மணிகர்ணிகா (14) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)
(அமெரிக்காவில் 111 வது நாள்: 31 -7-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா (12) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி "மணிகர்ணிகா (13) இன்று வரமாட்டாள்" படிக்க இங்கே சொடுக்கவும்.
கோரமங்களாவில் தன்னுடைய நண்பி மாதவியின் வீட்டுக்கு வந்தாள் மணிகர்ணிகா. கல்லூரியில் மாதவி அவளுக்கு இரண்டு வருடம் சீனியர். இப்போது பெங்களூர் ஐஐஎம்-இல் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தாள். இறுதி செமஸ்டர் பிராஜெக்ட்டுக்கான சர்வேயில் ஈடுபட்டிருந்ததால் பாதிநேரம் வீட்டில்தான் இருப்பாள்.
“இன்று நவீன்னு ஒருத்தனை மீட் பண்ணினேன்..” என்று ஆரம்பித்தாள் மணிகர்ணிகா.
“யாருடி அவன்? எத்தனை நாளாக எனக்குத் தெரியாமல் மறைக்கிறாய்?” என்று பொறாமையோடு முறைத்தாள் மாதவி. “இந்த பெங்களூர் பசங்களை நம்பாதே! ரெண்டு மாசம் லவ் பண்ணிட்டு எச்-1 பி யில் அமெரிக்கா போய்விடுவார்கள்! இதுவரை மூன்று தரம் தோல்வியடைந்துவிட்டேன்.“
மணிகர்ணிகாவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்துவிட்டது. “லவ்வும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை…” என்று நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னாள். முழுதும் கேட்டுக்கொண்ட மாதவி ஆனந்தம் தாங்கமுடியாமல் குதித்தாள். “நீ ரொம்ப லக்கிடி! லவ் பண்றவனே ஒனக்கு வேலையும் வாங்கிக்கொடுத்து, தாலியும் கட்டப்போரான்னு சொல்லு!”
“சும்மா இருடி. எனக்கு மாமான்னு ஒருத்தர் இருக்கிறதே இன்னிக்கி வரை தெரியாது. அப்படி இருந்திருந்தா எங்க அம்மா இறந்தப்பவே வந்து என்னை டேக்-ஓவர் பண்ணியிருக்க மாட்டாரா?” என்று கூறும்போதே அவள் கண்கள் கலங்கின. முகத்தைத் துடைத்துக்கொள்ள பாத்ரூமுக்குப் போனாள்.
அப்போது மேஜையில் இருந்த அவளது மொபைல் ஒலித்தது. எண் மட்டும் தெரிந்தது. பெயர் இல்லை. புதிய ஆசாமியாக இருக்கவேண்டும். மாதவி மொபைலை எடுத்து, “வணக்கம், யார் நீங்கள்?” என்றாள்.
“மன்னிக்கவேண்டும், இது மிஸ் மணிக்கா அவர்களுடைய போன் தானே?”
“இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தங்கள் பெயர்?” என்று வேண்டுமென்றே இடக்காகப் பேசினாள் மாதவி.
“மன்னிக்கவேண்டும், என் பெயர் நவீன். நீங்கள் அவருடைய நண்பியா?”
“இருக்கலாம், இல்லாமலும் போகலாம். என்னைப் பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?”
“மீண்டும் மன்னிக்கவேண்டும், உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”
“இருக்கலாம், இல்லாமலும் போகலாம்..” என்று வாய்வந்துவிட்டது மாதவிக்கு. உடனே பல்லைக் கடித்துக்கொண்டு, “இன்னும் ஆகவில்லை, மிஸ்டர்! ஆனால் எனக்கு நீங்கள் மாப்பிள்ளை பார்க்கவேண்டாம். நானே பார்த்துக்கொள்வேன்” என்று கோபமாகக் கூறினாள்.
அவன் விடவில்லை. “ஆனால் உங்கள் நண்பிக்கு அந்த அளவுக்குத் தன்னம்பிக்கை இல்லை போலிருக்கிறதே!” என்று சிரித்தான்.
அதற்குள் பாத்ரூமிலிருந்து வந்த மணிகர்ணிகா, “யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்? உன் லவ்வரா? இரு உன் வண்டவாளத்தை எல்லாம் அவனிடம் சொல்லிவிடுகிறேன்” என்று வேகமாக மொபைலைப் பிடுங்கினாள். ஸ்பீக்கரை ஆன் செய்தாள். “இங்க பாருங்க மிஸ்டர், மாதவியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அவளை மேனேஜ் செய்வது ரொம்ப கஷ்டம். அதனால் வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று சற்றே அதிகாரத் தோரணையில் பேசினாள்.
அவள் குரல் நவீனுக்குப் புரிந்திருக்கவேண்டும். “உங்கள் அட்வைசுக்கு நன்றி மேடம். அதனால்தான் மணிக்கா என்ற பெண்ணை நான் லவ் பண்ணுவதாக இருக்கிறேன். என் செலக்ஷன் பரவாயில்லையா? அவளிடம் சொல்லி இன்று மாலை என்னைச் சந்திக்க வைப்பீர்களா?” என்று போனை வைத்துவிட்டான்.
பகீரென்றது அவளுக்கு. மணிக்காவாம் மணிக்கா! இவன்தான் எனக்குப் பெயர் வைத்தானா?
“மாதவி, நீ ஏண்டி போனை எடுத்தாய்? அவன் ஏதேதோ பேசுகிறானே! சிக்கலில் மாட்டிவிடுகிறாயே, நியாயமா?”
அவளை இறுக அணைத்துக்கொண்டாள் மாதவி. “முட்டாள், முட்டாள்! பெரியவங்க என்ன சொல்லி யிருக்காங்க தெரியுமா? நீ விரும்பறவனை விட, உன்னை விரும்பறவன் எவனோ அவனையே கட்டிக்கொள் என்று! அதனால, அவனை கப்பன் பார்க்குக்கு ஏழு மணிக்கு வரச்சொல்லி மெசேஜ் குடு. ஒருமணிநேரம் நல்லாப் படுத்துத் தூங்கு. ஃபிரெஷ்ஷா ஆயிட்டுக் கெளம்பலாம். நானும் கூட வர்றேன்.”
“ஆகட்டும்” என்றாள் மணிக்கா.
***
நவீன் ஆறரை மணிக்கே கப்பன்பார்க் வந்துவிட்டான். அங்கிருந்த நூலகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். அல்லது படிக்க முயன்று கொண்டிருந்தான். ‘கிரேக்கர் காலத்து திருமணச் சடங்குகளும் வேத கால நாகரிகமும்’ என்ற இரண்டு தலையணை அளவிலான ஒரு பழங்காலப் புத்தகம் அவன் முன்னால் திறக்கப்படாமல் கிடந்தது. லண்டனில் வெளியான புத்தகம்.
தன் நிலைமையை எண்ணியபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆரக்கிள் மென்பொருட்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தை அவன் நடத்திவந்தான். அவனுக்குக் கீழ் நாற்பது என்ஜினீயர்களும் ஜூனியர் என்ஜினீயர் என்ற பெயரில் முன்னூறு குமாஸ்தாக்களும் பணியில் இருந்தார்கள். அவர்களில் இருநூறுபேர் பெண்கள். படித்தவர்கள். இளமையானவர்கள். அழகானவர்கள். அவர்களில் ஒருத்தியை அவன் மனம் நாடினால் என்ன? மணிகர்ணிகா என்ற தன் அத்தைமகளைத்தான் மணம் முடிப்பது என்ற கட்டாயம் உண்டானது எப்படி?
தந்தையின் கடுமையான உத்தரவினால்தான் அந்த நிலை. தாயாருக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால் கணவனை எதிர்த்துப் பேசும் பாரம்பரியம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவள் அவள்.
நவீனுக்கு ஒரே ஒரு அத்தை இருந்தாள். அப்பாவின் தங்கை. நவீனின் தந்தை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது, அவருடைய தங்கை, அதாவது நவீனின் அத்தை, குடும்பத்தின் ஒப்புதல் இன்றி வேறொரு இனத்தைச் சேர்ந்த பையனைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டாள். இரண்டு தரப்பிலும் இனப்பற்று சூடாகி இனவெறியாகப் பாய்ந்து முதலில் அந்தப் பையனையும், இரண்டு வருடம் கழித்து அவளையும் பலிகொண்டது. ஆனால் அதற்குள் அவளுக்குப் பிறந்துவிட்ட பெண் குழந்தைதான் மணிகர்ணிகா.
ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் நிறுவனம் ஒன்று அவளை எடுத்து வளர்த்தது. இந்த ஆணவக் கொலைகளுக்குக் காரணமாக இருந்த மணிகர்ணிகாவின் தாத்தா, தன் இறுதிக்காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாமல் படுக்கையில் கிடக்க நேர்ந்தபோது, மனம் மாறி, தன் சொத்துக்களை எல்லாம் மணிகர்ணிகாவுக்கே எழுதி வைத்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார், தன் பேத்தியான மணிகர்ணிகாவும் பேரன் நவீனும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று!
பரந்துபட்ட இந்திய நாட்டில் மணிகர்ணிகா என்ற குழந்தையை, அவளுடைய புகைப்படம் கூட இல்லாமல் எப்படித் தேடுவது? நவீனின் தந்தை ஆன மட்டும் முயற்சி செய்து தோற்றுப் போனார். சில கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காகவே அன்றி, தன் சகோதரியின் நினைவாகவேனும் அக்குழந்தையைக் கண்டுபிடித்து அவளுக்கு நல்வாழ்க்கையைத் தரவேண்டும் என்று மனதார விரும்பினார்.
நவீனும் அதே ஞாபகத்தில் இருந்தான். அவனுக்கு அத்தையின் முகம் புகைப்படங்கள் மூலம் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டிருந்தது. அதனால் இப்போது மணிகர்ணிகா உயிரோடு இருந்தால், கல்லூரிப் படிப்பு முடித்திருந்தால் அநேகமாக அத்தையைப் போலவே தோற்றத்தில் இருக்கக்கூடும் என்று நினைத்தான். ஆகவே ஒவ்வொரு முறை நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும்போதும் விண்ணப்பிக்கும் இளம்பெண்களின் புகைப்படங்களைத் தானே எடுத்து ஆராய்வான். அவர்களது பிறந்த ஆண்டு என்ன என்று பார்ப்பான். அப்படித்தான் மணிகர்ணிகாவின் விண்ணப்பத்தைக் கையில் எடுத்தவுடனே ஷாக் அடித்தமாதிரி உணர்ந்தான். அந்த அளவுக்கு அவள் தன் அத்தையைப் போலவே இருந்தாள். பரபரப்புடன், பிறந்த ஆண்டைப் பார்த்தான். அதுவும் பொருந்தி வந்தது. தாய் தந்தையின் பெயரைப் பார்த்தான். அதுவும் பொருந்தியது. கண்டேன் சீதையை என்று ஆனந்தப் பரவசம் அடைந்தான். இண்ட்டர்வியூ தினத்தன்று வாசல்மீதே கண்வைத்துக் காத்திருந்தான். அவள் வந்த சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்துவிட்டான். கையில் வேலைக்கான ஆர்டரும் கொடுத்துவிட்டான்.
இதோ இப்போது வந்துவிடுவாள். ஒருவருக்கொருவர் இதுவரை தெரியாமல் இருந்த விஷயங்களைப் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு தன் தாய் தந்தையுடன் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம்.
மாதவியும் மணிகர்ணிகாவும் கப்பன் பார்க்கை அடைந்தபோது இரவு மணி ஏழரை. வேண்டுமென்றே தாமதமாகப் போகலாம் என்று திட்டமிட்டவள் மாதவிதான். காரணம், நவீன் எப்படி எதிர்வினை செய்கிறான் என்று பார்க்கும் ஆவல்தான்.
மணிகர்ணிகா தனியாக வருவாள், மனம் திறந்து பேசலாம் என்றிருந்த நவீனுக்கு அவளோடு ஒரு தோழியும் வருவது என்னமோ போலானது. நூலகத்திலிருந்து எழாமலேயே மணிகர்ணிகாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். "நீங்கள் வந்ததற்கு நன்றி. உங்கள் தோழி யார்? அவர்கள் முன்னிலையில் நாம் பேசுவது சரியா?"
குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை மணிகர்ணிகாவின் மொபைலில் எழுந்ததுமே சட்டென்று அதைப் பிடுங்கினாள் மாதவி. அவளே பதில் அனுப்பினாள்: "விஷயம் சரியானதாக இருந்தால் பேசலாம். தயங்க வேண்டாம். அவளால் பிரச்சினை இல்லை."
புன்முறுவலோடு அவர்களை நோக்கி நடந்தான் நவீன்.
***
இரண்டு நாட்களாக கிரீஷ் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கோபம் கருணாமூர்த்தியின் மனதில் பொங்கிக்கொண்டுவந்தது. மயூரியிடமிருந்து பல லட்சங்களை நஷ்ட ஈடாக இவனுக்கு வாங்கித்தருவதற்கு அல்லவா தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! இதுவரை அவனால் பைசா லாபமும் இல்லையே!
கிரீஷின் மொபைலுக்கு போன் செய்தார். மணி அடிக்கும் ஓசை கேட்டது. ஆனால் அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தார். மணி ஒலித்தது. ஆனால் அவன் எடுக்கவில்லை. அயோக்கியன், என்னிடமே விளையாடுகிறானா என்று விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார்.
கடைசியில் யாரோ போனை எடுக்கும் ஓசை கேட்டது. “யாருய்யா இது? விடாம போன் பண்றது? இனிமே பண்ணாதே. இது போலீஸ் ஸ்டேஷன்” என்று அந்தக் குரல் போனை அணைத்துவிட்டது.
கருணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிரீஷின் போன் போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படி வந்தது? ஒருவேளை போன் தொலைந்துபோய் போலீஸிடம் கிடைத்திருக்குமா? அல்லது ஒருவேளை அவனே விபத்தில் மாட்டிக்கொண்டானா? புரியாமல் சைபர் கிரைம் துறைக்குப் போன் செய்தார். கிரீஷின் நம்பரைக் கொடுத்து, அது எந்த இடத்தில் இருந்து பேசப்பட்டது என்று கண்டுபிடிக்கச் சொன்னார். பதில் கிடைத்தது. உடனே கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்.
கருணாவைப் பார்த்ததும் கிரீஷ் “சார், காப்பாற்றுங்கள்” என்று பதறினான். பனியன்-அண்டர்வேர் தவிர மற்றதெல்லாம் கழற்றப்பட்டிருந்தது. எஃப்ஐஆர் பதிந்துவிட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் கூறியதால் அதில் தலையிட விரும்பாமல், கிரீஷின் முகத்தைக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினார் கருணா.
பிறகு ஆஸ்பத்திரிக்குப் போன் செய்து திலகாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார். “பணம் கட்டாததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்” என்று பதில் வந்தது. “அவளுடைய கணவருக்கு போன் செய்தோம். ரெஸ்பான்ஸ் இல்லை” என்றார்கள்.
திடீரென்று எழுந்த சந்தேகத்தால் அவர், மயூரியின் பைக் இருக்குமிடத்திற்குப் போய்த் தேடினார். அங்கு வேறு சில ஸ்கூட்டர்கள் தாம் இருந்தன! கேஸ் பதிவு செய்யாததால் பைக் காணாமல் போனதற்கு போலீஸ்காரர் எவரையும் பொறுப்பாக்க முடியாது.
அவருக்கு உள்ளங்கை வியர்த்தது. போலீஸ்காரனையே ஏமாற்றுகிறானா இந்த கிரீஷ்? ஸ்டேஷனுக்குள் போய் உட்கார்ந்தார். ஒரு டம்ளர் ஐஸ்வாட்டர் குடித்தார். மின்விசிறியை முழு வேகத்தில் போடச் சொன்னார். ஒரு போலீஸ்காரரை அழைத்து, “அந்த ரெடிமேட் ஆடை நிறுவனத்துக்குப் போய் பரமேஸ்வரியை வரச் சொல்” என்றார்.
