் கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே, சிரமம் பார்க்காமல் எல்லாரும் ஒருமுறை என்னுடன் இப்போதே மொட்டைமாடிக்கு வந்து பார்த்துவிடுங்கள். முக்கியமான பொருள்கள் கிடைத்தாலும் கிடைக்கும்!” என்றார்  ஹரிகோபால்.   

அவர் சொன்னது உண்மைதான். ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை அணிந்துகொள்வதற்காக டைனிங் டேபிள் மீது வைத்ததாக யமுனா கருதிக்கொண்டிருந்த நெக்லஸ் அட்டைப்பெட்டி கொஞ்சம் சிதைந்த நிலையில் அங்கே இருந்தது!

ஆர்வத்துடன் அதை எடுத்தாள் யமுனா.

அட்டைப்பெட்டி மட்டும்தான் இருந்தது. உள்ளே நகையைக் காணோம்!

(தொடரும்) 

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வெள்ளி, மே 15, 2020

பொன்னித்தீவு -8


பொன்னித்தீவு -8

     -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(8) ராஜா ராஜா

பரமசிவமும் ராஜாவும் அந்த மார்வாடிக் கடையை அடைந்தபோது அங்கு கூட்டமே இல்லை. கம்மலை அடகுவைக்க ஒரு பெண்மணியும், அடகுவைத்த கொலுசை மீட்டுக்கொள்ள இன்னொரு பெண்மணியாக இரண்டே பேர்தான் இருந்தனர். மார்வாடியின் பெயர் நீளமாக இருந்தது. அதன் பாதி பாரஸ்மல் என்றது.

பாரஸ்மல்  அழகான தமிழில் பேசினார். “தங்கசாலைத் தெருவில்தான் மூன்று தலைமுறையாக வசிக்கிறோம். என் தகப்பனார் மு.வ.விடம் தமிழ் படித்தவர். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. நான் பொற்கோவிடம் படித்தவன். நானும் பட்டம் வாங்கவேண்டுமென்று கவலைப்படவில்லை. ஆனால் நன்றாகத் தமிழ் பேச வந்திருப்பதே பெரிய இலாபம் தானே!” என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர்களை உட்காரச் சொன்னார்.

அதிக எடையில்லாத அலுமினிய ஸ்டூலில் சற்றே பயத்துடன் அமர்ந்தார் பரமசிவம். ராஜா மட்டும் நின்றுகொண்டான்.

அந்தப் பெண்கள் இருவரையும் அவசர அவசரமாக முடித்து அனுப்பிவிட்டு,  ராஜாவின் பக்கம் திரும்பி, “வணக்கம் தம்பி! என்ன விசேஷம்? திரும்பவும் பழைய நகை ஏதாவது வேண்டியிருக்கிறதா? கவலை வேண்டாம். எல்லாம் கிடைக்கும்” என்றார் பாரஸ்மல். “நாலு ஜோடி வளையல் வந்திருக்கிறது. பார்க்கிறீர்களா?”

ராஜா புன்முறுவல் பூத்தான். பரமசிவத்திடம், “சார் வசிக்கும் குடியிருப்பில் எங்கள் கம்பெனிதான் பிளாஸ்டிக் அகற்றும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ரொம்ப நல்ல குடியிருப்பு” என்றான்.

“உங்கள் சந்தேகம் என்ன என்பதைத் தெரிவித்தால் பாரஸ்மால் சார் உதவி செய்யாமல் இருக்கமாட்டார்” என்று அவர்பக்கம் திரும்பினான்.

பாரஸ்மல் தன் இருக்கையிலிருந்து விசுக்கென்று எழுந்தார். “சந்தேகமா? போலீசில் இருந்து வந்திருக்கீர்களா? ராஜா, இவர் யார்?” என்றார். “பதினைந்து வருஷமாகத் தொழில்செய்கிறேன். என்மீது ஒரு கரும்புள்ளி கிடையாது தெரியுமா?” 

திருட்டு நகைகளை போலீசுக்குத் தெரிந்தும்  தெரியாமலும் வாங்கி விற்றுக்கொண்டிருந்தவர்தான் அவர். அது விஷயமாக விசாரணை செய்கிறார்களோ என்று கவலைப்பட்டார். அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ள முடியுமா!

