பொன்னித்தீவு -7
இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்
(7) செம்பகம் செம்பகம்
-இராய செல்லப்பா
முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்
(7) செம்பகம் செம்பகம்
புதியதொரு குதூகலத்துடனும் பெருமிதமான பார்வையுடனும்
வீட்டில் நுழைந்தார்கள் யமுனாவும் அவள் தாயாரும்.
பரமசிவமும் செல்வமும் ஓடிவந்து வரவேற்றார்கள்.
யமுனா தன் கணவனைப் பார்த்து, “சாப்பீட்டீர்களா? அப்பா,
நீங்களும் சாப்பீட்டீர்களா?” என்று கேட்டபடியே
தான் வாங்கி வந்திருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
மைசூர் பாக்கை இருவரிடமும் நீட்டினாள்.
“பார்வதி, என்ன விசேஷம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
பரமசிவம். செல்வமும் ஆவலோடு யமுனாவைப் பார்த்தான்.
“எனக்கென்ன தெரியும்? கல்யாணமாகி நாலு வருஷம் ஆனவங்களைக்
கேட்டால் தெரியும்!” என்று விஷமத்தோடு சிரித்தாள் பார்வதி.
“போம்மா, நீ ரொம்ப மோசம்!” என்று அம்மாவின் பின்னால்
நின்றுகொண்டாள் யமுனா. செல்வத்தைப் பார்த்துக்
கண்ணடித்தாள்.
அவனுக்குப் புரிவதுபோல் இருந்தது. “யமுனா, பொய் சொல்லாதே!
நீ செங்கல்பட்டு போகிறேன் என்று லேடி டாக்டரைத்தானே பார்த்துவிட்டு வருகிறாய்? சொல்லியிருந்தால்
சென்னையிலேயே பார்த்திருக்க முடியாதா? உன் அப்பாவும் இதற்கு உடந்தையா? கொரோனா சமயம்,
ஏதாவது அசம்பாவிதமாக நடந்திருந்தால் யார் பொறுப்பு?” என்று பொரிந்தான். சிலநேரங்களில்
அவனுக்கும் கோபம் வருவதுண்டு.
பார்வதிக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
யமுனா கர்ப்பமாயிருக்கும் செய்தியை இன்னும் எவ்வளவு நேரம்தான் சஸ்பென்சாக வைப்பது? “சாரி, மாப்பிள்ளை! எனக்கோ அப்பாவுக்கோ எந்த விஷயமும்
தெரியாது. உண்மையில் யமுனாவுக்கே தெரியாது. தற்செயலாக டாக்டர் பத்மாவிடம் போனதில் விஷயம்
தெரிந்தது. இனிமேல்தான் இவளை நீங்கள்
பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு வார்த்தை
கூடக் கடிந்துகொள்ளக் கூடாது. சரியா?” என்றாள்.
செல்வம் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போனான். பரமசிவம்
மகளை உச்சிமோர்ந்து வாழ்த்தினார். “எல்லாம் நல்லபடியாக நடக்கும். பழனி முருகன் துணையிருப்பான்”
என்றார்.
இரவு பத்துமணி. விளக்கை அணைத்தான் செல்வம். அவன் கைகளையே
தலையணையாகச் சாய்ந்துகொண்டாள் யமுனா. “என் கண்ணே, உனக்கு ஆயிரம் முத்தங்கள்!” என்றான்
செல்வம்.
“அதெல்லாம் கொரோனா போனபிறகுதான். இனிமேல் வீட்டில் இருந்தாலும் நீங்கள் நான் எல்லாரும் மாஸ்க் அணிந்தாக
வேண்டுமாம். டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாள் யமுனா.
“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கொரோனா சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திற்குப்
போனாளாம் ஒருத்தி. குழந்தை மாஸ்க்குடனேயே வெளிவந்ததாம்!” என்று அவளைக் கிச்சுகிச்சு
மூட்டினான்.
எதிர்பாராத குறுகுறுப்பினால் ‘அம்மா’ என்று அலறிவிட்டாள் யமுனா. அடுத்த நிமிடமே தன் முட்டாள்தனத்தை
எண்ணிக் கலகலவென்று சிரித்தும்விட்டாள். அதற்குள் அம்மா என்னவோ ஏதோ என்று கதவைத்தட்ட, பின்னாலேயே அப்பாவும் வந்து விட...செல்வத்தின்
முகத்தில் அசடு வழிந்தது.
“சரி சரி, இனிமேல் அவள் சரியான நேரத்துக்குத் தூங்கவேண்டியது
அவசியம். புரிந்ததா மாப்பிள்ளை?” என்று பரமசிவம் முற்றுப்புள்ளி வைத்தார்.
