செவ்வாய், மே 12, 2020

பொன்னித்தீவு -6


பொன்னித்தீவு - 6

-இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(6)  பார்வதி பார்வதி

செங்கல்பட்டைத்  தனி மாவட்டமாக அறிவித்தது முதலே நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெறலாயிற்று. பல இடங்களில் சிறு சிறு பாலங்கள் கட்ட வேண்டி இருந்ததால் அங்கெல்லாம் வாகனங்கள் வேகத்தைக் குறைத்தும் கூட்டியும் செல்லவேண்டியிருந்தது. யமுனாவின் கார்  புழுதிப் படலத்திற்கு இடையில் செங்கல்பட்டை அடைந்தது.

அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் கம்பன் தெருவில் இருந்தது பரமசிவத்தின் வீடு. ஆம்புலன்ஸ் வண்டிகள் ஏராளமாக நின்றிருந்தன. டாக்டர்களும் நர்சுகளும் பிற மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவை முன்னிட்டு விசேஷ உடையும் முக கவசமும் அணிந்து இருந்தார்கள். கம்பன் தெருவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கூட முன்னெச்சரிக்கையாகத் தெருவின் இரண்டு பக்கமும் தடுப்பான்கள் அமைக்கப்பட்டிருந்ததால், தெருமுனையில் காரை நிறுத்திவிட்டு யமுனா தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் பிறந்த இரண்டாவது வருடத்தில் வாங்கிய வீடு. கால் நூற்றாண்டு காலத்தில் வீட்டைச் சுற்றிலும் ஏழெட்டு தென்னை மரங்களும் பாதாம் மரங்களும் ஒரு நெல்லிக்காய் மரமும் வாழை மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. மல்லிகை, முல்லை, செம்பருத்தி, வெட்சிப்பூ என்று பலவிதமான பூச்செடிகள் கண்ணுக்கு அழகாகக் காட்சியளித்தன. யமுனா குழந்தையாக இருந்தபொழுது அழுது அடம்பிடித்து வாங்கிய ஊஞ்சல் மொட்டை மாடியில் மிக லேசாக அசைந்து கொண்டிருந்தது.

"அம்மா" என்று வாஞ்சையுடன் அழைத்தபடி கதவைத் தட்டினாள் யமுனா. மகளின் எதிர்பாராத வரவினால் பார்வதிக்கு அளவில்லாத ஆனந்தம்.  "வாடா கண்ணு, மாப்பிள்ளை வரலியாம்மா?" என்று யமுனாவைக் கட்டிக்கொண்டாள்.

"அதானே, வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வராதவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! அவருக்கு ஆபீஸ் வேலை கிடையாதா? ஒர்க் ஃப்ரம் ஹோம்!" என்றாள் யமுனா.

அலைபேசியை எடுத்து, தான் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அப்பாவிடம் தெரிவித்தாள்.

"யமுனா, நீ இரண்டு நாள் இருந்து அம்மாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவளுக்கு உள்ளுக்குள் என்னமோ செய்கிறது. சொல்லத் தெரியவில்லை. நீதான் சரியாக விசாரிக்க வேண்டும். எதற்கும் நம்ம பத்மா டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் விவரமாகத் தெரிந்து கொள்" என்ற பரமசிவம் மனைவியிடமும் பேசினார்:

"பார்வதி, குழந்தை இரண்டு நாள் உன்னோடு இருக்க வேண்டும் என்று ஆசையோடு வந்திருக்கிறாள். அவளுக்குப் பிடித்ததைச் சமைத்துப்போடு. முக்கியமாக அவளை அழைத்துக்கொண்டு பத்மா டாக்டரிடம்  போய்விட்டு வா. புரிந்ததா?"

பார்வதி மனதிலும் அதே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. வெகு நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரவேண்டுமே என்று மனம் ஆர்வத்தால் துடித்தது. பத்மா டாக்டர் கைராசியானவள். யமுனாவுக்கு பிரசவம் பார்த்ததும் அவள் தான்.

"கைகால் கழுவிக் கொண்டு வாம்மா. உன் கையால் இந்த மல்லிகைப் பூவை சுவாமிக்குச் சார்த்து" என்றாள் பார்வதி.

சாப்பிட்டு முடித்தவுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடிக்குச் சென்றாள் யமுனா. அவள் குழந்தையாக இருந்தபொழுது அந்தத் தெருவில் மொத்தம் இரண்டே வீடுகள்தான். மருத்துவமனையும் அப்போது வந்திருக்கவில்லை. இப்போதோ ஏராளமான கட்டிடங்கள். கடைகள், வியாபார நிறுவனங்கள், டாக்டர்களின் கிளினிக்குகள் தென்பட்டன.

**
டாக்டர் பத்மாவுக்கு அறுபது வயது என்று யாரும் கூறிவிட முடியாது. ஆரோக்கியமான உடல். தலையில் இருந்த சில வெள்ளியிழைகளும் அவளுடைய கம்பீரத்துக்கு மெருகூட்டின. பெண்களின் நோய்க்கான நிபுணராக இருந்தாலும் அவளிடம் வருவதெல்லாம் பெரும்பாலும் பிரசவ கேஸ்கள் தான். காரணமின்றி யாருக்கும் சிசேரியன் செய்வதில்லை என்று உறுதியாக இருந்ததால் பத்மாவுக்கு ஊரில் நல்ல பெயர்.

"வாங்க பார்வதியம்மா! இது உங்க பெண்தானே! சென்னையில் தானே இருக்கிறாள்?" என்று அன்போடு விசாரித்தாள் பத்மா.

"ஆமாம் டாக்டர், நீங்கதான் இவளுக்கும் பிரசவம் பார்த்தீர்கள்! எங்கள் ஒரே பெண். தற்செயலாக வந்தாள். எதற்கும் இருக்கட்டுமே என்று உங்களிடம் அழைத்து வந்தேன்" என்றாள் பார்வதி.

"ரொம்ப சந்தோஷம். எப்படியும் என்னிடம் வர வேண்டியவள் தானே! கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் இருக்குமா?"

"ஆமாம் டாக்டர்! ஆனால் ஏனோ இரண்டுபேரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டாக இருக்கிறார்கள். நாம் சொன்னால் கேட்பார்களா? அதது காலா காலத்தில் நடக்க வேண்டாமா?" என்று யமுனாவைப் பார்த்தாள் பார்வதி.

யமுனாவுக்கு திடுக்கென்றது. "டாக்டர் நான் வந்தது அம்மாவுக்காகத் தான். அவங்களுக்கு ஏதோ சுகவீனம் இருப்பதாக அப்பா நினைக்கிறார். அம்மா வாய் விட்டுப் பேசுவதில்லை. தயவுசெய்து அம்மாவை நன்றாக டெஸ்ட் செய்யவேண்டும். எனக்கு ஒன்றுமில்லை" என்றாள்.

"போடி முட்டாள்" என்றாள் பார்வதி. "நான் கல்லுகுண்டு மாதிரி இருக்கிறேன். எனக்கு ஒரு குறையும் இல்லை. கூடிய சீக்கிரம் ஒரு பேரக் குழந்தையைப் பார்த்து விட்டால் போதும் அது ஒன்றுதான் என் ஆசை" என்றாள்.

கலகலவென்று  சிரித்தாள் பத்மா. "சரிதான், எனக்கு இன்று இரண்டு மடங்கு பீஸ் கிடைக்கப்போகிறது. இருவரையும் டெஸ்ட் செய்து விடுகிறேன்" என்று முதலில் பார்வதியை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.

சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தவள், "ஒன்றும் பெரிதாக இல்லை. மெனோபாஸ் பிரச்சினைதான். அதனால் அடிக்கடி சோர்வும் எரிச்சலும் உண்டாகும். அம்மாவிடம் கனிவாக இருக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லி வை" என்றாள்.

அதைக் கேட்டு முகம் மலர்ந்த பார்வதி, "டாக்டர், இவளையும் பார்த்துவிட்டு நல்ல செய்தி சொன்னால் உங்கள் வாய்க்குச் சர்க்கரை போடுவேன்" என்றாள்.

"கொஞ்சமாகப் போடுங்கள். ஏனென்றால் எனக்கு ஷுகர் இருக்கிறது" என்று சிரித்தபடியே யமுனாவை உள்ளே அழைத்துப்போனாள் பத்மா.

சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் வெளியே வந்தபொழுது யமுனாவின் முகத்தில் நாணத்தின் செம்மை படர்ந்திருந்தது.

"வாழ்த்துக்கள் பார்வதியம்மா!"

"ரொம்ப நன்றி டாக்டர்! இரண்டு நாட்களாகவே நல்ல சகுனமாக இருந்தது. உண்மையில் இவள் இன்று வரப்போவதே எனக்குத்  தெரியாது. நல்ல வேளை, என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். யமுனா, கங்கிராஜுலேசன்ஸ்! டாக்டரிடம் எல்லா விஷயமும் கேட்டுக்கொள். இனி மாதாமாதம் இவரிடம் தான் செக்கப்புக்கு வரவேண்டும்!" என்றாள் பார்வதி.

கணவனுக்கு போன் செய்தாள். "ரொம்ப சந்தோஷமான செய்தி! யமுனா உண்டாயிருக்கிறாள் என்று பத்மா டாக்டர் உறுதி செய்தார். அந்தப் பழனி முருகன்  கண் திறந்துவிட்டான். நீங்கள் சென்னையிலேயே இருங்கள். நான் நாளை மறுநாள் காலை பத்மாவை அழைத்துக்கொண்டு வருகிறேன். அதுவரை மாப்பிள்ளையிடம் எதுவும் கூற வேண்டாம். சர்ப்ரைசாக இருக்கட்டும்" என்றாள் பார்வதி.

ஆனால் நாம் நினைப்பதுபோல் எல்லாம் நடந்து விடுகிறதா? நாளை மறுநாளில் இருந்து சென்னைக்குள் வெளியூர் வண்டி வாகனங்களை அனுமதிக்கப்போவதில்லை என்று சென்னை ஆட்சியர் டிவியில் பேசினார். ஆகவே அவசர அவசரமாக அன்று இரவே மகளுடன் சென்னைக்குக் கிளம்பினாள் பார்வதி.

யமுனாவுக்கோ அந்த சந்தோஷச் செய்தியைத் தன் கணவனிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என்று கை துறுதுறுத்து. ஆனால் பார்வதி தடுத்து விட்டாள்.

"இதெல்லாம் நேரில் சொன்னால்தான் சரியாக இருக்கும்" என்று அலைபேசியைப் பிடுங்கிவைத்துக்கொண்டாள்.

(தொடரும்). (கன்னித் தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

10 கருத்துகள்:

  1. இன்றுதான் தொடரில் சேர்ந்தேன். விறுவிறுப்பாகப்போகிறது. தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  2. சந்தோஷச் செய்தி பகிர்வதில் சர்ப்ரைஸ் (வாசிக்கும் எங்களுக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மக்கள் எல்லாரும் நல்ல செய்தியைத்தானே எதிர்பார்க்கிறார்கள்!

      நீக்கு
  3. சந்தோஷச் செய்தி - நடக்கட்டும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஒத்திப்போடும்போதே அதில் புதிய பிரச்னை வரும் என்று தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  5. கதையில் விரு விருப்பு சற்று குறௌவாக உள்ளதே.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா21 மே, 2020 அன்று AM 11:51

    இந்த அம்மாக்களே இப்படித்தான்..!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா21 மே, 2020 அன்று AM 11:53

    இந்த அம்மாக்களே இப்படித்தான்!

    S.PARASURAMAN
    ANNA NAGAR

    பதிலளிநீக்கு
  8. யமுனா சோஷியல் டிஸ்டன்சிங் கடை பிடிக்க வில்லையா

    பதிலளிநீக்கு