மணிகர்ணிகா (17) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)
(அமெரிக்காவில் 114 வது நாள்: 03-8-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடங்கள் வானத்தில் மிதக்கும் மேகங்களைப் போல வெகு சீக்கிரமாக ஓடிவிட்டன. தங்களுடைய சொந்தக் கம்பெனி என்பதால் நவீனுடன் மணிகர்ணிகாவும் இரவு பகல் பாராமல் உழைத்தாள். உண்மையில் மென்பொருள் என்பது இலக்கியம் படிப்பதைவிடவும் சுலபமானது என்று அவளுக்குப் புரிந்தபோதுதான் எப்படி ஆயிரக்கணக்கானவர்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்துப்
துபாய் -உயரமான கட்டிடம் |
எனவே அவள் மென்பொருள் எழுதும் வேலையை விட்டுவிட்டு, அதன் விற்பனையை அதிகரிக்கும் வேலையைக் கையில் எடுத்துக்கொண்டாள். சில மாதங்களிலேயே அவளுக்கு அதில் நல்ல தேர்ச்சி ஏற்பட்டுவிட்டது. நவீனுக்கும் அவளது தொழில் முதிர்ச்சி வியப்பளித்தது. ஆதரவற்ற பெண்ணாக, சிறிது தன்னம்பிக்கைக் குறைபாட்டுடன் நேர்காணலுக்கு வந்த மணிகர்ணிகாவா இவள் என்று அதிசயப்பட்டான். இவ்வளவு அறிவும் விடாமுயற்சியும் உடைய பெண்ணைப் பார்க்கக் கொடுத்துவைக்காமல் அகால மரணத்துக்குள்ளான தன் அத்தையை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தான். இனி வாழ்நாள் முழுவதும் இவள் கண்ணீர் வடிக்காதவண்ணம் காப்பேன் என்று மனதில் உறுதி பூண்டான்.
அவளுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழிக்காக இந்த இரண்டு வருடமும் அவளது விரலைக் கூடத் தீண்டாமல் இருந்தான் நவீன். பல் முளைக்காத சிறுகுழந்தை பெரிய ஆப்பிளைக் கையில் வைத்துக்கொண்டு ஏங்குவதுபோல் இருந்தது அவன் நிலைமை.
அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்காதா என்ன? மூன்று வருடங்கள் என்று எதற்காக அவனுக்கும் தனக்கும் இடையே திரை போட்டுக்கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஒரே நோக்கம் அவனைப் புரிந்துகொள்வது. அத்துடன் தன்னுடைய சொத்தைப் பெறுவதுமட்டுமே அவர்களின் இலட்சியமாக இருக்குமா என்ற சந்தேகம் விலகவேண்டும். இந்த இரண்டுமே இப்போது நிறைவேறிவிட்டது. மாமாவும் மாமியும் உண்மையிலேயே தங்கமானவர்கள். அதிலும், சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாத்துக்கு அதே வங்கியில் சேர்மன் ஆகப் பதவி உயர்வு கிடைத்துவிட்டதால், அவருடைய ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. “எல்லாம் இந்தக் குழந்தை வந்த அதிர்ஷ்டம்” என்று மணிகர்ணிகாவைக் கொண்டாடினார் அவர்.
நவீனைப் பொறுத்தவரையில், அவனது நேர்மையான, ஒளிவு மறைவற்ற சுபாவம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவனைப் பற்றி அவளுக்குத் தெரியாத இரகசியம் ஒன்றுமேயில்லை என்னும் அளவுக்கு அவன் அவளோடு இழைந்தான். இவ்வளவு நல்லவனைப் பட்டினிபோட்டுவிட்டேனே என்று அவள் வருந்தாத நாளில்லை.
அதே சமயம், தன் தடையுத்தரவைத் தானே வாபஸ்பெற்றால் அவர்கள் தன்னை இளப்பமாக நினைப்பார்கள் என்ற தயக்கமும் அவளுக்கு இருந்தது. நவீன் வந்து தன்னிடம் கேட்கட்டுமே என்ற வீம்பும் அடிமனதில் இருந்தது. பொறுமையாக நாட்களைக் கடத்தினாள் மணிகர்ணிகா.
அப்போதுதான் அந்த முடிவை எடுத்தான் நவீன்.
