சனி, மே 23, 2020

பொன்னித்தீவு-12

பொன்னித்தீவு-12

 -இராய செல்லப்பா

(12) ஆச்சி ஆச்சி


சதுர அடிக்கு இரண்டு ரூபாய் வீதம் மாதாமாதம் மெயின்டனன்ஸ் சார்ஜ் வசூலிக்கும் குடியிருப்பு அது. காலை ஏழு மணி முதலே மெயின்டனன்ஸ் ஆபீஸ் என்ற பெயரில் ஒரு ஆபீஸ் இயங்கிக்கொண்டிருக்கும்.  நானூறு  சதுர அடியில் நான்கைந்து பேர் பணிபுரிந்து கொண்டு இருப்பார்கள். குடியிருப்பாளர்கள் அங்கிருந்த பெரிய ரிஜிஸ்டரில் தங்கள் குறைகளை எழுதி வைத்து விட்டுப்  போகலாம். வரிசைக் கிரமப்படி அந்தக் குறைகளை ஆள் அனுப்பிச் சரி செய்வார்கள். 

அந்த ஆபீஸில் ஆச்சிக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. காரணம் அவருடைய வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் அங்கு பணி புரிந்தார்கள். தான் செய்யும் இனிப்பு வகைகளையும், பரிசோதனை முயற்சியாகச் செய்து பார்க்கும் பிற தின்பண்டங்களையும் அவர்களுக்கு மிகுந்த அன்போடு கொடுப்பார் ஆச்சி. மறுநாள் அவர்கள் உடல்நலத்தோடு பணிக்கு வந்தார்களா என்று நேரில் வந்து தெரிந்தும் கொள்வார். அதன்மூலம் தொலைக்காட்சியில் நடிகைகள் தயாரித்துக்காட்டும் புதிய உணவுப்பண்டங்களைத் தானும் தயாரித்துப் பார்க்கும் தன்னம்பிக்கை மேலும் மேலும் அவருக்கு ஏற்பட்டது.  

முதல் நாள் இரவு ஹரிகோபால் குழுவினருடன் மொட்டை மாடிக்கு யமுனா சென்று வந்ததைக் கேள்விப்பட்ட ஆச்சி, விடிந்ததும் விடியாததுமாக மெயின்டனன்ஸ் ஆபீசுக்கு ஓடினார்.

ஆபீஸ் கதவு வழக்கம்போலவே அடையா நெடுங்கதவாகத் திறந்திருந்தது. முழுவேகத்தில் இரண்டு காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. மூன்று இளைஞர்கள் லுங்கி, பனியனோடு தரையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை விரித்து அதன்மேல் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பாமல் பூனைபோல நடந்து சென்று, கம்ப்ளெயிண்ட் ரிஜிஸ்டரைத் திறந்தார் ஆச்சி.

முதல் பக்க அட்டவணையில் எட்டாவது பொருளாகமொட்டை மாடிஇருந்தது. அந்தப் பக்கத்தைத் திருப்பினார்.

கடந்த நான்கு மாதங்களில் மொட்டை மாடிக்குப் போன ஒரே ஆள் யார் என்பதைத் தெரிந்து கொண்டார். சற்றே அதிர்ச்சியடைந்தார். "மொட்டை மாடியில் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை அகற்றிச் சுத்தப்படுத்த வேண்டும்" என்று அந்த நபர் எழுதிக் கையொப்பமிட்டு இருந்தார். அந்தப் புகார் இன்றுவரையும் தீர்க்கப்படாமல் இருந்தது. ஏனெனில் தீர்க்கப்பட்டிருந்தால் புகார் எண் சுழிக்கப்பட்டு சிவப்பு மசியால் 'குறை தீர்த்த தேதி' எழுதப்பட்டிருக்கும். 

அவசரமாக யமுனாவைச் சந்தித்தார் ஆச்சி. சந்திரனுக்கு ரீடைரக்ட் ஆகி வந்த கடிதத்தை அவன் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிந்தது. அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். கடந்த மூன்று நாட்களாகவே அவன் தன் அறைக்கு வரவில்லை. கொரோனா  கெடுபிடியில்  வேறு எங்கு போயிருப்பான்?

இந்தக் குடியிருப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் போனாலே அடுத்த மாவட்ட எல்லை வந்துவிடும். ஒருவேளை மாவட்ட எல்லையில் இவனைத் தடுத்துத்  தனிமைப்படுத்திவிட்டார்களோயாரிடம் கேட்பது?

"ஆல்பகோடாப் பழம் சாப்பிட்டாயா?" என்று சம்பிரதாயத்திற்காக யமுனாவிடம் கேட்டுவிட்டுத் தன் வீட்டுக்கு விரைந்தார் ஆச்சி.

சந்திரனை அலைபேசியில் அழைத்தார். மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அப்போது 'நீங்கள் அழைத்த நபர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற பதிவுச்செய்தி  வந்தது.

'ஒரு வேளை…?' என்று அலைபேசியில் இன்னொரு எண்ணை அழைத்தார் ஆச்சி. அந்த எண்ணும் 'பிசி'யாகவே இருந்தது.

ஆச்சியின் சந்தேகம் உறுதியானது. 

அரைமணிநேரம் கழித்து அதே இரண்டு எண்களை அழைத்தார். மறுபடியும் அதே பதில்: ‘ ….வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கிறார்களோ

மொட்டைமாடி விஷயம் தீவிரமாவதற்குள் சந்திரனைப் பார்த்துவிட வேண்டும் என்று துடித்தார் ஆச்சி. அல்லது  அகிலாவையாவது.    

*** 
அகிலா அட்ரஸ் எனக்குத் தெரியும்என்றான் ஸ்ரீவாஸ்தவா. அதே குடியிருப்பில் வாடகைக்கு இருந்துகொண்டு மருத்துவம் பயிலும் பல மாணவர்களில் ஒருவன். வங்காளி. இந்த மூன்று வருடங்களில் தமிழை  நன்றாகப் பேசப் பழகிக்கொண்டுவிட்டவன். அகிலா முதலாம் ஆண்டு மருத்துவம் படிப்பவள். மடிப்பாக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். 

ஸ்ரீவாஸ்தவாவின் காரில் டாக்டருக்கான இலச்சினை ஒட்டப்பட்டிருந்ததாலும், அவனுடைய கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் தொங்கிக்கொண்டிருந்ததாலும்  கொரோனா போலீஸ் வழியில் பல இடங்களில் இடைமறித்தாலும்  அவனது பயணம் தடைப்படவில்லை. 

ஆனால், லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்த பின்தான் தெரிந்தது, அது மூடப்பட்டு ஒருமாதம் ஆகிவிட்டதும், தங்கியிருந்தவர்கள் எல்லாரும் சொந்த ஊர்களுக்குப் போய்விட்டதும்!    

ஆமாம் ஆண்ட்டி! எங்கள் காலேஜ் மூடியே ஒரு மாதம் ஆகிவிட்டதே! எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே! சாரிஎன்றான் ஸ்ரீவாஸ்தவா. 

எப்படியாவது அவளைக் கண்டுபிடிக்கவேண்டும். போன் செய்தாலும் எடுக்கமாட்டேன் என்கிறாள்!என்றார் ஆச்சி.  “வேறு ஏதாவது ஐடியா தோன்றுகிறதா உனக்கு?”

அதற்குள் ஸ்ரீவாஸ்தவா இன்னொரு மாணவனுக்குப் போன் செய்தான். அவனிடம் ஆச்சி நம்பரைக் கொடுத்து உடனே அகிலாவைப் பேசுமாறு தகவல் அனுப்பச் சொன்னான். அவனுடைய  டீமில்தான் அகிலா ப்ராஜக்ட் செய்துகொண்டிருந்தாள்.ஆகவே கட்டாயம் போனை எடுப்பாள்என்றான் ஸ்ரீவாஸ்தவா.

அடுத்த சில நிமிடங்களில் ஆச்சியின் அலைபேசியில் வந்தாள் அகிலா. சொந்த ஊருக்குப் போக இரயிலோ பஸ்சோ இல்லாததால் தனது தூரத்து உறவினர் வீட்டில் வேளச்சேரியில் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்தால் தன்னைச் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தாள். ஸ்ரீவாஸ்தவாவும் சரி என்றான். 
*** 
வேளச்சேரியில் சாக்கடையும் சதுப்புநிலமும் கொசுக்களின் படையும் சூழ்ந்திருந்த  பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் பின்னணியில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஏழுமாடிக் குடியிருப்பின் ஐந்தாம் மாடியில் அகிலாவைப் பார்த்தார் ஆச்சி.  

ஊரெங்கும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும் வேளையில் ரிஸ்க் எடுத்துக்கொண்டு ஆச்சியம்மா தன்னைப் பார்க்க வரவேண்டிய அவசரம் 
என்னவாக இருக்கும் என்று அகிலாவுக்குப் புரியவில்லை.

நான்கு படுக்கையறை கொண்ட வீடு. அகிலாவுக்குத் தற்காலிகமாக ஒரு தனியறையைக் கொடுத்திருந்தார்கள். 

ஸ்ரீவாஸ்தவாவை ஹாலில் உட்காரவைத்துவிட்டு ஆச்சியுடன் தன்  அறைக்குச் சென்றாள் அகிலா.

ஆச்சி அவளுடைய காதருகில் நெருங்கி மெல்லிய குரலில் ஆனால் திடமாகப் பேசினார்:அகிலா, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா? எத்தனை முறை நான் உன்னை எச்சரித்திருக்கிறேன்?”

ஒருவாறு புரிந்தது அகிலாவுக்கு. சந்திரன் விஷயமாகத்தான் ஆச்சி வந்திருக்கிறார்.  

ஆச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டு புன்னகைத்தாள் அகிலா.அம்மா, நான் உங்களை மீறி நடப்பேனா? உங்களை என் அம்மாவைப் போலவே மதிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.

இல்லை. இல்லை. எனக்குத் தெரியாமல் என்னென்னவோ நடந்திருக்கிறது. இப்போது அவன் எங்கிருக்கிறான்? மூன்று நாட்களாக அவன் அறைக்கே  வரவில்லை. போனையும் எடுக்க மறுக்கிறான்.

சந்திரனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா! அவன் பத்திரமாகத்தான் இருப்பான். அவனுக்கும் ராஜா என்பவருக்கும் ஏதோ பிரச்சினையாம். போலீஸ்வரை போயிருக்கிறதாம். அதனால்தான் அவன் போன் நம்பரைக்கூட மாற்றியிருக்கிறான். சீக்கிரம் அவனை உங்களுடன் பேச வைக்கிறேன்என்றாள்  அகிலா.

சீக்கிரம் அவன் பேசாவிட்டால் மொட்டைமாடிக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ள  பிரச்சினையும் போலீசுக்குப் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டார் ஆச்சி.  

அகிலா ஆச்சியைக் கட்டிக்கொண்டு விடைகொடுத்தாள்.கவலை வேண்டாம் அம்மா, எல்லாம் நன்றாகவே முடியும்என்றாள்.   

பிறகு இருவருக்கும் லெமன் ஜூஸ் கொடுத்தாள். தன்  சீனியரான ஸ்ரீவாஸ்தவாவுக்கு நன்றி சொன்னாள். அவனுடைய பெற்றோர்களைப்  பற்றியும், தங்கள் கல்லூரியைப் பற்றியும், முடிவில் கொரானாவைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினாள்.   

சந்திரனிடம்  உடனே பேசு. நாளை வரைதான்  பொறுத்துக்கொள்வேன் என்று சொல்என்று எழுந்தார் ஆச்சி. 

அகிலா, உனக்கு மீண்டும் சொல்கிறேன். நீ அந்தஸ்துள்ள பெண். உன் அப்பா பெரிய வியாபாரி. சந்திரன் குடும்பமோ ரொம்ப சாதாரணமானது. அத்துடன் நீ மெடிக்கல் படிக்கிறாய். அவனோ எதற்கும் பயனில்லாத ஒரு எஞ்சினீரிங்கில் இருக்கிறான். உங்கள் இரண்டு பேருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. புத்திசாலியாக இரு. அவ்வளவுதான் சொல்லமுடியும்.” 

அகிலாவின் முகம் சற்றே இருண்டது. 

(தொடரும்)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

22 கருத்துகள்:


  1. //அவனோ எதற்கும் பயனில்லாத ஒரு எஞ்சினீரிங்கில் இருக்கிறான்.//

    என்ன இப்படி பட்டென உடைத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லை. இவன் எடுத்திருந்த எஞ்சினீரிங்க் பிராஞ்சு, ஐ.ட்டி. கம்பெனிகளில் வேலைக்கு ஆகாத ஒன்று என்பதைத்தான் ஆச்சி அப்படிக் கூறியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். பெண்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது யாருக்குத் தெரிகிறது, போங்கள்!

      நீக்கு
  2. நடுவில் பல பகுதிகள் படிக்க விட்டுப் போயிருந்தன.  விறுவிறுப்பாகப் படித்து வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கும் முதலில் இருந்தே மீண்டும் படித்துவிடுங்களேன்! எப்படியும் கொரோனா விடுமுறையில்தானே இருக்கிறீர்கள்?

      நீக்கு
    2. இல்லை.  அத்தியாவசியப்பணி என்பதால் அனுதினமும் ஆபீஸ்!!

      நீக்கு
  3. ம்ம்ம்... இன்னும் எத்தனை திருப்பங்கள்... பார்த்து விடலாம்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் ஆட்டோக்கள் ஓட ஆரம்பிக்கும்வரையில் திருப்பங்கள் இருந்துகொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது!

      நீக்கு
  4. எதற்கும் பயனில்லாத என்ஜினியரிங்
    உணமைதான்
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. இப்போது இன்னமும் வேகம் எடுத்துள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரொனா விலகுவதற்குள் முடிக்கவேண்டுமே! அதனால் வேகம் தேவைப்படுகிறது!

      நீக்கு
  6. கதையின் வேகம் கதாபாத்திரங்களின் வேகத்தோடு இணைந்து பிரமாதமாகப் போகிறது...தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  7. ஏணி வைத்தாலும் எட்டாது. கதையின் நிறைவு தெரிந்துவிடும்போலுள்ளதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வித்தாளை அவுட் ஆக்குவது சட்டப்படி குற்றம் ஐயா! என்றாலும் கைவசம் வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்கள் உள்ளதால் உங்கள் முயற்சி வெல்லுமா என்று தெரியவில்லை!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா இப்ப புரியுது சார்...இங்க யாராவது இவராகத்தான் இருக்குமோ என்று சந்தேகப்பட்டுச் சொன்னால் அங்கு கதை மாறிவிடும் போல!!! ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
  8. ஓ இப்போது இப்படித் திரும்பியுள்ளதா? புது கேரக்டர் அறிமுகம் அகிலா! ஆச்சி அகிலாவைக் கலக்கிவிட்டுப் போய்விட்டார். கலக்கல் நன்மையும் முடிந்தால் சரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. அகிலா இன்ட்ரோ. ஆச்சி, இந்த அகிலாவுக்கும் சந்திரனுக்கும் தூது சென்று கொண்டிருந்தாரா? ஹா ஹா ஹா. மொட்டை மாடி விஷயம் ஆச்சிக்குத் தெரிந்த ரகசியம் போல! போகிற போக்கில் சந்திரனைப் பற்றி அகிலாவிடம் ஒரு பிட் போட்டிருக்கிறார். அது வேறு என்னாகுமோ...விவரமான ஆச்சி போலும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமான ஆச்சியை இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் சிலருக்கு இருந்ததாகக் கேள்வி. அதனால்தான் இனிமேல் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருக்கும்.

      நீக்கு
  10. வெளியே அகழி, உள்ளே ஆள் விழுங்கி ஜந்துக்கள், அகழி கடக்க மரப்பாலம், பாலம் தாண்டி கோட்டை கொத்தளம் என்பது போல வெகு ஜாக்கிரதையாக ஒரு கோட்டைக்கான பாதுகாப்பு அம்சங்களோடு கதையை கொண்டு போகிறீர்கள். அங்கங்கே வரும் துண்டுச் செய்திகள் தான் வழக்கம் போல சுவாரஸ்யம். இந்தத் தடவை மெயின்டனன்ஸ் ஆபிஸ் கம்ப்ளெயிண்ட் ரிஜிஸ்டர். அட்டவணைப் பக்கம், பக்க எண், உள்ளடக்க விஷயம் என்று எதிலுமே குறையே வைக்கவில்லை நீங்கள்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா25 மே, 2020 அன்று PM 3:30

    கதை விறு விறுவென்று போகிறது...நல்ல நடை..நல்ல சஸ்பென்ஸ்,..தற்போதைய நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கிறீர்கள். CONGRATULATIONS. KEEP WRITING PLEASE.

    S.PARASURAMAN ANNA NAGAR.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா25 மே, 2020 அன்று PM 3:37

    "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு"


    இந்த Title எனக்கு பிடித்து இருக்கிறது.

    S.PARASURAMAN ANNA NAGAR.

    பதிலளிநீக்கு