புதன், மார்ச் 27, 2013

சாகித்ய அகாதெமி: (5) வந்தது 23 போனது 15


மெல்லத் தமிழ் இனி சாகாதிருக்க இரண்டு வழிகளை எடுத்துரைக்கிறான் பாரதி:

(1) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
(2) திறமான புலமை எனில் பிறநாட்டார் அதை வணக்கம் செய்தல்
வேண்டும்

'பிறநாட்டார்' என்ற இடத்தில 'பிறமொழியினர்' என்று கொள்வதில் தவறில்லை. அதாவது மொழிகளுக்கிடையில் இருவழிப் போக்குவரத்து ஏற்படவேண்டும் என்பதே கருத்து.

சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்புகளுக்காக ஆண்டு தோறும் ரூபாய் 50,000 (ஐம்பதாயிரம்) வீதம் ஒவ்வொரு மொழிக்கும் வழங்குகிறது. 1989 முதல் இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. 1989 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 463 மொழிபெயர்ப்பாளர்கள் (24 மொழிகளிலும் சேர்த்து) இப்பரிசுகளை வென்றிருக்கிறார்கள்.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போன 15 நூல்களும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த 23 நூல்களுமாக 38 மொழிபெயர்ப்பாளர்கள் பரிசு பெற்றுள்ளனர். அவர்களில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? இன்றைய அலசலில் இதைப் பற்றிப் பேசலாம்.

அலசல்-1: தமிழுக்கு உள்ளே வந்த நூல்கள் (23):

கன்னடம்(6), மலையாளம் (5), வங்காளி (3), ஒரியா (2) மற்றும் பின்வரும் மொழிகளிலிருந்து தலா ஒரு நூல்: ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, சிந்தி, தெலுங்கு. இவை தவிர,  பல்வேறு 
மொழிகளிலிருந்து தொகுக்கபட்டது ஒரு நூல், ஆக 23 நூல்கள்.   

 12 நாவல்களும், 5 கவிதைகளும், 3 சிறுகதை தொகுப்புகளும், 2 நாடகங்களும் ஒரே ஒரு தன்வரலாறும் இந்த 23ல் அடங்கும்.

(அ) தன்வரலாறு (1) : 2001ல் லட்சுமி நாராயணன் என்பவர் சிந்தி மொழியிலிருந்து செல்வி (Miss) போப்பட்டி ஹீரானந்தானி என்பவர் எழுதிய 'முஹிஞ்சி ஹயாத்தி -அ-ஜ-ஸோனா-ரோப்பா- வர்க்கு' என்ற நூலைத் தமிழுக்குக் கொண்டுவந்தார். இந்த அம்மையாருக்கு இப்போது 88 வயது ஆகிறது. சிந்தி மொழியில் 60க்கு மேல் நூல்கள எழுதிய பேராசிரியர். இன்னொரு விஷயம், இதே நூலுக்காக சிந்தி மொழிக்கான சாகித்ய அகாதெமி விருதை
அம்மையார் ஏற்கெனவே பெற்றுள்ளார். இந்த நூல் வேறு சில மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு அங்கும் மொழிபெயர்ப்புக்கான
இதே போன்ற 50,000 பரிசைப் பெற்றுள்ளது.

(ஆ) நாடகத்திற்காக (2):
 1993ல் திருமதி சரஸ்வதி ராம்நாத் பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து தொகுக்கப்பட்ட  'இந்திய மொழி
நாடகங்கள்' என்ற நூலுக்காகவும், 1995ல் பி. பானுமதி என்பவர்,
வங்காளியிலிருந்து பாதல் சர்க்காரின் பிரபலமான 'பா(க்)கி இதிஹாஸ்' என்ற நூலை 'மீதி சரித்திரம்' என்ற பெயரில் பெயர்த்ததற்காகவும் பெற்றனர்.

(இ) சிறுகதைக்காக (3):
  (1) 1999ல் தமிழ்நாடன் என்பவர், 'ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்' என்ற மொழிபெயர்ப்பிற்காக பரிசு பெற்றார். (மூல ஆசிரியர்: ரிஷிகேஷ் பாண்டா, ஒரிய மொழியில் ).

(2) 2002ல் 'பனீஸ்வரநாத் கதைகள்' என்ற மொழிபெயர்ப்பிற்காக எச்.பாலசுப்ரமணியன் பெற்றார். (ஹிந்தி மூலம்:  பனீஸ்வரநாத் ரேணு).

(3) 2012ல் 'அக்கா' என்ற பெயரில் கன்னடப் பெண் எழுத்தாளர்களின்
சிறுகதைகளை  மொழிபெயர்த்தமைக்காக திரு ஜி.நஞ்சுண்டன் என்பவர் பரிசு பெற்றார்.

