ஞாயிறு, மே 17, 2020

பொன்னித்தீவு -9


பொன்னித்தீவு -9

  -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(9) இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர்

கொரோனா ரிப்போர்ட்டில் நெகட்டிவ் என்று வந்ததால் இன்ஸ்பெக்டர்  கண்ணன் மறுபடியும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிசெய்வதற்கு வந்துவிட்டார். புஷ்பாவின் ரிப்போர்ட்டும் நெகட்டிவ் தான். அந்த மகிழ்ச்சியில் அவள் புதிய ஃபிளாஸ்க்கில் காப்பி நிரப்பிக்கொண்டு வந்திருந்தாள். ஸ்டேஷனில் இருந்த மற்ற மூன்று காவலர்களும் இரண்டு வாரங்கள் முன்பே வேறொரு ஸ்டேஷனுக்கு டெபுடேஷனில் சென்றுவிட்டார்கள்.

நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்டருக்குக் கொஞ்சம் தூக்கலாகவே சர்க்கரைபோட்டு காப்பி கொடுத்தாள் புஷ்பா.
“அவசரமான கேஸ்கள் ஒன்றும் இல்லை சார்!” என்றாள்.

தான் தாற்காலிகமாகத்தான் அங்கு போஸ்டிங் ஆகியிருப்பதால், பழைய கேஸ்களை எடுத்து விசாரிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று அவருக்குத் தெரியும். ஆனால்  இத்தனை வருட அனுபவத்தில் தன் பாக்கெட் இவ்வளவு நாட்கள் காலியாக இருந்ததில்லை என்பது சோகமாக இருந்தது. கொரோனா ஊரடங்கினால்  டூ வீலர்களும் ஷேர்-ஆட்டோக்களும் ஓடாததால் பணப்புழக்கம் என்பதே இல்லை.

டக்கென்று நினைவுக்கு வந்தது, செல்வம்-செம்பகம்-நெக்லஸ் வழக்கு. உற்சாகம் அடைந்தவராக, “புஷ்பா, அந்த ஃபைலைக் கொண்டுவா” என்றார்.    

“யமுனாம்மா வீட்டிற்குப் போயிருந்தேன் சார்! பக்கத்து வீட்டில்தான் செம்பகம் வேலை செயகிறாளாம். ஆனால் அவளுடைய தெருவை  கொரோனா கண்டெயின்மெண்ட் ஜோன்  ஆக்கிவிட்டதால் அவள் வரவில்லை” என்று கூறினாள் புஷ்பா.

“இப்போது நம்ம ஊரில் எந்த இடத்திலும் கொரோனா இல்லை என்று ஹெல்த் ஆபீசில் சொல்லிவிட்டார்கள். ஆகவே நாம் உடனே அவளை விசாரித்தாகவேண்டும். உனக்குத்தான் தெரியுமே, பொதுவாகவே பணக்கார  வீடுகளில் நாலு வீட்டுக்கு ஒரு வீடு என்று வேலைக்காரர்கள் தான் நகைத்திருட்டில் ஈடுபடுகிறார்கள்” என்றார் கண்ணன்.

“அதற்குமுன்னால் செம்பகத்தின் புருஷனைக்  கூப்பிட்டால் சரியாக இருக்கும் அல்லவா?” என்றாள் புஷ்பா.

“ஆம், மண்டை பிளக்கிற வெய்யிலில் நின்று நின்று எனக்கு மூளையே மரத்துப்போய்விட்டது. அவனுக்குப் போன் போடு!” என்றார் கண்ணன்.

தன்னை எப்படியும் போலீசில் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தான் ராஜா. தாமதம் செய்யாமல் வந்தான். “வணக்கம் சார்” என்றான்.

தலைமுதல் பாதம்வரை அவனை ஆராய்ந்தார் கண்ணன். நல்ல கட்டுடல். களையான முகம். சுறுசுறுப்பானவனாகத் தோன்றினான். இவன் திருட்டில் ஈடுபட்டிருக்க வழியில்லை என்றே தோன்றியது. ஆனால் அவனுக்கு மனைவியாய் இருப்பவள் போயும் போயும் அந்த பயந்தாங்கொள்ளி செல்வத்தையா கள்ளக்காதலனாக வைத்திருப்பாள்? அப்படியே செல்வம் அந்த நெக்லஸை இவளிடம் தந்திருந்தாலும் கணவனுக்குத் தெரியாமல் அதை எப்படி மறைத்துவைக்க முடியும்? கணவன் அவளைச் சும்மா விட்டுவைப்பானா?

இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி, முதலில் இருந்து ஆரம்பிக்கலாமா, அல்லது நீயே உண்மையைச் சொல்லி விடுகிறாயா?” என்று ராஜாவை மிடுக்கோடு கேட்டார்.

“மன்னிக்க வேண்டும் சார்! நான் ...என்ற நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூடிவ் ஆக வேலை செய்கிறேன். எனக்குத் திருமணமாகி செம்பகம்  என்ற மனைவி இருக்கிறாள். குழந்தைகள் இல்லை. அதிக வசதிகள் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வேறு ஏதாவது சொல்லவேண்டுமா சார்?” என்றான் ராஜா, மரியாதை கலந்த குரலில்.

“உங்கள் நிறுவனம் என்ன தொழில் செய்கிறது?”

“சென்னை கார்ப்பொரேஷனுக்கு குப்பை சேகரித்து அகற்றும் ஒப்பந்தப் பணியில் இருக்கிறோம் சார்!”

“அதாவது குப்பை பொறுக்கும் ஆசாமி நீ!” என்று கேலியாகச் சிரித்தபடி புஷ்பாவைப் பார்த்தார் கண்ணன். அவள் எந்த எதிர்வினையும் இன்றி நின்றாள்.

“மன்னிக்கவேண்டும் சார். அவ்வளவு கேலியாக எண்ணவேண்டாம். இன்று சென்னை நகரம் ஓரளவு தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்றால் அதில் எங்களுக்கு முக்கியப்  பங்கு உண்டு!” என்றான் ராஜா.

“அது போகட்டும், உண்மையைச் சொல்! உன் மனைவி உன்னுடன் சந்தோஷமாக இருக்கிறாளா?”    

அதைப் பற்றி இவருக்கென்ன வந்தது என்று புருவத்தைச் சுருக்கினான் ராஜா, பதிலேதும் சொல்லாமல்.

“குறிப்பாக, அவள் ஏதாவது நகை நட்டு கேட்டு நச்சரித்தாளா? நீ வாங்கிக்  கொடுத்தாயா என்பது பற்றிச் சொல்ல வேண்டும்” என்று கண்டிப்பான குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர்.

“மன்னிக்கவேண்டும் சார்! ஏன் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். அவள் ஆசைப்படி அவளுக்கு ஒரு நெக்லஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் பழைய நகை தான். மற்றப்படி ஏதுமில்லை” என்றான் ராஜா குழப்பத்துடன்.
  
அப்போது புஷ்பா இன்ஸ்பெக்டரைப் பார்த்து அர்த்தபூர்வமாகக் கண்ணடித்தாள்.

“நல்லது, ராஜா! புதுப் பொண்டாட்டி கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஆனால் உண்மையைச் சொல், அதை நீ வாங்கினாயா, அல்லது…..?” என்று அவனைக் கூர்ந்து நோக்கினார்.

ராஜா அயரவில்லை. “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

அவனுக்கு மிக அருகில் வந்தார் கண்ணன். “இதோ பார், சில பெண்களுக்கு ஆசை அதிகம் இருக்கும். அதிலும் அழகான பெண்களுக்கு வேறு மாதிரி ஆசைகளும் இருக்கும். எங்கள் தொழிலில் நாங்கள் பார்க்காத பெண்களா? உண்மையைச் சொல், உன் மனைவியும் ரொம்ப அழகானவள் என்று கேள்விப்பட்டேன். அவளுக்கு உன்னைத் தவிர…..” என்றவரை மேற்கொண்டு பேசவிடாமல் “சார், போதும் நிறுத்துங்கள். என் மனைவியைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசினால் நான் பொறுக்கமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான் ராஜா.

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இறங்கி வந்தார். “ராஜா, ஐ ஆம் சாரி. ஒரு விஷயம் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன். போகட்டும், நீ ஆபீசுக்குப்போன பிறகு உன் மனைவி என்ன செய்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா?”

“தினமும் காலையில் அவளை நான்தான் வக்கீல்மாமி வீட்டில் கொண்டுபோய் விடுவேன். மாலையில் பிக்கப் செய்துகொள்வேன். அங்கு வீட்டுவேலை செய்கிறாள். முழுநேரமும் அங்குதான் இருப்பாள்!”

“செல்வம் என்பவரைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

ராஜா மலர்ச்சியோடு சொன்னான். வக்கீல்மாமி வீட்டுக்கு அருகில்தான் செல்வம் இருக்கிறார். ஐ.ட்டி. பணியாளர். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்.

“ராஜா, நான் கேட்பதற்குச் சரியான பதில் வேண்டும். அந்த செல்வத்துக்கும் உன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக நீ எப்போதாவது சந்தேகப்பட்டதுண்டா?”

கோபத்தால் கொதித்துப்போனான் ராஜா. “சார், என் மனைவி ஒரு நெருப்பு மாதிரி. தெரிந்துகொள்ளுங்கள்” என்றான்.

இன்ஸ்பெக்டர் அவன்  தோள்களைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தார். 

“மறுபடியும் சாரி, ராஜா! அப்படியானால் செல்வத்திற்கும் உனக்கும் எப்படித் தகராறு வந்தது? நீ அவரை மிரட்டியதற்கு சாட்சி இருக்கிறதே!” என்றார்.

ராஜாவுக்குப் புரிந்துவிட்டது.

அன்றொருநாள் செல்வத்தை அவருடைய வீட்டு வாசலில் நிறுத்தி “நீங்க செய்றது நல்லா இல்லை!” என்று சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. சிரித்தான்.

“சார், நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும்  இல்லை. எங்க கம்பெனி அவருடைய ஆபீசுக்கும்தான்   க்ளீனிங் சர்வீஸ் செய்கிறது. அங்கு எல்லாரும் எங்கள் சர்வீஸில் திருப்தியாக இருக்கிறார்கள். ஆனால் யூனியனைச் சேர்ந்த சிலர் எங்களை விரட்டிவிட்டுத்  தங்களுக்கு வேண்டிய ஒரு கம்பெனியைக்  கொண்டுவரப்  பார்க்கிறார்கள். அவர்களுக்கு மிஸ்டர் செல்வம் ஒத்து ஊதுவதாகச் செய்தி வந்தது. அதற்காகத்தான் செல்வத்திடம் அப்படிப் பேசினேன். அது மிரட்டல் அல்ல சார், வெறும் பேச்சு தான்!” என்று தெளிவுபடுத்தினான் ராஜா.

“மேலும், அன்றுதான் அவரை முதல்முதலாகப் பார்த்தேன்!” என்றான்.

கண்ணனுக்கு மூளை மேலும் குழம்புவதுபோல் இருந்தது. புஷ்பாவைப் பார்த்தார். அவள் உடனே இருவருக்கும் காப்பி கொடுத்தாள்.

“ராஜா, அந்த நெக்லஸைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா? அது செல்வம் உன் மனைவிக்குக் கொடுத்தது தானே?”

மறுபடியும் எச்சரிப்பதுபோல் முகத்தில் ஆத்திரத்தைக் காட்டினான் ராஜா. “சார், அது உண்மையில் செல்வத்தின் நெக்லஸ் தான். ஆனால் அதை செல்வம் கொடுக்கவில்லை. நான் காசுகொடுத்து வாங்கியது”  என்றான். 

இன்ஸ்பெக்டருக்கு நிஜமாகவே மண்டை காய்ந்துபோனது. நிச்சயம் செல்வம்தான் ஏதோ  தகிடுதத்தம் செய்திருக்கிறான். அவனை உடனே விசாரிக்கவேண்டும். ராஜாவை ஏற்றிக்கொண்டு தன்  மோட்டார்சைக்கிளில் கிளம்பினார்.

(தொடரும்)   (கன்னித்தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வெள்ளி, மே 15, 2020

பொன்னித்தீவு -8


பொன்னித்தீவு -8

     -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(8) ராஜா ராஜா

பரமசிவமும் ராஜாவும் அந்த மார்வாடிக் கடையை அடைந்தபோது அங்கு கூட்டமே இல்லை. கம்மலை அடகுவைக்க ஒரு பெண்மணியும், அடகுவைத்த கொலுசை மீட்டுக்கொள்ள இன்னொரு பெண்மணியாக இரண்டே பேர்தான் இருந்தனர். மார்வாடியின் பெயர் நீளமாக இருந்தது. அதன் பாதி பாரஸ்மல் என்றது.

பாரஸ்மல்  அழகான தமிழில் பேசினார். “தங்கசாலைத் தெருவில்தான் மூன்று தலைமுறையாக வசிக்கிறோம். என் தகப்பனார் மு.வ.விடம் தமிழ் படித்தவர். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. நான் பொற்கோவிடம் படித்தவன். நானும் பட்டம் வாங்கவேண்டுமென்று கவலைப்படவில்லை. ஆனால் நன்றாகத் தமிழ் பேச வந்திருப்பதே பெரிய இலாபம் தானே!” என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர்களை உட்காரச் சொன்னார்.

அதிக எடையில்லாத அலுமினிய ஸ்டூலில் சற்றே பயத்துடன் அமர்ந்தார் பரமசிவம். ராஜா மட்டும் நின்றுகொண்டான்.

அந்தப் பெண்கள் இருவரையும் அவசர அவசரமாக முடித்து அனுப்பிவிட்டு,  ராஜாவின் பக்கம் திரும்பி, “வணக்கம் தம்பி! என்ன விசேஷம்? திரும்பவும் பழைய நகை ஏதாவது வேண்டியிருக்கிறதா? கவலை வேண்டாம். எல்லாம் கிடைக்கும்” என்றார் பாரஸ்மல். “நாலு ஜோடி வளையல் வந்திருக்கிறது. பார்க்கிறீர்களா?”

ராஜா புன்முறுவல் பூத்தான். பரமசிவத்திடம், “சார் வசிக்கும் குடியிருப்பில் எங்கள் கம்பெனிதான் பிளாஸ்டிக் அகற்றும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ரொம்ப நல்ல குடியிருப்பு” என்றான்.

“உங்கள் சந்தேகம் என்ன என்பதைத் தெரிவித்தால் பாரஸ்மால் சார் உதவி செய்யாமல் இருக்கமாட்டார்” என்று அவர்பக்கம் திரும்பினான்.

பாரஸ்மல் தன் இருக்கையிலிருந்து விசுக்கென்று எழுந்தார். “சந்தேகமா? போலீசில் இருந்து வந்திருக்கீர்களா? ராஜா, இவர் யார்?” என்றார். “பதினைந்து வருஷமாகத் தொழில்செய்கிறேன். என்மீது ஒரு கரும்புள்ளி கிடையாது தெரியுமா?” 

திருட்டு நகைகளை போலீசுக்குத் தெரிந்தும்  தெரியாமலும் வாங்கி விற்றுக்கொண்டிருந்தவர்தான் அவர். அது விஷயமாக விசாரணை செய்கிறார்களோ என்று கவலைப்பட்டார். அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ள முடியுமா!

ராஜா அவர் கைகளை விரைந்து பற்றிக்கொண்டான். “சந்தேகம் உங்கள்மீது அல்ல சார், என் மீது! அந்த நெக்லஸை வாங்கினேனே, அதைப் பற்றித்தான் பரமசிவம் சார் பேச வந்திருக்கிறார்!”

பாரஸ்மல்லுக்கு அப்போதுதான் மூச்சுவந்தது.

பரமசிவத்தைப் பற்றிய விவரங்களை மிகவும் பணிவாகக்  கேட்டுத்தெரிந்து கொண்டார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் தன்  மைத்துனரின்  பிள்ளைக்கு  வட்டிக்கடை வைக்க நல்ல இடம் கிடைக்குமா என்றும் விசாரித்தார். யாருக்கோ போன் செய்து இரண்டு ஸ்டிராங் காப்பி கொண்டுவரச் சொன்னார். பிறகு உள்ளே போனவர் “கேன்சல்டு டாக்குமெண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டிருந்த குண்டான பாக்ஸ்ஃபைல் ஒன்றை எடுத்துவந்து மேஜையில் வைத்தார்.

“தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டக்கென்று சொல்லமுடியும் சார். அவ்வளவு ஞாபகசக்தி எனக்கு! அதிலும் ராஜா மாதிரி நல்ல ஆசாமிங்க விஷயம்னா இன்னும் நல்லாவே நினைவிருக்கும்!” என்றார், ஃபைலுக்குள்ளிருந்து சில பேப்பர்களை வெளியே எடுத்துக் காட்டினார்.

“இதோ பாருங்கள்.  இந்தத் தேதியில் ...ராஜாவுக்கு ...இத்தனை கிராம்  எடையுள்ள ஒரு தங்க நெக்லஸை ..இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ததற்கான எங்கள் கடையின் பில்! ராஜாவின் கையெழுத்தையும் பாருங்கள்!” என்றார்.

பரமசிவம் அந்தப்  பேப்பர்களைப் புரட்டினார். பாரஸ்மல்  சொன்னது  உண்மையே. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாகச் செலுத்தி ஒரு நெக்லஸை ராஜா வாங்கியிருக்கிறான். சந்தேகமில்லை.

“மிஸ்டர் பாரஸ்மல்! என்னுடைய ஒரே கேள்வி, இந்த நெக்லஸ் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான். யாரோ திருடிவந்து உங்களிடம் விற்றிருக்கலாம் அல்லவா?” என்று அமைதியாகக் கேட்டார் பரமசிவம்.

கலகலவென்று சிரித்தார் பாரஸ்மல். “அவ்வளவு சுலபமாகத் திருட்டு நகையை வாங்கிவிடுவோமா சார்? ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே அவன் யோக்கியனா  இல்லை  திருடனா என்பதை எங்களால் கணித்துவிடமுடியும். எங்கள் பரம்பரை இரத்தத்தில் கலந்திருக்கும் சக்தி!” என்றார் பெருமிதத்துடன்.  
   
பிறகு சற்றே யோசித்தவராக, “ ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்த நெக்லஸை ஒருவர் அடகுவைத்தார். அவருடைய ஆதார் கார்டு ஜெராக்ஸ் கூட இருக்கிறது. அக்காவின் நகை என்று சொன்னார். அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் பணம் வேண்டியிருப்பதாகச் சொன்னார். கொடுத்தேன். ஒருவாரம் கழித்து, மேலும் பணம் வேண்டியிருப்பதால் நகையை நானே வாங்கிக்கொண்டு மீதிப்பணம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு நிறைய செலவாகிவிட்டதாக வருத்தப்பட்டார். ரொம்பநேரம் யோசனைசெய்த பிறகுதான் அடகுபோக மீதி பணத்தைக்கொடுத்து செட்டில் செய்தேன். அதற்கான ரசீதுகளை வேண்டுமானாலும் காட்டுகிறேன்” என்றார்.

பிறகு உள்ளேபோய் பெரிய ரிஜிஸ்தர் ஒன்றைக் கொண்டுவந்தார். தேதிவாரியாக அடகு பிடித்த நகைகளின் கணக்குப் புத்தகம் அது. குறிப்பிட்ட தேதியில் அந்த நபர் அடகுவைத்துப் பணம் பெற்றுக்கொண்டதற்குக்  கையொப்பம் இருந்தது. ஆதார் நம்பரும் இருந்தது. அதன் கீழ்ப்பகுதியில் மேற்படி நகையை இன்று மீட்டுக்கொண்டேன்  என்று அவரே ஒரு வாரத்திற்குப் பிறகு கையொப்பம் இட்டிருந்தார். அதன் அருகே குறுக்குவெட்டாக, சிவப்பு மசியில், நகையின் அன்றைய மதிப்பும், அதில் கடனும் வட்டியும் போக மீதி எவ்வளவு என்றும் பாரஸ்மல் குறித்திருந்தார். அந்த மீதிப்பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கு அதே நபர் மீண்டும் கையொப்பம் இட்டிருந்தார்.

ஆக, நடந்தது இதுதான்: யாரோ ஒரு நபர் நெக்லஸை பாரஸ்மல் கடையில் விற்றுப் பணமாக்கியிருக்கிறார். அந்த நெக்லஸைத்தான் பிறகு ராஜா முழுப்பணமும் கொடுத்து வாங்கியிருக்கிறார். ராஜாமீதும் தவறில்லை. பாரஸ்மல் மீதும் தவறில்லை.

நகையை அடகுவைத்தவன் மீதுதான் தவறு. அவனைக் கண்டுபிடித்தாகவேண்டும். அவன்தான் யமுனாவின் வீட்டிலிருந்து திருடியிருக்கிறான்.

ரிஜிஸ்டரில் இருந்த அந்நபருடைய முகவரி, சென்னையில் வெகுதூரத்தில் இருந்தது. அதைக் குறித்துக்கொண்டார். பிறகு ஆதார் நம்பரையும் பார்த்து எழுதிக்கொண்டார். “இந்த ஆளைக் கொண்டுவந்தால் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?” என்றார்.

“கட்டாயம் முடியும். ஒருமுறை பார்த்தவனை நான் மறக்கவே மாட்டேன்!” என்றார். “போலீஸ் கீலீஸ் என்று போக மாட்டீர்களே?” என்று தயக்கத்துடன் கேட்டார்.         

“சேச்சே! எங்களுக்கு நகைதான் வேண்டும். அதைத்தான் ராஜா வாங்கிக்கொண்டு விட்டாரே! இருந்தாலும் இது எங்கள் வீட்டு நகைதான் என்பதை  அந்த நபர்தானே உறுதிசெய்ய வேண்டும்?  உங்கள் உதவிக்கு நன்றி!”  
என்று கிளம்பினார் பரமசிவம். அதுவரையில் பாரஸ்மல் ஆர்டர் செய்த ஸ்டிராங் காப்பி வந்துசேரவில்லை. 

“நல்லது ராஜா, உங்களை வீட்டில் இறக்கிவிட்டு நான் போகிறேன். உங்களைப்  பொறுத்தவரை தப்பு ஒன்றும் செய்யவில்லை. நிம்மதியாக இருங்கள். அந்த ஆசாமியை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்” என்றார்.

ராஜாவோ தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தான்.

வீட்டிற்கு வந்த பரமசிவம், “பார்வதி, சூடாக ஒரு காப்பி கொடு” என்று காற்றாடியை முழுதாக ஓடவிட்டார்.

“போன வேலை என்ன ஆயிற்று அப்பா?” என்றாள் யமுனா, சோபாவில் சாய்ந்தபடியே.

அதைக் கவனிக்காதவராய்,  “யமுனா, நீங்களெல்லாம் ஆதார் கார்டு வாங்கிவிட்டீர்களா?” என்று தெரியாதவர்போல் கேட்டார்.

“என்னப்பா இப்போது கேட்கிறீர்கள்? அதெல்லாம் மூன்று வருஷம் முன்பே வாங்கியாயிற்றே!” என்று தன் கைப்பையில் இருந்து இரண்டு ஆதார் கார்டுகளை எடுத்தாள்.               

அந்த இரண்டில் ஒன்று, அடகுவைத்தவனின் கார்டு நம்பருடன் ஒத்துப்போவதைக் கண்டு பரமசிவம் திகைத்துப்போனார்.

அதாவது அவருடைய மருமகன் செல்வம்தான் அந்த நகையை அடகுவைத்திருக்கிறான்! பிறகு முழுதுமாக விற்றுவிட்டிருக்கிறான்!அப்படியும் நடந்திருக்குமா? செல்வம் அப்படிச் செய்யக்கூடியவனா?
குழப்பத்துடன் யமுனாவைப் பார்த்தார் பரமசிவம். “உடனே மாப்பிள்ளையைக் கூப்பிடு!” என்றார்.

“என்னப்பா, ஏதாவது பிரச்சினையா?” என்றாள் யமுனா.

(தொடரும்). (கன்னித்தீவு போலவா?)   

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

புதன், மே 13, 2020

பொன்னித்தீவு -7

பொன்னித்தீவு -7
   -இராய செல்லப்பா

                 இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்


               முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(7) செம்பகம் செம்பகம்

புதியதொரு குதூகலத்துடனும் பெருமிதமான பார்வையுடனும் வீட்டில் நுழைந்தார்கள் யமுனாவும் அவள் தாயாரும்.

பரமசிவமும் செல்வமும் ஓடிவந்து வரவேற்றார்கள்.

யமுனா தன் கணவனைப் பார்த்து, “சாப்பீட்டீர்களா? அப்பா, நீங்களும்  சாப்பீட்டீர்களா?” என்று கேட்டபடியே தான் வாங்கி வந்திருந்த கிருஷ்ணா  ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கை இருவரிடமும் நீட்டினாள்.

“பார்வதி, என்ன விசேஷம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பரமசிவம். செல்வமும் ஆவலோடு யமுனாவைப் பார்த்தான்.

“எனக்கென்ன தெரியும்? கல்யாணமாகி நாலு வருஷம் ஆனவங்களைக் கேட்டால் தெரியும்!” என்று விஷமத்தோடு சிரித்தாள் பார்வதி.

“போம்மா, நீ ரொம்ப மோசம்!” என்று அம்மாவின் பின்னால் நின்றுகொண்டாள் யமுனா. செல்வத்தைப் பார்த்துக்  கண்ணடித்தாள்.

அவனுக்குப் புரிவதுபோல் இருந்தது. “யமுனா, பொய் சொல்லாதே! நீ செங்கல்பட்டு போகிறேன் என்று லேடி டாக்டரைத்தானே பார்த்துவிட்டு வருகிறாய்? சொல்லியிருந்தால் சென்னையிலேயே பார்த்திருக்க முடியாதா? உன் அப்பாவும் இதற்கு உடந்தையா? கொரோனா சமயம், ஏதாவது அசம்பாவிதமாக நடந்திருந்தால் யார் பொறுப்பு?” என்று பொரிந்தான். சிலநேரங்களில் அவனுக்கும் கோபம் வருவதுண்டு.

பார்வதிக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. யமுனா கர்ப்பமாயிருக்கும் செய்தியை இன்னும் எவ்வளவு நேரம்தான் சஸ்பென்சாக வைப்பது?  “சாரி, மாப்பிள்ளை! எனக்கோ அப்பாவுக்கோ எந்த விஷயமும் தெரியாது. உண்மையில் யமுனாவுக்கே தெரியாது. தற்செயலாக டாக்டர் பத்மாவிடம் போனதில் விஷயம் தெரிந்தது. இனிமேல்தான்  இவளை நீங்கள்  
பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு வார்த்தை கூடக் கடிந்துகொள்ளக் கூடாது. சரியா?” என்றாள்.

செல்வம் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போனான். பரமசிவம் மகளை உச்சிமோர்ந்து வாழ்த்தினார். “எல்லாம் நல்லபடியாக நடக்கும். பழனி முருகன் துணையிருப்பான்” என்றார். 

இரவு பத்துமணி. விளக்கை அணைத்தான் செல்வம். அவன் கைகளையே தலையணையாகச் சாய்ந்துகொண்டாள் யமுனா. “என் கண்ணே, உனக்கு ஆயிரம் முத்தங்கள்!” என்றான் செல்வம்.

“அதெல்லாம் கொரோனா போனபிறகுதான். இனிமேல் வீட்டில்  இருந்தாலும் நீங்கள் நான் எல்லாரும் மாஸ்க் அணிந்தாக வேண்டுமாம். டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாள் யமுனா.

“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கொரோனா சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திற்குப் போனாளாம் ஒருத்தி. குழந்தை மாஸ்க்குடனேயே வெளிவந்ததாம்!” என்று அவளைக் கிச்சுகிச்சு மூட்டினான்.

எதிர்பாராத குறுகுறுப்பினால்  ‘அம்மா’ என்று அலறிவிட்டாள் யமுனா. அடுத்த நிமிடமே  தன்  முட்டாள்தனத்தை எண்ணிக் கலகலவென்று சிரித்தும்விட்டாள். அதற்குள் அம்மா என்னவோ ஏதோ என்று  கதவைத்தட்ட, பின்னாலேயே அப்பாவும் வந்து விட...செல்வத்தின் முகத்தில் அசடு வழிந்தது.

“சரி சரி, இனிமேல் அவள் சரியான நேரத்துக்குத் தூங்கவேண்டியது அவசியம். புரிந்ததா மாப்பிள்ளை?” என்று பரமசிவம் முற்றுப்புள்ளி வைத்தார்.

***
பொழுது விடிந்தது. எழுந்திருக்க மனமில்லாமல்தான்  எழுந்தாள் யமுனா. அதற்குள் பார்வதி அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டுபோய் பல் துலக்க வைத்தாள். காப்பி வேண்டாம், மசக்கைக்கு ஆகாது என்று ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள்.

