வெள்ளி, மார்ச் 08, 2013

நெருப்பு மலர்கள் - ஞாநி

மகளிர் தினம்: இன்றைய மேற்கோள்

'பெண் குழந்தைகளை ஆணைப் போல வளர்க்க வேண்டும் என்று சிலர் சொல்லுவதுண்டு. ஆண் செய்யக்கூடிய எல்லாவற்றையும் பெண்ணும் செய்யும் ஆற்றல் உடையவள் என்று ஆக்குவதே இதன் நோக்கம். இன்று பல பெண்கள் இதுவரை ஆண்கள் மட்டுமே பணியாற்றிய துறைகளில் எல்லாம் தங்கள் முத்திரையைப் பதித்து விட்டார்கள். ஆனாலும் பெண்ணை ஆண் சமமாக நடத்துவது நம் சமூக இயல்பாக ஆகிவிடவில்லை. இதற்குக் காரணம், இதுவரை பெண் செய்து வந்தவற்றையெல்லாம் கீழானதாகவோ அல்லது அவையெல்லாம் பெண்ணுக்குரிய வேலையாகவோ மட்டுமே ஆண்கள் பார்ப்பது தான். அவை தானும் செய்யக்கூடியவை தான் என்ற மனம் வந்தால் தான் பெண்ணையும் சமமாகப் பார்க்கும் மனம் வரும்.

பெண்ணுக்குச் சம உரிமையை மறுக்கும் ஆண் எப்படி உருவாக்கப் பட்டான் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஏழெட்டு வயதிலேயே அடுப்படிக்கு பெண் குழந்தை போய் அம்மாவுக்கு சிறு உதவிகள் செய்யத் தொடங்கும் வேளையில், அதே வயதுள்ள ஆண் குழந்தை சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுகிறது. நான் (ஆண்) சாப்பிட உட்கார்ந்தால் ஒரு கை தட்டை எடுத்து வைக்கிறது. இன்னொரு கை தட்டிலேயே கை கழுவ நீர் ஊற்றுகிறது. சமயங்களில் சோற்றை குழம்புடன் பிசைந்தே வைத்து விடுகிறது. சாப்பிட்டு முடிந்து எழும்போது ஒரு கை மறுபடியும் நீர் ஊற்றுகிறது. துடைக்கத் துண்டை நீட்டுகிறது. இத்தனை கைகளும் பெண்களுடையவை - என் அம்மா, பெரியம்மா, அக்கா.

இப்படி தனக்குப் பணிவிடை செய்வதற்கே பெண்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற மன நிலையில் சுமார் 16 ஆண்டுகள் வளர்க்கப்படுகிற நான், 17-வது வயதில் பெண்ணை சம மனுஷியாக எப்படிப் பார்ப்பேன்?  ஆண் - பெண் சமத்துவத்தை ஏற்றுக் கொண்டால், பெண்ணுக்கு அடைவதற்கு ஒரு பொன்னுலகமே காத்திருக்கலாம். ஆனால், ஆணாகிய  எனக்கு 
ஏராளமான சலுகைகள், வசதிகள் எல்லாம் இழக்கப்பட  வேண்டியவையாக 
அல்லவா இருக்கின்றன. கற்கத் தொடங்கும்  மழலையிலே எனக்கு ஆண் - பெண் இருவரும் சம உரிமை  உடைய  மனிதர்கள் என்பதும்  கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கு இல்லையல்லவா?

எனவே, இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல்  வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல வளர்ப்பது தான்.

சிறு வயதிலிருந்தே அடுப்படியில் உதவிகள் செய்யவும், வளர வளர  சமைக்கவும், பாத்திரம் தேய்க்கவும், வீடு பெருக்கவும், கழிப்பறை கழுவவும், கோலம் போடவும் கற்கிற, கற்பிக்கப்படுகிற சிறுவனே, சக சிறுமிகளை 
சமமானவர்களாக  நடத்தும்  பார்வை பெறுவான்.

-ஞாநி

('நெருப்பு மலர்கள்' - ஞானபானு வெளியீடு, நவம்பர் 2010. பக்கம் 127-128. அலைபேசி: 9444024947)

email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

1 கருத்து:

  1. ஆண் குழந்தைகளை பெண் போல வளர்ப்பதை விட அவனை மனிதனாக வளர்த்தாலே பிரச்சனை அத்தனையும்தீர்ந்துவிடும் ஈன நினைகிரியன் ... நீங்க என்ன சொல்லுறீங்க .. கருத்து சொல்ல இங்கு கிளிக்குங்க.

    பதிலளிநீக்கு