ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2022

மணிகர்ணிகா (13) இன்று வர மாட்டாள்- தொடர்கதை

மணிகர்ணிகா (13) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  110 வது நாள்:  30 -7-2022)

 

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (11) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (12) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த மணிகர்ணிகா மிகவும் குழம்பிப் போயிருந்தாள். நவீன் என்கிற தனி மனிதனின் நடவடிக்கைக்காக ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைத்த வேலை வாய்ப்பை வேண்டாம் என்று சொன்னது முட்டாள்தனமாக இருக்குமோ என்று  எண்ணினாள்.  அதேசமயம் பெங்களூரில் இதேபோல் ஆயிரக்கணக்கான கம்பெனிகள் உண்டு,  வேறு வேலை கிடைக்காமலா போய்விடும் என்று மனதின் ஒரு பகுதி தைரியம் சொன்னது. 

விரைவில் முடிக்கவேண்டும்
இத்தொடரை 

ஆனால் அந்தக் கட்டிடத்தில் அப்போது குழுமியிருந்த சுமார் 2000 இளைஞர்களைப் பார்த்தபொழுது கம்ப்யூட்டர் துறையில் வேலை கிடைப்பது அவ்வளவு சாமானிய காரியம் அல்ல என்றும் தோன்றியது. 


யார் இந்த நவீன்?  இத்தனை பெரிய கூட்டத்தில் தன்னை மட்டும் கண்டுபிடித்து அழைத்துச் சென்று அப்பாயிண்மெண்ட் ஆர்டர் கொடுத்தானே  அது எப்படி?  அவனை எனக்குத் தெரியாது.  ஒருவேளை என்னை அவனுக்குத் தெரியுமோ?  அல்லது என் அழகில் மயங்கி விட்டானோ?  அப்படிப் பார்த்தால் அந்தக் கூட்டத்தில் எவ்வளவோ பெண்கள் தன்னைவிட அழகானவர்கள் இருந்தார்களே!  இதில் ஏதோ விஷயம் இருக்கிறது.  வேலை கிடைப்பது  ஒரு பக்கம் இருக்கட்டும்.  இவன் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அதுதான் முக்கியம்.  ஒரு நீண்ட நாற்காலியின் ஒரு மூலையில்  அமர்ந்தாள்.


அப்போது “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல் கேட்டது. ஓகே கண்மணி!


“நீங்கள் இன்று இன்டர்வியூக்கு வந்தீர்கள் அல்லவா?  என்னோடு வாருங்கள்” என்று  கண்மணி அவளை அழைத்துக்கொண்டு போனாள்.  அது அந்த அலுவலகத்தின் கேஃப்டீரியா. மணிகர்ணிகாவின் கையில் ஒரு டோக்கன் கொடுத்தாள்.


“உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் சாப்பிடலாம்“ என்று கூறிவிட்டு கண்மணி நகர்ந்தாள். 


மணிகர்ணிகாவுக்கு எரிச்சலாக இருந்தது.  இவன் யார்,  தன்னை  விடாமல் துரத்துகிறான்? இவன் சொல்வதற்காக இங்கு சாப்பிடத்தான்  வேண்டுமா? அப்பாயிண்மெண்ட் ஆர்டரைக் கிழித்துப் போட்ட மாதிரி  டோக்கனையும் கிழிக்கலாமா என்று கை பரபரத்தது. 


அதற்குள் மேலும் பல பேர் அங்கு நுழைந்து தங்கள் விருப்பம் போல் உணவுகளை எடுத்து சாப்பிடத் தொடங்கினார்கள்.  எல்லோருக்குமே யாராவது ஒரு நண்பர் இருந்தார்.  இவளுக்குத்தான்  இல்லை.  தான் தனிமையாக இருப்பதை முதல்முறையாக உணர்ந்தாள் மணிகர்ணிகா. 


பசி இல்லாதவர்களுக்கும் பசியை உண்டாக்கி விடும் அழகான வடிவமைப்பில் அந்த கேஃப்டீரியா இருந்தது.  வண்ணமயமான உணவுப் பண்டங்கள் புதுமையான வேலைப்படுகளைக்கொண்ட பீங்கான் கிண்ணங்களில் இடப்பட்டிருந்தன. உயர்தரமான பிளாஸ்டிக்கினால் செய்த தட்டுகளும் கிண்ணங்களும் குவளைகளும் ஸ்பூன் முதலிய கரண்டிகளும் அழகியலோடு மிளிர்ந்தன. அழகான வீணை இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது. 


அவளுக்கு உண்மையிலேயே பசி எடுத்தது. அவளுக்குப் பின்னால் வந்தவர்கள் இரண்டாவது எடுப்பு உண்ணத் தொடங்கியிருந்தார்கள். எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்றியது. காஷ்மீரி புலாவும், நவரத்தின குருமாவும்,  சில  துணை உணவுகளும்,  ஒரு பெரிய டம்ளரில் மாம்பழ ஜூசும் எடுத்துக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். 


பழமும் பழச்சாறும் உணவுக்கு முன்பு தான் அருந்த வேண்டும் என்ற அறிவியல் உண்மை அவளுக்கு மிகவும் பிடித்தமானது.  எனவே மாம்பழ ஜூசை முதலில் காலி செய்தாள். அது பசியை இன்னும் தூண்டியதால் பரபரவென்று தட்டைக் காலி செய்தாள். பசி அடங்கிவிட்டது. என்றாலும் புதிய ஐட்டங்களை ஒரு கை பார்க்கலாமே என்ற ஆசை உண்டானது. மெல்ல எழுந்தாள்.


அதற்குள் ஓடோடி வந்தாள் ஓகே கண்மணி. “ப்ளீஸ், என்ன வேண்டுமோ சொல்லுங்கள், நானே சர்வ் செய்கிறேன்” என்றாள். 


மணிகர்ணிகாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. எதற்காகத் தன் மீது இவ்வளவு அக்கறை காட்டப்படுகிறது? 


ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையால், “தேங்க்யூ! கொஞ்சம் ப்ளெய்ன் ரைசும், பருப்பு அல்லது ரசமும் வேண்டும். கொஞ்சம் சிப்ஸ் கூட” என்றாள். புன்சிரிப்போடு கொண்டுவந்தாள் கண்மணி. அதுமட்டுமல்ல, அவளுக்கு அருகிலேயே அவள் எழுந்துவிடாதபடி நெருக்கமாக அமர்ந்துகொண்டாள். தனக்கென்று ஒரு ருமாலி ரொட்டியும் குருமாவும் கொண்டுவந்திருந்தாள். 


மணிகர்ணிகாவுக்குப் புரிந்துவிட்டது. இது நவீனின் ஏற்பாடுதான். தன்னை இங்கேயே கொஞ்சநேரம் இருக்கவைத்துவிட்டு, அவனும் வந்து அமர்ந்துகொண்டு, பேசத் தொடங்கலாம். ஒருவேளை புதிதாக அப்பாயிண்மெண்ட் ஆர்டரை  டைப் செய்து கொண்டு வந்து கொடுக்கலாம்.  அதற்கு முன்னுரையாக கண்மணி இப்போது பேசுவாள் என்று எதிர்பார்த்தாள் அவள். 


அப்படியே நடந்தது. அவள் அறியாதவண்ணம் வந்து, ஓசைப்படாமல் நவீன் அவளுக்குப் பின்னால் நின்றான். கண்மணியைப் பார்த்து, “இனிமேல்  உணவை டேஸ்ட் பார்ப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறிப்பாக காஷ்மீர் புலாவும், நவரத்ன குருமாவும் சூப்பராக இருக்கவேண்டும. மாஸ்டர் செஃப்பிடம் சொல்லிவையுங்கள்” என்றான், மணிகர்ணிகாவைக் கொஞ்சமும் கண்ணெடுத்துப் பார்க்காமல்.  


“புரிந்தது நவீன்! மேங்கோ ஜுசும் தானே?” என்று புன்முறுவலுடன் கேட்டாள் கண்மணி, தானும் மணிகர்ணிகாவைப் பார்க்காமலேயே. 


அவர்கள் இருவரும் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரிந்ததும்  மணிகர்ணிகாவின் கன்னம் தானாகவே சிவந்தது. தன்  பின்னால் நின்ற நவீனைப் பார்ப்பதற்காக எழ முயன்றாள். வலது கையைத் தட்டில் ஊன்றிக்கொண்டு இடதுகையை மேலே நீட்டினாள்.  அதில் அவளுடைய அப்பாயிண்மெண்ட் ஆர்டர் அடங்கிய உறையை வைத்துவிட்டு, சட்டென்று கூட்டத்தில் மறைந்து விட்டான் நவீன். 


ஓகே கண்மணி “தட் ஈஸ் ஓ.கே.” என்று கலகலவென்று சிரித்தாள்.

