திங்கள், மார்ச் 18, 2013

சாகித்ய அகாதெமி(1)-ஒரு கண்ணோட்டம்

புதுடில்லியிலிருந்து சென்னை வந்தார். சென்னையிலிருந்து நியுஜெர்சி வந்திருக்கிறார்.இனிமேல் தான் சந்திக்க வேண்டும். நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களை.

நண்பர் என்பதால் வேணு என்றே அழைக்கலாமே! வேணு, ஒரு கவிஞர். பசையப்பனில் படித்தவர். ஒருமுறை, 'பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் கவி பாடும்' என்று பெருமையாய் சொன்னார். 'காரணம் என்ன தெரியுமா? பச்சையப்பனில் பாதி  மாணவர்கள் எப்போதும் படிக்கட்டில் தான் இருப்பார்கள்' என்று பதில் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இரண்டுமே உண்மை தானே! அரசியலும் மொழிப்பற்றும் பச்சையப்பன் மாணவர்களின் அடையாளங்களாக இருந்த காலம். அதே காரணத்தால் அடிக்கடி அவர்களின் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்.

பின்னாளில் புதுடில்லியில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்து நிம்மதியான வாழ்வு அமைந்து விட்டதால் கவிதை எப்போதோ வரும் வால்நட்சத்திரம் மாதிரி வந்து போகும். அவர் இல்லாமல் எனது கவியரங்கம் நடப்பதில்லை. எனது 'தலைநகரில் தமிழ்க்குயில்கள்' தொகுப்பிலும் அவரது கவிதை இடம் பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பாளரும் கூட.

சாகித்ய அகாடமி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்த கவலை, ஏன் நமது சிறந்த கவிஞர்கள் அகாதெமியால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே.
பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து இவர்கள் மூவரும் ஏன் கவிஞர்களாக அங்கீகரிக்கப் படவில்லை? மற்ற மொழிகளிலும் இப்படித்தானா? அல்லது, அகாதெமிக்காக நூல்தேர்வு செய்யும் மூவர் குழுவின் அலட்சியமா?

சிறுகதை, நாவல்,கவிதை, நாடகம் இவை தான் பொதுவாக 'படைப்பிலக்கியம்' என்ற வகைக்குள் அடங்கும். ஆனால், வள்ளுவனையும், கம்பனையும், ராமாயணத்தையும் பற்றிய நூல்கள் எப்படி இந்த வகையில் அடங்க முடியும்? ஏன் அம்மாதிரியான நூல்கள் பலமுறை அகாதெமி விருது பெற்றுள்ளன?  அதன் காரணமாக அந்த வருடங்களில்
உண்மையான படைப்பாளிகளுக்கு அநீதி
இழைக்கப்பட்டுள்ளதாகக் கருத முடியுமா?

ஆசிரியரின் பெயரைப் பார்த்து விருது வழங்க வேண்டுமா, இல்லை, நூலின் தன்மையைப் பொருத்தா? தேர்வர்களுக்கு உரைக்கப்படும் நெறிமுறைகள் என்ன?

'விரிவான ஆராய்ச்சி வேண்டும்' என்றார், வேணு. 'ஆகட்டும்' என்றேன்.
****
சாகித்ய அகாதெமி விருது ஃபிப்ரவரி மாதத்தில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். அதற்கு அடுத்த நாளே, டில்லி தமிழ்ச் சங்கத்தில் விருது பெற்றவருக்குப் பாராட்டு விழா நடைபெறும். அது குளிரான மாதம் என்பதால், ஒரு கனமான சால்வையும் போர்த்தப்படும். (பொன்னாடை போன்ற பயனில்லாத பன்னாடைகளை டில்லியர்கள் விரும்புவதில்லை). அப்படி நடந்த மூன்று பாராட்டு விழாக்களில் நான் கலந்துகொண்டு பாராட்டுக் கவிதை வாசித்திருக்கிறேன்.

லா.சா.ரா.

1989ல்  லா.சா.ராமாமிர்தம் தனது 'சிந்தாநதி' என்ற நூலுக்காக
'உரைநடை' பிரிவில் அகாதெமி விருது பெற்றிருந்தார். சிறந்த நாவலசிரியாரான அவரை உரைநடையில் சேர்த்தது எப்படி நியாயம் என்று தெரியவில்லை. அவரை புதுடில்லி ரயில் நிலையத்தில் வரவேற்று, அகாதெமி அலுவலகத்தில் சேர்த்து விட்டு, விழா  முடிவில் மீண்டும் அழைத்துக் கொண்டு போய் ஆகாஷ்வாணி (ஆல் இந்தியா ரேடியோ ) அலுவலகத்தில் நேர்முகத்திற்காகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எனக்கு வழங்கப் பட்டிருந்தது.

