ஒரு கேள்வி:
நீங்கள் 2013 மார்ச் மாதம் 9ஆம் தேதி இரவு 10 மணிக்கு நியூ யார்க் - ஜான் எஃப் கென்னடி ஏர்போர்ட்டில் வந்து இறங்குகிறீர்கள். உங்கள் பெட்டி இன்னும் வந்து சேரவில்லை. அதனால் 3 மணி நேரம் தாமதமாகிறது. வாசலுக்கு வந்த பின்னும் உடனடியாக டாக்ஸி கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆகிறது. நியூ ஜெர்சி வந்து சேரப் பயண நேரம் மேலும் ஒரு மணி என்றால், நீங்கள் வீடு வந்து சேரும் போது மணி எவ்வளவு ?விடை: விடியற்காலை 4 மணி ஆகியிருக்கும்!
இருக்க முடியாதே என்கிறீர்களா?
கணக்கைக் கூட்டிப் பார்க்கலாம்:
ஏர்போர்ட்டில் இறங்கிய நேரம்: இரவு 10 மணி. + 3 மணி +1 மணி + 1 மணி = விடியற்காலை 3 மணி தானே ஆக வேண்டும்? எப்படி 4 மணி என்று விடை சொல்கிறீர்கள்?
அங்கு தான் இருக்கிறது சூட்சுமம்: நீங்கள் ஏர்போர்ட்டில் நுழைந்த போது தேதி, மார்ச் 9. வீடு வரும் போது மார்ச் 10. ஆகவே தான் ஒரு மணி நேரம் அதிகமாகி விட்டது!
அந்த ஒரு மணி நேரத்தைத் தான் Day Light Saving Time என்கிறார்கள்.
அமெரிக்க மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை முதல், நவம்பர் மாதம் முதலாம் ஞாயிற்றுக் கிழமை வரை, Day Light Saving Time கடைப் பிடிக்கப் பட வேண்டும். அதாவது, இந்த வருடம் (2013) மார்ச் மாதம் 10ஆம் தேதி விடியற்காலை 2 மணிக்கு, எல்லாரும் தங்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரம் அதிகப்படுத்தி 3 மணி என்பதாக வைத்துக் கொள்ளவேண்டும். இதனால் தான் மேலுள்ள கேள்வியில் ஒரு மணி நேரம் காணாமல் போய்விட்டது!
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட நூறு 'நேர மண்டலங்கள்' (Time Zones) இருந்தனவாம். இவை பெரும்பாலும் தனியார் வசமிருந்த ரயில் கம்பெனிகளின் கண்டுபிடிப்பாகும். இதனால் ரயில் பயணிகளிடையே பெருத்த குழப்பம் நிலவி வந்தது. ஏழு மணிக்கு பாஸ்டனில் ரயில் பிடிக்க வேண்டும் என்று நியூ யார்க்கிலிருந்து போனால், அந்த ரயில் ஒருமணி நேரம் முன்னதாகவே போய் விட்டிருக்கும். ஏனென்றால் பாஸ்டன் ரயில் நேரப்படி நீங்கள் போய்ச் சேர்ந்த போது மணி எட்டு !
ரெவரெண்டு சார்லஸ் டௌடு என்பவர் தான் இந்த நூறு 'நேர மண்டலங்க'ளையும் ஒன்றிணைத்து நான்கே நான்காக ஆக்கியவர். 1883இல் அவரது கருத்துரை ரயில் கம்பெனிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
2005இல் மத்திய அரசு இதைச் சட்டமாகியது. ஆனாலும், இன்றும் கூட, இந்த Day Light Saving Time விதியை அரிசோனா, ஹவாய் மாநிலங்கள் பின்பற்றுவதில்லை என்பது ஆச்சரியமே.
இன்று எல்லாமே கணினி வழியாக இயங்குவதால், விமானங்களும் ரயில்களும், வங்கிகளும், அரசு
அலுவலகங்களும் மார்ச் 10ஆம் தேதி அன்று விடியற்காலை இரண்டு மணிக்குத் தங்கள் நேரத்தை மாற்றிக்கொண்டு விட்டன.
இந்தியாவிலிருந்து தொலைபேசுபவர்கள் இந்த நேர வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரயில்களின் நன்மைக்காக இந்த Day Light Saving Time கொண்டு வரக் காரணகர்த்தாவாக இருந்த சார்லஸ் டௌடு, 1904இல் ஒரு லெவல்-கிராசிங்கில் ரயில் மோதி இறந்து போனார் என்பது தான் பரிதாபம். ஒரு வேளை அந்த ரயில் குறித்த
நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டிருக்குமோ, அவரின் Day Light Saving Time ப்படி ?
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், நியூ யார்க் மாநிலச் சட்டப்படி, Day Light Saving Time எப்பொழுது தெரியுமா? ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை முதல் அக்டோபர் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை வரை தானாம். இந்த விதி இது வரை திருத்தப்பட வில்லையாம். ஆனால், சட்ட விஷயங்களில்
மாநில விதிகளை விட, மத்திய அரசின் விதிகள் தான் முதன்மை பெறும் என்பதால், மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை (அதாவது மார்ச் 10ஆம் தேதி) முதல், ஒரு மணி நேரம் காணாமல் போய்விடுகிறது!
*******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?
கூட்டிகழிச்சு பார்க்கலாமுன்னா நான் கணக்குல ரொப்ப வீக்குங்கோ ... வெறும் 1 மணிநேரம்தான கிளாக் பாஸ்டா போகுது ... நோ பிராபளம்... அப்படியே இங்க கிளிக்குங்க நேரம் கரெக்டா போயிட்டு இருக்கு...
பதிலளிநீக்கு