அது மணிகர்ணிகாவை  என்னவோ செய்தது.  இந்த இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு ஏதோ நாடகம் நடிக்கிறார்களா?


என்ன தான் ஆகிறது, பார்க்கலாம்   என்று எண்ணியவளாக மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தாள். குழாயில் வந்த வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவிக் கொண்டு,  பேப்பர் டவலில் துடைத்துக்கொண்டு, நீராவி மெஷினில் கைகளைச் சூடாக்கிக்கொண்டு கண்மணிக்காக  நின்றாள்.  


ஐந்தே நிமிடம்தான்! அதற்குள் அவளை சிசிடிவியில் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நவீன் என்பது கண்மணிக்கு மட்டும்தான் தெரியும்.


கை துடைத்துக் கொண்டு வந்த கண்மணி, “யூ ஆர் வெரி ஃபார்ச்சுனேட் மணிக்கா !” என்றாள்.


தன் பெயரை யாராவது சுருக்கினால் அவளுக்குப் பிடிக்காது. “யார் என்னை மணிக்கா என்பது?” என்று சிடுசிடுத்தாள்.


“மிஸ்டர் நவீன் தான் அப்படிச் சொல்வார். என்ன இருந்தாலும் அத்தை மகள் மீது அவருக்கு அந்த உரிமை கூடவா கிடையாது?” என்று சிரித்துக்கொண்டே கூட்டத்தில் மறைந்து போனாள் கண்மணி.


‘அத்தை மகளா ? அப்படியானால் இவன் எனக்கு மாமன் மகனா?’ திகைத்து நின்றாள் மணிகர்ணிகா.

*** 


பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்களை போலீஸ் ஸ்டேஷன் அருகில் அழுகிய காய்கறிகளைப் போல் கொட்டிவைப்பது வழக்கம். அதனால் அந்தத் தெருவே இடைஞ்சலுக்கு ஆளாகும். நாய்களும் பூனைகளும் எலிகளும் அங்குதான் உறங்கும். சில மாதங்களில் வாகனங்களின் சக்கரங்கள் தவிர மற்ற பாகங்கள் களவுபோய்விடும். மழையிலும் வெயிலிலும் நனைந்தும்  உலர்ந்தும் துருப்பிடித்து உருத்தெரியாமல் போய்விடும். அந்த வாகனங்கள் பற்றிய புள்ளிவிவரம் தேடினாலும் கிடைக்காது. 


ஆரம்ப காலத்தில், வாகனத்தின் மீது கேஸ் நம்பரை சாக்கட்டியால் எழுதிவைப்பார்கள். அடுத்த நாளே அழிந்துபோய்விடும். கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது வாகனம் நல்ல நிலைமையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படும். கேஸ் முடிந்து வண்டியைத் திருப்பித்தரும் நாளில் ‘நல்ல முறையில் வண்டியைப் பெற்றுக்கொண்டதாக’ கையொப்பம் பெறப்படும். உருத்தெரியாத அந்த வண்டியை யாரும் வீட்டுக்கு எடுத்துப்போவதில்லை. காயலான் கடை தான் அதற்குப் புகலிடம்.   


இதை ஒரு சுகாதாரப் பிரச்சினையாக சமூக ஆர்வலர்கள்  கையில் எடுத்த பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், பறிமுதல் செய்த வாகனங்களை அப்பொழுதே திருப்பித் தந்துவிடவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அப்படியொரு சுற்றறிக்கை இருப்பதே பலருக்கும் தெரியாது. 


ஆனால் தங்கராசுவுக்குத் தெரியும். நேராக அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார். நல்லவேளையாக மயூரியின் என்பீல்டு பைக் பத்திரமாகவே இருந்தது. தன் கையிலிருந்த டூப்ளிகேட் சாவியைப் போட்டு அதைக் கிளப்பினார். கொஞ்சம் பெட்ரோல் இருந்ததால் பைக் சொன்னபடி கேட்டது. பின்னர் தான் கொண்டுவந்திருந்த அழுக்குத் துணியால் நன்றாகத் துடைத்தார். பிறகு அதை ஸ்டேஷன் வாசலில் நிறுத்தினார். அதன்மீது அமர்ந்துகொண்டு, “இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா?” என்றார். பதில் இல்லை. சில நிமிடம் கழித்து அதே கேள்வியைக் கேட்டார். பதில் இல்லை. மூன்றாவது முறை கேட்கவில்லை. அரைமணி நேரத்தில் மயூரியின் கார் பார்க்கிங்கில் வண்டி இருந்தது. 


“ரொம்ப தேங்க்ஸ் தங்கராசு சார்! இதனால் ஒன்றும் பிரச்சினை வராதே ?” என்றாள். 


“ஒன்றும் வராது, ஏனென்றால் இன்சூரன்ஸை ரினியூவல் செய்துகொண்டு வந்துவிட்டேன். ரெண்டே நாளில் ஆர்சி புக்கை ஸ்டேஷனில் இருந்து கொண்டுவந்துவிடுவேன். மொத்தமாக மூவாயிரம் கொடுங்கள்” என்று கேட்டார் அவர்.


“இந்த வண்டி மீது எந்த கேசோ, எப்ஐஆரோ  பதிவு செய்யாததால்  கடவுளே வந்தாலும் கவலையில்லை யம்மா!” என்று இன்சூரன்ஸ் பேப்பர்களைக் கொடுத்தார். “உங்களுக்கு பிரச்சினை வரும்போல சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள், ரெண்டே நாளில் நல்ல விலைக்கு விற்றுக் கொடுக்கிறேன். சனியன் தொலைந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு நடந்தார் தங்கராசு. அவர் சென்ற திசையை நோக்கிக் கும்பிட்டாள் மயூரி.

கணவனை உடனே சென்னைக்கு வரும்படி போன் செய்தாள்.

(தொடரும்)

- இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து  


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


 

8 கருத்துகள்:

  1. சம்பவங்கள் இங்கும் அங்குமாய் மாற்றி மாற்றி காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.  எந்தப் புள்ளியில் இவை இணைய போகின்றன என்று பார்த்திருக்கிறேன்.  இணையத்தான் வேண்டுமா என்கிறீர்களா?  கேட்கலாம்..  நீங்கள்தானே ப்ரம்மா!...

    பதிலளிநீக்கு
  2. சில பகுதிகளைப் படிக்காமல் விட்டுவிட்டேன். இனி விடுபட்டப் பகுதிகளைப் படிக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  3. படித்துவிட்டு திகைக்க வேண்டியிருக்கு...!

    பதிலளிநீக்கு
  4. விரைவில் முடிக்க வேண்டும்/// ஹாஹாஹா சார் உங்களுக்கே பொறுக்கலையோ சஸ்பென்ஸ் எப்படா உடையும்னு!!!
    சரி அதுக்காக மீதி வெள்ளித்திரையில் (அதான் புத்தகவடிவில்) னு சொல்லிடாதீங்க!!!!!!!!

    டிவில 4, 5 சானல் ஒரே நேரத்தில் சின்ன சின்ன பாக்ஸா போட ஒரு ஆப்ஷன் உண்டே அது போல கதையையும் திலகா மயூரி பார்ட், மணிகர்ணிகா பார்ட், இப்படி எல்லாம் தொடர்வது போட முடியாதோ?!!!! எல்லாம் மணிகர்ணிகாவால் முடிக்கப்படுமோ?!!!! எந்தப் புள்ளியில் ஒன்று சேருமோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிகர்ணிகாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தன்னைப் பற்றித் தெரிவிக்கிறாள். உங்களோடு சேர்ந்து நானும் அவளைப் பின் தொடர்கிறேன். ஒருவேளை விஜயவாடாவுக்குப் போய் முடிவாளோ?

      நீக்கு
  5. முந்தையப் பகுதிகளையும் வாசித்து தொடர்கிறேன். பல மர்மங்கள் எப்படி விடுபடப் போகின்றன என்ற ஆவல் எழுகிறது. கிரீஷ் கில்லாடியாக இருப்பாரோ? நிறைய பொய் சொல்லும் கதாபாத்திரமாக இருக்கிறாரே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. தங்கராஜ் க்கு நன்றி சொல்ல வேண்டும். பல கதாபாத்திரங்கள். பல நிகழ்வுகள். எந்த பாத்திரமும் யாரையும் சார்ந்து இல்லை.

    இவர்கள் எல்லாம் எங்கு எப்படி ஒன்று சேரப் போகிறார்களோ?கடவுளுக்கே வெளிச்சம்.

    இவ்வளவு கதாபாத்திரங்களை படைத்து எங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய தாங்கள் இறைவன்.
    "பாமர ஜாதியில் தனி மனிதன்! நான் படைப்பதனால் என் பேர் இறைவன் "

    பதிலளிநீக்கு
  7. எனது பதிவுக்கு பதில் இல்லையா .?

    பதிலளிநீக்கு