மணிகர்ணிகா (19) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)
(அமெரிக்காவில் 116 வது நாள்: 05 -8-2022)
இதன் முதல் பகுதி -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
இதன் முந்தைய பகுதி -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
மயூரியும் திலகாவும் பைக் விபத்தில் சிக்கியதால் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் அந்த வங்கியின் கிளை மேலாளர் சண்முகம்தான். இருக்கும் ஆறு கிளார்க்குகளில் இரண்டு பேர் இப்படி நீண்டநாள் மெடிக்கல் லீவில் போனால் கவுண்ட்டர்களை நிர்வகிப்பது எப்படி?
சென்னை விமான நிலையம் |
வங்கி அமைந்த இடம், வணிகம் அல்லாத குடியிருப்புப் பகுதி என்பதால், நேரில் வரும் வாடிக்கையாளர்களில் அதிகம் பேர் பெண்களும் வயதானவர்களுமே இருந்தனர். வங்கியில் செலவழிப்பதற்கு அவர்களுக்குப் போதுமான நேரம் இருந்தது. எனவே காலி நாற்காலிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு சேவை வழங்கமுடியாது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகும்போல் இருந்ததால், சண்முகம், தனது ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடுவுக்குப் போன் செய்தார். பொறுமையாகக் கேட்டுக்கொண்ட நாயுடு, “எதற்கும் மாலினியிடம் பேசுங்கள், சர்ப்ளஸ் ஸ்டாஃப் எந்த பிராஞ்சில் இருந்தாலும் கொடுக்கச் சொல்கிறேன்” என்று போனை வைத்துவிட்டார்.
இது வழக்கமாக ரீஜினல் ஆபீசில் மேற்கொள்ளப்படும் ‘பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் உத்தி’ என்பது சண்முகத்துக்குத் தெரியாதா? எனவே, நாயுடுவின் பர்சனல் லைனுக்குப் போனில் வந்தார்.
சண்முகம் அப்படிச் செய்வார் என்று நாயுடுவுக்கு மட்டும் தெரியாதா என்ன? அவரும் பல்வேறு கிளைகளில் மேலாளராக இருந்தவர் தானே! “என்னங்க ரீஜினல் மேனேஜர் சார்! ஸ்டாஃப் ஷார்ட்டேஜா?” என்று சிரித்தார்.
“வணக்கம் சார்! உங்களால் சிரிக்க முடியும்! ஏனென்றால் அங்கே கவுண்ட்டர் கிடையாது, கஸ்டமர்களும் வரமாட்டார்கள்….” என்று சோகமாகச் சிரித்தார் சண்முகம். “எப்போது விஜயவாடா போகிறீர்கள்? நான் எப்போது உங்கள் நாற்காலிக்கு வருவது? அப்படியாவது இந்த ஸ்டாஃப் ஷார்ட்டேஜ் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்காதா என்று பார்க்கிறேன்.”
“மாலினி, மாலினி” என்று நாயுடு அழைப்பது சண்முகத்துக்கு கேட்டது. அவள் வந்ததும், “மாலினி, உங்க எதிர்கால ரீஜினல் மேனேஜர் ரொம்பக் கோவமா இருக்கார். ஸ்பெஷல் கேஸாக அவருக்கு மட்டும் ஒரு கிளார்க் ரெண்டு மாசம் டெபுடேஷன் ஏற்பாடு பண்ணிவிடுங்கள். இல்லையென்றால் நாளைக்கு உங்கள் பாடுதான் திண்டாட்டம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
மாலினி போனை வாங்கிப் பேசினாள். “வணக்கம் சார்! இன்னும் இரண்டே நாள் கொடுங்கள். ஈரோட்டிலிருந்து மாளவிகா கெல்லீஸ் பிராஞ்சில் ஜாயின் ஆகிறாள். அதே நாளில் உஷா மாணிக்கம் உங்கள் ஆபீசுக்கு வருவாள். சந்தோஷம் தானே?”
“ஐய்யய்யோ, திரும்பவும் லேடி ஸ்டாஃப்பா? வேண்டாம்மா! எனக்கு ஒரு ஆண்பிள்ளையாகப் பார்த்து அனுப்புங்கள். இங்கு என்னைத்தவிர எல்லாரும் பெண்கள்தான்!” என்று வேண்டினார் சண்முகம்.