லா.ச.ரா.
அப்போது அவருக்கு வயது 73. டில்லியில் பாராட்டுவிழா நடக்கும் அளவுக்கு நான் என்ன எழுதிவிட்டேன் என்று உண்மையான தன்னடக்கத்தோடு அடிக்கடி கேட்டார். 'சிந்தாநதி' படித்திருக்கிறீர்களா என்றார். சில பக்கங்களிலிருந்து வாக்கியங்களை ஒப்பித்தேன். அவருக்கு வந்த பேரானந்தம் தான் என்னே! 'யாருமே என் புத்தகங்களைப் படிப்பதில்லை. கேட்டால், வாங்கி வைத்திருக்கிறேன், நேரம் கிடைக்கவில்லை என்பார்கள். நீங்கள் படித்திருப்பது அளவற்ற சந்தோஷம்' என்றார்.

ஆல் இந்தியா ரேடியோவில் அப்போது இயக்குனராக இருந்த திரு. ஜி.சுப்பிரமணியம் அவர்கள், தானே அவரை நேர்முகம் செய்யப்போவதாகச் சொன்னார். தான் தான் செய்யப் போவதாக
வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த  (அமரர்) திரு ஏ.ஆர்.ராஜாமணிக்கு அதில் மிகுந்த துக்கம். லா.சா.ரா.வுக்கும்
எனக்கும் எவ்வளவு வருஷம் பழக்கம் தெரியுமா என்று என்னை மீண்டும் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்.

லா.சா.ரா., பஞ்சாப் நேஷனல் வங்கியில் முழுமையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டிரான்ஸ்பர் வந்தால் தவறியும் திருநெல்வேலிப் பக்கம் போய் விடாதீர்கள். இலக்கிய உலகில்
உங்களை இயங்கவிடாமல் செய்து விடுவார்கள் என்றார். அவருடைய அனுபவம்.

தனது 91-வது வயதில் 29.10.2007 அன்று இயற்கை எய்தினார், லா.சா.ரா.

சு.சமுத்திரம்

சு.சமுத்திரத்திற்கு 1990இல் அகாதெமி விருது கிடைத்தது. அவர் ஏற்கெனவே பல ஆண்டுகள் டில்லியில் இருந்தவர். அதிலும்
ஆல் இந்தியா ரேடியோவிலும் தூர்தர்ஷனிலும் பிறகு மக்கள் தொடர்புத் துறையிலும் பணியாற்றியவர். சென்னையில் இறுதி நாட்களில் இருந்தவர். விபத்தில் அகால மரணம் அடைந்தவர். அவருக்கு 'வேரில் பழுத்த பலா' என்ற குறுநாவல் தொகுப்பிற்காக விருது.

சு.சமுத்திரம் 
சு.சமுத்திரம், அலுவலகத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக நீதி மன்றம் போகின்றவர். அப்படித்தான் விருது வழங்கப்பட்ட நாட்களில் அவர் பெயர் பத்திரிகைகளில் அடிபட்டு பிரபலம்
ஆகியிருந்தது. அதன்றியும், அவரது நண்பர் குழாம் பெரிது. எனவே தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அவரது பாராட்டு விழாவிற்கு சற்றே அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்திருந்தனர்.

'டில்லியில் இல்லாத சமுத்திரமே' என்று நான் கவிதையை ஆரம்பித்தேன். அந்த சிலேடை அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகச் சொன்னார். நண்பர்களும் அதையே சொல்லி, சு.சமுத்திரம் டில்லியில் இருந்தபோது நடந்த இலக்கிய நிகழ்வுகளை அசை போட்டனர்.

1941ல் பிறந்த சு.சமுத்திரம், சென்னையில், 1.4.2003 அன்று   ரயில்வே லைனைக் கடக்க முயன்ற போது நேர்ந்த விபத்தில்
காலமானது தமிழின் துரதிர்ஷ்டமே.

