வெள்ளி, மே 08, 2020

பொன்னித்தீவு -3


பொன்னித்தீவு - 3

  - இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(3) செல்வம் செல்வம்

பொதுவாகவே மனைவிக்கு மிகவும் பயந்தவன் செல்வம். இன்றோ அவள் போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ புகார் செய்து இருக்கிறாள். விவரம் தெரியவில்லை. இன்ஸ்பெக்டரோ தனக்கும் செம்பகத்திற்கும் காதலிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்.

மோட்டார் சைக்கிளை பார்க் செய்துவிட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வாசலில் நெருங்கியவன், கதவைத் தட்டுவதா அல்லது அழைப்புமணியை அழுத்துவதா என்ற தயக்கத்தில் இருந்தான். நல்லவேளை அவன் கை வைத்த உடனே கதவு திறந்து கொண்டது.

யமுனா தான் ஆத்திரத்தோடு கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு, "வாங்க மாப்பிள்ளை" என்று  ஆச்சரியத்தோடு வரவேற்பு கொடுத்தார்  அவனுடைய மாமனார் பரமசிவம்.

"நமஸ்காரம் மாமா" என்று சம்பிரதாயமாகக் கூறிவிட்டு, கையிலிருந்த பெட்டியை மேஜை மீது வைத்துவிட்டு, கால் கை கழுவிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தான் செல்வம். என்ன இது, யமுனாவைக் காணோம்?

பரபரப்போடு இரண்டு படுக்கையறைகளையும் பால்கனிகளையும் ஆராய்ந்தான். யமுனா இல்லை.

அதற்குள் பரமசிவம், "யமுனாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஆகவே அவள் செங்கல்பட்டுக்குக் கிளம்பியிருக்கிறாள். நீங்கள் வரும் வரை காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்று நான்தான் அவளை அனுப்பி வைத்தேன்" என்றார்.

"ஆபீஸில் இருந்து வந்தவுடன் நீங்கள் ஹார்லிக்ஸ்  சாப்பிடுவீர்களாமே, அடுப்பில் பால் இருக்கிறது. நான் வேண்டுமானால் கலந்து கொண்டு வரட்டுமா?" என்றார் பரமசிவம்.

மாமனாரும்  மாப்பிள்ளையும்: 
(படத்துக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமில்லை!)

வேண்டாம் என்று செல்வம் தானே சமையலறைக்குள் சென்றான். பால்  சூடாகவே இருந்தது. இரண்டு ஸ்பூன் ஹார்லிக்சை பாலில் கலந்து வேகமாக விழுங்கினான். மாமனார் திடீரென்று எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியாமல் குழம்பினான்.

"டிவியில் செய்திகள் போடட்டுமா?" என்று பவ்யமாகக் கேட்ட மாமனார், சோபாவில் அவனுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டார். அது அவனுக்குப் புதுமையாக இருந்தது.

"மாப்பிள்ளை, ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே" என்று மெதுவாகக் கேட்டார்.

செல்வத்திற்கு திக்கென்றது. இன்ஸ்பெக்டர் மாதிரி இவரும் செம்பகம், நெக்லஸ் என்று பேசப் போகிறாரோ என்று பயந்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சொல்லுங்க மாமா" என்றான்.

"இது யமுனாவுக்குத் தெரிய வேண்டாம். நமக்குள் இருக்கட்டும்" என்று அவனுடைய வலது கையைப் பிடித்துக்கொண்டார் பரமசிவம்.

"நாலாவது மாடியில் இருக்கும் ஆச்சியம்மாவைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர்தான் சொன்னார். யாரோ ஒரு முரடன் சைக்கிளில் வந்து உங்களை மிரட்டினானாமே!" என்று சொல்லி அவனுடைய எதிர்வினைக்காக நிறுத்தினார்.

செல்வத்தின் பாடு இக்கட்டானது. தன் மாமனாரிடமே ஆச்சி இதையெல்லாம் சொல்லியிருந்தால், யமுனாவிடம் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறாரோ! ஆச்சிக்கு வாய் ரொம்ப நீளம். அவள் வம்புப் பேச்சால் எவ்வளவோ குடும்பங்கள் உடைந்து போயிருக்கின்றன.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா" என்றான் செல்வம் அலட்சியமாக, ஆனால் உள்ளூர பயத்துடன்.

பரமசிவம் அவனுடைய இடது கையையும் பிடித்துகொண்டார். "பாருங்க மாப்பிள்ளை, நீங்கள் குடியிருக்கும் பகுதி அந்த முரடனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவனுடைய மனைவி ரொம்ப அழகான பெண் என்கிறார்கள். இதெல்லாம் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். எனக்கு யமுனாவின் வாழ்க்கைதான் முக்கியம். அதற்காக நான் .எதுவும் செய்யத் தயார். ஆகவே என்னிடம் மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்" என்றார் பரமசிவம்.

"யமுனா கொஞ்சம் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வாளே தவிர  உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாள். நான் நினைக்கிறேன், ஒருவேளை அவள் மீது நீங்கள் கோபத்தோடு இருந்த சமயம் பார்த்து இந்தச் செம்பகத்தோடு உங்களுக்கு நெருக்கம் உண்டாகியிருக்குமோ? …." என்று அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தார் பரமசிவம். “ரொம்ப அழகாய் இருப்பாளாமே!”

அவர் பிடியில் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டு எழுந்தான் செல்வம், "அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா. அவளை நான் சரியாகப் பார்த்தது கூடக் கிடையாது. வேண்டுமானால் யமுனாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஆச்சி சொல்வதை நம்பாதீர்கள். உலக மகா ஃபிராடு" என்றான்.

"என் மீது இவ்வளவு மோசமான அபிப்பிராயம் கொண்டிருப்பீர்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை மாமா" என்று அவரை விட்டுச் சற்றே விலகி நின்றான்.

பரமசிவம் அவனை அணைத்துக் கொள்பவர் போல அருகில் வந்தார்.  "பாருங்க மாப்பிள்ளை, நானும் உங்களைப்போல வாலிபனாக இருந்துதான் வயதாகி இருக்கிறேன். என் சர்வீஸில் பத்து இடங்களில் குடும்பத்தை விட்டுத்  தனியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. செம்பகம் மாதிரி எவ்வளவு ஆபத்துக்கள் எனக்கு ஏற்பட்டது தெரியுமா? நாம் எவ்வளவுதான் விலகி நின்றாலும் இது போன்ற விஷயங்கள் வந்தே தீரும். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சனியன் தொலையட்டும். யமுனா வருவதற்கு இன்னும் இரண்டு நாள் ஆகும். நடந்தது என்னவென்று நீங்கள் சரியாகச் சொன்னால் அந்த செம்பகத்தையும் அவள் கணவனையும் பார்த்துப் பேசி  நானே செட்டில் செய்து விடுகிறேன். பணத்தைப் பற்றிக்  கவலைப்பட வேண்டாம். யமுனாவுக்கு விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்" என்றார் பரமசிவம்.

“ஆனால் ஒன்று, அதன்பிறகும் இந்த மாதிரியெல்லாம் நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஆமாம், சொல்லிவிட்டேன்" என்றார் மிரட்டும் தொனியில்.

அழுகையும் ஆத்திரமும் ஒருசேர செல்வத்தின் முகத்தில் குடிகொண்டன. “மாமா, நீங்கள் அந்த வயதில் என்னென்னவோ செய்திருக்கலாம். ஆனால்  இதுவரை யமுனாவைத் தவிர யாரையும் நான் மனத்தாலும் நினைத்தது கிடையாது. நான் கிருஷ்ணன் அல்ல, இராமன்! தெரிந்துகொள்ளுங்கள். வேண்டுமானால் எங்கள் ஆபீசில் இருக்கும் எல்லாப் பெண்களையும் ஒருவர் விடாமல் கேட்டுப்பாருங்கள்” என்று கத்தினான். “இருங்கள், இப்போதே யமுனாவுக்கு போன் செயகிறேன்.”

“உஷ்!” என்று அவனை அடக்கினார் பரமசிவம். “இப்போது இராத்திரி ஆகிறது. நீங்கள் இராமனா கிருஷ்ணனா என்பதை செம்பகத்தின் கணவனிடம் கேட்டால் போயிற்று. நாளை காலையில் அவர்களை அழைத்துவரும்படி ஆச்சியம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். அதுவரை பொறுங்கள்” என்றவர், “எதற்கும் அவரையும் வரச்சொல்லி விடட்டுமா?” என்றார்.

யார் அவர் என்று கண்களாலேயே கேட்டான் செல்வம்.
   
“இந்த ஊரில்தான் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். நமக்கு வேண்டியவர். கண்ணன் என்று பெயர். விஷயத்தைக் கொஞ்சம் குறைந்த செலவிலேயே முடித்துக் கொடுப்பார்.”

தடக்கென்று  சோபாவில் சாய்ந்தான் செல்வம்.

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?) 
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

11 கருத்துகள்:

  1. பரபரப்பாக, சஸ்பென்ஸாக நகர்கிறது! யமுனா இந்த நேரத்திலா ஊர் செல்லவேண்டும்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சமயத்திலா போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும்?..

      நீக்கு
    2. பெயரில்லா21 மே, 2020 அன்று 11:17 AM

      நாலு பக்கமும் இடி செல்லத்திற்கு..!

      S.PARASURAMAN
      ANNA NAGAR.

      நீக்கு
  2. இந்தப்பக்கம் கிருஷ்ணன்... வரப்போவது கண்ணன்...

    அட ராமா...! உம் நிலை ஐயகோ ...!

    பதிலளிநீக்கு
  3. கோதை
    நல்லாத்தான் கதை எழுதுறீங்க
    மேலே தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்... நல்லாத்தான் மிரட்டுகிறார் அந்த மாமனார்! என்ன நடக்கப் போகிறதோ செல்வத்திற்கு! பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. அடடா...எதுவும் நம் நாயகன் வசம் இல்லை..எல்லாம் விதிவிடும் வழி அல்லது சதி..பாவமாகத்தான் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  6. "பாருங்க மாப்பிள்ளை, நானும் உங்களைப்போல வாலிபனாக இருந்துதான் வயதாகி இருக்கிறேன். என் சர்வீஸில் பத்து இடங்களில் குடும்பத்தை விட்டுத் தனியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. செம்பகம் மாதிரி எவ்வளவு ஆபத்துக்கள் எனக்கு ஏற்பட்டது தெரியுமா? நாம் எவ்வளவுதான் விலகி நின்றாலும் இது போன்ற விஷயங்கள் வந்தே தீரும். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். //

    அனுபவ மாமனாரோ? மிரட்டுகிறாரே. அந்த "அவரை" யும் பஞ்சாயத்துக்கு இழுத்த அவரது சமயோசித புத்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. நல்லமாமனார் நல்ல மருமகன்

    பதிலளிநீக்கு