(அமெரிக்காவில் 108 வது நாள்: 28 -7-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இரண்டு லட்சம் உடனே தரவேண்டும் என்று கிரீஷ் போனில் கேட்டபோது மயூரிக்கு என்ன சொல்வதென்றே வார்த்தைகள் வரவில்லை. முகம் இருண்டு போனது. கணவரிடம் பேசவும் அவளுக்கு மிகுந்த அச்சமாக இருந்தது. ‘உன்னை யார் பைக்கை எடுக்கச் சொன்னது’ என்று எரிந்து விழுவார். அடுத்தவர்களுக்கு உதவி செய்யத்தான் உன்னைக் கடவுள் படைத்தானா என்று எதிர்க் கேள்வி போடுவார்.
பெங்களூர் சட்டமன்றக் கட்டிடம் |
அவளுடைய வக்கீல் நாராயணன் போனை அவளிடமிருந்து வாங்கினார். கிரீஷ் மேலும் பேசிக்கொண்டே போனான்.
“எனக்கு என்னுடைய குழந்தை பத்திரமாக வெளியில் வரவேண்டும் என்பதுதான் முக்கியம். அதனால்தான் திலகாவை அப்போலோவில் சேர்த்தேன். எல்லாம் உங்களால் தான். எனக்குத் தெரியாமல் நீங்கள் ஏன் திலகாவை பைக்கில் அழைத்துக்கொண்டு போனீர்கள்? போனதுதான் போனீர்கள், வண்டியைப் பார்த்து ஓட்ட வேண்டியதுதானே? உடனே இரண்டு லட்சம் கட்டாவிட்டால் திலகாவைப் பாதியிலேயே டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்களே, நான் என்ன செய்வேன்” என்று புலம்பினான்.
நாராயணன் அவன் சொன்னதை அமைதியாகக் கேட்ட பின் கூறினார்: “மிஸ்டர் கிரீஷ்! நீங்கள் ஒரு ஆண்! இப்படிப் பெண்பிள்ளை மாதிரி புலம்புவது சரியில்லை. அன்று காலையில் திலகாதான் மயூரி வீட்டுக்குவந்து தன்னை டாக்டரிடம் அழைத்துப் போகுமாறு சொன்னார் என்பதற்கு என்னிடம் சாட்சியம் இருக்கிறது. பக்கத்து வீட்டில் கோலம் போட்டுக்கொண்டிருந்த ஒரு அம்மாள் என்னிடம் எழுத்துமூலம் சொல்லியிருக்கிறார். நீங்கள் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் இந்த ஒரு சாட்சியம் உங்களைக் கவிழ்த்துவிடும் என்பது நினைவில் இருக்கட்டும்…”
கிரீஷ் இப்போது கொஞ்சம் அடங்கினான். “சார், என் நிலைமையை எண்ணிப் பாருங்கள். தொழிலை இழந்து வேலையும் இல்லாமல் இருக்கிறேன். திலகாவின் சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அவளும் ஆறுமாதம் சம்பளமில்லாமல் படுத்துவிட்டால் நான் என்ன செய்வேன்? எல்லாவற்றுக்கும் மயூரி இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டியைப் பயனப்டுத்தியதுதானே காரணம்? அதற்கு அவர்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும். தயவுசெய்து உடனடியாக இரண்டு லட்சத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டு ஆஸ்பத்திரிக்கு வாருங்கள். இல்லாவிட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது” என்று போனை அணைத்துவிட்டான்.
இத்தனைக்கு இடையிலும் திலகாமீது மயூரிக்குக் கோபமே வரவில்லை. பரிதாபமே ஏற்பட்டது. பொறுப்பற்ற கணவனால் அவள் பட்டது போதாதென்று இப்போது அவளுடைய நிலைமையை மூலதனமாக்கி லாபம் அடையத் திட்டமிடுகிறான், அயோக்கியன்! இவனுடைய கடன்களுக்காகத்தானே அன்று ஒரு லட்சம் திலகாவுக்குக் கடனாகக் கொடுத்தாள் மயூரி! அந்த நன்றி கூட இல்லையே!
“கூட இருந்து பணியாற்றும் தோழி என்றுகூடப் பாராமல் கிரீஷ் இப்படி அயோக்கியத்தனம் செய்வது கடவுளுக்கே அடுக்காது”
என்று கண்ணீர் விட்டாள் மயூரி.
“ஆனால் கடவுள் நமக்கல்லவா இப்போது தண்டனை கொடுக்கப் பார்க்கிறார்” என்று நாராயணன் நிலைமையின் கடுமையைக் குறைக்க முயன்றார்.
“இப்போதைக்கு நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம், மயூரி! போலீஸ் நம் மீது கேஸ் பதிவுசெய்துவிட்டால் நமக்கு நல்லது, வாதாடி எப்படியும் விபத்துக்கு காரணம் அந்தத் தண்ணீர் லாரிதான் என்பதை வைத்து நாம் ஜெயித்துவிடலாம். ஆனால், போலீஸ் அந்த விபத்தில் ஒரு லாரி சம்பந்தப்பட்டதாக இதுவரை எழுத்தில் கொண்டுவரவில்லை. நீங்கள் வண்டி ஓட்டும்போது ஏற்பட்ட தவறும் கவனக்குறைவும்தான் விபத்துக்குக் காரணம் என்று பதிவுசெய்திருக்கிறார்கள்.”
“ஆனால் திலகாவுக்குத் தெரியுமே! அவளிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கினால் போதாதா?”
விரக்தியோடு சிரித்தார் நாராயணன். “ஒண்ணும் தெரியாத பெண்ணாக இருக்கிறாயே அம்மா! போலீஸ் யாருக்கு உதவி செய்யும்? வசதியும் பணபலமும் உள்ளவர்களுக்குத்தானே! தண்ணீர் லாரி ஆளும்கட்சிக்காரனுடையது. அவன் போலீசை நன்கு கவனித்திருக்க வேண்டும், அல்லது உயர் அதிகாரிகளைக் கொண்டு மிரட்டி இருக்கவேண்டும். திலகாவிடமிருந்து போலீஸ் ஏற்கெனவே ஸ்டேட்மெண்ட் வாங்கி ஆயிற்று. அவள் என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா?”
என்ன என்று ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்தாள் மயூரி.
“நீங்கள் ஓட்டிய பைக், சரியான கண்டிஷனில் இல்லையாம். வீட்டிலிருந்து டாக்டரிடம் போகும்போதே வண்டியில் கடாமுடா என்று இரைச்சல் வந்ததாம். சனிக்கிழமைதான் மெக்கானிக்கிடம் கொடுக்கவேண்டும் என்று சொன்னீர்களாம். டாக்டரிடம் வேலை முடிந்து வெளியில் வந்தபோது அவள் ஆட்டோவில் போய்விடுவதாகச் சொன்னாளாம். நீங்கள்தான் விடவில்லையாம். வண்டியில் பெரிய பிராப்ளம் ஏதுமில்லை, பயமில்லாமல் வா என்று வற்புறுத்தி பைக்கில் ஏற்றிக்கொண்டீர்களாம். பாதையைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே வந்தீர்களாம். ஒரு திருப்பத்தில் திடீரென்று வண்டி தார் ரோட்டிலிருந்து சரிந்து விழுவதைக் கண்டாளாம். அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியாது” என்று திலகாவிடம் எழுதி வாங்கியிருக்கிறார்கள் - என்றார் வக்கீல்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சி யடைந்தாள் மயூரி. இப்படியும் நன்றி இல்லாமல் ஒரு பெண் இருப்பாளா! எவ்வளவு நாள் இதே வண்டியில் அவளுக்குக் காலையும் மாலையும் லிஃப்ட் கொடுத்திருப்பேன்! என் பெயரில் லோன் போட்டு அவளுக்கு உதவினேன்! இப்படியா தன்மீது குற்றத்தைச் சுமத்துவது?
“அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் போலீஸ் செய்யும் வேலை அம்மா! இந்த சிஸ்டத்தில்தான் நாமெல்லாம் சிக்கிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறோம்” என்ற நாராயணன், “உடனே அந்த இரண்டு லட்சத்தை ஏற்பாடுசெய்துகொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்வரலாம். அங்கு அவளிடம் உண்மையில் என்ன நடந்தது என்று ஸ்டேட்மெண்ட் வாங்கி அதில் கிரீஷின் சாட்சிக் கையெழுத்தையும் வாங்கிவிடலாம். அதுதான் ஒரேவழி” என்றார். பிறகு “தண்ணீர் லாரியின் விவரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஏரியாவில் இருக்கும் ஏதாவது சிசி டிவியில் விபத்து பதிவான காட்சிகள் இருக்குமா என்று கண்டுபிடித்து, நாமாக அவர்கள்மீது வழக்குப் பதியலாம். அதை என்னிடம் விட்டுவிடுங்கள். திலகாவின் மருத்துவச் செலவுக்கு ஆகும் பணத்தை அவர்களிடம் நஷ்டஈடாக வசூலித்துவிடலாம்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
அப்போது வாசலில் மீனா குல்கர்னியின் கார் வந்து நின்றது. தோழியைக் கண்டதும் தன் மனக்குமுறலை வெளிக்காட்டிக் கதறிக் கதறி அழுதாள் மயூரி. அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டு, “நான் எதற்கு இருக்கிறேன் மயூரி? இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம், கவலைப்படாதே. உனக்கு இரண்டு லட்சம் வேண்டும் அவ்வளவுதானே! நான் கொடுக்கிறேன். ஆனால் அவன் மேலும் மேலும் உன்னிடம் பணம் கறக்கலாம் என்று சதி செய்தால் என்ன செய்வது? அதனால் கொடுக்காமல் விடுவதுதான் சரி. என்னதான் செய்வான் பார்த்துவிடலாம். என் கணவரிடமும் பேசுகிறேன்” என்றாள் மீனா. பேசினாள். குல்கர்னியும் பணம் தரவேண்டாம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
“நாம் ஏன் அப்போலோவிற்குப் போய் திலகாவைப் பார்த்து நிலைமையைத் தெரிந்துகொள்ளக் கூடாது? அது சரி, உன் கணவர் எங்கே? இந்த நிலைமையில் நீ தனியாக ஏன் தவிக்கவேண்டும்?”
“நான் தான் அவரை சென்னைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். வந்தால் அவரைக் கைதுசெய்வதாக போலீஸ் கூறியிருக்கிறதே! அவருடைய எதிர்காலமே வீணாகிவிடுமே” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள் மயூரி.
“சரி, எனக்குப் பசிக்கிறது. ஏதாவது செய். சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய்வரலாம்” என்றாள் மீனா.
***
அந்த ஆஸ்பத்திரியில் சில வருடங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த ஓர் அரசியல் பெண்மணியின் சிகிச்சையைப் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அதனால் பெரிதும் சிக்கலுக்குள்ளான ஆஸ்பத்திரி நிர்வாகம், முன்னெச்சரிக்கையாக எல்லா முக்கிய இடங்களிலும் சிசிடிவிகளை நிறுவியிருந்தது. எந்த டாக்டரோ நர்ஸோ அல்லது விசிட்டர்களோ அறைக்குள் வந்தாலும் பேசினாலும் முழுமையாகப் பதிவாகிவிடும்.
மீனா தன் கணவர்மூலம் ஆஸ்பத்திரியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரியோடு பேசினாள். திலகா அட்மிட் ஆனதுமுதல் பதிவான காட்சிகளை அந்த அதிகாரியின் அறையிலிருந்து அவளால் பார்க்கமுடிந்தது. மயூரியும் பார்த்தாள்.
போலீஸ் அதிகாரி கருணா அறைக்குள் வந்து திலகாவிடம் பேசுவது, அவளிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்குவது, கிரீஷிடம் திலகா முன்னிலையில் ஒரு கவரில் பணம் கொடுப்பது எல்லாம் பதிவாகியிருந்தது. மீனாவுக்குப் புரிந்துவிட்டது. லாரி ஓனரிடம் பணம் வாங்கி கிரீஷிடம் கொடுத்துவிட்டு, விபத்தில் லாரியை சம்பந்தப்படாத மாதிரி எழுதிவாங்கியிருக்கிறார்கள் போலும்!
திலகா ஒன்றும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. ‘இன்சூரன்ஸ் க்ளெய்ம் பண்ணுவதற்காக இப்படித்தான் நாங்கள் டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னாலும் கிளம்பாமல் அடம் பிடிப்பவர்கள் உண்டு. இந்த கேசும் அப்படித்தான் தெரிகிறது” என்றார் அதிகாரி. அவர் குல்கர்னிக்குத் தெரிந்தவராம்.
அந்த சிசிடிவி பதிவில் தங்கள் தொழிற்சங்கத் தலைவரும் இருப்பது மயூரிக்கு வியப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல அவர் பேசியதை முழுமையாக அவளால் கேட்க முடிந்தது.
“திலகா, என்ன நடந்தாலும் நீங்கள் உறுதியாக இருங்கள். தவறு முழுவதும் மயூரியின் மீதே என்று கடைசிவரையில் சொல்லுங்கள். தொழிற்சங்கம் உங்களுக்கு முழு ஆதரவு தரும். அத்துடன், உங்களுக்கு மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மென்ட் 100% கிடைக்க நாங்கள் ஹெச் ஆரில் ஏற்பாடு செய்கிறோம். எப்படியும் அவளிடமிருந்து இருபது லட்சமாவது காம்பன்சேஷன் வாங்கியே ஆகவேண்டும். அதற்கு நாங்கள் உத்தரவாதம். அதுதான் இவளைப் போன்ற கருங்காலிகளுக்குச் சரியான தண்டனை!”
மயூரிக்கு அந்த ஏசி குளிரிலும் வியர்த்தது. அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
மீனாவால் பொறுக்கமுடியவில்லை. “நம்ப தொழிற்சங்கமா இப்படி மோசமாக நடந்துகொள்கிறது?” என்று திகைத்தாள்.
மயூரி பெங்களூரில் இருந்தபோது நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தாள். பெங்களூரில் வங்கிக்கு நிறையக் கிளைகள் இருந்ததால், அந்தச் சங்கத்திற்கும் நிறைய உறுப்பினர்கள் இருந்தார்கள். அதன் காரணமாக, நாடு முழுதும் மெஜாரிட்டியாக இருந்த, ஓர் இடதுசாரி தொழிற்சங்கம், பெங்களூர் மண்டலத்தில் மட்டும் மைனாரிட்டி யூனியனாக வலுவிழந்தது. அதனால் ஸ்டிரைக் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் அந்த ஒரு மண்டலத்தில் மட்டும் அவர்களால் எண்ணியதை நிகழ்த்த முடியவில்லை.
அதன் காரணமாக, போட்டிச் சங்கத்து உறுப்பினர்களைத் தனித்தனியாகக் குறிவைத்து அவர்கள் நடத்தைமீது பழிசொல்வதும், வாடிக்கையாளர்களின் உதவியோடு புகார் எழுதிவாங்குவதும் என்று பல மோசடிச் செயல்களில் அந்தச் சங்கத்தின் தலைவர்கள் ஈடுபட்டுவந்தனர். போட்டிச் சங்கத்து உறுப்பினர்களுக்கு புரொமோஷன் வந்தால் அதை வேண்டுமென்றே எதிர்த்து வழக்குப் போடுவதும் உண்டு.
என்ன செய்தும் அந்தப் போட்டிச் சங்கத்து உறுப்பினர்கள் உறுதியோடு நின்றதால் இந்த மெஜாரிட்டி தொழிற்சங்கம் வெற்றி பெற முடியவில்லை. எனவே, அந்த உறுப்பினர்களைத் தனித்தனியாக மிரட்டுவது வழக்கத்தில் இருந்தது. தங்கள் சங்கத்தில் சேர்ந்துவிடுமாறும், சேர்ந்தால் அவர்கள் கேட்ட ஊருக்கு இடமாறுதல் வாங்கித் தருவதாகவும் கூறுவதுண்டு. ஆனால் மயூரி தன்னுடைய தொழிற்சங்கத்திலிருந்து விலகமுடியாது என்று மறுத்துவிட்டாள். பாவிகள், இப்போது திலகா மூலம் தனக்குத் தண்டனை கொடுக்க எண்ணுகிறார்கள்!
நடந்த விஷயத்தைக் கணவரிடம் கூறினாள் மீனா. இன்னும் கொஞ்ச நாள் மயூரியின் கணவன் சென்னைக்கு வராமல் இருக்கட்டும் என்பதே அவருடைய கருத்தாகவும் இருந்தது. “டிஐஜி-இடம் பேசி இந்தப் பிரச்சினையை எப்படியாவது தீர்த்து வைக்கிறேன்” என்று மயூரிக்கு வாக்களித்தார் குல்கர்னி.
(தொடரும்)
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா (12) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
பணம் என்னவெல்லாம் செய்கிறது...!
பதிலளிநீக்குமயூரி போல விழுந்தடித்து உதவி செய்பவர்கள் சில உதவாக்கரை மனிதர்கள் கண்ணோட்டத்தில் இளிச்சவாயர்களாக தோன்றுகிறார்கள். என்ன செய்வது?
பதிலளிநீக்குதொழிற்சங்கவாதிகள் இப்படித்தான். பாவம் மயூரி.
பதிலளிநீக்குதங்களுடைய கதையில் அப்போலோ ஆஸ்பத்திரியையும் கொண்டு வந்து தங்களுடைய கதையை நிஜமாக நடந்தது போலவே ஆக்கிவிட்டீர்கள்.
தங்களுடைய எழுதும் திறைமைக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்க்கு
திரைக்கதை - வசனம் எழுதி இருக்கலாம்.
அப்படி ஒரு யோசனை ஏன் அவருக்கு வரவில்லை?
நீக்குபிரமிப்பாக இருக்கு
பதிலளிநீக்கு