ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

எது இலக்கியம்?


எது இலக்கியம்?

-இராய செல்லப்பா, சென்னை 

19-4-2020 அன்று காணொளிக் காட்சிவழியாக நடைபெற்ற குவிகம் இலக்கிய அளவளாவலில் வாசித்த கட்டுரை
**

ரிக்வேதத்தில் நாஸதீய சூக்தம் என்ற பகுதியில்  மூன்றாவது ஸ்லோகத்தில் இடம்பெறும் ஒரு வாக்கியத்தை உயர்ந்த இலக்கியத்திற்கு உதாரணமாகக் காட்டுகிறார் சுவாமி விவேகானந்தர்.

 'தம ஆஸீத் தமஸா கூட(goota)  மக்ர (magra) அப்ரகேதம் ஸலிலம் ஸர்வமா இதம்' - இந்தப் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன்பு எங்கும் இருட்டும் வெள்ளமுமாக இருந்ததாம். ஒன்றை மற்றொன்று அடையாளம் காண முடியாமல் இருந்ததாம். 'இருளை இருள் போர்த்திக்கொண்டிருந்தது' - என்று பொருள். 5000 வருடங்களுக்கு முந்திய இலக்கியம் இது. 

குவிகம்  பதிப்பகம் அண்மையில்  வெளியிட்ட எனது  புத்தகம்
ஐம்பது வருடங்களுக்கு முன்பு கண்ணதாசன் இதே போன்ற ஒன்றை எழுதினார். 'நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது' என்று. எத்தகைய கவித்துவம்!

உலகில் முதலில் தோன்றிய இலக்கிய வடிவம் கவிதையே என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லாக் கவிதைகளுமே இலக்கியம் தானா என்பதுதான் கேள்வி.

'இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை' என்ற ஒரே ஒரு இரண்டுவரிக் கவிதை மட்டும்தான் எ. அரங்கநாதன் எழுதினார். 1973இல். இன்றுவரை நினைக்கப்படுகிறார்.

'அவன் பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது' என்றார் வைரமுத்து 1982இல்.

'எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும்' என்றார் வாலி இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு.

'இருப்பதற்குத்தான் வருகிறோம், இல்லாமல் போகிறோம்' என்றார் நகுலன்.

'விளக்கு புதியது என்கிறாய், ஆனால் வெளிச்சம் பழையதல்லவா?' என்கிறார் அப்துல் ரகுமான்.

'நேற்றைக்கும் நாளைக்கும் நடுவில் நாம் நின்று தவிக்கின்றோம் இன்றைக்கு!' என்கிறார் எஸ் வைதீஸ்வரன்.

இந்தக் கவிதைகளை எல்லாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வதில் நமக்குத்  தயக்கம் இல்லை. ஆனால் கவிதை என்ற பெயரால் வெற்று வார்த்தைகளை  அடுக்குபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?

நாற்பத்தாறு வருடங்களுக்கு முன்பு இராணிப்பேட்டையில் இருந்து நான் சென்னைக்குக் குடிபெயர்ந்தேன். மேற்கு மாம்பலம் கோவிந்தன் ரோடு ஒன்பதாம் நம்பர் வீட்டில் ஆறு குடித்தனக்காரர்களில் நானும் ஒருவனாகச்  சேர்ந்து கொண்டேன். அப்போது அடிக்கடி கவிஞர் சுரதா அவர்களைச் சந்திப்பதுண்டு. ஒருமுறை சாகித்ய அகாடமி கருத்தரங்கில்  அவரைப் பார்த்தபோது அகாடமியை  அவர் மிகவும் புகழ்ந்தார். காரணம் அவர்கள்தான் விருந்தில் தவறாமல் அசைவ உணவு பரிமாறுவார்களாம்.

அப்போது சுரதா அவர்களைக் கேட்டேன் கவிஞன் என்பவன் யார், கவிதை என்பது என்ன என்று. காரணம், அப்போது மேகம், வானம், ஜன்னல், நிலவு என்று மெட்டுக்குப்  பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு புதுக் கவிஞருக்கு அதீதமான விளம்பரம் கிடைத்துவிட்டதைப் பார்த்து மு.மேத்தாவும், நா.காமராசனும், தமிழன்பனும் இன்னும் பல வானம்பாடிக் கவிஞர்களும் கூட திரைப்படங்களுக்குப் பாட்டெழுதிப் பிறவிப்பயனை எய்திவிடப்   போராடிக்கொண்டிருந்தார்கள். கவிதை என்பதும்  இலக்கியம் என்பதும் திரையுலகை மட்டுமே சார்ந்த விஷயம்போல ஒரு பிரமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். சுரதாவும் திரைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால் ‘அமுதும் தேனும் எதற்கு’ போன்ற சில பாடல்கள்தான்.   

வெந்த கோழிக்குஞ்சின் சதைப்பகுதியை அனுபவித்து மென்றுகொண்டிருந்த சுரதா என்னைத் தீர்க்கமாக நோக்கி, "தம்பி, தாய் என்பவள் யார்?" என்று கேட்டார். கேள்வியின் நோக்கம் புரியாமல் நான் விழித்தேன்.

அவரே பதில் சொன்னார்: "ஒரே ஒரு குழந்தை பெற்றிருந்தாலும் அவள்  தாய்தான். குறைப்பிரசவத்தில் கருவை இழந்திருந்தாலும் அவள் தாய்தான். ஏனென்றால் அடுத்த முறை அவள் முழு பிரசவத்தைத் தரக் கூடும் அல்லவா?" என்றார்.

என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. தான் பெற்ற குழந்தையைப்  பெருமையோடும் பெருமிதத்தோடும் அனைவருக்கும் காட்டி மகிழும் தாய்போல, எந்த ஒருவன் தன்னுடைய எழுத்தைத் துணிச்சலோடும், பெருமையோடும், சுயகௌரவத்தோடும் வாசகனுக்கு அளிக்க முன்வருகிறானோ அவன் படைப்பதற்குப் பெயர்தான்  இலக்கியம்.
***

நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் விகடனில் ஜெயகாந்தன் அறிமுகமாகிக் கொண்டிருந்தார். 'அக்னிப்பிரவேசம்', 'யாருக்காக அழுதான்?', 'இனிப்பும் கரிப்பும்', 'புது செருப்பு கடிக்கும்', 'தேவன் வருவரா?' போன்ற அவருடைய முத்திரை கதைகளை பிரமிப்போடு படித்துக்கொண்டிருந்த  காலம். ஆனால் அண்மையில் அதே கதைகளை நான் மீண்டும் படித்தபோது, இந்த பிரமிப்புக்குக் காரணம் அவருடைய எழுத்து வன்மையை விடவும், எனது இளம்வயதுக்கே உரிய அறியாமையும், அனுபவமின்மையும், அறிவுத்தேடலும்தாம்  என்று தெளிவாகத் தெரிந்தது.

அதேசமயம், 'குறிஞ்சி மல'ரில் வரும் பூரணியும் அரவிந்தனும்,  'பொன் விலங்கி'ல் வரும் மோகினியும் சத்தியமூர்த்தியும் பல ஆண்டுகள் கழித்து அண்மையில் படித்தபோதும் என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை. 'மணிமொழி நீ என்னை மறந்துவிடு' என்று தமிழ்வாணன் கூறினாலும் அவளை மறக்க முடியவில்லை. சுஜாதாவும் பாலகுமாரனும் அப்படியே. கல்கியும் விக்ரமனும் சாண்டில்யனும் கோவி மணிசேகரனும் அகிலனும் மாயாவியும் சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமய்யா உள்ளிட்ட மணிக்கொடி பரம்பரையும் அதே போன்ற இன்னும் பலரையும் எத்தனை முறை படித்தாலும் அதே பிரமிப்பை மீண்டும் பெற முடிகிறதே அது எப்படி?

‘கற்புள்ள பெண்கள் நாலு பேர் பெயரைச் சொல்லுங்கள்’ என்று ஒரு திரைப்பத்தில் பாக்யராஜ் கேட்பார். உடனே ‘நளாயினி, வாசுகி, சீதை, கண்ணகி…’ என்று எல்லாரும் கூறுவார்கள். உடனே பாக்யராஜ், ‘அப்படீன்னா ஒங்க பெண்டாட்டிகள் எல்லாம் கற்புள்ளவர்கள் இல்லையா?’ என்று கேட்டு அதிரவைப்பார். ஆகவே ஒப்புக்கொண்டு விடுகிறேன்: இந்தக் கருத்தரங்கில் பங்குபெறுபவர்களிலும் இலக்கியவாதிகள் நிச்சயம் உண்டு! 
***

திருக்குறள் போன்ற சங்க நூல்களையும் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களையும் இலக்கியங்கள் தாமென்று தமிழ் உலகம் புரிந்து கொள்வதற்குப் பதினெட்டு நூற்றாண்டுகளும் ஓர் உ.வே.சா.வின் வரவும்  தேவைப்பட்டன. பாரதியாரின் கவிதைகள்  பொதுவெளியில் உலாவருவதற்கு அவர் இறந்து ஐம்பது  ஆண்டுகள் தேவைப்பட்டன. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கூட, எழுதப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகே விற்பனையில் சாதனை படைக்கத் தொடங்கியது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, காலத்தால் அழியாது நிற்பதே இலக்கியத்திற்கான சரியான  அளவுகோல் என்று தோன்றுகிறது. 
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நிகழ்கால வாசகர்களை விடவும் எதிர்கால வாசகர்களாலேயே இலக்கியம் எது என்பது தீர்மானிக்கப்படுகிறது எனலாம்.

ஒருவேளை எழுத்தாளன் உயிரோடு இருக்கும்பொழுதே அவனது எழுத்திற்கு இலக்கியம் என்ற அங்கீகாரம்  கிடைக்குமானால் அது அவனுடைய  நல்வினைப்பயனே. ப்படிப்பட்டவர்களைத்தான் ‘வாழும்போதே வரலாறானவர்கள்’ என்கிறார் வலம்புரி ஜான்.

நன்றி, வணக்கம்.
**** 
(குவிகம்  அமைப்பாளர்களான கிருபானந்தன் - சுந்தரராஜன் இருவருக்கும், ZOOM வழியாக இந்த அளவளாவலில் பங்குபெற்ற 21 இலக்கிய ஆர்வலர்களுக்கும் நெறியாளர் டாக்டர் ஜெ. பாஸ்கரன் அவர்களுக்கும்  
எனது சிறப்பான நன்றிகள் உரித்தாகுக.)

9 கருத்துகள்:

  1. நல்ல கருத்துதான். இலக்கியம் என்பதை காலம்தான் தீர்மானிக்க முடியும். மற்றபடி எழுதின எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வதினாலெல்லாம் எழுத்து இலக்கியமாகிவிடாது என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  2. விளக்கங்கள் அருமை ஐயா...

    என்னைப் பொறுத்தவரை : வளரும் சமுதாயம், இலக்கியங்கள் தாமென்று என்று புரிந்து கொள்வதற்கு, தமிழ் உலகம் இல்லையே என்பது தான் வருத்தப்பட வேண்டிய உண்மை...

    பதிலளிநீக்கு
  3. அவனவனுக்கு அவனவன் எழுத்துகளே இலக்கியம்

    பதிலளிநீக்கு
  4. எந்த ஒருவன் தன்னுடைய எழுத்தைத் துணிச்சலோடும், பெருமையோடும், சுயகௌரவத்தோடும் வாசகனுக்கு அளிக்க முன்வருகிறானோ அவன் படைப்பதற்குப் பெயர்தான் இலக்கியம்.//

    அட! நல்ல வரையறை!

    ஆனால் எல்லோரது படைப்பையும் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது இல்லையே சார் சிலர். ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் இலக்கியத்தரமாக எழுதுபவர்கள் என்று சொல்லுகின்றனர். ஜீவி கூட இது பற்றி எழுதியிருந்தார். பொதுவாகச் சில பத்திரிகைகள் கொண்டாடிய எழுத்தாளர்களை மட்டுமே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளைக் கொடுத்தவர்கள் என்று மக்கள் அறிகிறார்கள். அதற்கும் அப்பாற்பட்டு நிறையப்பேர் இருக்கின்றனர் என்று பெயர்கள் பல சொல்லி அவர்களைக் குறித்தும் எழுதுகிறார். நீங்களும் வாசித்திருப்பீர்கள்.

    எனக்கு இங்கு நீங்கள் சொல்லியிருந்த சுரதா அவர்களின் வரையறை யதார்த்தமாகத் தெரிகிறது.

    ஒவ்வொருவரின் ரசனை, வாசிப்பு என்பதைப் பொருத்தும் மாறுபடலாம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நல்ல இலக்கியம் என்பது நம் மனதைக் கொஞ்சமேனும் தாக்கி சிந்திக்க வைக்க வேண்டும் இல்லையா?

    உதாரணமாகக் கொடுத்திருக்கும் கவிஞர்களின் கவிதை வரிகள் நச்சென்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உடனே பாக்யராஜ், ‘அப்படீன்னா ஒங்க பெண்டாட்டிகள் எல்லாம் கற்புள்ளவர்கள் இல்லையா?’ என்று கேட்டு அதிரவைப்பார். //

    இது மிக மிக அட்டகாசமான வசனம்! நல்ல அழகான சிந்தனை. லேட்டரல் திங்கிங்க்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆஹா,அருமையான ரசிக்கவும்,சிந்திக்கவும் வைத்த உங்களின் இப்பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சிலருக்குத்தான் அத்தகைய அங்கீகாரம் கிடைக்கும். பலருக்கு, தகுதியிருந்தாலும் கிடைப்பதில்லை, அல்லது தள்ளிப்போய்விடும். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு