திங்கள், மார்ச் 04, 2013

தமிழில் குறுக்கெழுத்து

தமிழ் உலகளாவிய மொழி. தமிழ்ப் பத்திரிகைகள் உலகத் தரத்தில் இயங்குபவை. ஆனாலும் உலக மொழிகள் பலவற்றில் சரளமாகப் புழங்கும் ஒரு முக்கியமான இலக்கிய வடிவமான குறுக்கெழுத்துப் போட்டிகள் தமிழ்ப் பத்திரிகைககளில் இடம் பெறுவதில்லை.

இந்தியாவில் வெளிவரும் எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் நாள்தோறும் குறுக்கெழுத்துக் கட்டம் வெளியாகிறது. போட்டியோ, பரிசோ இல்லை. ஆனாலும் ஆங்கில அறிவு ஜீவிகள் தினசரிக் கட்டத்தைப் பூர்த்தி செய்யாமல் குளிப்பதில்லை.

தில்லியில் என்னோடு பணியாற்றிக் கொண்டிருந்த பிரணதார்த்தி ஹரன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறுக்கெழுத்து முடிக்காமல் காலைச்  சிற்றுண்டி தொட மாட்டார். ஏதேனும் ஒரு வார்த்தை சரியாக வரவில்லை என்றால் பம்பாயிலுள்ள தனது சகோதரர்களுக்கு தொலை பேசி மூலம் தெரிவித்து எப்படியாவது சரியான விடையைக் கண்டுபிடித்து விடுவார்.
 
தினமலர் ஒன்று தான் விடாமல் பல வருடங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் வாரமலர் பகுதியில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தி வருகிறது. ஆயிரக் கணக்கான வாசகர்கள் ஆர்வத்தோடு பங்குகொள்ளுகிறார்கள். அதில் ஒருவர், என்னில் சரிபாதியானவர். சூரியன் உதிப்பது தவறினாலும் ஞாயிற்றுக் கிழமை குறுக்கெழுத்து தவறிவிடக் கூடாது அவருக்கு. வாரமலர்
வந்த பத்தே நிமிடங்களில் கட்டங்களை நிரப்பிவிடுவார்.
ஆனால் ஒரு தடவை  கூட விடைகளை தினமலருக்கு
அனுப்பியதில்லை. கேட்டால், கட்டங்களை நிரப்புவது தான் முக்கியமே அன்றி, பரிசு பெற வேண்டும் என்பதில்லை என்பார்.
(இப்போதெல்லாம் அவருடன் பேர்த்தியும் குறுக்கெழுத்துக்கு வந்துவிடுகிறார் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! ஆனால் சம்ப்ரித்தாவுக்கு எட்டு வித்தியாசங்கள் தான் முதல் கவனம்).

அது தான் குறுக்கெழுத்துப் போட்டிகளின் நோக்கமே. அறிவுப் பசிக்குத் தீனி போடுவது தான் முக்கியமே அன்றி, எந்த வாசகரும் பரிசுக்காக அலைவதில்லை என்பதை உலகம் முழுதும் பத்திரிகைகள் உணர்ந்திருக்கின்றன. குறுக்கெழுத்துப் போட்டிகளுக்குப் பரிசு தருவதை அநேகமாக எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் நிறுத்தி விட்டன.

மாலன், குமுதம் ஆசிரியராகப் பதவி ஏற்றவுடன் கொண்டு வந்த முதல் மாற்றமே, குறுக்கெழுத்துப் போட்டியை அறிமுகப் படுத்தியது தான். மாலன் விலகியவுடன் அது நின்று விட்டது.
 
புதிய தலைமுறை ஆரம்பித்தவுடன் அதிலும் குறுக்கெழுத்துப் போட்டியை ஆரம்பித்தார் மாலன். பரிசுகளும் உண்டு. நன்றாகப் போய்க் கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது, ஆனால் திடீரென்று அது உருமாற்றம் அடைந்து விட்டது.

