(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும்,
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது
அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று
நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)
அரசியல்
இன்று
(செப்டம்பர் 11ஆம் தேதி) மகாகவி பாரதியின் நினைவுநாள். உண்மையில் அவரது மரணம்
செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 1 மணிக்கு நேர்ந்தது. எனவே சரியான நினைவு நாள்
செப்டம்பர் 12 தான்.
1921
செப்டம்பர் 12 திங்கட்கிழமை (துன்மதி வருடம், ஆவணி மாதம் 28 ஆம்
தேதிய சுதேசமித்திரனில் 6ஆம் பக்கம், ‘நகரச் செய்திகள்’ பத்தியில், கடைசிச்
செய்தியாக இது வெளிவந்துள்ளது:
“தென்னாட்டுக்
கவிசிரேஷ்டர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி மரணம்
ஒரு
வாரமாக ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி தேகநோய் கொண்டு திருவல்லிக்கேணியில்
அசௌக்கியமாயிருந்து, திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம்மண்ணுலகைவிட்டு
விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி
ஸ்ரீநிவாசாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா,
சின்னஸ்வாமி, நெல்லையப்பர், நீலகண்டன் முதலான பலர் வந்தனர். செய்ய வேண்டிய
காரியங்களுக்கு ஆரம்பஞ்செய்து தகனக் கிரியையும் நடந்தது. ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி
சர்மா முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு சென்று, ஆங்கு,
தகனத்திற்குச் சற்று முன்னர் ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா,
இராமச்சந்திர அய்யர் இவர்கள் தமிழில் பேசிய பிறகு, சுரேந்திர நாத ஆர்யா தெலுங்கில்
பேசினார். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடின பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார்
ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது”.
அதே நாள்
‘சுதேசமித்திரன்’ தனது இரண்டாம் தலையங்கத்தில் எழுதியதிலிருந்து சில வரிகள்:
“மக்கள்
வாழ்வு நீர்மேல் குமிழிபோலும்! தமிழ்நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட்டார் என்ற செய்தியை
அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக
நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில்
பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று ‘மித்திரன்’
வேலைக்கு வந்து விடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லி யனுப்பிய அவர்
திங்கட்கிழமையன்று சாம்பலாகி விட்டது என்ன கொடுமை! 39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும்
தேசபக்தியாலும் தமிழ் நாட்டை வசப்படுத்தி விட்ட இச் சிறு பிள்ளையின் பிரிவை தமிழ்
நாடு எப்படி சகிக்குமோ அறியோம். அன்பே உருவெடுத்தாற்போன்று விளங்கிய அவரைப்
பிரிந்து அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் எப்படிப் பொறுத்திருப்பாரோ கொடிய
எமனுக்குத்தான் தெரியும். ............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு
மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில்
பிரசுரமாகமாட்டா.”
மகாகவியின்
நினைவாக நான் எப்போதோ எழுதிய கவிதையின் ஒரு பகுதி:
வறுமைத்
தீயிலும்
வண்ணம்
குலையாத
பாரதியாரின் இறப்புச் சான்றிதழ் நன்றி: சித்திர பாரதி |
சொக்கத்
தங்கம் பாரதி..!
யாரைப்
பிடிக்கவும்
எருமையில்
வருபவன்,
இவனைப்
பிடிக்க
யானையை
அனுப்பினான்!
ஆனால்,
மரணம்
வந்ததும்
செத்துப்
போய்விட
பாரதி
என்ன
வேடிக்கை
மனிதனா?
ஆயிரம்
யுகங்கள்
சாதிக்
கிறதை
ஆண்டுகள்
சிலதில்
புரிந்த
வன் அவன்!
ஒரு தேவ
ரகசியம்
மானிட
பூமியில்
விரியலானதே
அவன்
வாழ்க்கைச்
சுருக்கம்!
(‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ ப.42)
புத்தகம்
பாலகுமாரனை
அறியாதவர் உண்டோ? இன்பச்சுவை ததும்பும் கதை எழுதுவதில் எவ்வளவு வல்லவரோ அதே
வல்லமையை ஆன்மிக எழுத்திலும் கொண்டுவரும் திறம் படைத்தவர் பாலகுமாரன்.
அவருடைய ‘காலடித் தாமரை’ என்ற நூலை இன்று மீண்டும் படித்தேன். காலடியில்
அவதரித்த ஆதி சங்கரரின் வரலாறு. இன்னும் படிக்காதவர்களுக்காக இதோ ஒரு சிறு பகுதி:
(ப.80)
துறவறம் பூண விரும்பிய சிறுவன் சங்கரனிடம் தாயார் ஆர்யாம்பாள்
சொல்கிறார்:
“எனக்கு நீ ஒரே பிள்ளை. உனக்கு நான் ஒரே உறவு. இதையும் உதறிவிட்டு நீ
போனால் நல்லதா, எனக்கு ஒரு வழி சொல்லி விட்டுப் போ. யார் எனக்கு நீத்தார் கடன்
செய்வார்கள் என்று ஏற்பாடு செய்துவிட்டுப் போ. இதை யார் செய்ய முடியும் சங்கரா.
உன்னைத் தவிர வேறு யார் செய்ய முடியும்?...”
பிள்ளை கண் மூடினான். மனம் குவித்தான். மெல்ல பேசத் துவங்கினான்.
“உலகத்தில் ஒரு மனிதனுக்கு மிகப் பலமான பந்தம் தாய்தான். பத்து மாதம் தன்
கருவுக்குள் ஒருவனைச் சுமந்து அவனை நன்றிக்கடன்பட ஒரு தாய் வைத்திருக்கிறாள். தன்
ரத்தத்தை பாலாக்கி அவனுக்கு ஊட்டி அவனை வளர்க்கிறாள். இந்த இரண்டு காரணங்களுக்காகவும்
ஒவ்வொரு மனிதனும் தாய்க்கு நன்றிக்கடன் படுகிறான். அவள் எத்தகையவளாக இருந்தாலும்
அவளுக்குப் பதிலுக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் உள்ளவனாக இருக்கிறான். எனவே
நான் சந்நியாசியாக ஆனாலும், துறவு மேற்கொண்டு எங்கு அலைந்தாலும், என்ன
செய்துகொண்டிருந்தாலும், உன் அந்திம வேளையில் கண்மூடி என்னை நீ நினைத்துக் கொண்டிருக்கிறபொழுது
நான் இங்கே ஓடி வருவேன். உன் அருகே இருப்பேன். உனக்கு அருகே இருந்து உன்னுடைய
பிராணன் போகிறபோது உன் காதிலே நான் நாராயண மந்திரம் சொல்வேன். நெஞ்சில் கை வைத்து,
சிரசில் கை வைத்து நான் உன்னை உனக்குள் செலுத்துவேன். பிறவியில்லாமல் உன்னை இந்தப்
பூமியிலிருந்து முற்றிலுமாய் அகற்றுவேன்.
உன் பூத உடலுக்கு அந்திமக் கிரியைகள் செய்வேன். நன்கு தகனம் செய்வேன்.
நீத்தார் கடன்கள் செய்வேன். உனக்கு வானுலகம் போக வழி காட்டுவேன்.
“மரணம் பற்றிய எந்தக் கவலையும் உனக்கு வரவேண்டாம். இந்தக்
கணத்திலிருந்து அதைத் தூக்கிப் போட்டுவிடு.- உன் மரணம் எப்பொழுது என்று நான்
அறிவுறுத்துவேன். மரணம் பற்றிய பயத்திலிருந்து உன்னை விலக்குவேன். இதை சத்தியமாக
உனக்கு சொல்கிறேன்” என்று கைதூக்கி சங்கரன் நிற்க, ஆர்யாம்பாள் புதுப்பொலிவு
பெற்றாள். உள்ளுக்குள் திடம் பெற்றாள்.
எல்லோரும் சாகப் பயந்துதான் சாகிறார்கள். ஆர்யாம்பாளுக்கு மரணம்
பற்றிய பயம் அப்பொழுதே அகன்று விட்டது.
“சரி போய் வா”. ஆர்யாம்பாள் கை கூப்பினாள்.
“என்ன, போய் வா என்று சொல்கிறாயே” சங்கரன் விழிகள் உயர்த்தினான்.
“ஆமாம், என் மரணத்தின்போது
இங்கு வருகிறேன் என்று சத்தியம் செய்தாய் அல்லவா, எங்கு போனாலும் இங்கு
வருவாய் அல்லவா. அதனால் தான் நீ துறவியாகப் போகிறேன் என்று சொன்னாலும், போ என்று
சொல்லாமல் போய் வா என்று சொல்கிறேன். மறுபடியும் இந்த கிராமத்திற்கு நீ வந்துதானே
ஆக வேண்டும். போய் வா”.
அவள் விடை கொடுத்தாள். சங்கரர் தாயை வலம் வந்து நமஸ்கரித்தார்...
(அவரது பயணம் ஆரம்பமாகிறது.)
காலடித் தாமரை – பாலகுமாரன். கிரி டிரேடிங் ஏஜென்சி வெளியீடு. (2002).
224 பக்கம் ரூபாய் 50.
(புத்தகம்
வாங்கும்போது சில கைக்குட்டைகளையும் வாங்கிவிடுங்கள். வழியும் கண்ணீரைத்
துடைக்காமல் பாலகுமாரனைப் படிக்க முடியுமா!)
சினிமா
சக பதிவரான கேபிள் சங்கரின் இயக்கத்தில் ‘தொட்டால் தொடரும்’
என்ற படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. நீண்ட நாளைக்குப் பிறகு
தியேட்டருக்குப் போய் நான் பார்க்கவிருக்கும் படம் அதுவாகத்தான் இருக்கும். இதற்கிடையில்
‘பாஸு, பாஸு‘ பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டதாமே!
இதற்கிடையில் இன்னொரு சக பதிவரான குடந்தை ஆர் வி சரவணன் தனது
குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவருடன் கோவை ஆவியும்
‘தில்லைஅகத்து’ துளசிதரனும் நடித்திருக்கும் இப்படத்தின் பிற வேலைகள் முடிய
ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள். அதையும் பார்க்கவேண்டும்.
தொலைக்காட்சி
இரண்டு மாதங்களாக ‘டைம்ஸ் நௌ’ டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
அர்னாப் கோஸ்வாமியின் திமிர்க்கூச்சல்களை இனியும் கேட்க எனக்குப் பொறுமை இல்லை. காது
உடைந்துபோகும் அளவுக்குக் கத்த வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. மனிதன்
எப்போதுதான் திருந்துவாரோ! இவரைக் கிண்டல் செய்யும் விதமாக என்.டி.டிவி-யில் “You need not shout to be heard” என்று போடுகிறார்கள். இத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் ‘புதிய
தலைமுறை’க்கும் ‘தந்தி டிவி’க்கும் கோவில்
கட்டிக் கும்பிடலாம்.
பத்திரிகை
‘மஞ்சரி’யில் பேராசிரியர்
கு.ஞானசம்பந்தன் எழுதும் கேள்வி-பதில் பகுதி சுவையானது. இந்த மாதம் (செப்டம்பர்
2014) இடம் பெற்றுள்ள ஒரு கேள்வி:
வெட்டிவேலை, வேலைவெட்டி –இச் சொற்றொடர்களின் வேறுபாடுகள் எவை?
பதில்: என்னுடைய நண்பர் கோவை தமிழாசிரியர், ‘தையல்காரர்கள்’ குறித்து
ஓர் அழகான கவிதை சொன்னார்:
தையல்காரர்கள்
வேலைவெட்டி இல்லாமல்
வெட்டி வேலை செய்பவர்கள்
இந்தக் கவிதையின் வார்த்தை விளையாட்டு மிக அழகாக அமைந்துள்ளது. பொதுவாக
பலசரக்குக் கடைகளில், உணவகங்களில் யாரும் பொருள் வாங்க, சாப்பிட வரவில்லைஎன்றால்
அந்தக் கடைகளில் இருப்பவர்கள் வேலையில்லாமல் வெட்டியாக (சும்மா)
உட்கார்ந்திருப்பார்கள்.
ஆனால் தையல்காரர்கள் மட்டும் எப்போதும் தைத்துக்கொண்டோ,
வெட்டிக்கொண்டோ இயங்கிக்கொண்டே இருப்பார்கள். அதனால் ‘வேலைவெட்டி’ என்கின்ற சொல், ‘வெட்டிவேலை’
என்று சொல்லப்படுகிறபோது உயிர்பெறுவதைப் பார்க்கிறோம்.
இதுதவிர தமிழ் பேச்சுவழக்கில் இதுபோன்ற பல சொற்கள் உண்டு. வீடுவாசல்,
நிலம்நீச்சு, கடன்கப்பு போன்ற சொற்களையும் ஆராய்ச்சி செய்யலாம்.
சிரிப்பு / சிந்தனை
தூங்கும்போது பார்ப்பது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் அடிப்பதே கனவு.
– டாக்டர் அப்துல் கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குபாரதியின் நினைவு நாளில் ஓர் அருமையான பதிவு
பாரதி போற்றுவோம்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குசில முக்கிய வேலைகளால் எழுதுவது சிறிதுகாலம் தடைபட்டது. இனி தவறாமல் வரும். தங்கள் தொடர்ந்த வருகைக்கு நன்றி.
நீக்குஆஹா வந்துடிச்சி ஆசையில் ஓடிவந்தேன்.....அபுசி-தொபுசி பார்க்க
பதிலளிநீக்குஅடடா, திரைப்படத்திற்கும் பாட்டெழுத ஆரம்பித்து விட்டீர்களா? நன்றி நண்பரே!
நீக்குசார் பல நாட்களுக்குப் பிறகு ...அபுசி தொபசி....வழக்கம் போல அருமை.....1921 சுதேசமித்திரன் செய்தியிலிருந்து, இப்போது குடந்தையூர் சரவணன் அவர்களின் குறும்படம், கேபிள் சங்கரின் படம் என்று தொட்டுவிட்டீர்கள்......
பதிலளிநீக்குஅந்தக் காலத்து தமிழின் நடைக்கும், இப்போதுள்ள தமிழின் நடைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது! கலாச்சாரம், நாகரீகம் மாறுவது போல்....மாற்றம் ஒன்றுதானே மாறாதது.
தங்கள் கவிதைகளை எட்டையபுரத்து மீசைக்காரனிலேயே படித்துவிட்டோம் சார்....முதல் எட்டு வரிகள் மிகவும் அருமை! ஹைக்கூக்கள் போல தனித்தனியாகவும் சொல்லலாம் போல....
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே! வழக்கம் போலத் தொடர்ந்து வாருங்கள்!
நீக்குசிலருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க முடியாவிட்டால் ஒரு பதற்றம் இருக்கும். எனக்கு அப்படி இருக்கவில்லை. ஆங்காங்கே உங்கள் பின்னூட்டங்கள் சிலவற்றைப் பார்க்கும்போது நலமாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தது. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குதங்கள் ஆசியுடன் நான் நலமாக இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். ஒரு பெரிய நூலை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால் சில தடங்கல்கள்...அவ்வளவே!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
நீண்ட நாட்களின் பின் பதிவு ஒளிர்கிறது... அறியாத தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வரவுக்கு நன்றி ரூபன்! இனித் தடையின்றித் தொடர எண்ணுகிறேன். ...பார்க்கலாம்!
நீக்குஅன்புள்ள செல்லப்பா ஐயா அவர்களுக்கு
பதிலளிநீக்குவணக்கம். வெகுநாட்களுக்குப் பின்னால் வந்தாலும் மிகமிகப் பயனான பதிவு. நேற்று முன்தினம்தான் பாரதி இறந்த நாள் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டோம். அதுகுறித்து அரசுக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறதாம். இருப்பினும் பாடத்திட்டத்தில் வந்துவிட்டதால் சில நிருவாகச் சிக்கல்கள் இருப்பதாக நண்பர் சொன்னார்.
என்னுடைய ஐந்து புத்தகங்கள்அச்சில் இருக்கின்றன. அதன் வேலைகள். பேருந்து நாவல் வெளிவந்துவிட்டது. தங்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.
நண்பர்களின் படங்கள் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு நேரமின்மை காரணமாக என்னுடைய குறும்படம் இயக்குதல் தடைப்பட்டிருக்கிறது.
மஞ்சரியில் கேள்வி பதில் படித்தேன். தொடர்ந்து வருவேன் நேரம் வாய்க்கிற போதெல்லாம் எனவே தவறாக எண்ணவேண்டாம். என்னுடைய பணிகள் உறங்கும் நேரம் தவிர்த்து சூழ்ந்திருக்கின்றன என்னை.
வணக்கம்.
அனபுள்ள ஐயா
பதிலளிநீக்குகேட்கவேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன். அதென்ன அபுசி தொபசி என்றால் என்ன?
தங்கள் வரவுக்கு நன்றி பேராசிரியப் பெருமானே! அரசியல்-புத்தகம்-சினிமா-தொலைக்காட்சி-பத்திரிகை-சிரிப்பு/சிந்தனை....இவற்றைத்தான் 'அபுசி-தொபசி' என்று சுருக்கினேன். (இப்படியெல்லாம் ஏதாவது செய்தால் தானே படிக்கிறார்கள்?..)
நீக்குபல நாள்கள் கழித்து உங்கள் பதிவைக் கண்டு மகிழ்ச்சி. இப்பதிவு தொகுப்பில் பாரதியார் தொடர்பான பதிவு என் மனதை அதிகம் தொட்டது. நன்றி.
பதிலளிநீக்கு