வியாழன், ஏப்ரல் 21, 2022

இருக்கும் இடத்தை விட்டு…(இன்று கிழமை வியாழன்-2)

 இருக்கும் இடத்தை விட்டு…(இன்று கிழமை வியாழன்-2)

(அட்லாண்டிக் கடலோரம்)

அமெரிக்காவில் பத்தாவது  நாள்  


"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி- எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே - அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!" என்பது சித்தர் பாடல்.


பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி,  அவர்கள் வசதியோடு இருக்கும் நாளில் சில மாதங்கள் அவர்களோடு தங்குவதற்காக வெளிநாட்டிற்கு வரும் பெற்றோர்கள்  சிலர்,  தங்களுக்கு ஏற்படும் இனிமை குறைந்த நினைவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறார்கள். 


காலம் ஓரளவுக்கு அவர்களின் மனக்குறைகளை மறக்க வைத்தாலும், தாங்கள் எதிர்பார்த்தபடி தங்களுக்கு வரவேற்பு கிடைக்காது அவர்கள் மனதில் நீங்காத வடுவாக நின்றுவிடுகிறது.



இதுவரை 12 முறைகளுக்கு மேல் அமெரிக்கா வந்து விட்டேன். ஒவ்வொரு முறையும் இம்மாதிரி மனக்குறை உடைய பெற்றோர்கள் ஒருவரையாவது சந்திக்காமல் இருந்ததில்லை. அவர்களில்  தமிழர்கள் உண்டு, தெலுங்கர்கள் உண்டு, கன்னடர்கள் உண்டு. இந்தி பேசுவோரும் உண்டு. எந்த மொழியானாலும் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு முறை, அதில் ஏற்படும் சங்கடங்கள் எல்லாம் அனைவருக்கும் பொதுவானதாகவே தெரிகின்றன.


நியூஜெர்சியில்  ஒரு பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது சென்னைத் தமிழர் ஒருவரைக் கண்டேன். சென்னையில் நான் இருக்கும் பகுதிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் அவர் குடியிருப்பவர். மகனுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் பார்க்க வந்ததாகக் கூறினார். மகனுடைய முகவரியைக் கேட்டபோது, ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் என் மகள் இருந்த வீட்டிற்கு மிக அருகில் தான் அந்தக் குடியிருப்பு!


அவருக்கும் அது வியப்பாக இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. கட்டாயம் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் உடனிருந்த என் மனைவியும் அவர்களையும் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று  அழைத்தோம். அவர் ஒரு வக்கீல். நான் வங்கி அதிகாரி. இருவருக்கும் பொதுவான பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.


பூங்காவிலிருந்து திரும்பி நடந்து வரும்பொழுது அவர் வீட்டைக் கடந்துதான் எங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். எங்களுக்கு முன்பே வீட்டை அடைந்து இருந்த அவர், முதல் மாடியில் இருந்து எங்களைப் பார்த்து கையசைத்தார். கைக்குழந்தையோடு அவருடைய மகளும் எங்களைப் பார்த்துப்  புன்சிரித்தார். மறுநாள் காலை எங்களை வரவேண்டும் என்று அவர்கள் அழைத்தார்கள். 


என் மகளிடம் கூறிய பொழுது, அவள் இந்த நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில பண்பாட்டு நடைமுறைகளைப் பற்றிக் கூறினாள். அவற்றில் ஒன்று, குழந்தைகள் உள்ள வீட்டைப் பார்க்கச் செல்லும் போது, குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒரு பரிசுப் பொருளை மறவாமல் கொண்டு போக வேண்டும் என்பது. பரிசின் விலைமதிப்பு நம்முடைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பது இரண்டாவது விதி. 'இஷ்ட மித்திர பந்துக்களுடன்' வருமாறு கல்யாணப் பத்திரிகைகளில் போடுவதெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. முன்னறிவிப்பு இல்லாமல் அதிகப்படியான உறுப்பினர்களை அழைத்து கொண்டு போனால், அது நட்பை முறிப்பதாக அமைந்து விடலாம். 


மேற்படி விதிகளுக்கு உட்பட்டு, கையில் உரிய பரிசுப் பொருளுடன் நானும் மனைவியும் அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். அண்மையில்தான் அமெரிக்கா வந்திருந்ததால் வீடு எளிமையான வசதிகளுடன் இருந்தது. கணவனுக்கு மட்டுமே வேலை. இட்லியும் வடையும் காபியும் ஓர் இனிப்பும் கிடைத்தன. மூன்று மாதக் குழந்தை அழகாக இருந்தது. ஆசி வழங்கி விட்டுக் கிளம்பினோம்.


மாத இறுதிக்குள் எங்கள் வீட்டிற்கு வருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் வரவில்லை. அதிகம் பழகாதவர்களிடமிருந்து அலைபேசி எண்ணைக் கேட்டுப் பெறும் வழக்கம் இங்கு இல்லை. எனவே அவர்களை நினைவூட்டுவதற்கும் வழியில்லை. ஆனால் அவரும் மனைவியும் எங்கள் வீட்டெதிரில் இருந்த  நடைபாதையில்தான் மாலை நேரங்களில் பேசிக் கொண்டு செல்வார்கள். அப்போது சில முறை அவர்களைப் பார்த்து கையசைத்து இருக்கிறேன். பதிலுக்கு கையசைப்பு கிடைத்ததே தவிர அவர்களின் வருகை பற்றிய தகவல் இல்லை. 


மேலும் சில மாதங்கள் கழித்து நாங்கள் இந்தியா திரும்பி விட்டோம். அவர்கள் வருகை தராதது பற்றி என் மகளுக்கு வருத்தமே. 


திடீரென்று ஒரு நாள் சென்னையில் என்னுடைய எண்ணுக்கு அவரிடம் இருந்து போன் வந்தது. சில காரணங்களால் சொன்னபடி வர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பேசினார். "நாங்கள் போனதே செலவுக்குரிய  விஷயமாக அவர்களுக்குத் தோன்றிவிட்டது. பரிசுப்பொருள் வாங்குவதற்குக் கடைக்குச் செல்லவும் எங்களுக்கு வழி தெரியாது. அவர்கள் இன்னும் கார் வாங்காததால் எங்களை அழைத்துக் கொண்டு எங்கும் போவதற்கும் வழியில்லை. வீட்டுக்குள்ளேயே நான்கு மாதமும் அடைந்து கிடந்தோம். குறைந்தபட்சம்  சுதந்திரதேவி சிலையைக் கூடப் பார்க்க முடியாமல் போயிற்று" என்று மிகவும் வருத்தப்பட்டார். 


"நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. நல்ல குழந்தைகளைப் பெற்று இருக்கிறீர்கள்" என்று அவர் சொன்னபோது அதில் பொறாமையில்லை. தன்னிரக்கமே தெரிந்தது.


இன்னொரு வருடம்  அமெரிக்கப் பயணத்தின்போது இது நடந்தது. சென்னையில் இருக்கும் மிக மிக நெருங்கிய நண்பர் ஒருவர் பிலடெல்பியா வந்திருந்தார். நியூயார்க் இன்னும் பார்க்கவில்லை என்றார். வாருங்கள் எங்கள் வீட்டில் தங்கி எல்லாவற்றையும் பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்தேன். என் மகளும் மருமகனும் சுற்றுப்பயணத்தில் மிகுந்த  ஆர்வம் கொண்டவர்கள். அவருடைய வருகையை ஆர்வத்தோடு எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் வரவில்லை. ஒரே விஷயம், அவர் சென்னை திரும்புவதற்கு சில நாள் முன்பு போன் செய்தார். அவருடைய மகனுக்கு திடீரென்று சென்ற வாரத்தில் ஒருநாள் விடுமுறை கிடைத்ததால், அவனோடு நியூயார்க் வந்து  எல்லா இடங்களையும் பார்த்துவிட்டதாகக் கூறினார்.  


பின்னால் ஒரு சமயம் அவருடைய மகனைச் சென்னையில் சந்தித்தேன்.  "நியூயார்க் வந்து விட்டு அப்பாவை எங்கள் வீட்டிற்குக் கூட்டி வராமல் போய் விட்டீர்களே" என்றேன். "நியூயார்க்கா? நான் எங்கே வந்தேன்? அப்பாவுக்கும் வருத்தம்தான். என்ன செய்வது? அந்த மூன்று மாதங்களும் ஒரு நாள் கூட எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அவர் பிலடெல்பியாவைச் சுற்றிப் பார்த்ததோடு சரி" என்றான்!


இங்கு, அமெரிக்காவில், சரியான வேலை, சரியான சம்பளம், சொந்த வீடு, சொந்தக் கார் இவற்றில் ஒன்று குறைந்தாலும் அது அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுகிறது. பெரும்பாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும் என்பதால் பெற்றோர்கள் வரும்போது அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் சற்றே கடினம்தான். நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு இன்னும் ஒரு சங்கடம்: பெற்றோர்களை முக்கியமான இடங்களுக்கு  அழைத்துச் செல்ல விரும்பினாலும் சேர்ந்தாற்போல் சில நாட்கள் விடுமுறை கிடைப்பது அரிது.  "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி" தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.


ஒருவகையில் சிலர் சொல்வது  போல நான் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருக்க வேண்டும். எள் என்றால் எண்ணெய் ஆகத்தான் இருக்கிறார்கள் என் குழந்தைகள். அவர்களாகவே எங்களுக்கான சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். எனது நண்பர்களைச் சந்திக்க வேண்டுமென்றால், தங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் காரை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்.  விரும்பிய உணவகங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். நாடு திரும்பும் போது வஞ்சனையின்றி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாங்கித் தருகிறார்கள். பயணச் செலவையும் அவர்களே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.


"என்ன தவம் செய்து விட்டேன்" என்பதுதான் சரியான வார்த்தை.


 -இராய செல்லப்பா நியூஜெர்சி யில் இருந்து.


12 கருத்துகள்:

  1. பணிநிறைவு பெறும் தருவாயிலுள்ள எங்கள் வங்கி அதிகாரிகளுக்கு அலுவலர் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு வகுப்பு நடத்த வந்தார் தமிழகக் காவல்துறையில் ஓர் உயர் பதவியிலிருந்து பணிநிறைவு கண்ட பேச்சாற்றலுள்ள அதிகாரி. அவர் சொன்னார் "வெளிநாட்டில் குடியுரிமைப் பெற்று வசதியுடன் இருக்கும் பிள்ளைகளின் வீடுகளுக்கு மாதக்கணக்கில் பெற்றோர் சென்று தங்கி வருகின்றனர் ஏன் தெரியுமா?" என்று வினவினார். அவரவர் தங்களைப் போல் பாசத்தின் அடிப்படையில் முதிர்வடைந்த மனநிலையில் பதில்களைக் கூறிய போது, "அப்படி நீங்கள் கருதிக் கொண்டு இருக்கிறீர்கள்.தவறு.எல்லாம் ஆயா வேலை செய்யப் போகிறார்கள்!" என்று அவர் சொன்னபோது என் மனதுக்கு அது நெருடலாக உரைத்தது. அப்படி இருந்தாலும் என்ன தவறு?என்றே என் மனம் எண்ணியது.பேரக்குழந்தைகளுக்கு பாட்டனும் பாட்டியும் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? சொந்த நாட்டில் தகுதியான கல்வியறிவு இருந்தும் பிள்ளைகள் கௌரவமான பணிகளில் கடமையாற்ற முடியாமல் அன்றோ நெருங்கிய உறவுகளைப் பிரிந்து வெளிநாட்டிற்குப் பிழைக்க வருகின்றனர். இவர்களின் பொருளாதார நிலையுணர்ந்தே பெற்றோர்களும் அனுசரித்து வாழ்வதில் தான் அன்பு தழைக்கும். நல்ல கருத்தை விதைத்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இந்தியாவில் இருந்திருந்தால் செய்திருக்க மாட்டோமா? எல்லாம் நம் கண்ணோட்டத்தில்தான் உள்ளது. மற்றும் நமது பேரப்பிள்ளைகளுக்கு நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை கற்றுத்தரும் நல்ல வாய்ப்பாகவும் இது அமையும். இந்தித் வளையாதது ....??

      நீக்கு
  2. ஜந்தில் வளையாதது என்று படிக்கவும்

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் அமெரிக்க கலாச்சாரம் வேறு தமிழ் நாட்டு கலாச்சாரம் வேறு ஆனால் இட்ட்=லி வடை ஓன்று தான்

    பதிலளிநீக்கு
  4. இப்படி ஒரு பக்கம் இருப்பதையும் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. பையனோ, பெண்னோ சென்னையிலோ , இந்தியாவிலோ, இருந்தால் கூட, பேச்சுவார்த்தை இல்லாத, போகவர இல்லாத குடும்பங்கள் எவ்வளவோ உண்டு.

    அமெரிக்காவில் இருந்தாலும் கூப்பிடுகிறார்களே என்று சந்தோஷப்படணும்..

    Baby Sitting க்கு போகிறீர்கள் என்று சொல்லி கேலி செய்பவர்கள் யார் தெரியுமா ? அவர்களுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் இருக்க மாட்டார்கள்.

    எங்கள் ஆபீஸின் கடைநிலை ஊழியரின் பையன்கள் கூட இப்போது அமெரிக்கா வந்து வேலை செய்கிறார்கள். அமெரிக்கா இப்போது அப்படி ஆகி விட்டது. இதெல்லாம் கம்பூட்டரின் புண்ணியம் .

    பதிலளிநீக்கு
  6. நீங்க்ள் சொல்லியிருக்கும் நிகழ்வுகள் பற்றி ஒரு சிலர் வருத்தப்படுவதைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் நீங்கள் சொல்லியிருக்கும் நல்ல விஷயங்களும் எங்கள் குடும்பத்தில் நன்றாகவே நடக்கைன்ற்ன. என் உறவினர்க்ள் பலர் அங்குதான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நம்மூர் படிதான் நட்புகளை உறவினர்களை நடத்துவது.

    அங்கு வசிப்பவர்களுக்கு யதார்த்தப் பிரச்சனைகள் நிறைய உண்டுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல். இது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள புரிதலையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஒரு சிலருக்குக் கசப்பான அனுபவங்கள் இருக்கலாம். உண்மைதான்...கூடவே

    பரசுராமன் அவர்கள் சொல்லிய கருத்தை அப்படியே வழிமொழிகிறேன். நான் சொல்ல வந்தது சொல்லப்பட்டிருக்கிறது.

    கூடவே இன்னொன்னும் சொல்றேன்.

    //அவர்களுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் இருக்க மாட்டார்கள்.//இதை அப்படியே சொல்லி, கூட, போய் வந்தவர்கள் சந்தோஷமாகப் போய் வந்தாலும் கூட இங்கிருப்பவர்கள் கேட்பது...ஓ நீ எங்கேயுமே போலியா சும்மா வேலை செய்யத்தான் போனியா என்று கிளப்பி அந்தக் குடும்பத்துள் இல்லாத இதுவ்ரை இல்லாத பிரச்சனைகளைக் கிளப்புவர்களும் இருக்கிறார்கள். இதையும் நான் நேரில் கண்டதுண்டு. சுய சிந்தனை இல்லாதவர்கள் மதி இழ்னது பிரச்சனையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் இப்போதைய கால வாழ்க்கைச் சூழல்..அவர்களின் சுமை எல்லாம்....குழந்தைகளும்....பெற்றோரைப் புரிந்துகொள்ள வெண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
    என்னோற்றான் கொல்எனும் சொல்

    பதிலளிநீக்கு
  9. இப்படியும் சிலர்..... வெளிநாடுகளை விடுங்கள், வெளி மாநிலங்களுக்கு வரும் பெற்றோர்களே கூட இப்படி சொல்வதை கேட்டது உண்டு.

    பதிலளிநீக்கு
  10. எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் பலரும் அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்தாலும், உங்கள் எழுத்தின் மூலமாகத்தான் பல நுணுக்கமான தகவல்களை அறிந்து கொண்டேன்.
    நன்றியும் வாழ்த்துகளும் ரா யசெல்லப்பா சார்!

    பதிலளிநீக்கு