சனி, மார்ச் 09, 2013

"என்னால் வர்ணிக்க முடியாது"- பாரதி

உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது.

சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளில் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரிய அஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை.அப்போது வானத்திலே இந்திர ஜால மகேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்தக் கணமிருந்த தோற்றம் அடுத்த கணமிருப்பதில்லை.



உலகத்திலுள்ள திரவியம் முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும், அது சூரிய அஸ்தமன காலத்தில் வானத்திலே நாம் பொருள் செலவில்லாமல்
பார்க்கக்கூடிய காட்சிகளிலே கோடியிலொரு பங்கு கூடக் காணாது.  

வாண வேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக் கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவனது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிறதென்று அதைப் பார்த்து ஆயிரம் ஏழைகள் பெருமூச்செறிகிறார்கள்.

சகோதரா, சூரிய அஸ்தமனத்தின் விநோதங்களைச் சென்று பார். சூரியனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதியென்று குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. சூரியனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண் கொண்டு பார்க்காதே.
********

சூரிய அஸ்தமனத்தின் அற்புத சௌந்தர்யங்களை எழுதிப் பிறர் மனத்தில் படும்படி செய்வது சாத்தியமில்லை. நேரிலே கொண்டு காட்டினாலும், பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவது தான் அர்த்தமாகுமே யல்லாமல், விஷயம் தெரியாது. சகோதரா, நீயாகவே போய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு தான் அந்த தெய்வக் காட்சி சிறிது சிறிதாக விளங்கும்.

சூரிய உதயத்திலேயும் சூரிய அஸ்தமனத்திலேயும் வானத்தில் நடக்கும் இந்திர ஜாலக் காட்சியில் கணந்தோறும் புதிய புதிய வினோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷம் உண்டு. நேற்றிருந்தது போல் இன்றைக்கிராது. இன்று இருப்பது போல நாளை இராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புகள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு மகிமைகள், வெவ்வேறு கனவுகள், வெவ்வேறு ஆனந்தங்கள்......

சில தினங்களின் முன்பு ஓர் மாலைப் பொழுதில் நான் கண்ட அதிசயங்களை ஒருவாறு இங்கு குறிப்பிடுகிறேன்.

அடிவானத்தில் சூரியகோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலே தான் கண் கூசும். சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால், பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய்விடும்.

இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும். கீழேயிருப்பது 
சுத்தமான மின்வட்டம். மேலே மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை! பச்சைத் தகடு பின்புறத்திலிருக்கும் மின் தகட்டை முழுதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும், இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக் கிரணங்கள் கண் மீது பாயும்.

பார்! சூரியனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவது போலத்  தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சி விட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!

நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை வகைக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க சரிகைக் கரை போட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக் களஞ்சியம். போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது.

(பாஞ்சாலி சபதம் - பாடல்கள் 147 - 151 : 'மாலை வருணனை ' என்ற பகுதிக்கு அடிக்குறிப்பு  எழுதும் பாரதி, தான் ஏற்கெனவே  'கர்மயோகி' பத்திரிகையில் 'சூரிய அஸ்தமனம்' என்ற பெயரில் எழுதிய மேற்கண்ட கட்டுரையைத் தருகிறார்). 

மேற்படி கட்டுரையில் தன் காலத்துக் கவிஞர்களை ஒரு பிடி பிடிக்கிறார், இப்படி:

 "நாட்டில் வேத காலத்து ரிஷிகள் பிரகிருதியின் சௌந்தர்யங்களைக் கண்டு மோகித்துப் பரமானந்தம் எய்தியவர்களாய் பல அதிசயமான   பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசம் எய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலே தான் இந்தத் துரதிர்ஷ்ட நிலை   கொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்கள் எல்லாரும் கவிகளென்று  சொல்லி வெளி வருகிறார்கள்."
***********
பாரதியார் கவிதைகள்: மணிவாசகர் பதிப்பகம்: செம்பதிப்பு: 1998: பக்கம் 428-429)

(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

1 கருத்து:

  1. பாரதியாரின் கவி பிடிக்கும் ... அதைவிட பாரதியாரை அதிகம் பிடிக்கும் ... குடிசையில் வாழ்ந்து கவிதையால் உச்சம் தொட்டவன். அப்படியே இங்க கிளிக்குங்க

    பதிலளிநீக்கு