(தொடரும்)
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா (15) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
கதை இப்படிப் போகிறதா? மணிக்கா என்று சேர்மன் மட்டும் அழைப்பதாக வருமே!!! அப்போ நவீனின் அப்பாதான் அந்த சேர்மன் மணிக்காவின் மாமாவா? அதனால்தான் வங்கியிலும் சேர்ந்தாளா? அதான் துபாய்க்கு இப்போது அனுப்பியிருக்கிறாரோ!!! இந்த முடிச்சு கொஞ்சம் புரிவதுபோல இருக்கு...
பதிலளிநீக்குஆசிரியருக்குமே மணிகர்ணிகா யாரென்று தெரியாதாமே!!!!!
நல்லகாலம் மணிகர்ணிகாவின் சொத்து காரணமில்லை அவளை நவீனுக்குக் கல்யாணம் செய்ய.
கருணா வில்லன்!
கீதா
தொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குகதை நன்றாக தான் போகிறது!
பதிலளிநீக்குஅடுத்து இரு முடிச்சுகளில் ஒன்று அவிழும் போல இருக்கு!😊
முக்கிய அரட்டையை அறிவதற்கு முன் காட்சி மாறி விட்டது...!
பதிலளிநீக்குமீனாகுல்கர்னியே துணை!
பதிலளிநீக்குமயூரிகர்ணிகா கிரீஷ் கருணாதிலகாவை தொடர்கிறேன்! ஷண்முகா,,, வினோதாமாக இல்லாமல் கோபாலைக் காப்பாற்றுப்பா...
அட ராமா! இவ்வளவு பாத்திரங்களா என்னுடைய இத்தனூண்டு தொடர்கதையில்? இன்னும் சிலரைக் கொண்டுவரலாமா, அல்லது இவர்களே போதுமா? புரியவில்லையே!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிங்காரவேலன் திரைப்பட கதை மாதிரியே இருக்கிறதே தங்கள் நவீன்- மணிக்கா கதை ?
சிங்காரவேலன் திரைப்பட கதை இதோ :-
சிங்காரவேலன் தனது விதவை தாய் பார்வதியுடன் கிராமத்தில் வசித்து வருகிறார். வேலனின் தாயுடனான அவரது திருமணத்தை அவரது மைத்துனர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் எல்லா தொடர்புகளையும் உடைத்துவிட்டதாகவும் வேலனின் தந்தை மனம் உடைந்து இறந்தார். மேலும், பார்வதியின் சாபமே அவரது சகோதரர் மற்றும் மைத்துனரை ஒரு கார் விபத்தில் கொன்றது என்றும் அவர்கள் தங்கள் மகளை பார்வதியின் மகனுடன் திருமணம் செய்து வைக்க கூடாது என பாதுகாவலரிடமிருந்து ஒரு வாக்குறுதியைப் பெறுகிறார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பிரிந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க தனது சகோதரனின் மகள் சுமதியை திருமணம் செய்து கொள்வது வேலனின் கடமை என்பதை வேலனின் தாய் வெளிப்படுத்துகிறார். நான்கு வயதாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் ஒரு படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, தனது தாயின் விருப்பங்களை நிறைவேற்ற மெட்ராஸுக்கு புறப்படுகிறார்
அப்படியா? அந்தப் படத்தில் மீனா, திலகா, மயூரி எல்லாரும் வருகிறார்களா? கருணா வருகிறாரா?
நீக்குசத்யராஜ், குஷ்பு, பானுப்ரியா நடித்த " ப்ரும்மா " திரைப்படம் கூட இதே கதைதான். சிறு வயதில் தொலைந்து போன பெண் குழந்தை படத்தை கம்யூட்டரில் போட்டு வாலிப வயதில் எப்படி இருப்பாள் என்று Graphics ல் கண்டு பிடித்து துரத்தி துரத்தி காதலிப்பான் கதாநாயகன்.
பதிலளிநீக்குஅந்தக் கதையெல்லாம் நம்மிடம் செல்லாது நண்பரே! இப்படியே போனால், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூட இதைத்தான் சொன்னார் என்று கதை கட்டுவீர்கள். மகாபாரதத்திலும் இந்தக் கதை வருகிறது என்பீர்கள்.... ஆனால் ஒரு விஷயம். குஷ்புவை விட எனக்கு பானுப்ரியாவைப் பிடிக்கும்- அந்தக்காலத்தில்!
நீக்கு