மணிகர்ணிகா (18) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)
(அமெரிக்காவில் 115 வது நாள்: 04 -8-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
தன்னுடைய செக் திருட்டுப் போய்விட்டதாகவும், அதைப் பயன்படுத்தி யாரோ தன் கணக்கிலிருந்து இருபதாயிரம் ரூபாயைத் தனக்குத் தெரியாமல் எடுத்துவிட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் வினோதா மேடம் கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு கோபால்சாமியே நேரில் வந்துவிட்டார், கருணாமூர்த்தியைப் பார்க்க.
செங்கல்பட்டு கோர்ட் இதைவிடச் சிறியதாக இருக்கும்! |
“ரொம்ப நன்றி சார்! இவ்வளவு சீக்கிரம் திருடனைப் பிடித்ததற்கு” என்று பணிவாகக் கூறினார். “என் மனசிலிருந்த குற்ற உணர்ச்சி இப்போதுதான் நீங்கியது.”
கருணாமூர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்தார். “சரி, பணத்தைக் கோர்ட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சம்மன் வரும். அப்போது வந்தால் போதும் என்று அந்த மேடத்திடம் சொல்லிவிடுங்கள்” என்கிறார்.
“அதற்கு எவ்வளவு நாள் ஆகும்? பத்துப் பதினைந்து நாள் ஆகுமா?” என்று அப்பாவியாகக் கேட்டார் கோபால்சாமி.
கருணாமூர்த்தி ஏளனமாகச் சிரித்தார். “எப்படியும் ஆறு மாசத்துக்குள் கிடைத்துவிடும். அதுவரையில் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்” என்று எழுந்தார்.
“அய்யய்யோ, ஆறு மாசமா? கொஞ்சம் தயவு பண்ணி ஒரு மாசத்திற்குள் கிடைக்கும்படி செய்யுங்களேன். நாங்கள் எல்லாம் வயதானவர்கள்” என்று கெஞ்சினார் கோபால்சாமி.
“அப்படியானால் கோர்ட்டுக்குப் போகாமலே செட்டில் பண்ணிவிடலாமா? அதற்கு சம்மதமா என்று கேளுங்கள்!”
“சம்மதம் என்றுதான் அந்தம்மா சொல்வாள்! இந்த வயதில் யாரால் கோர்ட்டு கீர்ட்டு என்று அலையமுடியும்?”
“அப்படியானால் முயற்சிசெய்கிறேன்” என்றவர், உள்ளே திரும்பி ஒரு போலீஸ்காரரை அழைத்து, “ஏம்ப்பா, கணேஷு, கோர்ட்டுக்குப் போகாம இருபதாயிரம் ரூபாயை செட்டில் பண்ணிக் கொடுக்க ஏதாச்சும் வழியிருக்கா?” என்று கேட்டார்.
கணேஷு என்ற அந்தப் போலீஸ்காரர் பதறிக்கொண்டு, “அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க சார்! எல்லாம் முறையா நடக்கணும். இல்லாவிட்டால் மேலிடத்துக்குத் தெரிந்தால் சீரியஸாக ஆக்ஷன் எடுப்பாங்க!” என்றார்.
“அப்படியானால்..” என்றவர், கோபால்சாமி பக்கம் திரும்பி, “ஆறு மாசம் நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். வேற வழியில்லை” என்றார்.
கோபால்சாமி பதற்றத்துடன், “எப்படியாவது பார்த்து முடிச்சுக் குடுத்துடுங்க சார்! அடுத்த வாரம் கெடைக்கறாப்பல செஞ்சுடுங்க” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.
“இவர் செய்யக்கூடாதுன்னு சொல்றாரே சாமி! என்னைவிட அனுபவஸ்தர் சொல்லும்போது நான் மீறமுடியுமா?” என்று கணேஷுவைக் கைகாட்டினார் கருணா. “கணேஷு, வயசானவங்க, ஏதாவது பண்ண முடியுமான்னு பாரேன்” என்றார்.
புரிந்துகொண்ட கணேஷு ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தார். மரத்தடியில் நின்றார். கோபால்சாமி அவரைப் பின் தொடர்ந்தார். ஏதோ பேசினார்கள். இரண்டாயிரம் ரூபாய் செலவுக்கு ஒப்புதல் அளித்தார் கோபால்சாமி. “நம்ம பணம் நமக்கு கெடைக்கறதுக்கே நாம்ப செலவழிக்கவேண்டியிருக்கு” என்று முனகினார்.
அப்போதுதான் அங்கு வந்தாள் பரமேஸ்வரி. அவளைக் கண்டதும் அங்கிருந்த போலீஸ்காரர்கள் எல்லாரும் “வணக்கம் பரமேஸ்வரி அக்கா” என்று வரவேற்றார்கள்.
கருணா கேட்ட ஐம்பதாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தாள் பரமேஸ்வரி. “ஏன் சார், இன்னிக்கு தான் என்கிட்டே கேக்கணும்னு தோணிச்சா ஒங்களுக்கு?” என்று ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பெரிய அதிகாரிகளிடம் மட்டுமே அவள் வெளிப்படுத்தும் சிரிப்பு அது.
“என்ன பண்றது பரமேஸ்வரி! நீங்க எப்படி எப்படியெல்லாமோ சம்பாதிக்க முடியுது. நாங்க சம்பளக்காரங்க, எப்படி பொழைக்கறது? விலைவாசி ஏறிக்கிட்டே போகுதில்ல? கடனை வாங்கித்தான் காலம் தள்ள வேண்டியிருக்குது” என்று அலுத்தபடியே பணத்தை வாங்கி, எண்ணினார் கருணா. “என்னமே இது, வட்டி கழிக்காம கொடுத்திருக்க?”
“அட போங்க சார்! எல்லாரையும் போல உங்களை நடத்த முடியுமா?” என்று குழைந்த பரமேஸ்வரி, “அப்ப நான் வரட்டுங்களா?” என்று கிளம்பினாள். அதற்குமுன் உள்ளிருந்த சில போலீஸ்காரர்களை அழைத்து,”சாருக்கு என்னப் பத்திச் சொல்லிடுங்க. என் வாய் ரொம்ப பொல்லாதது. ஒழுங்கா சம்பளத்தன்னிக்கு வட்டி வந்து சேர்ந்துடணும்” என்று கருணாவுக்குக் கேட்கும்படி பலமாகச் சொன்னபடி வெளியேறினாள்.
கணேஷை அழைத்து இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார். “இந்தாய்யா, நீயே செட்டில் பண்ணிடு” என்று கோபால்சாமியைக் காட்டினார்.
“இருபதாயிரம் பெற்றுக்கொண்டேன்” என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார் கோபால்சாமி, கையில் பதினெட்டாயிரத்தை வாங்கிக்கொண்டு.
****
சிறு குற்றங்களுக்கான செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான் கிரீஷ்.
நீதிபதியை நோக்கி அரசு வக்கீல் கூறினார்: “மைலார்டு, இவர்மீதுள்ள குற்றம் ஏடிஎம்-மில் பதினைந்தாயிரம் ரூபாயைத் திருடினார் என்பது.”
நீதிபதி ஆச்சரியமாகக் கேட்டார்: “வெறும் பதினைந்தாயிரமா? ஏடிஎம்-மில் லட்சக் கணக்கில் அல்லவா பணம் இருக்கும்?”
அரசு வக்கீல் சுதாரித்துக்கொண்டு, “இவர் ஏடிஎம்-முக்கு உள்ளிருந்து எடுக்கவில்லை, வெளியில் இருந்து எடுத்திருக்கிறார்” என்றார்.
நீதிபதி முறைப்பாக, “தயவு செய்து விளக்கமாகச் சொல்லுங்கள். ஒவ்வொருமுறையும் நான் கேட்டு அதன் பிறகு நீங்கள் பதில் சொல்வதாக இருக்கவேண்டாம்” என்றார் கோபத்துடன்.
“சாரி சார்” என்ற அரசு வக்கீல் நடந்ததை எடுத்துச் சொன்னார். அவர் சொன்னதை மனதில் வாங்கிகொள்ளச் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்ட நீதிபதி, “என் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லுங்கள்” என்றவர், “இவர் திருடியதாகச் சொல்லப்படும் பணம் யாருக்குச் சொந்தமானது?” என்று கேட்டார்.
“ஏடிஎம்-முக்கு சொந்தமானது” என்றார் அரசு வக்கீல்.
தன் தலையில் இலேசாகத் தட்டிக்கொண்டார் நீதிபதி. “ஏடிஎம் என்பது ஒரு மெஷின். அதற்கு எப்படி ஐயா பணம் சொந்தமாக இருக்க முடியும்?” என்றார்.
அரசு வக்கீலுக்கு அப்போதுதான் உறைத்தது. “தாங்கள் சொல்வது சரி ஐயா! அது ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம். ஆகவே பணம் அந்த வங்கிக்குச் சொந்தமானது” என்றார்.
“குட்! அப்படியானால் தனக்குச் சொந்தமான பணத்தை அந்த வங்கி, தன்னுடைய ஏடிஎம்-முக்கு வெளியில் வைத்திருந்ததா? அதை இவர் திருடினாரா?”
“இல்லையில்லை சார்!” என்று அரசு வக்கீல் பரபரப்புடன் சொன்னார். “இந்த நபர் தன் கார்டை ஏடிஎம்-முக்குள் நுழைத்தவுடனே பணம் ஓடிவந்து விழுந்தது. அதை இவர் எடுத்துக்கொண்டார்.”
“அதாவது, இவர் தன்னுடைய கார்டை நுழைத்தவுடன் பணம் வந்து விழுந்தது என்கிறீர்கள். இல்லையா?”
“ஆம் ஐயா!”
“அப்படியானால் இது இவருடைய பணமாகவே ஏன் இருக்கக் கூடாது?”
“இல்லை என்றுதான் ஏடிஎம் பாதுகாவலர் தங்கராசு சாட்சி அளித்திருக்கிறார்.”
தங்கராசு சாட்சிக் கூண்டில் ஏறினார். கிரீஷ் தன் கார்டை உள்ளே நுழைத்தவுடனேயே பணம் வந்து விழுந்ததைப் பார்த்ததாகவும், அவசரம் அவசரமாக அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கிரீஷ் பைக்கில் கிளம்பியதால் தனக்கு சந்தேகம் ஏற்பட்டு 100க்கு போன் செய்ததாகவும் கூறினார்.
“ஏடிஎம்-மில் பணம் எடுக்க கஸ்டமர்கள் வரும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும்படி உங்களுக்கு பேங்கிலிருந்து உத்தரவு இருக்கிறதா?” என்றார் நீதிபதி.
“இல்லை ஐயா! நாங்கள் பார்க்கவே கூடாது என்றுதான் உத்தரவு இருக்கிறது.”
“அப்படியானால் இவர் செய்ததை மட்டும் பார்க்கவேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?’
இதற்கு தங்கராசுவால் பதில் கூற முடியவில்லை. பேசாமல் இருந்தார்.
நீதிபதி அரசு வக்கீலின் பக்கம் திரும்பினார். “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”
அரசு வக்கீல் கூறினார்: “அதாவது, இவருக்கு முன்பாக யாரோ ஒரு கார்டுதாரர், தனக்கு வரவேண்டிய பணத்தை எடுக்காமல் போய்விட்டிருக்கிறார். அந்தப் பணம், இவருடைய கார்டைப் போட்டவுடன் இவருக்கு கிடைத்திருக்கிறது.”
நீதிபதி நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதாவது, இந்தப் பணம், இன்னொரு கார்டுதாரருக்குச் சொந்தமான பணம் என்கிறீர்கள். சரியா?”
“ஆம் ஐயா!”
“அந்த கார்டுதாரர் யார், அவருடைய கம்ப்ளெயிண்ட் எங்கே?”
“அவர் யார் என்று தெரியாது ஐயா! உலகத்தில் எந்த நாட்டிலிருந்து வரும் கஸ்டமர்களும் எந்த ஒரு ஏடிஎம்-மிலும் பணம் எடுக்கலாம் என்ற விதி இருப்பதால், அந்த நபரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று பேங்க் தரப்பில் சொல்கிறார்கள் ஐயா!”
நீதிபதிக்கு பயங்கரமான எரிச்சல் வந்தது. “உங்களுக்கு வேலை அதிகம் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் இம்மாதிரி ‘சில்லி’ கேஸ்களை எடுத்து வந்திருக்கிறீர்கள். முதலில் பணம், இந்த வங்கிக்கு சொந்தம் என்றீர்கள். இப்போது யாரோ ஒரு கார்டுதாரருக்கு சொந்தம் என்கிறீர்கள். அவரை யாரென்று கண்டுபிடிப்பது சிரமம் என்கிறீர்கள். அப்படியானால் இவரை எப்படித் திருட்டுக் குற்றத்தில் கைதுசெய்தீர்கள்?”
அரசு வக்கீல் குழைந்தார். “ஐயா, தனக்கு சொந்தம் அல்லாத ஒரு பொருளை ஒருவன் எடுத்தால் அது திருட்டு என்று சட்டம் சொல்கிறதல்லவா?”
“இருங்கள். என் முன்னால் இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல, சம்பந்தமில்லாத ஒருவருக்கு, ஏடிஎம் உள்ளிருந்து பணம் வந்து விழுந்தால், அதை அவர் என்ன செய்யவேண்டும் என்று அந்த வங்கி விதிகளை வகுத்திருக்கிறதா? அதைப் பற்றி அறிவிப்பு ஏதும் செய்திருக்கிறதா?” என்றார் நீதிபதி.
அரசு வக்கீல் தங்கராசுவின் முகத்தைப் பார்த்தார். அவரோ, “அப்படி எந்த உத்தரவையும் நான் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை” என்று உறுதியாகச் சொன்னார்.
அரசு வக்கீலைப் பார்த்து நீதிபதி தன் தீர்ப்பைப் படித்தார்:
“ஏடிஎம்- முக்கு வெளியில் கிடந்த பணம் இது என்பதற்கு ஒரே சாட்சி, ஏடிஎம் காவலரின் வாக்குமூலம்தான். ஆனால் கார்டுதாரர்கள் ஏடிஎம்-மில் நுழைந்து என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க அவருக்கு அனுமதி கிடையாது. காரணம் கார்டுதாரரின் அந்தரங்கம் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், இவ்வாறு வெளிவரும் பணத்தை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி சட்டபூர்வமான ஒழுங்குமுறை எதையும் அந்த வங்கி இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில்லை. அத்துடன், எந்தக் காரணத்தால் இப்படி சம்பந்தமில்லாமல் பணம் வெளியில் வந்து விழுகிறது என்று அந்த வங்கிதான் கண்டுபிடிக்கவேண்டுமே யன்றி எந்த ஒரு கார்டுதாரர்மீதும் அந்தக் கடமையை அது திணிக்கமுடியாது. இந்தக் காரணங்களால், வங்கியின் நிர்வாகக் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியை ஒரு திருட்டு என்று சட்டபூர்வமாக அங்கீகரிக்க இயலாது. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரீஷ் நிரபராதி என்று இந்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது. பணம் பதினைந்தாயிரம் அவரிடமே கொடுக்கப்படவேண்டும்.”
“அதே சமயம், ஏடிஎம் பாதுகாவலரின் அவசர நடவடிக்கையால் கிரீஷ் கைதுசெய்யப்பட்டு இரண்டுநாள் லாக்கப்பில் இருக்க நேரிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் ஒரு லட்சம் இந்த வங்கி அவருக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறேன்.
“இந்த வழக்கின் விவரங்களையும் தீர்ப்பின் பிரதியையும் இந்திய ரிசர்வ் பேங்கிற்கு அனுப்பி, எதிர்காலத்தில் ஏடிஎம்-முக்கு வெளியில் வந்துவிழும் பணத்தை என்ன செய்யவேண்டும் என்பதற்கு சட்டத்திற்கு உட்பட்ட விதிகளை ஏற்படுத்தி, அவற்றை எல்லாப் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடவேண்டுமென்றும் இந்த நீதிமன்றம் விரும்புகிறது.”
நிம்மதியாக முகத்தைத் துடைத்துக்கொண்டான் கிரீஷ்.
“என்ன மேன், விடுதலை ஆயிடுச்சி! சந்தோஷம் தானே?” என்றார் பாதுகாவலுக்கு வந்த போலீஸ்காரர்.
“சந்தோஷம் தாங்க.”
