வியாழன், ஜூன் 04, 2020

பொன்னித் தீவு-16

பொன்னித் தீவு-16 

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்           

 (16) அகிலா -சந்திரன் - ராஜா

 “ரொம்ப நன்றி மேடம்” என்றான் ராஜா, அகிலாவைப் பார்த்து.

 அப்போதுதான் அகிலாவுக்குத் தெரிந்தது, பிரசவத்திற்காக மீராபாயை ஆஸ்பத்திரியில் சேர்த்தது ராஜாதான் என்று.

 "நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், சரியான நேரத்தில் எனக்கு லிஃப்ட் கொடுத்ததற்காக. பார்த்தீர்களா, ஆண் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்றாள் அகிலா.

 அப்போது பிராதார் வந்து, ராஜாவின் கம்பெனியில் தான் ஓர் ஊழியன் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டான். 

 "இன்னும் இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்" என்றாள் அகிலா. பிறகு ராஜாவிடம் திரும்பி, "இவருக்கான மொத்தச் செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். கவலைப்பட வேண்டாம்" என்றாள்.

 "எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எங்கள் கம்பெனியின் தலைவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து இந்தப் பணத்தை  வாங்கிக் கொடுத்து விடுகிறேன். ஒன்றிரண்டு நாள் தவணை கொடுங்கள்" என்று பணிவோடு கேட்டுக் கொண்டான் ராஜா.

 ***

ஒரு வாரம் கழித்து  மீண்டும் அகிலாவைச் சந்தித்தான் ராஜா.

 "மன்னிக்கவேண்டும் மேடம்! எங்கள் கம்பெனியின் தலைவர் அபிநவ் உடல்நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.  கொரோனாவாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்கள். அதனால் அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. உங்களுக்குச் சேர வேண்டிய தொகையை விரைவில் வாங்கிக் கொடுத்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றான்.

 அகிலாவுக்குச் செம்பகத்தை நன்றாகத் தெரியும். செம்பகத்தின்  கணவன் ராஜா மிகவும் நாணயமானவன் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறாள். ஆகவே "உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு"  என்று புன்சிரிப்புடன் கூறினாள்.

 ஆனால் ராஜாவின் முகத்தில் ஆழ்ந்த கவலை இருப்பதைப் புரிந்து கொண்டவளாக, "இதற்காகத்தான் வந்தீர்களா?" என்றாள்.

 உண்மையில் ராஜா வந்தது தொழிலாளர்களுக்குத் தேவையான செலவுகளுக்காக அவசரக் கடன் கேட்பதற்குத்தான். அபினவ்வைச் சந்திக்க முடியாமல் தவித்தான் ராஜா. அவர் உடல்நலம் தேறி வரும்வரையில் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ராஜா தானே பொறுப்பு!

 முதலில் தயங்கினாலும் ஒருவாறாகத் தனது தேவையை அகிலாவுக்கு உணர்த்த முடிந்தது ராஜாவால்.

 சிறுவயதிலிருந்தே மற்றவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலை அகிலாவுக்கு ஏற்பட்டு இருந்தது. பாக்கெட்மணியில்  பெரும்பகுதியைத் தன் ஏழைத் தோழிகளுக்காகவே செலவழிப்பாள். அதேசமயம் பொறுப்புணர்ச்சியுடனும்  செயல்படுவாள். அவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு இம்மாதிரி மனிதநேயச் செலவுகள் அதிகரித்த போதிலும் அவருடைய தந்தை தடை சொன்னதில்லை.

 மீராவின் பிரசவச் செலவு மற்றும் இப்போது ராஜாவுக்குத் தேவையான தொகை இரண்டையும் சேர்த்தால் ஒன்றேகால் லட்சம் ஆகிறது. வேறு வழியில்லை, பாரஸ்மல் கடைக்குத்தான் போயாக வேண்டும். சந்திரனை அனுப்பினாள். அதற்கு முன்னால் அவரிடம் பேசி, அடகு வைத்த நகையை அவரையே  விலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.

 அதன்படியே சந்திரன் போய் மீதித் தொகையை வாங்கிவந்து ராஜாவிடம் கொடுத்தான்.

 எப்படியோ கேட்டதில் முக்கால்வாசியாவது கிடைத்ததே என்று ராஜா சந்தோஷப்பட்டான். "அனைத்திற்கும் நான் பொறுப்பு" என்று மீண்டும் சொல்லிவிட்டுச் சென்றான்.

 அவன் போன பிறகு சந்திரன் அகிலாவிடம் வந்து, "நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறல்லவா?" என்றான்.

 "யமுனா அக்காவின் நெக்லஸைக் குரங்கு எடுத்தது. குரங்கிடம் இருந்து ஆச்சிக்கு வந்தது. ஆச்சியிடமிருந்து என்னிடம் வந்தது. நான் உங்களிடம் கொடுத்தேன். இப்போது அதை விற்றே விட்டீர்கள். அப்படியானால் நெக்லஸுக்கு  நீங்கள் தானே பொறுப்பு? ஆனால் ஆச்சி என்மீதுதானே குற்றம் சாட்டுவார்? அவருக்கு என்ன பதில் சொல்வது?" கையைப் பிசைந்தான் சந்திரன்.

 கலகலவென்று சிரித்தாள் அகிலா. "சந்திரன், நீ ஒரு முட்டாள் என்பதை மறக்கவே மாட்டாயா?" என்றாள்.

 "ஆச்சி லாக்கரைத் திறந்து பார்த்தால் தானே விஷயம் தெரியும்? அப்போதும் கூட, திருடனுக்குத் தேள் கொட்டியது போலத்தான் இருக்கும்.  யாரிடமும் இந்த விஷயத்தை அவரால் பேச முடியாது. கவலைப்படாதே!"

 சந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. "என்றாவது ஒருநாள் நகை தொலைந்து போனதை யமுனா அக்கா கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்களுக்கு நீங்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்! இல்லையென்றால் உங்களை நான் சும்மா விடமாட்டேன்!" என்றான் நியாயமான கோபத்துடன்.

 "அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ராஜா தன் முதலாளியிடம் இருந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் முதல் வேலையாக நானே போய் யமுனாவிடம் எல்லா விஷயத்தையும் விளக்கிச் சொல்கிறேன். நகைக்கு உண்டான பணத்தை அவளிடம் கொடுத்துவிடுகிறேன். பயப்படாதே" என்று அவனுடைய உள்ளங்கையைத் தொட்டு உத்தரவாதம் அளித்தாள் அகிலா.

 அவள் கையை எடுத்துவிடாதபடித் தன் மறுகையால் மூடினான் சந்திரன். உடனே வேகமாகத் தன் கையை இழுத்துக்கொண்ட அகிலா, அவனை முறைத்துப் பார்த்து, "முதலில் அரியர்ஸ் இல்லாமல் இன்ஜினியரிங் பாஸ் செய்வதில் கவனம் வை. தமிழ் சினிமாக்களைப் பார்த்துக் காதல் கீதல் என்று விழுந்து விடாதே! அதற்கு இன்னும் இரண்டு வருடம் போகட்டும்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டுக் கிளம்பினாள். 

***

ஆனால் கொரோனாவில் இருந்து அபிநவ் பதினைந்தே நாளில் குணமாகி வீடு திரும்பியதையும், தான் இல்லாதபோது பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு கம்பெனியின் தொழிலையும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலத்தையும் காப்பாற்றி வைத்ததற்காக ராஜா செலவு செய்த தொகை முழுவதையும் அபினவ் திருப்பி கொடுத்ததையும் தெரிந்து கொண்டபோது ஆக்கில்லா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்குச் சேர வேண்டிய கடன் முழுவதையும் ராஜா கொடுத்துவிட்டான்.

அது மட்டுமல்ல, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் கடினமான பணியை அரசாங்கத்தின் தலையில் கட்டாமல், அவர்களை தமிழ்நாட்டிலேயே இருத்தி வைத்துக்கொண்டு நல்வாழ்வு கொடுத்ததை பாராட்டும் விதமாக தமிழக முதல்வரின் ஒரு லட்ச ரூபாய் பரிசு அபிநவ்வின் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. அதே தலைமை அதிகாரிகள் ஒருமனதாக தெரிவித்தபடி ராஜாவுக்கே கொடுத்துவிட்டார் அபிநவ்.

 அப்பணத்தில் தான் பாரஸ்மல்  இடமிருந்து அந்தப் பழைய நெக்லஸை வாங்கி செம்பகத்துக்கு அணிவித்துவிட்டான் ராஜா.

 இப்போது அகிலாவின் நிலைமை இக்கட்டாகி விட்டது. பணம் வந்தவுடன் பாரஸ்மல் இடம் எப்படியாவது பேசி, அதே நெக்லஸை வாங்கி, யமுனாவுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.

 ராஜாவிடம் உண்மையைக் கூறி அதே  நெக்லஸைப் பணம் கொடுத்து  வாங்கிக் கொள்வதென்றால், ஆச்சியையும் சந்திரனையும் குற்றவாளிகளாக்க வேண்டிவரும். ஆச்சியை விட, மாணவனான சந்திரனின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்க முயன்றதாகத் தன்மீதும் பழி வரும்.

 தீராத குழப்பங்கள் வரும்போதெல்லாம் ஸ்ரீஅரவிந்த அன்னையின் படத்தின் முன்பு அமைதியாக தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அகிலா. இன்றும் அதேபோல் அன்னையிடம் தஞ்சம் ஆனாள்.

 ராஜா திருப்பிக் கொடுத்த பணத்தை ஒரு கவரில் போட்டு அன்னையின் படத்தின் பின்புறம் பத்திரமாக வைத்தாள். கண்மூடி, எண்ணங்களை எல்லாம் வெளியேற்றி, மனதை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்தாள்.

 "தாயே, நான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. மீராபாய் பிரசவத்திற்கு உதவி செய்தேன். மொழி தெரியாத பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்தேன். இப்போது என் கையில் இருக்கும் பணம் யமுனாவுக்குச் சேர வேண்டியது. யாருடைய பெயரும் கெடாமல் யமுனா இழந்த நகை அவளுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். அதற்கு அருள் செய்வாய் தாயே" என்பதே அவள் பிரார்த்தனையாக இருந்தது.

 அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்குத் தானோ என்னவோ, மறுநாள் தற்செயலாக  யமுனாவைச் சந்தித்தாள் புஷ்பா. போலீஸ் நிலைய ஊழியர்.

 (தொடரும்)

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

7 கருத்துகள்:

  1. அடடா... திருப்பத்திற்கு மேல் திருப்பம்...!

    முடிப்பது உங்கள் கையில்...!

    பதிலளிநீக்கு
  2. முடிச்சு எங்கெங்கோ இறுகுகிறது.  எப்படி அவிழும் என்று காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. முடிந்து விடுமோ? பார்க்கலாம். தெரிந்து கொள்ள நாங்களும் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. கதை முடிவுக்கு வரக்கூடாது....கொரேனா முடியும் வரை தொடரட்டும்.

    S.PARASURAMAN ANNA NAGAR.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை. திடீர் திருப்பங்கள். Arearers சந்திரன் அகிலா காதல் வேறு.பாராட்டுக்கள் ஆசிரியரே!

    S.PARASURAMAN ANNA NAGAR.

    பதிலளிநீக்கு
  6. தொடர் அருமையாகத் தொடர்கிறது
    நானும் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆ ஒரு ரவுண்ட் அடித்து அகிலா புஷ்பா என்று வந்தாச்சு அப்ப முடிவு நெருங்கி வருகிறது என்று தெரிகிறது அடுத்த தலைப்பு அகிலா புஷ்பா - ??? ராஜா வா?

    கீதா

    பதிலளிநீக்கு