வெள்ளி, செப்டம்பர் 16, 2022

சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும் -

சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும்

-          - இராய செல்லப்பா

1910 நவம்பர் 6 ஆம் தேதி பிறந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். 1987இல் மறைந்தவர். மகாகவி பாரதியாரைப் போலவே இவரது நினவு நாளும்  செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தான்! 

சாண்டில்யனோடு எனக்கிருந்த நட்புறவு பற்றிய கட்டுரை இது. 


இப்போது சிட்டி யூனியன் வங்கி என்கிறார்கள் (CUB). நான் பணியில் சேர்ந்த 1974 மே மாதம் 19 ஆம் தேதி அதற்குக் கும்பகோணம் சிட்டி  யூனியன் வங்கி என்று பெயர் (KCUB).

சென்னை தி.நகரில், சிவா விஷ்ணு கோயிலின் எதிர்ப்புறமுள்ள  மகாலட்சுமி தெருவில், 5 ஆம் எண் முகவரியில் இயங்கிவந்த அவ்வங்கியின் தி.நகர் கிளையில் புரொபேஷனரி ஆபீசராக நான் சேர்ந்தேன் (1974 மே மாதம்). சுமார் ஒன்றரை ஆண்டுகள் அங்கே இருந்தேன். (பின்னர் கடலூரில் புதிய கிளை திறக்க அனுப்பிவிட்டார்கள்).

காலை எட்டு மணிக்கே தொடங்கிவிடும் வங்கி அது.

காலையில் வரும் முதல் வாடிக்கையாளர்களில் பலர் அன்று பெரும்புள்ளிகள். இன்றும் அவர்களின் மூன்றாம் தலைமுறையினர் பெரும்புள்ளிகளாகவே உள்ளனர். நினைவுக்கு வரும் ஒரு சில பெயர்கள்: மகாராஜபுரம் சந்தானம், கிருஷ்ணகான சபா யக்ஞராமன், கீதா ஹோட்டல் (மற்றும் பின்னாளில் ஹோட்டல் காஞ்சி) உரிமையாளர்களான ஜெயராமய்யர்- கணேசன் சகோதரர்கள், நகை வணிகர்களான நாதெள்ள குடும்பத்தினர். இவர்களுடன் மிகப்பெரும் புகழுடன் விளங்கிய சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

“கண்ணன் ஒரு கைக்குழந்தை” என்று பத்ரகாளியில் பாடிய இளம் நடிகை ராணி சந்திராவை என்னால் மறக்கமுடியாது. தன் தாயாருடன் அடிக்கடி வந்து ஏதேனும் ஒரு கேரளத்து கிராம வங்கியின் மீது வரையப்பட்ட காசோலையை – பெரும்பாலும் ரூ.25,000 என்றே இருக்கும் – செலான் எழுதி கலெக்ஷனுக்குப் போடுவார். அவரை அறிமுகப்படுத்தியவர் சாண்டில்யன் என்றுதான் ஞாபகம். பாவம், அந்த இளம்பெண் ஒரு விமான விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார்.  

காதல் கவிதைகளில் பைரனும் கண்ணதாசனும் போல, அக்காலத்தில் சரித்திரக் கதைகளில் வீரமும் சிருங்காரமும் கலந்து கொடிகட்டிப் பறந்தவர் சாண்டில்யன். அவரை, தலை நரைத்த முதியவராக- பாஷ்யம் அய்யங்காராக- வங்கியில் பார்த்தபொழுது என்னால் நம்பவே முடியவில்லை. அதற்காக அவரை ஒரு நா.பா. போல நீண்ட கூந்தலராகவோ, கோவி. மணிசேகரனைப் போல நீண்ட மீசையராகவோ நான் கற்பனை செய்திருக்கவில்லை. ஆறடி உயரம் அல்லது பார்த்த உடனே பெண்களைக் கவரும் எழில்முகம் அல்லது குறைந்த பட்சமாகத் தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். தான் வந்த வேலையை முடித்து, அவர் போனபிறகு, என்னைப் போலவே வியப்பு மாறாமல் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளரான ஓர் அய்யங்கார் மாமி, “என்னடா கண்ணா! கலிகாலம்! இந்தத் தொண்டு கிழமா இவ்வளவு கிளுகிளுப்பாக எழுதுகிறது?” என்று வாயெல்லாம் பல்லானார்.

குமுதத்தில் அவர் தொடர்ந்து சரித்திர நாவல்கள் எழுதிவந்தார். குமுதத்தின் உயர்ந்த சர்க்குலேஷனுக்கே அவருடைய யவனராணி, கடல்புறா, ஜலதீபம் போன்ற அற்புதமான தொடர்கள்தான் காரணம் என்றால் மிகையாகாது. 

என்னைப் பொறுத்தவரையில், வாராவாரம் குமுதம் வந்தவுடன், அவருடைய தொடரின் கடைசிப் பக்கத்தை முதலில் படித்துவிடுவேன். அதுதான் அந்த அத்தியாயத்திலேயே முக்கியமானதும், இளைஞர்களைக் கவரும் கிளுகிளுப்பான உரையாடல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அடுத்து என்ன வருமோ என்று சிந்திக்கத் தொடங்கும்போது தொடரும் போட்டுவிடுவார்.  

அவ்வளவு தலைசிறந்த, இலட்சக்கணக்கான வாசகர்களின் கனவு எழுத்தாளராகத் திகழ்ந்த ஒருவர், என் மேசைக்கெதிரே அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியமே.

அன்றும் சரி, இன்றும் சரி, அந்த வங்கியில் வாடிக்கையாளர் என்றால் மகாராஜாவைப் போலத்தான் நடத்துவார்கள். அதிலும் மகாராஜாக்களைப் படைக்கிறவரே வாடிக்கையாளரானால் சொல்லவும் வேண்டுமா?


சாண்டில்யன் அவர்கள் தானாக எழுந்துபோகும் வரையில் அவரைச் சுற்றி நான்கு பேராவது நின்றுகொண்டிருப்போம். அவரை முன்னிட்டு கிளை மேலாளர் எங்களுக்கும் கீரை வடை ஆர்டர் செய்வதுண்டு. சில நாடகள் சாண்டில்யனே தன் செலவில் காப்பி (மட்டும்!) ஆர்டர் செய்வதும் உண்டு.

குறிப்பிட்டதொரு வார இதழ்மீது பற்றி அவருக்கு எப்போதுமே  அதிருப்தி இருந்தது. அதிலும், தான் உடல் நலமின்றிப் படுத்திருந்தபோது, ஓர் உதவி ஆசிரியர் இவருடைய பெயரிலேயே அந்த வாரத்தின் அத்தியாயத்தை எழுதிவிட்ட அநீதியை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெவ்வேறு பெயர்களில் அந்த ஆசாமி தானே எழுதிப் பத்திரிகையை நிரப்பிவிடுகிறார், அதனால் மற்ற எழுத்தாளர்களின் வயிற்றில் அடிக்கிறார் என்று கோபப்படுவார் சாண்டில்யன்.

ஆனால் நான் இங்கே சொல்ல விரும்புவது அவருடைய நகைச்சுவை மிகுந்த ஆளுமையைப் பற்றித்தான்.

அந்த வருடம் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு வங்கி திறந்தபோது, காலை எட்டு மணிக்குக் கதவைத் திறப்பதற்கு நான் வளாகத்தினுள் நுழைந்தால், சுமார் முப்பது நாற்பது நகரசபை துப்புரவு ஊழியர்கள் தங்கள் துடைப்பம், முறம் போன்ற கருவிகளோடு என்னை எதிர்கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களை நகரச் சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தேன். மற்ற ஊழியர்கள் இனிமேல்தான் வருவார்கள். அதற்குள் இந்த ஆசாமிகள் அனைவரும் திபுதிபுவென்று உள்ளே நுழைந்துவிட்டனர்.

“தயவு செய்து வெளியே போயிருங்கள். வங்கி திறக்க இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கிறது” என்றேன் சற்றே உரத்த குரலில்.

“அதுதான் திறந்து விட்டீர்களே!” என்றாள் ஒரு பெண்மணி, விகற்பமில்லாமல். யாரும் இம்மி கூட நகரவில்லை.

சக ஊழியர்கள் வருகிறார்களா என்று வாசலைப் பார்த்தேன். இல்லை.

அதற்குள் அவர்களில் வயதான ஓர் ஊழியர் என்னிடம் வந்து ஒரு காசோலையை நீட்டினார். ஒரே ஒரு ரூபாய்க்கான காசோலை! சாண்டில்யன் கொடுத்தது!

உடனே மற்ற எல்லாரும் முட்டி மோதிக்கொண்டு ஆளுக்கொரு காசோலையை நீட்டினார்கள். எல்லாமே ஒரு ரூபாய் காசோலைதான்! எல்லாமே சாண்டில்யன் கொடுத்ததுதான்!

எனக்கு ஒருவாறு விஷயம் புரிந்தது. துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பொங்கல் இனாம் கொடுத்திருக்கிறார் சரித்திர நாவலாசிரியர்! அந்த ஒற்றை ரூபாயைப் பணமாகவே கொடுத்திருக்கக் கூடாதா?

எல்லாக் காசோலைகளையும் பெற்றுக்கொண்டு அவர்களை வெளியில் உட்காரச் சொன்னேன். அதற்குள் காசாளரும் வந்துவிட்டார். பிற நான்கு குமாஸ்தாக்களும் வந்துவிட்டனர். அதை விட ஆச்சரியம்,  ராஜ கம்பீரமாக சாண்டில்யனே நேரில் வந்ததுதான்!

“என்னப்பா, எல்லாரும் பாங்கில் பணம் வாங்கிக்கொண்டீர்களா?” என்று அசாத்தியப் பிரேமையுடன் அவர் கேட்டதும், “அரை மணி நேரமா காத்திருக்கோம் சாமி!” என்று போட்டுக்கொடுத்தார்கள் அவர்கள்.

காசாளருக்கு மிகவும் கோபம். ஒரு ரூபாய், ஒரு ரூபாய், ஒரு ரூபாய் என்று முப்பது தடவை மூன்று இடங்களில் பற்று வைக்கவேண்டுமே!

சாண்டில்யன் என்னைப் பார்த்து அர்த்த புஷ்டியோடு சிரித்தார். “கல்யாணத்திற்குப் புது ஒரு ரூபாய் கட்டு வேண்டுமென்று அன்று ஒருவர் கேட்டபோது சுலபத்தில் கொடுத்தீர்களா?” என்றார்.

ஆனால் மற்றபடி அவரோடு பழகியதில் அவர் குழந்தை உள்ளம் கொண்டவராகவே விளங்கினார் என்று என்னால் சொல்ல முடியும்.

***

ஒருமுறை தி.நகரில் லேவாதேவித் தொழில் நடத்தி வந்த ராஜஸ்தானத்து செல்வந்தரான மார்வாடி ஒருவர், சில மாதங்களுக்குத் தன் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினார். ஆனால் தன்னிடமிருந்த  நூற்றுக்கும் மேற்பட்ட தங்க பிஸ்கட்டுகளை எந்த வங்கியில் பாதுகாப்பாக வைப்பதென்று அவருக்குக் குழப்பமாயிருந்தது. அவர் கணக்கு வைத்திருந்த வங்கியில் அப்போது லாக்கர் வசதி இல்லை. முன்பின் தெரியாத வேறு வங்கிக்குச் செல்ல அவருக்குத் தயக்கமாக இருந்தது. விஷயம் (அப்போது அமலில் இருந்த) தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டால்? கணக்குக் காட்டாத பணமல்லவா அது!

ஆகவே தனது நண்பரான சாண்டில்யனிடம் ஆலோசனை கேட்டார். கிடைத்தது. என்ன ஆலோசனை?

“இங்க பாருய்யா, உனக்கு எந்த பாங்க்கிலும் லாக்கர் கிடைக்காது. நான் சொல்கிறபடி செய்கிறாயா?”

செய்கிறேன் என்றார் மார்வாடி.

“பாங்கில் நகைகளை அடகு வைக்கலாம். தங்க பிஸ்கட்டுகளை வைக்க முடியாது. ஆகவே உன்னிடம் இருக்கும் பிஸ்கட்டுகளைக் கொண்டு எதாவது பெரிய நகை ஒன்றைச செய்துகொள். அதைக்கொண்டுபோய் பாங்கில் அடகு வைக்கலாம். நீ திரும்பி வந்ததும் மீட்டுக்கொள்ளலாம். சரியா?” என்றார் சாண்டில்யன்.

அவ்வளவு தங்கத்தை வைத்து என்ன மாதிரி நகையைச் செய்வதென்று மார்வாடிக்குப் புரியவில்லை. அதற்கும் சாண்டில்யனே ஆலோசனை சொன்னார்.

“இங்க பாருய்யா, என்னோட சரித்திர நாவலில் வருவது போல ஒரு கத்தியைச் செய்துகொள்ளேன்! உங்கள் ராஜபுதன ராஜாக்களின் கத்திகளை நீ பார்த்ததில்லையா? அதுபோல நான்கு அடியோ, ஐந்து அடியோ, ஏன் ஆறடி தான் இருக்கட்டுமே! மேலே கீழே ஒன்றிரண்டு வைரங்களையும் வைத்துவிடேன்! பிறகு என்னிடம் வா. என்னுடைய பாங்க்கில் உனக்குக் கடன் ஏற்பாடு செய்து தருகிறேன்!” என்றார்.

அதையே வேதவாக்காகக் கொண்ட நமது செல்வந்தர், நாளும் கோளும் நிறைந்ததொரு நன்னாளில் சாண்டில்யன் முன்னால் வர, தன்னுடைய மகன்கள் இருவரும் ஒரு நீண்ட கனமான பெட்டியுடன் பின்னால் வர, மந்தகாசப் புன்னகையோடு எங்கள் வங்கிக்குள் நுழைந்தார்.

எங்கள் தி.நகர் கிளையில் அப்போது நகைக்கடன் வழங்கும் வசதி தொடங்கப்படவில்லை. அதனால் என்ன, சேர்மனிடம் அனுமதி கேட்டால் போயிற்று. அனுமதி கிடைத்தது. ஆனால் வட்டி விகிதம் 15 சதத்திற்குக் குறையாது என்று கூறப்பட்டது. மார்வாடி நண்பருக்கு இதெல்லாம் ஒரு வட்டியா! அவர் வாங்குவது மூன்று வட்டி அல்லவா? சரியென்று ஒப்புக்கொண்டார்.

கடன் தொகை பத்து லட்சமோ பதினைந்து லட்சமோ, நினைவில்லை. வங்கியில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நல்ல செக்யூரிட்டிக்கு பெரிய கடன் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததே என்று.

அதன் பிறகுதான் வந்தது சிக்கல். வழக்கமான நகைகளாய் இருந்தால் சிறிய துணிப்பைகளில் வைத்துக் கட்டி சீல் வைத்து அவற்றை கனமான இரும்புப் பெட்டியில் வைப்போம். ஆனால் இதுவோ ஐந்தடிக்கும் மேலான நீளம் கொண்ட, வளைந்த, தங்கக் கத்தியாயிற்றே! இதை எதனுள் பாதுகாப்பாக வைப்பது?

பலத்த ஆலோசனைக்குப் பிறகு, டபுள் லாக் வசதியுள்ள புதிய கோத்ரெஜ் பீரோ ஒன்று வாங்கி, அதனுள்ளிருக்கும் தட்டுகளை எடுத்துவிட்டு, கத்தியை அதனுடைய பெட்டியுடனேயே நிற்கவைத்துப் பூட்டிவிடுவது என்று முடிவானது. மேற்படி சடங்குகள் முடிந்து, லக்ஷக் கணக்கான ரொக்கத்தையும் தன்னுடைய சூட்கேசில் எடுத்துக்கொண்டு மார்வாடியும் மகன்களும் கிளம்பியபோது நம் சாண்டில்யன் அவர்கள் பூத்த வெற்றிப் புன்னகை இருக்கிறதே, அடடா, அடடா!

ஆனால் அந்தப் புன்னகையின் இன்னொரு அர்த்தம் இரண்டு நாட்கள் ஆனபிறகுதான் தெரிந்தது. அன்று, மார்வாடி தான் கொண்டுபோன அதே பணத்தைத் திருப்பிக் கொண்டுவந்தார். கடன் கணக்கில் வெறும் ஐயாயிரம் மட்டும் பாக்கியாக இருக்கட்டும், மீதியைத் திருப்பிக் கட்டிவிடுகிறேன் என்றார்,  பைனான்சியர்களுக்கே உரிய விருப்பு வெறுப்பற்ற குரலில். அது சாண்டில்யன் கொடுத்த ஆலோசனையாகத்தான் இருக்கும் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. நண்பர்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்பவர் அல்லவா அவர்!

கிளை மேலாளருக்கு துக்கம் பீறிட்டது. பதினைந்து லக்ஷம் கடனுக்கு 15 சதம் வட்டி வரும், பேலன்ஸ் ஷீட்டில் நல்ல லாபம் காட்டலாம் என்று இருந்தவருக்கு, அது வெறும் ஐயாயிரமாகச் சுருங்கிப்போனால் எப்படி இருக்கும்! ஆனால் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தினால் அபராதம் விதிக்கும் சட்டம் அன்று இல்லாததால் மார்வாடியாரின் எண்ணத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. கோத்ரெஜ் பீரோ விலைக்குக் கூட அந்த வட்டி காணாது.

சிறிது நேரத்தில் நமது சரித்திர நாவலாசிரியர் தற்செயலாக வருவதுபோல் உள்ளே வந்தார். மார்வாடியின் நன்றிப் புன்னகையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். இப்போது எங்களைப் பார்த்து அதே வெற்றிப் புன்னகையைப் புரிந்தார். நாங்கள் அசடு வழிந்தோம்!

இப்போதும் தி.நகர் பக்கம் போனால் சாண்டில்யனும் அந்த ராஜபுதனத்து வாளும் நினைவில் வராமல் இருப்பதில்லை.

('குவிகம்' 100 ஆவது இதழில் வெளியான கட்டுரை).

**** 

சாண்டில்யன் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 2010இல் தினமணி வாரமலரில் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் எழுதிய கட்டுரையிலிருந்து சில தகவல்கள்:

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர். 1910- நவம்பர் 6- ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருக்கோவிலூர். இயற்பெயர் எஸ்.பாஷ்யம்.

'அமுதசுரபி' விக்கிரமன்

இன்டர்மீடியட் படித்தவர். அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதனால்  சென்னை வந்த அவருக்கு, அறிஞர் வெ.சாமிநாத சர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர். இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அந்நாளில், 'திராவிடன்' இதழாசிரியர் தோழர் சுப்பிரமணியம் நண்பரானார். அவருடைய 'திராவிடன்' இதழில் 'சாந்தசீலன்' என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையைப் படித்த கல்கி, தான் ஆசிரியராக இருந்த 'ஆனந்தவிகடனில்' எழுத வற்புறுத்தினார். சாமிநாத சர்மா ஆசிரியராக இருந்த 'நவசக்தி'யிலும் சாண்டில்யனின் கட்டுரைகள் வெளிவந்தன.

சாண்டில்யன் எழுதிய 'பலாத்காரம்' என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில், 'புரட்சிப்பெண்' என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது.

சாண்டில்யனுக்குத் தன்னம்பிக்கை அதிகம். ''ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று, சாண்டில்யனே ஒருமுறை கூறியிருக்கிறார்.

சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார். சாண்டில்யன், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த 'மரியாதை'யை சுவைபட விவரித்து 'ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில் வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை' உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.

செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது. சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது.

1937-இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டிகண்டு எழுதினார்.  சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. பின்னர் சில கருத்துத் வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவியே தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி 'ஹிந்துஸ்தான்' வார இதழில் சேர்ந்தார்.

சாண்டில்யனுக்கு, சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. 'ஹிந்துஸ்தானி'ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. திரைப்படக் கலையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்று இயற்கையாகவே அவரிடம் இருந்த லட்சியம் அப்போது நிறைவேறியது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து, 'சினிமா பார்ப்பது கெடுதலா?' என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார்.

"எனக்கு சினிமாவைப் பற்றி ஏதாவது தெரிகிறது என்றால், அதற்குக் காரணமானவர்கள் பி.நாகிரெட்டி, வி.நாகையா, கே.ராம்நாத் ஆகியோர்தான். பதினான்கு ஆண்டுகள் சினிமா உலகில் இருந்தேன். அப்போதெல்லாம் கதையை எழுதக் குறைந்தது ஆறுமாதங்களாகும். கதையை எழுதினால் மட்டுமே போதாது. 'ஷூட்டிங் ஸ்கிரிப்ட்'  தயாரிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

வி.நாகையாவின் 'தியாகையா' வெற்றிக்கு சாண்டில்யன் பெரிதும் காரணமானவர். அந்தப் படம் வெளிவந்த பிறகு, புகழின் உச்சியில் இருக்கும்போதே திரைப்படத் துறையிலிருந்து விலகிவிட்டார்.

இளம் வயதிலிருந்தே அவரின் லட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது. பிரபலமாக விற்பனையாகும் பத்திரிகைக்கு ஆசிரியராக வேண்டுமென்பது. முதல் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது. இரண்டாவது எண்ணம் சொந்தமாகப் பத்திரிகை நடத்தி, வெற்றி பெறவில்லை.

சில காரணங்களால் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். 'ஞாயிறு மலர்' என்ற சிறப்புப் பகுதியின் பொறுப்பாளரானார். சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையிலும் எழுதினார். ' அமுதசுரபி'யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார்.

'சரித்திர நாவல் எழுதும் தாங்கள், வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்' என்று 'அமுதசுரபி' நிறுவனத்தார் கேட்டுக்கொண்டதால், 'ஜீவபூமி' என்ற சரித்திரத் தொடரை எழுதினார். ' ஜீவபூமி' தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

'ஜீவபூமி' தொடருக்குப் பிறகு, 'மலைவாசல்' என்ற தொடரை எழுதினார். 'மலைவாசல்' புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது. 

கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார். மொத்தம் 50 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில், 42 சரித்திர நாவல்கள். மற்றவை சமூக நாவல்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள். 

இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் கடல்புறா. மூன்று பாகங்கள்; மொத்தம் 2000 பக்கங்கள். (பொன்னியின் செல்வனை விடப் பெரியது). இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்டவர் எனப் பலமுகத் திறமைகளோடு முன்னேறிக் கொண்டிருந்த சாண்டில்யன், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் பெரும்பாடுபட்டு, 'தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை'த் தொடங்கினார். அது 'தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்' என்ற பெயரில் பிரபலமடைந்தது.

தனக்கு நியாயம் எனத் தோன்றாததை எதிர்த்து அவர் பேனா சீறிப்பாயும். நாடகமோ, திரைப்படமோ, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் போர்க்கொடி உயர்த்தத் தயங்கமாட்டார்.  நண்பர் என்றும் வேண்டியவர் என்றும் பார்க்க மாட்டார்.

சரித்திரக் கதை சக்கரவர்த்தி சாண்டில்யன், 'சீனத்துச் சிங்காரி' என்ற தொடரை 'குமுதம்' வார இதழில் எழுதத் தொடங்கியபோது, திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதினார். முடிவடையா கோபுரமாய் 'சீனத்துச் சிங்காரி' நின்றுவிட்டது.

சாண்டில்யனுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

***

18 கருத்துகள்:

  1. மிக சுவாரஸ்யமான விவரங்கள். அவர் தான்தான் சாண்டில்யன் என்பதை எப்படி அறிமுகம் செய்து கொண்டார் என்று விவரமாக எழுதி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. பாவம்  பேங்க் மேனேஜர். மேனேஜர் என்றாலும் அசடாகி விட்டார். சாண்டில்யன் எப்போதுமே மாற்றி யோசிப்பவர், கதைகளிலும். பொங்கல் இனாம்  மற்றும் தங்க வாள் போன்ற ஆலோசனைகளில் அவருடைய தனித்திறமை வெளிப்படுகிறது. 
    சுவாரசியமான கட்டுரை. 
     Jayakumar

    பதிலளிநீக்கு
  3. சாண்டில்யனின் புதினங்களில் பெரும்பாலானவற்றைப் படித்துள்ளேன். அவரை இவ்வாறாக அறிந்த வகையில் மகிழ்ந்தேன். இவ்வாறான அனுபவம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  4. திருமகள் சிறிபத்மநாதன்.
    அறியாத பல தகவல்களை சுவாரஸ்யமாக அறியத் தந்தமைக்கு வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் ரசித்த பதிவு. சாண்டில்யன் நாவல்களில், காதல் உரையாடல்கள் தவிர மற்ற எல்லாவற்றையும் படிப்பேன். அந்தப் பகுதி சப்ஸ்டன்ஸ் இல்லாத்து போலத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  6. படித்தேன் மகிழ்ந்தேன். ஒரு காலத்தில் சாண்டில்கள் கதைகளைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். நினைவலைகள் மனதில் வலம் வருகின்றன நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. சாண்டில்யனின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்! யவனராணி, கடல்புறா மன்னன் மகள் ,கன்னிமாடம் ,மலை வாசல் ,ஜீவ பூமி ,ராஜ முத்திரை, ஜலதீபம் போன்றவை மறக்க முடியாத காவியங்கள்! குமுதத்தைத் தொடர்ந்து படிக்க சாண்டில்யனின் கதைகள் ஒரு தூண்டுகோல்! அவரது நினைவுக் கட்டுரையும் குவிகத்தில் வந்த கட்டுரையும் சிறப்பாக உள்ளன! வாழ்த்துகள் செல்லப்பா சார்! - சுந்தரராஜன்

    பதிலளிநீக்கு
  8. அரியாத பல தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  9. இதன்பின் ஒரு ரூபாய் கட்டு யார் கேட்டாலும் கொடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  10. டைபீரியசின் கொடூரம்..இளநங்கை..முத்துக்குமரியயின் நளினம்..வீரபாண்டியனின் போர்தந்திரங்கள்..அகூதா..மஞ்சளழகி..ஓ..அருமை..

    பதிலளிநீக்கு
  11. அருமைத்தகவல்கள்

    பதிலளிநீக்கு
  12. சுவாரசியமான தகவல்கள் சார். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க்!! ஒரு ரூபாய்!! சிரித்துவிட்டேன். நல்ல ஐடியா !!

    எபியில் வியாழன் பதிவில் சினிமா பற்றி ராஜாஜியின் கருத்தை ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார் இங்கு சாண்டில்யன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுரை எழுதிய செய்தி!

    சாண்டில்யன் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கு நிறைய அனுபவங்கள், சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. Arumaiyana kuviyam pagirvu athuvum Tamil sarithira novelgalin music sooda arasan patri ariyatha thagavalgal. Mikka Nandi kuviyam katturai pagirvuku

    பதிலளிநீக்கு
  15. அரிய பல செய்திகள். சாண்டில்யணின் மறுபக்கம்

    பதிலளிநீக்கு
  16. சாண்டில்யனைப் பற்றி எழுதியதும் அவர் நினைவு வந்து, அவரது திண்டு திண்டான நாவல்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? புதிய பதிவைக் காணோமே... உங்களுக்கும் வீட்டினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. விரைவில் மீண்டும் எழுதுவேன் இனிய நண்பர்களே!

    பதிலளிநீக்கு