ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2022

மணிகர்ணிகா (15) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (15) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  112 வது நாள்:  01-8-2022)

    

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.



“அப்படியானால் மணிகர்ணிகா பெரிய பணக்காரி என்று சொல்லுங்கள்.  எனக்குப் பொறாமையாக இருக்கிறது!”  என்று மணிகர்ணிகாவை அணைத்துக்கொண்டாள் மாதவி. 


நவீன்  தன் அத்தை- அதாவது மணிகர்ணிகாவின் தாய்- எப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையில் இறந்தார் என்பதையும் தன் தாத்தா எப்படி சொத்துக்களையெல்லாம் மணிகர்ணிகா மேல் எழுதி வைத்தார் என்பதையும், தானும் மணிகர்ணிகாவும் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அந்தச்  சொத்துக்களைப்  பெற முடியும் என்பதையும் விரிவாகச் சொன்னவுடன் முதலில் பேசியவள் மாதவி தான். 


மணிகர்ணிகாவோ  ஒரு நிமிடம் அவனை  ஏறெடுத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து கொண்டாள். பிறகு, “மாதவி,  சொத்துக்காகத்தான் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார் இல்லையா?” என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே. 


“சீச்சீ, அற்பத்தனமாக பேசாதே! யாரோ செய்த தவறுக்காக நவீன என்ன செய்ய முடியும்?  பாவம், முகமே தெரியாத உனக்காக எத்தனை வருஷமாக ஏங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார். உன் மாமா மாமியும்  உன்னை இப்படி பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் தெரியுமா?  ஆதரவில்லாமல் வளர்ந்ததால் உன் மனம் விரக்தி அடைந்து இருக்கிறது.  அதை விட்டு வெளியில் வா.  ஒன்று செய்,  நீயும் நவீனும் பேசிக் கொண்டிருங்கள். நான் அரை மணி நேரம் வாக்கிங் போய்விட்டு வருகிறேன்”  என்று மாதவி விலகினாள்.                  


மணிகர்ணிகாவுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. அவள்  ஆண்களோடு அதிகம் பழகியதில்லை.  நவீன் பேசப்பேச அது உண்மையா, பொய்யா, மாயமா என்று திகைத்துப் போனாள். தன் தாயின் புகைப்படத்தை அவன் காட்டியபோது அவள் தன்னைப் போலவே இருப்பதைக்கண்டு துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதாள். நவீனும் அழுதான். 


எப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்  தாய் வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்யும் முடிவை எடுத்தாள் என்று அறிய ஆவலாய் இருந்தாள். ஆனால் நவீனுக்கும் அது தெரியவில்லை. தன் தந்தையின் புகைப்படத்தையாவது பார்க்க விரும்பினாள். ஆனால் கோபத்தினால் தாத்தா அவருடைய புகைப்படத்தை ஒன்றுவிடாமல் அழித்துவிட்டார் என்றான் நவீன்.


“மணிக்கா, என்னை நீ நம்புகிறாயா? இல்லை, சந்தேகப்படுகிறாயா?” என்று நெகிழ்வோடு கேட்டான் நவீன். அந்த நிமிடம் வரையில் அவளுடைய விரல்களைக் கூட அவன் தீண்டவில்லை. 


அவளும் அதே நெகிழ்ந்த நிலையில்தான் இருந்தாள். தன்னை அனாதையாக்கிவிட்டு மறைந்துபோன தாய் தந்தை மீது அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் வாழக்கையில் எதையும் அனுபவிக்காமல்  அவர்களும் அனாதையாகத்தானே இறந்துபோயிருக்கிறார்கள் என்ற பரிதாபமும் பீறிட்டது.


பூங்காவில் பல ஜோடிகள் கைகோர்த்துக்கொண்டும், அணைத்துக்கொண்டும், செடிமறைவில் முத்தமிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.  தன் தாயும் தந்தையும் கூட இப்படித்தானே வாழவேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பார்கள்! பெற்ற மகள் என்றும் பாராமல்  முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டாரே தாத்தா! அவருடைய சொத்தை நான் பெற்றுக்கொண்டால்  அம்மாவின் ஆன்மா மன்னிக்குமா? இளமையெல்லாம் ஏழைப் பெண்ணாக வாழ்ந்தாயிற்று. இப்போது கையில் படிப்பு இருக்கிறது. எப்படியும் நல்ல வேலை கிடைத்து நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அம்மாவை வேண்டாம் என்றவர்களின் சொத்தை நான் ஏன் ஏற்கவேண்டும்?


“ஒரு கொலைகாரரின் சொத்து எனக்கு வேண்டாம், மிஸ்டர் நவீன்!” என்று அழுத்தமான குரலில் கூறினாள் மணிகர்ணிகா. நடந்துகொண்டிருந்த ஒரு முதியவரின் காதில்  அது விழுந்திருக்கவேண்டும். ஒரு நிமிடம் நின்று அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு நடந்தார். 


“தாத்தாவுடன் பாட்டியும் தானே அம்மாவின் கொலைக்கு உடந்தையாக இருந்திருப்பார்?”


நவீன் வேகமாக அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டான். “மணிக்கா, பாட்டி அன்று உயிரோடிருந்தால் அத்தைக்கு இப்படி நடக்க விட்டிருப்பாரா? அவர் இறந்து இரண்டு வருடம் கழிந்த பிறகுதான் இது நடந்தது. தாயில்லாத பெண்ணான அத்தைக்கு வழிகாட்ட யாரும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.” மணிகர்ணிகா அவனிடமிருந்து தன் கைகளை விடுவித்துக் கொள்ளவில்லை. 


“மணிக்கா, உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்தச் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருமம் செய்துவிடு. ஆனால் என்னை மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிடாதே. உனக்காகவே நான் உயிரோடிருக்கிறேன். அத்தைக்கு நடந்த அநீதிக்குப்  பிராயச்சித்தமாக நான் உன்னை மணந்துகொண்டுதான் ஆகவேண்டும்.   வேறு வழியில் இந்த வினை தீராது என்று என் அம்மா சொல்கிறார்…” என்ற நவீன் சட்டென்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பைத் தளரவிடும் நினைப்பு அவளுக்கும் இல்லை. ஆனால் கண்கள் மட்டும் ஆறாய்ப் பொழிந்தன.       

  

இப்போது பூங்காவில் ஒரு சில விளக்குகள் மட்டுமே எரிந்தன. பூங்கா மூடும் நேரம் ஆகிவிட்டது. இலேசான குளிர்காற்றும் வீசத் தொடங்கியது. அணைப்பின் வெப்பம் அவளுக்கு இதமாக இருந்தது. 


“மணிக்கா, பேச மாட்டாயா?” என்றான் அணைப்பை விடாமல்.


அதற்கு விசும்பல் பதிலாக வந்தது. 


வலது கையால் அவளுடைய முகத்தை ஏந்திக்கொண்டு, “மணிக்கா, உன்மீது எனக்கு உரிமை இருப்பது உண்மையானால், ஒன்று செய்வாயா?” என்றான்.


ஒரு கணம் கண்களை விரித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டாள். 


“எனக்குள்ள உரிமை உனக்கும் என்மீது உண்டுதானே?” என்றான். 

அவளுக்குப் புரியவில்லை.  


“பொதுவாக, பெண்களுக்குத் தானே முன்னுரிமை?” என்றான். 

அவள் கண்களைத் திறந்தாள்.  


“என்னதான் சொல்கிறீர்கள்? புதிர்போடவேண்டாம். எனக்கு விடுகதைகள் பிடிக்காது” என்றாள் பொய்க் கோபத்துடன்.


“சரி, சொல்லிவிடுகிறேன். எனக்கு அவசரமாக ஒரு முத்தம் தருவீர்களா?”


அவள் தன்னையறியாமல் களுக்கென்று சிரித்துவிட்டாள். “என்னை அவ்வளவு அற்பமாக நினைத்து விட்டீர்களா?” என்று அவன் கைகளிலிருந்து தன்னை வேகமாக விடுவித்துக்கொண்டாள். 

“உங்களைப் பற்றி நான் எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும்” என்று நடக்க ஆரம்பித்துவிட்டாள். 


அவன் வேகமாக அவளைக் கடந்து முன்னால் போய்  நின்றான். “நான் தவறு செய்து விட்டேனா?” என்றான் பரிதாபமாக.


“இல்லை, ஆனால்,  நான் தவறு செய்ய விரும்பவில்லை என் அம்மாவைப் போல!” என்றாள். குரலில் உறுதி தொனித்தது.


“சபாஷ்!” என்று  கை தட்டியபடி  வந்தாள் மாதவி.  “மிஸ்டர் நவீன், இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே, மணிக்கா?”


அவள் மௌனமாக இருந்தாள். 


“நல்லது, இரவு சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டது. எம்.ஜி. ரோடு போகலாம். சாப்பிட்டபிறகு அவள் தன்  மாமா, மாமியோடு பேசட்டும். அப்போதுதான் அவளால் நிம்மதியாக ஒரு முடிவெடுக்க முடியும்” என்று மாதவி ஓர் ஆட்டோவை  அழைத்தாள்.

**

போலீஸ் ஸ்டேஷன் என்றதும் பயத்தால் வியர்த்துப்போகிற மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்தவள் அல்ல, பரமேஸ்வரி. ஒரு படத்தில் போலீஸ்கார வடிவேலுவையே அலற வைத்த ரவுடிப்பெண் போன்றவள் அவள். இல்லையென்றால் ஐந்துவருடமாக வட்டிக்குப் பணம்கொடுக்கும் தொழிலில் கொடிகட்டமுடியுமா? 


மாமியாரை மிரட்டி அவருடைய நகைகளை விற்றுக் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயை மூலதனமாக வைத்துத் தொழிலில் இறங்கினாள் பரமேஸ்வரி. ஆரம்பத்தில் தன்னோடு வேலைசெய்யும் தையல் தொழிலாளிகளுக்கு இரண்டு வட்டி வீதம் ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்து சிறிய அளவில் பிசினஸைத் தொடங்கியவள், நாளடைவில் குறைந்த கடனே ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயித்துக்கொண்டாள். அதில் ஐநூறு ரூபாயை வட்டிக்காக முன்கூட்டியே பிடித்துக்கொண்டு நாலாயிரத்து ஐந்நூறு தான் தருவாள். அந்த ஐந்நூறு ரூபாயைத் தன் மாமியாரிடம் கொடுத்துவிடுவாள். அப்படிச் சேர்ந்த தொகையில் ஒரே வருடத்தில் மாமியாருக்குப் புதிய நகைகளாக வாங்கிக்கொடுத்துவிட்டாள். அதன் பிறகும் கூட, மாமியாரிடம் அவ்வப்பொழுது சிறிது பணத்தைக் கொடுப்பதை வழக்கமாகக்  கொண்டிருந்தாள். இதன்மூலம் மாமியார்-மருமகள் உறவில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் பரமேஸ்வரி வைத்ததுதான் சட்டம் என்று ஆனது. 


மருமகளின் தொழில் பாணியைப் பின்பற்றி மாமியாரும் சிறிய அளவில்

போராடித்தால் வடை சாப்பிடுங்கள்

பூக்காரிகளுக்குத் தினசரிக் கடன் கொடுக்க ஆரம்பித்தார். காலையில் ஐந்து மணிக்கு ஒரு பூக்காரி ரூ.450 கடனாகப் பெற்றால், இரவு ஒன்பது மணிக்குள் அதை 500 ஆகத் திருப்பித் தரவேண்டும் என்பது ஏற்பாடு. இது பூக்காரிகளுக்கு மிகவும் வசதியாகவும் குறைந்த வட்டியாகவும் புலப்பட்டது. ஏனென்றால், கையில் எந்த மூலதனமும் இல்லாமல் ரூ.450 கிடைக்கிறது. அதுவும் சூரியன் உதிப்பதற்கு முன்னால். உடனே கோயம்பேடு பூமார்க்கெட்டுக்குப் போனால் முதல் போணியாகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யமுடியும். அந்தப் பூவை  எப்படியும் 700 ரூபாய்க்குக் குறையாமல் விற்கமுடியும். அசலும் வட்டியுமாக  500 ரூபாயைக் கொடுத்தாலும் நிகர லாபம் 200 ரூபாய் கிடைக்கும். மழைநாட்களில் விற்பனை குறையும். அப்போது லாபமும் குறையும். என்றாலும் 100 ரூபாயாவது லாபம் வந்தே தீரும். 


இவ்வாறு பூக்காரிகளுக்கு மட்டுமே கடன்கொடுத்து ஒரே வருடத்தில்  ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டார் அந்த மாமியார். அதில் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிரவுண்டு நிலமும் வாங்கிப்போட்டார் என்றால் அவர் திறமைதான் என்னே! 


எனவே, ‘ஏசிபி கருணாமூர்த்தி கூப்பிடுகிறார்’ என்று தகவல் வந்தவுடன், பரமேஸ்வரி அலட்சியமாக, “இந்தா ஏட்டு, ஆபீஸ் நேரத்துல நான் வெளிய வர முடியாது. என் மாமியாள அனுப்பிவைக்கறேன். என்னான்னு அவகிட்ட சொல்லக் சொல்லுங்க” என்று மாமியாரை அனுப்பினாள்.


கிரீஷ் தனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு லாக்கப்பில் உட்கார்ந்துவிட்டதால் கொதித்துப் போயிருந்த கருணாமூர்த்தி, பரமேஸ்வரியும் தன்னை மதிக்காமல் மாமியார்க் கிழவியை அனுப்பிவைத்ததும் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்.        

ஏட்டை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.


“ஒரு சாதாரணப் பொம்பளையை விசாரித்து அழைத்துவரக்கூட முடியாமல் ஏன்யா டிபார்ட்மெண்ட்டுக்கு வந்தே?” என்று ஏசினார்.

உடனே உள்ளே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள் வந்து, அவர் காதில் மட்டும் கேட்கும்படியாக, ”இந்தப் பரமேஸ்வரிகிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும் சார்! எங்களுக்கு அவசர முடைன்னா   ஒரு வட்டிக்கே பத்தாயிரம் குடுப்பா சார்! சொல்லப்போனா அவகிட்ட கடன் வாங்காதவரு  நம்ம ஸ்டேஷன்ல நீங்க ஒருத்தர் மட்டும்தான் சார்” என்றார்கள்.  


இவளை வேறுமாதிரியாகத்தான் ‘டீல்’ செய்யவேண்டும் என்று தெரிந்துகொண்ட கருணா, “ஒங்க மருமக நல்லா  இருக்காளாம்மா? ஒரு விஷயம் பேசணுன்னு கூப்பிட்டேன். வரத்துக்கு வசதிப்படல போலிருக்கு. பரவாயில்ல, நான் வேறே எடத்துல ஏற்பாடு பண்ணிக்கறேன்னு சொல்லிடுங்க” என்று எழுந்து தன் பைக்கைக் கிளப்ப ஆயத்தமாவதுபோல் பாவலா காட்டினார்.    


மாமியார்க்காரி தான் தொழில்நுணுக்கத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டாரே, கருணா மாதிரி நல்ல கடன்காரர் அகப்பட்டால் விடுவாளா? அவர் பின்னாலேயே போனாள். “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார்! எவ்ளோ வேணும்னு சொல்லுங்க. வட்டி கழிக்காமலே குடுக்கச் சொல்றேன். ஒங்களுக்கு இல்லாம யாருக்குத் தரப்போறா என் மருமவ?” என்று பணிவாகச் சொன்னாள். 


தன் திட்டம் பலிப்பதைக் கண்ட கருணா, அவளருகில் நெருங்கி வந்து,”இதெல்லாம் நமக்குள்ள இருக்கணும். ஸ்டேஷன்ல மத்தப் பசங்களுக்குத் தெரியக்கூடாது. கேவலமா நினைப்பாங்க” என்றார்.   

“அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்களா? எவ்ளோன்னு சொல்லலியே” என்றாள் அவள்.


“ஒரு அம்பது ரூவா வேணும்னு தோணுது.”  


“நீங்க அஞ்சு மணிக்கு தானே வீட்டுக்கு கெளம்புவீங்க? அதுக்குள்ளே பரமேஸ்வரி பணத்தோட வருவா” என்று உறுதியளித்துவிட்டுக் கிளம்பினாள் கிழவி.


கருணா தன் அடுத்த திட்டத்துக்குத் தயாரானார். இந்த கிரீஷை ஒருவழி பண்ணியாகவேண்டும்…


“அந்த விநோதான்னு ஒரு மேடம் 20,000 செக் திருட்டுப்போச்சுன்னு சொன்னாங்களே, அவங்க வீட்டுக்குப் போய், அந்தத் திருடனைக் கண்டுபிடிச்சிட்டோம், நீங்க ரைட்டிங்கல கம்ப்ளெயிண்ட் கொடுத்தா போதும், ஒடனே பணம் ஒங்களுக்கு வந்துடும்னு சொல்லி, அந்தக் கம்ப்ளெயிண்ட் லெட்டரை கையோடு வாங்கிட்டுவா” என்று  ஏட்டை அனுப்பினார்.  

(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.


7 கருத்துகள்:

  1. இதுதான் "கப்பன் பார்க் " என்று ஒரு படத்தைப் போடாமல் உங்க வீட்டில் செய்த அருமையான மெதுவடையைப் போட்டு இருக்கிறீர்கள். நன்றி.

    அத்தை மகளை திருமணம் செய்வதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். அது உங்கள் நவீன்-மணிக்காவுக்குத் தெரியாதா?

    கருணா பலே கில்லாடி போல் இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  2. ***அத்தை மகளை திருமணம் செய்வதெல்லாம் கூடாது என்று விஞ்ஞான பூர்வமாக***

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை கதையாக பாருங்கள்!
      நிதர்சன வாழ்வில்தான் விஞ்ஞான பூர்வமாக சந்ததிகளுக்கு யோசனை எல்லாம் பரசுராமன் !

      நீக்கு
  3. வடை படம் எதற்கு. அது தான் வட்டியா?

    பதிலளிநீக்கு
  4. வேறு படம் எதுவும் கிடைக்கவில்லை ஐயா! பார்க்க நல்ல வடைபோல் இருந்தது. ஆகவேதான்...
    !

    பதிலளிநீக்கு
  5. பரமேஸ்வரியும் மாமியாரும்...    புதிய இரு கேரக்டர்கள் உள்நுழைவு!  கருணா மாதிரி போலீஸ்காரர்கள் மீது எரிச்சல்தான் வரும்.

    பதிலளிநீக்கு