திங்கள், பிப்ரவரி 20, 2017

கடவுளும் கண்ணதாசனும்

பதிவு எண் 12/2017
கடவுளும் கண்ணதாசனும்
-இராய செல்லப்பா

“நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா?
நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா?”

என்ற பாடலை எழுதியபோது கவிஞர் கண்ணதாசன் நாத்திகவாதம் பேசும் குழுவினரோடு அடைக்கலமாயிருந்தார்.

“சீரங்க நாதரையும் தில்லைநட ராசரையும்
பீரங்கிவைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?”

என்ற கூச்சல்  தெருமுனைகளில் கேட்டுக்கொண்டிருந்த காலம். எனவே தெய்வத்திற்கே   எதிர்க்கேள்வி கேட்கும் சூழ்நிலையைக் கவிதையில் அவர் பயன்படுத்திக்கொண்டதில் வியப்பில்லை.
படம்: நன்றி: தமிழ் இந்து -இணையத்தில் இருந்து

இருந்ததை எல்லாம் வஞ்சகர்களிடம் இழந்து, நடுத்தெருவுக்கு வந்துவிட்ட கதாநாயகனாக ட்டி.ஆர்.மாகாலிங்கம் பாடும் பாடல் அது.

படம்: கவலை இல்லாத மனிதன்

“எனக்கென்று தாய்தந்தை யாருமில்லை
உனைப்பெற்ற தாயார்க்குப் பேருமில்லை -பசி
எடுத்தாலும் எனேக்கேதும் தருவாரில்லை – பிறர்
கொடுத்தாலும் தாய் உனக்குப் பசியேயில்லை

“பணம்காசு கடன் தந்து வீட்டை எடுத்தான்- உனக்கு
பால் பழம் கடன் தந்து  கண்ணை மறைத்தான் -இனி
நடைபாதை தனில் எந்தன்  திருநாளம்மா -அது
நடமாட முடியாத உனக்கேதம்மா?”

****

இன்னொரு பாடலில்  கடவுளுக்குச் சாபமிடும் அளவுக்குப் போய்விடுகிறார் கவிஞர். காதலில் தோல்வியடைந்தவன் யாரைத்தான் சாபமிடமாட்டான்!

படம்: வானம்பாடி

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும் -அவன்
பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்”

“எத்தனை பெண் படைத்தான்
எல்லார்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசை எனும்  விஷம் கொடுத்தான் -அதை
ஊரெங்கும் தூவி விட்டான் –
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்

“அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா, ஆடு என்று
ஆடவைத்துப் பார்த்திருப்பேன்
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்திவைப்பான்”                     
**** 

பிற்காலத்தில், கண்ணதாசன்  என்ற தன் பெயருக்கேற்ப ஆத்திகனாகி, கண்ணன் பெயரில் பக்திப்பாடல்களும் எழுதிக்கொண்டிருந்த நிலையில், கடவுளை நேரடியாக எதிர்கொள்வதுபோல் ஒரு பாடலை எழுதுகிறார்: “நான் படைப்பதனால் என் பேர் இறைவன்” என்று.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு – இசை
பாடலிலே என் உயிர்த்துடிப்பு-நான்
பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

படம்: இரத்தத் திலகம்

“காவியத்தாயின் இளைய மகன்
காதல்பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்-நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

“மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்-அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணம் இல்லை”

படம்: நன்றி: இணையத்தில் இருந்து

இதைப் பார்க்கின்றபோது வித்யாகர்வம் என்னும் கல்விச்செருக்கு வெளிப்படுவதாகவே கொள்ளவேண்டும். ஆனால் அதையும் தாண்டி, அவர், தன்னை இறைவனாகப் பாவித்துக் கொள்வதற்குரிய தகுதியை எப்படிப் பெறுகிறார் என்பதை இன்னொரு  பாடலில் இருந்து தெரிந்துகொள்ளலாம்:

படம்: சுமைதாங்கி

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

“வாரிவாரி வழங்கும்போது
வள்ள லாகலாம்
வாழை போலத் தன்னைத்தந்து
தியாகி யாகலாம்
உருகுயோடும் மெழுகு போல
ஒளியை வீசலாம்

(மனிதன் என்பவன் தெய்வமாகலாம்)

“ஊருக்கென்று வாழ்ந்த  நெஞ்சம்
       சிலைக ளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம்
       மலர்க ளாகலாம்
யாருக்கென்று  அழுதபோதும்
      தலைவ னாகலாம்

(மனம்-மனம்-அது கோவிலாகலாம்)

“மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்தச்
சுமையும் தாங்கலாம்

(குணம் -குணம் – அது கோவிலாகலாம்)”

****

கவிஞர், அரசியலில் உயர்பதவிகளைப் பெற்றாரில்லை. ஆனால் அரசியல் தலைவர்களை விடவும் மற்றவர்களுக்காக அழுதவர் அவர். மனித உணர்ச்சிகளின் ஒவ்வொரு சிறு துகளையும் தன பாடல்களில் அவர் பளீரிட வைத்திருப்பார்.

இளைஞனோ, இளைஞியோ, குடும்பத்தலைவனோ, முதியவரோ, யாராயினும் தமது நிறைவேறாத, சொல்லமுடியாத, நெருங்கிய நட்புக்கும் தெரிவித்துவிடமுடியாத,  உணர்ச்சிகளைக்  கவிஞரின்  ஏதாவது ஒரு பாடலில் நிச்சயமாகச் சந்திக்கமுடியும். அவர்களின் ஆசைகளை, ஏமாற்றங்களை, கோபங்களை, பொறாமைகளை, வீரத்தை, வெற்றிகளை, வீழ்ச்சிகளை, ஆற்றாமையை, அழுகுரலை, தன் பாடல்களில் இடம் கிடைத்தபோதெல்லாம் அவர் பதிவுசெய்து வந்திருக்கிறார். குடும்பக்கதையோ, புராணக்கதையோ,  சரித்திரக்கதையோ எதுவானாலும் தனது  பாடல்களில் பொருத்தமானதொரு  தத்துவக் கருத்தை அவரால் நுழைத்துவிட முடிந்தது. அந்தப் படங்களின் ஆயுளைவிடவும் அவரது பாடல்களின் தத்துவங்களுக்கு ஆயுள் அதிகமாக இருந்தது. பின்னாளில் வந்த ‘வானம், மேகம், ஜன்னல், நிலா’ கவிஞர்களுக்கும் அவருக்கும் இருந்த முக்கிய வேறுபாடு இதுவே.

“யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்” – என்ற வரிகளை அவர் வாழ்ந்தே காட்டியிருக்கிறார். கதாசிரியனாய், வசனகர்த்தாவாய், கவிஞனாய் மட்டுமே நின்றிருந்தால் அவருக்கு இந்த அனுபவம் சாத்தியப்பட்டிருக்காது. அதையும் மீறி, ஒரு திரைப்படத் தயாரிப்பாளனாய், அரசியல்வாதியாய், வாரப் பத்திரிக்கை என்று தொடங்கி, மாத இதழ் நடத்தி, தினசரிப் பத்திரிக்கை வரை நடத்திக் காட்டிய அனுபவங்கள் இந்தியாவிலேயே வேறெந்தக் கவிஞனுக்கும் வாய்த்ததில்லை. அந்த முயற்சிகளில் பெரும்பாலானவை, பொருளாதார  ரீதியாகத் தோல்வியில் முடிந்தன. ஆனால், தான் தொட்ட எதிலும் தனக்கே உரிய முத்திரையைப் பதிக்க அவர் தவறியதில்லை.

வணிகப் பத்திரிகைகள் விற்கும், ஆனால், இலக்கியப் பத்திரிக்கை விற்குமா என்று தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த  ஆனந்தவிகடன், தன்னுடைய எழுபத்தைந்து வயதில்தான் ‘தடம்’ என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கும் தைரியத்தைப் பெற்றது. ஆனால், அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, அதே தடிமனான அளவில் ‘கண்ணதாசன்’ என்ற 160 பக்கமுள்ள மாத இதழைக் கொண்டுவரும் விவேகமும் துணிச்சலும் கண்ணதாசனுக்கு இருந்தது. ஆனால்,  திரைப்பாடல்களை ரசித்துப் போற்றமுடிந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு, அவருடைய நல்ல எழுத்துக்களை உடனே அடையாளம் கண்டு ஆதரிக்கும் அளவுக்கு இலக்கியத்தேடல்  அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, அந்த மாத இதழ் சில மாதங்களுக்குப் பிறகு மூடுவிழா கண்டது. ஆனால், அவரது இறப்பிற்குப் பிறகு அவருடைய நூல்கள் ஒவ்வொன்றும் விற்பனையில்     தங்கச் சுரங்கமாக விளங்குவது கண்கூடு.
   
****

இன்னொரு பாடலும் குறிப்பிட வேண்டியது:

“தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே – வேறெங்கே?


தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே

படம்: சரஸ்வதி சபதம்

“பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு

“ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவ தில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபா டில்லை

“இசையில்  கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு -தெய்வம்
ஏற்கும் உனது தொண்டு”
****

“இசையில்  கலையில் கவியில்... இறைவன் உண்டு” என்று சொன்னதால், கவிஞனான தன்னிடம் அந்த இறைவன் இருப்பதாகவே கண்ணதாசன் கருதினார் எனலாம். “நான் படைப்பதனால் என் பேர் இறைவன்” என்று சொன்னதும் அதனாலேயே.

****
தமிழ்க் கவிஞர்களுக்கும் இறைவனுக்கும் எப்போதுமே  நல்ல தொடர்பு இருந்துவந்திருக்கிறது. ‘பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா’ என்று பாண்டிய மன்னன் சந்தேகமுற்றபோது, தருமியின் மூலம் ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ என்று வண்டுக்குக் கூறுவதுபோல் அரசனுக்கு விளக்கமளித்த இறைவன், தலைமைப் புலவர் நக்கீரனோடு தமிழில் விளையாடவே தான் வந்ததாகக் கூறுவார் அல்லவா?

இறைவனின் இந்த விளையாட்டுப் புத்தி காரணமாகவோ என்னவோ, பக்திக் கவிஞர்கள் பலபேர் இறைவனை நேரடியாகவும் வஞ்சப்புகழ்ச்சியாகவும் ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். பட்டினத்தாரும்  அருணகிரிநாதரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

கந்தவேளின் அருள்வேண்டிக் கதறுகிறார்  அருணகிரிநாதர். சிங்கார மடந்தையர் சுகத்திற்கு ஏங்கி ஏங்கித்  தன் வாழ்வே பாழானதே என்று புலம்புகிறார். இறைவனின் திருவடி நிழலில் தனக்கு இடம் தரக்கூடாதா என்று கோவில் கோவிலாகச் சென்று பாடுகிறார். எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் யாரும் தடுக்கமுடியுமா என்று கேட்கிறார்.

“ஆதாரம் இலேன் - அருளைப் பெறவே
நீ தான் ஒரு சற்று(ம்) நினைந்திலையே”

என்று கந்தனைக் கண்டிக்கின்றார் (கந்தர் அநுபூதி 26)

“இல்லே யெனும் மாயையில் இட்டனை நீ,
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே”

என்று அழுகிறார். (29)

இனியும் நான் பொறுக்கமாட்டேன், முருகா, என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு இப்படிப் பேசுகிறார் அருணகிரி:

மானிட வாழ்க்கையென்னும்  நரகத்தில் நான்  உழன்று அழிந்தாகவேண்டும், நீ மட்டும் உன்னுலகில்  நலமாக இருந்தாகவேண்டும் என்று நீ முடிவு செய்துவிட்டபின், நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முருகா, எப்போது உன்னை உணர்ந்தேனோ, அப்போதிலிருந்து தாழ்வானவற்றை நான் செய்ததில்லையே, இருந்தும் நீ என்னைச் சோதிக்கிறாயே!  “நன்றாக இரு, முருகா, நீ நன்றாக இரு!” என்று மனம் துவண்டு வாழ்த்துகிறார். “வாழ்வாய், இனி நீ “ என்று மயில்வாகனனைப் பார்த்துக் கூறுகிறார்.

பாழ்வாழ் வெனும் இப் படுமா யையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே,

தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய், இனி நீ, மயில்வா கனனே. (31)

இப்படி எல்லாம் பகடி செய்தால் அந்த இறைவன் கோபித்துக்கொள்ள மாட்டானோ? இல்லவே இல்லை. தமிழ்க் கடவுளல்லவா முருகன்! என்றென்றும் அழியாத தமிழ்க்கவிதைகளை மேலும் மேலும் வழங்கும்படி அருணகிரிக்கு வற்றாத கவிதைவளத்தை அளித்தான் என்பதுதானே வரலாறு!

(இன்றைய கவிஞர்களிடம் இப்படியெல்லாம் இறைவன் விளையாடுவதாகத் தெரியவில்லையே, ஏன்?)
**** 

14 கருத்துகள்:

 1. கவிஞர்களுடன் இறைவன் விளையாடுவது ஒருபுறம் இருந்தாலும் இறைவனுடன் கவிஞர்கள் விளையாட வேண்டும்.. அதற்கு உறுதுணை தமிழ் ஒன்று தான்..

  பதிலளிநீக்கு
 2. நாத்திகவாதி ,ஆன்மீகவாnதியாகி ,அர்த்தமுள்ள ஹிந்துமதம் என்றார் ,பிறகு இயேசு காவியம் என்றார் !இன்றைய கவிஞர்களிடம் இவ்வளவு ஊசலாட்டம் இல்லை ,எனவே இறைவனை விளையாட அழைக்கவில்லை :)

  பதிலளிநீக்கு
 3. கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் பாடலில் "அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் என்று எழுதி இருந்ததாகவும் இசை அமைப்பாளர் வற்புறுத்தி அந்த வார்த்தையை மாற்ற வைத்ததாகவும் படித்த நினைவு. அவர் அரசியல்வாதியாய், வசனகர்த்தாவாக, கதாசிரியராக எல்லாம் இருந்திருந்தாலும் அவர் படைத்த கவிதையால் தான் இறைவன் ஆனார்.

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான பதிவு ஐயா
  கண்ணதாசன் கண்ணதாசன்தான்
  அவருக்கும் அவர்தம் கவிதைக்கும் மரணமேது
  தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும்
  காலத்தை வென்ற கவிஞர் அல்லவா

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொருவனுக்கும் அது என்று அவனாகவே பொருள் கொள்ளும் விதத்தில் அன்றைய பாடல்கள் இருந்தன. அவருடைய பாடல்களைப் படங்களில் பொருத்தி அழகு பார்த்தனரோ என்னும் சந்தேகம் எழுவதுண்டு. படத்துக்காகப் பாடல் என்றில்லாமல் தகுந்த இடத்தில் அவரது பாடல்களை பொருத்தினரா என்றும் தோன்றுவதுண்டு

  பதிலளிநீக்கு
 6. அருமையான தொகுப்பு
  கண்ணதாசனுக்கு நிகராக
  எவருமில்லையே!

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு! அவர் தனது பாடல்களால் அதாவது கவிதையால் தான் இத்தனை புகழடைந்தார் இல்லையா சார்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், கண்ணதாசனின் புகழுக்கு அவரது கவிதைகளே காரணம். அதே சமயம், தனது 'அர்த்தமுள்ள இந்துமதம்' பத்துத் தொகுதிகளால் தமிழ் உரைநடைக்கு அவர் புகழைச் சேர்த்தார் என்று கூறவேண்டும்.

   நீக்கு