“வாயில சொன்னா எப்படி? கையில இருபதாயிரம் இருக்குல்ல, எங்களையும் கொஞ்சம் கவனிக்கிறது.”
“மொதல்ல நீங்க நஷ்ட ஈடு ஒரு லட்சத்தை வாங்கிக்குடுங்க. அப்ப நிச்சயமா கவனிக்கறேன்” என்றான் கிரீஷ். பிறகு என்ன தோன்றியதோ, “வாங்க” என்று அருகில் இருந்த ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். “வேண்டியதை சாப்பிடுங்க!”
இருவரும் முழு திருப்தியோடு சாப்பிட்டு முடித்தனர். போலீஸ்காரர் விடைபெற்றுக்கொண்டு போனார். சர்வரிடம் “பில் கொண்டு வாருங்கள். ஏன் தாமதம்?” என்றான் கிரீஷ்.
“உங்கள் பில்லுக்கு அவர் பணம் செலுத்திவிட்டாரே!” என்று பின்வரிசை நாற்காலியில் இருந்த ஒருவரைக் காட்டினார் சர்வர்.
திரும்பிய கிரீஷின் வியப்பு திகைப்பாக மாறி, முகமெல்லாம் வியர்த்தது. செய்வதறியாமல் எழுந்து நின்றான்.
“வணக்கம், கிரீஷ்! வெளிய வந்தாச்சா?” என்று விஷமமாகச் சிரித்தார், சாதாரண உடையில் இருந்த கருணாமூர்த்தி.
(தொடரும்)
இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
இந்தப் பகுதியைப் படித்தால் நீதிமன்றங்கள், வக்கீல்கள் என்ற ப்ராசஸே வேஸ்ட் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை
பதிலளிநீக்குநெல்லை இப்பத்தான் கண்டுபிடிச்சீங்களா!!!!!! நீதிமன்றங்களில் நீதி வழங்கப்படுவது என்பது வக்கீல்களின் வாதத்திறமையின் அடிப்படையில்தானே!!!!! நீதிபதிகள் ஆராய்ந்து கேள்விகள் கேட்டு மடக்கினால் மட்டுமே நீதி அதுவும் கிடைப்பது அபூர்வம். இல்லைனா ...இரு தரப்பு வாதங்களின் சாட்சிகளின் அடிப்படையில் நுதான் தீர்ப்பு வாசிப்பாங்க!!!
நீக்குகீதா
அடடே...! இதுவல்லவோ தீர்ப்பு...!
பதிலளிநீக்குமீண்டும் புதிர்!!! தொடர்கிறோம்.
பதிலளிநீக்குகீதா
என்னவோ போங்க... எல்லாம் நாடகம். கிரீஷுக்கு எதிராய் வாதாடியவர் வக்கீல்தானா?
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஆமாம் நண்பரே! அரசாங்க வக்கீல் தான் அவர். உண்மை நிலையைத் தானே அவர் எடுத்துக் கூற முடியும்? ஒரு பெரிய வங்கியின் ஏடிஎம் கட்டமைப்பின் பொறுப்பில் இருந்தவன் என்ற முறையில் அவர் சொன்னது சரியே என்று என்னால் கூற முடியும். ஏடிஎம்-மில் இருந்து பணம் வெளியே வந்து விழவேண்டும் என்ற நியாயமற்ற செயல்முறையை அமல்படுத்தியது ரிசர்வ் பேங்கின் சிந்தனைக் குறைபாட்டையே காட்டுகிறது.
நீக்குநியாயம் நியாயமில்லை என்பதை மீறி ஒரு வக்கீல், தான் எந்தப் பக்கம் நிற்கிறாரோ, அந்தப் பக்கத்துக்கு வலு சேர்த்து இன்னமும் திறமையாக வாதாடுவார். இது வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தது போலல்லவா இருக்கிறது..!
நீக்குரொம்ப ஸ்வாரஸ்யபாகச் செல்கிறது
பதிலளிநீக்குவிறுவிறுப்பு
பதிலளிநீக்குஅழகான கோர்ட் சீனை அசத்தலாக கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குநீதிபதி நல்லவராகவும் விவரம் தெரிந்தவராகவும் இருக்கிறாரே .!