செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

மணிகர்ணிகா (21) இன்று வர மாட்டாள் - தொடர்கதை


மணிகர்ணிகா (21) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  118  வது நாள்:  07-8-2022)



இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


சென்னையில் வங்கி குமாஸ்தாவாகச் சேர்ந்தாள் மணிகர்ணிகா. சேரும்போதே அது நிரந்தரமல்ல என்று அவளுக்குத் தெரியும். துபாயில் தொழிலை நிலைப்படுத்திவிட்டு நவீன் சென்னைக்கு வரும்போது அவனோடு தொழில் பங்காளியாகச் சேர்ந்துகொள்வதாகத் திட்டம். 



ஆனால் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்த வினோதமான பழக்கம் என்னவென்றால், வெளிநாட்டுக் கம்பெனிகள் தங்களுடைய பங்குதாரராக அந்த நாட்டு ஆட்சிக்குடும்ப உறுப்பினர் ஒருவரை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். நவீனின் கம்பெனிக்கு இதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் ஒருவர் அல்ல, இருவர் அதில் பங்குதாரராகச் சேர முன்வந்தபோது,  அமெரிக்கக் கம்பெனியோ ஒருவரை மட்டுமே ஏற்பதாகக் கூறினார்கள். ஒருவரை விட்டு ஒருவரை ஏற்றுக்கொண்டால் ஆட்சியாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டும். இதை எப்படிக் கையாளுவதென்று அமெரிக்கக் கம்பெனிக்குத் தெரியவில்லை. இதனால் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிலவியது.


மக்கள் தொடர்பு விஷயத்தில் மணிகர்ணிகா ஆஸ்திரேலியாவில் சிறப்பான பெயரெடுத்திருந்த காரணத்தால், திடீரென்று ஒருநாள் அவளை துபாய்க்கு அனுப்பிவைத்தார் ரங்கநாத். அவள் போவதும் திரும்பிவந்ததும் வங்கியில் யாருக்கும் தெரியாது. ராஜாவுக்கும் மாலினிக்கும் தவிர. போன வேகத்தில் அவள் சில முக்கியமானவர்களைச் சந்தித்து சில ஆலோசனைகளை நவீனுக்குக் கூறிவிட்டு வந்தாள். பிரச்சினை தீர்ந்துவிடும் போல் இருந்தது. ஆனால் முற்றிலுமாகத் தீரவில்லை. அதனால்   மீண்டும் அவள் அனுப்பப்பட்டாள். 


நவீன்-மணிகர்ணிகா திருமணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், அடிக்கடி இவள் துபாய் போவதும் வருவதும் ரங்கநாத்மீது தேவையற்ற பழிவரக்  காரணமாகிவிட்டது. துபாய் வேலை திருப்திகரமாக முடியாததால் இப்போதைக்குத் தான் சென்னை வர இயலாது என்று நவீன் கூறிவிட்டான். 


ரங்கநாத் தன்  பதவிக்குரிய செல்வாக்கைப் பயன்படுத்தியதில், நவீனின் கம்பெனியில் சேர முன்வந்த இரு ஷேக்குகளில் ஒருவர்      

துபாய் கம்பெனியிலும், இன்னொருவர், விஜயவாடாவில் நவீன் ஆரம்பிக்கவுள்ள கம்பெனியிலுமாக இணைவது என்று முடிவுசெய்யப்பட்டது. அந்த இரண்டாவது ஷேக்குக்கு இதில் கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் துபாய் கம்பெனியை விட, விஜயவாடாக் கம்பெனியின் நிர்வாகப் பரப்பு பெரியதாக இருக்கும் என்பதுதான். 


எல்லாம் நல்லபடியாக முடிந்து முத்தரப்பு - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வேளையில் புதிய சிக்கல் ஏற்பட்டுவிட்டது. வேலைப்பளுவின் காரணமாகவோ உடல் நலமில்லாமல் போனதாலோ தெரியவில்லை, நவீன் மணிகர்ணிகாவுக்குப் போன் செய்தே பலநாட்களாகிவிட்டன. மத்தியக் கிழக்கின் வேறு சில நாடுகளுக்கும் அடிக்கடி அவன் பயணம் செய்யவேண்டி இருந்தது.  வேண்டுமென்று செய்தானா என்று தெரியாது, அவனுடைய அன்றாட நடவடிக்கை என்ன என்பதே இவளுக்குத் தெரியாமல் போனது. 


ஏற்கெனவே மாதவியின் கைப்பை உண்டாக்கிய மன உளைச்சல் மறையாத நிலையில், இப்போது மாதவி துபாயிலேயே நிலையாகத் தங்கி வேலைசெய்வதால் மணிகர்ணிகாவின் மனதிற்குள் ஏற்பட்ட பழைய சந்தேகம் அவ்வப்பொழுது முளைவிட்டுக் கொண்டே இருந்தது. மாதவியின் திருமணத் தேதி இன்னும் குறிக்கப்படாததும் அவளை வேதனைப் படுத்தியது. 


ஆகவே தான் தன் மாமாவிடம் பேசிவிட்டு, வங்கி வேலையை விட்டுவிடுவதென்று தீர்மானித்தாள். ஆனால் சாமுண்டீஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை. நவீன் இந்தியா திரும்பியவுடன் வேலையை விட்டால்போதும் என்பது அவர் கருத்து. இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் என்ன ஆகிவிடும் என்றார் அவர். ஆகவே வங்கியில் ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடுவிடம் மட்டும் தெரிவித்துவிட்டு துபாய் கிளம்பினாள் மணிகர்ணிகா. 


ஓட்டல் அறையில் வந்து சேர்ந்தவுடன் நவீனுக்குச் செய்தி அனுப்பினாள். பதில் இல்லை. வேறு வழியின்றி மாதவிக்கும் செய்தி அனுப்பினாள். ‘சாரி, ஐ ஆம் பிஸி’ என்ற பதில் மட்டும் வந்தது. என்ன அகம்பாவம் என்று ஆத்திரம் ஏற்பட்டது மணிகர்ணிகாவுக்கு. உடனே தன்  மாமியோடு பேசினாள். நவீன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று அழுதாள். அவர் வழக்கம்போல் பொறுமையைப் போதித்தார்!


தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு, கண்ணீருடன் படுத்த மணிகர்ணிகா, சற்று நேரத்தில் உறங்கிப்போனாள்.

*** 

சுமார் ஒருமணி நேரம் ஆனபிறகு அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்தாள் மணிகர்ணிகா.


ஓட்டல் மேனேஜர் வணக்கம் சொன்னார். “மேடம், உங்களை ஏழாவது தளத்தில் இருக்கும் கன்வென்ஷன் ஹாலுக்கு வரும்படி மிஸ்டர் நவீன் அழைக்கிறார்” என்று ஓர் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.


அது மாதவியின் நிச்சயதார்த்த வரவேற்பிதழ்! 


ஓஹோ, அவளுடைய திருமணத்தை முடித்துவைக்கத்தான் இவருடைய நேரமெல்லாம் செலவாகிக் கொண்டிருக்கிறதோ? மனைவியை விட அவள் முக்கியமாகிவிட்டாளோ? 


அடுத்த நிமிடம், எல்லாவற்றிற்கும் தான் தானே காரணம் என்பது உறைத்தது. மூன்று வருடம் திருமண அறிவிப்பை ஒத்திவைத்தது எப்படிப்பட்ட  முட்டாள்தனம்! 


திடீரென்று அவளுக்கு ஓர் யோசனை உதித்தது. தன் மாமா, மாமியிடம் பேசினாள். மாதவியின் திருமணத்தை அறிவிக்கும் அதே மேடையில் தனக்கும் நவீனுக்கும் நடந்துவிட்ட திருமணத்தையும் அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். 


“ஆனால், அதற்கு முன்பு, நவீன் எதற்காக இப்படித் தகவல் சொல்லாமல், பல நாட்களாக என்னுடன் பேசாமல் இருந்தார் என்பதற்கு சரியான விளக்கம் சொல்லவேண்டும்” என்று நிபந்தனை விதித்தாள். 


அடுத்த நிமிடம் அவளுடைய மொபைலில் ஒரு செய்தி வந்தது. “முட்டாள்” என்று தமிழில் இருந்தது!


“மேடம் மணிக்கா அவர்களே! ஒரு லேடிஸ் ஹேண்ட் பேக் காரில் இருந்ததற்காகச் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா திரும்பிவிடும் வீராப்பு உங்களுக்கு இருந்தால், அப்படிப்பட்ட நியாயமற்ற குற்றச்சாட்டுக்குப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற வீராவேசம் என்னிடம் இருக்காதா?” என்றது அந்தச் செய்தி.


மணிகர்ணிகாவுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது. அவள் மனதில் இருந்த குற்ற உணர்வு முழுதுமாக நீங்கிவிட்டது. நவீனால் கூட இப்படி விளையாட்டுக் காட்ட முடியும் என்பது அவளுக்குப் புதுமையாக இருந்தாலும் பிடித்தமானதாகவே இருந்தது.


வேகமாக உடை மாற்றிக்கொண்டு கன்வென்ஷன் ஹாலில் நுழைந்தவளை, “வாம்மா மணிக்கா” என்று வரவேற்றது வேறு யாருமில்லை, ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் தாம்!  அட, இவர்களும் நவீனுடன் சேர்ந்து தான் என்னோடு கண்ணாமூச்சி ஆடினார்களா என்று கோபமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை வீசினாள் மணிக்கா.


“அப்படிப் பார்க்காதேம்மா, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாம் உன் கணவனோட ஏற்பாடு. திடீரென்று கிளம்பி வா என்று நேற்று போன் செய்தான். வந்துவிட்டோம்” என்றார்கள் இருவரும்.

  

மாதவி ஓடிவந்து கட்டிக்கொண்டாள். “எல்லாம் திடீரென்று முடிவாகியது மணிக்கா! இப்போதைக்கு இந்தியா போக முடியும்போல் தோன்றவில்லை. ஆகவே இங்கேயே திருமணத்தை அறிவித்துவிடலாம் என்று அவர் சொன்னார்..” என்று வெட்கப்பட்டாள் மாதவி. தனக்குக்  கணவராக வரப்போகிறவரை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.      


மாதவி- பிரசாத் திருமண அறிவிப்பைத் தொடர்ந்து, மணிகர்ணிகா- நவீன் திருமணமும் அதே மேடையில் அறிவிக்கப்பட்டது. பல அமெரிக்க நிறுவனங்களும் துபாயின் பங்காளி நிறுவனங்களும் தங்கள் உயர் அதிகாரிகளை அனுப்பி அவர்களைக் கௌரவித்தன. 


ஒரு வார இன்பச் சுற்றுலாவுக்குப் பின் நவீன் குடும்பம் சென்னை திரும்பியது. தன்  ராஜினாமாக் கடிதத்தை மாலினியிடம் சமர்ப்பித்தாள் மணிகர்ணிகா. “உன் கவலை தீர்ந்துவிட்டது. எனக்கு ஒருவன் எப்போது வருவானோ தெரியவில்லை” என்று அலுத்துக்கொண்டாள் மாலினி.    

***

அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன திலகாவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கணவன் கிரீஷின் மொபைலுக்குப் பலமுறை தொடர்புகொண்டாள். அவன் எடுத்தால் தானே! அவளுக்கு இருந்த ஒரே உயிர்த்தோழி, மயூரிதான். அவளையும் தன்னிடமிருந்து பிரித்துவிட்டானே கிரீஷ்!  


இருபது லட்சம் நஷ்ட ஈடு அவளிடமிருந்து வாங்கித் தருவதாகவும் அதுவரை அப்போலோவில் தான் இருக்கவேண்டுமென்றும் அந்தப் போலீஸ் அதிகாரி கிரீஷை வசியம்செய்து விட்டாரே! தினமும் இரண்டுதரம் போன் செய்பவர், இப்போது போன் செய்தாலும் எடுக்க மறுக்கிறாரே! 


கிரீஷுக்கு என்னதான் ஆகியிருக்கும்? ஒருவேளை உடல்நலம் இல்லாமல் வீட்டில் கிடக்கிறானோ? கையில் செலவுக்குப் பணம் இருக்குமா என்றும் தெரியவில்லை. வயிற்றில் குழந்தைவேறு அவ்வப்பொழுது ஏதோ செய்துகொண்டிருந்தது. அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தான் ஒரு வங்கி ஊழியர் என்பதால், மருத்துவச் செலவுக்கு வங்கியில் இருந்து உரிய தொகை தரப்படும் என்று அவள் உறுதிமொழி எழுதிக்கொடுத்த பிறகே அவளை வெளியே விட்டார்கள். இப்போது எங்கு போவது?


அப்போது அவள் எதிர்பார்த்த போன் வந்தது. கருணாமூர்த்தியிடம் இருந்து. “திலகாம்மா, கிரீஷ் எங்கம்மா போனார்? ரெண்டு நாளா நான் தவிக்கிறேன். ஒருவேளை எனக்குத் தெரியாம மயூரியோடு சமாதானமா போகலாம்னு இருக்காறா? அதுல எந்தப் பயனுமில்ல. ஆஸ்பத்திரிக்குக் கட்டச்சொல்லி என்கிட்ட வாங்கின பணத்தை  என்ன பண்ணினார்?” என்றார் கருணா. 


“என்ன, ஒங்க கிட்டப் பணம் வாங்கினாரா? எவ்வளவு?”


“மூணு லட்சம் குடுத்திருக்கேன் மா! இப்ப எங்க இருக்கார் அவர்? நீங்க என்கிட்ட கேக்காம ஆஸ்பத்திரிலே இருந்து டிஸ்சார்ஜ் ஆனதே பெரிய தப்பு. இதனால நஷ்ட ஈடு அமெளண்ட் கொறஞ்சிடுமே மா!”


இவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று குழம்பினாள் திலகா. மூன்று லட்சம் கையில் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்குக் கட்டியிருப்பானே கிரீஷ்! திலகாவுக்காக இல்லாவிட்டாலும் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது செய்திருப்பானே! இப்போது எங்கு போனான்?

(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (22) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


5 கருத்துகள்:

  1. அடுத்த ஜோடியின் குழப்பங்கள் ஆரம்பமா?

    பதிலளிநீக்கு
  2. என்னமோ செங்கல்பட்டுக்கு பஸ் புடிச்சு போற மாதிரி துபாய்க்கு போறாளே மணிகர்ணிகா.?

    ரங்கநாத்தும், சாமுண்டியும், மணிகர்ணிகாவுக்கு சொல்லாமல் துபாய் வந்துது மிக மிக தவறு. How she would have confidence on their in-laws .?

    பதிலளிநீக்கு
  3. // மேடம் மணிக்கா அவர்களே! ஒரு லேடிஸ் ஹேண்ட் பேக் காரில் இருந்ததற்காகச் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா திரும்பிவிடும் வீராப்பு உங்களுக்கு இருந்தால், அப்படிப்பட்ட நியாயமற்ற குற்றச்சாட்டுக்குப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற வீராவேசம் என்னிடம் இருக்காதா?” என்றது அந்தச் செய்தி.//
    இதெல்லாம் ரொம்ப ஒவரா தெரியல?
    காதலி என்ன தவறு செய்தாலும் மன்னித்து, மறப்பதுதான் காதல் இலக்கணம்.

    பதிலளிநீக்கு
  4. பல வித ட்விஸ்டுக்கள்

    பதிலளிநீக்கு