கி. ராஜநாராயணன் 

கி. ராஜநாராயணன் அவர்களுக்கு 1991ல் அகாதெமி விருது கிடைத்தது. ('கோபல்ல கிராமத்து மக்கள்'). ஆனால் அவருடைய பாராட்டு விழாவில் நான் கலந்து கொள்ள முடியாதபடி வெளியூர் செல்லவேண்டி வந்து விட்டது. தமிழில் வட்டார வழக்குகளை

கி.ராஜநாராயணன் 
எழுதும் பாணியில் தனக்கென ஒரு தனியான நடையை ஏற்படுத்திக் கொண்டவர் கி.ரா. அவரை நேரில்காணும் வாய்ப்பு கிட்டாமல் போனது என் துரதிர்ஷ்டமே.

(வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 2003ல்  அகாதெமி
விருது பெற்றது. வைரமுத்து என்ற பெயரை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், அது கி.ரா.எழுதிய மாதிரியே இருக்கும். அதே நடை.)

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் 1999ல் 'ஆலாபனை'க்காக  அகாதெமி விருது பெற்றார். தமிழ்ச் சங்கத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடந்த
அன்று அலுவல் காரணமாக டில்லி வந்திருந்த நான்  வேகமாக ஒரு
கவிதை எழுதிப் படித்தேன். கவிஞரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்துல் ரகுமான் 
கல்லூரி நாட்களில் எனது அப்துல் ஹகீம் கல்லூரியில் (மேல்விஷாரம்) நான் கவிஞனாக அறிமுகம் ஆன முதல் கவியரங்கில்  அவரும் கலந்துகொண்டவர். அமரர் சுரதா தலைமை. நான் 'மரம்' என்ற தலைப்பில் கவிதை படித்தேன். (மாணவன் என்பதால் நான் தான் கடைசி). அவர் முதலில் என்று நினைக்கிறேன். 'தண்ணீர்' என்பது அவர் தலைப்பு. தீயை நோக்கி தண்ணீர் கூறுவதாக அவர் படித்த வரிகள் இன்னும் நினைவில் இருக்கிறது:

(தீயே, நீ)
சிறியவளானால் அணைப்பேன்!
பெரியவளானால் பறப்பேன்!

(தீ சிறியதென்றால், நீர் அதை அணைக்கும். பெரியதென்றால் ஆவியாகிப் பறக்கும் என்பது சிலேடை).

அப்போது அவர் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பணியிலிருந்தார். (கலைஞர் ஆட்சிக்கு வந்த நேரம்). கலைஞரோடு கொண்ட நட்பு அவரைப் பல வகையிலும் உயர்த்தியது. அந்த வகையில் அகாடமி விருது அவருக்குக் கிட்டியது என்று சிலர் கருதினாலும், அவ்விருதிற்குத் தகுதியுடையவர் அவர் என்பதில் ஐயமில்லை.

பாராட்டுவிழா முடிந்தவுடன், விருது பெற்றவர் தம்முடைய நூலைக் கையெழுத்திட்டு தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வழங்குவது வழக்கம். ரகுமானும் கொடுத்தார், ஆனால் உரிய விலையைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கிய பிறகே. அதில் சிலருக்கு  மனவருத்தம்.

(நாளை வரும்)
(c) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 

3 கருத்துகள்:

 1. சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! தொடர்க!

  பதிலளிநீக்கு
 2. சாகித்ய அகாதமி தொடங்கி பல துறைகளிலும் இந்தக் கேள்வி எழத்தான் செய்கிறது- மிகச் சிறந்த இவருக்கு ஏன் இந்த விருது கொடுக்கப்படவில்லை? அழகாய் அலசலைத் துவங்கி, விருது பெற்றவர்களுடனான உங்கள் அனுபவங்களை நயம்பட உரைத்திருக்கிறீர்கள். தலைநகரில் இல்லாத சமுத்திரமே! - நன்று! தொடருங்கள்.... தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி, நண்பரே! சாகித்ய அகாடெமி பற்றி விரிவாக எழுதவிருக்கிறேன். 58 வருடங்களாக இயங்குவதால், எல்லா மொழிவாரி விருதுகளையும் முதலில் அட்டவணைப்படுத்த

  வேண்டி இருக்கிறது.அது தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.(அட்டவணையை இன்று வெளியிட்டுவிடுவேன்). அது வந்தால் பிறகு அலச வேண்டியது தான்!

  பதிலளிநீக்கு