செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 09, 2020

பொன்னித்தீவு -4

பொன்னித்தீவு - 4
     -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்


(4) நெக்லஸ் நெக்லஸ்

கேலியும் கிண்டலுமாகத் தன்னைச் சூழ்ந்திருந்த தோழிகளிடம் இருந்து ஒரு வழியாக விடைபெற்று முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் யமுனா. விடியற்காலையில் இருந்து நடைபெற்ற திருமணச் சடங்குகளின் சுமை அவள் கண்களின் கீழ் கருவளையமாக உருமாறி இருந்தது. பதினெட்டு டிகிரிக்குக் குளிரூட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

அனுபவம் புதுமை என்பதால் தயக்கமும் பயமும் இருந்தது. என்னதான் செல்வம் அவளுக்கு ஆறுமாதம் முன்பிருந்தே பழக்கமானவன் என்றாலும் வெறுமனே அலைபேசி வழியே ஏற்பட்ட பேச்சுப் பழக்கம்தான் அது. பெண் பார்க்கவந்தபோது சில நிமிடங்கள்தான் நேரில் பார்த்துப் பேசமுடிந்தது. ஆகவே முகத்தில் நாணம் பொங்கிக்கொண்டிருந்தது.

பூவும் பொட்டும் படத்தில் முதல் இரவுக் காட்சி 
அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் ஓரத்தில்  விஷமப் புன்னகையுடன் நின்றிருந்தான் செல்வம். பட்டு வேட்டியில் இருந்தான். புழுக்கம் காரணமாகப் பட்டுச் சட்டையைக் கழற்றிச் சுவரில் மாட்டியிருந்தான். அவனது அழகை இரசித்தபடியே தயங்கித்தயங்கி  நின்றாள் யமுனா.

எவ்வளவு சினிமாக்களில் பார்த்திருக்கிறாள், கதாநாயகன் ஓடிவந்து கதாநாயகியை அலேக்காகத் தூக்கிக்கொண்டு கட்டிலில் போடுவதை! இந்தக்  கல்லுளிமங்கன்  சும்மா சிரித்துக்கொண்டே நிற்கிறானே!

ஆகட்டும், என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று தலைக்கு மேல் சுழன்றுகொண்டிருந்த காற்றடியை நோக்கிக் கண்களைப்  பாயவிட்டாள்.
முந்தானையால் முகத்தை மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டாள்.

அதே நிமிடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. செல்வத்தின் கைகள் அவளை வேகமாகப் பற்றி இழுத்துக் கட்டிலில் போட்டன. பிறகு சன்னமான ஒரு விளக்கை ஒளிர ஆரம்பித்தது.

“என்ன மேடம், மேக்கப் அதிகமாகிவிட்டதா? அரிக்கிறதா?” என்று கிண்டலாகக் கேட்டவன், தன்  பட்டு வேட்டியின் ஒரு முனையால் அவள் முகத்தைத் துடைக்கமுயன்றான். அவள் பொய்க் கோபத்துடன் அவன் கைகளை விலக்கினாள்.
     
அவளுடைய முகத்தைத் தன் கைகளால்  பிடித்துக்கொண்டான் செல்வம். “மேடம், முதலிரவில் முதல்முதலில் செய்யவேண்டிய காரியம் என்ன தெரியுமா?”  என்றான்.

தெரியாது   என்று கண்களால் சொன்னாள்  அவள்.

“நிச்சயமாகத் தெரியாதா?”

“பிளீஸ், எனக்கு நிஜமாகவே தெரியாது” என்றாள்  அழும் குரலில்.

 “உங்களுக்குத் தெரியாது சரி. உங்கள் தோழிகளுக்குமா தெரியாது? உங்கள்  சித்தி, பெரியம்மா, அத்தை, பாட்டிமார்கள் யாரும் உங்களுக்குத் சொல்லித் தரவில்லையா?” என்றான். வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை ஆசிரியர் கேட்பதுபோல் இருந்தது அவன் குரல்.

அவளுக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. உண்மையிலேயே தான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல் உணர்ந்தாள். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, “பிளீஸ், என்னை ரொம்ப சோதிக்காதீர்கள்.  நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். நீங்களே என்னவென்று சொல்லிவிடுங்களேன், நான் செய்கிறேன்!” என்றாள் கொஞ்சும் குரலில்.

“அப்படி வா வழிக்கு!” என்றவன், அவள் செய்யவேண்டியதை இரகசியமாக அவள் காதுகளில் சொன்னான்.

“ச்ச்சீய்..!” என்று அவன் முகத்தை விலக்க முயன்றாள். “மாட்டேன்!” என்றாள்.

“ஓ, மாட்டீர்களா? அப்படியானால்  இப்போதே என் மாமியாருக்குப் போன் செய்யட்டுமா?” என்று அலைபேசியை எடுத்தான் செல்வம்.

“நோ!” என்று அதை பிடுங்கி எறிந்தாள் யமுனா. அதே கணத்தில், அறையில் இருந்த சிறிய வெளிச்சமும் அணைந்துபோனது.

கட்டில் மட்டும் விட்டுவிட்டு மெல்லிய முனகல்களைப் பலமுறை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

யமுனா எழமுயன்றாள். கால்கள் இரண்டும் நெறிகட்டியதுபோல் வலித்தது. அவன் தன்னை நோக்கி அவளை இழுத்துக்கொண்டான். “இதுதான் என் மனைவிக்கு நான் தரும் முதல் பரிசு” என்று அவள் கழுத்தில் ஒரு நகையை அணிவித்தான். இருட்டிலேயே அவளுக்குப் புரிந்தது. அது ஒரு நெக்லஸ்!

அப்படியே அவனை அள்ளி அணைத்துக்கொண்டாள். அவனுக்கு மூச்சு முட்டியது.

“ஒன்று கேட்கட்டுமா, நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று அவன் கன்னங்களை வருடினாள். அவன் உரியமுறையில் சரி என்றான்.

“நீங்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் சாப்பாடு போடமாட்டார்களா?” என்று கடகடவென்று சிரித்தாள்.

அவள் பிடியை விடாமலேயே அவன் சடக்கென்று எழுந்துகொண்டான். “என்ன திமிர் உனக்கு! நான் சொல்லட்டுமா, நீ ஏன்  என்னைவிட குண்டாக இருக்கிறாய் என்று? புகுந்த வீட்டில் உனக்கு சோறு போடமாட்டார்களோ என்ற சந்தேகத்தில் உனக்கு இரண்டு பங்கு சோறு போட்டு கொழுக்க வைத்திருக்கிறார்கள். சரிதானே?” என்றான்.

பிறகு மௌனம்.   

வெகு நேரத்துக்குப் பின்  மெல்ல எழுந்த யமுனா, “பால் கொஞ்சம் மீதமிருக்கிறது. குடிக்கிறீர்களா?” என்றாள்.

“மாட்டேன், நீதான் குடிக்கவேண்டும்” என்று டம்ளரைப் பிடுங்கி அவள் வாயில் திணித்தான் செல்வம். அவள் வெட்கத்துடன் அவன் முகத்தில் நகக்குறியிட்டாள். அவ்வளவில் ‘ணங்’கென்ற சப்தத்துடன் பால் டம்ளர் நழுவித் தரையில் விழுந்தது.

***
“என்ன மாப்பிள்ளை, இப்படிச் செய்துவிட்டீர்கள்?” என்று பரமசிவத்தின் குரல் கேட்கவும் அலறிக்கொண்டு எழுந்தான் செல்வம்.

“உங்களுக்கு இராத்திரியில் பால் குடிக்கும் பழக்கம் உண்டு என்று யமுனா சொன்னாள். அதுதான் ஒரு டம்ளரில் உங்கள் பக்கமாக வைத்திருந்தேன். நீங்கள் குடிக்க மறந்துபோய், இப்போது தலையணையை அதன்மீது உதைத்துத்தள்ளி விட்டீர்களே!” என்றவர், துடைக்கும் துணியால் தரையில் சிந்தியிருந்த பாலைத் துடைத்தெடுத்தார். பிறகு ஈரமான துணியால் அந்த இடத்தை நன்றாகத்  துடைத்தார்.    

“சாரி மாமா! சாரி மாமா! “ என்று இரண்டுதரம் கூறிவிட்டு மறுபடி அயர்ந்து தூங்க ஆரம்பித்தான் செல்வம். ‘எல்லாம் கனவுதானா?’

அவனைப் பார்க்கப்  பரிதாபமாக இருந்தது பரமசிவத்திற்கு. ரொம்ப நல்லவன். பாவம், பொழுது விடிந்தால் செம்பகத்தின் பிரச்சினை எப்படி ஆகுமோ என்று கலங்கிப் போயிருக்கிறான் போலும். நன்றாகத் தூங்கட்டும்.

****
காலையில் அவன் எழுந்திருப்பதற்கு எட்டுமணி ஆகிவிட்டது. எப்படியும் ‘ஒர்க் ஃப்ரம்  ஹோம்’ தான்.  ஒன்பதரை மணிக்கு லாக்-இன் செய்தால் போதும். என்றாலும் எட்டரைக்கே தயாராகிவிட்டான்.

ஆச்சி வரவேண்டும். செம்பகம், அவளுடைய கணவன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய நான்குபேர்களும் வரவேண்டுமே!

பரமசிவத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. பிரச்சினையை எவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட முடியுமோ அவ்வளவு நல்லது என்று கருதினார். பையில் பணம் இருந்தது. என்றாலும் ஏ.டி.எம். போய் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்தார். யமுனா வருவதற்குள் எல்லாம் சுமுகமாக முடியவேண்டும். ஆனால் இந்த ஆச்சியம்மா யமுனாவிடம் சொல்லாமல் இருக்கவேண்டுமே!

சொல்லமாட்டார். அவருக்கும் மூன்று பெண்கள். இன்னொரு குடும்பத்தை நிச்சயம் கலைக்கமாட்டார். ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்துவிட்டார்.

பத்துமணி வரையில் யாரும் வரவில்லை. குழப்பமடைந்த பரமசிவம், ஆச்சியம்மாவுக்கு போன் செய்தார். “வந்துகிட்டு இருக்கீங்களாம்மா?” என்றார்.

“நான் மட்டும் வந்து என்ன செய்வது? செம்பகமும் அவ புருஷனும் வரமாட்டாங்களே! தெரியாதா உங்களுக்கு?” என்கிறார் ஆச்சி. 

“என்ன விஷயம்?” என்றார் பரமசிவம் கலவரத்துடன்.

“அவங்க தெருவில் கொரோனா  டெஸ்ட் செஞ்சதில் ரெண்டு பேருக்கு பாசிட்டிவ் வந்ததாம். அதனால் இவங்களையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். பதினைந்துநாள் வெளியே வர முடியாதாம்!”

அப்போது திடுக்கென்று அங்கு தோன்றினாள்  புஷ்பா. “இன்ஸ்பெக்டர் சாரும் வரமாட்டார்” என்றாள் கேலியாக. 

“நெஜம் தாங்க. ஐயா போனவாரம் கோயம்பேட்டில் டியூட்டி பண்ணினார் இல்லையா, அதனால் அவரையும் தனிமைப்படுத்திவிட்டார்கள்” என்றாள். கோயம்பேடுதான் சென்னையில் கொரோனாவின் புது கிளஸ்டராம்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் முல்லைப்பூவை எடுத்து செல்வத்திடம் கொடுத்தாள். “உங்க செம்பகம் கொடுத்தாள்” என்றாள். ‘உங்க’ என்பதை அவள் உச்சரித்ததில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் இருந்ததைப்  பரமசிவம் கவனிக்கத்  தவறவில்லை.  

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வெள்ளி, மே 08, 2020

பொன்னித்தீவு -3


பொன்னித்தீவு - 3

  - இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(3) செல்வம் செல்வம்

பொதுவாகவே மனைவிக்கு மிகவும் பயந்தவன் செல்வம். இன்றோ அவள் போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ புகார் செய்து இருக்கிறாள். விவரம் தெரியவில்லை. இன்ஸ்பெக்டரோ தனக்கும் செம்பகத்திற்கும் காதலிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்.

மோட்டார் சைக்கிளை பார்க் செய்துவிட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வாசலில் நெருங்கியவன், கதவைத் தட்டுவதா அல்லது அழைப்புமணியை அழுத்துவதா என்ற தயக்கத்தில் இருந்தான். நல்லவேளை அவன் கை வைத்த உடனே கதவு திறந்து கொண்டது.

யமுனா தான் ஆத்திரத்தோடு கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு, "வாங்க மாப்பிள்ளை" என்று  ஆச்சரியத்தோடு வரவேற்பு கொடுத்தார்  அவனுடைய மாமனார் பரமசிவம்.

"நமஸ்காரம் மாமா" என்று சம்பிரதாயமாகக் கூறிவிட்டு, கையிலிருந்த பெட்டியை மேஜை மீது வைத்துவிட்டு, கால் கை கழுவிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தான் செல்வம். என்ன இது, யமுனாவைக் காணோம்?

பரபரப்போடு இரண்டு படுக்கையறைகளையும் பால்கனிகளையும் ஆராய்ந்தான். யமுனா இல்லை.

அதற்குள் பரமசிவம், "யமுனாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஆகவே அவள் செங்கல்பட்டுக்குக் கிளம்பியிருக்கிறாள். நீங்கள் வரும் வரை காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்று நான்தான் அவளை அனுப்பி வைத்தேன்" என்றார்.

"ஆபீஸில் இருந்து வந்தவுடன் நீங்கள் ஹார்லிக்ஸ்  சாப்பிடுவீர்களாமே, அடுப்பில் பால் இருக்கிறது. நான் வேண்டுமானால் கலந்து கொண்டு வரட்டுமா?" என்றார் பரமசிவம்.

மாமனாரும்  மாப்பிள்ளையும்: 
(படத்துக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமில்லை!)

வேண்டாம் என்று செல்வம் தானே சமையலறைக்குள் சென்றான். பால்  சூடாகவே இருந்தது. இரண்டு ஸ்பூன் ஹார்லிக்சை பாலில் கலந்து வேகமாக விழுங்கினான். மாமனார் திடீரென்று எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியாமல் குழம்பினான்.

"டிவியில் செய்திகள் போடட்டுமா?" என்று பவ்யமாகக் கேட்ட மாமனார், சோபாவில் அவனுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டார். அது அவனுக்குப் புதுமையாக இருந்தது.

"மாப்பிள்ளை, ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே" என்று மெதுவாகக் கேட்டார்.

செல்வத்திற்கு திக்கென்றது. இன்ஸ்பெக்டர் மாதிரி இவரும் செம்பகம், நெக்லஸ் என்று பேசப் போகிறாரோ என்று பயந்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சொல்லுங்க மாமா" என்றான்.

"இது யமுனாவுக்குத் தெரிய வேண்டாம். நமக்குள் இருக்கட்டும்" என்று அவனுடைய வலது கையைப் பிடித்துக்கொண்டார் பரமசிவம்.

"நாலாவது மாடியில் இருக்கும் ஆச்சியம்மாவைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர்தான் சொன்னார். யாரோ ஒரு முரடன் சைக்கிளில் வந்து உங்களை மிரட்டினானாமே!" என்று சொல்லி அவனுடைய எதிர்வினைக்காக நிறுத்தினார்.

செல்வத்தின் பாடு இக்கட்டானது. தன் மாமனாரிடமே ஆச்சி இதையெல்லாம் சொல்லியிருந்தால், யமுனாவிடம் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறாரோ! ஆச்சிக்கு வாய் ரொம்ப நீளம். அவள் வம்புப் பேச்சால் எவ்வளவோ குடும்பங்கள் உடைந்து போயிருக்கின்றன.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா" என்றான் செல்வம் அலட்சியமாக, ஆனால் உள்ளூர பயத்துடன்.

பரமசிவம் அவனுடைய இடது கையையும் பிடித்துகொண்டார். "பாருங்க மாப்பிள்ளை, நீங்கள் குடியிருக்கும் பகுதி அந்த முரடனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவனுடைய மனைவி ரொம்ப அழகான பெண் என்கிறார்கள். இதெல்லாம் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். எனக்கு யமுனாவின் வாழ்க்கைதான் முக்கியம். அதற்காக நான் .எதுவும் செய்யத் தயார். ஆகவே என்னிடம் மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்" என்றார் பரமசிவம்.

"யமுனா கொஞ்சம் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வாளே தவிர  உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாள். நான் நினைக்கிறேன், ஒருவேளை அவள் மீது நீங்கள் கோபத்தோடு இருந்த சமயம் பார்த்து இந்தச் செம்பகத்தோடு உங்களுக்கு நெருக்கம் உண்டாகியிருக்குமோ? …." என்று அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தார் பரமசிவம். “ரொம்ப அழகாய் இருப்பாளாமே!”

அவர் பிடியில் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டு எழுந்தான் செல்வம், "அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா. அவளை நான் சரியாகப் பார்த்தது கூடக் கிடையாது. வேண்டுமானால் யமுனாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஆச்சி சொல்வதை நம்பாதீர்கள். உலக மகா ஃபிராடு" என்றான்.

"என் மீது இவ்வளவு மோசமான அபிப்பிராயம் கொண்டிருப்பீர்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை மாமா" என்று அவரை விட்டுச் சற்றே விலகி நின்றான்.

பரமசிவம் அவனை அணைத்துக் கொள்பவர் போல அருகில் வந்தார்.  "பாருங்க மாப்பிள்ளை, நானும் உங்களைப்போல வாலிபனாக இருந்துதான் வயதாகி இருக்கிறேன். என் சர்வீஸில் பத்து இடங்களில் குடும்பத்தை விட்டுத்  தனியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. செம்பகம் மாதிரி எவ்வளவு ஆபத்துக்கள் எனக்கு ஏற்பட்டது தெரியுமா? நாம் எவ்வளவுதான் விலகி நின்றாலும் இது போன்ற விஷயங்கள் வந்தே தீரும். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சனியன் தொலையட்டும். யமுனா வருவதற்கு இன்னும் இரண்டு நாள் ஆகும். நடந்தது என்னவென்று நீங்கள் சரியாகச் சொன்னால் அந்த செம்பகத்தையும் அவள் கணவனையும் பார்த்துப் பேசி  நானே செட்டில் செய்து விடுகிறேன். பணத்தைப் பற்றிக்  கவலைப்பட வேண்டாம். யமுனாவுக்கு விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்" என்றார் பரமசிவம்.

“ஆனால் ஒன்று, அதன்பிறகும் இந்த மாதிரியெல்லாம் நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஆமாம், சொல்லிவிட்டேன்" என்றார் மிரட்டும் தொனியில்.

அழுகையும் ஆத்திரமும் ஒருசேர செல்வத்தின் முகத்தில் குடிகொண்டன. “மாமா, நீங்கள் அந்த வயதில் என்னென்னவோ செய்திருக்கலாம். ஆனால்  இதுவரை யமுனாவைத் தவிர யாரையும் நான் மனத்தாலும் நினைத்தது கிடையாது. நான் கிருஷ்ணன் அல்ல, இராமன்! தெரிந்துகொள்ளுங்கள். வேண்டுமானால் எங்கள் ஆபீசில் இருக்கும் எல்லாப் பெண்களையும் ஒருவர் விடாமல் கேட்டுப்பாருங்கள்” என்று கத்தினான். “இருங்கள், இப்போதே யமுனாவுக்கு போன் செயகிறேன்.”

“உஷ்!” என்று அவனை அடக்கினார் பரமசிவம். “இப்போது இராத்திரி ஆகிறது. நீங்கள் இராமனா கிருஷ்ணனா என்பதை செம்பகத்தின் கணவனிடம் கேட்டால் போயிற்று. நாளை காலையில் அவர்களை அழைத்துவரும்படி ஆச்சியம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். அதுவரை பொறுங்கள்” என்றவர், “எதற்கும் அவரையும் வரச்சொல்லி விடட்டுமா?” என்றார்.

யார் அவர் என்று கண்களாலேயே கேட்டான் செல்வம்.
   
“இந்த ஊரில்தான் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். நமக்கு வேண்டியவர். கண்ணன் என்று பெயர். விஷயத்தைக் கொஞ்சம் குறைந்த செலவிலேயே முடித்துக் கொடுப்பார்.”

தடக்கென்று  சோபாவில் சாய்ந்தான் செல்வம்.

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?) 
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

புதன், மே 06, 2020

பொன்னித்தீவு -1 (திடீர் தொடர்கதை)


பொன்னித்தீவு  (திடீர் தொடர்கதை)

 - இராய  செல்லப்பா

(1)செம்பகமே செம்பகமே 

கொரோனாவுக்காகத் தன்  கைக்குட்டையைக்  குறுக்காக மடித்து முகமூடியாகக் கட்டிக்கொண்டு வீதிக்கு வந்தான் செல்வம்.

“சார் நில்லுங்க” என்று பின்னாலிருந்து ஒரு குரல். 

குரலுக்குரியவன் சைக்கிளில் இருந்து வேகமாக இறங்கி, “நீங்க செய்றது நல்லா இல்லை” என்றபடி செல்வத்தின் முகத்தை  உற்று நோக்கினான். இளைஞன். இருபத்தைந்து வயது.  

அவன் யாரென்று செல்வத்திற்குத் தெரியவில்லை. குழப்பத்துடன், “நீங்க யாருங்க?” என்றான். 

அவன் கபடத்துடன் சிரித்தான். “பேரைச் சொல்லிவிட்டால் கண்டுபிடித்து விடுவீர்கள். அதனால் மாட்டேன். இனிமேலாவது ஒழுங்காக இருங்கள். இல்லாவிட்டால் நடப்பதே வேறு” என்று குரலை  உயர்த்தியவன், வந்த வேகத்தில் சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு மறைந்தான்.     

தரைத் தளத்தில் நடந்த இந்த உரையாடலை நான்காவது தளத்தில் இருந்த வம்பு ஆச்சி ஒருவர் கூர்ந்து கவனித்துவிட்டார் என்பது செல்வத்திற்கு மறுநாள் காலைதான் தெரியவந்தது.  

ஆச்சி அவனிடம் நெருங்கி, “செல்வம் தம்பி, நேத்து அந்த ஆள் உன்னிடம் சத்தம் போட்டானே, என்ன விஷயம்?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“ஒண்ணுமே புரியலை ஆச்சிம்மா! நான் செய்யறது சரியில்லையாம்! மிரட்டிவிட்டுப் போனான். ஆனால் அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” என்றான் செல்வம்.

“நிஜமாவா? அவன் தான் செம்பகத்தின் வீட்டுக்காரன் ராஜா.  இதுவரைக்கும் நீ பார்த்ததே இல்லையா?” என்றார் ஆச்சி  வியப்புடன். “ஆள் ரொம்ப முரடன்!” 

“எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு. அழகான பொண்டாட்டி ஆச்சே!   அதான் யாராவது கொத்திண்டு போயிடுவாங்களோன்னு தவிக்கிறான். அந்தப் பொண்ணு கிட்டேருந்து கொஞ்சம் விலகியே இருந்துக்கோ! நான் வர்றேன், பூப் பறிக்கணும்” என்று அறிவுரை கூறிவிட்டு தோட்டத்துப்பக்கம்  சென்றுவிட்டார் ஆச்சி.

அப்போதுதான் செல்வத்திற்கு உரைத்தது. அட, பூ! 

ஆமாம், நேற்று காலை செம்பகம் கொடுத்ததாக  ஒரு காகிதப் பொட்டலத்தை மாமி  கொடுத்தார்.  “தொடுத்த மல்லிகைப்பூ. ஒரு முழம். பணம் எதுவும் வேண்டாமாம். அவங்க வீட்டில் நிறைய பூக்குதாம். சாமிக்கு வைக்கலாம் இல்லையா?” 


அதே சமயம் அவனைப் பார்த்து அழகானதொரு  புன்முறுவலுடன் படியிறங்கிப் போனாள் செம்பகம். 


கடைசிப் படியில்  ஒரு கணம் நின்று மீண்டும் அவள் புன்னகைத்ததைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட சந்திரன் -  அடுத்த பிளாக்கில் வசிக்கும் இஞ்சினீரிங் இரண்டாவது வருடம் படிக்கும் மாணவன் - செம்பகத்துடன் ஏதோ  பேச்சுக்கொடுத்தவாறே சற்றுதூரம் நடந்துபோனது செல்வத்திற்கு நினைவுக்கு வந்தது. 

இளம்வயதுப் பணிப்பெண்கள் மீது சந்திரனுக்கு ஒரு கண் என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லாருக்குமே தெரியும். துரதிர்ஷ்டவசமாக, அவன் அதுவரை ‘சைட்’ அடித்த பெண்கள் யாரும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. செம்பகம்,  அவனுடைய அண்மைக்காலக்  கண்டுபிடிப்பு. செல்வத்தின் பிளாக்கில் ஒரு வக்கீல் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவள்.

அவளுக்கும் சந்திரனைக் கண்டால் பிடிக்கவில்லை என்றுதான் வக்கீல் மாமி கூறியிருக்கிறார். ஆனால் செம்பகம் கொஞ்சம் பயந்த சுபாவம். அதனால் அவனைச் சட்டென்று கண்டிக்க முடியாமல் இருக்கிறாளாம். 

ஓஹோ, இந்தச் சந்திரன்தான் செம்பகத்தின் கணவனுக்குத் தன்னைப் பற்றிப்  ‘போட்டுக் கொடுத்து’ இருக்கவேண்டும் என்று செல்வத்துக்குப் புரிந்துவிட்டது.
உண்மையில்  செல்வத்திற்கு அவள்மீது எந்தப் பற்றுதலும் இல்லை. அதற்கு முதல் காரணம், செல்வத்தின் மனைவி யமுனா. கணவனை விட உடல் வலிமையும் பிறந்தவீட்டுப் பொருளாதார வலிமையும் அதிகம் கொண்டவள். வேறு பெண்கள்மீது இவனுக்கு நாட்டம் என்று சின்ன சந்தேகம் வந்தாலும் பந்தாடிவிடுவாள். இரண்டாவது காரணம், வாங்கும் சம்பளத்தை யமுனாவிடம் கொடுத்துவிட்டு தினந்தோறும் அவள் கொடுக்கும் ஐம்பது ரூபாயில்தான் வாழ்க்கை நடத்தியாகவேண்டும். காதலுக்குச் செலவிட செல்வத்திடம் காசு எது?    

ஆனால் இப்போது செல்வத்தைப் புதிய பயம் பிடித்துக்கொண்டது. தன்னிடம்  செம்பகத்தின் கணவன் தகராறு செய்ததைப் பார்த்த   ஆச்சியம்மா, தன் வழக்கப்படி மற்றப் பெண்களிடம் வத்தி வைத்துவிட்டால்…? அதை யமுனாவும் நம்பி விட்டால்...? வக்கீல் மாமியும் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு  விட்டால்….? 

அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். செல்வத்தின் மனதில் கொந்தளிப்பு அடங்கவில்லை. ஒன்று ராஜாவை உதைக்கவேண்டும். அல்லது சந்திரனை உதைக்கவேண்டும். 

ஆனால் அவனால் முடிந்ததெல்லாம் தன்னுடைய மோட்டார்சைக்கிளை உதைப்பது மட்டுமே. 

மாலையில் வீடு திரும்புவதற்குள் பிரச்சினை எப்படித் திரும்புமோ என்ற அச்சத்துடனேயே அன்றைய பொழுதைக்  கழித்தான் செல்வம்.              

அலுவலகம் முடிவதற்குச் சில மணித்துளிகள் இருந்தபோது அவனுடைய அலைபேசி ஒலித்தது. 

“நேராக இங்கு வந்துவிடுங்கள். உங்களை விசாரிக்க வேண்டி இருக்கிறது” என்று காவல்துறையில் இருந்து அழைப்பு. 

பதறிப்போனான்  செல்வம். கையிலிருந்த மோட்டார்சைக்கிள் சாவி நழுவிக் கீழே விழுந்தது. உடம்பெல்லாம் வியர்த்துப் போனது. “மன்னிக்க வேண்டும். யாராவது புகார் செய்திருக்கிறார்களா?” என்றான் நடுங்கிய குரலில்.

“ஆமாம், அவர் பெயர் யமுனா.”

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்



                      தகவல் நன்றி: தினத்தந்தி பவளவிழா மலர் -2017