ராஜா அவர் கைகளை விரைந்து பற்றிக்கொண்டான். “சந்தேகம் உங்கள்மீது அல்ல சார், என் மீது! அந்த நெக்லஸை வாங்கினேனே, அதைப் பற்றித்தான் பரமசிவம் சார் பேச வந்திருக்கிறார்!”

பாரஸ்மல்லுக்கு அப்போதுதான் மூச்சுவந்தது.

பரமசிவத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் பணிவாகக்  கேட்டுத்தெரிந்து கொண்டார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் தன்  மைத்துனரின்  பிள்ளைக்கு  வட்டிக்கடை வைக்க நல்ல இடம் கிடைக்குமா என்றும் விசாரித்தார். யாருக்கோ போன் செய்து இரண்டு ஸ்டிராங் காப்பி கொண்டுவரச் சொன்னார். பிறகு உள்ளே போனவர் “கேன்சல்டு டாக்குமெண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டிருந்த குண்டான பாக்ஸ்ஃபைல் ஒன்றை எடுத்துவந்து மேஜையில் வைத்தார்.

“தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டக்கென்று சொல்லமுடியும் சார். அவ்வளவு ஞாபகசக்தி எனக்கு! அதிலும் ராஜா மாதிரி நல்ல ஆசாமிங்க விஷயம்னா இன்னும் நல்லாவே நினைவிருக்கும்!” என்றார், ஃபைலுக்குள்ளிருந்து சில பேப்பர்களை வெளியே எடுத்துக் காட்டினார்.

“இதோ பாருங்கள்.  இந்தத் தேதியில் ...ராஜாவுக்கு ...இத்தனை கிராம்  எடையுள்ள ஒரு தங்க நெக்லஸை ..இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ததற்கான எங்கள் கடையின் பில்! ராஜாவின் கையெழுத்தையும் பாருங்கள்!” என்றார்.

பரமசிவம் அந்தப்  பேப்பர்களைப் புரட்டினார். பாரஸ்மல்  சொன்னது  உண்மையே. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாகச் செலுத்தி ஒரு நெக்லஸை ராஜா வாங்கியிருக்கிறான். சந்தேகமில்லை.

“மிஸ்டர் பாரஸ்மல்! என்னுடைய ஒரே கேள்வி, இந்த நெக்லஸ் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான். யாரோ திருடிவந்து உங்களிடம் விற்றிருக்கலாம் அல்லவா?” என்று அமைதியாகக் கேட்டார் பரமசிவம்.

கலகலவென்று சிரித்தார் பாரஸ்மல். “அவ்வளவு சுலபமாகத் திருட்டு நகையை வாங்கிவிடுவோமா சார்? ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே அவன் யோக்கியனா  இல்லை  திருடனா என்பதை எங்களால் கணித்துவிடமுடியும். எங்கள் பரம்பரை இரத்தத்தில் கலந்திருக்கும் சக்தி!” என்றார் பெருமிதத்துடன்.  
   
பிறகு சற்றே யோசித்தவராக, “ ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்த நெக்லஸை ஒருவர் அடகுவைத்தார். அவருடைய ஆதார் கார்டு ஜெராக்ஸ் கூட இருக்கிறது. அக்காவின் நகை என்று சொன்னார். அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் பணம் வேண்டியிருப்பதாகச் சொன்னார். கொடுத்தேன். ஒருவாரம் கழித்து, மேலும் பணம் வேண்டியிருப்பதால் நகையை நானே வாங்கிக்கொண்டு மீதிப்பணம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு நிறைய செலவாகிவிட்டதாக வருத்தப்பட்டார். ரொம்பநேரம் யோசனைசெய்த பிறகுதான் அடகுபோக மீதி பணத்தைக்கொடுத்து செட்டில் செய்தேன். அதற்கான ரசீதுகளை வேண்டுமானாலும் காட்டுகிறேன்” என்றார்.

பிறகு உள்ளேபோய் பெரிய ரிஜிஸ்தர் ஒன்றைக் கொண்டுவந்தார். தேதிவாரியாக அடகு பிடித்த நகைகளின் கணக்குப் புத்தகம் அது. குறிப்பிட்ட தேதியில் அந்த நபர் அடகுவைத்துப் பணம் பெற்றுக்கொண்டதற்குக்  கையொப்பம் இருந்தது. ஆதார் நம்பரும் இருந்தது. அதன் கீழ்ப்பகுதியில் மேற்படி நகையை இன்று மீட்டுக்கொண்டேன்  என்று அவரே ஒரு வாரத்திற்குப் பிறகு கையொப்பம் இட்டிருந்தார். அதன் அருகே குறுக்குவெட்டாக, சிவப்பு மசியில், நகையின் அன்றைய மதிப்பும், அதில் கடனும் வட்டியும் போக மீதி எவ்வளவு என்றும் பாரஸ்மல் குறித்திருந்தார். அந்த மீதிப்பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கு அதே நபர் மீண்டும் கையொப்பம் இட்டிருந்தார்.

ஆக, நடந்தது இதுதான்: யாரோ ஒரு நபர் நெக்லஸை பாரஸ்மல் கடையில் விற்றுப் பணமாக்கியிருக்கிறார். அந்த நெக்லஸைத்தான் பிறகு ராஜா முழுப்பணமும் கொடுத்து வாங்கியிருக்கிறார். ராஜாமீதும் தவறில்லை. பாரஸ்மல் மீதும் தவறில்லை.

நகையை அடகுவைத்தவன் மீதுதான் தவறு. அவனைக் கண்டுபிடித்தாகவேண்டும். அவன்தான் யமுனாவின் வீட்டிலிருந்து திருடியிருக்கிறான்.

ரிஜிஸ்டரில் இருந்த அந்நபருடைய முகவரி, சென்னையில் வெகுதூரத்தில் இருந்தது. அதைக் குறித்துக்கொண்டார். பிறகு ஆதார் நம்பரையும் பார்த்து எழுதிக்கொண்டார். “இந்த ஆளைக் கொண்டுவந்தால் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?” என்றார்.

“கட்டாயம் முடியும். ஒருமுறை பார்த்தவனை நான் மறக்கவே மாட்டேன்!” என்றார். “போலீஸ் கீலீஸ் என்று போக மாட்டீர்களே?” என்று தயக்கத்துடன் கேட்டார்.         

“சேச்சே! எங்களுக்கு நகைதான் வேண்டும். அதைத்தான் ராஜா வாங்கிக்கொண்டு விட்டாரே! இருந்தாலும் இது எங்கள் வீட்டு நகைதான் என்பதை  அந்த நபர்தானே உறுதிசெய்ய வேண்டும்?  உங்கள் உதவிக்கு நன்றி!”  
என்று கிளம்பினார் பரமசிவம். அதுவரையில் பாரஸ்மல் ஆர்டர் செய்த ஸ்டிராங் காப்பி வந்துசேரவில்லை. 

“நல்லது ராஜா, உங்களை வீட்டில் இறக்கிவிட்டு நான் போகிறேன். உங்களைப்  பொறுத்தவரை தப்பு ஒன்றும் செய்யவில்லை. நிம்மதியாக இருங்கள். அந்த ஆசாமியை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்” என்றார்.

ராஜாவோ தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தான்.

வீட்டிற்கு வந்த பரமசிவம், “பார்வதி, சூடாக ஒரு காப்பி கொடு” என்று காற்றாடியை முழுதாக ஓடவிட்டார்.

“போன வேலை என்ன ஆயிற்று அப்பா?” என்றாள் யமுனா, சோபாவில் சாய்ந்தபடியே.

அதைக் கவனிக்காதவராய்,  “யமுனா, நீங்களெல்லாம் ஆதார் கார்டு வாங்கிவிட்டீர்களா?” என்று தெரியாதவர்போல் கேட்டார்.

“என்னப்பா இப்போது கேட்கிறீர்கள்? அதெல்லாம் மூன்று வருஷம் முன்பே வாங்கியாயிற்றே!” என்று தன் கைப்பையில் இருந்து இரண்டு ஆதார் கார்டுகளை எடுத்தாள்.               

அந்த இரண்டில் ஒன்று, அடகுவைத்தவனின் கார்டு நம்பருடன் ஒத்துப்போவதைக் கண்டு பரமசிவம் திகைத்துப்போனார்.

அதாவது அவருடைய மருமகன் செல்வம்தான் அந்த நகையை அடகுவைத்திருக்கிறான்! பிறகு முழுதுமாக விற்றுவிட்டிருக்கிறான்!அப்படியும் நடந்திருக்குமா? செல்வம் அப்படிச் செய்யக்கூடியவனா?
குழப்பத்துடன் யமுனாவைப் பார்த்தார் பரமசிவம். “உடனே மாப்பிள்ளையைக் கூப்பிடு!” என்றார்.

“என்னப்பா, ஏதாவது பிரச்சினையா?” என்றாள் யமுனா.

(தொடரும்). (கன்னித்தீவு போலவா?)   

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

புதன், மே 13, 2020

பொன்னித்தீவு -7

பொன்னித்தீவு -7
   -இராய செல்லப்பா

                 இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்


               முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(7) செம்பகம் செம்பகம்

புதியதொரு குதூகலத்துடனும் பெருமிதமான பார்வையுடனும் வீட்டில் நுழைந்தார்கள் யமுனாவும் அவள் தாயாரும்.

பரமசிவமும் செல்வமும் ஓடிவந்து வரவேற்றார்கள்.

யமுனா தன் கணவனைப் பார்த்து, “சாப்பீட்டீர்களா? அப்பா, நீங்களும்  சாப்பீட்டீர்களா?” என்று கேட்டபடியே தான் வாங்கி வந்திருந்த கிருஷ்ணா  ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கை இருவரிடமும் நீட்டினாள்.

“பார்வதி, என்ன விசேஷம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பரமசிவம். செல்வமும் ஆவலோடு யமுனாவைப் பார்த்தான்.

“எனக்கென்ன தெரியும்? கல்யாணமாகி நாலு வருஷம் ஆனவங்களைக் கேட்டால் தெரியும்!” என்று விஷமத்தோடு சிரித்தாள் பார்வதி.

“போம்மா, நீ ரொம்ப மோசம்!” என்று அம்மாவின் பின்னால் நின்றுகொண்டாள் யமுனா. செல்வத்தைப் பார்த்துக்  கண்ணடித்தாள்.

அவனுக்குப் புரிவதுபோல் இருந்தது. “யமுனா, பொய் சொல்லாதே! நீ செங்கல்பட்டு போகிறேன் என்று லேடி டாக்டரைத்தானே பார்த்துவிட்டு வருகிறாய்? சொல்லியிருந்தால் சென்னையிலேயே பார்த்திருக்க முடியாதா? உன் அப்பாவும் இதற்கு உடந்தையா? கொரோனா சமயம், ஏதாவது அசம்பாவிதமாக நடந்திருந்தால் யார் பொறுப்பு?” என்று பொரிந்தான். சிலநேரங்களில் அவனுக்கும் கோபம் வருவதுண்டு.

பார்வதிக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. யமுனா கர்ப்பமாயிருக்கும் செய்தியை இன்னும் எவ்வளவு நேரம்தான் சஸ்பென்சாக வைப்பது?  “சாரி, மாப்பிள்ளை! எனக்கோ அப்பாவுக்கோ எந்த விஷயமும் தெரியாது. உண்மையில் யமுனாவுக்கே தெரியாது. தற்செயலாக டாக்டர் பத்மாவிடம் போனதில் விஷயம் தெரிந்தது. இனிமேல்தான்  இவளை நீங்கள்  
பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு வார்த்தை கூடக் கடிந்துகொள்ளக் கூடாது. சரியா?” என்றாள்.

செல்வம் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போனான். பரமசிவம் மகளை உச்சிமோர்ந்து வாழ்த்தினார். “எல்லாம் நல்லபடியாக நடக்கும். பழனி முருகன் துணையிருப்பான்” என்றார். 

இரவு பத்துமணி. விளக்கை அணைத்தான் செல்வம். அவன் கைகளையே தலையணையாகச் சாய்ந்துகொண்டாள் யமுனா. “என் கண்ணே, உனக்கு ஆயிரம் முத்தங்கள்!” என்றான் செல்வம்.

“அதெல்லாம் கொரோனா போனபிறகுதான். இனிமேல் வீட்டில்  இருந்தாலும் நீங்கள் நான் எல்லாரும் மாஸ்க் அணிந்தாக வேண்டுமாம். டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாள் யமுனா.

“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கொரோனா சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திற்குப் போனாளாம் ஒருத்தி. குழந்தை மாஸ்க்குடனேயே வெளிவந்ததாம்!” என்று அவளைக் கிச்சுகிச்சு மூட்டினான்.

எதிர்பாராத குறுகுறுப்பினால்  ‘அம்மா’ என்று அலறிவிட்டாள் யமுனா. அடுத்த நிமிடமே  தன்  முட்டாள்தனத்தை எண்ணிக் கலகலவென்று சிரித்தும்விட்டாள். அதற்குள் அம்மா என்னவோ ஏதோ என்று  கதவைத்தட்ட, பின்னாலேயே அப்பாவும் வந்து விட...செல்வத்தின் முகத்தில் அசடு வழிந்தது.

“சரி சரி, இனிமேல் அவள் சரியான நேரத்துக்குத் தூங்கவேண்டியது அவசியம். புரிந்ததா மாப்பிள்ளை?” என்று பரமசிவம் முற்றுப்புள்ளி வைத்தார்.

***
பொழுது விடிந்தது. எழுந்திருக்க மனமில்லாமல்தான்  எழுந்தாள் யமுனா. அதற்குள் பார்வதி அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டுபோய் பல் துலக்க வைத்தாள். காப்பி வேண்டாம், மசக்கைக்கு ஆகாது என்று ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள்.

வாசலில் கோலம் போடவந்த பக்கத்து வீட்டுப் பெண்கள் பார்வதியம்மாவைப் பார்த்தவுடன் ஆவலோடு வந்து நலம் விசாரித்தனர். யமுனா சற்றே அசதியாக இருப்பதைக் கண்டு விஷயத்தை ஊகித்தவர்களாக, “எங்களுக்கு ஸ்வீட் கிடையாதா?” என்றனர்.

யமுனா மெல்ல நடந்து வந்து வணக்கம் சொன்னாள். முகத்தில் வெட்கம் படர்ந்தவளாக அவர்களுக்கு மைசூர் பாக்கை விநியோகித்தாள்.  டாக்டர் இன்னும் டியூ டேட் சொல்லவில்லை என்றும் இரண்டாவது செக்-அப்பின்போதுதான் சொல்லக்கூடும் என்றும் விளக்கினாள்.
  
செல்வத்திற்கு அன்று காலை எட்டு மணிக்கே ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்ததால் அவசரம் அவசரமாகத் தன் வேலைகளை முடித்துக்கொண்டு   அறைக்கதவை மூடிக்கொண்டான்.

பார்வதி வந்திருக்கும் செய்தியைக் கேட்டதுமே வக்கீல் மாமி ஓடிவந்தார். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்ட பிறகுதான் யமுனாவைப் பார்த்தார். அவருக்கு ஒன்றுக்கு இரண்டாக மைசூர் பாக்கை நீட்டினாள் யமுனா. “உங்களுக்கு ஒன்று, செம்பகத்துக்கு ஒன்று!”

செம்பகம் என்றதும் மாமிக்கு டக்கென்று நினைவுக்கு வந்த விஷயம், செம்பகத்தின் கணவன் அவளுக்குத் தன் முதல் சம்பளத்தில்  நெக்லஸ் வாங்கிக்  கொடுத்ததுதான்.   

“அப்படியே அச்சு அசலாக உன் நெக்லஸ் மாதிரியே இருக்குடி யமுனா! யாரோ ஒரு மார்வாடியிடமிருந்து பழைய நகையை சல்லிசாக வாங்கினானாம்! சாமர்த்திய சாலி” என்று புகழ்ந்தார் மாமி.

யமுனாவுக்குச் சுருக்கென்றது. தன்னுடைய நெக்லஸ் காணாமல்போனதை அவள் கணவனிடமோ, பெற்றோரிடமோ அல்லது மாமியிடமோ இன்னும் கூறவில்லை. இப்போது கூறலாமோ கூடாதோ என்று குழம்பினாள். மனதில் ஏதேதோ விசித்திரமான எண்ணங்கள். ஒரு வேளை, செம்பகம்தான் திருடிக்கொண்டாளோ?

அதே சமயம் தன்னைப் பாராட்டிக்கொள்ளவும் செய்தாள். போலீசில் புகார் கொடுத்துவிட்டதால், அவர்கள் மூலமே கண்டுபிடித்துவிட முடியும் என்று தோன்றியது.

அந்த நேரத்தில்தான் செம்பகம் வந்தாள், வழக்கமாகத் தரும் ஒரு முழம் மல்லிகைப்பூவுடன். அவள் கழுத்தில் பளபளவென்று மின்னியது அந்த நெக்லஸ். பார்த்தவுடனேயே யமுனாவுக்குப் புரிந்துவிட்டது, அது தன்னுடைய நெக்லஸ்தான் என்று.

பாவி! நல்லவிதமாக இரண்டு வருடங்களாகப் பழகிவந்தவள்,  ஊமைக்கோட்டான் என்பதற்கேற்ப, ஓசையில்லாமல் காரியத்தை முடித்திருக்கிறாளே! சண்டாளி! அவளை...அப்படியே கழுத்தை நெரித்துவிடவேண்டும்போல் இருந்தது.

செம்பகத்தை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்தாள். அதற்குள் “வணக்கம் மேடம்” என்று அங்கு வந்தான் ராஜா. செம்பகத்தின் கணவன்.

இனியும் தாமதிக்கக்கூடாது என்று நெக்லஸ் தொலைந்து போனதையும், போலீசில் புகார் செய்ததையும், அது இப்போது செம்பகத்தின் கழுத்தில் இருப்பதையும் தன்  தாயாரிடம் இரகசியமாகக்  கூறினாள்  யமுனா.

அவ்வளவுதான், ஒரு பிடி பிடித்துவிட்டாள்  பார்வதி. “இந்தப்பா, ராஜா! உண்மையைச் சொல்லிவிடு. இந்த நெக்லஸ் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்றாள்.

“ஏங்க? என்ன விஷயம்? நான் எங்கேயும் திருடவில்லை. கொள்ளையடிக்கவும் இல்லை. என் சொந்தக் காசில் வாங்கினேன்” என்றான் ராஜா மிகுந்த பெருமிதத்துடன். “நான் இப்போது ஜுனியர் எக்சிகியூடிவ் ஆகிவிட்டேன் தெரியுமா? வக்கீல் மாமிக்குத் தெரியுமே!”                
“இல்லை, நான் நம்ப மாட்டேன். இது என் பொண்ணோட நெக்லஸ் தான் என்பதில்  சந்தேகமே இல்லை. உண்மையைச் சொல்லிவிடு. இல்லையென்றால் போலீசுக்குத்தான் போகவேண்டிவரும்!” என்று மிரட்டினாள் பார்வதி. பார்த்துக்கொண்டிருந்த செம்பகத்திற்குப் பேசமுடியாததால் அழுகை பொங்கிவந்தது. “அவர்மேல் தப்பு இல்லை” என்பதுபோல் சைகை காட்டினாள்.

“அட, இவ்வளவுதானா விஷயம்? இது உங்கள் வீட்டு நெக்லஸே தான்! ஆனால் இதை நான் ஒரு மார்வாடியிடம் முழுசாக பேமெண்ட் பண்ணி வாங்கியிருக்கிறேன். ரசீது வேண்டுமானாலும் காட்டமுடியும். ஏன், அந்த மார்வாடிக் கடையையும் அடையாளம் காட்டுகிறேன், வருகிறீர்களா?” என்று சவால் விட்டான்.

இதற்குள் அக்கம்பக்கத்துக் குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். யமுனாவுக்கும் பார்வதிக்கும் தங்கள் வீட்டு நெக்லஸ் எப்படி மார்வாடிக் கடைக்குப் போயிருக்கமுடியும் என்று அனுமானிக்க முடியவில்லை.

பரமசிவம் சட்டையை மாட்டிக்கொண்டு எழுந்தார். “ராஜா, நீ சொல்வது உண்மை தானா என்று பார்த்துவிடலாம். வா” என்று அவனைத் தன்னுடைய காரில்  அமர்த்திக்கொண்டு அவன் சொன்ன திசையில் பயணமானார்.
    
சற்றுத் தாமதமாக வந்த ஆச்சியம்மா இதுவரை நடந்த காட்சிகளை பார்க்கத்  தவறிவிட்டதற்காகத் தன்னை நொந்துகொண்டார். அதனாலென்ன, இத்தனூண்டு விவரம் கிடைத்தால் போதாதா அவருக்கு? ஒரு நாவலே எழுதிவிட மாட்டாரா?

“பாவம், யமுனா! இருந்திருந்து உண்டாயிருக்கிறாள். இப்போதுதானா இப்படியெல்லாம் நடக்கவேண்டும்!” என்று தன் வேலையை ஆரம்பித்தார். எல்லோரும் ‘உச்’ கொட்டினார்கள்.  

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?)
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்