மாலினி நல்ல பெண். நல்ல ஞாபகசக்தி. சென்னை மண்டலத்தில் இருக்கும் இரண்டாயிரம் ஊழியர்களின் ஜாதகமும் அவளுக்கு மனப்பாடம். குறிப்பாகப் பெண் ஊழியர்களில் யார் யார் எப்பொழுது மெட்டர்னிட்டி லீவ் எடுக்கக்கூடும் என்ற பட்டியலை ரீஜினல் மேனேஜருக்கு எந்த நிமிடமும் அவளால் அப்டேட் செய்யமுடியும். அதனால் எச்.ஆர். கடமைகளை அவளால் திறமையாக நிறைவேற்றமுடிந்தது.
பொதுவாகவே கிளைமேலாளர்கள் எச்.ஆர். டிபார்ட்மெண்ட்டில் குழைந்து பேசித்தான் காரியம் சாதித்துக் கொள்வார்கள். அதுவும் மாலினி போன்ற திறமையான அதிகாரியிடம் புன்சிரிப்புடன்தான் பேசுவார்கள். சண்முகத்திடம் அவளும், அவளிடத்தில் சண்முகமும் சற்றே அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு பேசுவதுண்டு.
“சார், உங்களுக்கு ‘மேல்’ கிளார்க் தான் வேண்டுமென்றால் அதற்கு ஒரு மேலான யோசனை சொல்லட்டுமா?” என்றாள்.
“என்ன, என்ன?” என்று ஆவலாகக் கேட்டார் சண்முகம்.
“யாராவது ‘ஃபீமேல் கிளார்க், ‘மேல்’ ஆவதற்கு சிகிச்சை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறாளா என்று பார்க்கவேண்டும்.”
சண்முகம் சிரித்தார். நாயுடுவும் சிரித்தார். மாலினியும் சிரித்தாள். “உனக்கென்னம்மா, சிரிப்பே! என் பாடு எனக்குத் தானே தெரியும்? அது சரி, எப்போது கல்யாண சாப்பாடு? ஜாதகம் கேட்டாலும் தரமாட்டேன் என்கிறாய்!”
“என்னிடத்தில் கேட்கிறீர்களே, மணிகர்ணிகாவிடம் கேட்டீர்களா?” என்று மடக்கினாள் மாலினி.
“அவள்தான் ரிசைன் பண்ணப்போகிறாளே! எனக்கு உன்னைப் பற்றித்தான் அக்கறை!”
மாலினி அலுத்துக்கொண்டாள். “அமெரிக்கா மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள்! அத்துடன், மயூரியும் திலகாவும் மெடிக்கல் பில் அனுப்பிவிட்டார்கள். டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்கள். அதனால் சீக்கிரம் ‘ஃபிட்டாகி’ வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு ஆள் அனுப்பிப் பாருங்களேன்” என்று யோசனை சொன்னாள்.
சண்முகம் யோசிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் போன் செய்தார். பதில் இல்லை. அரைமணி நேரம் கழித்து மீண்டும் போன்செய்தார். அப்போதும் பதில் இல்லை. தானே நேரில் போய்ப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார். நலம் விசாரித்த மாதிரியும் இருக்கும்.
சரி, மணிகர்ணிகா இப்போது எங்கிருக்கிறாள் என்ற கேள்வியும் எழுந்தது. துபாய்க்குத் தான் போயிருக்கவேண்டும்.
***
ஹோட்டல் அறையில் தனிமையில் அழுதபடித் தனது கடந்தகால நினைவுகளை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்த மணிகர்ணிகாவுக்கு, அன்று நவீனின் காரில் தான் மாதவிக்கு அளித்த பரிசுப் பை கிடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.
அப்படியானால்? மாதவியும் துபாயில்தான் இருக்கிறாளா? இரண்டரை வருடம் முன்பு பார்த்தது தான். எம்பிஏ-படிப்பை முடித்துப் பட்டம் வாங்கியிருப்பாள். பன்னாட்டுக் கம்பெனியொன்றில் நிச்சயம் நல்லவேலை கிடைத்திருக்கும்.
ஆனால் தன்னிடம் எதையும் ‘ஷேர்’ செய்யவில்லையே! முகநூலோ, வாட்ஸப்போ, ட்விட்டரோ எதிலும் தன் வேலையைப் பற்றியோ, துபாயில் இருப்பது பற்றியோ அவள் ‘அப்டேட்’ செய்யவில்லையே!
தாங்கள் பார்க்கவந்த அபார்ட்மெண்ட் அருகில் காரை நிறுத்தினான் நவீன். இவளோ தன் மனத்தில் இருந்த சந்தேகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனைப் பின்தொடர்ந்தாள்.
அது ஓர் அழகான குடியிருப்புப் பகுதி. ஐந்து நிமிடம் நடந்தாலே கடற்கரை வந்துவிடும். முதல் மாடியில் இருந்தது அவன் பார்த்த வீடு.
“இந்த வீட்டின் பொறுப்பு, இரண்டாம் மாடியில் இருக்கும் ஒரு மொராக்கோ பெண்மணியிடம்தான் உள்ளது. பாத்திமா டக்ளஸ் என்று பேர். அவளைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு சாவி வாங்கிக்கொள்ளலாமா?”
மணிகர்ணிகா மௌனமாக அவனைத் தொடர்ந்தாள். அந்த மொராக்கோ பெண்மணி - பாத்திமா டக்ளஸ்- நடுத்தர வயதினள். நல்ல அழகி என்று முதல் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவார்கள். அழகான ஆங்கிலம் பேசினாள். ஓர் அமெரிக்கக் கம்பெனியின் சிஇஓ. நவீன் பார்த்திருந்த வீட்டின் சாவியைக் கொடுத்தாள். மணிகர்ணிகாவைப் பார்த்து, ‘வெல்கம்’ என்றாள்.
மூவருக்கும் ஜிஞ்சர் டீ எடுத்துவந்தாள். “பன் வித் சீஸ், அல்லது பிஸ்கட்ஸ் - வேண்டுமா?” என்றாள்.
நவீன் “நோ, தேங்க்ஸ்” என்றான். மணிகர்ணிகா ஏதும் பேசாமல் டீயை அருந்தினாள். அமைதியான மனத்தில் அந்தப் பரிசுப்பை ஏற்படுத்திய சலனம், குளத்தில் எறிந்த கல்போல வட்டமாகப் பரவி விரிந்துகொண்டே சென்று, மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது. யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை அவள்.
“நீங்கள் பார்த்திருக்கும் வீடு மிகவும் அழகானது. என்வீடு மாதிரியேதான், ஆனால் அந்த ஓனர் நிறைய கலை வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறார். நானும் கூட வந்து காட்டட்டுமா?” என்றாள் பாத்திமா.
ஒவ்வொரு அறையாகக் காட்டி அங்கிருந்த கலைப் பொருட்களைப் பற்றி விவரித்தாள். உரிமையாளர் கையெழுத்திட்ட ஒப்பந்த ஆவணமும் அங்கிருந்ததை எடுத்துக் கொடுத்தாள்.
மணிகர்ணிகாவுக்கு அந்த வீடு திருப்திகரமாகவே இருந்தது. ஆனால் பெர்த்தில் அவர்கள் இருந்த வீட்டுக்கு இது ஒரு மாற்றுக் குறைவுதான்.
சாவியைப் பெற்றுக்கொண்டு, பாத்திமாவுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். வழியில் எங்கும் வாயே திறக்கவில்லை மணிகர்ணிகா.
அவர்கள் ஹோட்டலை அடைவதற்கும், பாத்திமாவிடமிருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது. நவீன் முகம் கழுவப் போயிருந்ததால் மணிகர்ணிகாவே எடுத்து, “ஹலோ” என்றாள்.
“ஹாய், மணி! எ குட் நியூஸ் டு நவீன்! அவரிடமே சொல்லட்டுமா, இல்லை உங்களிடம் சொன்னால் பரவாயில்லையா?”
“குட் நியூஸ் தானே! என்னிடமே சொல்லுங்கள். அவர் வருவதற்கு நேரமாகலாம்” என்றாள் மணிகர்ணிகா.
“ஓகே, அப்படியானால் அவரிடம் சொல்லுங்கள், அவர் சிபாரிசு செய்த மாதவி என்ற கேண்டிடேட் எங்கள் கம்பெனியில் சி.எஃப்.ஓ. போஸ்ட்டுக்கு செலக்ட் ஆகிவிட்டார் என்று!”
மணிகர்ணிகாவுக்கு ஏனோ உடம்பெல்லாம் எரிவது போல் இருந்தது.
பாத்திமா மேலும் தொடர்ந்தாள். “இந்தத் தகவலை முதலில் மாதவிக்குத்தான் சொல்ல முயன்றேன். ஆனால் அவளை போனில் பிடிக்க முடியவில்லை. அதிகாரபூர்வ ஈமெயில் நாளைக்குத் தான் போகும். அதனால்தான் நவீனிடம் இதை உடனே ஷேர் செய்ய விரும்பினேன் ... பை!” என்று முடித்தாள் பாத்திமா.
காரில் அந்தப் பை எப்படி வந்தது என்ற சஸ்பென்ஸ் இப்போது உடைந்துவிட்டது. மாதவி இங்குதான் இருக்கிறாள். இதே காரில் பயணித்திருக்கிறாள். எத்தனை நாட்களாகவோ? எங்கு தங்கியிருக்கிறாளோ? தனியாகவா, அல்லது நவீனுடனா?
நவீனுடன் அவள் தனிமையில் இருந்திருப்பாளா? அந்த எண்ணமே அவள் உடலெங்கும் பூச்சி ஊர்வதுபோல அருவருப்பான உணர்வைக் கொடுத்தது.
எதற்காக நவீன் இதையெல்லாம் தன்னிடம் மறைக்கவேண்டும்? அல்லது, மாதவிதான் தன்னிடம் ஏன் இதையெல்லாம் கூறவில்லை? இவர்களுக்குள் இன்னும் என்னவெல்லாம் இரகசியங்கள் இருக்குமோ?
இவனைப் புரிந்துகொள்ள மூன்று வருடம் வேண்டும் என்று தோன்றியதே, அப்படியே இருந்திருக்கக் கூடாதா நான்? அவசரப்பட்டு நெருக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டேனோ?
குளியலறைக்குச் சென்ற நவீன், தான் பார்த்த வீடு மணிக்காவுக்குப் பிடித்துவிட்ட மகிழ்ச்சியை வெதுவெதுப்பான வெந்நீரில் ஆற அமரக் குளித்தபடி அனுபவித்துக்கொண்டிருந்தான்.
அரைமணி நேரம் கழித்து அவன் வெளியில் வந்தபோது, மணிக்கா அங்கு இல்லை. சென்னை செல்லும் விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தாள்.
(தொடரும்)
-இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து
இதன் அடுத்த பகுதி -" மணிகர்ணிகா (20) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.
தலைப்புதான் கொஞ்சம் அறம் வைத்ததுபோல இருக்கிறது.
பதிலளிநீக்குகவலைப்படாதீர்கள் நண்பரே! இறுதியில் அறம் தான் வெல்லும்!
நீக்குஎல்லாம் போச்சா...?
பதிலளிநீக்கு// ஹோட்டல் அறையில் தனிமையில் அழுதபடித் தனது கடந்தகால நினைவுகளை //
பதிலளிநீக்குஇதுவரை சொல்லப்பட்ட ம கவின் இயல்புக்கு இந்த வரி பொருந்தவில்லையோ.... அவளும் பெண்தானே என்கிறீர்களா?!!
இந்த ஆண்களை நம்பவே கூடாது. மணிகர்ணிகாவுக்கு Appointment order விழுந்தடித்துக் கொண்டு கொடுத்த மாதிரி, மாதவிக்கு CEO post ஆ.?
பதிலளிநீக்குபலே ஸ்திரி லோலன் நவீன்.
மணிக்கா சென்னை சென்றது சரியே!
கண்ணால் படிப்பதும் பொய். மனதால் முடிவு கட்டுவதும் பொய். செல்லப்பா ஸார் உருவகப்படுத்துவதும் பொய். கடைசிவரை படித்து அறிவதே மெய்!!!
நீக்குபிரமாதமாக இருக்கு
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு