சனி, மார்ச் 23, 2013

சாகித்ய அகாதெமி(4): தமிழுக்கு விருதுகள்

தமிழில் சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றவர்கள் பற்றி இன்று அலசுவோம்.

1955ல் முதல் முதலாக அகாதெமி விருதுகள் ஆரம்பிக்கப் பட்டன. அது வரையில் அகில இந்திய அளவில் மொழி அறிஞர்களைக் கௌரவிக்கும் விருதுகள் ஏதுமில்லை. அதே சமயம் சுதந்திரப் போராட்டத்திலும் மொழித் தொண்டிலும் பெரும் பங்காற்றிய சான்றோர்கள் ஒவ்வொரு மொழியிலும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தனர். இவர்களை முதலில் அங்கீகரிக்க வேண்டிய தேசிய அவசியம் அன்று இருந்தது.


அகாதெமி சின்னம் 
பெரும்பாலும் எல்லா மொழிகளிலுமே, பண்டைய புராண, இலக்கிய மறு படைப்புக்கள் இத்தகைய சான்றோர்களால் படைக்கப்பட்டிருந்தன. அந்தந்த மொழி வரலாறுகளும், கவிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் வரலாறுகளும், இலக்கிய விளக்க
நூல்களும் அன்று இன்றியமையாத தேவையாக இருந்தது. இந்தத் துறையிலும் பெரும் புலவர்களும் அறிஞர்களும் ஈடுபட்டு, நல்ல நூல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்கள்.

மாபெரும் அரசியல் நிகழ்வுகள் இந்தியத் துணைக் கண்டத்தில்
ஏற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். நாடு, அன்னியர்
ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. பல மாநிலங்கள் நிஜாம் போன்ற சிற்றரசர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப் பட்டுக் கொண்டிருந்த
நேரம்.

தாமிரப்பட்டயம் 
ஒவ்வொரு மொழியும் புத்துணர்வு கொண்டு விழித்தெழுந்த கணம். பழமையிலிருந்து புதுமை மெல்ல மெல்ல உதயமாகிக் கொண்டிருந்த தருணம்.
இத்தகைய நிலைமையில் முதல் பத்தாண்டுகள் வரை வயதில் மூத்த அறிஞர்களின் நூல்களே விருது பெற்றதில் வியப்பில்லை. அனைத்து மொழிகளிலுமே.

இந்த 58 ஆண்டுகளில் மொத்தம் 53 முறை தமிழுக்கு விருது கிடைத்துள்ளது.

மொழி தமிழ்
Award since 1955
நாவல் 23
உரைநடை 17
கவிதை 6
சிறுகதை 6
நாடகம் 1
மொத்தம் 53

இந்த 53 விருதுகளில் 23 நாவல்களுக்குச் சென்றுள்ளது. விவரம் இதோ:

 ஆண்டு  யார்  எந்த நாவல்
1956 கல்கி  அலை ஓசை
1961 டாக்டர் மு வரதராசனார்  அகல் விளக்கு
1963 அகிலன் வேங்கையின் மைந்தன்
1971 நா. பா.  சமுதாய வீதி
1972 ஜெயகாந்தன்  சில நேரங்களில் சில மனிதர்கள்
1973 ராஜம் கிருஷ்ணன் வேருக்கு நீர்
1977 இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
1980 கண்ணதாசன்  சேரமான் காதலி
1984 லஷ்மி ஒரு காவிரியைப் போல
1990 சு. சமுத்திரம் வேரில் பழுத்த பலா
1991 கி. ராஜநாராயணன்  கோபல்லபுரத்து மக்கள்
1992 கோவி. மணிசேகரன் குற்றாலக் குறிஞ்சி
1993 எம்.வி. வெங்கட்ராம்  காதுகள்
1994 பொன்னீலன்  புதிய தரிசனங்கள்
1995 பிரபஞ்சன் வானம் வசப்படும்
1997 தோப்பில் முகமது மீரான் சாய்வு நாற்காலி
1998 சா. கந்தசாமி விசாரணைக் கமிஷன்
2001 சி. சு. செல்லப்பா சுதந்திர தாகம்
2003 வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம்
2005 திலகவதி கல்மரம்
2007 நீல. பத்மநாபன் இலை உதிர் காலம்
2011 சு. வெங்கடேசன் காவல் கோட்டம்
2012 D. செல்வராஜ் தோல்

இந்த அட்டவணையைப் பார்த்தாலே அகாதெமி, தொடர்ந்து  நல்ல எழுத்துக்களை அங்கீகரித்திருக்கிறது என்பது புரியும். சில நேரங்களில் மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய எழுத்தாளர்களுக்கும் இடையே போட்டி வந்தால், இறுதி முடிவு மூத்த எழுத்தளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஏனெனில் மூத்தவரின் இன்னொரு புத்தகம் இனி வெளிவருமா என்பதற்கு உத்தரவாதமில்லை. அவரும் எவ்வளவு நாள் இனி உயிரோடிருப்பார் என்பதைச் சொல்வதற்கில்லை. ஒரு மணியனோ சுஜாதாவோ அகாதெமி விருது பெறவில்லையே!

புதுடில்லியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களோடு பழகும் நல் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அவர், இந்திரா பார்த்தசாரதி  மற்றும் நா பார்த்தசாரதி ஆகியவர்களுடன் நல்ல தொடர்பு கொண்டவர். ஞானபீடப் பரிசுக்குப் பரிந்துரை செய்யவல்ல செல்வாக்கும் அவருக்கு ஒருசமயம் இருந்தது. அவர்  எப்போதோ சொன்ன
ஞாபகம்:

சாகித்ய அகாதெமிக்கு விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதில் கடைசி கட்டத்தில் ஒருமுறை கடுமையான போட்டி நிலவியதாம்.  இருவருமே பெண் எழுத்தாளர்கள். இருவருமே விருதுக்கு முழுத் தகுதி உடையவர்கள். அப்போது நா.பா. சொன்னாராம்: 'வயதில் இளையவர்கள் இன்னும் சில காலம் பொறுக்கலாம். ஆனால் மூத்தவர்களை விரைந்து அங்கீகரிக்க வேண்டும்' என்று.
அதன்படியே 'லஷ்மி' என்கிற டாக்டர் திரிபுரசுந்தரிக்கு 1984ல் நாவலுக்கான விருது அறிவிக்கப்பட்டது.

லஷ்மி (எ) Dr. திரிபுரசுந்தரி 
1985 பிப்ரவரியில் கையில் வந்திருக்கும். அதன் பின் அவர் உயிரோடிருந்தது இரண்டே ஆண்டுகள் தான். (1987 ஜனவரி 7ம் நாள் மறைந்தார்).

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது தான் தெரிகிறது, நேற்று தான் -மார்ச் 21- லஷ்மி அவர்களின் 92வது பிறந்த நாள்!

(அன்று தள்ளிப் போன விருது இன்னும் தள்ளிக்கொண்டே போகிறது, வாஸந்திக்கு. அவருடைய 'மூங்கில்பூக்கள்' எனக்கு மிகவும் பிடித்த நாவல்).
******

இன்னொரு விசித்திரமான விஷயம், கண்ணதாசனுக்கும் வைரமுத்துவுக்கும் கவிதைக்குக் கிடைக்காமல் 'நாவல்' வகையில் விருது கிடைத்திருப்பது தான்! ஆனால் அதற்கு அகாதெமியைக் குறை சொல்லமுடியாது. ஏனென்றால் விருதுக்கான தகுதியை நிர்ணயிக்கும் அந்த  மூன்று வருடங்களில் இவர்களின் கவிதை நூல்கள் எதுவும் வெளியாகவில்லையே!

இதே காரணம் பற்றித்தான் பாரதிதாசனுக்கு விருது கவிதைக்காக
அல்ல, நாடகத்திற்காகவே வழங்கப்பட்டது. ('பிசிராந்தையார்').

எனவே கவிஞர்களே, இரண்டு  அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது ஒரு நல்ல கவிதைப் புத்தகத்தை வெளியிட்டுத் தொலையுங்கள். அதுவும் வெறும் 64 -80 பக்கமாக இல்லாமல், குறைந்தது 150 -200 பக்கங்கள் இருக்கட்டும். (கௌரவமான பதிப்பகத்தின் மூலம் வெளியிடுங்கள்). அல்லது
ஏற்கெனவே  வெளியிட்டுள்ள துண்டுக் கவிதைகளைத்
தொகுத்துப் போடுங்கள்.  கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்
பணியைப்  பொதுவான ரசிகர்களிடம் விட்டு விடுங்கள்.

ஏன் சொல்லுகிறேன் என்றால், மற்ற மொழிகளில் எவ்வளவு முறை கவிதைக்கு விருது கிடைத்திருக்கிறது தெரியுமா? கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்:
    மொத்தம்  அதில்
  மொழி விருதுகள் கவிதைக்கு
1 Sanskrit 45 31
2 Hindi 57 26
3 Kashmere 41 21
4 Dogri 38 20
5 Oriya 52 20
6 Punjabi 52 20
7 Urdu 51 20
8 Rajasthani 39 19
9 Bengali 55 18
10 Konkani 36 17
11 Maithili 43 17
12 Sindhi 45 17
13 Telugu 51 17
14 Malayalam 54 16
15 Assamese 49 14
16 Gujarathi 54 11
17 Manipuri 38 11
18 Kannada 54 10
19 Marathi 57 9
20 Nepali 34 9
21 ENGLISH 41 8
22 Tamil 53 6
23 Bodo 8 4
24 Santhali 4 1

வயிறு எரிகிறதா இல்லையா?

இருக்கிற 24 மொழிகளில், தமிழ் மொழி தான் மிகவும் குறைவான ஆறே ஆறு விருதுகளை வென்றிருக்கிறது! அதனால் 22வது
இடத்தில இருக்கிறது. நமக்கும் கீழே இருப்பவர்கள் இன்னும்
பூரணமான வளர்ச்சி அடையாத இரண்டு மொழிகள் தான்.
(போடோ, ஸாந்தலி. எங்கே பேசுகிறார்கள் என்றாவது தெரியுமா?) தென்மொழிகளை எடுத்துக்கொண்டால் தெலுங்கு -17, மலையாளம்-16, கன்னடம்-10, தமிழ் மட்டும் 6 ! வட இந்திய மொழிகளைப் பாருங்கள்: ஹிந்தி-26, காஷ்மீரி-21, பஞ்சாபி-20 !கவிதைக்குக் கொடுத்தது போகத்தான் நாவலுக்கும் உரைநடைக்கும் அங்கே மரியாதை. ஆனால் ஒன்றை மறந்து விடக் கூடாது: அங்கே கவிஞர்கள் நிறைய கவிதை எழுதுகிறார்கள்.

புகழ் பெரும் வரை கவிஞர்களாக இருப்பவர்கள், புகழ் வந்ததும் நாவலும் கட்டுரையும் எழுதப்போய் விடுவதால் விளையும்
சோதனை இது. சொல்லிவிட்டேன், காதுள்ளவன் கேட்கக் கடவன். சரி, கவிதைக்காக என்று விருது பெற்ற அந்த ஆறு பெரும் யார், யார்?

ஆண்டு யார் எந்த நூல்
1968 அ.சீனிவாசராகவன் வெள்ளைப் புறா
1999 அப்துல் ரகுமான் ஆலாபனை
2002 சிற்பி பாலசுப்ரமணியன் ஒரு கிராமத்து நதி
2004 தமிழன்பன் வணக்கம் வள்ளுவா
2006 மு. மேத்தா ஆகாயத்துக்கு அடுத்த வீடு
2009 புவியரசு கையொப்பம்

இந்தப் பட்டியலை இன்னொருமுறை பாருங்கள். வானம்பாடிக் கவிஞர்களுக்கு எப்படியும் விருது வழங்கியே ஆகவேண்டும் என்று யாரோ கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்த மாதிரி இல்லை?

*******
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சிறுகதை என்ற வடிவத்தை நாவல் ஆக்கிரமித்துவிட்டது. எனவே சிறுகதை எழுதி விருது வாங்கும் காலம் இனி வரப் போவதில்லை. (கீழுள்ள
அட்டவணையைப் பாருங்கள்).சிறுகதையாளர்கள் இனி கட்டுரையில் தஞ்சம்புக வேண்டியது தான்.

    மொத்தம்  அதில்
  மொழி விருதுகள் சிறுகதைக்கு
1 Manipuri 38 14
2 Oriya 52 11
3 Punjabi 52 11
4 Maithili 43 10
5 Rajasthani 39 10
6 Telugu 51 10
7 Assamese 49 8
8 Dogri 38 8
9 Konkani 36 8
10 Nepali 34 8
11 Sindhi 45 7
12 Urdu 51 7
13 Malayalam 54 6
14 Tamil 53 6
15 Kashmere 41 4
16 Gujarathi 54 3
17 Kannada 54 3
18 Bengali 55 2
19 Marathi 57 2
20 Sanskrit 45 2
21 Bodo 8 1
22 ENGLISH 41 1
23 Hindi 57 1
24 Santhali 4 1


தமிழில் சிறுகதைக்கு விருது பெற்றவர்கள் யார் யார் என்று பார்ப்போம். (ஆறு பேர்கள் தாம்):

ஆண்டு யார் எந்த நூல்
1970 கு. அழகிரிசாமி அன்பளிப்பு
1979 தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம்
1987 ஆதவன் (சுந்தரம்) முதலில் இரவு வரும்
1996 அசோகமித்திரன் அப்பாவின் சிநேகிதர்
2008 மேலாண்மை பொன்னுசாமி மின்சாரப்பூ
2010 நாஞ்சில் நாடன் சூடிய பூ சூடற்க

அதே போல் தான் நாடகம் எழுதுகிறவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழில் பிசிராந்தையார் என்ற ஒரே ஒரு நாடகம் (1969ல்) விருது பெறக் காரணம் முன்னரே சொன்னபடி'அந்த மூன்று வருட' கால கட்டத்தில் அது ஒன்று தான் பாரதிதாசனால் எழுதப்பட்டது என்பதும், அன்று ஆட்சிக்கு வந்திருந்த கட்சி அவருக்கு எப்படியும் விருது
கிடைத்தாக வேண்டும் என்று விரும்பியதும் தான்.
இல்லையென்றால் அகாதெமி பட்டியலில் நாடகம் அநேகமாகக் காணாமல் போயிருக்கும். அதே சமயம் பாரதிதாசனுக்கு கவிதைக்கான விருது வழங்கிடும் பேறு, அகாதெமிக்கு இல்லாமல் போனது  துரதிர்ஷ்டமானதே.
******

இனி உரைநடைக்கான விருதுகளைப் பார்ப்போம்.

    மொத்தம்  அதில்
  மொழி விருதுகள் உரைநடைக்கு
1 Marathi 57 29
2 Gujarathi 54 27
3 Kannada 54 22
4 Urdu 51 18
5 Tamil 53 17
6 Telugu 51 17
7 Malayalam 54 15
8 Oriya 52 15
9 Assamese 49 11
10 ENGLISH 41 11
11 Sindhi 45 11
12 Hindi 57 10
13 Kashmere 41 10
14 Maithili 43 10
15 Bengali 55 9
16 Sanskrit 45 9
17 Nepali 34 8
18 Konkani 36 6
19 Punjabi 52 4
20 Dogri 38 2
21 Rajasthani 39 2
22 Manipuri 38 1
23 Santhali 4 1
24 Bodo 8 0

 ஏற்கெனவே சொன்னது போல, கவிதையின் இடத்தை உரைநடை
பிடித்துக் கொண்டு விட்டது, தமிழில். என்ன வகையான உரைநடைகள் விருது பெற்றன என்று பார்ப்போமானால் வியப்பு காத்திருக்கிறது.

(1) புராணம்/இதிகாசம்-மீள்படைப்பு: இந்த வகையில் ஒரே ஒரு நூல், ராஜாஜி அவர்களின் 'சக்கரவர்த்தி திருமகன்' என்னும் ராமாயண மீள்வரைவு (1956).

(2) பயணக் கட்டுரை: இவ்வகையிலும் ஒரே ஒரு நூல், மீ.ப.சோமசுந்தரம் ('சோமு') அவர்களின் 'அக்கரைச் சீமையிலே' (1962).

(3) வரலாறு / தன்வரலாறு: இவ்வகையில் 4 நூல்கள் விருது பெற்றுள்ளன.

1965: பி.ஸ்ரீ.ஆச்சரியா: 'ஸ்ரீ ராமானுஜர்"
1966: ம.பொ.சி.: 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு'
1982: பி.எஸ்.ராமையா: 'மணிக்கொடி காலம்'
1989: லா.சா.ரா.: 'சிந்தாநதி'

(4) மீதியுள்ள 11 நூல்களும் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற வகையில் அடங்குகின்றன.(கீழே காண்க).

ஆண்டு யார் எந்த நூல்
1955 ரா.பி.சேதுப்பிள்ளை தமிழ் இன்பம்
1967 கி.வா.ஜ. வீரர் உலகம்
1974 கே.டி. திருநாவுக்கரசு திருக்குறள் நீதி இலக்கியம்
1975 இரா. தண்டாயுதம் தற்காலத் தமிழ் இலக்கியம்
1978 வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
1981 எம். ராமலிங்கம் புதிய உரைநடை
1983 தொ.மு.சி. ரகுநாதன் பாரதி: காலமும் கருத்தும்
1985 அ. ச. ஞானசம்பந்தன் கம்பன்: புதிய பார்வை
1986 க. நா. சுப்பிரமணியம் இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்
1988 வா.செ. குழந்தைசாமி வாழும் வள்ளுவம்
2000 தி.க. சிவசங்கரன் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்


மேலுள்ள சில நூல்களின் மீது தான் சில தமிழ் ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பினார்கள், எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று. நூலாசிரியர்களின் மேதைமையைப் பொறுத்து என்று பதில்  வந்தால், அதுவும் சிலர் விஷயத்தில் சரியில்லையே என்று  கருதினார்கள். நல்ல வேளை, பின்னாட்களில் தேர்வின் தரம் ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாயிருந்தது என்றே சொல்லவேண்டும்.

(நாளையும் வரலாம்)

(C) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 

6 கருத்துகள்:

  1. காலங்காலத்துக்கும் பாதுகாக்கப்படவேண்டிய ஆவண தோகுப்பு! நன்றி ஐயா!---காஸ்யபன்!

    பதிலளிநீக்கு
  2. சாகித்ய அகாடெமி விருதுகள் ப்ற்றிய மிகவும் நல்லதொரு அலசல். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. Dear sir..

    Welcome. Thank you for your visit to my blogspot. First time I came here. This is an excellent documendation about sakitya acadmy activities. I will write my detailed opinion to day night in Tamil.

    பதிலளிநீக்கு
  4. சூப்பரா எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்ல ஸ்பீடு... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி நண்பர்களே! யாராவது ஓரிருவர் விளக்கம் பெற்றாலும் எழுதிய பயன் பெற்றவனாவேன். சாகித்ய அகாதெமி என்றாலே ஒரு மர்மவீடு போன்ற தோற்றம் இருந்தது. அதைக் களைய வேண்டியே இக்கட்டுரைத் தொடரை எழுதினேன். மேலும், நல்ல நூல்களுக்கு (மட்டுமே) பரிசு வழங்குவது என்று அண்மைக் காலத்தில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை, படைப்பாளிகள் புரிந்து கொண்டு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  6. A very tedious research, tends to be an eye-opener; particularly for the Tamil koorum Nallugam

    பதிலளிநீக்கு