(ஈ) கவிதைக்காக(5):
(1) 1990ல் பரிசு பெற்ற எம்.ஜி.ஜகன்னாத ராஜா, தெலுங்கிலிருந்து விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் "ஆமுக்த மால்யதா" என்ற காவியத்தை அதே பெயரில் மொழிபெயர்த்தார்.

(2) 2003ல் மலையாளக் கவிஞரான அய்யப்ப பணிக்கரின் கவிதைகளைத் தமிழ்ப் படுத்தியமைக்காக பிரபல இலக்கியவாதி நீல பத்மநாபன் பரிசு பெற்றார். ('அய்யப்ப பணிக்கரின் கவிதைகள்').

(3) 2006ல் கவிஞர் புவியரசு, காழி நஸ்ருல் இஸ்லாம் என்ற பிரபல வங்காளிக் கவிஞரின் தெரிந்தெடுத்த கவிதைகளைப்
'புரட்சிக்காரன்' என்ற பெயரில் மொழிபெயர்த்துப் பரிசு பெற்றார். (பிறகு இவர் தனது 'கையொப்பம்' என்ற தமிழ்க் கவிதைக்காக
2009ல் அகாதெமி விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது).

(4) 2007ல் (அமரர்) ரவி ஆறுமுகம், அரவிந்தரின் ஆங்கில நூலான 'சாவித்திரி'யை  "இதயத்தை அள்ளும் இறவாக் காவியம்" என்ற பெயரில் இரண்டு பாகங்களாக மொழிபெயர்த்ததன் வாயிலாகப்  பரிசு பெற்றார்.

(5) 2011ல் 'பறவைகள் ஒருவேளை தூங்கிப்போய் இருக்கலாம்' என்ற  கவிபெயர்ப்பிற்காக இந்திரன் என்பவர்
பரிசு பெற்றார். (ஒரிய மூலம்: மனோரமா பிஸ்வால் மஹபத்ரா-ஆங்கில வழி மொழிபெயர்ப்பு).

(உ ) நாவல்களுக்காக (12):

வங்காளி(1): 'முதல் சபதம்' என்ற பெயரில் புவனா நடராஜன், வங்காளி மொழியின் புகழ்பெற்ற நாவலாசிரியாரான ஆஷா
பூர்ணா தேவியின் 'ப்ரதம் பிரதிஸ்ருதி'யை மொழிபெயர்த்து
2009ல் பரிசு பெற்றார்.

கன்னடம்(5):
 (அ) மிகச் சிறந்த நாவலசிரியரான சிவராம் கரந்த்தின் 'மறளி மல்லிகே' நாவலை, T.B. சித்தலிங்கையா 'மண்ணும் மனிதரும்' என்று மொழி பெயர்த்தார்.(1990 பரிசு).
(ஆ) சதுரங்காவின் 'வைசாகா' நாவலை 'மௌன ஓலம்' என்று மொழிபெயர்த்தார், கே.வெங்கடாசலம்(1992 பரிசு).
(இ) சாரா அபூபக்கரின் நாவலை 'சந்திரகிரி ஆற்றங்கரையில்' என்ற அதே பெயரில் T. S. சதாசிவம் மொழிபெயர்த்தார்(1997 பரிசு).
(ஈ) எஸ்.எல்.பைரப்பாவின் நாவலை 'பருவம்' என்ற அதே பெயரில் பாவண்ணன் மொழிபெயர்த்தது 2004ல் பரிசு பெற்றது.
(உ) பூர்ணசந்திர தேஜஸ்வியின் நாவலை 'சிதம்பர ரகசியம்' என்ற அதே பெயரில் பா.கிருஷ்ணஸ்வாமி மொழி பெயர்த்து
2005ல் பரிசு பெற்றார்.

மலையாளம்(4):
(அ) எஸ்.கே.பொட்டக்காடு நாவலான 'விஷக்கன்னி' யை அதே பெயரில் மொழி பெயர்த்தவர் குறிஞ்சிவேலன்.(1994).
(ஆ) அந்தர்ஜனம் லலிதாம்பிகாவின் நாவலை'அக்னி சாட்சி' என்ற அதே பெயரில் மொழி பெயர்த்தவர், 'சிற்பி' பாலசுப்ரமணியன். (2000). இவர் பின்னாளில், 'ஒரு கிராமத்து நதி' க்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார் (2002) என்பதை மறக்க வேண்டாம்.
(இ) மலையாத்தூர் ராமகிருஷ்ணனின் 'இயந்திரம்' நாவலை அதே பெயரில் மொழிபெயர்த்து 2008ல் பரிசு பெற்றார், பா. ஆனந்தகுமார்.
(ஈ) நூரநாடு ஹனீபின் 'செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்ற நாவலை அதே பெயரில் மொழிமொழிபெயர்த்து 2010ல் பரிசு பெற்றார், நிர்மால்யா.

மராத்தி(1): புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளரான கா.ஸ்ரீ.ஸ்ரீ., 1991ல் பரிசு பெற்றது, வி.ஸ.காண்டே(க்)கரின் உலகப் புகழ் பெற்ற 'யயாதி' க்காக. தமிழிலும் அதே பெயர்.

பஞ்சாபி(1): புகழ் பெற்ற எழுத்தாளரான தி.ச.ராஜு, 'மங்கியதோர் நிலவினிலே' என்ற பெயரில் மொழிபெயர்த்தது, குருதயாள் சிங்கின் 'ஆத் (dh) சன்னனி ராத்' நாவலை. 1996ல் பரிசு வென்றார்.
******

மொழிபெயர்ப்பு என்பது நன்றி இல்லாத வேலை.
மொழிபெயர்ப்பின் வெற்றிக்கு  மூலநூல் ஆசிரியரே சொந்தம்
கொண்டாடுவார். தோல்விக்கோ, மொழிபெயர்ப்பாளன் தான்
பொறுப்பேற்க வேண்டும்.

முதல் நூல் எழுதுபவன் தன் கருத்திலிருந்து மட்டும் எழுதினால்
போதும். மொழிபெயர்ப்பாளனோ மூல நூலின் கருத்தை
உள்வாங்கிக் கொண்டு, தன் மொழிக்குண்டான  இலக்கண
இலக்கிய வழக்காறுகளை மீறாமல் புதியதொரு படைப்பை
உருவாக்கவேண்டும். பதிப்பாளர்களும், விமர்சகர்களும் இன்னொரு அளவுகோலும் வைத்திருக்கிறார்கள்: மூல நூல் 200 பக்கம் என்றால், மொழிபெயர்ப்பும் அதே அளவு இருக்கவேண்டும் என்பது தான் அது. கொஞ்சம் குறைந்தாலும் கூடினாலும் அது மொழிபெயர்ப்பாளனின் குறைபாடாகக் கருதப்படும்.

மொழிபெயர்ப்பு தோல்வி அடைந்தால், 'இவருக்கு சுயமாகவும்
எழுத வராது, மொழிபெயர்ப்பும் வராது' என்று  முத்திரை
குத்தப்படுவார். வெற்றி பெற்று விட்டாலோ, அவரை
மொழிபெயர்ப்புக்காகவே ஒதுக்கீடு செய்துவிடுவார்கள். சுயமாக
நன்கு எழுதினாலும், 'அண்ணன் எங்கிருந்தோ சுட்டுக்கொண்டு
வந்திருக்கிறார்' என்று தான் சொல்வார்கள்.

மூல நூலாசிரியருக்கே 'ராயல்டி' கிடைக்காத நிலையில், மொழிபெயர்ப்பாளனுக்கு யார் தருவார்? மேலும், தன் மொழி தாண்டிப் புகழ் பெற்றிராத நூல்களைப் பிற
மொழி வாசகன் வரவேற்பதுமில்லை.

இத்தனையையும் மீறி கா.ஸ்ரீ.ஸ்ரீ., த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாபதி போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் தமிழில்
வெற்றியோடு திகழ்ந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களின் பன்மொழி அறிவே ஆகும்.  உலகப் புகழ் பெற்ற மராத்தி எழுத்தாளரான வி.ஸ. காண்டே(க்)கர், ஒருமுறை சொன்னாராம்,  'நான் மராத்தியில் அறியப்பட்டதை
விடவும் தமிழில் தான் அதிகம் அறியப்பட்டிருக்கிறேன்" என்று. அதற்குக் காரணம் மேற்சொன்ன மூன்று மொழிபெயர்ப்பாளர்களும் தான். வட  இந்தியாவில் நீண்டகாலம் படித்து, வசித்து,  மராத்தி, வங்காளி மொழிகளை ஆழ்ந்து கற்றதன்
பயன், தமிழ் வாசகனுக்கு மட்டுமன்றி, மூல ஆசிரியனுக்கும்
போய்ச் சேர்ந்தது.
****
மேற்சொன்ன காரணங்களை முன்னிட்டுத் தான் சாகித்ய அகாதெமி, மொழிபெயர்ப்புத் துறைக்கென்று தனியாகப் பரிசு
வழங்கி வருகிறது. நிச்சயமாக இது  மொழிபெயர்ப்பாளனை
மட்டுமின்றி மூல நூலசிரியனையும் உற்சாகப்படுத்தும்
செயலாகும். இது மட்டும் இல்லையென்றால், மூல நூலாசிரியன்
தன் சொந்த செலவில் தான் மொழிபெயர்ப்பாளனை ஏற்பாடு
செய்துகொள்ள வேண்டியிருக்கும். அல்லது, 'உன் நூலை
என்மொழியில் நான் செய்கிறேன், என்னதை நீ உன் மொழியில் செய்' என்று பரஸ்பர முதுகு சொறிதலில் கொண்டுபோய் விடும்.

ஐரோப்பிய மொழிகளிலிருந்து கணினி மூலம் பரஸ்பர மொழிபெயர்ப்பு ஓரளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. (Google Translate ஓர் உதாரணம்).
*****

துரதிர்ஷ்டவசமாக, மேற்சொன்ன 23 நூல்களையும் நான் இதுவரை படிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. புத்தகக்  கண்காட்சிக்குப் போனாலும் ஆயிரக்கணக்கில் வந்திருக்கும் மூலநூல்களை விட்டுவிட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வாங்குவது என்னவோபோல் இருக்கிறது. இழவு வீட்டிற்குப் போய்விட்டு குளிக்காமல் உள்ளே நுழைவது போன்ற உணர்வு. இனிமேல் இந்த நூல்களைத் தேடிப் படிக்கப் போகிறேன். உறுதியாக.

நீங்கள் படித்திருந்தால், உங்கள் உணர்வுகளை உங்கள் வலைப்பூவில் வெளியிடுங்கள். அல்லது எனக்குக் கருத்துரையாக அளியுங்கள். உங்களால் தமிழ் பயன்பெறும்.

நாளைய அலசலில், இதுவரை வேற்று மொழிகளுக்கு பெயர்க்கப்பட்டு, அகாதெமி மொழிபெயர்ப்பு பரிசு வென்ற தமிழ் நூல்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
******

சீரியசான விஷயம் பேசி முடிக்கும்போது கொஞ்சம் நகைச்சுவை இருந்தால் ரசிக்கும் அல்லவா? இக்கட்டுரையின் ஒரு பகுதியை Google Translate மூலம் மொழிபெயர்க்க முயற்சித்தபோது கிடைத்த output இதோ:

இதுதான் input :

துரதிர்ஷ்டவசமாக, மேற்சொன்ன 23 நூல்களையும் நான் இதுவரை படிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. புத்தகக் கண்காட்சிக்குப் போனாலும் ஆயிரக்கணக்கில் வந்திருக்கும் மூலநூல்களை விட்டுவிட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வாங்குவது என்னவோபோல் இருக்கிறது. இழவு வீட்டிற்குப் போய்விட்டு குளிக்காமல் உள்ளே நுழைவது போன்ற உணர்வு. இனிமேல் இந்த நூல்களைத் தேடிப் படிக்கப் போகிறேன். உறுதியாக.

இதுதான்  output :










Unfortunately, the above 23 books I have not yet had the chance. I went to the book fair has thousands of books to buy mulanulkalai ennavope translation is leaving. Sign kulikkamal went home feeling like hell. I'm going to read the book to find. Be sure.
*****
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
  

4 கருத்துகள்:

  1. சாகித்ய அகாடெமி பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள்.
    நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  2. தீவிரமாக எழுதத் துவங்கி விட்டீர்கள். சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட சில நூல்கள் பற்றியும் கேள்வி எழுப்பலாம். கிடக்கட்டும். இனிவரும் காலத்தில் நேரடி மொழியாக்கங்கள் குறைந்துகொண்டே போகும். தில்லிகை நிகழ்ச்சிக்காக நான் தயாரித்த ஒரு கட்டுரையை நீங்கள் படித்திருக்கலாம். இல்லை என்றால் சுட்டி கீழே - http://pudhiavan.blogspot.in/2012/07/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல்கள் அய்யா. தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி நண்பர்களே! யாராவது ஓரிருவர் விளக்கம் பெற்றாலும் எழுதிய பயன் பெற்றவனாவேன். சாகித்ய அகாதெமி என்றாலே ஒரு மர்மவீடு போன்ற தோற்றம் இருந்தது. அதைக் களைய வேண்டியே இக்கட்டுரைத் தொடரை எழுதினேன். மேலும், நல்ல நூல்களுக்கு (மட்டுமே) பரிசு வழங்குவது என்று அண்மைக் காலத்தில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை, படைப்பாளிகள் புரிந்து கொண்டு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்.


    ஷாஜஹான் குறிப்பிட்ட வலைப்பூவை இப்போது நுகர்ந்துகொண்டிருக்கிறேன். விளைவைப் பின்னால் தெரிவிப்பேன்.

    பதிலளிநீக்கு