புதன், ஜனவரி 01, 2014

புத்தாண்டு சபதங்கள் ( சிறப்பு ‘அபுசி-தொபசி’-18)

(ஜூனியர் விகடன் மாதிரி “அபுசி-தொபசி” என்ற இப்பகுதியும்  இனிமேல் வாரம் இருமுறையாக வெளிவரும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
காங்கிரஸ் சார்பில் பிரதமர் பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிடப்போவது யார் என்பதுதான் இன்று மில்லியன் டாலர் கேள்வி. ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று உறுதியாகிவிட்டால், காங்கிரசின் தோல்வியும் உறுதியாகிவிடும் என்பதால் சோனியா காந்தி தயங்குகிறார். மன்மோகன் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துவிட்டார் என்று சில செய்திகள் கூறினாலும் வேறுவழியின்றி அவை பிரதமர் வீட்டால் மறுக்கப்படுகின்றன.
 
சோனியாவுடன் நந்தன்
நந்தன் நிலக்கேணி நிறுத்தப்படலாம் என்றும் அவருக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவிக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதே சமயம் உலகவங்கியும் அமெரிக்காவும் ப.சிதம்பரத்தை முன்னிறுத்தச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தெலங்கானா பிரச்சினையில் உடைந்துபோன ஆந்திரத்தில்,  காங்கிரஸ் ஜெயிப்பது மிக முக்கியம் என்பதால் ஒரு தெலுங்கருக்கே பிரதமர் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.

கடைசியில் சோனியா காந்தியே பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக்கூடும் என்றும் சில குழுக்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், தில்லியில் முதல்வராக  அரவிந்தன் (கேஜ்ரிவால்) பதவி ஏற்றுள்ளார். தேர்தலில் வாக்களித்ததின் முதல் தவணையாக மின்சாரக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்திருக்கிறார். அவரது ஆளுமையும் வளர்ந்துகொண்டே போகிறது. மக்கள் அவருக்கும் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா, அதுவரை காங்கிரஸ் தன் ஆதரவைத் திரும்பப் பெறாமல் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்  கடைசியில் கடவுள் நிச்சயம் இந்தியாவைக் காப்பாற்றிவிடுவார் என்றே தோன்றுகிறது. (அவருக்கு அதுதானே வழக்கம்!)

புத்தகம்

அந்த நாட்கள்! 
வேலூருக்கு அருகில் உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் வளர்ச்சியடையக் காரணமான அடிகளார் திரு பாலமுருகனடிமை அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். அவர்கள் ‘அடிகளாராக’ மாறும் முன்னர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாளராக இருந்தபோதே எங்களுக்கு அறிமுகமானவர். எங்களுக்கு என்று நான் குறிப்பிடுவது அருகிலிருந்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவர்களைத்தான்.

ரத்தினகிரி -இன்று
முதலில் குறிசொல்பவராக அறியப்பட்டவர். பிறகு லாட்டரிச் சீட்டில் என்ன எண்ணுக்குப் பரிசுவிழும் என்று முன்கூட்டியே தெரிவிக்கிறார் என்று தகவல் கிளம்பியதில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் என்று பல ஊர்களிலிருந்தும் தொழிலதிபர்களால் மொய்க்கப்பட்டவர். அப்போதெல்லாம் அவர் யாருடனும் பேசமாட்டார். ஒரு சிலேட்டுப் பலகையில் பலப்பத்தால் பதிலை எழுதிக்காட்டுவார். என்னைப்போல் சாமானியர்களுக்கு மிக நீண்ட வரிசையும்  இரண்டு ரூபாய் டிக்கட்டும் ஏற்படுத்தப்பட்டன. 

மேற்படிப்பு படிப்பது பற்றி நான் ஒரு கேள்வி கேட்க, அது, அவரது நெருங்கிய உறவினர் ஒருவரால் அடிகளாருக்குத் தெரிவிக்கப்பட,  அவர் ‘கவலைப்படாதே’ என்றோ அல்லது அதுபோன்ற ஆறுதல் வாசகம் ஒன்றோ எழுதிக்காட்டினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மலைமீது ஏறியபோது அந்த உறவினரின் கழுத்திலும் கைகளிலும் சுமார் நூறு பவுனுக்குமேல்  தங்கநகைகள் இருந்ததாக ஞாபகம். அடிகளாரோ வழக்கம்போல் கோவணாண்டிதான். சில ஆண்டுகளுக்குப் பின்னால் சாண்டோ சின்னப்பதேவர்  ஒரு கல்யாண மண்டபம் கட்டித்தந்தார். வழக்கமாக வள்ளிமலைக்குப் போகும்  காவடிகள், இப்போதெல்லாம் இரத்தினகிரிக்குப் போக ஆரம்பித்தன. கோவில், வளம் கொழிக்கும் கோவிலாயிற்று. சுற்றுமுற்றுமுள்ள ஊர்களும் செழிக்கலாயின.

பாலமுருகனடிமை அடிகளார், தமிழ்மீது பற்றுக்கொண்டவர். பல கவிஞர்களை ஆதரித்தவர். கல்லூரியில் எனக்குத் தமிழாசிரியராக இருந்த திரு அலிப்பூர் ரகீம் அவர்களைப் பெரிதும்  மதித்து, அவரது ‘ஒன்று பரம்பொருள், நாம் அதன் புதல்வர்’ என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கியவர்.

அந்த அணிந்துரையின் ஒரு பகுதியும் அடிகளாரின் அன்றைய கையெழுத்தும் பாருங்கள்:

இந்தப் புத்தாண்டின் முதல்நாளில் இரத்தினகிரி முருகனையும், அவனைப் போற்றி வளர்த்த அடிகளாரையும், எனது ஆசிரியர் அலிப்பூர் ரகீம் அவர்களையும் நினைவுகூர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சினிமா & தொலைக்காட்சி
வருடம் முடிந்தால் போதும், எங்கு பார்த்தாலும் ‘டாப் டென்’ தான். சினிமாக்களாகட்டும், பாடல்களாகட்டும், இந்த டாப் டென் நியூசென்ஸ் தாங்க முடியவில்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும்  அதிகம் விற்பனையாகும் புத்தகங்களை ‘டாப் 25’ ஆக ‘நியுயார்க் டைம்ஸ்’  வகைப்படுத்தி வெளியிடுகிறது. Hard-bound, Paperback, E-book என்ற வகையிலும்,   Fiction, Non-fiction, Biography என்ற வகையிலும் இந்தப் பட்டியல் வெளியாகிறது. நம் நாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் இதுமாதிரி பட்டியல்கள் வெளியிடுகிறார்களா என்று தெரியவில்லை. பதிப்பாளர்கள், புத்தகங்களின்  விற்பனை விவரம் கொடுத்தால் தானே யாராவது தொகுத்து வெளியிடமுடியும்?

 பத்திரிகை
விகடன், குமுதம், கல்கி போன்ற முக்கிய பத்திரிகைகளில் அடிக்கடி வைரமுத்து பற்றிய செய்திகளும் பேட்டிகளும் வருவதுண்டு. ஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக ஒவ்வொர் ஆண்டும் மிக அதிகமான எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் எழுதி, தனிப்பெரும் கவிஞராக விளங்கும் எங்கள் தொண்டை நாட்டுக்காரர் நா.முத்துக்குமார் பற்றி ஏனோ அதிகம் செய்திகள் வெளியாவதில்லை. 

சிலநாள் முன்பு ‘தினகர’னில் வந்த தகவலின்படி கடந்துபோன 2௦13 ஆம் ஆண்டில்  1௦6 பாடல்கள் எழுதியிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக ரஜினிக்கோ, கமலுக்கோ இவர் எழுதாதவாறு தவிர்க்கப்படுவதால், பிற படங்களில் இவர் எழுதும் இலக்கியத்தரமான பாடல்களும் கவனத்திற்கு வராமல் போய்விடுகிறது. வைரமுத்து மாதிரி எங்கும் எதிலும் தன்னையே முன்னிறுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் கலையை முத்துக்குமார் இன்னும் எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறாரோ? ‘அணிலாடும் முன்றில்’ படித்தவர்களின் கவலை இதுதான்.

சிரிப்பு

நீதிபதி: ஏன் அடிக்கடி எதாவது குற்றம் செய்துவிட்டு குற்றவாளிக்கூண்டில் ஆஜர் ஆகிற?

குற்றவாளி: வெளியே விலைவாசியைச் சமாளிக்க முடியலை எசமான்!
    (நன்றி: கல்கி- 29–12–2௦13 பக்கம் 32)

புத்தாண்டு சபதங்கள்

ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் அந்த வருடத்திற்கென்று  ஏதாவதொரு சபதம் எடுப்பது என்று சிலர் முடிவு செய்வதுண்டு. வருடம் முழுதும் அந்த சபதத்தை விடாமல் பின்பற்றுவதுண்டு. சிலரால் எந்த சபதம் எடுத்தாலும் நிறைவேற்றமுடியாமல் போவதுமுண்டு.

நான் இந்த வருடம் இப்படியொரு சபதத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன்:

என்னைவிட வயதிலோ, படிப்பிலோ, வாழ்க்கைத்தரத்திலோ, அனுபவத்திலோ, தொழில்நுட்ப அறிவிலோ, மிகவும் குறைந்தவர்கள் கூட என்னைவிட ஏதோ சில விஷயங்களில், ஏதோ ஒரு வகையில், மிகவும் சிறந்தவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள விருப்பமாக இருக்கிறது.


“பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற புறநானூற்றுப் பாடலில் “சிறியோரை இகழ்தல் இலமே” என்பது மிகவும் பொருள்பொதிந்த தொடராகப்படுகிறது. அகம்பாவம், கர்வம், திமிர், செருக்கு என்று பலவிதமாகக் குறிக்கப்படும் விஷயம் எதனால் ஏற்படுகிறது? மற்றவரை நம்மைவிடக் குறைந்தவர்களாகப் பார்க்கும்போது தானே?

எனவே, இந்த 2௦14ஆம் வருடத்தில் “சிறியோரை இகழ்தல் இலமே” என்று சபதம் எடுத்திருக்கிறேன். நான் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்ற உண்மையை சுயநிரூபணம் செய்துகொள்ளப்போகிறேன். உங்கள் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன்.

அனைவருக்கும் எனது மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

© Y.Chellappa

34 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    பாரத தேசத்தின் அரசியல் நகர்வுகள் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றிய பதிவு மிக அருமையாக உள்ளது தங்களின் புத்தாண்டு சபதம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் ஐயா.....

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் அவர்களே! தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சபதம் நிறைவேற ,புத்தாண்டில் எல்லா வளமும் உடல் நலமும் சிறக்க அன்னை அருள் புரிய வாழ்த்தி வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  4. நான் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு ஏதோ ஒரு செய்தி இருக்கிறது
    இதை நானும் உணர்ந்து இருக்கிறேன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா ! முருகனடிமை அவர்களை நானும் சந்தித்திருக்கிறென்! மேட்டுரில் 1954-57 மின் இலாகாவில் பணியாற்றினேன்! அப்போது பாலகிருஷ்னன் (நினைவிலிருந்து எழுதுகிறேன்) என்பவர் என்னுடன் பணியாற்றினார் ! தலைமுடி கூடி கருணானிதி போன்று வைத்திருப்பார்! தீவிர மான தி.மு.க ! நாத்திகர் !.பின்னர் நான் ஹைதிராபாத் என்று சுற்றிவிட்டு ஒருமுறை வெல்லூரில்
    நண்பர்களைப்பார்க்க சென்றேன் ! அப்போது ரத்தினகிரியில் இருக்கும்சாமியாரைப் பற்றி கேள்வி பட்டு சென்றேன் 1 நண்பர் அவர்தான் நம்முடன் பணியாற்றிய பாலகிருஷ்ணன் என்றார் ! அப்பொது அவர் பெசுவதில்லை என்றார்கள் ! மலையில் ஏறவோ, இறங்கவோ படியை உபயோகிக மாட்டர் ! கைப்பிடிச்சுவரில் வழுக்கிக் கொண்டே இறங்குவார் ! நீங்கள்குறிப்பிடுவதும் அவராக இருக்கலாம் ! புத்தாண்டு வாழ்த்துக்கள் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரே தான்- நாங்கள் கொண்டுசெல்லும் இட்டிலியை மண்ணில் கலந்து உண்ணுவார்! ஒரு பித்துக்குளிபோல் நடந்துகொள்வார் அப்போதெல்லாம்!

      நீக்கு
  6. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் அதேபோல் நல்லதொரு புத்தாண்டாக இவ்வாண்டு அமையட்டும்!

      நீக்கு
  7. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கமும் நன்றிகளும் ஐயா! தங்களுக்கும் ஆரோக்கியமான புத்தாண்டாக இவ்வாண்டு நிலைக்கட்டும்!

      நீக்கு
  8. //ஜூனியர் விகடன் மாதிரி “அபுசி-தொபசி” என்ற இப்பகுதியும்//

    ஜூனியர் விகடன் முன்னோடி பத்திரிகைதான்!
    ஆனால், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், மாதிரி
    -என்று குறிப்பிடலாம், தவறில்லையல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறேயில்லை தம்பி ! (எப்படியும் உங்களிடம் மாட்டிக்கொண்டு விடுகிறேன், பார்த்தீர்களா?) புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
    2. //கடந்துபோன 2௦13//
      //கல்கி- 29–12–2௦13//
      //இந்த 2௦14ஆம்//

      ஐயா...
      இந்த வார்த்தைகளிலிருக்கும் பிழைகளை திருத்தம் செய்யுங்கள் ஐயா. தங்களுக்கு இரு தடவைகள் மெயில் அனுப்பினேன். பதில் இல்லையாதலால், இங்கே கருத்துப் பதிவிடுகிறேன்.

      நீக்கு
    3. என்னுடைய பதிவில் பிழைகள் இல்லை நண்பரே! உங்கள் மென்பொருளைச் சோதியுங்கள்.

      நீக்கு
  9. இந்த 2௦14ஆம் வருடத்தில் “சிறியோரை இகழ்தல் இலமே” என்று சபதம் எடுத்திருக்கிறேன். நான் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்ற உண்மையை சுயநிரூபணம் செய்துகொள்ளப்போகிறேன்//

    அனைவருக்குமான நல்ல கருத்து.
    இதை ஒரு நல்ல புத்தாண்டுச் செய்தியாக
    நான் எடுத்துக் கொண்டேன்

    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  10. ஒவ்வொரு தலைப்பிலும் விஷய ஞானத்தோடு கருத்துக்களைப் பகிர்வதால் பல புதிய செய்திகளை அறியமுடிகின்றது. நன்றி ஐயா!

    இது இந்த ஆண்டில் எனது பதிவு: (நூல் அறிமுகம்):
    http://nizampakkam.blogspot.com/2014/01/keezhai-jokes121.html


    (Tha.ma. +1)

    பதிலளிநீக்கு
  11. உங்கள் சபதம் நடக்கட்டும்.பகிர்வு அருமை ஐயா.இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      நீக்கு
  12. //“சிறியோரை இகழ்தல் இலமே”//
    பெரியோர்களால் மட்டுமே இதுபோன்ற
    புத்தாண்டு சபதத்தை மேற்கொள்ள முடியும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது, இச்சபதத்தை நிறைவேற்றினால் மட்டுமே பெரியோன் ஆவேன் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். சரியா? தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  13. வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு ஏதோ ஒரு செய்தி இருக்கிறது

    இது தான் வாழ்வியல் தத்துவத்தின் சூட்சமம். நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே! உலகம் என்ற பெருவெளியில் 'நான்' என்பது மிகச்சிறிய துணுக்கு தான். தங்கள் வருகைக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  14. சிறியோரை இகழ்தல் இலமே என்பதை சோதனை முயற்சியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எடுத்து, தொடர்ந்து கடைபிடித்துவருகிறேன். தங்களது இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் இதைக் கடைபிடித்துவருவதை என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன் ஐயா! எட்டு மாதங்கள் முன்பு நான் வலைத்தளம் துவங்கியபோது ஏற்கெனவே பதிவுலகில் இருந்த சுமார் ஐம்பது பேர்களுக்கு சுய அறிமுகம் செய்துகொண்டு ஆலோசனை கேட்டிருந்தேன். இந்தச் சிறியேனை மதித்து பதில் எழுதி ஊக்குவித்த சிலரில் தாங்களும் ஒருவர் ஆயிற்றே!

      நீக்கு
  15. எத்தனை விஷயங்களை அள்ளித் தெளிக்கின்றீர்கள் ஐயா! எல்லாமே அருமை! கெஜ்ரிவால் வாக்குறுதிப்படி, நல்ல கொள்கைகளோடு ஆட்சி செய்தால் நம் மக்கள் ஆதாரவு கண்டிப்பாக கிடைக்கும்! எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அதைத்தானே!!. ஒரு ஊழல் இல்லா ஆட்சி!! ஆனால், அவரைச் சுற்றி இருப்பவர்களும் அப்படி இருந்தால் தான் அது நடக்கும்! பார்ப்போம். நடந்தால் இந்தியாவுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதா?

    நல்ல ஜோக்!

    தங்கள் புத்தாண்டு லட்சியங்கள் எல்லாம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மணி நேரம் முன்பு கேஜ்ரிவால் தனது மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டார் என்று தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன. நல்லது தொடரட்டும்! தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!

      நீக்கு
  16. உங்கள் கவிதை இன்று எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் தகவலுக்காக....

    http://venkatnagaraj.blogspot.com/2014/01/8.html

    பதிலளிநீக்கு