மணிகர்ணிகா (16) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)
(அமெரிக்காவில் 113 வது நாள்: 02-8-2022)
வீடியோவில் தன் தங்கை மகள் மணிகர்ணிகாவைப் பார்த்தபோது மறைந்துபோன தன் உடன்பிறந்த தங்கையைப் போலவே அச்சு அசலாக அவள் இருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் ரங்கநாத். அவருடைய மனைவி சாமுண்டீஸ்வரியும் ஆமோதித்தாள்.
“மணிக்கா, இப்பவே ஓடிவந்து உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது எனக்கு” என்றார் ரங்கநாத். “எனக்கும்தான், கண்ணம்மா!” என்றாள் சாமுண்டீஸ்வரி. ஒரு ஸ்டார் ஹோட்டலின் அறையிலிருந்து அவர்கள் பேசினார்கள்.
பிரிந்த குடும்பம் ஒன்றுசேரப்போகும் தருணம் என்பதால் மாதவி வீடியோவில் வராமல் தூரமாக நின்றுகொண்டு அவர்கள் பேசுவதைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். நவீன் ஆனந்தப் பரவசத்தில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
பெர்த் நகரம், ஆஸ்திரேலியா |
“மணிக்கா, ஒன்று கேட்கட்டுமா? நீ எப்போது உன்னுடைய சொத்துக்களை ஏற்றுக்கொள்ளப் போகிறாய்? அதை உன்னிடம் கொடுத்தால்தான் எங்கள் மனத்திலுள்ள பாரம் நீங்கும். விஜயவாடாவில் பதினாலு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒரு பிசினஸ் பார்க் கட்டவேண்டுமென்று நவீன் விரும்புகிறான். நீ அதைப் பார்க்கவேண்டாமா? அல்லது உன் விருப்பம் வேறாக இருந்தால் அதன்படியே செய்யலாம்…..” என்று ரங்கநாத் தொடர்ந்தார்.
“நீ தாண்டா கண்ணு எங்க வீட்டுக்கு ராணி! நீ என்ன சொல்றியோ அதையே நவீன் செய்வான். அதனால் நீ ஒருதரம் விஜயவாடா போய், இடத்தைப் பார்த்துவிடு. அப்புறம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் நம்ப வீட்டையும் பார்க்கவேண்டும்….” என்றாள் சாமுண்டீஸ்வரி.
இருவர் கண்ணிலிருந்தும் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டுதான் இருந்தது.
மணிகர்ணிகாவின் முகத்தில் உணர்ச்சி வசப்பட்டதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை. தெளிவாக இருந்தாள். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டபின் பேச ஆரம்பித்தாள்.
“மாமா, மாமி! உங்களையெல்லாம் சந்திக்க முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஓர் அற்புதம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்தப் புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கமாக இருக்கிறது. காரணம் பெற்ற பெண்ணையே கொல்லத் துணிந்தவர் தாத்தா என்னும்போது, அவருடைய ரத்தக்கறை படிந்த சொத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? இருபது வருடம் தந்தை தாயின் அன்பையே காணாத எனக்கு, இந்தச் சொத்தை ஏற்றுக் கொள்வதால் இழந்த அன்பெல்லாம் திரும்பக் கிடைத்து விடுமா? எனக்கு வேண்டவே வேண்டாம். அதில் பிசினஸ் பார்க் கட்டினாலும் சரி, பெரிய அரண்மனையே கட்டினாலும் சரி, அது உங்கள் இஷ்டம். ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்..” என்று நிறுத்தினாள். மூவரும் அவள் முகத்தையே கவனமாகப் பார்த்தார்கள்.
மணிகர்ணிகா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். முகத்தில் உறுதியை வரவழைத்துக்கொண்டாள். பிறகு பேசினாள்:
“மாமா, மாமி, நவீன் உங்கள் மூவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் இத்தனை வருடமாக என்னைத் தேடிக் கொண்டிருப்பதும், சொத்தைப் பாதுகாத்து வைத்திருப்பதும், நவீனுக்கு என்னைத் திருமணம் செய்ய முன்வந்திருப்பதும் வேறு எந்தக் குடும்பத்திலாவது நடக்குமா என்று தெரியாது. முகமே தெரியாத ஒருத்திக்காக நவீனும் இவ்வளவு நாட்கள் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருப்பதும் அதிசயமான விஷயமே. அந்த ஒரே ஒரு காரணத்திற்காக ….” என்று ஒருகணம் நிறுத்தி, நவீனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். மாதவியும் அவள் சொல்லப்போவதைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக்கொண்டாள்.
