மணிகர்ணிகா (20) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)
(அமெரிக்காவில் 117 வது நாள்: 06-8-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
"அம்மா, அம்மா, இவ என்ன காரியம் பண்ணியிருக்கா பாரும்மா.." என்று நவீன் பரபரப்புடன் போன் செய்த போதே ஏதோ விரும்பத்தகாத விஷயம் நடந்திருப்பதை சாமுண்டீஸ்வரி புரிந்துகொண்டுவிட்டாள்.
முதல்நாள் இரவு அவன் எவ்வளவு மகிழ்ச்சியோடு பேசினான்! மணிகர்ணிகா வருகிறாள் என்று எவ்வளவு ஆசையோடு இருந்தான்! அவள் வந்த உடனே இருவரும் தன்னோடு பேசுவார்கள் என்று காத்திருந்தது இப்படி வீணாகிவிட்டதே!
ஹேண்ட்பேகை நம்பாதே மணிகர்ணிகா! |
நவீனை எப்பொழுதும் அவள் கடிந்து கொண்டதே இல்லை. அவனுடைய விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்தே வளர்த்து வந்தாள். அவனும் தன் வயதுக்கு மீறிய பொறுமையுடன் பெற்றோர்களுக்கு உடன்பட்டு நடந்து வந்தான். அவன் கண்ணில் ஒரு சொட்டு நீர் வந்தாலும் பொறுக்காது. உருகிப் போய் விடுவாள்.
"என்னடா செல்லம், என்ன நடந்ததுன்னு பொறுமையா சொல்லு" என்றாள்.
மணிகர்ணிகா வந்ததையும் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டதையும் அவன் சொன்னபோது, அதற்கு முன்பு நிச்சயம் அழுதிருப்பான் என்று தோன்றியது.
"நவீன் கண்ணா, நீ அவள் மனம் புண்படும்படி ஏதாவது நடந்து கொண்டாயா? ஏதாவது பேசினாயா? யோசிச்சு சொல்லு. நான் இப்பவே அவ கிட்ட பேசுறேன். அதுவரையும் நீ மேற்கொண்டு பேசாதே!"
"இல்லைமா! எனக்குத் தெரிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணல. ராத்திரி போய் அப்பார்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்தோம். அப்ப கூட நல்லா தான் இருந்தா. ராத்திரி வீட்டிலேயே எதுவும் பேசல. அப்புறம் ஏன் காலையில் எழுந்தவுடன் சொல்லிக்காம இவ சென்னைக்கு போயிட்டான்னு புரியல மா!"
இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரங்கநாத் மனைவியிடம் இருந்து போனை வாங்கி, "நவீன், எனக்கு மணிகர்ணிகாவைத் தெரியும். ஏதோ ஒரு சாதாரண விஷயத்தை அவள் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கான்னு தோணுது. நீ பொறுமையா இரு. நாங்க அவ கிட்ட பேசி, எந்த பிரச்சினையா இருந்தாலும் சால்வ் பண்றோம். கவலைப்படாதே. நீ உன்னுடைய வேலையை கவனி" என்றார். சாமுண்டீஸ்வரியும் அதேபோல் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
அதற்கு மேல் இந்தப் பிரச்சினையில் நேரம் செலுத்த முடியாதபடி அலுவலக வேலைகள் அவனை ஆட்கொண்டன.
***
சென்னை விமான நிலையத்தில் மணிகர்ணிகா இறங்கியதுதான் தாமதம், அவளுடைய மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. மாமா ரங்கநாத்!
வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த மாணவனை ஆசிரியர் எழுந்து நிற்கச் சொன்னதுபோல் குற்றவுணர்வு அவளை உந்தித் தள்ளியது. சுற்றிலும் வருவோர் போவோர் இருந்ததால் ஓரமான இருக்கையைப் பிடித்து அமர்ந்துகொண்டபின், “ஹலோ மாமா!” என்றாள்.
அவளுடைய குரலைக் கேட்டதும்தான் உயிர் வந்தது ரங்கநாத்துக்கு. “மணிக்கா செல்லம், எங்களை எல்லாம் மறந்துட்டியாம்மா? எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டியேம்மா?..” என்றார்.
அப்போதுதான் தன்னுடைய முட்டாள்தனம் அவளுக்கு விளங்கியது. மாதவியின் கைப்பையை நவீனுடைய காரில் பார்த்தவுடனே மாமா, மாமியிடம் பேசியிருக்கக் கூடாதா? அவர்களை விட்டால் ஆதரவு என்று தனக்கு யார் இருக்கிறார்கள்? "மன்னிக்க வேண்டும் மாமா!" என்று மட்டும் சொன்னாள். வேறு என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.
ரங்கநாத்துக்குப் புரிந்தது. இளம் தம்பதிக்குள் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கருத்துவேறுபாடு வருவது இயற்கை. உடனே தலையிட்டுச் சமாதானப்படுத்த யாராவது பெரியவர்கள் இருக்கவேண்டும்.
"மணிக்கா! நீ எப்படி எனக்குக் குழந்தையோ, நவீனும் அப்படித்தான். உன்னைவிட ரெண்டு வயசு பெரியவன். அவ்வளவுதான். அவனைப் பற்றி உனக்கும் கொஞ்சம் தெரியும்தானே, மனசுல இருப்பதை வெளியில சொல்லத் தெரியாது. அதனால்தான் நீ கோபப்படும்படி அவன் ஏதோ சொல்லியிருக்கவேண்டும்..." என்று ரங்கநாத் பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் குறுக்கிட்டாள்.
"அவர் பேசியிருந்தால் பரவாயில்லையே மாமா! பேசவே இல்லையே, அவர் மனசு கல்லு மாதிரி" என்று கோபமாகக் கூறினாள்.
சாமுண்டீஸ்வரி இப்போது லைனில் வந்தாள். “பார்த்தீர்களா, மணிக்காவுக்கு ஒண்ணும் தெரியாது. ஊரும் புதுசு. இவன் தானே பாத்து நடந்துக்கணும்? மணிக்கா, நீ ஒண்ணும் கவலைப்படாதே. நான் பேசறேன் அவன்கிட்ட. மொதல்ல நீ எங்க தங்கப் போற, சொல்லு, சென்னையில ஒனக்கு யார் இருக்காங்க?”
அப்போதுதான் தன்னுடைய அறியாமை அவளுக்குப் புரிந்தது. கோபத்தோடு துபாய் விமான நிலையம் வந்தபோது எங்கு போகவேண்டும் என்ற தெளிவில்லாமல் இருந்தாள். இன்னும் ஒருமணி நேரத்தில் சென்னை விமானம் புறப்பட இருப்பது அறிவிப்புப் பலகையில் பளிச்சிட்டதால், சென்னைக்கு டிக்கட் வாங்கினாள். "தெரியலே, மாமி" என்றாள். அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது.
சாமுண்டீஸ்வரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. நவீனையும் இவளையும் வீடியோ காலில் பேசவைத்தால் பிரச்சினை இன்னதென்று கண்டுபிடிக்கலாம். கணவரைப் பார்த்து, “இவளை உங்க கெஸ்ட் ஹவுசில் தங்குவதற்கு ஏற்பாடுசெய்யுங்கள்” என்றாள்.
“ஆமாம் மணிக்கா! நீ அங்கேயே இரு. உன்னை கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துப்போவதற்குக் கார் வரும். அந்த நேரத்தில் ஏர்போர்ட்டில் ரெண்டு ரெஸ்டாரண்டுகள் இருக்கே, ஏதாவது சாப்பிடு. மனசைத் தெளிவா வச்சிக்கோ. நாங்க இருக்கோம். நீ எதுக்கும் கவலைப்படவேண்டாம்” என்றார் ரங்கநாத்.
***
துபாயில் வாட்ஸப் கால் வசதி கிடையாது. ஆகவே ‘கூகுள் டுவோ’வில் வீடியோகால் ஏற்படுத்தினான் நவீன். முதலில் மணிகர்ணிகாவின் இணைப்பு தான் கிடைத்தது. அவன் முகத்தில் இருந்த சோகம் அவளை பெரிதும் பாதித்தது. அவன் தவறு செய்யக்கூடியவனாகத் தெரியவில்லைதான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. மூன்று முறை காதல் தோல்வி அடைந்தவளாயிற்றே மாதவி! நாலாவது முறை வெற்றி அடைந்துவிட்டிருந்தால்?
மாமா, மாமி இருவரும் சற்று நேரத்தில் இணைந்தார்கள். அவர்கள் விஜயவாடாவில் இருந்து. இவள் சென்னையில் இருந்து. அவன் துபாயில் இருந்து. தொழில்நுட்பத்தின் அற்புதம்.
“அம்மா..” என்றான் நவீன் சோகமாக.
சாமுண்டீஸ்வரி அவனைக் கண்டிப்பதுபோல் பேசினாள். “நவீன், இன்னும் குழந்தை மாதிரியே நீ நடந்துகொள்ளக் கூடாது. மணிக்கா, நாம்ப தொலைத்துவிட்டு மீண்டும் கிடைத்த மாணிக்கம். அவளை எப்படி நடத்தறதுன்னு ஒனக்கு இன்னும் தெரியல. நான் அவளைக் குத்தம் சொல்லவே மாட்டேன். அதனால, என்ன நடந்ததுன்னு தெளிவாச் சொல்லிடு. எதையும் மறைக்காதே” என்றாள்.
“அம்மா, எனக்கு ஒண்ணுமே தெரியலையே! நாங்க போனோம், அபார்ட்மெண்ட் பாத்தோம், சாவி வாங்கிட்டு வந்தோம். தூங்கினோம். நான் குளிக்கப்போனேன். இவளைக் காணோம். அவ்ளோதான் எனக்குத் தெரியும். அதனால ஒன் மருமகளைத் தான் கேக்கணும்” என்றான்.
மணிகர்ணிகாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. “உண்மையைச் சொல்லுங்க நவீன். எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. மறைக்கலாம்னு நினைக்காதீங்க” என்றாள்.
நவீனுக்குப் பதற்றம் உண்டாவது தெரிந்தது. “மணிக்கா, நீ என்ன சொல்கிறாய்?”
சாமுண்டீஸ்வரி மகன் சார்பாகப் பேசினாள். “மணிக்கா செல்லம், மனசுல இருக்கறத சொல்லிடும்மா. நவீன் தெரியாதுன்னு சொல்றான் இல்லியா?”
அவ்வளவுதான் பொங்கியெழுந்துவிட்டாள் மணிகர்ணிகா. “நவீன், உங்களை நான் என்னவோன்னு நெனைச்சேன். உங்களுக்குத் தெரியாமத்தான் அந்தப் பை ஒங்க காருக்குள்ள வந்துச்சா?’
அவன் விழித்தான். “பையா, எந்தப் பை?”
“நெஜம்மா ஒங்களுக்குத் தெரியாது இல்லே?”
“சத்தியமா தெரியாது மணிக்கா!” என்று சோகமாகக் கூறினான் நவீன்.
“நீங்களும் நானும் ஒரு லேடீஸ் ஹேண்ட் பேக் வாங்கி, அவளுக்கு கொடுத்தோமே, அந்தப் பை!”
“அதுவா, அதைத்தான் மாதவிக்குக் கொடுத்துவிட்டோமே!”
“ஆமாம், கொடுத்தோம், அதுதான் கேட்கிறேன், அவளுக்கு கொடுத்த பை, மறுபடியும் ஒங்க கார்ல எப்படி வந்ததுன்னு கேட்கிறேன்.”
சாமுண்டீஸ்வரிக்கு விஷயம் ஒருவாறு புரிந்தமாதிரி இருந்தது. முதல் முறையாக மாதவியைப் பற்றிக் கேள்விப்பட்டபோதே அவள் ஆபத்தானவளாக இருப்பாளோ, இந்த அப்பாவி மணிக்கா அவளை நம்புகிறாளே என்று தோன்றியது. இப்போது அவளைச் சுற்றித்தான் சந்தேக வளையம் உண்டாகியிருக்கிறது.
“என்னோட காரிலா? நான் இதுவரை பார்க்கவில்லையே!” என்று நவீன் உறுதியோடு சொன்னான்.
“ஒரு நாள் தற்செயலாக அவள் துபாயில் கடைத்தெருவில் நடந்துகொண்டிருப்பதை பார்த்தேன். காப்பி சாப்பிட அழைத்தேன்.
அந்த ஒரு முறைதான் என் காரில் அவள் ஏறினாள். பிறகு காபிஷாப்பிலிருந்து ‘கேப்’பில் போய்விட்டாள். அவளுடைய பை எப்படி என் காரில் இருக்கமுடியும்? மறந்துபோய் விட்டுவிட்டுப் போயிருந்தால் மறுநாள் போன் செய்திருக்க மாட்டாளா? இல்லையே!’
“பாருங்க மாமி, எப்படி சாதிக்கிறார்!”
“கொஞ்சம் பொறு, மணிக்கா! நவீன், ஒண்ணு செய். நீ நேரடியாக உன் காருக்குப் போ. அங்கிருந்து மறுபடியும் வீடியோ கால் பண்ணு. நாங்க காத்திருப்போம். அந்தப் பை இருந்தா அதைக் காட்டு. இல்லேன்னா இல்லேன்னு சொல்லு. சரியா? பதினஞ்சு நிமிஷம் கழிச்சு நான் கூப்பிடறேன்” என்றாள் சாமுண்டீஸ்வரி.
****
நவீன் காருக்குள் பார்த்தான். பின் சீட்டில் இருந்தது அந்தப் பை! மாதவியின் பை! எப்படி இவ்வளவு நாள் அவன் பார்க்காமல் இருந்தான்?
“மணிக்கா, நீ சொன்னது சரி! அவளோட பை காரில் தான் இருக்கிறது!” என்றான் நவீன். முகத்தில் அசடு வழிந்தது.
“நான் அப்பவே நெனச்சேன். மணிக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்னு. தன் பாக்கெட்டுல இருக்கறதே இவனுக்குத் தெரியாது. இவன் டென்த் படிக்கும்போது ஒரு பையன் கரப்பான் பூச்சிய பொட்டலத்துல மடிச்சு இவனோட பேண்ட் பாக்கெட்ல போட்டிருக்கான். ரெண்டு நாள் கழிச்சு நான் துவைக்கும்போது தான் தெரிஞ்சது!" என்று நிலைமையை சகஜமாக்கினாள் சாமுண்டீஸ்வரி.
"நான் எப்படி நம்பறது? அவ வந்து இவரோட தங்கியிருந்தா?" என்று கோபத்துடன் மாமியைப் பார்த்தாள் மணிகர்ணிகா.
"நோ, நோ, அவசரப்படாதே மணிக்கா! நவீன் அப்படியெல்லாம் தப்பு செய்யமாட்டான். என் பையனை எனக்குத் தெரியும்" என்ற சாமுண்டீஸ்வரி, “அந்தப் பையை காமிராவுல காட்டு” என்றாள்.
காட்டினான். “இதே பை தான்” என்றாள் மணிகர்ணிகா.
அதுவரை பேசாமல் இருந்த ரங்கநாத் இப்போது தலையிட்டார்: “ஒருவேளை அந்த மாதவி, நிஜமாகவே தவறவிட்டிருந்தால்? உன் காரில் தான் வைத்தோம் என்று அவளுக்கே தெரியாமல் இருந்தால்? ஆகவே, அவளுக்குப் போன் போடு. எந்த ஊரில் இருக்கிறாளோ?”
குரூப் வீடியோ காலில் மாதவியையும் இணைத்தான் நவீன். “மாதவி, என் பெற்றோர்களும் மணிகர்ணிகாவும் உன்னோடு பேச ஆவலாய் இருக்கிறார்கள்!”
“ஓ, கிரேட்! குட் மாணிங் டு ஆல்!” என்றாள் மாதவி.
வழக்கமான நல விசாரிப்புக்குப் பிறகு, நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ரங்கநாத்.
“மாதவி, நீங்கள் துபாய்க்கு இதற்குமுன் போனதுண்டா?”
“ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். அப்போதுதான் நவீனைப் பார்த்தேன். காப்பி கூடச் சாப்பிட்டோம்.”
“அப்போது உங்கள் ஹேண்ட் பேக் தொலைந்துபோய் விட்டதா?” என்றாள் சாமுண்டீஸ்வரி.
“அதெப்படித் தொலையும்? நவீன் காரில் பத்திரமாக இருக்குமே” என்று சிரித்தாள் மாதவி.
“துபாயில் ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு என்னை சிபாரிசு செய்யும்படி நவீனைக் கேட்டுக்கொண்டேன். மறந்துவிடக் கூடாதே என்று என் கைப்பையை காரின் பின்சீட்டில் அவரிடம் சொல்லாமல் வைத்தேன். சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று என்னுடைய ரெஸ்யூமின் பிரிண்ட்-அவுட்டையும் அந்தப் பையில் வைத்தேன். ஆமாம், அதற்கென்ன இப்போது? அடுத்த முறை துபாய் வந்தால் பெற்றுக்கொள்கிறேன்” என்றாள் மாதவி.
நவின் அந்தப் பையைத் திறந்தான். அவள் சொன்னபடியே அவளுடைய ரெஸ்யூம் இருந்தது!
அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் நவீன். மணிகர்ணிகாவின் சந்தேகமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துவிட்டது. “மாதவி, உன் பை என்னிடம் பத்திரமாக இருக்கும். அல்லது அட்ரஸ் கொடுத்தால் கூரியரில் அனுப்பிவிடுகிறேன்” என்று புன்சிரிப்புடன் கூறினாள்.
ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
“ஆனால் அதற்கு அவசியமில்லை. நானே துபாய்க்குத்தான் வரப்போகிறேன். பாத்திமா டக்ளஸ் இன்று காலை போன் செய்தாள். அவளுடைய கம்பெனியில்தான் சி.எஃப்.ஓ.வாக நான் சேரப்போகிறேன். நவீன் சொல்லித்தான் கிடைத்திருக்கவேண்டும். அதற்காக அவருக்கு நன்றி” என்றாள் மாதவி.
உண்மையில் நவீன் எந்த சிபாரிசும் செய்யவில்லை. தானாகவே அவளுக்குக் கிடைத்த வாய்ப்பு அது. இருந்தாலும் வெறுமனே புன்னகை செய்தான். “கங்கிராஜுலேஷன்ஸ்” என்றான்.
“இன்னொன்றுக்கும் நீங்கள் கங்கிராட்ஸ் சொல்லவேண்டுமே” என்றாள் மாதவி வாயெல்லாம் சிரிப்பாக.
“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது. அவர் பஹ்ரைனில் இருக்கிறார். கல்யாணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கல்யாணம் சென்னையில்தான் நடக்கப்போகிறது.”
மணிகர்ணிகாவுக்கு அளவற்ற சந்தோஷம். இவள் மீதா சந்தேகப்பட்டோம் என்று அவளுக்கு வெட்கமாகப் போயிற்று. மாமா, மாமியைப் பார்க்கவும் அவளுக்கு மிகுந்த வெட்கமாகியது.
ரங்கநாத் உரையாடலை முடிவுக்கு கொண்டுவந்தார். “ரொம்ப நன்றி மாதவி! சென்னையில் ஏதாவது உதவி வேண்டுமானால் நீங்கள் மணிக்காவிடம் கேட்கலாம். ஏனென்றால் அவளும் இனிமேல் சென்னையில்தான் இருப்பாள்” என்றார்.
நவீனும் மணிகர்ணிகாவும் வியப்போடு பார்த்தார்கள். “சென்னையிலா?’
“ஆமாம். மணிக்கா போன வருடம் பேங்கிங் சர்வீஸ் தேர்வு எழுதியதில் செலக்ட் ஆகி, அவள் பெயர் எங்கள் பேங்கிற்கு இன்டர்வியூ லிஸ்ட்டில் வந்திருக்கிறது. 500 பேர் லிஸ்ட்டில் அவள் முதல் இருபதில் இருக்கிறாள். எனவே நிச்சயம் கிடைத்துவிடும். கொஞ்சநாள் சென்னையில்தான் இருப்பாள். நானும் ரிட்டையர் ஆனபின் சென்னைக்கே வந்து செட்டில் ஆவதாக இருக்கிறேன்” என்றார் ரங்கநாத்.
***
மயூரியின் வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவளுக்கு உடல்நலம் சரியாகிவிட்டதாகவும், அவளுடைய கணவருக்கு பெங்களூரிலேயே பதவி உயர்வு கிடைத்துவிட்டதால், சொந்தமாக ஒரு பெரிய ஃபிளாட் வாங்கப் பணம் கொடுத்திருப்பதாகவும், அவள் விரைவில் வேலையை விட்டுவிட்டு குடும்பப் பெண்ணாக செட்டில் ஆகப் போவதாகவும் தெரிந்தது.
எனவே திலகாவின் வீட்டுக்குக் கிளம்பினார் சண்முகம். அவள் அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதால், வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவள் வீடும் பூட்டியிருந்தது!
அக்கம் பக்கத்தில் யாருக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை. எனவே ஏமாற்றத்துடன் காரை எடுத்தார். அப்போது ஒரு போலீஸ் ஜீப்பிலிருந்து திலகாவின் கணவன் கிரீஷ் இறங்குவதைக் கண்டதும் காரை நிறுத்தினார்.
“வணக்கம் சார்” என்று அவசரமாகக் காரில் ஏறிக்கொண்டான் கிரீஷ். “நீங்கள்தான் சார் என்னைக் காப்பாற்றவேண்டும். திலகா எங்கு போனாள் என்று தெரியவில்லை” என்று குரல் தழுதழுக்கக் கூறினான்.
சாலையில் போக்குவரத்து அதிகம் இருந்ததால், சண்முகத்தால் அவனோடு தொடர்ந்து பேசமுடியவில்லை. “வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம்” என்று சாலையில் கவனம் வைத்தார்.
மனைவிக்கு போன் செய்து, “கிரீஷ் வருகிறார். எங்கள் ரெண்டு பேருக்கும் சாப்பாடு தயாராக வை” என்றார்.
(தொடரும்)
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா (21) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
மணிக்கா அவசரக்காரி! திலகா எப்படி?!
பதிலளிநீக்குமூன்று பகுதியும் வாசித்துவிட்டேன் சார். மணிக்கா அடுத்த பகுதியிலும் கூடக் கொஞ்சம் டக்கென்று அவசரப்பட்டுவிடுகிறாளே!
பதிலளிநீக்குஇன்னும் கடைசிப் பகுதி வர இருக்கிறது என்று தெரிகிறது. மணிக்காவுக்கு இனியும் திருமணம் முடிக்காமல் இருந்தால் அவள் இன்னும் அவசரக் குடுக்கையாகிக் கொண்டே இருப்பாள்னு டக்கென்று நிதானமாகச் சென்ற கதை இப்போது மணிக்காவுக்கு வியாழனுகூலம் வந்துவிட்டதால் கல்யாண ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே!!! அதானால் வேகமோ!!!!. கூடவே நல்ல தகவல்களும் இடையிடையே இருக்கின்றன.
கீதா
"//துபாயில் வாட்ஸப் கால் வசதி கிடையாது. ஆகவே ‘கூகுள் டுவோ’வில் வீடியோகால் ஏற்படுத்தினான் நவீன்//"
பதிலளிநீக்குகதையோடு கதையாக தங்களுடைய உலகளாவிய ஞானத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். சூப்பர் சார்.
இந்த நாடுகளில் வாட்ஸ் அப் Messages தான் அனுப்பலாம். கால் பண்ண முடியாது.
அருமை
நீக்குஎன்ன அவசரம்? பேசி சந்தேகத்தை தீர்த்துக் கொண்டிரிக்கலாமே?
பதிலளிநீக்குசுரேஷ் ராஜகோபால் - என்ன அவசரம்? பேசி சந்தேகத்தை தீர்த்துக் கொண்டிரிக்கலாமே?
பதிலளிநீக்கு