வாசலில் கோலம் போடவந்த பக்கத்து வீட்டுப் பெண்கள் பார்வதியம்மாவைப் பார்த்தவுடன் ஆவலோடு வந்து நலம் விசாரித்தனர். யமுனா சற்றே அசதியாக இருப்பதைக் கண்டு விஷயத்தை ஊகித்தவர்களாக, “எங்களுக்கு ஸ்வீட் கிடையாதா?” என்றனர்.

யமுனா மெல்ல நடந்து வந்து வணக்கம் சொன்னாள். முகத்தில் வெட்கம் படர்ந்தவளாக அவர்களுக்கு மைசூர் பாக்கை விநியோகித்தாள்.  டாக்டர் இன்னும் டியூ டேட் சொல்லவில்லை என்றும் இரண்டாவது செக்-அப்பின்போதுதான் சொல்லக்கூடும் என்றும் விளக்கினாள்.
  
செல்வத்திற்கு அன்று காலை எட்டு மணிக்கே ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்ததால் அவசரம் அவசரமாகத் தன் வேலைகளை முடித்துக்கொண்டு   அறைக்கதவை மூடிக்கொண்டான்.

பார்வதி வந்திருக்கும் செய்தியைக் கேட்டதுமே வக்கீல் மாமி ஓடிவந்தார். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்ட பிறகுதான் யமுனாவைப் பார்த்தார். அவருக்கு ஒன்றுக்கு இரண்டாக மைசூர் பாக்கை நீட்டினாள் யமுனா. “உங்களுக்கு ஒன்று, செம்பகத்துக்கு ஒன்று!”

செம்பகம் என்றதும் மாமிக்கு டக்கென்று நினைவுக்கு வந்த விஷயம், செம்பகத்தின் கணவன் அவளுக்குத் தன் முதல் சம்பளத்தில்  நெக்லஸ் வாங்கிக்  கொடுத்ததுதான்.   

“அப்படியே அச்சு அசலாக உன் நெக்லஸ் மாதிரியே இருக்குடி யமுனா! யாரோ ஒரு மார்வாடியிடமிருந்து பழைய நகையை சல்லிசாக வாங்கினானாம்! சாமர்த்திய சாலி” என்று புகழ்ந்தார் மாமி.

யமுனாவுக்குச் சுருக்கென்றது. தன்னுடைய நெக்லஸ் காணாமல்போனதை அவள் கணவனிடமோ, பெற்றோரிடமோ அல்லது மாமியிடமோ இன்னும் கூறவில்லை. இப்போது கூறலாமோ கூடாதோ என்று குழம்பினாள். மனதில் ஏதேதோ விசித்திரமான எண்ணங்கள். ஒரு வேளை, செம்பகம்தான் திருடிக்கொண்டாளோ?

அதே சமயம் தன்னைப் பாராட்டிக்கொள்ளவும் செய்தாள். போலீசில் புகார் கொடுத்துவிட்டதால், அவர்கள் மூலமே கண்டுபிடித்துவிட முடியும் என்று தோன்றியது.

அந்த நேரத்தில்தான் செம்பகம் வந்தாள், வழக்கமாகத் தரும் ஒரு முழம் மல்லிகைப்பூவுடன். அவள் கழுத்தில் பளபளவென்று மின்னியது அந்த நெக்லஸ். பார்த்தவுடனேயே யமுனாவுக்குப் புரிந்துவிட்டது, அது தன்னுடைய நெக்லஸ்தான் என்று.

பாவி! நல்லவிதமாக இரண்டு வருடங்களாகப் பழகிவந்தவள்,  ஊமைக்கோட்டான் என்பதற்கேற்ப, ஓசையில்லாமல் காரியத்தை முடித்திருக்கிறாளே! சண்டாளி! அவளை...அப்படியே கழுத்தை நெரித்துவிடவேண்டும்போல் இருந்தது.

செம்பகத்தை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்தாள். அதற்குள் “வணக்கம் மேடம்” என்று அங்கு வந்தான் ராஜா. செம்பகத்தின் கணவன்.

இனியும் தாமதிக்கக்கூடாது என்று நெக்லஸ் தொலைந்து போனதையும், போலீசில் புகார் செய்ததையும், அது இப்போது செம்பகத்தின் கழுத்தில் இருப்பதையும் தன்  தாயாரிடம் இரகசியமாகக்  கூறினாள்  யமுனா.

அவ்வளவுதான், ஒரு பிடி பிடித்துவிட்டாள்  பார்வதி. “இந்தப்பா, ராஜா! உண்மையைச் சொல்லிவிடு. இந்த நெக்லஸ் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்றாள்.

“ஏங்க? என்ன விஷயம்? நான் எங்கேயும் திருடவில்லை. கொள்ளையடிக்கவும் இல்லை. என் சொந்தக் காசில் வாங்கினேன்” என்றான் ராஜா மிகுந்த பெருமிதத்துடன். “நான் இப்போது ஜுனியர் எக்சிகியூடிவ் ஆகிவிட்டேன் தெரியுமா? வக்கீல் மாமிக்குத் தெரியுமே!”                
“இல்லை, நான் நம்ப மாட்டேன். இது என் பொண்ணோட நெக்லஸ் தான் என்பதில்  சந்தேகமே இல்லை. உண்மையைச் சொல்லிவிடு. இல்லையென்றால் போலீசுக்குத்தான் போகவேண்டிவரும்!” என்று மிரட்டினாள் பார்வதி. பார்த்துக்கொண்டிருந்த செம்பகத்திற்குப் பேசமுடியாததால் அழுகை பொங்கிவந்தது. “அவர்மேல் தப்பு இல்லை” என்பதுபோல் சைகை காட்டினாள்.

“அட, இவ்வளவுதானா விஷயம்? இது உங்கள் வீட்டு நெக்லஸே தான்! ஆனால் இதை நான் ஒரு மார்வாடியிடம் முழுசாக பேமெண்ட் பண்ணி வாங்கியிருக்கிறேன். ரசீது வேண்டுமானாலும் காட்டமுடியும். ஏன், அந்த மார்வாடிக் கடையையும் அடையாளம் காட்டுகிறேன், வருகிறீர்களா?” என்று சவால் விட்டான்.

இதற்குள் அக்கம்பக்கத்துக் குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். யமுனாவுக்கும் பார்வதிக்கும் தங்கள் வீட்டு நெக்லஸ் எப்படி மார்வாடிக் கடைக்குப் போயிருக்கமுடியும் என்று அனுமானிக்க முடியவில்லை.

பரமசிவம் சட்டையை மாட்டிக்கொண்டு எழுந்தார். “ராஜா, நீ சொல்வது உண்மை தானா என்று பார்த்துவிடலாம். வா” என்று அவனைத் தன்னுடைய காரில்  அமர்த்திக்கொண்டு அவன் சொன்ன திசையில் பயணமானார்.
    
சற்றுத் தாமதமாக வந்த ஆச்சியம்மா இதுவரை நடந்த காட்சிகளை பார்க்கத்  தவறிவிட்டதற்காகத் தன்னை நொந்துகொண்டார். அதனாலென்ன, இத்தனூண்டு விவரம் கிடைத்தால் போதாதா அவருக்கு? ஒரு நாவலே எழுதிவிட மாட்டாரா?

“பாவம், யமுனா! இருந்திருந்து உண்டாயிருக்கிறாள். இப்போதுதானா இப்படியெல்லாம் நடக்கவேண்டும்!” என்று தன் வேலையை ஆரம்பித்தார். எல்லோரும் ‘உச்’ கொட்டினார்கள்.  

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?)
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செவ்வாய், மே 12, 2020

பொன்னித்தீவு -6


பொன்னித்தீவு - 6

-இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(6)  பார்வதி பார்வதி

செங்கல்பட்டைத்  தனி மாவட்டமாக அறிவித்தது முதலே நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெறலாயிற்று. பல இடங்களில் சிறு சிறு பாலங்கள் கட்ட வேண்டி இருந்ததால் அங்கெல்லாம் வாகனங்கள் வேகத்தைக் குறைத்தும் கூட்டியும் செல்லவேண்டியிருந்தது. யமுனாவின் கார்  புழுதிப் படலத்திற்கு இடையில் செங்கல்பட்டை அடைந்தது.

அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் கம்பன் தெருவில் இருந்தது பரமசிவத்தின் வீடு. ஆம்புலன்ஸ் வண்டிகள் ஏராளமாக நின்றிருந்தன. டாக்டர்களும் நர்சுகளும் பிற மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவை முன்னிட்டு விசேஷ உடையும் முக கவசமும் அணிந்து இருந்தார்கள். கம்பன் தெருவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கூட முன்னெச்சரிக்கையாகத் தெருவின் இரண்டு பக்கமும் தடுப்பான்கள் அமைக்கப்பட்டிருந்ததால், தெருமுனையில் காரை நிறுத்திவிட்டு யமுனா தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் பிறந்த இரண்டாவது வருடத்தில் வாங்கிய வீடு. கால் நூற்றாண்டு காலத்தில் வீட்டைச் சுற்றிலும் ஏழெட்டு தென்னை மரங்களும் பாதாம் மரங்களும் ஒரு நெல்லிக்காய் மரமும் வாழை மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. மல்லிகை, முல்லை, செம்பருத்தி, வெட்சிப்பூ என்று பலவிதமான பூச்செடிகள் கண்ணுக்கு அழகாகக் காட்சியளித்தன. யமுனா குழந்தையாக இருந்தபொழுது அழுது அடம்பிடித்து வாங்கிய ஊஞ்சல் மொட்டை மாடியில் மிக லேசாக அசைந்து கொண்டிருந்தது.

"அம்மா" என்று வாஞ்சையுடன் அழைத்தபடி கதவைத் தட்டினாள் யமுனா. மகளின் எதிர்பாராத வரவினால் பார்வதிக்கு அளவில்லாத ஆனந்தம்.  "வாடா கண்ணு, மாப்பிள்ளை வரலியாம்மா?" என்று யமுனாவைக் கட்டிக்கொண்டாள்.

"அதானே, வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வராதவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! அவருக்கு ஆபீஸ் வேலை கிடையாதா? ஒர்க் ஃப்ரம் ஹோம்!" என்றாள் யமுனா.

அலைபேசியை எடுத்து, தான் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அப்பாவிடம் தெரிவித்தாள்.

"யமுனா, நீ இரண்டு நாள் இருந்து அம்மாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவளுக்கு உள்ளுக்குள் என்னமோ செய்கிறது. சொல்லத் தெரியவில்லை. நீதான் சரியாக விசாரிக்க வேண்டும். எதற்கும் நம்ம பத்மா டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் விவரமாகத் தெரிந்து கொள்" என்ற பரமசிவம் மனைவியிடமும் பேசினார்:

"பார்வதி, குழந்தை இரண்டு நாள் உன்னோடு இருக்க வேண்டும் என்று ஆசையோடு வந்திருக்கிறாள். அவளுக்குப் பிடித்ததைச் சமைத்துப்போடு. முக்கியமாக அவளை அழைத்துக்கொண்டு பத்மா டாக்டரிடம்  போய்விட்டு வா. புரிந்ததா?"

பார்வதி மனதிலும் அதே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. வெகு நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரவேண்டுமே என்று மனம் ஆர்வத்தால் துடித்தது. பத்மா டாக்டர் கைராசியானவள். யமுனாவுக்கு பிரசவம் பார்த்ததும் அவள் தான்.

"கைகால் கழுவிக் கொண்டு வாம்மா. உன் கையால் இந்த மல்லிகைப் பூவை சுவாமிக்குச் சார்த்து" என்றாள் பார்வதி.

சாப்பிட்டு முடித்தவுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடிக்குச் சென்றாள் யமுனா. அவள் குழந்தையாக இருந்தபொழுது அந்தத் தெருவில் மொத்தம் இரண்டே வீடுகள்தான். மருத்துவமனையும் அப்போது வந்திருக்கவில்லை. இப்போதோ ஏராளமான கட்டிடங்கள். கடைகள், வியாபார நிறுவனங்கள், டாக்டர்களின் கிளினிக்குகள் தென்பட்டன.

**
டாக்டர் பத்மாவுக்கு அறுபது வயது என்று யாரும் கூறிவிட முடியாது. ஆரோக்கியமான உடல். தலையில் இருந்த சில வெள்ளியிழைகளும் அவளுடைய கம்பீரத்துக்கு மெருகூட்டின. பெண்களின் நோய்க்கான நிபுணராக இருந்தாலும் அவளிடம் வருவதெல்லாம் பெரும்பாலும் பிரசவ கேஸ்கள் தான். காரணமின்றி யாருக்கும் சிசேரியன் செய்வதில்லை என்று உறுதியாக இருந்ததால் பத்மாவுக்கு ஊரில் நல்ல பெயர்.

"வாங்க பார்வதியம்மா! இது உங்க பெண்தானே! சென்னையில் தானே இருக்கிறாள்?" என்று அன்போடு விசாரித்தாள் பத்மா.

"ஆமாம் டாக்டர், நீங்கதான் இவளுக்கும் பிரசவம் பார்த்தீர்கள்! எங்கள் ஒரே பெண். தற்செயலாக வந்தாள். எதற்கும் இருக்கட்டுமே என்று உங்களிடம் அழைத்து வந்தேன்" என்றாள் பார்வதி.

"ரொம்ப சந்தோஷம். எப்படியும் என்னிடம் வர வேண்டியவள் தானே! கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் இருக்குமா?"

"ஆமாம் டாக்டர்! ஆனால் ஏனோ இரண்டுபேரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டாக இருக்கிறார்கள். நாம் சொன்னால் கேட்பார்களா? அதது காலா காலத்தில் நடக்க வேண்டாமா?" என்று யமுனாவைப் பார்த்தாள் பார்வதி.

யமுனாவுக்கு திடுக்கென்றது. "டாக்டர் நான் வந்தது அம்மாவுக்காகத் தான். அவங்களுக்கு ஏதோ சுகவீனம் இருப்பதாக அப்பா நினைக்கிறார். அம்மா வாய் விட்டுப் பேசுவதில்லை. தயவுசெய்து அம்மாவை நன்றாக டெஸ்ட் செய்யவேண்டும். எனக்கு ஒன்றுமில்லை" என்றாள்.

"போடி முட்டாள்" என்றாள் பார்வதி. "நான் கல்லுகுண்டு மாதிரி இருக்கிறேன். எனக்கு ஒரு குறையும் இல்லை. கூடிய சீக்கிரம் ஒரு பேரக் குழந்தையைப் பார்த்து விட்டால் போதும் அது ஒன்றுதான் என் ஆசை" என்றாள்.

கலகலவென்று  சிரித்தாள் பத்மா. "சரிதான், எனக்கு இன்று இரண்டு மடங்கு பீஸ் கிடைக்கப்போகிறது. இருவரையும் டெஸ்ட் செய்து விடுகிறேன்" என்று முதலில் பார்வதியை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.

சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தவள், "ஒன்றும் பெரிதாக இல்லை. மெனோபாஸ் பிரச்சினைதான். அதனால் அடிக்கடி சோர்வும் எரிச்சலும் உண்டாகும். அம்மாவிடம் கனிவாக இருக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லி வை" என்றாள்.

அதைக் கேட்டு முகம் மலர்ந்த பார்வதி, "டாக்டர், இவளையும் பார்த்துவிட்டு நல்ல செய்தி சொன்னால் உங்கள் வாய்க்குச் சர்க்கரை போடுவேன்" என்றாள்.

"கொஞ்சமாகப் போடுங்கள். ஏனென்றால் எனக்கு ஷுகர் இருக்கிறது" என்று சிரித்தபடியே யமுனாவை உள்ளே அழைத்துப்போனாள் பத்மா.

சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் வெளியே வந்தபொழுது யமுனாவின் முகத்தில் நாணத்தின் செம்மை படர்ந்திருந்தது.

"வாழ்த்துக்கள் பார்வதியம்மா!"

"ரொம்ப நன்றி டாக்டர்! இரண்டு நாட்களாகவே நல்ல சகுனமாக இருந்தது. உண்மையில் இவள் இன்று வரப்போவதே எனக்குத்  தெரியாது. நல்ல வேளை, என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். யமுனா, கங்கிராஜுலேசன்ஸ்! டாக்டரிடம் எல்லா விஷயமும் கேட்டுக்கொள். இனி மாதாமாதம் இவரிடம் தான் செக்கப்புக்கு வரவேண்டும்!" என்றாள் பார்வதி.

கணவனுக்கு போன் செய்தாள். "ரொம்ப சந்தோஷமான செய்தி! யமுனா உண்டாயிருக்கிறாள் என்று பத்மா டாக்டர் உறுதி செய்தார். அந்தப் பழனி முருகன்  கண் திறந்துவிட்டான். நீங்கள் சென்னையிலேயே இருங்கள். நான் நாளை மறுநாள் காலை பத்மாவை அழைத்துக்கொண்டு வருகிறேன். அதுவரை மாப்பிள்ளையிடம் எதுவும் கூற வேண்டாம். சர்ப்ரைசாக இருக்கட்டும்" என்றாள் பார்வதி.

ஆனால் நாம் நினைப்பதுபோல் எல்லாம் நடந்து விடுகிறதா? நாளை மறுநாளில் இருந்து சென்னைக்குள் வெளியூர் வண்டி வாகனங்களை அனுமதிக்கப்போவதில்லை என்று சென்னை ஆட்சியர் டிவியில் பேசினார். ஆகவே அவசர அவசரமாக அன்று இரவே மகளுடன் சென்னைக்குக் கிளம்பினாள் பார்வதி.

யமுனாவுக்கோ அந்த சந்தோஷச் செய்தியைத் தன் கணவனிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என்று கை துறுதுறுத்து. ஆனால் பார்வதி தடுத்து விட்டாள்.

"இதெல்லாம் நேரில் சொன்னால்தான் சரியாக இருக்கும்" என்று அலைபேசியைப் பிடுங்கிவைத்துக்கொண்டாள்.

(தொடரும்). (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஞாயிறு, மே 10, 2020

பொன்னித்தீவு -5

பொன்னித்தீவு -5
  
  -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(5) ராஜா ராஜா

மூன்று மாதங்களுக்கு முன்பு.

“வணக்கம் சார்” என்றான்  ராஜா.

அவனைப் பார்த்தும் பாராததுபோல நெற்றியைச் சுருக்கினார் ஹரிகோபால். “யார், என்ன வேணும்?” என்றார். “உள்ளே வாங்க.”

வந்தான்.

அந்தக் குடியிருப்பின் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஹரிகோபாலை பிசினஸ் விஷயமாகப் பார்க்கவந்தானாம். பிளாஸ்டிக் குப்பைகளை வாரம் ஒருமுறை அகற்றி எடுத்துக் போகும் பிசினஸ்.

“இங்க பாருப்பா! எங்க குடியிருப்புல இதுவரை குப்பைகளைத் தரம் பிரித்துப் போடுவது கிடையாது. நூறுக்கும் மேல குடும்பங்கள் இருக்கும். நாலு மதம், பத்து மொழி, இருபது ஜாதி. யாரும் அடுத்தவன் சொல்றதைக் கேக்கிறவங்க இல்லை. எல்லாரும் வசதியானவங்க. அதனால யாருக்கும் கட்டுப்படறதில்ல. இங்க ஒனக்கு என்ன பிசினஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறே?” என்றார் ஹரிகோபால்.

“அதனால் தான் வந்திருக்கேன் சார்! எங்க கம்பெனியே சொந்த செலவில் தனித்தனிக் குப்பைக் கூண்டுகளைக் கொண்டுவந்து வைப்போம். மூணு விதமான கூண்டுகள். மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் என்று. நாங்களே வீடு வீடாகப் போய் பிட் நோட்டீசும் கொடுப்போம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸை வச்சி ஒவ்வொரு பிளாக்கிலும்  அறிமுகக் கூட்டம் போடுவோம். எல் கே ஜி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி வைப்போம்.  எல்லாம் எங்கள் செலவில்தான்….” என்றான் ராஜா.

பரவாயில்லையே, யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். அவனவனும்  தனக்கு டி.ஏ. அரியர்ஸ் ஆயிரக்கணக்கில் வரவேண்டுமென்று ஆசைப்படுவானே ஒழிய, அசோஸியேஷனுக்கு நூறு ரூபாய் கொடுப்பதென்றால் ஆயிரம் சட்டம் பேசுவான். அதனால்தான் மற்ற குடியிருப்புகளில் எளிதாகச்  செயல்படுத்தும் குப்பை பிரிப்புத் திட்டம்  ஐந்து ஆண்டுகளாகியும் இங்கு கொண்டுவரமுடியவில்லை.

“மிஸ்டர் ராஜா, உங்கள் திட்டம் நல்லதாகத் தோன்றுகிறது. முழுமையான விவரங்களை எடுத்துக்கொண்டு உங்கள் மேலதிகாரியை என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள். இலாபகரமாக இருந்தால் நிச்சயம் எடுத்துக்கொள்வோம்” என்று எழுந்தார் ஹரிகோபால்.  
 
பிறகு, “இந்தக் குடியிருப்பில் உங்களைத் தெரிந்தவர்கள் யாராவது  இருக்கிறார்களா?” என்றார்.

ராஜா முகமலர்ச்சியுடன், “வக்கீல் சார் வீட்டில்தான் என் மனைவி செம்பகம் வேலை செய்கிறாள். மற்றப்படி  எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் உங்களைச் சுற்றியுள்ள ஐந்து குடியிருப்புகளில் நாங்கள் ஒப்பந்தம் செய்து ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொழில் நடக்கிறது. அவர்களிடமும் விசாரித்துக் கொள்ளலாம்” என்றான். 

ஹரிகோபாலுக்கு முகத்தில் பெரிதாகப் புன்னகை எழுந்தது. “ஓ செம்பகத்தின் புருஷனா நீ? ரொம்ப நல்ல பெண். எங்கள் வீட்டுக்கும் எப்பவாவது கூப்பிட்டனுப்பினால் வந்து செய்வாள். அவளுக்காவே உனக்கு உதவி செய்யலாம்” என்றார்.

“ரொம்ப நன்றி சார்!” என்று அவருடைய அலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு கிளம்பினான் ராஜா.

அப்புறம் எல்லா வேலைகளும் வேகமாக நடந்தேறின. ராஜாவின் கம்பெனி அதிகாரிகள் வந்து ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.  வாரம் இரண்டுமுறை பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படும். பிற குப்பைகளை அசோசியேஷன் சொல்லும் இடத்தில் ஒவ்வொருநாளும் கொண்டுபோய்க் கொட்டப்படும். அதைச் சார்ந்த பணவிவகாரங்களும் திருப்திகரமாகப்  பேசி  முடிக்கப்பட்டது.

ராஜா அந்தக் கம்பெனியில் கீழ்மட்ட ஊழியன் தான். ஆனால் மார்க்கெட்டிங் திறமையால் கம்பெனிக்கு புதிய குடியிருப்புகளைத் தொடர்ந்து ஒப்பந்தம் செய்துகொடுத்ததால் அவனுக்கு அதிகாரியாகப்  பொறுப்பளிக்கப்போவதாகக்  கடிதம் வந்தது.

அதன்படி ராஜா ஒரு ஜே.ஈ -அதாவது ஜுனியர் எக்சிக்யூட்டிவ் ஆனான். சம்பளமும் அதிகரித்தது.  

தாய் தந்தை இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோய்விட, மனைவி ஒருத்திதான் அவனுக்குப் புகலிடம். அன்பான மனைவி. கோபம் என்பதே கிடையாது அவளிடம். தாயில்லாத பெண். ஏழைக் குடும்பம். எதிர்வீட்டில் அவள் வேலை செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட காதல், இவனுடன் திருமணத்தில் முடிந்திருந்தது.

திருமணத்திற்குப் பிறகு மூன்று வீடுகளில் வீட்டு வேலை செய்துவந்தாள். இனி ஒரே ஒரு வீட்டில் செய்தால் போதும். அல்லது அறவே நிறுத்திவிடலாம். அவனுடைய சம்பளத்தில் சிக்கனமாகக் குடும்பம் நடத்த முடியும்தான்.

“ஆனால் மாட்டேன்!” என்று தலையசைத்தாள் செம்பகம்.  “வக்கீல் மாமி ரொம்ப நல்லவர். அவர்கள் வீட்டில் தொடர்ந்து வேலை செய்யப்போகிறேன்” என்று பேப்பரில் எழுதிக் காட்டினாள். இரண்டாம் வகுப்புவரை படித்திருந்தவள், ராஜாவின் வற்புறுத்தலாலும் வக்கீல் மாமியின் ஊக்கத்தினாலும் தமிழில் நன்றாக எழுதத் தெரிந்துகொண்டிருந்தாள். அதன் வெளிப்பாடு!

ராஜா மறுக்கவில்லை.  தினமும் காலையில் அவளைக் கொண்டுவந்து விட்டு விட்டு, மாலையில் அழைத்துச் செல்வான்.

காலையில் போகும்போதே தன் வீட்டில் பூத்திருக்கும் குண்டுமல்லிப் பூக்களைக் கையோடு கொண்டுபோய், முதல் வேலையாகத் தொடுத்து வக்கீல் மாமிக்கு ஒரு முழமும், யமுனாவுக்கு ஒரு முழமும் கொடுப்பாள் செம்பகம். ஆனால் காசு வாங்கமாட்டாள்.

“ஏண்டி இப்படி காசு மேல ஆசையில்லாம இருக்கே! அப்படீன்னா ஒனக்கு எந்த  ஆசையுமே  இல்லையா?” என்று கண்டித்தார் வக்கீல் மாமி.

சிரித்துக்கொண்டே, “உண்டு! எனக்கு ஒரு நெக்லஸ் வேண்டும் என்று மட்டும்தான் ஆசை!” என்று பேப்பரில் எழுதிக் காட்டினாள் செம்பகம்.

“கள்ளி! அதானே பார்த்தேன். பொம்பளைன்னா ஆசை இல்லாம இருக்கக் கூடாதுடீ!   நாம்ப ஆசைப்பட்டாத்தான் ஆம்பளைங்க நெறய சம்பாதிக்கணும்னு முயற்சி பண்ணுவாங்க. இல்லாட்டி சோம்பேறியாத்தான் இருப்பாங்க. சரி, ராஜா கிட்ட ஒன்  ஆசைய சொன்னியா?” என்கிறார் வக்கீல் மாமி.     

வெட்கத்துடன் முகம் சிவந்தாள் செம்பகம். “போங்க மாமி!” என்று பேப்பரில் எழுதினாள்.

ராஜா முதல் சம்பளம் வாங்கிய சிலநாட்களில் ஒரு அழகான நெக்லஸுடன் வந்தான். அதை வக்கீல் மாமியிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கியபிறகே 
அணிந்துகொள்வதாக அவள் சொல்லிவிட்டாள். மறுநாள்  காலையில் அதை அணிவித்துக்கொண்டு மாமியுடன் இருவரும் படம் எடுத்துக்கொண்டனர். அதை ராஜா தன் அலைபேசியின் முகப்புப் படமாக வைத்துக்கொண்டான்.

நெக்லஸைப் பார்த்த மாமிக்கு அது பழைய டிசைன் போலத் தெரிந்தது. பாவம், மார்வாடிக் கடையிலிருந்து பழைய நகையைக் குறைந்த விலையில் வாங்கியிருப்பான் ராஜா என்று எண்ணிக்கொண்டாள். செம்பகத்தின் முகத்திலோ ஆனந்தமோ ஆனந்தம். “என் ஆசை நிறைவேறிவிட்டது” என்று பேப்பரில் எழுதிக் காட்டினாள்.

“உன் கையெழுத்து நாளுக்கு நாள் அற்புதமாக இருக்கிறது” என்றார் மாமி.

இவ்வளவு அழகையும் அடக்கத்தையும் கொடுத்த ஆண்டவன், இவளுக்குப்  பேசும் சக்தியை மட்டும் கொடுக்க மறந்துவிட்டானே என்று தனக்குள்ளாகவே புலம்பிக்கொண்டார் மாமி.

(தொடரும்)  (கன்னித்தீவு போலவா?)    
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

சனி, மே 09, 2020

பொன்னித்தீவு -4

பொன்னித்தீவு - 4
     -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்


(4) நெக்லஸ் நெக்லஸ்

கேலியும் கிண்டலுமாகத் தன்னைச் சூழ்ந்திருந்த தோழிகளிடம் இருந்து ஒரு வழியாக விடைபெற்று முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் யமுனா. விடியற்காலையில் இருந்து நடைபெற்ற திருமணச் சடங்குகளின் சுமை அவள் கண்களின் கீழ் கருவளையமாக உருமாறி இருந்தது. பதினெட்டு டிகிரிக்குக் குளிரூட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

அனுபவம் புதுமை என்பதால் தயக்கமும் பயமும் இருந்தது. என்னதான் செல்வம் அவளுக்கு ஆறுமாதம் முன்பிருந்தே பழக்கமானவன் என்றாலும் வெறுமனே அலைபேசி வழியே ஏற்பட்ட பேச்சுப் பழக்கம்தான் அது. பெண் பார்க்கவந்தபோது சில நிமிடங்கள்தான் நேரில் பார்த்துப் பேசமுடிந்தது. ஆகவே முகத்தில் நாணம் பொங்கிக்கொண்டிருந்தது.

பூவும் பொட்டும் படத்தில் முதல் இரவுக் காட்சி 
அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் ஓரத்தில்  விஷமப் புன்னகையுடன் நின்றிருந்தான் செல்வம். பட்டு வேட்டியில் இருந்தான். புழுக்கம் காரணமாகப் பட்டுச் சட்டையைக் கழற்றிச் சுவரில் மாட்டியிருந்தான். அவனது அழகை இரசித்தபடியே தயங்கித்தயங்கி  நின்றாள் யமுனா.

எவ்வளவு சினிமாக்களில் பார்த்திருக்கிறாள், கதாநாயகன் ஓடிவந்து கதாநாயகியை அலேக்காகத் தூக்கிக்கொண்டு கட்டிலில் போடுவதை! இந்தக்  கல்லுளிமங்கன்  சும்மா சிரித்துக்கொண்டே நிற்கிறானே!

ஆகட்டும், என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று தலைக்கு மேல் சுழன்றுகொண்டிருந்த காற்றடியை நோக்கிக் கண்களைப்  பாயவிட்டாள்.
முந்தானையால் முகத்தை மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டாள்.

அதே நிமிடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. செல்வத்தின் கைகள் அவளை வேகமாகப் பற்றி இழுத்துக் கட்டிலில் போட்டன. பிறகு சன்னமான ஒரு விளக்கை ஒளிர ஆரம்பித்தது.

“என்ன மேடம், மேக்கப் அதிகமாகிவிட்டதா? அரிக்கிறதா?” என்று கிண்டலாகக் கேட்டவன், தன்  பட்டு வேட்டியின் ஒரு முனையால் அவள் முகத்தைத் துடைக்கமுயன்றான். அவள் பொய்க் கோபத்துடன் அவன் கைகளை விலக்கினாள்.
     
அவளுடைய முகத்தைத் தன் கைகளால்  பிடித்துக்கொண்டான் செல்வம். “மேடம், முதலிரவில் முதல்முதலில் செய்யவேண்டிய காரியம் என்ன தெரியுமா?”  என்றான்.

தெரியாது   என்று கண்களால் சொன்னாள்  அவள்.

“நிச்சயமாகத் தெரியாதா?”

“பிளீஸ், எனக்கு நிஜமாகவே தெரியாது” என்றாள்  அழும் குரலில்.

 “உங்களுக்குத் தெரியாது சரி. உங்கள் தோழிகளுக்குமா தெரியாது? உங்கள்  சித்தி, பெரியம்மா, அத்தை, பாட்டிமார்கள் யாரும் உங்களுக்குத் சொல்லித் தரவில்லையா?” என்றான். வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை ஆசிரியர் கேட்பதுபோல் இருந்தது அவன் குரல்.

அவளுக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. உண்மையிலேயே தான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல் உணர்ந்தாள். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, “பிளீஸ், என்னை ரொம்ப சோதிக்காதீர்கள்.  நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். நீங்களே என்னவென்று சொல்லிவிடுங்களேன், நான் செய்கிறேன்!” என்றாள் கொஞ்சும் குரலில்.

“அப்படி வா வழிக்கு!” என்றவன், அவள் செய்யவேண்டியதை இரகசியமாக அவள் காதுகளில் சொன்னான்.

“ச்ச்சீய்..!” என்று அவன் முகத்தை விலக்க முயன்றாள். “மாட்டேன்!” என்றாள்.

“ஓ, மாட்டீர்களா? அப்படியானால்  இப்போதே என் மாமியாருக்குப் போன் செய்யட்டுமா?” என்று அலைபேசியை எடுத்தான் செல்வம்.

“நோ!” என்று அதை பிடுங்கி எறிந்தாள் யமுனா. அதே கணத்தில், அறையில் இருந்த சிறிய வெளிச்சமும் அணைந்துபோனது.

கட்டில் மட்டும் விட்டுவிட்டு மெல்லிய முனகல்களைப் பலமுறை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

யமுனா எழமுயன்றாள். கால்கள் இரண்டும் நெறிகட்டியதுபோல் வலித்தது. அவன் தன்னை நோக்கி அவளை இழுத்துக்கொண்டான். “இதுதான் என் மனைவிக்கு நான் தரும் முதல் பரிசு” என்று அவள் கழுத்தில் ஒரு நகையை அணிவித்தான். இருட்டிலேயே அவளுக்குப் புரிந்தது. அது ஒரு நெக்லஸ்!

அப்படியே அவனை அள்ளி அணைத்துக்கொண்டாள். அவனுக்கு மூச்சு முட்டியது.

“ஒன்று கேட்கட்டுமா, நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று அவன் கன்னங்களை வருடினாள். அவன் உரியமுறையில் சரி என்றான்.

“நீங்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் சாப்பாடு போடமாட்டார்களா?” என்று கடகடவென்று சிரித்தாள்.

அவள் பிடியை விடாமலேயே அவன் சடக்கென்று எழுந்துகொண்டான். “என்ன திமிர் உனக்கு! நான் சொல்லட்டுமா, நீ ஏன்  என்னைவிட குண்டாக இருக்கிறாய் என்று? புகுந்த வீட்டில் உனக்கு சோறு போடமாட்டார்களோ என்ற சந்தேகத்தில் உனக்கு இரண்டு பங்கு சோறு போட்டு கொழுக்க வைத்திருக்கிறார்கள். சரிதானே?” என்றான்.

பிறகு மௌனம்.   

வெகு நேரத்துக்குப் பின்  மெல்ல எழுந்த யமுனா, “பால் கொஞ்சம் மீதமிருக்கிறது. குடிக்கிறீர்களா?” என்றாள்.

“மாட்டேன், நீதான் குடிக்கவேண்டும்” என்று டம்ளரைப் பிடுங்கி அவள் வாயில் திணித்தான் செல்வம். அவள் வெட்கத்துடன் அவன் முகத்தில் நகக்குறியிட்டாள். அவ்வளவில் ‘ணங்’கென்ற சப்தத்துடன் பால் டம்ளர் நழுவித் தரையில் விழுந்தது.

***
“என்ன மாப்பிள்ளை, இப்படிச் செய்துவிட்டீர்கள்?” என்று பரமசிவத்தின் குரல் கேட்கவும் அலறிக்கொண்டு எழுந்தான் செல்வம்.

“உங்களுக்கு இராத்திரியில் பால் குடிக்கும் பழக்கம் உண்டு என்று யமுனா சொன்னாள். அதுதான் ஒரு டம்ளரில் உங்கள் பக்கமாக வைத்திருந்தேன். நீங்கள் குடிக்க மறந்துபோய், இப்போது தலையணையை அதன்மீது உதைத்துத்தள்ளி விட்டீர்களே!” என்றவர், துடைக்கும் துணியால் தரையில் சிந்தியிருந்த பாலைத் துடைத்தெடுத்தார். பிறகு ஈரமான துணியால் அந்த இடத்தை நன்றாகத்  துடைத்தார்.    

“சாரி மாமா! சாரி மாமா! “ என்று இரண்டுதரம் கூறிவிட்டு மறுபடி அயர்ந்து தூங்க ஆரம்பித்தான் செல்வம். ‘எல்லாம் கனவுதானா?’

அவனைப் பார்க்கப்  பரிதாபமாக இருந்தது பரமசிவத்திற்கு. ரொம்ப நல்லவன். பாவம், பொழுது விடிந்தால் செம்பகத்தின் பிரச்சினை எப்படி ஆகுமோ என்று கலங்கிப் போயிருக்கிறான் போலும். நன்றாகத் தூங்கட்டும்.

****
காலையில் அவன் எழுந்திருப்பதற்கு எட்டுமணி ஆகிவிட்டது. எப்படியும் ‘ஒர்க் ஃப்ரம்  ஹோம்’ தான்.  ஒன்பதரை மணிக்கு லாக்-இன் செய்தால் போதும். என்றாலும் எட்டரைக்கே தயாராகிவிட்டான்.

ஆச்சி வரவேண்டும். செம்பகம், அவளுடைய கணவன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய நான்குபேர்களும் வரவேண்டுமே!

பரமசிவத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. பிரச்சினையை எவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட முடியுமோ அவ்வளவு நல்லது என்று கருதினார். பையில் பணம் இருந்தது. என்றாலும் ஏ.டி.எம். போய் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்தார். யமுனா வருவதற்குள் எல்லாம் சுமுகமாக முடியவேண்டும். ஆனால் இந்த ஆச்சியம்மா யமுனாவிடம் சொல்லாமல் இருக்கவேண்டுமே!

சொல்லமாட்டார். அவருக்கும் மூன்று பெண்கள். இன்னொரு குடும்பத்தை நிச்சயம் கலைக்கமாட்டார். ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்துவிட்டார்.

பத்துமணி வரையில் யாரும் வரவில்லை. குழப்பமடைந்த பரமசிவம், ஆச்சியம்மாவுக்கு போன் செய்தார். “வந்துகிட்டு இருக்கீங்களாம்மா?” என்றார்.

“நான் மட்டும் வந்து என்ன செய்வது? செம்பகமும் அவ புருஷனும் வரமாட்டாங்களே! தெரியாதா உங்களுக்கு?” என்கிறார் ஆச்சி. 

“என்ன விஷயம்?” என்றார் பரமசிவம் கலவரத்துடன்.

“அவங்க தெருவில் கொரோனா  டெஸ்ட் செஞ்சதில் ரெண்டு பேருக்கு பாசிட்டிவ் வந்ததாம். அதனால் இவங்களையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். பதினைந்துநாள் வெளியே வர முடியாதாம்!”

அப்போது திடுக்கென்று அங்கு தோன்றினாள்  புஷ்பா. “இன்ஸ்பெக்டர் சாரும் வரமாட்டார்” என்றாள் கேலியாக. 

“நெஜம் தாங்க. ஐயா போனவாரம் கோயம்பேட்டில் டியூட்டி பண்ணினார் இல்லையா, அதனால் அவரையும் தனிமைப்படுத்திவிட்டார்கள்” என்றாள். கோயம்பேடுதான் சென்னையில் கொரோனாவின் புது கிளஸ்டராம்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் முல்லைப்பூவை எடுத்து செல்வத்திடம் கொடுத்தாள். “உங்க செம்பகம் கொடுத்தாள்” என்றாள். ‘உங்க’ என்பதை அவள் உச்சரித்ததில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் இருந்ததைப்  பரமசிவம் கவனிக்கத்  தவறவில்லை.  

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வெள்ளி, மே 08, 2020

பொன்னித்தீவு -3


பொன்னித்தீவு - 3

  - இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். அல்லது

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(3) செல்வம் செல்வம்

பொதுவாகவே மனைவிக்கு மிகவும் பயந்தவன் செல்வம். இன்றோ அவள் போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ புகார் செய்து இருக்கிறாள். விவரம் தெரியவில்லை. இன்ஸ்பெக்டரோ தனக்கும் செம்பகத்திற்கும் காதலிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்.

மோட்டார் சைக்கிளை பார்க் செய்துவிட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வாசலில் நெருங்கியவன், கதவைத் தட்டுவதா அல்லது அழைப்புமணியை அழுத்துவதா என்ற தயக்கத்தில் இருந்தான். நல்லவேளை அவன் கை வைத்த உடனே கதவு திறந்து கொண்டது.

யமுனா தான் ஆத்திரத்தோடு கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு, "வாங்க மாப்பிள்ளை" என்று  ஆச்சரியத்தோடு வரவேற்பு கொடுத்தார்  அவனுடைய மாமனார் பரமசிவம்.

"நமஸ்காரம் மாமா" என்று சம்பிரதாயமாகக் கூறிவிட்டு, கையிலிருந்த பெட்டியை மேஜை மீது வைத்துவிட்டு, கால் கை கழுவிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தான் செல்வம். என்ன இது, யமுனாவைக் காணோம்?

பரபரப்போடு இரண்டு படுக்கையறைகளையும் பால்கனிகளையும் ஆராய்ந்தான். யமுனா இல்லை.

அதற்குள் பரமசிவம், "யமுனாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஆகவே அவள் செங்கல்பட்டுக்குக் கிளம்பியிருக்கிறாள். நீங்கள் வரும் வரை காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்று நான்தான் அவளை அனுப்பி வைத்தேன்" என்றார்.

"ஆபீஸில் இருந்து வந்தவுடன் நீங்கள் ஹார்லிக்ஸ்  சாப்பிடுவீர்களாமே, அடுப்பில் பால் இருக்கிறது. நான் வேண்டுமானால் கலந்து கொண்டு வரட்டுமா?" என்றார் பரமசிவம்.

மாமனாரும்  மாப்பிள்ளையும்: 
(படத்துக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமில்லை!)

வேண்டாம் என்று செல்வம் தானே சமையலறைக்குள் சென்றான். பால்  சூடாகவே இருந்தது. இரண்டு ஸ்பூன் ஹார்லிக்சை பாலில் கலந்து வேகமாக விழுங்கினான். மாமனார் திடீரென்று எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியாமல் குழம்பினான்.

"டிவியில் செய்திகள் போடட்டுமா?" என்று பவ்யமாகக் கேட்ட மாமனார், சோபாவில் அவனுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டார். அது அவனுக்குப் புதுமையாக இருந்தது.

"மாப்பிள்ளை, ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே" என்று மெதுவாகக் கேட்டார்.

செல்வத்திற்கு திக்கென்றது. இன்ஸ்பெக்டர் மாதிரி இவரும் செம்பகம், நெக்லஸ் என்று பேசப் போகிறாரோ என்று பயந்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சொல்லுங்க மாமா" என்றான்.

"இது யமுனாவுக்குத் தெரிய வேண்டாம். நமக்குள் இருக்கட்டும்" என்று அவனுடைய வலது கையைப் பிடித்துக்கொண்டார் பரமசிவம்.

"நாலாவது மாடியில் இருக்கும் ஆச்சியம்மாவைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர்தான் சொன்னார். யாரோ ஒரு முரடன் சைக்கிளில் வந்து உங்களை மிரட்டினானாமே!" என்று சொல்லி அவனுடைய எதிர்வினைக்காக நிறுத்தினார்.

செல்வத்தின் பாடு இக்கட்டானது. தன் மாமனாரிடமே ஆச்சி இதையெல்லாம் சொல்லியிருந்தால், யமுனாவிடம் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறாரோ! ஆச்சிக்கு வாய் ரொம்ப நீளம். அவள் வம்புப் பேச்சால் எவ்வளவோ குடும்பங்கள் உடைந்து போயிருக்கின்றன.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா" என்றான் செல்வம் அலட்சியமாக, ஆனால் உள்ளூர பயத்துடன்.

பரமசிவம் அவனுடைய இடது கையையும் பிடித்துகொண்டார். "பாருங்க மாப்பிள்ளை, நீங்கள் குடியிருக்கும் பகுதி அந்த முரடனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவனுடைய மனைவி ரொம்ப அழகான பெண் என்கிறார்கள். இதெல்லாம் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். எனக்கு யமுனாவின் வாழ்க்கைதான் முக்கியம். அதற்காக நான் .எதுவும் செய்யத் தயார். ஆகவே என்னிடம் மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்" என்றார் பரமசிவம்.

"யமுனா கொஞ்சம் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வாளே தவிர  உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாள். நான் நினைக்கிறேன், ஒருவேளை அவள் மீது நீங்கள் கோபத்தோடு இருந்த சமயம் பார்த்து இந்தச் செம்பகத்தோடு உங்களுக்கு நெருக்கம் உண்டாகியிருக்குமோ? …." என்று அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தார் பரமசிவம். “ரொம்ப அழகாய் இருப்பாளாமே!”

அவர் பிடியில் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டு எழுந்தான் செல்வம், "அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா. அவளை நான் சரியாகப் பார்த்தது கூடக் கிடையாது. வேண்டுமானால் யமுனாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஆச்சி சொல்வதை நம்பாதீர்கள். உலக மகா ஃபிராடு" என்றான்.

"என் மீது இவ்வளவு மோசமான அபிப்பிராயம் கொண்டிருப்பீர்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை மாமா" என்று அவரை விட்டுச் சற்றே விலகி நின்றான்.

பரமசிவம் அவனை அணைத்துக் கொள்பவர் போல அருகில் வந்தார்.  "பாருங்க மாப்பிள்ளை, நானும் உங்களைப்போல வாலிபனாக இருந்துதான் வயதாகி இருக்கிறேன். என் சர்வீஸில் பத்து இடங்களில் குடும்பத்தை விட்டுத்  தனியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. செம்பகம் மாதிரி எவ்வளவு ஆபத்துக்கள் எனக்கு ஏற்பட்டது தெரியுமா? நாம் எவ்வளவுதான் விலகி நின்றாலும் இது போன்ற விஷயங்கள் வந்தே தீரும். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சனியன் தொலையட்டும். யமுனா வருவதற்கு இன்னும் இரண்டு நாள் ஆகும். நடந்தது என்னவென்று நீங்கள் சரியாகச் சொன்னால் அந்த செம்பகத்தையும் அவள் கணவனையும் பார்த்துப் பேசி  நானே செட்டில் செய்து விடுகிறேன். பணத்தைப் பற்றிக்  கவலைப்பட வேண்டாம். யமுனாவுக்கு விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்" என்றார் பரமசிவம்.

“ஆனால் ஒன்று, அதன்பிறகும் இந்த மாதிரியெல்லாம் நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஆமாம், சொல்லிவிட்டேன்" என்றார் மிரட்டும் தொனியில்.

அழுகையும் ஆத்திரமும் ஒருசேர செல்வத்தின் முகத்தில் குடிகொண்டன. “மாமா, நீங்கள் அந்த வயதில் என்னென்னவோ செய்திருக்கலாம். ஆனால்  இதுவரை யமுனாவைத் தவிர யாரையும் நான் மனத்தாலும் நினைத்தது கிடையாது. நான் கிருஷ்ணன் அல்ல, இராமன்! தெரிந்துகொள்ளுங்கள். வேண்டுமானால் எங்கள் ஆபீசில் இருக்கும் எல்லாப் பெண்களையும் ஒருவர் விடாமல் கேட்டுப்பாருங்கள்” என்று கத்தினான். “இருங்கள், இப்போதே யமுனாவுக்கு போன் செயகிறேன்.”

“உஷ்!” என்று அவனை அடக்கினார் பரமசிவம். “இப்போது இராத்திரி ஆகிறது. நீங்கள் இராமனா கிருஷ்ணனா என்பதை செம்பகத்தின் கணவனிடம் கேட்டால் போயிற்று. நாளை காலையில் அவர்களை அழைத்துவரும்படி ஆச்சியம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். அதுவரை பொறுங்கள்” என்றவர், “எதற்கும் அவரையும் வரச்சொல்லி விடட்டுமா?” என்றார்.

யார் அவர் என்று கண்களாலேயே கேட்டான் செல்வம்.
   
“இந்த ஊரில்தான் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். நமக்கு வேண்டியவர். கண்ணன் என்று பெயர். விஷயத்தைக் கொஞ்சம் குறைந்த செலவிலேயே முடித்துக் கொடுப்பார்.”

தடக்கென்று  சோபாவில் சாய்ந்தான் செல்வம்.

(தொடரும்)  (கன்னித் தீவு போலவா?) 
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்