“சொல்லும்மா, சொல்லும்மா” என்றார் சாமுண்டீஸ்வரி.
“அந்த ஒரே காரணத்திற்காக நவீனைத் திருமணம் செய்துகொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால்…”
சாமுண்டீஸ்வரி பரபரப்புடன், “நீ சம்மதிச்சதே போதும்டி கண்ணு! ஒன் கண்டிஷன் என்னவா இருந்தாலும் நாங்க ஏத்துக்கறோம். தெளிவாச் சொல்லிடும்மா” என்றாள்.
“நான் இப்பத்தான் கல்லூரியில் இருந்து வெளி உலகுக்கு வந்திருக்கிறேன். ஒரு வேலையில் சேர்ந்து என் சொந்தக் காலில் நிற்கவேண்டும். அதன் பிறகுதான் திருமணத்திற்கு என் மனம் தயாராக முடியும். அத்துடன் நவீன் என்பவரைப் பற்றி ஆனா ஆவன்னா கூட எனக்குத் தெரியாது. அதே போல் என்னைப் பற்றி, என்னுடைய குணாதிசயங்களைப் பற்றி, என் வாழ்க்கையின் லட்சியங்களைப் பற்றி அவருக்கோ உங்களுக்கோ எதுவும் தெரியாது. ஆகவே முதலில் நாங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவேண்டும்…”
ரங்கநாத்துக்கு மெய் சிலிர்த்தது. “மணிக்கா, ஒங்க அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கே நீ! அவளும் இப்படித்தான். ஒரு வார்த்தை பேசினாலும் அதையே கடைசி வரை உறுதியா பேசுவா. அவளை மாத்தவே முடியாது…” என்றவர், “அந்தப் பிடிவாத குணம்தானே அவளுக்கு எமனா முடிஞ்சுது! அதனால கொஞ்சம் விட்டுப் பிடிக்கிற குணம் இருக்கணும்மா..” என்றார்.
அதற்குள் சாமுண்டீஸ்வரி குறுக்கிட்டு, “கொழந்தை என்ன சொல்றாளோ கேளுங்களேன், என்ன அவசரம்?” என்றாள்.
மணிகர்ணிகா தொடர்ந்தாள். “அதற்கு எங்களுக்கு மூன்று வருடம் தேவைப்படும் என்று தோன்றுகிறது. அதுவரை பொறுப்பாரா மிஸ்டர் நவீன்?” என்றாள் அவனைப் பார்த்து, புன்னகையுடன்.
‘சபாஷ்! நீ புத்திசாலி!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மாதவி.
நவீன் “உனக்காக மூன்று வருடம் காத்திருப்பது எனக்கொன்றும் பெரிய விஷயமில்லை. நீதான் பார்த்தாயே, இப்போது இருநூறு என்ஜினீயர்களை ரெக்ரூட் செய்திருக்கிறேன். கம்பெனியை விரிவுபடுத்தியாகவேண்டும். அதற்கு நிச்சயம் மூன்று வருடம் எனக்கும் தேவைப்படும்தான். ஆனால்…” என்று தன் தந்தையை நோக்கினான். “ஆஸ்திரேலியா…” என்றான்.
“ஆமாம், மணிக்கா, உன்னுடைய முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இத்தனை வருடம் உனக்காகப் பொறுத்திருந்தோம், இன்னும் மூன்று வருடம் பொறுக்கமாட்டோமா? பொறுக்கிறோம். ஆனால் எங்கள் பொறுமைக்காக நீ ஒரு சலுகையை வழங்கவேண்டும்” என்றார் ரங்கநாத்.
நவீன் தொடர்ந்தான். “மணிக்கா, என் கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது. அதே போல் துபாயிலும் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவைக் கவனிக்க வேண்டும். அதற்கு உன்னுடைய சலுகை வேண்டியிருக்கிறது” என்றான்.
மணிகர்ணிகா புரியாமல் விழித்தாள்.
“ஆஸ்திரேலியாவுக்குப் போவதென்றால் விசா வாங்கவேண்டும். தனி நபர் விசாவை விட கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விண்ணப்பித்தால் ‘ஃபேமிலி விசா’ கிடைப்பது சுலபம். அதனால்….”
“அதனால்?” என்றாள் மணிகர்ணிகா.
“அதனால் எனக்கு உடனடியாக ஒரு ஃபேமிலி வேண்டும்” என்றான் நவீன். அப்போதுதான் மணிகர்ணிகாவுக்குப் புரிந்தது.
“உங்கள் அவசரத்தைப் பார்க்கும்போது எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது. எப்படியாவது என்னை உங்கள் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது, மிஸ்டர் நவீன்!”
மாதவி அலுத்துக்கொண்டாள். ‘அடி அசட்டுப் பெண்ணே! அனாதையாக இருந்தவளுக்கு அதிர்ஷ்டம் கூடிவருகிறது. விலகி விலகிப் போகிறாயே!’
ரங்கநாத் நிலைமையைப் புரிந்துகொண்டார். தானே நேரில் வந்து மணிகர்ணிகாவைச் சந்தித்தால்தான் மேற்கொண்டு காரியங்கள் நடக்கும். “இரண்டே நாள் பொறு, மணிக்கா! நானும் உன் மாமியும் பெங்களூர் வருகிறோம். நேரில் பேசினால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும். அதுவரை நீ தங்குவதற்கு பெங்களூரில் சரியான இடம் இருக்கிறதா? இல்லை, சர்வீஸ் அபார்ட்மெண்ட் நல்லதாகப் பார்த்து ரிசர்வ் செய்யட்டுமா?”
தன்னை மீறிக்கொண்டு விஷயங்கள் வேகமாக நடப்பது மணிகர்ணிகாவுக்கு வியப்பாகவும் திகைப்பாகவும் இருந்தது. மாதவி ஏதாவது ஆலோசனை சொல்வாளோ என்று அவளைத் தேடினாள்.
“இன்னும் ஒருவாரம் என்னோடு நீ தங்கலாம். அடுத்த வாரம் தான் நான் மும்பாய் போகிறேன்” என்றாள் மாதவி.
****
சொன்னபடியே நேரில் வந்தார்கள் மாமாவும் மாமியும். அவர்களைப் பார்த்தவுடன், தான் பார்த்தறியாத தந்தையையும் தாயையும் பார்த்ததுபோலவே இருந்தது மணிகர்ணிகாவுக்கு. அவர்களின் பாசத்தில் நெகிழ்ந்து போனாள்.
தான் ஒரு வங்கியில் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக இருப்பதாகச் சொன்னார் ரங்கநாத். அது எப்படிப்பட்ட பதவி என்று அவளுக்குத் தெரியவில்லை. “அப்படியா, உங்கள் வங்கியில் எனக்கு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன்” என்றாள் பெருமிதத்துடன்.
சாமுண்டீஸ்வரிக்கு அவளுடைய அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பு வந்தது. “மணிக்கா, நீ நினைத்தால் அதை இரண்டு லட்சம் ஆக்கலாம், ரெண்டு கோடி ஆக்கலாம். நீ பணக்காரி என்பதை மறந்துவிடாதே” என்றாள். “ஆனால் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும். நவீன், தாமதம் பண்ணாம ஆகவேண்டியத கவனி.”
நவீன் அவளருகில் வந்து உட்கார்ந்தான். அது ஏர்போர்ட் அருகில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல். காலை ஒன்பதுமணி. சர்வரிடம் “பொங்கல் வடை, வெங்காய ஊத்தப்பம்” என்றான்.
“எனக்கு ஆர்டர் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு?” என்றாள் மணிகர்ணிகா.
“அப்படியா? உங்களுக்கும் அதுதான் பிடிக்குமா?” என்று ஆச்சரியப்பட்டான் நவீன். “நான் எனக்காகத்தான் ஆர்டர் செய்தேன். பரவாயில்லை, இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப்போகிறீர்களே!” என்றவன், “பொங்கல் வடை, வெங்காய ஊத்தப்பம் இன்னொரு செட்” என்று சர்வரிடம் கூறினான்.
“நவீன், என்னை நீ என்று சொன்னாலே போதும். நீங்கள் எல்லாம் வேண்டாம். அது சரி, என்னை எதிலும் ஒத்துப்போகாதவள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“உஷ், உன்னுடைய மாமா, மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மெதுவாகப் பேசு. நான் சண்டை போடுவதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது.”
“அதற்காக? நான்தான் சொல்லிவிட்டேனே, கல்யாணத்திற்கு இன்னும் மூன்று வருடம் வேண்டும் என்று? பிறகு ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?”
“பொங்கல் அருமையாக இல்லை?” என்று பேச்சை மாற்றினான் நவீன். “இந்த இஞ்சியையும் முழு மிளகையும் ஒரு கடி கடித்துவிட்டுப் பொங்கலைச் சுவைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது தெரியுமா?”
அவனை ஒரு வெட்டு வெட்டினாள் மணிகர்ணிகா. “அப்படியா, இந்தாருங்கள், என்னுடைய இஞ்சியையும் மிளகையும் நீங்களே கடித்துக்கொள்ளுங்கள்” என்று ஸ்பூனை அவனிடம் நீட்டினாள்.
அவனோ அதை லபக்கென்று தன் வாய்க்குள் போட்டுக்கொண்டு ஸ்பூனைத் திருப்பிக்கொடுத்தான்.
“என்ன இது, உன்னுடைய மிளகிலும் இஞ்சியிலும் காரமே இல்லை! இனிப்பாக அல்லவா இருக்கிறது? என்ன அதிசயம்!” என்றான் அவள் முகத்துக்கு அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு.
அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. மெல்லிய குரலில், “போதும், நான் இன்னும் உங்கள் மனைவியாகி விடவில்லை என்பது நினைவிருக்கட்டும். இந்த அசட்டு உளறல்களை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றாள்.
“அதானே, உண்மையைச் சொன்னால் பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று காந்தியடிகள் சொன்னது நிஜமாகிறது” என்றான் நவீன் குறும்பாக.
“அப்படியா, காந்தியடிகள் எங்கே, எப்போது, யாரிடம் சொன்னார் என்று ஆதாரம் காட்ட முடியுமா?”
“விடு, காந்தியடிகள் இல்லாவிட்டால் கண்ணதாசன் சொல்லியிருப்பார். எங்கோ படித்தது. இதையெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கக் கூடாது….சரி, இனிப்பான மிளகும் இஞ்சியும் இன்னொரு ஸ்பூன் கிடைக்குமா?” என்றான்.
“டொக்கு” என்று வலதுகை ஆள்காட்டி விரலை மடக்கிக் காட்டினாள் மணிகர்ணிகா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவர் மற்றவரைக் கேலிசெய்யும் விதம் அது.
அதற்குள் தங்கள் காலை உணவை முடித்துவிட்ட ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் அவர்களை நெருங்கி, “இன்னும் முடியவில்லையா? அவசரமில்லை, நிதானமாகச் சாப்பிடுங்கள். நாங்கள் அறையில் காத்திருக்கிறோம்” என்று கிளம்பினார்கள்.
மறுநாள் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடமையைப் பற்றி மன ஒற்றுமையோடு நவீனும் மணிகர்ணிகாவும் அங்கிருந்து எழுந்திருக்க மேலும் ஒரு மணிநேரம் ஆயிற்று.
அதன்படி, முதலில் இஸ்கான் கோவிலுக்குச் சென்று அந்த ராதா-கிருஷ்ணரின் சந்நிதியில் வாழ்நாள் முழுதும் தன்னைப் பிரிய மாட்டேன் என்று தனக்குச் சத்தியம் செய்து தரவேண்டும் என்றாள். அப்படியே செய்தான் நவீன.
பிறகு அனைவரும் கோலார் கிளம்பிச் சென்றார்கள். ரங்கநாத்தின் வங்கிக்கிளையின் மேலாளர் ஜான் நாயுடு அவர்களை வரவேற்று, திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வங்கியின் கடைநிலை ஊழியராக இருந்த ராஜா சாட்சிக் கையெழுத்திட்டார். பத்தே நிமிடத்தில் முடிந்துவிட்ட சடங்கின் முடிவில் நவீனும் மணிகர்ணிகாவும் கணவன்-மனைவி ஆகிவிட்ட சான்றிதழ் கிடைத்து, அடுத்த பத்து நாட்களில் அவர்களுக்கு ஆஸ்திரேலியா செல்வதற்கு ஃபேமிலி விசா கிடைத்துவிட்டது.
இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக மாதவியை அழைத்தாள் மணிகர்ணிகா. தன்னுடைய அன்பின் வெளிப்பாடாக முழுதும் தோலினால் ஆன, பிரான்சில் செய்யப்பட்ட, ஒரு விலை உயர்ந்த தோள்பையை, பிரிகேட் ரோடில் ஓடிப்போய் வாங்கிவந்து கொடுத்தாள். மாதவிக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. மணிகர்ணிகாவை அணைத்து முத்தமிட்டாள் அவள்.
ராஜாவுக்கு அவர் கேட்டபடியே சென்னைக் கிளைக்கு மாறுதல் கிடைத்துவிட்டது. ஜான் நாயுடுவுக்குச் சென்னை மண்டலத்தின் ரீஜினல் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைத்தது. மணிகர்ணிகாவின் பதிவுத் திருமணம் ரகசியமாக இருக்கவேண்டிய விஷயம் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?
அடுத்த மாதம் நவீனுடைய மென்பொருள் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தன் அலுவலகத்தைத் தொடங்கியது. குடியிருப்பதற்கு ஈஸ்ட் பெர்த் பகுதியில் ஒரு அழகான வீட்டை வாடகைக்கு எடுத்தான் நவீன். சமையலறையும் வரவேற்பறையும் நூலகமும் தரைத்தளத்தில் இருந்தன. முதல் மாடியில் நவீனும் இரண்டாவது மாடியில் மணிகர்ணிகாவும் தனித்தனியாகத் தங்கினார்கள். மூன்று வருடம் முடியும்வரை அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதுதானே அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்?
(தொடரும்)
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா (17) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
உண்மைக்கு அருகிலா இல்லை முழுப் புனைவா என்று தோன்றும் வகையில் நாடகத் தன்மையோ?
பதிலளிநீக்குசில இடங்களில் உண்மையைப் போல இருக்கும்; சில இடங்களில் புனைவைப் போல இருக்கும். கதை, தன்னைத்தானே எழுதிக்கொள்ளும்போது நான் என்னதான் செய்வது?
நீக்குஆகா, கதை தன்னைத்தானே எழுதிக் கொள்கிறதா,,
நீக்கு3 வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன மணிகர்ணிகா எப்படி பதிவு திருமணத்துக்கு சம்மதித்தாள் ?
பதிலளிநீக்குதூக்குத்தூக்கியில் வரும் பாட்டு உங்களுக்கு நினைவு வந்திருக்குமே! "பெண்களை .. பாதே" என்று!
நீக்குஅது கணவன்மார்களுக்கு பச்சை துரோகம் செய்யும் பெண்களுக்காகப் பாடப் பட்டது. மணிகர்ணிகா " அந்த " இரகம் இல்லையே ?
பதிலளிநீக்குஅதெப்படி தீடீரென காதல் வந்தது அவ்வளவு உறுதியான பெண்ணுக்கு? அதுவும் தீடீரென கல்யாணம் வேறு.
LOGIC இடிக்கிறதே??
கடலை விட ஆழமானது பெண்களின் மனம் என்று தெரிந்துமா இந்தக் கேள்வி?
நீக்குஅடுத்து ஒப்பந்தம் மீறப்படுமா...?
பதிலளிநீக்குஅப்ப என் ஊகம் சரிதான் இல்லையா? மணிக்கான்னு சேர்மன் சொல்லுவார் ராஜாவும் ஏன் சொல்றார்னு இந்தப் பகுதியில் தெரிந்தது. ஆனால் ரங்கநாத் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் என்று வருகிறது....அதன்பின் சேர்மன் ஆகிறாரோ?
பதிலளிநீக்குதொடர்கிறேன்..
கீதா
நல்ல சுவாரசியமான நம்ப முடியாத மாற்றம் மணிகர்ணிகாவின் வாழ்க்கையில்!
பதிலளிநீக்கு