***
பொழுது விடிந்தது. எழுந்திருக்க மனமில்லாமல்தான் எழுந்தாள் யமுனா. அதற்குள் பார்வதி அவளைக் கைத்தாங்கலாக
அழைத்துக்கொண்டுபோய் பல் துலக்க வைத்தாள். காப்பி வேண்டாம், மசக்கைக்கு ஆகாது என்று
ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள்.
வாசலில் கோலம் போடவந்த பக்கத்து வீட்டுப் பெண்கள் பார்வதியம்மாவைப்
பார்த்தவுடன் ஆவலோடு வந்து நலம் விசாரித்தனர். யமுனா சற்றே அசதியாக இருப்பதைக் கண்டு
விஷயத்தை ஊகித்தவர்களாக, “எங்களுக்கு ஸ்வீட் கிடையாதா?” என்றனர்.
யமுனா மெல்ல நடந்து வந்து வணக்கம் சொன்னாள். முகத்தில்
வெட்கம் படர்ந்தவளாக அவர்களுக்கு மைசூர் பாக்கை விநியோகித்தாள். டாக்டர் இன்னும் டியூ டேட் சொல்லவில்லை என்றும்
இரண்டாவது செக்-அப்பின்போதுதான் சொல்லக்கூடும் என்றும் விளக்கினாள்.
செல்வத்திற்கு அன்று காலை எட்டு மணிக்கே ஒரு கான்ஃபரன்ஸ்
கால் இருந்ததால் அவசரம் அவசரமாகத் தன் வேலைகளை முடித்துக்கொண்டு அறைக்கதவை மூடிக்கொண்டான்.
பார்வதி வந்திருக்கும் செய்தியைக் கேட்டதுமே வக்கீல்
மாமி ஓடிவந்தார். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்ட பிறகுதான் யமுனாவைப் பார்த்தார்.
அவருக்கு ஒன்றுக்கு இரண்டாக மைசூர் பாக்கை நீட்டினாள் யமுனா. “உங்களுக்கு ஒன்று, செம்பகத்துக்கு
ஒன்று!”
செம்பகம் என்றதும் மாமிக்கு டக்கென்று நினைவுக்கு வந்த
விஷயம், செம்பகத்தின் கணவன் அவளுக்குத் தன் முதல் சம்பளத்தில் நெக்லஸ் வாங்கிக் கொடுத்ததுதான்.
“அப்படியே அச்சு அசலாக உன் நெக்லஸ் மாதிரியே இருக்குடி
யமுனா! யாரோ ஒரு மார்வாடியிடமிருந்து பழைய நகையை சல்லிசாக வாங்கினானாம்! சாமர்த்திய
சாலி” என்று புகழ்ந்தார் மாமி.
யமுனாவுக்குச் சுருக்கென்றது. தன்னுடைய நெக்லஸ் காணாமல்போனதை
அவள் கணவனிடமோ, பெற்றோரிடமோ அல்லது மாமியிடமோ இன்னும் கூறவில்லை. இப்போது கூறலாமோ கூடாதோ
என்று குழம்பினாள். மனதில் ஏதேதோ விசித்திரமான எண்ணங்கள். ஒரு வேளை, செம்பகம்தான் திருடிக்கொண்டாளோ?
அதே சமயம் தன்னைப் பாராட்டிக்கொள்ளவும் செய்தாள். போலீசில்
புகார் கொடுத்துவிட்டதால், அவர்கள் மூலமே கண்டுபிடித்துவிட முடியும் என்று தோன்றியது.
அந்த நேரத்தில்தான் செம்பகம் வந்தாள், வழக்கமாகத் தரும்
ஒரு முழம் மல்லிகைப்பூவுடன். அவள் கழுத்தில் பளபளவென்று மின்னியது அந்த நெக்லஸ். பார்த்தவுடனேயே
யமுனாவுக்குப் புரிந்துவிட்டது, அது தன்னுடைய நெக்லஸ்தான் என்று.
பாவி! நல்லவிதமாக இரண்டு வருடங்களாகப் பழகிவந்தவள், ஊமைக்கோட்டான் என்பதற்கேற்ப, ஓசையில்லாமல் காரியத்தை
முடித்திருக்கிறாளே! சண்டாளி! அவளை...அப்படியே கழுத்தை நெரித்துவிடவேண்டும்போல் இருந்தது.
செம்பகத்தை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்தாள். அதற்குள்
“வணக்கம் மேடம்” என்று அங்கு வந்தான் ராஜா. செம்பகத்தின் கணவன்.
இனியும் தாமதிக்கக்கூடாது என்று நெக்லஸ் தொலைந்து போனதையும், போலீசில் புகார் செய்ததையும், அது இப்போது செம்பகத்தின் கழுத்தில் இருப்பதையும் தன் தாயாரிடம் இரகசியமாகக் கூறினாள்
யமுனா.