ஆனந்த  விகடனில் எத்தனையோ வருடங்கள்  குறுக்கெழுத்துப் போட்டியை நடத்தி இருக்கிறார்கள். குறுக்கெழுத்துக் கட்டத்தைப் பூர்த்தி செய்து அத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையை மணி-ஆர்டராகவும் அனுப்பவேண்டும் அந்த நாட்களில். ILLUSTRATED  WEEKLY என்று ஒரு வார இதழ் பம்பாயிலிருந்து வரும். டைம்ஸ் ஆப் இந்திய வுடையது. பின்னாளில் குஷ்வந்த் சிங்கும் ஆசிரியராக இருந்த இதழ். என்னுடைய மாணவப் பருவத்தில் வீக்லியின் போட்டிகளில் நான் பலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். சும்மா அல்ல, பத்து ரூபாய் நாற்பது பைசா என்றெல்லாம் முழுமையில்லாத ஒரு தொகையைக் கட்டணமாக  அனுப்பச்  சொல்லுவார்கள். பரிசு கிடைத்தால் நீங்கள் அனுப்பியது போல இரண்டு மடங்கு, மணி-ஆர்டரில் வரும். இது ஒரு சூதாட்டம் போலவே ஆகிக் கொண்டு வந்ததால், அரசாங்கம் இம்மாதிரிக்  கட்டணம் வாங்கிக்கொண்டு குறுக்கெழுத்து நடத்துவதைச்  சட்ட விரோதமாக்கியது. அது முதற்கொண்டு தான், ஆங்கிலப் பத்திரிகைகள், அறிவுப் பசிக்கான தீனியாக இதைப்  பின்பற்ற ஆரம்பித்தார்கள். இன்று கட்டம், நாளை விடைகள் - என்னும் பழக்கம் தோன்றியது.

அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில் குறுக்கெழுத்து இல்லாத பத்திரிகைகள் வெளிவருவதில்லை எனலாம். கார்ட்டூன் போல, தலையங்கம் போல, குறுக்கெழுத்தும் இன்றியமையாத ஒரு அம்சம்.

தமிழ்நாட்டில்?  தினமலரை விட்டால் யார் இருக்கிறார்கள்? தினமணிக்கு என்ன ஆயிற்று? தமிழ் நாட்டில் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தையே உருவாகிய பத்திரிகை என்னும் பெருமைக்குரிய தினத்தந்தி ஏன் இன்னும் முன்வரவில்லை? கல்கி, குமுதம், விகடன், ஏன்  நக்கீரன்  வெளியிடலாமே!  ஏன்  செய்வதில்லை?

மறதி நோய் பற்றிய ஆராய்ச்சிகளில் வெளியான முக்கிய முடிவு என்ன தெரியுமா? குறுக்கெழுத்து, சுடோக்கு, புதிர்கள்,  விடுகதைகள், குமுதத்தில் வரும் ஆறு வித்தியாசங்கள், போன்றவை  மூளைக்கு வேலை தரும் காரணத்தால், நினைவு மறதியை ஏற்படுத்தும் செல் அழிவைத் தள்ளிப்போட வகை செய்கிறதாம். குறிப்பாக மூத்த குடிமக்கள், குறுக்கெழுத்து, சுடோக்கு முதலியவற்றில் நேரம் செலுத்தினால் 'அல்சிமர்' மட்டுமன்றி 'பார்க்கின்சன்' நோயையும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட முடியுமாம். ('பெரிசு பள்ளிக்கூடம்  போய் பரிட்சையா எழுதப்போகிறது? பேப்பரை வைத்துக்கொண்டு அரை மணியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று பெரிசின் துணைவியர்கள் இனியாவது புலம்பாதிருப்பார்களாக!)

குழந்தைகளுக்கும் , பள்ளி மாணவர்களுக்கும் அவரவர் வயதிற்கொப்ப மேற்படி விளையாட்டுக்களைப் பழக்கப்படுத்தி விட்டால் மூளை வளர்ச்சி பெரிதும் தூண்டப்படுகிறது என்றும் அதனால் கல்வியில் உறுதியான முன்னேற்றம் உண்டாகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

தினமலரில் வரும் குறுக்கெழுத்து எளிமையானது, நேரடியானது. ஆங்கிலப்   பத்திரிகைகளில் வருவதோ மிகவும் கடினமானது. சில நேரங்களில்  மூளையைக் குழப்பவும் செய்யும். அதற்கென்றே கோனார் நோட்ஸ்கள் நிறைய வந்துள்ளன. பெரிய புத்தகக் கடைகளில் நியூ யார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற நிறுவனங்கள் ஆண்டு தோறும் தங்களில் வெளிவந்த குறுக்கெழுத்துக்களை தொகுத்து விளக்கத்தோடு பெரிய பெரிய புத்தகங்களாக விற்பனை செய்வதைக் காணலாம். குறுக்கெழுத்துக்கென்றே பல்வகை 'தெசாரஸ்'களும் உண்டு.

கலிபோர்னியாவில் வெளியாகி அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே பிரபலமான 'தென்றல்' மாத இதழ், குறுக்கெழுத்துக்குச் செய்து வரும் பணியைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. ஆன்லைன் வாசகர்கள்
http://www.tamilonline.com

சென்று படிக்கலாம்.நியூ யார்க் டைம்ஸில் வருவது போன்றே சற்றுக் கடினமான கட்டங்கள் இவை. ஒரு சவாலாகச் செய்து பாருங்களேன்!
******
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக