புஷ்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புஷ்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 09, 2020

பொன்னித் தீவு -17

பொன்னித் தீவு-17

    -இராய செல்லப்பா

                   இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்           
                  

 (17) புஷ்பா - யமுனா

முன்னோர்களுக்குத் திதி கொடுக்க இராமேஸ்வரம் போவதென்று புஷ்பாவின் தந்தை விநாயகம் முடிவெடுத்ததுதான் அவளுடைய வாழ்க்கைப் பாதையையே புரட்டிப்போட்டுவிட்டது.

விடியற்காலை இரயிலில் இருந்து இறங்கி, அவசரம் அவசரமாக ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு விநாயகமும் புஷ்பாவும் தங்கினார்கள். ஆறுமணிக்கு வேனில் வந்து அவர்களை தனுஷ்கோடிக்கு அழைத்துப் போவதாக இராமநாத அய்யர் (புரோகிதர்)  சொல்லியிருந்தார். அதற்குள் அரைமணிநேரம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, அறையிலேயே குளித்துவிட்டுக் கிளம்பவேண்டும்.

“இங்குதான் ஸ்ரீராமர், மணலால் சிவலிங்கம் பிடித்து, அதற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தாராம். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன தெரியுமா?” என்றார் அய்யர்.

அய்யர் சொன்னபடி, மணலை  எடுத்துக் கடல்நீரைவிட்டுப்  பிசைந்து ஒரு லிங்க உருவை அமைத்திருந்தார் விநாயகம். அய்யர் சொன்ன மந்திரங்களை, அர்த்தம் தெரியாமலும், வார்த்தைகள் புரியாமலும் உச்சரித்தபடி அந்த லிங்கத்திற்கு வில்வமும் பூக்களும் தூவிக்கொண்டிருந்தவர், “தெரியாது சாமி!” என்றார்.

இது கூடத்  தெரியாதா என்பதுபோல அவரைப் பார்த்த அய்யர், “ரொம்ப சிம்பிள்! இங்கு இப்படி ஒரே ஒரு முறை லிங்க பூஜை செய்தால் போதும், இராம பக்தர்களுக்கும் பிரார்த்தனை பலிக்கும், சிவ பக்தர்களுக்கும் பலிக்கும்! அதுதான் விசேஷம்!” என்று விளக்கினார்.

 பூஜை முடிந்தபிறகு தனுஷ்கோடியை விட்டுக் கிளம்பினார்கள். “இராமேஸ்வரம் கோவிலில் ஒன்பது மணிக்கு இருந்தால் போதும். அதற்குள் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, கோவில் வாசலில் என்னுடைய பெயர்ப்பலகை இருக்கும். அங்கு வந்துவிடுங்கள். நாழிக்கிணறுகளில் ஸ்நானம் முடித்துவிட்டு, திதி கொடுத்துவிடலாம். பிறகு நம் வீட்டில் உணவு தயாராக இருக்கும்” என்றார் அய்யர்.          

விடுதியின் அறையை அடைந்தபோது சுற்றுலாத் தலங்களுக்கே உரிய ‘புரோக்கர்’ பட்டாளம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலுடன், அதற்கான வாகனவசதிகள் பற்றிய முழு விவரத்துடன் அவர்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். அப்துல்கலாம் நினைவிடத்தை மறக்காமல் பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைவுபடுத்தினார்கள்.

விதி யாரை விட்டது? அவர்களில் ஒரு நபர் மட்டும் புஷ்பாவிடம் நெருங்கி “வணக்கம் தங்கச்சி! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?” என்று மெதுவாகக் கேட்டார். சுமார் முப்பது வயதிருக்கும். படித்த இளைஞர். பெயர் பூபதி என்று சொன்னார்.   

அதற்குள் விநாயகம், “பிளஸ் டூ முடிச்சிருக்கு. சர்வீஸ் கமிஷனுக்கு அப்ளை பண்ணியிருக்கு” என்றார்.

அவ்வளவுதான், பூபதியின் முகத்தில் தோன்றிய ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தோன்றியது புஷ்பாவுக்கு.

"கவலையை விடுங்கள் சார்! உங்கள் நல்ல காலம்தான் இன்று நீங்கள் இராமேஸ்வரம் வந்ததும்  என்னைப் பார்க்க நேர்ந்ததும்! சர்வீஸ் கமிஷன் போஸ்டிங் எல்லாம் இராமேஸ்வரத்தில்தான் முடிவுசெய்வதாக  வாட்ஸப்பில் வைரலாகி இருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்றார் பூபதி.  

மேலும் தொடர்ந்தார். “நமக்கு வேண்டிய அண்ணன் ஒருவர், சென்னையில் அரசாங்க டிரைவராக இருக்கிறார். ரொம்ப செல்வாக்குள்ளவர். திமுக வானாலும் சரி, அதிமுக வானாலும் சரி, அவ்வளவு ஏன், பிஜேபி யிலும் கூட அவரால் நமக்கு வேண்டியதைச் செய்துகொடுக்க முடியும். நீங்கள் சென்னையில் இருப்பது வசதியாய்ப் போயிற்று. நீங்கள் ரூமுக்குப் போங்கள். நான் அண்ணனிடம் பேசிவிட்டு  அய்யர் வீட்டுக்கு வந்து மற்ற விஷயங்களைத்      தெரிவிக்கிறேன். ஆனால் ஒன்று, காரியம் முடிகிறவரையில் நமக்குள் இது இரகசியமாக இருக்கவேண்டும்!” என்று கூறிவிட்டு பூபதி அவசரமாகக் கிளம்பினார்.

சடங்குகள் முடிந்து பகல் உணவும் முடிந்து அய்யர் வீட்டு மாமியிடம் மொத்தச்  செலவுக்கும் ‘செட்டில்’ செய்த பிறகு, வெளியில் வந்தனர் விநாயகமும் புஷ்பாவும். பூபதி அவர்களுக்காகக் காத்திருந்தார்.

சில முக்கிய விவரங்களைச் சொன்னார். அதற்கான செலவையும் சொன்னார். விநாயகத்திடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் ஒரு ஏக்கர் புன்செய் நிலம் தரிசாக இருந்தது. “அது  போதுமே! அண்ணனிடம் இப்போதே  பேசுகிறேன்” என்று பூபதி சற்றுத் தொலைவு சென்று அலைபேசியில் பேசினார். பிறகு மகிழ்ச்சியோடு ஓடி வந்தார்.

“நீங்கள் சென்னை வந்தவுடன் இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொன்னார் அண்ணன். அநேகமாக இரண்டே மாதத்தில் உங்களுக்கு ஆர்டர் வந்துவிடுமாம்!” என்று உத்தரவாதமளித்தார் பூபதி.

புஷ்பாவுக்குத் தெரியாமல் பூபதியின் கையில் நான்கு ஐந்நூறு ரூபாய்களை  வைத்து அழுத்தினார் விநாயகம்.

ஒரு நல்ல நாளில் போலீஸ் துறையில் உதவியாளராகச் சேர்ந்தாள் புஷ்பா.

விநாயகத்தின் நிலம், அண்ணன் சொன்ன  மகளிர் அணிச் செயலாளர் ஒருத்தியின் பெயரில் கிரயம் செய்யப்பட்டது. மிகுந்த அன்போடு விநாயகத்தின் கையிலும் பத்தாயிரம் ரூபாய் தரப்பட்டது. கைச்செலவுக்கு வேண்டுமல்லவா?

புஷ்பா வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தவளே அல்ல. அதேசமயம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. தூங்குவதிலும்,  தோழிகளோடு பேசுவதிலும், சினிமா பார்ப்பதிலும் கொஞ்சகாலம் கழித்து விட்டு, திருமணமாகி செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதே அவள் கனவாக  இருந்தது.

இராமேஸ்வரம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதிலும் அவளுக்குப் பிடிக்காத போலீஸ் துறையில் அவளைக் கொண்டு வந்து நுழைத்து விட்டது.

***

"உனக்கு என்னடி புஷ்பா, போலீஸ் துறையில் இருக்கிறாய்! உட்கார்ந்த இடத்திலேயே  ஆயிரக்கணக்கில் வரும்! ரெண்டே வருடத்தில் சொந்த வீடு கட்டி விடுவாய்" என்று பொறாமைப்பட்டாள் தோழி மோகனா. வேலையில்லாதப் பட்டதாரி. (அவள் இதுவரை இராமேஸ்வரம் போனதில்லை.)

எரிச்சலாக வந்தது புஷ்பாவுக்கு. "சொல்லமாட்டாயா பின்னே? ஒரு கிராமத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். இன்ஸ்பெக்டருக்கு நான் தான் டீ போட்டுக் கொடுக்க வேண்டும். சம்பளத் தேதியில் கைமாற்று வேறு வாங்கிக்கொண்டு விடுவார். திரும்பிவராது! நானாவது வீடு கட்டுவதாவது!"

மோகனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். மேலதிகாரிகளைப் பார்த்து நீ 'தொழில்'நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதன்பிறகு பாரேன், மாதமொரு நெக்லஸ் செய்துகொண்டு விடுவாய்" என்று நம்பிக்கை அளித்தாள் மோகனா.

நெக்லஸ் என்றவுடன் 'செல்வம்- யமுனா- ராஜா' என்ற முக்கோணம் புஷ்பாவின் மனதில் நிழலாடியது.

யமுனாவின் புகாரை விசாரிப்பதற்காக அவள் வீட்டுக்குப் போன இன்ஸ்பெக்டர் கண்ணன்,  திரும்பி வந்து புஷ்பாவிடம், "டைம் வேஸ்ட்! நெக்லஸ் பிரச்சினை தீர்ந்து விட்டதாக யமுனாவின் தகப்பனார் கூறிவிட்டார்" என்று சுரத்தில்லாமல் தெரிவித்திருந்தார்.

அந்தப் பின்னணியில் மோகனாவின் பேச்சைக் கேட்டவுடன் புஷ்பாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல், தானே போய் யமுனாவிடமும் மற்றவர்களிடமும் விசாரணை செய்தால் என்ன? இன்ஸ்பெக்டரும் அப்படித்தானே, மற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமல், தானே சில விஷயங்களைக் கையாள்கிறார்? சில கேஸ்களில் சமரசமும் செய்து வைக்கிறார்?

சும்மாவா வந்தது இந்தப் பதவி? இரண்டு ஏக்கர் நிலம் அல்லவா அதற்கான விலை? அந்தப் பணத்தை எப்படித்தான் மீட்பது?

***

கதவைத் திறந்த யமுனாவுக்குப் புஷ்பாவைக் கண்டதும் ஆச்சரியம் மட்டுமல்ல,  அதிர்ச்சியாகவும் இருந்தது. அன்று போலீஸ் ஸ்டேஷனில் சாதாரண உடையில் இருந்தவள், இன்று போலீஸ் யூனிபாரத்தில் வந்திருந்தது யமுனாவுக்குச் சற்றே பயத்தையும் ஊட்டியது.

அந்த நேரம் பார்த்து அவளைத்தவிர யாருமே வீட்டில் இல்லை. பரமசிவமும் பார்வதியும் அதே குடியிருப்பில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். செல்வம், அவசரமாக அழைக்கப்பட்டு அவனுடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.

“வாங்க புஷ்பா!” என்று அவளை அமரச் செய்த யமுனா, “என்ன குடிக்கிறீர்கள்? டீயா இல்லை ப்ரூ காப்பியா?” என்றாள்.

சற்றே மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றைப் பார்த்து விஷயத்தை ஊகித்தவளாக, “விசேஷம் போல் இருக்கிறதே! கங்கிராஜுலேஷன்ஸ்!” என்ற புஷ்பா, “எனக்குக் காப்பிதான் பிடிக்கும்” என்றாள்.  

வெட்கம் கலந்த புன்னகையைப் பதிலாக அளித்த யமுனா இருவருக்கும் காப்பி கொண்டுவந்தாள். அருந்தியபின் புஷ்பாவிடம் “நீங்களும் போலீஸ் உமனா? நான் யாரோ என்று இருந்தேன்” என்றாள்.

அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள் புஷ்பா. “அதிருக்கட்டும், உங்கள் கணவர் இல்லையா?” என்றாள்.

“ஒருமாதமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் தான், இன்றுதான் அவசர வேலையாக ஆபீஸ் போயிருக்கிறார்.”

நல்ல சமயம், இதை நழுவ விடாதே என்று புஷ்பாவின் உள்மனது சொன்னது. எழுந்து நின்றாள்.

“சரி, விஷயத்துக்கு வரட்டுமா?  நெக்லஸ் தொலைந்துபோனது பற்றி புகார் கொடுக்க வந்தீர்களே,  அப்புறம் என்ன ஆயிற்று? உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?”     

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நெக்லஸ் இன்னும் கிடைக்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால், தன்  கணவரை அழைத்து இவள் விசாரிக்கக்கூடும். கிடைத்துவிட்டதென்று பொய் சொல்வதற்கும் துணிச்சல் வரவில்லை.

“அன்றைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அப்பாவிடம்தான் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு எல்லா விஷயமும் தெரியுமே” என்று விட்டேற்றியாகப்  பதில் கூறினாள்.

இப்போது புஷ்பாவுக்கு இலேசான பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை இன்ஸ்பெக்டரே இந்த வழக்கை ‘ஒருவாறு’ முடித்துவிட்டிருந்தால், தான் வந்து போனது அவருக்குத் தெரிந்துவிட்டால் பிரச்சினையாகிவிடுமே!

“ஆமாம், ஆனால் கேஸை நாங்கள் முடிக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் கேட்கிறேன். நெக்லஸ் ஒன்றுதான் காணாமல்போனது என்றும் அதுவும் கிடைத்துவிட்டது என்றும் நீங்கள் ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எங்கள் வேலை முடிந்துவிடும். அதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பினார்” என்று சமாளித்தாள் புஷ்பா.

“ஒரு நிமிடம்” என்று பால்கனிக்குப் போனாள் யமுனா. “இந்தப் பாழாய்ப்போன குடியிருப்பில், பால்கனியில்தான் டவர் கிடைக்கிறது”  என்றபடி அப்பாவுக்குப் போன் செய்தாள்.

மணியொலிப்பது கேட்கிறது, ஆனால் எடுப்பாரில்லை. மீண்டும் முயற்சித்தாள். அப்போதும் பலனில்லை.             

“அப்பா வரும்வரை உட்காருங்களேன். அவரில்லாமல் நான் எதுவும் எழுதித்தர இயலாது” என்றாள் யமுனா.

தன் நிலைமையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாத புஷ்பா, “இல்லை யமுனா! நான் இன்னும் மூன்று கேஸ்களை விசாரிக்கவேண்டும். நேரமில்லை. சரி, நாளை வருகிறேன். உங்கள் கணவரை விசாரித்தே ஆகவேண்டும்” என்று மிடுக்கோடு கிளம்ப எத்தனித்தாள்.

“அவரை ஏன் விசாரிக்கவேண்டும்? இன்ஸ்பெக்டரே கேஸ் முடிந்துவிட்டதாகக் கூறினாரே!” என்று தயக்கத்தோடு சொன்ன யமுனா,  அவள் வெளியே போகாதபடி கதவருகில் நின்றுகொண்டாள்.

அந்தநேரம் பார்த்துதானா ஆச்சி வரவேண்டும்!

“வாங்க போலீஸ்காரம்மா! நெக்லஸ் விஷயமா வந்தீங்களா? செல்வம் சார்கிட்டப் பேசினீங்களா?” என்று எடுத்துக்கொடுத்தார் ஆச்சி.

இவர் யார் என்பதுபோல் ஆச்சியைப் பார்த்தாள் புஷ்பா. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஆச்சி, “ஒரு நிமிஷம் இரும்மா!” என்று சமையல் அறைக்குள் நுழைந்து யமுனாவுக்குக் கண்சாடை காட்டினார்.

பிறகு மெல்லிய குரலில், “இங்க பாரு, இந்த போலீஸ்காரங்க இப்படித்தான் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டே  இருப்பாங்க. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் வந்தாரு, இன்னிக்கி  இவளை மட்டும் அனுப்பியிருக்காருன்னா காரணம் புரியல்லியா ஒனக்கு?” என்று யமுனாவைக் கேட்ட ஆச்சி, மெல்லிய குரலில், “ஒரு ஐந்நூறு இருந்தால் குடுத்து அனுப்பிடலாம். விஷயம் முடிந்துவிடும். இல்லாட்டி ஒங்க வீட்டுக்காரர் கம்பெனிக்கே போய் விசாரிக்கணும்னு நிப்பாங்க! எவ்வளவு அசிங்கம் பாரு!” என்றார்.

ஐந்நூறு கைமாறியது. “இதெல்லாம் எதுக்குங்க” என்று நாணத்தோடு கேட்பதுபோல் கேட்டாலும், கொடுத்ததை வாங்கிச் சட்டையின் உள்பையில் பத்திரமாக அழுத்திக்கொண்டாள் புஷ்பா.

ஒன்றும் இல்லாத விஷயத்துக்கே ஐந்நூறு ரூபாயா என்று அதிசயித்தாள். மனம் மோகனாவுக்கு நன்றி சொன்னது. அடுத்த விசிட் எங்கே போகலாம் என்று மனதிற்குள் தேடலானாள்.

மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு ஆச்சி யமுனாவிடம் இரகசியமாகக் கூறினார்: “இதையெல்லாம் உன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிராதே! இவரைத் தெரியும் அவரைத் தெரியும் என்று விஷயத்தைப் பெரிதாக்கிவிடுவார். அப்புறம் உன் கணவன் பேர்தான் ரிப்பேர் ஆகும்!”

பிறகு, “அயன்காரனிடம் நேற்று நாலு சேலை கொடுத்தேன். பொறுப்பில்லாதவன்!  இன்னும் கொண்டுவரவில்லை. நான் வரட்டுமா?” என்ற ஆச்சி, துக்கம் விசாரிப்பவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “யமுனா, அந்த நெக்லஸ் எங்கதாம்மா போச்சு?” என்றார்.

 பதில் தெரியாமல் பரிதாபமாக விழித்தாள் யமுனா.

 (தொடரும்) 

       இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஞாயிறு, மே 17, 2020

பொன்னித்தீவு -9


பொன்னித்தீவு -9

  -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(9) இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர்

கொரோனா ரிப்போர்ட்டில் நெகட்டிவ் என்று வந்ததால் இன்ஸ்பெக்டர்  கண்ணன் மறுபடியும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிசெய்வதற்கு வந்துவிட்டார். புஷ்பாவின் ரிப்போர்ட்டும் நெகட்டிவ் தான். அந்த மகிழ்ச்சியில் அவள் புதிய ஃபிளாஸ்க்கில் காப்பி நிரப்பிக்கொண்டு வந்திருந்தாள். ஸ்டேஷனில் இருந்த மற்ற மூன்று காவலர்களும் இரண்டு வாரங்கள் முன்பே வேறொரு ஸ்டேஷனுக்கு டெபுடேஷனில் சென்றுவிட்டார்கள்.

நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்டருக்குக் கொஞ்சம் தூக்கலாகவே சர்க்கரைபோட்டு காப்பி கொடுத்தாள் புஷ்பா.
“அவசரமான கேஸ்கள் ஒன்றும் இல்லை சார்!” என்றாள்.

தான் தாற்காலிகமாகத்தான் அங்கு போஸ்டிங் ஆகியிருப்பதால், பழைய கேஸ்களை எடுத்து விசாரிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று அவருக்குத் தெரியும். ஆனால்  இத்தனை வருட அனுபவத்தில் தன் பாக்கெட் இவ்வளவு நாட்கள் காலியாக இருந்ததில்லை என்பது சோகமாக இருந்தது. கொரோனா ஊரடங்கினால்  டூ வீலர்களும் ஷேர்-ஆட்டோக்களும் ஓடாததால் பணப்புழக்கம் என்பதே இல்லை.

டக்கென்று நினைவுக்கு வந்தது, செல்வம்-செம்பகம்-நெக்லஸ் வழக்கு. உற்சாகம் அடைந்தவராக, “புஷ்பா, அந்த ஃபைலைக் கொண்டுவா” என்றார்.    

“யமுனாம்மா வீட்டிற்குப் போயிருந்தேன் சார்! பக்கத்து வீட்டில்தான் செம்பகம் வேலை செயகிறாளாம். ஆனால் அவளுடைய தெருவை  கொரோனா கண்டெயின்மெண்ட் ஜோன்  ஆக்கிவிட்டதால் அவள் வரவில்லை” என்று கூறினாள் புஷ்பா.

“இப்போது நம்ம ஊரில் எந்த இடத்திலும் கொரோனா இல்லை என்று ஹெல்த் ஆபீசில் சொல்லிவிட்டார்கள். ஆகவே நாம் உடனே அவளை விசாரித்தாகவேண்டும். உனக்குத்தான் தெரியுமே, பொதுவாகவே பணக்கார  வீடுகளில் நாலு வீட்டுக்கு ஒரு வீடு என்று வேலைக்காரர்கள் தான் நகைத்திருட்டில் ஈடுபடுகிறார்கள்” என்றார் கண்ணன்.

“அதற்குமுன்னால் செம்பகத்தின் புருஷனைக்  கூப்பிட்டால் சரியாக இருக்கும் அல்லவா?” என்றாள் புஷ்பா.

“ஆம், மண்டை பிளக்கிற வெய்யிலில் நின்று நின்று எனக்கு மூளையே மரத்துப்போய்விட்டது. அவனுக்குப் போன் போடு!” என்றார் கண்ணன்.

