சனி, ஆகஸ்ட் 06, 2022

மணிகர்ணிகா (10) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (10) இன்று   வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  107  வது நாள்:  27 -7-2022)


துபாயில் ஷெராட்டன் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டல் 


இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (7) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (8) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (9) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


துபாய் விமான நிலையத்தில் இறங்கியதும் மணிகர்ணிகாவை அழைத்துச் செல்ல 'ஷெராட்டன் - ஃபோர் பாயிண்ட்ஸ்' ஹோட்டலில் இருந்து கார் வந்திருந்தது. வெள்ளை சஃபாரியில் மலையாளி டிரைவர் அழகான தமிழில் வணக்கம் சொல்லி வரவேற்றார். 


ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்துச் சிரித்து பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேசினாள். நாற்பதாவது மாடியில் இருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் விருப்பம் உண்டா என்று கேட்டாள். நாற்பதே இருக்கட்டும் என்று தலையசைத்தாள்.


பெட்டியை உருட்டிக்கொண்டே எலிவேட்டரில் தன் அறையை அடைந்தாள் மணிகர்ணிகா. முதல் காரியமாகத் தனக்கு  வேண்டிய அளவில் ஏசியை அதிகரித்துக்கொண்டாள்.      


சென்னையில் இருந்து வெறும் நாலரை மணி நேரப் பயணம்தான் என்பதால் உடம்பில் சற்றும் களைப்பை அவள் உணரவில்லை. இருந்தாலும் வெதுவெதுப்பான நீரில் தனக்கு மிகவும் பிடித்த நறுமணமுள்ள 'பாடிவாஷ்' தடவிக்கொண்டு பொறுமையாக நீர்த்தொட்டியில் படுத்தபடி குளிக்கும் சுகத்தை உடனே அனுபவிக்கத் துடித்தாள். கதவைத் தாழிட்டாள். பெட்டியிலிருந்து அன்று அணிவதற்கேற்ற ஆடைகளை வெளியெடுத்தபின் உடுத்தியிருந்த ஆடைகளைக் களைந்தாள். குளியலறைக்குள் நுழையும்போது அவளுடைய மொபைல் அழைத்தது.


"பத்திரமாகப் போய்ச் சேர்ந்தாயா மணிக்கா?" என்று கேட்டார் சேர்மன். "ஒரு வாரத்திற்கு அறையை முன்பதிவு செய்திருக்கிறேன். போதுமில்லையா? வேண்டுமானால் எக்ஸ்டெண்ட் செய்துகொள்ளலாம். ஆனால் எப்படியும் நான்கைந்து நாட்களில் விஷயம் நிறைவேறிவிடும் என்று கருதுகிறேன். உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று போனை அணைத்தார் சேர்மன். அவளுக்கு முகம் வியர்த்தது. 


குளித்து முடித்தவள் நெற்றியில் சிறிய பொட்டு வைத்துக்கொண்டாள்.  பூப்போட்ட மைசூர் சேலை அணிந்துகொண்டாள். அதன்மேல்  ஆடம்பரமில்லாத ஓவர்கோட். இடது கையில் ஃபிட்பிட் வாட்ச்.  சமீபத்தில் வாங்கியிருந்த பியூர் லெதர் கைப்பையில் கொஞ்சம் டாலர்களும் இந்திய ரூபாய் நோட்டுகளும் கிரெடிட் கார்டும் இருந்தன.  ரூம் சர்வீசுக்கு போன் செய்து காலை உணவைப் பெற்றுக்கொண்டாள். இனி வெளியில் கிளம்ப அவள் தயார்.


ஆனால் வெளியில் போய் யாரைச் சந்திப்பது? 


இவ்வளவு பேர் நடமாடும் துபாயில் இவளுக்குத் தெரிந்த மனிதன் அவன் ஒருவன் தானே! அவன்தான் கண்ணாமூச்சி ஆடுகிறானே! போன் செய்தால் எடுப்பதில்லை. ஈமெயிலுக்கு பதில் கொடுப்பதில்லை. தன் சரியான முகவரியையும் தருவதில்லை. பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டிருக்கிறானே!


விட்டு விடுவேனா நான்?


டிவி பெட்டியின் வெற்றுத்திரையை வெறித்துப்பார்த்தாள் மணிகர்ணிகா. அதில் அவள் முகமே தெரிந்தது. 


அதுபோல ஏன் தன்னுடைய இதயத் திரையில் இவளுடைய முகத்தைக் காண மறுக்கிறான் நவீன்? 


அவனுக்காகவே தான் வாழ்வது தெரியாதா, இல்லை தெரிந்தும் தன்னை அற்பமாக மதிக்கிறானா? அல்லது தன்னை எப்படியாவது கழற்றிவிடப் பார்க்கிறானா? அது முடியுமா?


“கண்ணா, கருமை நிறக் கண்ணா” என்று மனதிற்குள் பாடிக்கொண்டாள். அந்தக் கண்ணனின் சந்நிதியில்தானே அவளுக்கு அவன் சத்தியம் செய்து கொடுத்தான், அதை அவ்வளவு எளிதில் மறந்துவிடுவானா? அந்தச் சத்தியத்தை நம்பித்தானே அவள் இன்னும் தனிமைத்தவம் இருக்கிறாள்?


அவள் மனம் பின்னோக்கிப் பாய்ந்தது.

***

     

"அமெரிக்க மென்பொருள் நிறுவனம் 'ஆரக்கிள்' தங்கள் பெங்களூர் மையத்திற்கு ஆளெடுக்கிறார்கள், விரும்புவோர் தங்கள் 'சி.வி.’ யை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்"' என்ற தகவலை 

சமூக வலைத்தளத்தில் யாரோ பதிவிட்டிருந்தார்கள். மணிகர்ணிகாவும் விண்ணப்பித்தாள்.


பட்டப்படிப்பு முடித்து சில மாதங்களே ஆகியிருந்தன. மேற்கொண்டு படிக்கலாமா என்ற நினைப்பில் இருந்தபோதுதான் மேற்படி விண்ணப்பமும் அதைத் தொடர்ந்து நடந்த நேர்காணலும் இடம்பெற்றன. 


குறிப்பிட்ட நாளில் அந்த மையத்திற்குச் சென்றவள் அதிர்ச்சி யடைந்தாள், அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து. கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி இருந்தது! 


“பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் ரொம்ப மோசம்! வேலையில் சேர்ந்த மறுநாளே வேறு கம்பெனியில் நூறு ரூபாய் அதிகம் கொடுப்பானா, பேப்பர் போடலாமா என்று பார்ப்பார்கள். அதனால் வேலையில்லாமல் இருப்பவர்கள் பாடு திண்டாட்டமாகிறது” என்று அனுதாபத்தோடு இருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள். இருவரும் இதுவரை நான்கு கம்பெனிகள் மாறிவிட்டார்களாம். (‘பேப்பர் போடுதல்’ என்ற குழூஉக்குறிக்கு ‘ராஜினாமா செய்தல்’ என்று பொருளாம்.)   


கம்பீரமான இளைஞனாக அவளைக் கடந்து போன ஒருவன், சட்டெனப் பின்வாங்கி அவளிடம் வந்தான். “ரூம் நம்பர் 3-14இல் உங்களுக்கு இண்ட்டர்வியூ” என்று மெல்லக் கூறிவிட்டு மேலே நடந்தான். 


அத்தனை பெரிய கூட்டத்தில் தனக்கு மட்டும் அவன் தகவல் சொன்னது ஏன், எப்படி என்று மணிகர்ணிகாவுக்குப் புரியவில்லை. போனாள்.


ஆனால் அந்த அறையில் அவன் இல்லை. வேறு சில இளைஞர்கள் இருந்தார்கள். அவளுடைய படிப்புச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ் மட்டும் ஒருவன் பரிசோதித்தான். கம்ப்யூட்டர் மொழிகளில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை இன்னொருவன் சோதித்தான். ‘பைத்தான்’ தெரியுமா என்றான் மூன்றாமவன். தெரியாது, ஆனால் சைத்தான் தெரியும் என்று மனதிற்குள் முனகிக்கொண்டாள். மௌனமாக இருந்தாள். அதனால் அடுத்தவன் இவளிடம் வந்து  ‘பிக் டேட்டா’ பற்றி ஏதும் கேட்கவில்லை.


அந்த நடைமுறைகளில் அரைமணிநேரம் ஆயிற்று. அப்போது காப்பி வழங்கும் ஊழியர் இரண்டு கோப்பை (ஆவி பறக்காத!) காப்பியும் ஏழெட்டு பிஸ்கட்களும் ஒரு தட்டில் ஏந்திக்கொண்டு அந்த அறையில் சுவரோடு சுவராக இருந்த ஒரு கதவைத் திறந்து உள்ளே போனார். “ப்ளீஸ் கம் இன்” என்று உள்ளிருந்து குரல் வரவே நுழைந்தாள் மணிகர்ணிகா. 


“குட் மாணிங்!” என்றான். அவனேதான்!    


மிகச் சிறிய அறை. மேஜையை ஒட்டி அவனுக்கு எதிரில் மூன்று நாற்காலிகள் இருந்தன. அருகில் அழகிய வடிவமைப்பில் ஒரு புத்தக அலமாரி. அங்கு வெள்ளைவெளேரென்று ஒவ்வொன்றும் தலையணை அளவில் கம்ப்யூட்டர் புத்தகங்கள். யாருடைய விரலும் அவற்றில் பட்ட அடையாளம் இல்லை. ஒரிஜினல் அமெரிக்கப் பிரசுரங்கள்.


“தேங்க்ஸ்” என்று மெதுவாகக் கூறிவிட்டு அமர்ந்தாள் மணிகர்ணிகா.


“காப்பி சாப்பிடுங்கள்” என்றான்.  மெதுவாக உதடுகள் உறிஞ்சும் ஓசை கேளாதபடி குடித்தாள்.


அதற்குள் அவளுடைய விண்ணப்பம் முதலியன அடங்கிய கோப்பு அவன் மேஜைக்கு வந்தது.  அதைப் படித்தபடி, “ஓ,  நீங்கள் பெங்களூர்ப் பெண் இல்லையோ?” என்றான்.


அதுதான் முகவரியிலேயே இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டாள்.


“ஏன் கேட்கிறேன் என்றால், நீங்கள் அறைக்குள் நுழைந்தவுடன் ‘ஸ்மைல்’ பண்ணவில்லை. ‘ஐ டோன்ட் ட்ரிங்க் காப்பி’ என்று பிகு பண்ணவில்லை…அதனால்தான் கேட்டேன்!" என்று சிரித்தான் அவன்.


அவளும் சிரித்தாள். “உண்மையில் எனக்கும் காப்பி பிடிக்காதுதான். அதாவது இரண்டாவது காப்பி! உங்களுக்காகத்தான் இப்போது குடித்தேன்!”


“எனக்காகவா? எனக்காகவா? அதாவது இந்த நவீன்குமார் பிடெக், எம்பிஏ-வுக்காகவா?” என்று ஆச்சரியத்தோடு எழுந்தான் நவீன். 


அவள் குழப்பம் அடைந்தாள். “அதில்லை. முதல் முதலாக ஒரு ஆபீசுக்குப் போகிறோம். மேனேஜர் காப்பி கொடுத்தால் மறுப்பது நாகரிகம் இல்லையே” என்றாள். ‘நவீன் என்ற பெயர் நவீனமாகத்தான் இருக்கிறது.’


“ஆனால் நான் மேனேஜர் இல்லையே” என்று மீண்டும் சிரித்தான்.


அவள் மேலும் குழப்பம் அடைந்தாள். 


“ஐடி கம்பெனிகளில் மேனேஜர் என்று கிடையாது. எல்லாருமே அடிப்படையில் இன்ஜினீயர்கள்தான். நானும் உங்களைப் போலவே ஒரு இன்ஜினீயர். வேலை கிடைத்தால் நீங்களும் என்னைப்போல் ஒரு இன்ஜினீயர். அவ்வளவுதான்.”


அவளுக்கு இப்போது சற்று பிடி கிடைத்தது. “அதாவது எனக்கு வேலை கிடைத்துவிடும் என்கிறீர்கள். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள். 


“நான் எப்போது சொன்னேன்? இன்னும் இண்ட்டர்வியூ ஆரம்பமே ஆகவில்லையே !” அவன் விஷமமாகச் சிரித்தான்.   

     

மணிகர்ணிகா பொய்க் கோபத்துடன் எழுந்துகொண்டாள். “சரி, நான் வெளியில் இருக்கிறேன். இண்ட்டர்வியூ ஆரம்பிக்கும்போது அழையுங்கள்” என்று வெளியேறக் கிளம்பினாள். 


அவன் ஓடிவந்து அறைக் கதவைச் சாத்தினான். “அப்படியானால் உங்களுக்கு இந்த வேலை வேண்டாமா? உங்கள் இண்ட்டர்வியூ முடிந்துவிட்டது” என்றான். 


“மன்னிக்கவேண்டும். இதை பார்த்தால்  ஒரு கம்பெனி மாதிரியே இல்லையே! உங்கள் விருப்பம்போலச் செயல்படுகிறீர்கள்! தேவையற்ற கேள்விகள் கேட்கிறீர்கள்?” என்றவள் “எனக்கு உங்களிடம் வேலை வேணடாம்” என்று கதவைத் திறந்தாள். 


அதற்குள் ஓர் இளம்பெண் -அதே ஆபீசில் வேலை பார்ப்பவளாக இருக்கவேண்டும்- கையில் அச்சடித்த  ஆறுபக்கத் தாளை எடுத்துவந்து நவீனிடம் கொடுத்தாள். அவன் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு “ஓகே கண்மணி” என்றான். அவள் ‘தேங்க்யூ’ என்று நகர்ந்தாள்.  


மணிகர்ணிகாவுக்கு வியப்பும் வேதனையுமாக இருந்தது. அவனுக்கு எவ்வளவு தைரியம்? தன் பெண்  ஊழியரைக் ‘கண்மணி’ என்று அழைக்கிறானே!  தன்னையும் அப்படித்தான் செல்லமாக அழைப்பானோ? இல்லை, நான் அதை அனுமதிக்க மாட்டேன். 


“மிஸ் மணிகர்ணிகா ! இந்தாருங்கள் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! பத்து நிமிடம் தான் டைம். படித்துவிட்டு சம்மதமானால் கையெழுத்துப் போடுங்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்று எழுந்து வெளியில் போனான் நவீன். 


அவளுக்கு நம்பவே முடியவில்லை. தன் அறிவையோ திறனையோ சோதிக்கும்  எந்தக் கேள்வியும் கேட்காமல் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுக்கிறான்? 


இருந்தாலும் படித்தாள். வழக்கமான ஐடி துறையில் சொல்லப்படும் வாசகங்கள்தான் இருந்தன. முக்கியமாக, இரண்டு வருடம் கம்பெனியில் இருப்பதாக உறுதிமொழி தரவேண்டும். அதற்கு முன் விலகினால், கம்பெனிக்கு அவர்கள் தந்த பயிற்சிக்காக இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்….  


‘உங்கள் சம்பளம் மற்றும் படிகள் பற்றிய தகவலை இணைப்பு-1இல் காணவும்’ என்று இருந்தது. ஆனால் அப்படி எந்த இணைப்பும் அந்தக் கோப்பில் இல்லை. 


சிறிது நேரம் கழித்து நவீன் வந்தான். இப்போது அவன் மேலும் கம்பீரமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. தன்  இருக்கையில் அமர்ந்தவன், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “நீங்கள் இன்னுமா இருக்கிறீர்கள்? இன்றே வேலையில் சேர்ந்துவிடுவீர்கள் என்றல்லவா நினைத்தேன்?” என்றான்.


“மன்னிக்கவேண்டும், இதில் சம்பளம் பற்றிய இணைப்பு இல்லையே!” என்றாள்.


“அப்படியா?” என்றவன், “இருங்கள், அவளை அழைக்கிறேன், ஓ.கே. கண்மணி” என்றான். அவள் வந்தாள், கையில் ஓர் அச்சிட்ட பக்கத்துடன். அதன் தலைப்பில் ‘அனெக்ஸர்-1’ என்றிருந்தது.  அப்படியானால் அவள் பெயரே 'ஓகே கண்மணி' தானா?  


மணிகர்ணிகா வாங்கிப் பார்த்தாள். இவ்வளவு சம்பளமா! என்று அவள் கண்கள் விரிந்தன. 


“பாருங்கள் மணிகர்ணிகா! சம்பளம் என்பது சீரியஸான விஷயம். அதனால் என்னை நீங்களும் உங்களை நானும் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். இதில் கொடுத்துள்ளவற்றில் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமென்றால் இப்போதே சொல்லிவிடுங்கள். இல்லாவிடில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த மாற்றமும் செய்ய வழியில்லை” என்ற நவீன், “ஆனால் ஒரு வசதி உண்டு. நீங்கள் செய்யும் வேலைக்கு இந்தச் சம்பளம் அதிகம் என்று எண்ணினால், எப்போது வேண்டுமானாலும் குறைக்கச் சொல்லி நீங்கள் மனு கொடுக்கலாம்” என்று விஷமமாக அவளை உற்று நோக்கினான். 


கண்களாலேயே அவனை இரண்டாக வெட்டிவிடுபவள்போல் பார்த்தபடி ஒப்பந்தத்தின் எல்லாப் பக்கங்களிலும் கையொப்பமிட்டாள்  மணிகர்ணிகா.


அப்போதுதான் கவனித்தாள், ஆஃபர் லெட்டரின் முடிவில் கம்பெனி அதிகாரிகள் யாரும் இன்னும்  கையொப்பம் இடவில்லை என்பதை. 

அதற்குள் அவள் எல்லாப் பக்கமும் கையெழுத்து போட்டுவிட்டாளே, என்ன அறியாமை! அதைப் புரிந்துகொண்ட நவீன் அவளைப் பார்த்துப் பரிகாசமாகப் புன்னகை செய்தான். அவளுக்கு வெட்கமாகப் போயிற்று.


“ஒரு படித்த பெண்ணிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவது இவ்வளவு சுலபம் என்று எனக்குத் தெரியாதே!” என்றான்.


கோபத்துடன் எழுந்த  மணிகர்ணிகா தான் கையெழுத்திட்ட எல்லாப் பக்கங்களையும் துண்டு துண்டாகக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டாள். பிறகு அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் விரைந்து வெளியேறினாள். நவீன் செய்வதறியாது நின்றான். 


பிறகு யாருக்கோ போன் செய்தான். “கவலைப்படாதே, நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமேலும் இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்ளாதே” என்றது   ஒரு முதிய பெண்மணியின் குரல்.

 

(தொடரும்)

      -இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து  

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (11) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


6 கருத்துகள்:

  1. நாடு விட்டு நாடு செல்கிறதே கதை..?

    பதிலளிநீக்கு
  2. எதிர்ப்பார்க்காத பல திருப்பங்கள்...

    பதிலளிநீக்கு
  3. மணிகர்ணிகாவை கதைக்குள் மீண்டும் கொண்டு வந்து விட்டீர்கள்!
    நவீனை 3 வருடம் முன் அவள் பழகிய நினைவலைகளை எதிர்பார்க்கலாம் போல இருக்கு

    பதிலளிநீக்கு
  4. முதிய பெண்மணிக்கும் மணிகர்ணிகாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் இருக்கிறதே...முடிச்சுகளும்!! புதிருமாகச் செல்கிறது. மீனாவுக்கு என்னாச்சு அப்புறம்?

    கீதா

    பதிலளிநீக்கு