ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2022

மணிகர்ணிகா (12) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (12) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  109   வது நாள்:  29 -7-2022)

 


இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (11) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


மயூரியின் குடியிருப்பு ஒரு மதில் சூழ்ந்த குடியிருப்பு. (Gated Community). ஐந்நூறு வீடுகள் இருக்கும். அதில் பாதிக்கும் மேலானவர்கள் மயூரியின் வங்கியோடு சம்பந்தப்பட்டவர்கள். ஏனென்றால் அந்த வங்கியின் ஏடிஎம் ஒன்று அந்தக் குடியிருப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணமில்லை என்றாலோ, கார்டுகள் சிக்கிக்கொண்டாலோ அவர்கள் முதலில் போன் செய்வது மயூரிக்கே. அவளும் உடனடியாக அவர்களுக்கு உதவிசெய்யத் தவறமாட்டாள். எனவே வங்கியில் டெபாசிட் சேகரிப்பு மாதம் கொண்டாடும்போது அவளுக்கு எப்போதும் அவர்கள் ஆதரவு கொடுத்து சான்றிதழ் பெறச் செய்வார்கள். 


மயூரியின் வீடு முதல் தளத்தில் இருந்தது. அதற்கு நேர் கீழாக ஏடிஎம் இருந்தது. பகலில் ஒருவரும் இரவில் ஒருவருமாக அதற்குக்  காவலர்கள் வருவார்கள். ஒரு தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்கள். கடந்த ஒரு வருடமாக அப்படிக் காவலராக இருப்பவர் தான் தங்கராசு.  


அவருக்கு வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். இராணுவத்தில் தன் இளமைக்காலத்தைக் கழித்தவர். அதன் பிறகு தனியார் கம்பெனிகளில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். ஆனால் பகல்-இரவுப் பணி மாறி மாறிப் பார்த்ததில் உடல்நலம் குன்றியதால் சில ஆண்டுகள் எந்தப் பணிக்கும் போகாமல் கிராமத்தில் வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்திவந்தார். அவருடைய மகன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்து மறைமலைநகரில் குடியேறியபோது, தங்கராசுவும்  அவனோடு சென்னை வந்தார். அப்போது கிடைத்த வேலைதான் இந்த ஏடிஎம் காவலர் வேலை.     


குடியிருப்பின் குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடலும் ஏடிஎம் அருகிலேயே இருந்ததால் தங்கராசுவுக்கு அவர்களைப் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்குப் பரிச்சயம் ஆகியிருந்தது. ஆட்டத்தின்போது சில குழந்தைகளுக்கு அடிபட்டு இரத்தம் வருவதுண்டு. சிலபேர் சைக்கிளில் இருந்து விழுவதுண்டு. அப்போது யூனிபாரம் அணிந்த காவலரான தங்கராசு ஓடிப்போய் உரிய உதவிகளைச் செய்வார்.  சில குழந்தைகள் வாய்ச்சண்டை, கைச்சண்டைகளிலும் ஈடுபடுவதுண்டு. அப்போது அவருடைய கைகள் தான் அதைத் தடுத்து சமாதானத்தை நிலைநாட்டும். இதனால் தங்கராசுவுக்குத் தாய்மார்கள் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது. 



மாதிரி ஏடிஎம் 


மோட்டார்பைக் ஓட்டும் வீராங்கனை என்று மயூரிமீது அவருக்கு நல்ல மரியாதை உண்டு. ஆகவே சில நாட்களாக அவள் பைக்கில் போகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.  அதுமட்டுமல்ல, வீட்டை விட்டே அதிகம் வெளிவருவதில்லை,  ஏடிஎம்-இல் பணம் எடுக்க வருவதும் இல்லை என்று கேள்விப்பட்டதும் அவளுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று கவலைப்பட்டார். ஜலதோஷம் இருந்தால் அவள் வீட்டில்தான் சுதந்திரமாகச் சென்று மிளகுரசம் வாங்கிக் குடிப்பார். அதுபோல இன்றும் தன் பகல் பணிநேரம்  முடிந்தவுடன் மயூரி வீட்டுக் கதவைத் தட்டினார். 


கதவைத் திறந்து மயூரியின் முகம் வெளிப்பட்டவுடன் அவருக்குப் புரிந்துவிட்டது அவள் மனதில் பெரிய சோகம் கவிந்திருப்பது. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் நின்றார் ஒரு நிமிடம். அவளே “வாங்க, தங்கராசு சௌக்கியமா?” என்றாள். 


“நான் நல்லாத்தாம்மா இருக்கேன். நீங்க தாம்மா இப்பல்லாம் ஏடிஎம் பக்கமே வர்றதில்லே” என்றார். 


அவள் மௌனமாக இருந்தாள். “ஒங்க பைக்கையும் காண்றதில்லையே அம்மா” என்று தங்கராசு கூறியபோது அவளுக்குக் கண் கலங்கிவிட்டது.  அவர் வாசலிலேயே நிற்க, அவள் சோர்ந்துபோனவளாக உள்ளே சோபாவில் தொப்பென்று விழுந்தாள். 


“பைக் ரிப்பேர்னா சொல்லுங்க, இப்பவே போய் மெக்கானிக்கைக் கூட்டிக்கிட்டு வர்றேன். அதுக்காக வருத்தப்படாதீங்க” என்று சொன்ன தங்கராசு, “ஒடம்பு சரியில்லையா அம்மா?” என்றார் மென்மையாக. “ஐயா இன்னும் ஊர்லதான் இருக்காரா? எப்ப வருவாருங்க?”


அவர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்  ‘விபத்து’ என்பதுதான். ஆனால் குடியிருப்பில் யாருக்கும் அவளாக  இதுவரை விஷயத்தைச் சொல்லவில்லை. இவரிடம் சொல்வதா கூடாதா என்று தெரியவில்லை. 


எப்படியும் ஒரு மாதம் மெடிக்கல் லீவ் போட்டாயிற்று. வீட்டில்தான் இருந்தாகவேண்டும். அதிலிருந்தே எல்லாரும் விஷயத்தை ஊகித்துவிடுவார்கள். தன் கணவரை போலீஸ் தேடுகிறது என்று கூட வதந்திகள் கிளம்பலாம். அதைவிட, எப்படித் தன் தோழியின் கணவன் நம்பிக்கை மோசடி செய்கிறான் என்று இவரிடம் சொல்லிவிட்டால் தானாகவே விஷயம் பரவிவிடும். நம் தரப்பு நியாயமும் எல்லாருக்கும் விளங்கும். அதுதான் நல்லது. 


“அடடே, ரொம்ப சாரி, இங்க வந்து ஒக்காருங்க. காப்பி கொண்டுவர்றேன்” என்று அவரை நாற்காலியில் இருக்கவைத்துவிட்டு  உள்ளே போனவள் சில நிமிடங்களில் இரண்டு கோப்பைகளில் காப்பியுடன் வந்தாள்.  


இருவரும் காப்பி அருந்திக்கொண்டே சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். மயூரி நடந்த விபத்தைப் பற்றி அது ஒரு சாதாரண விஷயம் என்பதுபோல் குறிப்பிட்டாள். இன்சூரன்ஸ் காலாவதியானதை மட்டும் சொல்லவில்லை. அது அநாவசியமான வதந்திகளைக் கிளப்பும். 


“ஒரு லாரி இடித்துவிட்டுப் போய்விட்டது. பைக் இப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறது. கேஸ் முடிந்தபிறகுதான் தருவார்கள்…” என்று அவள் சொல்லியபோதே, “எந்த ஸ்டேஷன் என்று சொல்லுங்கள். நான் ரிலீஸ் செய்துகொண்டு வருகிறேன். எனக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள்” என்று அவசரமாகச் சொன்னார் தங்கராசு.


“உங்கள் உடம்புக்கு ஒன்றும் ஆகவில்லையே?”   


இல்லை என்று தலையசைத்தாள். “எதற்கும் இருக்கட்டுமே என்று ஒருமாதம் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டேன்” என்று முடித்தாள். 


அவள் நினைத்த மாதிரியே சில நாளில் விஷயம் குடியிருப்பு முழுவதும் பரவிவிட்டது. இவள் பைக் ஓட்டும்போது ஒரு கிழவிமீது மோதிவிட்டதாகச் சிலபேரும், அந்தக் கிழவி இறந்துபோய் இவள் மீது போலீஸ் கேஸ் போட்டிருக்கிறது என்று இன்னும் சிலரும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் திலகாவும் விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு வாரம் கழித்தே தெரிய வந்தது. 


பாதுகாப்புப் பணியிலேயே முப்பது வருடம் கழித்துவிட்டதால் குற்றவாளிகளின் மனோபாவம் தங்கராசுவுக்கு அத்துப்படி ஆகியிருந்தது. போலீஸ்காரர்களே பல சமயம் குற்றவாளிகளுக்கு உடந்தையாகவும், குற்றவாளிகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பது அவருக்குத் தெரியும். நல்லவர்களும் ஏழைகளுமே போலீசாரின் வலையில் சிக்குவதும், செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் எளிதாகத் தப்பிவிடுவதும் அவரது அனுபவத்தில் தெளிவாகி யிருந்தது. புனிதமான இராணுவப் பணியில் இருந்த காரணத்தால், இந்தச் சீரழிவிலிருந்து அப்பாவிகளைத் தன்னால் முடிந்தவரை காப்பாற்றும் பணியை அவர் ஓசையின்றிச் செய்துவந்தார்.


மயூரியின் விஷயத்திலும் அவர் வெகு சீக்கிரமே உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டார்.  திலகாவின் கணவன் கிரீஷ் பணத்தாசை கொண்டு மயூரியிடம் லட்சக் கணக்கில் பணம் கறக்க ஒரு போலீஸ் அதிகாரியின் துணையோடு திட்டம் போடுவதை அவர் கண்டுபிடித்துவிட்டார்.  


விபத்தில் பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படாதபோது, இன்சூரன்ஸ் காலாவதியான நிலையில் பைக்கை ஓட்டியது ஒரு பிரச்சினையே அல்ல என்று போலீசுக்கும் தெரியும். ஆனால் தானாக வந்து அப்பாவிகள் மாட்டினால் முடிந்தவரை கறந்துவிடுவது தான் உலக நடைமுறை. ஆகவே முள்ளை முள்ளாலேயே எடுப்பதென்று தீர்மானித்தார் தங்கராசு. 


அதற்கு ஏற்றார் போல அவருக்கு அந்த வாரம் வேறொரு ஏடிஎம்-முக்கு டிரான்ஸ்பர் வந்தது. அது திலகாவின் வீட்டுக்கு அருகில் இருந்தது இன்னும் வசதியாகப் போயிற்று. 

*** 


காலையில் ஒன்பது மணிவரையும் மாலையில் ஆறுமணி முதல் எட்டு மணி வரையும் தான் அந்த ஏடிஎம்-மில் கூட்டம் இருக்கும். மற்ற நேரங்களில் மணிக்கு நான்கைந்து பேர் வந்தாலே அதிகம். அந்த நேரத்தில் தங்கராசு சற்றே தூரமாக நகர்ந்துபோய் சிகரெட் பிடித்தல், தேநீர் குடித்தல் போன்ற சுய விருப்பச் செயல்களில் ஈடுபடுவார். 


அவ்வாறான ஒரு  பகல் நேரம். வெளியூர் ஆசாமி ஒருவர்  ஏடிஎம்-முக்கு வந்து தன் கார்டை உள்ளே நுழைத்தார். பணம் வந்தது. எண்ணி எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். பிறகு மீண்டும் பணம் எடுக்க முயற்சித்தார். சில நிமிடங்கள் ஆகியும் எந்த அசைவும் இல்லை. ஏடிஎம் திரையில் ஏதேதோ கருப்பு எழுத்துக்கள் ஓடின.  அதுவும் பிறகு நின்றுவிட்டது. அந்த நபர் ஒன்றும் புரியாமல் உதவிக்கு யாராவது ஆள் இருக்கிறார்களா என்று கண்ணால் தேடினார். தூரத்திலிருந்து தங்கராசு வருவதைக் கவனித்தார். 


அவரிடம் ஆத்திரத்துடன், “என்னய்யா ஏடிஎம் இது? நான் மதுரை போகிறவன். அவசரமாகப் பணம் எடுக்க வந்தால் முதல் 15000 வந்தது, அடுத்த 15000 வருவதற்குள் ஸ்க்ரீன் ‘ப்ளாங்க்’ ஆகிவிட்டது. என்னுடைய பணம் எங்கே?” என்று அவரை அடிக்கவே போய்விட்டார். 


அவரை சமாதானப்படுத்தினார் தங்கராசு. தான் ஒரு காவலாளி மட்டுமே என்றும் எந்த பேங்கின் கார்டோ அந்த பேங்கின் டோல்ஃப்ரீ நம்பருக்குப் போன் செய்யுமாறும் கூறினார். 


“நான் உங்களைச் சும்மா விடப்போவதில்லை. போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போகிறேன்” என்று ஆத்திரம் அடங்காமலே அந்த நபர் தன் காரில் கிளம்பினார். 


சுமார் அரை மணிநேரம் கழித்து இன்னொரு நபர் ஏடிஎம் - முக்குள் நுழைந்தார். தன் கார்டை உள்ளே செருகினார். ‘பின்’ நம்பரை அடிப்பதற்குள் ‘கள கள’ வென்ற ஓசையுடன் பணம் வந்து விழுந்தது!  15 ஆயிரம் ரூபாய்! 


ஆச்சரியத்துடன் அவர் தன் கார்டை அவசரம் அவசரமாக வெளியில் எடுத்துவிட்டு, பணத்தையும் மின்னல் வேகத்தில் எடுத்து பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு தன் ஸ்கூட்டரில் கிளம்பினார். 


அவர் கொஞ்ச தூரம் போய்விட்ட பிறகுதான் தங்கராசு அந்த ஸ்கூட்டரின் நம்பரைக் கவனித்தார். கிரீஷ் தான் அவர் !    


ஒரு நொடியும் வீணாக்காமல் 100 க்கு போன் செய்தார். ஸ்கூட்டரின் நம்பரைச் சொன்னதால் அடுத்த ஒருமணி நேரத்தில் கிரீஷ் பிடிபட்டான். நேராக கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் லாக்கப்பில் அடைக்கப்பட்டான். அங்கு ஏற்கெனவே மதுரைக்காரர் கொடுத்த புகார் பதிவாகி இருந்தது போலீசுக்கு வசதியாகப் போயிற்று. 


தன்னால் முடிந்தவரை கதறினான் கிரீஷ். “நான் ஒரு தப்பும் செய்யவில்லை! கார்டு போட்டவுடன் பணம் தானாகவே வந்து விழுந்தது!” என்று சொல்லிப் பார்த்தான். “இன்ஸ்பெக்டர் வருவார். அவரிடம் பேசிக்கொள்” என்று சொன்ன போலீஸ்காரர் அவனது மொபைலை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டினார்.  


தனக்கு ஏசிபி கருணாமூர்த்தியைத் தெரியும், அவருக்கு போன் போடுங்கள் என்று கெஞ்சினான். அது சென்னை மாவட்டம், இது செங்கல்பட்டு மாவட்டம், இங்கு அவருக்கு அதிகாரம் கிடையாது என்று சிரித்துவிட்டு தேநீர் குடிக்கப் போனார் அந்த போலீஸ்காரர்.  


(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து       

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (13) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


9 கருத்துகள்:

  1. “ பின்’ நம்பரை அடிப்பதற்குள் ‘கள கள’ வென்ற ஓசையுடன் பணம் வந்து விழுந்தது! 15 ஆயிரம் ரூபாய்! ”
    or
    “ஓசையில்லாமல் ATM உமிழ்ந்த பணத்தாள்களை எடுத்து”

    பதிலளிநீக்கு
  2. ஓ மயூரி இல்லையா? நான் இதுக்கு முன்னான பகுதில மீனான்னு அடிச்சிட்டேன்...தவித்து நின்றனு....அது மயூரி இல்லையா...கேரக்டர்ஸ் குழப்பம்!!

    கிரீஷ் மாட்டிக் கொண்டானா...அப்ப ஒரு முடிச்சு திறந்துவிடும்... இப்ப..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. விருவிருப்பான கதை. எழுத்து நடை சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. கிரீஸின் குற்றத்தில் ஈடுபாட்டு குணம் ரெக்கார்டில் ஏறும் வாய்ப்பு உருவாகிறதா!

    பதிலளிநீக்கு
  5. மாட்டிக் கொண்டானா கிரீஷ்.
    சூப்பராக திருப்பம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்....

    லோகேஷ் கனகராஜ் மாதிரி எப்படி தங்களால் கதை உள்ளே கதை,,கதைஉள்ளே கதை
    .,கதைஉள்ளே கதை வைத்து எழுத முடிகிறது ?
    YOU ARE SIMPLY GREAT SIR !

    பதிலளிநீக்கு
  6. கிரீஷ் மாட்டிக் கொண்டானா? நல்ல திருப்பம் . பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் .

    லோகேஷ் கனகராஜ் மாதிரி எப்படி தங்களால் கதை உள்ளை கதை, கதை உள்ளே கதை, கதை உள்ளே கதை என்று சுவையாக எழுத முடிகிறது?

    YOU ARE SIMPLY GREAT SIR .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்காவது தெரிந்ததே நான் great என்று! வாழ்த்துகள்!

      நீக்கு