வியாழன், நவம்பர் 02, 2017

இப்படியும் சில கல்யாணங்கள்!

பதிவு எண் 44/2017 (02-11-2017)
இப்படியும் சில கல்யாணங்கள்!

கோடை மழை எப்போது வேண்டுமானாலும் வரட்டும்; முகூர்த்த நாளில்தான் வரவேண்டுமா? செல்வத்திற்குக் கல்யாணம் என்று அதற்குத் தெரியாது போலும். கொட்டித் தீர்த்துவிட்டது.

முதல்நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பும் தடைப்பட்டது. இப்போது  காலை ஒன்பதுமணி முகூர்த்தத்திற்கும் கூட்டம் குறைவாகவே இருந்தது. எப்படியும் தாலிகட்டும் நேரத்திற்குள் இன்னொரு ஐம்பது அறுபது பேராவது வரக்கூடும். அதனாலெல்லாம் சமையல் காண்டிராக்டர் பணத்தைக் குறைத்துக்கொள்வாரா என்ன; முன்னூறு இலைக்குப் பேசியதைக்  கொடுத்துதான் ஆக வேண்டும். பேரம் பேசினால் அசிங்கம்.

உள்ளூரிலேயே ஐந்நூறு பத்திரிக்கை கொடுத்திருந்தான் செல்வம்.  ஒருமணி, இரண்டுமணி பயணத்தொலைவில் இருப்பவர்களுக்கு இன்னொரு இருநூறு பத்திரிகைகள் தபாலில் போயிருந்தன. அதனால் எப்படியும் முன்னூறு இலை விழும் என்று ஒரு கணக்கு. இப்போதோ இருநூறுதான் தேறும் என்று தோன்றியது.  

‘மாப்பிள்ளை சார், கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கள்’ என்று சாஸ்திரிகள் கூறுவதற்கும், வாசலில் தான் எதிர்பார்க்காத முகம் ஒன்று நிற்பதைக் கண்டு சற்றே திகைப்படைந்தவனாகச் செல்வம் நெளிவதற்கும் சரியாக இருந்தது.

எல்ஐஸி அல்லது தேசீயமயமான வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவரைப்போல் இருந்தார் அவர். அணிந்திருந்த பேண்ட்டு ஒரு காலத்தில் அவருக்குச் சரியாக இருந்திருக்கவேண்டும். வரவேற்பு மேஜையின் முன்னால் கையில் வெள்ளிக் கிண்ணங்களோடு இரண்டு பதின்பருவப் பெண்களும், பன்னீர் தெளிக்க ஒரு சிறுமியும் ஒயிலாக நின்றிருந்தனர். அவர்களிடமிருந்து சந்தனமும் சர்க்கரையும் பன்னீர்த் தெளிப்பும் பெற்றவர், நேராக மாப்பிள்ளையை நோக்கி நடந்தார்.

அப்போதுதான் அலங்காரம் முடிந்து மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துக்கொண்டு மணமேடையை நோக்கி வந்துகொண்டிருந்ததால், அவர் சற்றே பின்வாங்கினார். பிறகு முதல் வரிசையில் இருந்த காலி நாற்காலியொன்றில் அமர்ந்தபடி செல்வத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். வேறு வழியின்றி செல்வமும் இலேசாகப் புன்னகைத்தான். இவர் எதற்காக வந்தார், இவருக்குத் தான் அழைப்பிதழ் அனுப்பவில்லையே என்று யோசித்தான். மேற்கொண்டு அவனை யோசிக்கவிடாதபடி சாஸ்திரிகள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

தாலி கட்டும் நேரம் வந்தது. அப்போது ஓர் அழகிய இளம்பெண் அவரிடம் வந்து பேசுவதைக் கவனித்தான் செல்வம். அவருடைய மகளாக இருக்குமோ? அவளை இவன் பார்த்ததில்லை. ‘மாங்கல்யம் தந்த்துனானேன..’ ஒலித்தபோது மேடைக்கு நெருங்கி வந்து, கையில் இருந்த பூக்களையும் அட்சதையையும் மணமக்களை நோக்கி மெல்ல வீசினார் அவர். அதே சமயம் அவரது பார்வை அந்தப் பெண்ணை நோக்கி ஏதோ சொல்வதுபோல் இருந்தது. அவளுடைய கண்களில் திடீரென்று கலக்கமும் இலேசான கண்ணீரும் கிளம்பியதை செல்வம் கவனித்திருக்கமுடியாது.

சாஸ்திரிகள் எழுந்தார். ‘இன்னும் சடங்குகள் பாக்கி இருப்பதால், யாரும் மேடைக்கு வந்து மணமக்களிடம் கைகொடுக்கவேண்டாம். பரிசுகளையும் பின்னால் கொடுக்கலாம். தயவு செய்து பொறுக்கவேண்டும்..’ என்று மேளச் சப்தத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு கூறினார். ஆனாலும் விறுவிறுவென்று மேடையில் ஏறி மின்னல்வேகத்தில் பரிசுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுத் திரும்ப ஒரு கூட்டமே இருந்ததை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.  

இவரும் மேடை ஏறினார். ஒரு கவரை செல்வத்திடம் நீட்டினார். உள்ளே ரூபாய்நோட்டுக்கள் இருக்கலாம். செல்வம் மரியாதையோடு பெற்றுக்கொண்டான். ‘சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்..’ என்று சொன்னான். சம்பிரதாயமாகத்தான்.

அந்தப் பெண் மேடைக்குக் கீழே நின்றுகொண்டு அவனை ஒருகணம் தீர்க்கமாகப் பார்த்தாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. தற்செயலாக அவளைப் பார்த்த செல்வம், அவள் கழுத்து காலியாக இருந்ததைக் கண்டான். இன்னும் மணமாகவில்லை. 
*****
திருமணம் முடிந்த மறுநாள். பரிசுப்பொருட்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் செல்வமும் அவனது புது மனைவியும். பணமாக வந்த கவர்கள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றாகப் பிரித்துப் பட்டியல் இட்டான் செல்வம்.

‘இதென்ன, கவரில் பணம் ஒன்றும் இல்லை, வெறும் கடிதம்தான் இருக்கிறது!’ என்று வியப்புடன் கூறினாள் மனைவி. ‘அவர்’ கொடுத்த கவர்.
*****
‘அன்புள்ள திரு செல்வம்,
என்னை மன்னியுங்கள் என்று முதலில் கேட்டுக்கொண்டுவிடுகிறேன். ஏனென்றால் உங்கள் திருமணம் ஒரு வருடம் தள்ளிப்போனதற்கு நான்தானே காரணம்!...’
*****
கடிதத்தை மேற்கொண்டு படிக்காமல் கலகலவென்று சிரித்தான் செல்வம். ‘இந்தா, நீயே படி..’ என்று அவளிடம் நீட்டினான். அவளும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.
****
‘போன வருடம் உங்கள் அலுவலகத்திற்கு ஏதோ அலுவலாக வந்தபோது, உங்களைப் பார்த்தேன். எளிமையாக அன்பாக நீங்கள் பழகும் விதமும் முன்பின் தெரியாதவர்களிடமும் பரிவோடு பேசும் தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மேனேஜரிடம் விசாரித்தேன். உங்களைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறினார். நல்ல திறமையுள்ள இளைஞர் என்றும் விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார் என்றும் கூறினார். இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் என் மகளுக்கு உங்களைப் பார்க்கலாமே என்ற உந்துதல் ஏற்பட்டது.

உங்கள் வீட்டு முகவரிக்குச் சென்று அக்கம்பக்கத்தில் மேலும் விசாரித்தேன். மிகவும் ஏழைக் குடும்பம், இரண்டு தங்கைகள் திருமணத்திற்கு இருக்கிறார்கள், தகப்பனாருக்கு நிரந்தர வருமானமில்லை என்று தெரிந்தது. வசதிகள் இல்லாத வாடகை வீடு.     

எனக்கும் அதிக வசதிகள் இல்லை என்றாலும், உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் பிடித்திருந்தாலும், அவ்வளவு சிறிய வாடகை வீட்டில் மணமானபிறகு நீங்கள் குடியிருக்க இயலாது; பெரிய வீட்டிற்கு மாற உங்கள் வருமானம் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. பெண்ணைப் பெற்றவனின் கவலைகள், இளைஞரான உங்களுக்குத் தெரிய வழியில்லை. என்றாலும் உங்கள் முகவரிக்கு ஜாதகம் அனுப்பினேன்.

பொருந்தியிருப்பதாகவும், ஆனால் கொஞ்சநாள் பொறுப்பது நல்லது என்றும் உங்கள் தகப்பனார்  போனில் பேசினார். என்றாலும் என் உள்மனம் இது நல்ல சம்பந்தம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததால், அடுத்த மாதம் அவருக்கு போன் செய்து பெண்பார்க்க வருமாறு அழைத்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு நீங்கள் வருவதாக ஏற்பாடு.

நாங்கள் இருந்தது மூன்றாவது மாடி. சன்னல் வழியாக உங்களை எதிர்பார்த்து என் மகள் நின்றுகொண்டே இருந்தாள். என் மனைவிக்கு மட்டும் திருப்தி இல்லை. வசதி இல்லாத ஒரு வீட்டில், அதுவும் இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்யவேண்டிய பொறுப்பையும் ஏற்கவேண்டிய கட்டாயத்தில் நம் பெண்ணை ஏன் தள்ள வேண்டும் என்று அவள் ஆட்சேபித்தாள். ஒரு தாயின் அடிப்படையான கவலை அது. 

ஆனால் என் மகளுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. மாப்பிள்ளையைப் பார்த்த பிறகு முடிவெடுக்கலாம் என்று அவள் கருதினாள். தனக்குப் பிடிக்கவில்லை என்றால் வற்புறுத்தக்கூடாது என்றாள். சரி என்றேன்.

ஆனால் என் மனைவிக்கு சம்மதமாகப் படவில்லை. பெண்பார்க்கும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கச் சொன்னாள். கண்ணைக் கசக்கத் தொடங்கினாள். ‘அவர்கள் வந்து பார்த்துவிட்டுப் போகட்டுமே, பிறகு முடிவெடுக்கலாம். ஏன் அவசரப்படுகிறாய்? அந்தப் பையனைப் பார்த்தால் மிகவும் நல்லவனாகத் தெரிகிறது. நம் பெண்ணுக்கு நிச்சயம் பிடிக்கும். என் மீது நம்பிக்கையில்லையா?’ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அழுதுகொண்டே இருந்தாள். பிறகு திடீரென்று வெளியே கிளம்பினாள். ‘அவர்கள் வரும் நேரமாயிற்றே! எங்கே போகிறாய்?’ என்றேன். பதில் சொல்லாமல் போனாள்.

தரையில் ஆட்டோ ஒன்று வந்து நிற்பதும் அதில் இருந்து சிலர் இறங்கும் ஓசையும் கேட்டது. சன்னலில் எட்டிப் பார்த்தேன். உங்கள் தாயாரும் தகப்பனாரும் முதலில் வந்தார்கள். மூன்று பேராகப் போகவேண்டாம் என்பதாலோ என்னவோ நீங்கள் சற்றே பின்னால் நின்றீர்கள்.

மகளைத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டு வாசல் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. என்ன இது அபசகுனம் மாதிரி என்று நினைத்தேன். பலமாகக் கதவை அசைக்க முயன்றேன். அப்போதுதான் புரிந்தது, வெளியே அவசரமாகப் போன என் மனைவி, வாசல் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டுப் போயிருக்கிறாள் என்று. இந்த சம்பந்தத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதை எவ்வளவு மோசமாகவா வெளிப்படுத்துவாள்! அவள் மட்டும் திரும்பிவந்தால் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் ஆத்திரம் வந்தது.

அதற்குள் நீங்கள் எல்லாரும் படியேறி வரும் ஓசை கேட்டது. என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. தங்களை வரவேற்பதற்காக வாசலில் காத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்து வருபவர்கள், கதவு மூடித் தாளிட்டிருந்தால் என்னவென்று அர்த்தம் செய்துகொள்வார்கள்? சகுனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயம் அல்லவா நம்முடையது?

ஒரு கணம் கூச்சத்தால் குறுகிப் போனேன். என் மனைவியின் செயல் எல்லா நாகரிகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. என்னை இவ்வளவு மோசமாகக் கைவிடுவாள் என்று நான் எப்போதும் கருதியதில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, சன்னல்களைச் சாத்தினேன். மகள் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் கவனமாக இருந்தாள்.

வாசல் கதவின் அருகில் நீங்கள் எல்லாரும் வந்துவிட்டது தெரிந்தது. கதவைப் பார்த்ததும் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும். ‘என்னடா இது, பூட்டி இருக்கிறது!’ என்று உங்கள் தாயார் கூறுவது கேட்டது. உங்கள் தகப்பனார் மட்டும், ‘ஏதோ அவசரம் ஏற்பட்டிருக்கவேண்டும். அதுதான் நமக்குத் தகவல் தெரிவிக்காமல் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள்’ என்று கூறுவதும் கேட்டது. ‘மரியாதை தெரியாதவர்கள். நம்மை அழைத்துவிட்டு ஏன் இப்படி அவமானப்படுத்தவேண்டும்?’ என்று உங்கள் தாயார் கோபமாகப் பேசுவதும், ‘சரி, விடம்மா. எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும் நீ கேட்கவில்லை. அதுதான் இப்படி நடந்திருக்கிறது’ என்று நீங்கள் தாயாரைச் சமாதானப்படுத்துவதும், பிறகு எல்லாரும் இறங்கிப் போவதும் கேட்டது.

என் வாழ்க்கையில் ஒருவரையும் இம்மாதிரி நான் அலட்சியப்படுத்தியதில்லை. மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதில்லை. உடலெங்கும் வியர்த்தது எனக்கு. அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன்.

ஒருமணி நேரத்திற்குப் பிறகு என் மனைவி திரும்பிவந்தாள். என்னை விட என் மகளுக்குத்தான் அதிகக் கோபம். ‘முன்பின் தெரியாத மனிதர்களிடம் இவ்வளவு கேவலமாகவா நடந்துகொள்வாய்’ என்று அடிக்கவே போய்விட்டாள்.

ஆனால் என் மனைவியின் வாதமோ வேறு விதமாக இருந்தது. ‘போடி முட்டாள்! நாம் வாழ்வது ஆண்களின் சமுதாயத்தில்! அதைப் புரிந்துகொள். ஒருவன் நூறு பெண்களைப் பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்று  போய்விடலாம். ஆனால், அந்தப் பெண்ணைத்தான் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். அந்தப் பையன் உன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டானாமே, ஏன்- என்று உன்னைத்தான் குறை சொல்லும். உன் அப்பா அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை....எல்லாம் உன் நல்லதற்காகத்தான்....’ என்று மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அதன் பிறகு உங்களைத் தொடர்பு கொள்ளும் தைரியம் எனக்கு வரவில்லை. நீங்களாக என்னிடம் பேசமாட்டீர்கள் என்று தெரியும். இந்தப் பெண் இல்லாவிட்டால் வேறு யாராவது கிடைத்துவிட்டுப் போகிறாள். விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா?     

என்றாலும் உங்களைச் சந்தித்து நடந்த அவமரியாதைக்காக மன்னிப்புக் கேட்டாலொழிய என் மனம் ஆறாது என்று தோன்றியது. 

அதன் பிறகு உங்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய வேலைகள் இருந்தாலும் நான் வராமல் மற்றவர்களையே அனுப்பினேன். அப்படியும் ஒருமுறை போய்த்தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நல்லவேளை நீங்கள் அன்று விடுமுறையில் இருந்தீர்கள். உங்களுக்குத் திருமணம் என்றும் தெரிந்தது. மண்டபத்தின் முகவரியைத் தெரிந்துகொண்டேன். என் மகளும் நேரில் வந்து உங்களிடம் மானசீகமாகவாவது மன்னிப்பு கேட்கப் போவதாகக் கூறினாள்.   

உங்கள் திருமணத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள். 

எது விதிக்கப்பட்டதோ அதுதானே நடக்கும்! உங்கள் பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

திருமணப்பரிசாக ஏதாவது பொருளோ பணமோ கொடுப்பது மரபு. ஆனால் வேறெந்தப் பொருளை விடவும் இக் கடிதம் மதிப்பானது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா!

இப்படிக்கு...
****
கடிதத்தைப் படித்தவள் செல்வத்தை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். ‘அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் எனக்கு நீங்கள் கிடைத்திருப்பீர்களா?’ என்று கொஞ்சினாள். பிறகு, ‘ஒரு நாள் அவர்களைப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?’ என்றாள்.

நல்ல வேளை, நான் சரியென்று சொல்லவில்லை.

பின் குறிப்பு: இந்தக் கதையையும், அடுத்த பதிவில் வெளியாகவுள்ள இதே போன்ற இன்னொரு கல்யாணக் கதையையும் உண்மைக்கதைகள்  என்று யாராவது நம்பினால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

(c) இராய செல்லப்பா


AMAZON.COM  அல்லது   www.pusthaka.co.in தளங்களில் எனது ஆறு மின்-நூல்களைப் பார்த்தீர்களா? படித்தீர்களா?

30 கருத்துகள்:

 1. ஏதோ ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வாகவே இதனைக் கருதுகிறேன். படிக்கப் படிக்க அடுத்து என்னவாகுமோ என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ ஒரு குடும்பமில்லை.. செல்லப்பா குடும்பத்துல நடந்தது...

   நீக்கு
  2. என்ன செய்வது, கற்பனையில் உண்மை கலப்பதைத் தவிர்க்க முடிகிறதா? தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
  3. அப்ப நான் கணிச்சது சரிதானோ?!

   நீக்கு
  4. கொஞ்சம் சரி; கொஞ்சம் சரியில்லை...கதை சுவாரஸ்யமாக இருந்ததல்லவா, ஆளை விடுங்கள். அடுத்த பதிவில் சந்திக்கலாம்!

   நீக்கு
 2. சுவாரஸ்யமான கற்பனை (என்றே எடுத்துக் கொள்கிறேன்). மன்னிப்புக் கேபவர் பெரிய மனிதராகி விடுகிறார். மன்னிப்பவர் இறைவனாகி விடுகிறார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அவர் மிகவும் நல்லவர் எனபதுதான் செல்வத்தின் கருத்து. தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 3. திக், திக் என்றே இருந்தது மாறுபட்ட கோணம்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கதை செல்லப்பா தொடருங்கள் தொடர்வேன்!

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நாள் கழித்து கதை எழுதியிருக்கிறீர்கள். மனைவி, வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டா சென்றுவிடுவார்? பாவம்... பெண்ணாவது அப்பாவோடு குணத்தோடு பிறந்திருக்கிறதே.. தவறுக்கு மன்னிப்பு, அதுவும் கடிதம் மூலமாகக் கேட்பது மிக உயர்ந்த குணம்.

  ஒருவருக்கு விதிக்கப்பட்டதை மற்றவர் கொத்திக்கொண்டு செல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடித்த்தைப் படித்தவுடன் செல்வத்திற்கும் இதே எண்ணம்தான் ஏற்பட்டது. இப்படிப்பட்ட மாமியார் வாய்க்காமல் போனதில் அவனுக்கு மகிழ்ச்சி தான்!தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 6. ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் கட்டமுடியுமா என்பார்கள்! அதான் இங்கே நடந்திருக்கு! பெண் பார்த்திருந்தாலும் அதற்கப்புறமா எத்தனையோ இருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அந்த மாமி அப்படி நடந்திருக்க வேண்டாமே! கடிதத்தை படித்தபின் செல்வம் மிகவும் வருத்தப்பட்டான். தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 7. நல்ல கதை செல்லப்பா சார் இதை உண்மைக்கதை யென்று எடுத்துக் கொள்ளக் கூடாதா மழைநாள் விருந்தினரெண்ணிக்கை எல்லாமே திசை திருப்பவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் திசை திருப்பாவிட்டால் நம்மை யார் படிக்கப் போகிறார்கள் தலைவரே! தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 8. அந்தப் பெண்ணுக்குக் சீக்கிரமாக கல்யாணம் நடந்து மகிழ்ச்சியாக இருக்கட்டும்..

  வாழ்த்துவோம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விருப்பப்படியே நடந்த்தாகத் தெரிகிறது என்கிறான் செல்வம்...தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 9. படிக்கப் படிக்க மனதில் ஒரு வித தவிப்பு ஏற்பட்டுவிட்டது ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்வத்தைப் போன்ற ஏழை இளைஞனின் தவிப்பு உங்களைப் போன்ற உணர்வுபூர்வமான எழுத்தாளரைத் தவிக்க விட்டதில் வியப்பென்ன நண்பரே!தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 10. பொதுவாக, பெண் வீட்ட்டார்கள் எதுக்காவது ஆசைப்பட்டு ஆயிரம்பொய்சொல்லி மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டு. பின்னால் வரதட்சனை கொடுமைனு மாப்பிள்ளையையும் அவன் வீட்டையும் வில்லனாக்குவதுபோல் கதை எழுதுவது "பொய்ப் பெண்ணியவாதிகளின்" புரட்டு.

  நீங்க என்னவோ, ஆம்பளை ஏழையாக, ரெண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்னு ஒரு கம்மிட்மெண்ட்டோட இருந்தால், எந்தப் பொண்ணும் அல்லது பொண்ணுகளுடைய பெற்றோர்களும் சம்மந்தம் பண்ண ரொம்பவே யோசிப்பார்கள்னு பெண் வீட்டார்களும் மட்டமானவர்கள்தான் என்று ஒரு ஆணியப் போக்கில் எழுதி ஆண்களுக்கு வக்காலத்து வாங்கியிருப்பதுபோலிருக்கு, நீங்க சொல்ல வந்த கருத்து.

  மனிதர்கள் ஒரு அற்புதப்பிறவிகள் இல்லை அற்ப பிறவிகள்தான். இதில் ஆணேன்ன பெண்ணென்ன?! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தமிழகத்து நிலைமையைச் சொன்னேன். மாப்பிள்ளை பார்க்கும்போதே, 'பிக்கல் பிடுங்கல் இல்லாத இடமா?' என்று தான் கேட்கிறார்கள். இந்த நிலை இன்னும் மாறவில்லை. பெண் வீட்டார் செல்வம் மிகுந்தவர்களாக இருந்தாலோ, அல்லது, சம்பாதிக்கிற பெண்ணாக இருந்தாலோ, திருமணத்திற்குப் பின் மாமனார் -மாமியார் தங்களோடுதான் வசிப்பார்களா என்று அவளே அவனிடம் கூசாமல் கேட்கிறாள். இதெல்லாம் இங்கு அன்றாட அனுபவங்களாக இருக்கின்றன. சமுதாயச் சிந்தனைகளில் பொருளாதாரம் பெரிய பங்கு வகிப்பதால் இம்மாதிரியான மனிதர்களை யாரும் எதிர்க்க முடிவதில்லை. இந்த இடம் இல்லாவிடில் இன்னொரு இடம் என்றுதான் போகவேண்டியிருக்கிறது.

   அதே சமயம், சில பெண்களும் பெண் வீட்டாரும் பிள்ளைவீட்டார் மீது வீண்பழி சுமத்துவதும், போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுப்பதும் இப்போது அதிகமாகி இருப்பதும் உண்மையே. அதனால் அப்பாவியான ஆண்கள் வேறு வழியின்றி விவாகரத்துக்குச் சம்மதிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

   தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
  2. செல்லப்பா ஸார் நிஜம் இதுதான் உண்மையில்நடக்கிறது. பெண்களுக்குச் சட்டம் சாதகமாக இருப்பதால் பிள்ளை வீட்டாரின் மீது பொய் கேஸ் போட்டும் நடக்கிறது ஸார். உங்கள் கருத்து மிகவும் சரியே ஸார்.

   கீதா

   நீக்கு
 11. நல்ல கதை சார். வித்தியாசமாகவும் இருந்தது..குறிப்பாக வீட்டைப் பூட்டிச் செல்வது.. உண்மையும் இருப்பது போல் தெரிந்தாலும்.. மன்னிப்பு கேட்பது உயரிய குணம் என்றால் மன்னிப்பது அதை விட "க்ஷமா ஹி ஸத்ய ஹை" நு தானே சொல்வது வழக்கம். கதவைப் பூட்டி எல்லாம் செல்வார்களா என்றும் வியப்பாக இருந்தது. இருந்தாலும் செல்லப்பா ஸார் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். உண்மையோ என்றும் தோன்றச் செய்தது.

  பதிலளிநீக்கு
 12. வித்தியாசமான கதை ஐயா...
  தாயின் மனதும் புரிந்தது... தந்தையின் வலியும் புரிந்தது...
  சிறப்பான கதை.

  பதிலளிநீக்கு