நற்றிணை பதிப்பகம் உலகத் தரத்தில் நூல் வெளியிடும் தமிழக நிறுவனங்களில் ஒன்று. ஜனவரி 2013 புத்தகக் காட்சியில் வண்ணநிலவனின் "ரெய்னீஸ் ஐயர் தெரு" என்னும் 96 பக்க நூலை ரூ. 70 கொடுத்து வாங்கினேன் என்றால் அதற்கு நற்றிணையின் பெயர் தான் முதல் காரணம்.
சுமார் 110 நூல்கள் வாங்கிஇருந்ததால்(6000 ரூபாய்க்கு மேல்!) மூட்டையிலிருந்து இந்த நூலை நேற்று தான் கையிலெடுக்கமுடிந்தது. என்ன தான் சொல்ல வருகிறார் வண்ணநிலவன்
என்பது இடையிடையே புரியாமல் போய் விடுவதால், ஒரே எடுப்பில் முடிக்க முடியவில்லை. ஒரு வழியாக மனதைப்
பயமுறுத்தியும் வலியுறுத்தியும் அடித்துப் பிடித்ததில் இன்று 93 பக்கங்கள் முடித்து விட்டேன். (கடைசி 3 பக்கங்கள் விளம்பரங்களே).
நெல்லைக்காரரான வண்ணநிலவன் (இயற்பெயர்: ராமச்சந்திரன்), மொத்தம் ஆறே வீடுகள் கொண்டதொரு சிறிய தெருவான
"ரெய்னீஸ் ஐயர் தெரு" வைத் தன் கருப்பொருளாக்கிக் கொள்கிறார். அந்தக் காலத்திற்கு இது புதுமையாக இருந்திருக்கும். (நூல் முதலில் வெளிவந்தது 1981இல்).
கிறித்தவர்கள் தெரு. அதிலும் ஏழ்மை நிறைந்த தெரு. ஒழுக்கப் பிறழ்வுகளும், உழைப்பின்மையும் நிறைந்த சமுதாயத்தில்,
நல் வாழ்வுக்காக எங்கும் சின்னஞ்சிறு பெண்களின் மனக் கோட்டைகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மொழி நடை, அந்த வட்டாரத்தையே நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.
டோரதி, பிலோமி, அன்னமேரி டீச்சர், இடிந்தகரை அம்மாள், சாம்சன் அண்ணா, எஸ்தர் சித்தி என்று தேர்ந்தெடுத்த சில பாத்திரங்கள் தான் வருகிறார்கள். (மொத்தம் ஆறு வீடுகள் தானே!) ஆனால் எல்லாருமே மனதில் நிற்கிறார்கள் என்பது தான் வியப்பு.
சில குறிப்பிடத்தக்க இடங்கள்:
"இடிந்தகரையாளுக்கு காதைக் குடைகிற பழக்கம் எப்போது வந்ததென்று தெருவில் யாருக்கும் நிச்சயம் தெரியாது. யோசுவா தாத்தாவைக் கேட்டால், 'முண்டக்கி, சாமி, பொறக்கும்போதே கையில கோழி ஏறகுங் கையுமா அனுப்பிட்டாரு போல..அது தாங் கொடஞ்சி கொடஞ்சி காதே போச்சே' என்று ஆதங்கப் படுவார்.
பெரிய சேவலுடைய இறகு, சின்னக் குஞ்சுகளுடைய இறகு, நன்கு விளைந்த கோழிகளுடைய இறகு என்று எல்லா தினுசு இறகுகளையும் தினுசு தினுசாகப் பிரித்துக் கட்டி வைத்திருப்பாள். அந்த இறகுக் கட்டுகள் அவளுடைய படுக்கை தலைமாட்டிலேயே பத்திரமாக இருக்கும். நன்றாக விளைந்து போன ஏழு எட்டு வயது சேவல்களுடைய இறகுகளின் பேரில் அவளுக்கு ஒரு தனிப் பிரியம் உண்டு. வயசான சேவல் யார் வீட்டில் செத்தாலும் அந்த இறகுகளை அந்த வீட்டுக் குழந்தைகள் கட்டாகக் கட்டிக்கொண்டு வந்து இடிந்தகரையாளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த இறகுகளைப் பார்த்து அவள் சந்தோஷப்படுகிறது போல யாராலும் அவ்வளவு சந்தோஷப்படமுடியாது. உலகமே தன்னுடைய கைக்குள் கோழி இறகாக ஆகி விட்ட களிப்பு அவளுடைய சுருக்கம் விழுந்துபோன முகத்தில் தெரியும்." (பக்கம் 17-18).
பிலோமி பேசுவதாக வரும் பகுதி:
"அக்காவுக்கு கல்யாணம் ஆன பிறகு, அக்காவுடைய கணவனைப் பார்த்த பிறகு அவளுடைய யோசனை பின்னும் வலுவாயிற்று. அக்கா மீது காரணமில்லாமல் கோபம் வந்தது. நேற்று வரை ஒன்றாகப் படுத்து, ஒன்றாகச் சிரித்திருந்த அக்காவின் பேரில் சொல்ல முடியாத பொறாமை வந்துவிட்டது.
"அக்காளுக்கும், அத்தானுக்கும் வீட்டில் கீழ ஓரத்து அறையைக் கொடுத்திருந்தார்கள். எப்போதும் வீட்டில் முதலில் எழுந்திருக்கிறவள் அக்கா தான். அத்தான் வந்த பிற்பாடு எழுந்திருக்க நேரமாயிற்று. ஏழு மணி வரை அடைத்துக் கிடந்த கதவைப் பார்த்து பிலோமியுடைய மனசிற்குள் ஒரு ஆத்திரம் வந்தது. அக்காள் கல்யாணச் சோர்வும், கலைந்த தலையுமாக வருகிறதைப் பார்த்து கோபம் கோபமாக வந்தது. கல்யாணம் ஆனால் ராத்திரி கூட பட்டுச் சேலை தான் உடுத்த வேண்டுமா? சாயந்திரம் அவ்வளவு அழகாக இருக்கிற பட்டுச் சேலை காலையில் ஏன் அவ்வளவு கசங்கிப் போய் விடுகிறது? தலையில் அந்தப் பூவெல்லாம் உதிர்ந்து வெறும் நாறும், வாடிப் போன சில பூக்களுமாய், ஏன் அந்த அழகான மல்லிகைச் சரம் தொங்க வேண்டும்? அக்காவுடைய கண்களில் ஏன் அந்தக் கள்ளம் புகுந்தது? வீட்டில் இருக்கும் போதும் அக்கா நெளிவு மோதிரம் தான் போட்டிருந்தாள். அப்போதெல்லாம் அது மோதிரமாகவே அவளுக்குப் பட்டதில்லை. ஆனால் கல்யாணமான பிற்பாடு நெளிவு மோதிரம் போட்டிருக்கிற அந்த விரலுக்குக் கூட அழகு வந்து விட்டது. குறிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளெல்லாம் அக்கா பார்க்க அழகாக இருந்தாள்." (பக்கம் 22-23)
மழை எப்போதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருக்காரர்கள் நம்பினார்கள் என்று முடிக்கிறார் வண்ணநிலவன். கதை என்பதை விட, ஒரு அழகான டாக்குமெண்டரி என்றே சொல்லலாம். காலத்தால் கரையாத தமிழ். நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.
*****
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?
என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்களில் ஒன்று க்ரியா வின் தற்கால தமிழ் அகராதி.
பதிலளிநீக்குwww.crea.in
www.crea.in
பதிலளிநீக்குரெய்னீஸ் ஐயர் தெருவில் சில பக்கங்களுக்கு இந்த எளியோனையும் அழைத்து சென்றதற்கு நன்றி. அப்படியே இங்கு கிளிக்குங்க
பதிலளிநீக்கு