மணிகர்ணிகா (24) இன்று வர மாட்டாள் (கடைசிப் பகுதி)
(அமெரிக்காவில் 121வது நாள்: 10-8-2022)
டாக்டர் வசந்தாவின் நர்சிங்ஹோமுக்குச் சென்று விபத்து சம்பந்தமான சிசிடிவி காட்சியை நேரில் பார்க்க விரும்பினார் குல்கர்னி. மீனாவிடமும் மற்ற விவரங்களைக் கேட்டறிந்தார். திலகாவிடம் நஷ்ட ஈடு கொடுப்பதாகச் சொல்லி ஐந்து லட்சம் பெற்றுக்கொண்ட கருணாமூர்த்தி வெறும் ஐம்பதாயிரம் மட்டும் கொடுத்துவிட்டு, தவறு முழுவதும் மயூரியுடையதே என்று எழுதிவாங்கிய தகவலும் அவருக்கு அதிர்ச்சியளித்தது.
மணிகர்ணிகாவும் நவீனும் இப்படித்தான் இருப்பார்களோ? (படம் நன்றி-இணையம்) |
மீனாவின் தோழியர் மயூரியும் திலகாவும் சம்பந்தப்பட்டிருந்த ஒரே காரணத்திற்காக இந்தப் பிரச்சினையை எப்படியும் தீர்த்துக் கொடுக்கவேண்டும் என்று எண்ணினார் குல்கர்னி. ஆகவே யாருக்கும் தெரியாமல் தன் நண்பரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அனந்தராம் ஷெனாயை நர்ஸிங்ஹோமுக்கு வரவழைத்தார். அந்த சிசிடிவி காட்சியைப் பார்த்த பிறகு கிரீஷிடமும் திலகாவிடமும் பேசினார் ஷெனாய்.
பலநாட்களாகவே கருணாமூர்த்தி மீது லஞ்சப்புகார்கள் இருந்துவந்தன. ஆனால் அவையெல்லாம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் எதிர்க்கட்சிகள் தொடுத்த புகார்கள். அவற்றின்மீது ஆக்ஷன் எடுக்க முடியாமல் ஷெனாயின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இப்போது ஆளும்கட்சிக்காரரையே ஏமாற்றி வசமாக மாட்டியிருக்கிறார்.
“நல்லது, குல்கர்னி! சென்னையில் உங்களுக்கு நல்வரவு!” என்று வாழ்த்திவிட்டுத் தன் காரில் பயணமானார் ஷெனாய்.
***
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்தாள் பரமேஸ்வரி. “ஐயா வந்துட்டாருங்களா?” என்று கேட்டாள். அவளுடைய மாதாந்திர வட்டி வசூல் தினம் அன்று.
அவசரமாக ஓடிவந்த ஒரு போலீஸ்காரர், “வாங்க பரமேஸ்வரி! ஐயாவை மட்டும்தான் விசாரிப்பீங்களா, எங்களைக் கவனிக்க மாட்டீங்களா?” என்றவர், மரத்தடியில் ஒரு நாற்காலியைப் போட்டு அவளை உட்காரவைத்தார். ஐயா என்றது கருணாமூர்த்தியை.
“ஐயாவுக்கு சம்பளம் வந்துட்டுதா?” என்றாள் பரமேஸ்வரி.
அவர் சிரித்தார். “சம்பளம் வாங்கித்தான் ஒனக்கு வட்டி கட்டணும்கற நெலமையில ஐயா இருக்காரா?”
பரமேஸ்வரிக்கு இந்த விவாதங்களில் அக்கறை கிடையாது. கருணாவின் ஜீப் வருகிறதா என்பதில் மட்டுமே கவனமாக இருந்தாள்.
போன காரியம் நிறைவேறாததால் பொருமிக்கொண்டே உள்ளே நுழைந்தார் கருணா. தன்னைப் பார்த்துப் பல்லை இளித்துக்கொண்டே வணக்கம் சொன்ன பரமேஸ்வரியைப் பார்த்ததும் ஆத்திரம் அதிகமாயிற்று.
“என்னம்மா, ஒன்னோட பிசாத்து வட்டியை நான் குடுக்க மாட்டேன்னு நீயே வசூல் பண்ண வந்துட்டியா?” என்றார் இளக்காரமாக.
வழக்கமான குழைவுடன், “என்ன பண்றதுங்க சார்! ஒரு ஆசாமிக்கு இன்னிக்கு அம்பதாயிரம் குடுக்கறேன்னு வாக்கு கொடுத்துட்டேன். அதான் எல்லா இடத்துலயும் பீறாஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்று எழுந்து நின்றாள் பரமேஸ்வரி.
“இங்கப்பாரு பரமேஸ்வரி! வட்டி, கிட்டி எல்லாம் குடுக்கற பழக்கம் எனக்கு கெடையாது. அசலும் வட்டியும் சேர்த்து ஒரே தொகையா அடுத்த மாசம் தர்றேன். வந்து வாங்கிக்க. ஒங்கிட்ட எவ்ளோ வாங்கினேன்? முப்பதாயிரம் தானே?”
“ஐயோ, ஐயோ” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள் பரமேஸ்வரி. “நல்ல கியாபகம் பண்ணுங்க சார், அம்பது ரூபா குடுத்தேன், முப்பதுன்னு சொல்றீங்களே!”
“என் கணக்கு எப்பவும் சரியாத்தான் மே இருக்கும்! அந்த வினோதா அம்மாவுக்கு இருவதாயிரம் ஒங்க அப்பனா வந்து குடுப்பான்?”
“இன்னாங்க சார், புதுசா பேசறீங்க. அந்தம்மா யாருன்னே எனக்குத் தெரியாது.”
கருணா சிரித்தார். “ஒம் புருஷனுக்குத் தெரியுமான்னு கேட்டுப்பாரேன்! நம்பர் சொல்றியா, போன் போடறேன்.”
கனராவங்கியில் வினோதா மேடம் கையெழுத்திட்ட செக்கை அவள் கணவன் கொடுத்துப் பணம் வாங்கிய சிசிடிவி காட்சியை நேரில் பார்த்தபின்தான் கருணா தன்னிடமிருந்த பணத்தில் இருபதாயிரத்தைக் கோபால்சாமியிடம் கொடுத்து செட்டில் செய்தார். அவருக்கும் சில நியாயக் கோட்பாடுகள் இருந்தன. வயதானவர்களின் நியாயமான பணத்தில் அவர் கைவைக்கமாட்டார்.
“அடப்பாவி மனுஷா! நான் வயத்தைக் கட்டி வாயைக் கட்டி நடையா நடந்து வட்டிக்கு விட்டு பொழப்பு நடத்தறேன். நீ சும்மா தின்னுப்புட்டு குடிச்சி என் பணத்தை அழிக்கறதும் இல்லாம, இப்பத் திருடவும் ஆரம்பிச்சிட்டியா?” என்று அவள் கத்திய கத்தில் அவள் கணவனின் போனே இரண்டாக உடைந்திருக்கும்.
“ஹஹ்ஹஹ்ஹா” என்று கடோத்கஜன் சிரிப்பு சிரித்தார் கருணா.
“ஐயா, என்கிட்டப் பணம் வாங்கிட்டு என் புருஷன் பண்ணின காரியத்துக்கு அடஜஸ்ட்மெண்ட்டு பண்றீங்களே, இது நியாயமா சார்?”
“பரமேஸ்வரி, எது நியாயமோ அதைச் செய்றதுக்கு தான் நமக்கு காக்கி சட்டை கொடுத்திருக்காங்க, இல்லியா கணேஷு?” என்றார் கருணா. “ஐயா சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்று பின்பாட்டுப் பாடினார் கணேஷு என்ற போலீஸ்காரர்.
