பொன்னித்தீவு -2
-இராய செல்லப்பா
(2) யமுனா...யமுனா
முகக் கவசத்தை இறுக்கியபடி ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய
யமுனாவைப் பார்த்ததும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஒரே பெண் ஊழியரான புஷ்பா வேகமாக ஓடி வந்தாள்.
“மேடம், இன்ஸ்பெக்டர் கொரோனா டியூட்டிக்காக வெளியே
போயிருக்கிறார். நாளைக்கு வாங்க” என்றாள்.
முடியாது என்று
வேகமாகத் தலையசைத்தாள் யமுனா. “முக்கியமான
விஷயம். நாளை வரை பொறுக்க முடியாது!” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த ஓரளவு சுமாரான
நாற்காலியில் அமர்ந்தாள்.
அதே சமயம் போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு இன்ஸ்பெக்டர்
இறங்கினார். இராத்திரி முழுதும் டியூட்டி பார்த்திருப்பார் போல. கண்கள் சிவந்திருந்தன.
ஆனால் ஓர் அழகான பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் முகத்தில் சற்றே புன்னகையை வரவழைத்துக்கொண்டு,
“வணக்கம் மேடம்” என்றார்.
“என் பேர் கண்ணன். ஒரு வாரம் மட்டும் இங்கு போஸ்டிங்”,
என்றவர், “புஷ்பா, மேடத்திற்கு என்ன கம்ப்ளெயிண்ட்டு?” என்று கேட்டபடி, அங்கிருந்த
அதிக அசுத்தம் இல்லாதிருந்த ஒரு பழந்துணியால்
நாற்காலியைத் துடைத்துவிட்டு அமர்ந்தார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது யமுனாவுக்கு இதுவே முதல்
தடவை. அதுவும் கணவனுக்குத் தெரியாமல். என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தாள்.
கண்ணன் அதைப் புரிந்துகொண்டவராக, “ஏதாவது டொமஸ்டிக்
வயலன்ஸ் பிரச்சினையா?” என்றார். இல்லையென்று
தலையாட்டினாள் யமுனா.
“அப்படியானால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விவகாரமா?”
அதுவும் இல்லையென்று தலையாட்டினாள்.
“புரிந்தது. வீட்டில் ஏதோ திருடு போய்விட்டது. அதானே?”
“கிட்டத்தட்ட
அப்படித்தான்…” என்று இழுத்தாள் யமுனா.
இன்ஸ்பெக்டர் முகத்தில் சற்றே பிரகாசம் தோன்றியது.
“நல்லது, எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள நகைகள்?”
யமுனாவுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. “ஒரே ஒரு
நெக்லஸ் தான் என்று நினைக்கிறேன். வாங்கும்போது ஐம்பதாயிரம் ரூபாய்!”
‘ப்பூ ..அவ்வளவுதானா?’ என்ற அலட்சிய பாவம் தோன்றியது
இன்ஸ்பெக்டர் முகத்தில். ‘இந்த பிஸாத்து விஷயத்திற்கு போலீஸ் கேட்கிறதா?’
எழுந்தார் கண்ணன். “பாருங்க மேடம். வீட்டில் எல்லாரிடமும்
விசாரித்தீர்களா?”
“இருப்பது நானும் என் கணவரும் மட்டும்தான். அவர் ஆபீஸ்
போயிருக்கிறார்” என்றாள் யமுனா.
“புஷ்பா, அவருடைய செல் நம்பருக்கு போன் பண்ணி நேராக
இங்கே வரவேண்டும் என்று சொல். சரி, மேடம், அவர் வரும்வரை நீங்கள் இங்கேயே இருங்கள்.
நான் கொரோனா டியூட்டிக்குப் போகவேண்டும்” என்று கண்ணன் கிளம்பிவிட்டார்.
வெய்யில் பளீரென்று அடித்தது. யமுனாவுக்கு வியர்வை
கசிந்து அருவருப்பை ஏற்படுத்தியது. இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று தன் மேலேயே
கோபம் வந்தது. அடுத்தடுத்த அடுக்கு
வீடுகளில் தொடர்ச்சியாகப் பல திருட்டு சம்பவங்கள் நடந்திருந்ததால் உடனே போலீசுக்குத்
தகவல் கொடுக்குமாறு அசோசியேஷன்காரர்கள் கூறியிருந்தார்கள்.
ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையன்று அணிந்துகொள்வதற்காக பீரோவில் இருந்து
நெக்லஸ் பெட்டியை எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் குளித்துவிட்டு
வந்தபோது அதை அணிந்துகொள்வதற்குள் மதுரையில் இருந்து தாயாரின் போன் வரவே கவனம் சிதறிப்போனது.
நெக்லஸை மறந்தே போனாள். ஆனால் அது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் இருக்குமே!
எப்படி அது காணாமல் போயிருக்கும்? ஒருவேளை செல்வம்
எடுத்து எங்காவது வைத்திருப்பாரோ?
ஊஹூம், தான் வைத்த எந்தப் பொருளையும் அவர் தொடவே மாட்டாரே!
அவ்வளவு தைரியம் அவருக்குக் கிடையாது. வேறு யாராக இருக்கும்?
சற்று நேரத்தில் புஷ்பாவும் எங்கோ எழுந்து போனாள்.
வெகுநேரம் வரவேயில்லை. யமுனாவுக்கு அங்கு தனியாக அமர்ந்திருப்பதற்கு அச்சமாக இருந்தது. செல்வத்திடம் சொல்லாமல் போலீசுக்கு வந்தது மிகப்
பெரிய தவறு என்று தோன்றியது. சடக்கென்று எழுந்தாள். முகக் கவசத்தை இறுக்கிக்கொண்டு
தன் ஸ்கூட்டரைக் கிளப்பினாள்.
அவள் வீட்டை நெருங்கிக்கொண்டிருந்த அதே சமயம், செல்வம்
போலீஸ் ஸ்டேஷனை அடைந்துகொண்டிருந்தான். தன்மீது என்னவென்று புகார் கொடுத்திருப்பாள்
யமுனா? ஆச்சி தான் வம்பிழுத்திருக்கவேண்டும்.
புஷ்பா வரவேற்றாள். இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தாள்.
பத்து நிமிடத்தில் கண்ணன் வந்துசேர்ந்தார்.
ஆனால் செல்வம் எதற்காக அழைக்கப்பட்டார் என்பதையே அவர் மறந்துவிட்டிருந்தார். எனவே போலீஸ்காரர்களுக்கே
உரிய முறையில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
“எஸ், மிஸ்டர் செல்வம்! உங்கள் மனைவி வந்திருந்தார்.
ஆனால் எங்களிடம் சொல்லாமலே போய்விட்டார். ஆகவே அவர்களைச் சரியாக விசாரிக்கமுடியவில்லை.
சரி, என்ன நடந்ததென்று நீங்களே சொல்லி விடுங்கள். அது எங்கள் வேலையை மிகவும் குறைக்கும்!”
என்றார்.
செல்வம் திகைத்தான். யமுனா போலீசில் என்ன சொல்லியிருப்பாள்
என்று தெரியாமல் அவனால் எப்படி நடந்துகொள்வதென்று புரியவில்லை. “என் மனைவி….என்ன சொன்னாள்?...”
என்று தடுமாறினான்.
“அவர்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்” என்று
வழக்கமான போலீஸ் உத்தியை வெளிப்படுத்திய கண்ணன், “நடந்த உண்மையை நீங்கள் சொல்லி விடுவது
நல்லது” என்று சற்றே மிரட்டும் குரலில் சொன்னார்.
“எனக்கு...எனக்கு...ஒண்ணும் தெரியாது..” என்று முனகினான் செல்வம்.
இன்ஸ்பெக்டரின் கண்கள் சுவற்றில் மாட்டியிருந்த ‘லத்தி’
மீது பதிந்தது, செல்வத்தை மேலும் பதற்றப்படுத்தியது.
அடித்து விடுவாரோ? முட்டியில் லத்தி பட்டால் எலும்பு முறிந்துவிடுமாமே!
“சார்… நடந்தது இதுதான் சார்! செம்பகத்தின் புருஷன்
என்னை மிரட்டினான்...ஆனால் அவனை அதற்கு முன்பு நான் பார்த்தது கூடக் கிடையாது” என்று பயம் கலந்த குரலில் செல்வம் சொல்லி
முடித்தான்.
“புஷ்பா, பார்த்தாயா, விடை கிடைத்துவிட்டது!” என்று
வெற்றிப் புன்னகையோடு கண்ணன் நாற்காலியைவிட்டு எழுந்தார். செல்வத்தின் தோளைத் தொட்டார்.
அதிலேயே அவன் உடல் வியர்த்துவிட்டது.
“பயப்படாதீர்கள் செல்வம்! எனக்குப் புரிந்துவிட்டது.
உங்கள் மனைவிக்குத் தெரியாமல் ‘அதை’ நீங்கள்
செம்பகத்திற்குக் கொடுத்திருக்கிறீர்கள். அவள் கணவனுக்கு அது தெரிந்துவிட்டது. அதனால்தான்
உங்களை மிரட்டி இருக்கிறான். இல்லையா?”
‘எதை?’ என்று
திகைப்புடன் கேட்டான் செல்வம்.
“அதை விடுங்கள். செம்பகம் என்பவள் யார்? எத்தனை வயது?
அவளுக்கும் உங்களுக்கும் எத்தனை காலமாகப் பழக்கம்? உங்கள் மனைவிக்கு இது தெரியுமா?
உம் ...சொல்லிவிடுங்கள்….” என்று அவனை ஆழமாகப் பார்த்தார் கண்ணன்.
“அய்யய்யோ, அவள் பக்கத்து வீட்டு வக்கீல் மாமியிடம்
வீட்டுவேலை செய்பவள். இளம் வயதுதான். ஆனால் அவளுக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லை.
இது சத்தியம். வேண்டுமானால் என் மனைவியைக் கேளுங்கள்” என்று உறுதியாகக் கூறினான் செல்வம்.
“பார்த்தாயா புஷ்பா! என்னமாய்ப் பொய் சொல்கிறார் இந்த ஆசாமி! அவளுக்கும் இவருக்கும்
பழக்கமே இல்லையாம். ஆனால் பெண்டாட்டியின் நெக்லஸை அவளுக்குக் காதல்பரிசாகக்
கொடுத்தாராம்!” என்று கிண்டலாகக் கூறியபடி செல்வத்தின் கைகளை முறுக்குவதுபோல்
இறுக்கினார் கண்ணன்.
“என்னங்க இது புதுக் கதை? நான் எப்போது செம்பகத்துக்கு
நெக்லஸைக் கொடுத்தேன்? சார், நான் கௌரவமான மத்திய அரசு ஊழியன்!” என்றான் செல்வம்.
“அப்படீன்னா நான் கௌரவமில்லாத மாநில அரசு ஊழியன். இல்லையா?”
என்று உரத்த குரலில் சிரித்தார் கண்ணன். புஷ்பாவும் சிரித்தாள்.
“இருங்கள். என் மனைவியைக் கூப்பிடுகிறேன். நீங்களே
பேசுங்கள்” என்று தன் அலைபேசியை அவரிடம் கொடுத்தான்.
“என்னங்க இவ்ளோ நேரம்? உங்க போனுக்காகக் காத்துக்கிட்டிருந்தேன்…”
என்று கோபமும் சோகமுமாகப் பேசினாள் யமுனா.
அதற்குள் இன்ஸ்பெக்டர், “மேடம், உங்கள் பிரச்சினை
‘சால்வ்’ ஆகிவிட்டது. உங்கள் கணவர்தான் நெக்லஸை உங்களுக்குத் தெரியாமல் செம்பகத்திற்குக் கொடுத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. அதனால்
இவரை இப்போது அனுப்பிவிடுகிறேன். நாளை காலை நானே அங்குவந்து விசாரணை நடத்துவேன். செம்பகம்,
அவள் புருஷன் இரண்டு பேரையும் உங்கள் வீட்டிலேயே வந்திருக்கச் சொல்லுங்கள். சரியா?”
என்றார்.
பிறகு போனை ஆப் செய்து செல்வத்திடம் கொடுத்தார். “ஏன்
சார், நீங்களெல்லாம் மனிதர்கள் தானா? நாங்கள் கொளுத்தும் வெய்யிலில் நின்றுகொண்டு,
உயிரைக் கொடுத்து கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் காதலிக்காக
சொந்த வீட்டிலேயே நகைத்திருட்டில் ஈடுபடுகிறீர்கள். இது நியாயமா?” என்று செல்வத்தின்
இரண்டு தோள்களையும் முரட்டுத்தனமாக அழுத்தினார்.
இன்னும் கொஞ்சம் அழுத்தியிருந்தால் செல்வம் அழுதே இருப்பான்.
அதற்குள் புஷ்பா வந்து, “சார், நீங்கள் போகலாம்”
என்றாள். வண்டியைக் கிளப்பினான்.
தூக்குமேடைக்குப் போகும் மரணதண்டனைக் கைதி மாதிரி வீட்டுக்குள்
நுழைந்தான் செல்வம்.
(தொடரும்). (கன்னித் தீவு போலவா?)
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இப்போ இதில் யார் பாவம்? ஞெல்வமா? செம்பகமா?!!
பதிலளிநீக்குகன்னித் தீவு இப்படியா இருக்கும்...? ஓ, சரி, தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஉங்கள் நேரேஷன் அற்புதம்.. பிரமாதமாக எழுதுகிறீர்கள். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குஆஹா...கதை அப்படிப் போகுதா...ஜோர்..ஜோர்..
பதிலளிநீக்குகோதை
பதிலளிநீக்குசுவாரசியம் அதிகம்.
தொடரவும்
என்னவெல்லாம் யோசிக்கிறார்கள் - மனிதர்கள்!
பதிலளிநீக்குமேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.