புதன், டிசம்பர் 31, 2014

பதிவு 01/2015 இன்று புதிதாய்ப் பிறந்தேன்....

பதிவு எண்  01/2015

இன்று புதிதாய்ப் பிறந்தேன்....

வணக்கம் நண்பர்களே!

சிறிதுகாலம் எனது பதிவுகளுக்கு இடைவேளை தர நேரிட்டுவிட்டது. ‘ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை?’ என்ற கேள்விகள் பலரால் எழுப்பப்பட்டன. இலக்கிய கூட்டங்களுக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில், பிற பதிவர்களுடனான தொடர்பே விட்டுப் போனதுபோல் ஓர் உணர்வு. எல்லாவற்றிற்கும் ஒரு கால் தான் காரணம். ஆம்! வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதனால் இரண்டு மாதங்கள் காலை ஊன்றிக்கொண்டு மடிக்கணினியில் எழுத முடியாத நிலை. பயணங்களும் இதனால் தடைபட்டன. முக்கியமாக, மதுரையில் நடைபெற்ற பதிவர் மாநாட்டுக்குப போகமுடியாமல் போனது. (இப்போது முழுமையாக நலம் பெற்றுவிட்டேன்).


இருந்தபோதிலும், ஒரு முக்கியமான ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்து முடித்துவிட்டேன். முன்னூற்று அறுபதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட AT  THE HELM   என்ற  Dr.V. KRISHNAMURTHY அவர்களின் சுயசரிதைதான் அது. BHEL,  MARUTI UDYOG, STEEL AUTHORITY OF INDIA போன்ற நிறுவனங்களின் சிகரங்களில் இருந்து கோலோச்சியவர் அவர். (தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை). எனது முந்தைய பதிவு காண்க: 5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்: http://chellappatamildiary.blogspot.com/2014/05/5-2.html

நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முக்கர்ஜி எழுதிய THE DRAMATIC DECADE என்ற புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் புத்தகம் டில்லியில் இருந்து சென்னையில் ஒரு கூரியருக்கு வந்துசேர்ந்து பதினைந்து நாட்கள் ஆனபிறகுதான் நேற்று என்னிடம் வந்தது. முன்பதிவு திட்டம் என்பதால் கடைகளிலும் முன்னதாக வாங்க முடியாத நிலை. (கடைகளில் விலை ரூ.595, அமேசானில் விலை ரூ.399 தான்). படிக்க ஆரம்பித்துவிட்டேன். விரைவில் அதைப் பற்றிய தனிப் பதிவு வெளியாகும். 

அவசரமாக ஒரு தகவல்: முக்கர்ஜி அவர்கள் பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பில்தான் சேர்ந்தாராம். ஒன்று முதல் நான்கு வகுப்புகள் அவர் படிக்கவில்லையாம்! மரம் ஏறுவதிலும், மாடுகளைத் துரத்திக்கொண்டு ஓடுவதிலும், விளையாடுவதிலும்தான் அந்தக் காலத்தைக் கழித்தாராம்! பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடி பின்னியெடுத்துவிடுவார்களாம். ஆனால் இவர் மசியவில்லையாம். அந்த அனுபவம்தான் பின்னாளில்  அரசியல் கருத்துவேறுபாடுகளைக் களையும் சமாதானத் தூதுவராக இவர் அனுப்பப்பட்டதற்குக் காரணமோ? (‘ரொம்ப நல்லவன்யா! எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்’ என்ற வடிவேலுவின் வசனம் நினைவுக்கு வருகிறது).
  
 கடந்த ஆண்டின் சுவடுகள்...

பதிப்பாளர், நண்பர், கவிஞர், அகநாழிகை பொன் வாசுதேவன் மூலம் 2014 ஜனவரியில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ வெளிவந்தது. அதிலுள்ள ஒரு சிறுகதைக்குக் ‘கலைமகள்’ பரிசு கிடைத்தது. அதே கதையை எனது நண்பரும் தமிழ்-கன்னட இருமொழி அறிஞருமான புதுடில்லி உதயம் ஸ்ரீனிவாசன் கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். (திருக்குறளை அவர் கன்னடத்தில்  மொழிபெயர்த்தவர். அது சில மாதங்களுக்கு முன்பு செம்மொழி ஆய்வு நிலையத்தின்வழியாக வெளியானது என்பது இன்னொரு மகிழ்ச்சிக்குரிய செய்தி.  அவரது  அலைபேசி எண் 9899969903).


2014 மே-ஜுன் மாதங்களில் அமெரிக்கப் பயணம். முப்பதே நாள். முதல்முறையாக கலிபோர்னியா சென்றேன் (மனைவியுடன்). ஸாண்டியாகோ நகரில் கால்டெக் பல்கலைக்கழகத்தைக் கண்டேன். லாஸ் ஏஞ்சலிஸ் நகரை வேகமாகச் சுற்றிப்பார்த்தேன். ஹாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்த்தேன். இதுவரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த பெவர்லி ஹில்ஸ், சன்ஸெட் புலிவார்டு, மன்ஹாட்டன் பீச் இங்கெல்லாம் சுற்றிப் பார்த்தேன். எக்கச்சக்கமான வாகனங்கள். போக்குவரத்து நெரிசல்மிக்க நகரம். 

நியூ ஜெர்சியில் இதுவரை நான் பார்க்காமல் இருந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கும் இப்போது போனேன். அங்கிருந்த ஒரு மரப் பெஞ்சில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன். ஐன்ஸ்டீன் ஒருகாலத்தில் அமர்ந்த இருக்கையாக இருக்கலாம். 

அவர் இருந்த வீட்டையும், அவருக்காகவே அமைக்கப்பட்ட லெக்சர் ஹாலையும் பார்த்தேன். பெறற்கரிய வாய்ப்பு. என் மாணவப் பருவத்தில் அவருடைய 'தியரி ஆப் ரிலேடிவிட்டி' யில் ஆராய்ச்சிக்கான (பிஎச்டி) வாய்ப்பு கிடைத்தும், குடும்பச் சூழ்நிலையால்  அதைத் தொடரமுடியாமல் போய்விட்ட வருத்தம் இதனால் ஓரளவு தீர்ந்தது எனலாம். 

2014-இல் பதிவுலக நண்பர் துளசிதரன் (பாலக்காடு)  மூலம் அவரது குறும்படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. பாலக்காட்டின் ‘சைலண்ட் வேலி’ யைச் சுற்றிப் பார்த்தேன். அங்கும் இப்போது சில்வண்டுகள் குடிவந்துவிட்டதால், சைலன்ஸ் மிஸ்ஸிங். (திருமதி துளசிதரனும் திருமதி கீதா அம்மையாரும் அரிய விருந்தளித்ததைக் குறிப்பிடவேண்டும்).

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்..

கடந்த ஆண்டு (2014) ஜனவரித் திங்கள் முதல் நாளில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். தமிழக முதல்வராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று இருவரும் பதவியில் இல்லை.... ‘மாறுவதைப் புரிந்துகொண்டால் மனதில் மயக்கமில்லை’ என்பார் கண்ணதாசன். 

இனி வாரந்தோறும் தவறாமல் எழுதுவேன்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).