தன்னை எப்படியும் போலீசில் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தான் ராஜா. தாமதம் செய்யாமல் வந்தான். “வணக்கம் சார்” என்றான்.

தலைமுதல் பாதம்வரை அவனை ஆராய்ந்தார் கண்ணன். நல்ல கட்டுடல். களையான முகம். சுறுசுறுப்பானவனாகத் தோன்றினான். இவன் திருட்டில் ஈடுபட்டிருக்க வழியில்லை என்றே தோன்றியது. ஆனால் அவனுக்கு மனைவியாய் இருப்பவள் போயும் போயும் அந்த பயந்தாங்கொள்ளி செல்வத்தையா கள்ளக்காதலனாக வைத்திருப்பாள்? அப்படியே செல்வம் அந்த நெக்லஸை இவளிடம் தந்திருந்தாலும் கணவனுக்குத் தெரியாமல் அதை எப்படி மறைத்துவைக்க முடியும்? கணவன் அவளைச் சும்மா விட்டுவைப்பானா?

இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி, முதலில் இருந்து ஆரம்பிக்கலாமா, அல்லது நீயே உண்மையைச் சொல்லி விடுகிறாயா?” என்று ராஜாவை மிடுக்கோடு கேட்டார்.

“மன்னிக்க வேண்டும் சார்! நான் ...என்ற நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூடிவ் ஆக வேலை செய்கிறேன். எனக்குத் திருமணமாகி செம்பகம்  என்ற மனைவி இருக்கிறாள். குழந்தைகள் இல்லை. அதிக வசதிகள் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வேறு ஏதாவது சொல்லவேண்டுமா சார்?” என்றான் ராஜா, மரியாதை கலந்த குரலில்.

“உங்கள் நிறுவனம் என்ன தொழில் செய்கிறது?”

“சென்னை கார்ப்பொரேஷனுக்கு குப்பை சேகரித்து அகற்றும் ஒப்பந்தப் பணியில் இருக்கிறோம் சார்!”

“அதாவது குப்பை பொறுக்கும் ஆசாமி நீ!” என்று கேலியாகச் சிரித்தபடி புஷ்பாவைப் பார்த்தார் கண்ணன். அவள் எந்த எதிர்வினையும் இன்றி நின்றாள்.

“மன்னிக்கவேண்டும் சார். அவ்வளவு கேலியாக எண்ணவேண்டாம். இன்று சென்னை நகரம் ஓரளவு தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்றால் அதில் எங்களுக்கு முக்கியப்  பங்கு உண்டு!” என்றான் ராஜா.

“அது போகட்டும், உண்மையைச் சொல்! உன் மனைவி உன்னுடன் சந்தோஷமாக இருக்கிறாளா?”    

அதைப் பற்றி இவருக்கென்ன வந்தது என்று புருவத்தைச் சுருக்கினான் ராஜா, பதிலேதும் சொல்லாமல்.

“குறிப்பாக, அவள் ஏதாவது நகை நட்டு கேட்டு நச்சரித்தாளா? நீ வாங்கிக்  கொடுத்தாயா என்பது பற்றிச் சொல்ல வேண்டும்” என்று கண்டிப்பான குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர்.

“மன்னிக்கவேண்டும் சார்! ஏன் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். அவள் ஆசைப்படி அவளுக்கு ஒரு நெக்லஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் பழைய நகை தான். மற்றப்படி ஏதுமில்லை” என்றான் ராஜா குழப்பத்துடன்.
  
அப்போது புஷ்பா இன்ஸ்பெக்டரைப் பார்த்து அர்த்தபூர்வமாகக் கண்ணடித்தாள்.

“நல்லது, ராஜா! புதுப் பொண்டாட்டி கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஆனால் உண்மையைச் சொல், அதை நீ வாங்கினாயா, அல்லது…..?” என்று அவனைக் கூர்ந்து நோக்கினார்.

ராஜா அயரவில்லை. “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

அவனுக்கு மிக அருகில் வந்தார் கண்ணன். “இதோ பார், சில பெண்களுக்கு ஆசை அதிகம் இருக்கும். அதிலும் அழகான பெண்களுக்கு வேறு மாதிரி ஆசைகளும் இருக்கும். எங்கள் தொழிலில் நாங்கள் பார்க்காத பெண்களா? உண்மையைச் சொல், உன் மனைவியும் ரொம்ப அழகானவள் என்று கேள்விப்பட்டேன். அவளுக்கு உன்னைத் தவிர…..” என்றவரை மேற்கொண்டு பேசவிடாமல் “சார், போதும் நிறுத்துங்கள். என் மனைவியைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசினால் நான் பொறுக்கமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான் ராஜா.

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இறங்கி வந்தார். “ராஜா, ஐ ஆம் சாரி. ஒரு விஷயம் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன். போகட்டும், நீ ஆபீசுக்குப்போன பிறகு உன் மனைவி என்ன செய்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா?”

“தினமும் காலையில் அவளை நான்தான் வக்கீல்மாமி வீட்டில் கொண்டுபோய் விடுவேன். மாலையில் பிக்கப் செய்துகொள்வேன். அங்கு வீட்டுவேலை செய்கிறாள். முழுநேரமும் அங்குதான் இருப்பாள்!”

“செல்வம் என்பவரைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

ராஜா மலர்ச்சியோடு சொன்னான். வக்கீல்மாமி வீட்டுக்கு அருகில்தான் செல்வம் இருக்கிறார். ஐ.ட்டி. பணியாளர். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்.

“ராஜா, நான் கேட்பதற்குச் சரியான பதில் வேண்டும். அந்த செல்வத்துக்கும் உன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக நீ எப்போதாவது சந்தேகப்பட்டதுண்டா?”

கோபத்தால் கொதித்துப்போனான் ராஜா. “சார், என் மனைவி ஒரு நெருப்பு மாதிரி. தெரிந்துகொள்ளுங்கள்” என்றான்.

இன்ஸ்பெக்டர் அவன்  தோள்களைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தார். 

“மறுபடியும் சாரி, ராஜா! அப்படியானால் செல்வத்திற்கும் உனக்கும் எப்படித் தகராறு வந்தது? நீ அவரை மிரட்டியதற்கு சாட்சி இருக்கிறதே!” என்றார்.

ராஜாவுக்குப் புரிந்துவிட்டது.

அன்றொருநாள் செல்வத்தை அவருடைய வீட்டு வாசலில் நிறுத்தி “நீங்க செய்றது நல்லா இல்லை!” என்று சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. சிரித்தான்.

“சார், நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும்  இல்லை. எங்க கம்பெனி அவருடைய ஆபீசுக்கும்தான்   க்ளீனிங் சர்வீஸ் செய்கிறது. அங்கு எல்லாரும் எங்கள் சர்வீஸில் திருப்தியாக இருக்கிறார்கள். ஆனால் யூனியனைச் சேர்ந்த சிலர் எங்களை விரட்டிவிட்டுத்  தங்களுக்கு வேண்டிய ஒரு கம்பெனியைக்  கொண்டுவரப்  பார்க்கிறார்கள். அவர்களுக்கு மிஸ்டர் செல்வம் ஒத்து ஊதுவதாகச் செய்தி வந்தது. அதற்காகத்தான் செல்வத்திடம் அப்படிப் பேசினேன். அது மிரட்டல் அல்ல சார், வெறும் பேச்சு தான்!” என்று தெளிவுபடுத்தினான் ராஜா.

“மேலும், அன்றுதான் அவரை முதல்முதலாகப் பார்த்தேன்!” என்றான்.

கண்ணனுக்கு மூளை மேலும் குழம்புவதுபோல் இருந்தது. புஷ்பாவைப் பார்த்தார். அவள் உடனே இருவருக்கும் காப்பி கொடுத்தாள்.

“ராஜா, அந்த நெக்லஸைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா? அது செல்வம் உன் மனைவிக்குக் கொடுத்தது தானே?”

மறுபடியும் எச்சரிப்பதுபோல் முகத்தில் ஆத்திரத்தைக் காட்டினான் ராஜா. “சார், அது உண்மையில் செல்வத்தின் நெக்லஸ் தான். ஆனால் அதை செல்வம் கொடுக்கவில்லை. நான் காசுகொடுத்து வாங்கியது”  என்றான். 

இன்ஸ்பெக்டருக்கு நிஜமாகவே மண்டை காய்ந்துபோனது. நிச்சயம் செல்வம்தான் ஏதோ  தகிடுதத்தம் செய்திருக்கிறான். அவனை உடனே விசாரிக்கவேண்டும். ராஜாவை ஏற்றிக்கொண்டு தன்  மோட்டார்சைக்கிளில் கிளம்பினார்.

(தொடரும்)   (கன்னித்தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வியாழன், மே 07, 2020

பொன்னித்தீவு -2

பொன்னித்தீவு -2  

இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்


-இராய செல்லப்பா

(2) யமுனா...யமுனா

முகக் கவசத்தை இறுக்கியபடி ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய யமுனாவைப் பார்த்ததும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஒரே பெண் ஊழியரான புஷ்பா  வேகமாக ஓடி வந்தாள்.

“மேடம், இன்ஸ்பெக்டர் கொரோனா டியூட்டிக்காக வெளியே போயிருக்கிறார். நாளைக்கு வாங்க” என்றாள்.

முடியாது  என்று வேகமாகத் தலையசைத்தாள் யமுனா.  “முக்கியமான விஷயம். நாளை வரை பொறுக்க முடியாது!” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த ஓரளவு சுமாரான நாற்காலியில் அமர்ந்தாள்.

அதே சமயம் போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு இன்ஸ்பெக்டர் இறங்கினார். இராத்திரி முழுதும் டியூட்டி பார்த்திருப்பார் போல. கண்கள் சிவந்திருந்தன. ஆனால் ஓர் அழகான பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் முகத்தில் சற்றே புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “வணக்கம் மேடம்” என்றார்.
தொலைந்த நெக்லஸ்  இதுவா?  (படம் -நன்றி: இணையம்)

“என் பேர் கண்ணன். ஒரு வாரம் மட்டும் இங்கு போஸ்டிங்”, என்றவர், “புஷ்பா, மேடத்திற்கு என்ன கம்ப்ளெயிண்ட்டு?” என்று கேட்டபடி, அங்கிருந்த அதிக அசுத்தம் இல்லாதிருந்த  ஒரு பழந்துணியால் நாற்காலியைத் துடைத்துவிட்டு அமர்ந்தார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது யமுனாவுக்கு இதுவே முதல் தடவை. அதுவும் கணவனுக்குத் தெரியாமல். என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தாள்.

கண்ணன் அதைப் புரிந்துகொண்டவராக, “ஏதாவது டொமஸ்டிக் வயலன்ஸ் பிரச்சினையா?” என்றார்.  இல்லையென்று தலையாட்டினாள் யமுனா.

“அப்படியானால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விவகாரமா?”

அதுவும் இல்லையென்று தலையாட்டினாள்.

“புரிந்தது. வீட்டில் ஏதோ  திருடு போய்விட்டது. அதானே?”

“கிட்டத்தட்ட  அப்படித்தான்…” என்று இழுத்தாள் யமுனா.

இன்ஸ்பெக்டர் முகத்தில் சற்றே பிரகாசம் தோன்றியது. “நல்லது, எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள நகைகள்?”

யமுனாவுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. “ஒரே ஒரு நெக்லஸ் தான் என்று நினைக்கிறேன். வாங்கும்போது ஐம்பதாயிரம் ரூபாய்!”

‘ப்பூ ..அவ்வளவுதானா?’ என்ற அலட்சிய பாவம் தோன்றியது இன்ஸ்பெக்டர் முகத்தில். ‘இந்த பிஸாத்து விஷயத்திற்கு போலீஸ் கேட்கிறதா?’

எழுந்தார் கண்ணன். “பாருங்க மேடம். வீட்டில் எல்லாரிடமும் விசாரித்தீர்களா?” 

“இருப்பது நானும் என் கணவரும் மட்டும்தான். அவர் ஆபீஸ் போயிருக்கிறார்” என்றாள்  யமுனா. 

“புஷ்பா, அவருடைய செல் நம்பருக்கு போன் பண்ணி நேராக இங்கே வரவேண்டும் என்று சொல். சரி, மேடம், அவர் வரும்வரை நீங்கள் இங்கேயே இருங்கள். நான் கொரோனா டியூட்டிக்குப் போகவேண்டும்” என்று கண்ணன் கிளம்பிவிட்டார்.

வெய்யில் பளீரென்று அடித்தது. யமுனாவுக்கு வியர்வை கசிந்து அருவருப்பை ஏற்படுத்தியது. இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று தன்  மேலேயே  கோபம் வந்தது.  அடுத்தடுத்த அடுக்கு வீடுகளில் தொடர்ச்சியாகப் பல திருட்டு சம்பவங்கள் நடந்திருந்ததால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுக்குமாறு அசோசியேஷன்காரர்கள் கூறியிருந்தார்கள்.

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையன்று அணிந்துகொள்வதற்காக பீரோவில் இருந்து நெக்லஸ் பெட்டியை எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் குளித்துவிட்டு வந்தபோது அதை அணிந்துகொள்வதற்குள் மதுரையில் இருந்து தாயாரின் போன் வரவே கவனம் சிதறிப்போனது. நெக்லஸை மறந்தே போனாள். ஆனால் அது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் இருக்குமே!

எப்படி அது காணாமல் போயிருக்கும்? ஒருவேளை செல்வம் எடுத்து எங்காவது வைத்திருப்பாரோ?

ஊஹூம், தான் வைத்த எந்தப் பொருளையும் அவர் தொடவே மாட்டாரே! அவ்வளவு தைரியம் அவருக்குக் கிடையாது. வேறு யாராக இருக்கும்?

சற்று நேரத்தில் புஷ்பாவும் எங்கோ எழுந்து போனாள். வெகுநேரம் வரவேயில்லை. யமுனாவுக்கு அங்கு தனியாக அமர்ந்திருப்பதற்கு அச்சமாக இருந்தது.   செல்வத்திடம் சொல்லாமல் போலீசுக்கு வந்தது மிகப் பெரிய தவறு என்று தோன்றியது. சடக்கென்று எழுந்தாள். முகக் கவசத்தை இறுக்கிக்கொண்டு தன் ஸ்கூட்டரைக் கிளப்பினாள்.

அவள் வீட்டை நெருங்கிக்கொண்டிருந்த அதே சமயம், செல்வம் போலீஸ் ஸ்டேஷனை அடைந்துகொண்டிருந்தான். தன்மீது என்னவென்று புகார் கொடுத்திருப்பாள் யமுனா? ஆச்சி தான் வம்பிழுத்திருக்கவேண்டும்.

புஷ்பா வரவேற்றாள். இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தாள். பத்து நிமிடத்தில் கண்ணன் வந்துசேர்ந்தார்.

ஆனால் செல்வம் எதற்காக அழைக்கப்பட்டார் என்பதையே அவர்  மறந்துவிட்டிருந்தார். எனவே போலீஸ்காரர்களுக்கே உரிய முறையில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.

“எஸ், மிஸ்டர் செல்வம்! உங்கள் மனைவி வந்திருந்தார். ஆனால் எங்களிடம் சொல்லாமலே போய்விட்டார். ஆகவே அவர்களைச் சரியாக விசாரிக்கமுடியவில்லை. சரி, என்ன நடந்ததென்று நீங்களே சொல்லி விடுங்கள். அது எங்கள் வேலையை மிகவும் குறைக்கும்!” என்றார்.

செல்வம் திகைத்தான். யமுனா போலீசில் என்ன சொல்லியிருப்பாள் என்று தெரியாமல் அவனால் எப்படி நடந்துகொள்வதென்று புரியவில்லை. “என் மனைவி….என்ன சொன்னாள்?...” என்று தடுமாறினான்.

“அவர்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்” என்று வழக்கமான போலீஸ் உத்தியை வெளிப்படுத்திய கண்ணன், “நடந்த உண்மையை நீங்கள் சொல்லி விடுவது நல்லது” என்று சற்றே மிரட்டும் குரலில் சொன்னார்.

“எனக்கு...எனக்கு...ஒண்ணும்  தெரியாது..” என்று முனகினான் செல்வம்.

இன்ஸ்பெக்டரின் கண்கள் சுவற்றில் மாட்டியிருந்த ‘லத்தி’ மீது பதிந்தது,  செல்வத்தை மேலும் பதற்றப்படுத்தியது. அடித்து விடுவாரோ? முட்டியில் லத்தி பட்டால் எலும்பு முறிந்துவிடுமாமே!

“சார்… நடந்தது இதுதான் சார்! செம்பகத்தின் புருஷன் என்னை மிரட்டினான்...ஆனால் அவனை அதற்கு முன்பு நான் பார்த்தது கூடக்  கிடையாது” என்று பயம் கலந்த குரலில் செல்வம் சொல்லி முடித்தான்.

“புஷ்பா, பார்த்தாயா, விடை கிடைத்துவிட்டது!” என்று வெற்றிப் புன்னகையோடு கண்ணன் நாற்காலியைவிட்டு எழுந்தார். செல்வத்தின் தோளைத் தொட்டார். அதிலேயே அவன் உடல் வியர்த்துவிட்டது.

“பயப்படாதீர்கள் செல்வம்! எனக்குப் புரிந்துவிட்டது. உங்கள் மனைவிக்குத் தெரியாமல் ‘அதை’ நீங்கள் செம்பகத்திற்குக் கொடுத்திருக்கிறீர்கள். அவள் கணவனுக்கு அது தெரிந்துவிட்டது. அதனால்தான் உங்களை மிரட்டி இருக்கிறான். இல்லையா?”

‘எதை?’ என்று திகைப்புடன் கேட்டான் செல்வம்.

“அதை விடுங்கள். செம்பகம் என்பவள் யார்? எத்தனை வயது? அவளுக்கும் உங்களுக்கும் எத்தனை காலமாகப் பழக்கம்? உங்கள் மனைவிக்கு இது தெரியுமா? உம் ...சொல்லிவிடுங்கள்….” என்று அவனை ஆழமாகப் பார்த்தார் கண்ணன்.

“அய்யய்யோ, அவள் பக்கத்து வீட்டு வக்கீல் மாமியிடம் வீட்டுவேலை செய்பவள். இளம் வயதுதான். ஆனால் அவளுக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லை. இது சத்தியம். வேண்டுமானால் என் மனைவியைக் கேளுங்கள்” என்று உறுதியாகக் கூறினான் செல்வம்.

“பார்த்தாயா புஷ்பா! என்னமாய்ப்  பொய் சொல்கிறார் இந்த ஆசாமி! அவளுக்கும் இவருக்கும் பழக்கமே இல்லையாம். ஆனால் பெண்டாட்டியின் நெக்லஸை அவளுக்குக்  காதல்பரிசாகக்  கொடுத்தாராம்!” என்று கிண்டலாகக் கூறியபடி செல்வத்தின் கைகளை முறுக்குவதுபோல் இறுக்கினார் கண்ணன்.  

“என்னங்க இது புதுக் கதை? நான் எப்போது செம்பகத்துக்கு நெக்லஸைக் கொடுத்தேன்? சார், நான் கௌரவமான மத்திய அரசு ஊழியன்!” என்றான் செல்வம்.

“அப்படீன்னா நான் கௌரவமில்லாத மாநில அரசு ஊழியன். இல்லையா?” என்று உரத்த குரலில் சிரித்தார் கண்ணன். புஷ்பாவும் சிரித்தாள்.

“இருங்கள். என் மனைவியைக் கூப்பிடுகிறேன். நீங்களே பேசுங்கள்” என்று தன் அலைபேசியை அவரிடம் கொடுத்தான்.

“என்னங்க இவ்ளோ நேரம்? உங்க போனுக்காகக் காத்துக்கிட்டிருந்தேன்…” என்று கோபமும் சோகமுமாகப் பேசினாள் யமுனா.

அதற்குள் இன்ஸ்பெக்டர், “மேடம், உங்கள் பிரச்சினை ‘சால்வ்’ ஆகிவிட்டது. உங்கள் கணவர்தான் நெக்லஸை உங்களுக்குத் தெரியாமல் செம்பகத்திற்குக்  கொடுத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. அதனால் இவரை இப்போது அனுப்பிவிடுகிறேன். நாளை காலை நானே அங்குவந்து விசாரணை நடத்துவேன். செம்பகம், அவள் புருஷன் இரண்டு பேரையும் உங்கள் வீட்டிலேயே வந்திருக்கச் சொல்லுங்கள். சரியா?” என்றார்.

பிறகு போனை ஆப் செய்து செல்வத்திடம் கொடுத்தார். “ஏன் சார், நீங்களெல்லாம் மனிதர்கள் தானா? நாங்கள் கொளுத்தும் வெய்யிலில் நின்றுகொண்டு, உயிரைக் கொடுத்து கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் காதலிக்காக சொந்த வீட்டிலேயே நகைத்திருட்டில் ஈடுபடுகிறீர்கள். இது நியாயமா?” என்று செல்வத்தின் இரண்டு தோள்களையும் முரட்டுத்தனமாக அழுத்தினார்.

இன்னும் கொஞ்சம் அழுத்தியிருந்தால் செல்வம் அழுதே இருப்பான். அதற்குள் புஷ்பா வந்து, “சார், நீங்கள் போகலாம்”  என்றாள். வண்டியைக் கிளப்பினான்.

தூக்குமேடைக்குப் போகும் மரணதண்டனைக் கைதி மாதிரி வீட்டுக்குள் நுழைந்தான் செல்வம்.

(தொடரும்). (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்