அவ்வளவுதான், ஒரு பிடி பிடித்துவிட்டாள் பார்வதி. “இந்தப்பா, ராஜா! உண்மையைச் சொல்லிவிடு.
இந்த நெக்லஸ் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்றாள்.
“ஏங்க? என்ன விஷயம்? நான் எங்கேயும் திருடவில்லை. கொள்ளையடிக்கவும்
இல்லை. என் சொந்தக் காசில் வாங்கினேன்” என்றான் ராஜா மிகுந்த பெருமிதத்துடன். “நான்
இப்போது ஜுனியர் எக்சிகியூடிவ் ஆகிவிட்டேன் தெரியுமா? வக்கீல் மாமிக்குத் தெரியுமே!”
“இல்லை, நான் நம்ப மாட்டேன். இது என் பொண்ணோட நெக்லஸ்
தான் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையைச் சொல்லிவிடு.
இல்லையென்றால் போலீசுக்குத்தான் போகவேண்டிவரும்!” என்று மிரட்டினாள் பார்வதி. பார்த்துக்கொண்டிருந்த
செம்பகத்திற்குப் பேசமுடியாததால் அழுகை பொங்கிவந்தது. “அவர்மேல் தப்பு இல்லை” என்பதுபோல்
சைகை காட்டினாள்.
“அட, இவ்வளவுதானா விஷயம்? இது உங்கள் வீட்டு நெக்லஸே
தான்! ஆனால் இதை நான் ஒரு மார்வாடியிடம் முழுசாக பேமெண்ட் பண்ணி வாங்கியிருக்கிறேன்.
ரசீது வேண்டுமானாலும் காட்டமுடியும். ஏன், அந்த மார்வாடிக் கடையையும் அடையாளம் காட்டுகிறேன்,
வருகிறீர்களா?” என்று சவால் விட்டான்.
இதற்குள் அக்கம்பக்கத்துக் குடித்தனக்காரர்கள் அங்கே
கூடிவிட்டார்கள். யமுனாவுக்கும் பார்வதிக்கும் தங்கள் வீட்டு நெக்லஸ் எப்படி மார்வாடிக்
கடைக்குப் போயிருக்கமுடியும் என்று அனுமானிக்க முடியவில்லை.
பரமசிவம் சட்டையை மாட்டிக்கொண்டு எழுந்தார். “ராஜா,
நீ சொல்வது உண்மை தானா என்று பார்த்துவிடலாம். வா” என்று அவனைத் தன்னுடைய காரில் அமர்த்திக்கொண்டு அவன் சொன்ன திசையில் பயணமானார்.
சற்றுத் தாமதமாக வந்த ஆச்சியம்மா இதுவரை நடந்த காட்சிகளை
பார்க்கத் தவறிவிட்டதற்காகத் தன்னை நொந்துகொண்டார்.
அதனாலென்ன, இத்தனூண்டு விவரம் கிடைத்தால் போதாதா அவருக்கு? ஒரு நாவலே எழுதிவிட மாட்டாரா?
“பாவம், யமுனா! இருந்திருந்து உண்டாயிருக்கிறாள். இப்போதுதானா
இப்படியெல்லாம் நடக்கவேண்டும்!” என்று தன் வேலையை ஆரம்பித்தார். எல்லோரும் ‘உச்’ கொட்டினார்கள்.
(தொடரும்) (கன்னித் தீவு போலவா?)
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகதையை, கொஞ்சம் காத்திருந்து, மொத்தமாக படிக்கலாமோ என்று தோன்றுகிறது! :)
அப்படியானால் வாரம் ஒருமுறை மட்டும் தொடர்கதையை எழுதிவிட்டு, மற்ற நாட்களில் மற்ற விஷயங்களை எழுதலாமா? யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
நீக்குஇன்றைக்கு இன்னும் தொடர்கதையின் அடுத்த பகுதி வெளியிடவில்லையா?
நீக்குதொடர்கதை - தொடரட்டும். மற்ற விஷயங்களும் எழுதுங்கள் - உங்களுக்குப் பிடித்ததை!
சரியான சமயத்தில் கதவைப் பூட்டிக் கொண்டாரே...இல்லை இல்லை நீங்கள் பூட்டிவிட்டீர்களே..
பதிலளிநீக்குநெக்லஸ் - நல்லதொரு திருப்பம்...
பதிலளிநீக்குஒரே சஸ்பென்சாக இருக்கிறதே நெகலஸ் விஷயம் ������
பதிலளிநீக்குS.PARASURAMAN
ANNA NAGAR.
வேண்டுமானால் முடிக்கலாம் என்று தோன்றுகிறது
பதிலளிநீக்கு