ஒரு பிரபலமான அமெரிக்க வன்பொருள் (ஹார்ட்வேர்) கம்பெனி துபாயில் தன் அலுவலகத்தைத் திறக்க விரும்பியது. அதன் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்த வங்கிகளோ, வெறும் வன்பொருளை மட்டும் வாங்க விரும்பவில்லை. அதற்கான மென்பொருளையும் சேர்த்து விற்பனையும் பராமரிப்பும் கொண்ட முழுமையான ஒப்பந்தம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தன. அதை முன்னிட்டு நவீனுடன் அந்தக் கம்பெனி வர்த்தகக் கூட்டுறவு ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தது. நவீனுக்கு அது ஓர் எதிர்பாராத அதிர்ஷ்டம். ஆகவே உடனே ஒப்புக்கொண்டான். அதற்காக உடனே அவன் துபாய் புறப்பட்டான்.
ஆறுமாதம் கழித்து, பெர்த்திலுள்ள தங்கள் நிறுவனத்திற்கு ஒரு சிஇஓ -வை நியமித்து, அவருக்கு முக்கியத் தகவல்களைப் பரிச்சயமாக்கிக் கொடுத்த பின், தானும் துபாய்க்குப் புறப்பட்டாள் மணிகர்ணிகா.
பாவம், நவீன், அவனை இனிமேலும் பாடுபடுத்தக்கூடாது. ஆஸ்திரேலியாவில் கொடுத்த அதே உழைப்பை இப்போது அவன் துபாயிலும் கொடுத்தாகவேண்டும். வேலை என்று வந்துவிட்டால் அவனுக்குப் பசி தாகம் உறக்கம் எதுவுமே கவனத்தில் வராது. போதும், இனிமேல் அவனுக்கு மனைவியாக மட்டுமே இருந்துவிடுவது என்று தீர்மானித்தாள் அவள். ஆபீஸ் வேலை அவளுக்கு வேண்டாம். தனக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுத்தவனுக்கு ஆயுள்முழுதும் துணையாக நிற்பதே இனிமேல் அவளுடைய இலட்சியமாக இருக்கும்.
துபாயில் இறங்கினாள் மணிகர்ணிகா. ஓட்டல் அறையை அவன் முன்னரே பதிவுசெய்திருந்ததால் நேராக அங்கு விரைந்தாள். அவனுக்குச் சிறப்புச் சலுகையாக அந்த அறையை ஒரு மாத காலத்திற்கு அமர்த்தியிருந்தது அந்த அமெரிக்கக் கம்பெனி.
“நவீன், நான் வந்துவிட்டேன். நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?” என்று போன் செய்தாள்.
“ஹாய், வந்துவிட்டாயா மணிக்கா மை டார்லிங்!” என்று ஆரம்பித்த நவீன் அவளிடம் பேசியதையெல்லாம் இங்கு வெளியிட நாகரிகம் தடுக்கிறது. “சாப்பிட்டுவிடாதே! நான் ஒருமணி நேரத்தில் அங்கிருப்பேன்” என்று முடித்தான்.
ஆசாமி ரொம்பத்தான் துள்ளுகிறார் என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள். தான் மட்டும் பிடி கொடுத்துவிட்டால் இன்று என்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்தாள். அதிலேயே அவள் கன்னம் சிவந்துவிட்டது. அங்கிருந்த இரண்டு படுக்கைகளில் முதலாவதில் சாய்ந்து படுத்தாள்.
கதவு தட்டப்பட்டது. திறந்தாள். வேகமாக வந்து தன்னை அணைத்துக்கொள்வான், முத்தமிட்டுக் கொஞ்சுவான் என்று எதிர்பார்த்தவளுக்குப் பெருத்த ஏமாற்றம். நவீன் மிகவும் ஜாக்கிரதையாக அவள் கைகளைத் தொடாமல் விலகிப் போய் இரண்டாவது படுக்கையில் அமர்ந்து சிரித்தான். “ஆறுமாசம் நல்லாப் போச்சா?” என்று கேட்டான் குறும்புத்தனமான சிரிப்புடன்.
“அதாவது, நம்ப ஒப்பந்தப்படி இன்னும் ஆறுமாசம்தான் இருக்குன்னு ஞாபகப்படுத்தறீங்களோ?” என்று வெறுப்போடு கேட்டாள் மணிகர்ணிகா.
அவளுக்குப் பதில் சொல்லாமல், “ஹே கூகுள், கால் ரூம் சர்வீஸ்” என்றான். கூகுள் அசிஸ்டண்ட் கேட்டபடி ரூம் சர்வீஸை இணைத்தது. “பொங்கல், வடை, ஆனியன் ஊத்தப்பம்” என்று அவள் முகத்தை மறுபடியும் குறும்பாகப் பார்த்தான். ‘அதுவே சரி’ என்பதுபோல் அவள் தலையசைத்தாள்.
அவனோ, “ரூம் சர்வீஸ்! பொங்கல், வடை, ஆனியன் ஊத்தப்பம் தவிர வேறென்ன இருக்கிறது?” என்றான், தன் குறும்புப் பார்வையை விடாமல், அவளை வெறுப்பூட்டுவது போல.
‘ஓஹோ, ஆசாமி ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்’ என்று மனதிற்குள் குதூகலித்தாள் அவள்.
ரூம் சர்வீஸ் தன்னிடம் உள்ள எல்லா ஐட்டங்களின் பெயர்களையும் சொல்லிமுடித்த பிறகு, “வெல், இரண்டு செட் ஆனியன் ரவா மசாலா அனுப்புங்கள், பிளஸ், டூ காபி” என்றான் நவீன்.
அவள் அவனை முறைத்துப்பார்த்தாள். பிறகு, “ரவா தோசா என்றாலே எனக்குப் பிடிக்காது. ஆர்டர் பண்ணின ரெண்டையும் நீங்களே சாப்பிடுங்கள்” என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் படுக்கையில் நன்றாகப் படுத்து, கழுத்துவரை போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.
“ஹஹ்ஹஹ்ஹா” என்று குறும்பாகச் சிரித்தவன், “மேடம் மணிக்கா அவர்களே! நான் ஆர்டர் செய்த ரெண்டு மசாலாவும் எனக்கு மட்டும்தான்! உங்களுக்கு நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லை. புரிகிறதா?” என்று அவளை நெருங்கி, தானும் அதே கட்டிலில் படுத்துக்கொள்ள முனைந்தான்.
அவள் அவனைக் கோபத்தோடு அகற்றினாள். அவனோ விடாமல் அவளை நெருக்கினான். அவள் விருட்டென்று, போர்வையை உதறிக்கொண்டு எழ முயன்றாள். அவனோ அவளை அதே வேகத்தில் படுக்கையில் தள்ளினான். அதற்கு அவள் எதிர்வினை ஆற்றுவதற்குள் ரூம் சர்வீஸ் ஆள் கதவைத் தட்டவே, இருவரின் ஆட்டமும் சட்டென்று நின்றுபோய் இருவர் முகத்திலும் அசட்டுச் சிரிப்பு தோன்றியது.
அந்த ஆள் போனதும், நவீன் அவளை இறுகப் பற்றிக்கொண்டான். “இன்னும் ஆறுமாசம் பொறுக்கவேண்டுமா மேடம்?” என்று அவளை அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான். ஏற்கெனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த அவளால் அவனைத் தவிர்க்க முடியவில்லை. “இப்போதேவா?..” என்றாள் மெல்லிய குரலில்.
“ஆமாம்” என்ற நவீன், “ஆம் இப்போதே தான். இல்லையேல் சூடு ஆறிவிடுமே” என்றான். பிறகு, “நான் ரவா தோசையைச் சொன்னேன்” என்றான்.
திரும்பவும் அவளுக்கு ஏமாற்றம். அவசரமாக எழுந்து பாத்ரூமுக்குள் போய்த் தாழிட்டுக்கொண்டாள். வெகுநேரம் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. உள்ளிருந்து விசும்பல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதன் பிறகு ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டும் சப்தம் பெரிதாகக் கேட்டது.
நவீன் பதறிப் போனான். அவளோடு கொஞ்சநேரம் விளையாடவேண்டும் என்பதுதான் அவனுடைய திட்டம். இவளோ இப்படி சீரியஸாக எடுத்துக்கொண்டு…!
மெயிண்ட்டனன்ஸ் ஆசாமியை வரவழைத்தான். பாத்ரூமுக்குரிய டுப்ளிகேட் சாவி கிடைத்தது. மணிகர்ணிகா வெளியில் வந்தாள். அவள் முகத்தில் பயம் தெரிந்தது. ஆடை முழுதும் நனைந்துபோயிருந்தது.
“நீங்கள் இவ்வளவு மோசமான ஆள் என்று தெரியாமல் போய்விட்டது. பாத்ரூம் கதவு பூட்டிக்கொண்டு திறக்கவே முடியவில்லை. எவ்வளவு நேரம் கதவைத் தட்டுவது?” என்று கோபமாக வெடித்தாள்.
‘அட, இந்தப் பிரச்சினைக்கு இப்படியொரு கோணம் இருக்கிறதா’ என்று வியப்படைந்த நவீன், இப்போது கிடைத்த வாய்ப்பைத் தவறவிடவில்லை. தடித்த டர்க்கி டவலை அவள்மீது அழுத்தமாகப் போர்த்தினான்.
இரண்டு செட் ஆனியன் ரவா தோசையும் ஆறிப்போய்விட்டதைப் பொருட்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை.
***
ஆறுமணி சுமாருக்கு வெயில் சற்றே தாழ்ந்தபோது இருவரும் வெளியில் புறப்பட்டார்கள். தங்குவதற்கு ஒரு அபார்ட்மெண்ட்டை அவன் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அதைப் பார்வையிடப் போனார்கள், கம்பெனி சார்பில் அவனுக்குத் தரப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரில்.
“பிஎம்டபிள்யூ என்றதும் ரொம்ப உயர்வாக நினைத்துவிடாதே! துபாயில் இது நம்ப ஊர் ஆல்ட்டோ, சாண்ட்ரோ மாதிரி” என்று சிரித்தான் நவீன்.
ஆஸ்திரேலியாவில் அவர்களிடம் இருந்தது டொயோட்டா கார். அவளுக்கு மிகவும் பிடித்த சிகப்புநிறம். இதுவோ நீல நிறம்.
“உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். டொயோட்டாவே வாங்கிவிடலாம்” என்றான் நவீன். “காரணம், ஆறுமாதம் முன்னதாகவே ஒப்பந்தத்தை ரத்துசெய்தீர்களே அதற்காக!”
மணிகர்ணிகா வெட்கத்துடன் சிலிர்த்துக்கொண்டாள். “இந்த ‘நீங்கள் வாங்கள் போங்கள்’ எல்லாம் நிறுத்தப்போகிறீர்களா, இல்லை, ஓடும் காரில் இருந்து குதித்துவிடவா?”
தன்னுடைய வலது கையால் அவளுடைய இடது கையை அழுத்திக்கொண்டு, “ஓகே, ஓகே..” என்று சமாதானம் செய்தான் நவீன்.
அவளுடைய பார்வை தற்செயலாகக் காரின் பின்சீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த ஏதோ ஒரு பொருள் அவளைக் கவர்ந்தது. முகத்தை நன்றாகத் திருப்பி அதைப் பார்த்தாள். அது ஒரு லேடீஸ் ஹேண்ட்பேக்! மாதவிக்கு அவள் பரிசளித்த அதே ஹேண்ட்பேக்!
(தொடரும்)
இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து.
மாதவி யார் என்று நினைவுபடுத்திக் கொள்ள முனைகிறேன்!
பதிலளிநீக்குநல்லவேளை கோவலனை ஞாபகப்படுத்திக் கொள்ளாமல் போனீர்களே!
நீக்குஶ்ரீராம்..ஹாஹாஹா... இதனால்தான் தொடர் முடிந்ததும் முழுவதுமாய்ப் படிக்கணும் என நினைத்திருக்கிறேன். நெல்லை
நீக்குஆ! கடைசியில் மணிக்கா பரிசளித்த அதே பை மாதவியின் கைப்பை காரில் எப்படி வந்தது என்ற சஸ்பென்ஸ் மணிக்காவுக்கு இப்போது .....அடுத்த ஊடல் தொடங்கப் போகிறது!!!!!
பதிலளிநீக்குகீதா
மர்மமான தொடர்பு...?!
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குமாதவி? சரி ஹாண்ட் பாக் இங்கே மாதவி எங்கே? ரகசியம்? சஸ்பென்ஸ்?
பதிலளிநீக்குகண்ணகியாக மணிக்கா இருக்க, நவீனுக்கு மாதவி கேக்குதா ?
பதிலளிநீக்கு