ஞாயிறு, மே 17, 2020

பொன்னித்தீவு -9


பொன்னித்தீவு -9

  -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(9) இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர்

கொரோனா ரிப்போர்ட்டில் நெகட்டிவ் என்று வந்ததால் இன்ஸ்பெக்டர்  கண்ணன் மறுபடியும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிசெய்வதற்கு வந்துவிட்டார். புஷ்பாவின் ரிப்போர்ட்டும் நெகட்டிவ் தான். அந்த மகிழ்ச்சியில் அவள் புதிய ஃபிளாஸ்க்கில் காப்பி நிரப்பிக்கொண்டு வந்திருந்தாள். ஸ்டேஷனில் இருந்த மற்ற மூன்று காவலர்களும் இரண்டு வாரங்கள் முன்பே வேறொரு ஸ்டேஷனுக்கு டெபுடேஷனில் சென்றுவிட்டார்கள்.

நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்டருக்குக் கொஞ்சம் தூக்கலாகவே சர்க்கரைபோட்டு காப்பி கொடுத்தாள் புஷ்பா.
“அவசரமான கேஸ்கள் ஒன்றும் இல்லை சார்!” என்றாள்.

தான் தாற்காலிகமாகத்தான் அங்கு போஸ்டிங் ஆகியிருப்பதால், பழைய கேஸ்களை எடுத்து விசாரிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று அவருக்குத் தெரியும். ஆனால்  இத்தனை வருட அனுபவத்தில் தன் பாக்கெட் இவ்வளவு நாட்கள் காலியாக இருந்ததில்லை என்பது சோகமாக இருந்தது. கொரோனா ஊரடங்கினால்  டூ வீலர்களும் ஷேர்-ஆட்டோக்களும் ஓடாததால் பணப்புழக்கம் என்பதே இல்லை.

டக்கென்று நினைவுக்கு வந்தது, செல்வம்-செம்பகம்-நெக்லஸ் வழக்கு. உற்சாகம் அடைந்தவராக, “புஷ்பா, அந்த ஃபைலைக் கொண்டுவா” என்றார்.    

“யமுனாம்மா வீட்டிற்குப் போயிருந்தேன் சார்! பக்கத்து வீட்டில்தான் செம்பகம் வேலை செயகிறாளாம். ஆனால் அவளுடைய தெருவை  கொரோனா கண்டெயின்மெண்ட் ஜோன்  ஆக்கிவிட்டதால் அவள் வரவில்லை” என்று கூறினாள் புஷ்பா.

“இப்போது நம்ம ஊரில் எந்த இடத்திலும் கொரோனா இல்லை என்று ஹெல்த் ஆபீசில் சொல்லிவிட்டார்கள். ஆகவே நாம் உடனே அவளை விசாரித்தாகவேண்டும். உனக்குத்தான் தெரியுமே, பொதுவாகவே பணக்கார  வீடுகளில் நாலு வீட்டுக்கு ஒரு வீடு என்று வேலைக்காரர்கள் தான் நகைத்திருட்டில் ஈடுபடுகிறார்கள்” என்றார் கண்ணன்.

“அதற்குமுன்னால் செம்பகத்தின் புருஷனைக்  கூப்பிட்டால் சரியாக இருக்கும் அல்லவா?” என்றாள் புஷ்பா.

“ஆம், மண்டை பிளக்கிற வெய்யிலில் நின்று நின்று எனக்கு மூளையே மரத்துப்போய்விட்டது. அவனுக்குப் போன் போடு!” என்றார் கண்ணன்.

தன்னை எப்படியும் போலீசில் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தான் ராஜா. தாமதம் செய்யாமல் வந்தான். “வணக்கம் சார்” என்றான்.

தலைமுதல் பாதம்வரை அவனை ஆராய்ந்தார் கண்ணன். நல்ல கட்டுடல். களையான முகம். சுறுசுறுப்பானவனாகத் தோன்றினான். இவன் திருட்டில் ஈடுபட்டிருக்க வழியில்லை என்றே தோன்றியது. ஆனால் அவனுக்கு மனைவியாய் இருப்பவள் போயும் போயும் அந்த பயந்தாங்கொள்ளி செல்வத்தையா கள்ளக்காதலனாக வைத்திருப்பாள்? அப்படியே செல்வம் அந்த நெக்லஸை இவளிடம் தந்திருந்தாலும் கணவனுக்குத் தெரியாமல் அதை எப்படி மறைத்துவைக்க முடியும்? கணவன் அவளைச் சும்மா விட்டுவைப்பானா?

இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி, முதலில் இருந்து ஆரம்பிக்கலாமா, அல்லது நீயே உண்மையைச் சொல்லி விடுகிறாயா?” என்று ராஜாவை மிடுக்கோடு கேட்டார்.

“மன்னிக்க வேண்டும் சார்! நான் ...என்ற நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூடிவ் ஆக வேலை செய்கிறேன். எனக்குத் திருமணமாகி செம்பகம்  என்ற மனைவி இருக்கிறாள். குழந்தைகள் இல்லை. அதிக வசதிகள் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வேறு ஏதாவது சொல்லவேண்டுமா சார்?” என்றான் ராஜா, மரியாதை கலந்த குரலில்.

“உங்கள் நிறுவனம் என்ன தொழில் செய்கிறது?”

“சென்னை கார்ப்பொரேஷனுக்கு குப்பை சேகரித்து அகற்றும் ஒப்பந்தப் பணியில் இருக்கிறோம் சார்!”

“அதாவது குப்பை பொறுக்கும் ஆசாமி நீ!” என்று கேலியாகச் சிரித்தபடி புஷ்பாவைப் பார்த்தார் கண்ணன். அவள் எந்த எதிர்வினையும் இன்றி நின்றாள்.

“மன்னிக்கவேண்டும் சார். அவ்வளவு கேலியாக எண்ணவேண்டாம். இன்று சென்னை நகரம் ஓரளவு தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்றால் அதில் எங்களுக்கு முக்கியப்  பங்கு உண்டு!” என்றான் ராஜா.

“அது போகட்டும், உண்மையைச் சொல்! உன் மனைவி உன்னுடன் சந்தோஷமாக இருக்கிறாளா?”    

அதைப் பற்றி இவருக்கென்ன வந்தது என்று புருவத்தைச் சுருக்கினான் ராஜா, பதிலேதும் சொல்லாமல்.

“குறிப்பாக, அவள் ஏதாவது நகை நட்டு கேட்டு நச்சரித்தாளா? நீ வாங்கிக்  கொடுத்தாயா என்பது பற்றிச் சொல்ல வேண்டும்” என்று கண்டிப்பான குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர்.

“மன்னிக்கவேண்டும் சார்! ஏன் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். அவள் ஆசைப்படி அவளுக்கு ஒரு நெக்லஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் பழைய நகை தான். மற்றப்படி ஏதுமில்லை” என்றான் ராஜா குழப்பத்துடன்.
  
அப்போது புஷ்பா இன்ஸ்பெக்டரைப் பார்த்து அர்த்தபூர்வமாகக் கண்ணடித்தாள்.

“நல்லது, ராஜா! புதுப் பொண்டாட்டி கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஆனால் உண்மையைச் சொல், அதை நீ வாங்கினாயா, அல்லது…..?” என்று அவனைக் கூர்ந்து நோக்கினார்.

ராஜா அயரவில்லை. “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

அவனுக்கு மிக அருகில் வந்தார் கண்ணன். “இதோ பார், சில பெண்களுக்கு ஆசை அதிகம் இருக்கும். அதிலும் அழகான பெண்களுக்கு வேறு மாதிரி ஆசைகளும் இருக்கும். எங்கள் தொழிலில் நாங்கள் பார்க்காத பெண்களா? உண்மையைச் சொல், உன் மனைவியும் ரொம்ப அழகானவள் என்று கேள்விப்பட்டேன். அவளுக்கு உன்னைத் தவிர…..” என்றவரை மேற்கொண்டு பேசவிடாமல் “சார், போதும் நிறுத்துங்கள். என் மனைவியைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசினால் நான் பொறுக்கமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான் ராஜா.

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இறங்கி வந்தார். “ராஜா, ஐ ஆம் சாரி. ஒரு விஷயம் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன். போகட்டும், நீ ஆபீசுக்குப்போன பிறகு உன் மனைவி என்ன செய்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா?”

“தினமும் காலையில் அவளை நான்தான் வக்கீல்மாமி வீட்டில் கொண்டுபோய் விடுவேன். மாலையில் பிக்கப் செய்துகொள்வேன். அங்கு வீட்டுவேலை செய்கிறாள். முழுநேரமும் அங்குதான் இருப்பாள்!”

“செல்வம் என்பவரைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

ராஜா மலர்ச்சியோடு சொன்னான். வக்கீல்மாமி வீட்டுக்கு அருகில்தான் செல்வம் இருக்கிறார். ஐ.ட்டி. பணியாளர். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்.

“ராஜா, நான் கேட்பதற்குச் சரியான பதில் வேண்டும். அந்த செல்வத்துக்கும் உன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக நீ எப்போதாவது சந்தேகப்பட்டதுண்டா?”

கோபத்தால் கொதித்துப்போனான் ராஜா. “சார், என் மனைவி ஒரு நெருப்பு மாதிரி. தெரிந்துகொள்ளுங்கள்” என்றான்.

இன்ஸ்பெக்டர் அவன்  தோள்களைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தார். 

“மறுபடியும் சாரி, ராஜா! அப்படியானால் செல்வத்திற்கும் உனக்கும் எப்படித் தகராறு வந்தது? நீ அவரை மிரட்டியதற்கு சாட்சி இருக்கிறதே!” என்றார்.

ராஜாவுக்குப் புரிந்துவிட்டது.

அன்றொருநாள் செல்வத்தை அவருடைய வீட்டு வாசலில் நிறுத்தி “நீங்க செய்றது நல்லா இல்லை!” என்று சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. சிரித்தான்.

“சார், நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும்  இல்லை. எங்க கம்பெனி அவருடைய ஆபீசுக்கும்தான்   க்ளீனிங் சர்வீஸ் செய்கிறது. அங்கு எல்லாரும் எங்கள் சர்வீஸில் திருப்தியாக இருக்கிறார்கள். ஆனால் யூனியனைச் சேர்ந்த சிலர் எங்களை விரட்டிவிட்டுத்  தங்களுக்கு வேண்டிய ஒரு கம்பெனியைக்  கொண்டுவரப்  பார்க்கிறார்கள். அவர்களுக்கு மிஸ்டர் செல்வம் ஒத்து ஊதுவதாகச் செய்தி வந்தது. அதற்காகத்தான் செல்வத்திடம் அப்படிப் பேசினேன். அது மிரட்டல் அல்ல சார், வெறும் பேச்சு தான்!” என்று தெளிவுபடுத்தினான் ராஜா.

“மேலும், அன்றுதான் அவரை முதல்முதலாகப் பார்த்தேன்!” என்றான்.

கண்ணனுக்கு மூளை மேலும் குழம்புவதுபோல் இருந்தது. புஷ்பாவைப் பார்த்தார். அவள் உடனே இருவருக்கும் காப்பி கொடுத்தாள்.

“ராஜா, அந்த நெக்லஸைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா? அது செல்வம் உன் மனைவிக்குக் கொடுத்தது தானே?”

மறுபடியும் எச்சரிப்பதுபோல் முகத்தில் ஆத்திரத்தைக் காட்டினான் ராஜா. “சார், அது உண்மையில் செல்வத்தின் நெக்லஸ் தான். ஆனால் அதை செல்வம் கொடுக்கவில்லை. நான் காசுகொடுத்து வாங்கியது”  என்றான். 

இன்ஸ்பெக்டருக்கு நிஜமாகவே மண்டை காய்ந்துபோனது. நிச்சயம் செல்வம்தான் ஏதோ  தகிடுதத்தம் செய்திருக்கிறான். அவனை உடனே விசாரிக்கவேண்டும். ராஜாவை ஏற்றிக்கொண்டு தன்  மோட்டார்சைக்கிளில் கிளம்பினார்.

(தொடரும்)   (கன்னித்தீவு போலவா?)

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

10 கருத்துகள்:

  1. இன்ஸ்பெக்டருக்கு மட்டுமா..எங்களுக்கும்...மிரட்டலை விடுவித்தவிதம் அருமை...

    பதிலளிநீக்கு
  2. நல்ல உயிரோட்டமுடன்கதை பயணிக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. இத்தனை வருட அனுபவத்தில் தன் பாக்கெட் இவ்வளவு நாட்கள் காலியாக இருந்ததில்லை என்பது சோகமாக இருந்தது. கொரோனா ஊரடங்கினால் டூ வீலர்களும் ஷேர்-ஆட்டோக்களும் ஓடாததால் பணப்புழக்கம் என்பதே இல்லை.//

    கோவிட் 19 கால ஜோக்!. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல! உங்களுக்கே உரித்தான நகைச்சுவை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. நடைமுறை வாழ்க்கையோடு உரைநடை ஒத்து வரும் பாங்கு இந்தத் தொடரின் சிறப்புகளில் முக்கியமானது. துப்பறியும் கதை தான். ஆனால் வழக்கமான துப்பறியும் கதைகள் போலல்லாமல் துணுக்கமாக சில விஷயங்களை கதை போக்கிலேயே சொல்லிச் செல்வது ந்மக்காகவே அமைத்து போய்விட்ட சமூகச் சூழல்களுக்கு அதன் அவலங்களுக்கு இடையேயான துப்பறியும் கதையின் தோற்றம் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா23 மே, 2020 அன்று PM 2:37

    "ஆனால் இத்தனை வருட அனுபவத்தில் தன் பாக்கெட் இவ்வளவு நாட்கள் காலியாக இருந்ததில்லை என்பது சோகமாக இருந்தது. கொரோனா ஊரடங்கினால் டூ வீலர்களும் ஷேர்-ஆட்டோக்களும் ஓடாததால் பணப்புழக்கம் என்பதே இல்லை."

    போலீஸ் துறையை யாரும் விட்டு வைப்பது இல்லை. அதில் நீங்களும் விதி விலக்கில்லை.
    S.PARASURAMAN
    ANNA NAGAR.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தம்பி! மற்ற வர்க்கத்தினரைப் போலவே போலீசாரும் கொரொனா விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவேண்டும். இந்த ஏப்ரல்-மே வெயிலில் சாலை நடுவே நின்றுகொண்டு அவர்கள் கறுத்துப் போவதை நீங்கள் பார்க்கவில்லையா?

      நீக்கு
  6. படித்துக் கொண்டு வருகிறேன் புரிந்தும் புரியாததுபொல்

    பதிலளிநீக்கு
  7. நிச்சயம் ஏமாந்துபோவீர்கள் - நீங்கள் நினைத்தது நடக்கப்போவதில்லை. (அது சரி, நீங்கள் என்னதான் நினைத்தீர்கள்?)

    பதிலளிநீக்கு