“கருணா சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் அனந்தராம் ஷெனாய், ஐ.பி.எஸ்.
திடுக்கிட்டு எழுந்து நின்றார் கருணா. “குட் மாணிங் சார்” என்று விறைப்பாக சல்யூட் அடித்தார். ஸ்டேஷனில் இருந்த எல்லா போலீஸ்காரர்களும் சப்-இன்ஸ்பெக்டரும் அலறியடித்துக்கொண்டு தாங்களும் சல்யூட் செய்தனர்.
ஷெனாயின் அதிகார எல்லைக்குள் தனது போலீஸ் ஸ்டேஷன் இருந்தபோதிலும், கருணாவால் அவரை நெருங்கிப் பழக முடியாமல் இருந்தது. காரணம் ஷெனாய் நெருப்பு மாதிரி. எவரிடமும் கைநீட்டி வாங்கமாட்டார். ஆளும்கட்சியின் செல்வாக்குக்கு முடிந்தவரை வளைந்துகொடுக்காமல் நியாயமாக நடந்துகொள்வார். அதனால் எதிர்க்கட்சிகளும் அவருக்குத் தொல்லை கொடுக்காமல் மரியாதையோடு நடத்தின. கீழுள்ள அதிகாரிகளும் அவரிடம் பயத்தோடு செயல்பட்டார்கள்.
“கணேஷு, இந்த ஸ்டேஷனில் சீனியர் நீங்கதானே?” என்றார் ஷெனாய்.
“ஆமாங்க ஐயா! பத்து வருஷமா வேலூருக்கு ட்ரான்ஸ்பர் கேக்கறேன், குடுக்க மாட்றாங்க ஐயா” என்றார் கணேஷு.
“வேலூருக்குப் போறது ரொம்ப சுலபமாச்சே கணேஷு! ஏதாச்சும் தப்பு தண்ட்டா பண்ணு. நீ கேட்ட மாதிரியே வேலூர்ல போட்டுடறேன்” என்று சிரித்தார் ஷெனாய்.
பரிதாபமாக முழித்தார் கணேஷு.
தலைமை போலீஸ் அலுவலகத்தின் சீல் வைத்த கடித உறை ஒன்றை கணேஷிடம் கொடுத்தார். “இதை நீங்களே ஒங்க ஐயாவுக்கு குடுங்க” என்றார்.
பரபரப்புடன் அதை பிரித்தார் கருணா. ப்ரோமோஷனா, டிரான்ஸ்பரா, அவார்டா? இல்லையென்றால் ஷெனாய் நேரில் வந்து கொடுக்கவேண்டிய காரணம் என்ன?
நீளமான கடிதம். “இக்கடிதத்தில் மேற்சொன்ன விஷயம் பற்றி விசாரணை செய்வதற்கு ஏதுவாக நீங்கள் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என்று இருந்தது!
சஸ்பென்ஷன்! வாழ்க்கையில் முதல் முறையாக! அதிர்ந்துபோனார் கருணா.
ஆனாலும் சவால் விட்டார். “புகார் செய்தவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும், ஒரே வாரத்தில் சஸ்பென்ஷனை ரிவோக் பண்ணி மறுபடியும் இங்க வந்து உட்காருவேன், நடக்கிறதா இல்லையா பாருங்கள்” என்று ஷெனாயின் பக்கம் திரும்பாமல் மற்ற போலீஸ்காரர்கள் அனைவரையும் ஆழமாகப் பார்த்தார் கருணா.
“அப்ப நான் வரட்டுமா, கணேஷு?” என்று கிளம்பினார் ஷெனாய்.
கருணாவுக்கு சஸ்பென்ஷன் என்றதும் பரமேஸ்வரிக்கு நாடியெல்லாம் ஒடுங்கிவிட்டது. ஐம்பதாயிரம் போய், முப்பதாயிரமாகி, இனி அது பூஜ்யமாகிவிடப் போகிறதா?
“இந்தாங்க சார்! ஒங்க பெரிய ஐயா இருக்காரேன்னு பேசாம இருந்தேன். சஸ்பென்ஸன் ஆச்சின்னா எப்படி சம்பளம் வரும்? மரியாதையா என் பணத்தை மொத்தமா இப்பவே குடுத்திருங்க. இல்லேன்னா நான் வண்டை வண்டையாக் கேட்ருவேன்” என்று அவருக்கு நேர் எதிரில் குஸ்தி போடுபவள்போல் நின்றுகொண்டாள்.
கணேஷு பரமேஸ்வரியைச் சமாதானப்படுத்தினார். “நாங்களெல்லாம் எதுக்கு இருக்கோம்?” என்ற அவருடைய உறுதிமொழியின் பேரில் தயங்கித் தயங்கி வெளியேறினாள் அவள்.
***
அன்று அந்த வங்கிக்கிளை விழாக்கோலம் பூண்டிருந்தது. பல முக்கிய நிகழ்ச்சிகள் காரணமாகப் பெரிய விருந்தும் ஏற்பாடாகியிருந்தது.
ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடு டிஜிஎம் ஆக ப்ரோமோஷன் கிடைத்து விஜயவாடா போகிறார். அவருடைய இடத்தில் இந்த வங்கியின் கிளை மேலாளர் சண்முகம் ரீஜினல் மேனேஜர் ஆகிறார்.
வேலையை ராஜினாமா செய்வதாக இருந்த மயூரி, அவளுடைய தொழிற்சங்கம் கொடுத்த ஆலோசனையின்பேரில் அதை வாபஸ் வாங்கிவிட்டு, பெங்களூரில் ஒரு கிளைக்கு மாறுதல் பெறுகிறாள். அதைக் கொண்டாடும் விதமாகத் தன் கணவர், குழந்தையுடன் வந்திருக்கிறாள்.
விபத்துக்குப் பிறகு திலகா அன்றுதான் மீண்டும் பணியில் சேருகிறாள். சண்முகத்தின் சிபாரிசில் அவளுடைய கணவன் கிரீஷுக்கு ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்துவிட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகப் பிரிந்திருந்த மீனாவும் குல்கர்னியும் இப்போது ஒன்று சேர்ந்துவிட்டார்கள். “சீக்கிரமே டாக்டர் வசந்தாவைப் போய்ப் பார்க்கவேண்டும் தானே?” என்று அவளைக் கிண்டலடித்தாள் திலகா. “இல்லையென்றால் என் மாமியார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிடுவார்” என்று சிரித்தாள் மீனா.
கருணாமூர்த்தியை அனேகமாக டிஸ்மிஸ் செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தகவல் வந்ததாகச் சொன்னார் குல்கர்னி. “டான்ஸ் மேக்கப்பில் இருந்த என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி ஸ்டேட்மெண்ட் வாங்கியவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்றாள் மீனா, பழைய ஆத்திரம் அடங்காதவளாக.
வங்கியின் மற்ற ஊழியர்களும், ரீஜினல் ஆபீசில் இருந்து விசேஷ அழைப்பின்பேரில் மாலினியும், வந்திருந்தார்கள்.
“மணிகர்ணிகாவும் இங்கு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?” என்றார் சண்முகம். ஜான் நாயுடு ராஜாவின் முகத்தைப் பார்த்தார். அவன் பேசாமல் சிரித்தான். உள்ளர்த்தம் இல்லாமல் அவன் சிரிக்கமாட்டான்.
சற்று நேரத்தில் அங்கு ஒரு பெரிய வேன் வந்து நின்றது. அதிலிருந்து முதலில் இறங்கினார் வங்கியின் சேர்மன் ரங்கநாத், பிறகு அவர் மனைவி சாமுண்டீஸ்வரி. அடுத்து கையில் நிறைய அழைப்பிதழ்களுடன் நவீன். கடைசியாக இறங்கினாள் மணிகர்ணிகா!
ஒரு மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் விசேஷ அலங்காரத்துடன் வந்திருந்தாள் அவள்.
“இனிமேல் மணிகர்ணிகா வருவாளா, மணிகர்ணிகா எங்கு போனாள் என்று யாரும் என்னிடம் கேட்க வேண்டியது இல்லை. இதோ வந்துவிட்டாள்” என்று மாலினி உரக்கக் கூறினாள்.
“ஆனால் எல்லாம் அக்டோபர் 9 ஆம் தேதி வரைதான்! அதன் பிறகு மணிகர்ணிகா வருவாளா வங்கிக்கு என்று அவள் கணவனைத்தான் கேட்கவேண்டும்!” என்று சிரிப்புடன் கூறினார் சேர்மன் ரங்கநாத். “ஆனால் என்னுடைய மருமகளை ஒரு தொழிலதிபராகத்தான் பார்க்க எனக்கு ஆசை” என்றார்.
“நீங்கள் அனைவரும் திருமணத்திற்குக் கண்டிப்பாக வரவேண்டும்” என்று ஒவ்வொருவரிடமும் தானே அழைப்பிதழைக் கொடுத்தார்.
அன்றைய விருந்து அனைவருக்கும் மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. விருந்து முடியும் நேரத்தில் மணிகர்ணிகாவின் மொபைலில் “விரைவில் விஜயவாடாவில் தொடங்க இருக்கும் உங்கள் கம்பெனிக்கு என் நல் வாழ்த்துக்கள்” என்று குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவள் - துபாயில் இருந்து மாதவி!
****முற்றும்****
இதுவரை 'மணிகர்ணிகா' வின் 24 அத்தியாயங்களையும் படித்தவர்கள் தயவுசெய்து தங்கள் மனதில் தோன்றும் கருத்தைப் பின்னூட்டமாக எழுதவேண்டுகிறேன்.
(1) இந்த வலைப்பதிவின் கீழும் எழுதலாம். அல்லது (2) என்னுடைய வாட்ஸ்அப் பிலும் எழுதி அனுப்பலாம். (3) அல்லது என்னுடைய ஈமெயிலுக்கும் அனுப்பலாம்: chellappay@gmail.com
அவற்றில் சிறந்த கருத்துக்களை, இந்த நாவல் புத்தகமாகும்போது அதில், (உங்கள் அனுமதி பெற்று), வெளியிட விரும்புகிறேன்.
தினந்தோறும் என்னை எழுப்பி "மணிகர்ணிகா எப்போது வருவாள்" என்று உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்த எனது சீடியெஸ் சென்னைப்பட்டின வாசிகளுக்கும், முகநூல் மத்யமர் வட அமெரிக்கக் குழுவினருக்கும், எனது கார்ப்பொரேஷன் வங்கி நண்பர்களுக்கும், குவிகம் -விருட்சம் அமைப்புகளின் மகத்தான உறுப்பினர்களுக்கும் மற்றும் எனது நீண்டநாள் விசுவாசமான வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இராய செல்லப்பா.
எனது அடுத்த கட்டுரை -" மனோ சார் " படிக்க இங்கே சொடுக்கவும்.
விழா அமைப்பாளர் மேடை ஓரம் நின்று 'நேரம் ஆகிவிட்டது' என்பது போல சைகை காட்டுவதைப் பார்த்த உபன்யாசகர் விவரணங்களை விடுத்து சட்டென பாக்கி விஷயங்களை வேகமாக ஒவ்வொரு வரியில் முடிப்பது போல சம்பவங்களை சட்டென சுருக்கி முற்றும் போட்டுவிட்டீர்கள். கொஞ்சம் ஏமாற்றம்தான்.
பதிலளிநீக்குஎனக்கும் தோன்றியதுதான் ஸ்ரீராம் நீங்க அதை சூப்பரான எடுத்துக்காட்டோடு சொல்லிட்டீங்க. சாருக்கு என்ன அவசரமோ??!! சாரி மணிகர்ணிகா சாரிடம் சொல்லியிருப்பாள். எனக்கு டைம் இல்லை சீக்கிரம் முடிங்கன்னு.!!!!!!
நீக்குகீதா
சுபம்!
பதிலளிநீக்குஇதற்கு முந்தைய ஒரு மூன்று பகுதிகள்? முன் சொல்லியிருந்தேன். கல்யாண ஏற்பாடுகள் செய்யும் அவசரத்தில் மணிகர்ணிகா ஸ்பீடா வந்துவிட்டு ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாளே! அவசர அவசரமாக....! முதலில் மிகவும் நுணுக்கமாகச் சொல்லிவிட்டு இப்போது டக்கென்று சொல்லிச் சென்றுவிட்டீர்களோன்னு ...
கீதா
இந்தக் கதை புத்தகமாக வரும்போது, வாசகர்களின் விருப்பத்துக்கு இணங்க இறுதிப் பகுதிகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதிவிடுகிறேன், ஆளை விடுங்கள்! (மைண்ட் வாய்ஸ்: சிலபேர் ஆயிரம் பக்க நாவல் என்று எழுதுகிறார்களே, உனக்கு 200 பக்கம் எழுதுவதற்குள் என்னய்யா சோம்பல்? ) (மைண்ட் ரிப்ளை: பதிப்பாளர் கிடைத்தால் 1000 என்ன 2000 பக்கம் கூட எழுதலாம்!)
நீக்குஓரளவு இவை நடந்த நிகழ்வுகள் தானா...?
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குமயூரிக்கு நடந்தது நிஜமே. அதை எழுதவேண்டுமென்று 18 ஆண்டுகளாகத் தவித்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் நிறைவேறியது. ஆனால் அப்போது அவளுக்கு உதவ எந்த மீனா குல்கர்னியும் இருக்கவில்லை. அப்போதிருந்த கிரீஷும் கொடூரமானவன். தன் நகைகளை விற்றுப் பத்து லட்சத்தை அவனுக்கு நஷ்டயீடாகக் கொடுத்தாளாம் மயூரி. அவளுக்கு வாய்த்த திலகாவும் ஒரு வாயில்லாப் பூச்சியாக நடித்தாளாம். ஆனால் காலம் திலகாவைப் புற்றுநோயாக வந்து தண்டித்து அடுத்த மூன்றாண்டுகளில் அவளை இல்லாமல் செய்துவிட்டது. மயூரி மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்று பேரன் பேத்திகளுடன் நலமாக இருக்கிறார்.
பதிலளிநீக்குஇது நிஜமாக நடந்த நிகழ்வுகள் என்றால், இந்த கதையில் தாங்கள் யார் என்று சொல்லுங்க சார் ப்ளீஸ்...!
நீக்குகதையின் நிகழ்வுகள் முடிந்தபின் வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவன்!
நீக்குஆகா, நடந்த நிகழ்வுகளா
பதிலளிநீக்குநடந்த நிகழ்வுகளுக்கு வர்ணம் பூசி, கண் காது வைத்து ,ஜோடித்து அழகான ஒரு கதையாக வடித்துக் கொடுத்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇதை ஒரு சினிமாவாக எடுக்கலாமே?
Hero நவீன் - Harish Kalyan.
Heroine மணிகர்ணிகா - Priyanka Mohan.
சினிமாவில் நான் தான் நவீனின் அப்பாவாக நடிப்பேன்.
பதிலளிநீக்குசெல்லப்பா சார் உங்க கேரக்டர் என்ன?
குல்கர்னி? சண்முகம்? ஜான் நாயுடு?
நீக்குமிகவும் சுவாரசியமான கதை ரசித்துப்படித்தேன் மணிகர்ணிகா என்ற பெயரே அருமை
பதிலளிநீக்கு