வெள்ளி, ஏப்ரல் 28, 2017

கனியுதிர்சோலை (சிறுகதை)

பதிவு எண் 33/2017
கனியுதிர்சோலை
- இராய செல்லப்பா 

விடியற்காலையிலேயே எழுந்தாகிவிட்டது. பரபரப்புடன் கடைசி நேர முன்னேற்பாடுகளைச் செய்து முடித்தாள் சாந்தி. அழைப்பு மணி அடித்தது. டாக்சி வந்துவிட்டதன் அடையாளம். குட் மார்னிங் மேடம் என்றான் கோபால். நேரம் தவறாதவன்.

அவனிடம் காப்பியைக் கொடுத்தபடி இதோ, ஐந்தே நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என்று உள்ளே போனாள் சாந்தி. எதற்கும் நீ எல்லா ரூமும் சுத்தமா இருக்கானு ஒருதடவ பார்த்துடு என்றாள்.


அமெரிக்காவிலிருந்து லதா வருகிறாள். ஒரே மகள். கணினித் துறையில் ஓர் அமெரிக்க நிறுவனத்தில் பத்தாண்டு காலமாக வேலை செய்கிறாள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு வருகிறாள். கையில் இரண்டு வயது மகனுடன்.

அழுக்கு என்பதே எங்கும் இருக்கக்கூடாது அவளுக்கு. சுவற்றில் சிறு கீறல் இருந்தாலும் அவளுக்கு எரிச்சல் வரும். தரையில் பிசிபிசுக்கு இருக்கக்கூடாது. பல் துலக்கும் பிரஷ்கூட நேற்று வாங்கியது போல் சுத்தமாக இருக்க வேண்டும். சோப்புப் பெட்டியின் மேல் திட்டுத்திட்டாக சோப் படிந்திருந்தால் அவ்வளவு தான், தூக்கி எறிந்து விட்டு மறுவேலை பார்ப்பாள்.

பால்கிண்ணத்தை மூடி ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது கொஞ்சம் பால் சிந்திவிட்டது. இருக்கிற அவசரத்தில் இது வேறு கேடா என்று தன்மீதே கோபம் வந்தது. ஈரத்துணியால் அவசரமாகத் துடைத்தாள். பிறகு ஈரமில்லாத துணியால் மீண்டும் துடைத்தாள். மின்விசிறியைச் சுழலவிட்டாள்.

கைப்பையை எடுத்துக்கொண்டு கதவைச் சாத்திய போது மணி ஏழு. கவலைப் படாதீங்கம்மா! ஃப்ளைட் எட்டரைக்குத் தானே! அதற்குள் போய்விடலாம் என்று கோபால் வண்டியைக் கிளப்பினான். ஆனாலும் பொண்ணுக்கு ரொம்பத்தான்  பயந்து போயிருக்கீங்கம்மா! வீடு சுத்தம்னா சுத்தம் அவ்ளோ சுத்தம்! என்று புன்முறுவல் செய்தான் கோபால். 

மெட்ரோ ரயிலுக்காக அங்கங்கே தோண்டியும் வெட்டியும் இருந்த இடங்கள் குறுக்கிட்டபோது சாந்திக்குப் பகீரென்றது. கோபால், நேரம் ஆகிவிடாதே? என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் சிரித்துக்கொண்டே தினமும் இப்படித்தான் இருக்கும் அம்மா! இதனால் தாமதம் ஆகிவிடாது என்று வண்டியைக் கிடைத்த சந்துகளில் நுழைத்தான். சொல்லியபடியே எட்டரைக்கு முன்னால் விமான நிலையத்தை அடைந்துவிட்டான்.

‘எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.544 இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும்’ என்ற அறிவிப்பு கேட்டபிறகு தான் சாந்திக்கு உயிர் வந்தது. 
அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக வரும் விமானம். 

விமானம் தரையிறங்கியவுடனே லதா போன் செய்து விடுவாள். ‘உனக்காகத்தான் ஒருமணி நேரமாய்க் காத்திருக்கிறேன்’ என்ற பதிலைத்தான் அவள் எதிர்பார்ப்பாள். ‘இதோ வந்துகொண்டிருக்கிறேன், நீ இமிக்ரேஷன் முடித்து வருவதற்குள் வந்துவிடுவேன்’ என்றெல்லாம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் அவளுக்கு ஆத்திரம் வந்துவிடும்.. ‘நான் பதினைந்தாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வருகிறேன். உன்னால் பதினைந்து மைல் தூரத்திலிருந்து  முன்னால் வர முடியாதா?’ என்று கொந்தளிப்பாள். எல்லாம் முன்கோபம்தான். சிறிது நேரம் போனதும் தானே ஓடிவந்து, ‘சாரிம்மா’ என்பாள்.

குழந்தையிலிருந்தே அவள் அப்படித்தான். அத்துடன் இப்போது கைக்குழந்தை வேறு.

விமானம் வந்துவிட்டதற்கு அறிகுறியாகத் தகவல் பலகையில் விமான எண்ணுக்கு நேராகப்  பச்சை விளக்கு அணைந்து அணைந்து எரிய ஆரம்பித்தது. டாக்ஸி டிரைவர்களும் ஓட்டல் பிரதிநிதிகளும் கையில் பெயர்ப்பலகைகளை உயரே தூக்கியபடி  முண்டியடித்து நின்றனர். பல பெயர்கள் அமெரிக்கப் பெயர்களாக இருந்தன. 

நின்று நின்று கால் தொய்வதுபோல் ஆனது சாந்திக்கு. உட்கார எங்கும் இடமே இல்லை. முதல் நாள் பெய்த சிறுமழையில் சிமெண்ட் தரையின் விளிம்புகளில் சேறும் சகதியும் ஓரடி அகலத்திற்கு நிலைகொண்டிருந்தன. வருபவர்கள் எப்படியும் அந்தச் சகதியை மிதிக்காமல் வெளியேற முடியாது. மேல்கூரையிலிருந்து சதுரமான பலகைகள் சரிந்து விழத்தயாராக இருந்தன. பல கோடிகள் செலவில் புதுப்பித்ததாகச் சொன்னார்களே, அந்த லட்சணம் இது தானா என்று மனதிற்குள் நொந்துகொண்டாள்.

அழகுணர்ச்சி இல்லாது போனாலும், அடிப்படையான சுத்தமும் சுகாதாரமும் கூட இவர்களால் வழங்கமுடியவில்லையே! சென்னைக்கும், ஏன், இந்தியாவிற்கும் முதல்முறையாக வருபவர்களுக்கு இதைவிட மோசமான வரவேற்பு இருக்கமுடியுமா என்று வேதனை எழுந்தது. பக்கத்தில் நின்றிருந்த பலரும் இதை ஆமோதித்தனர். உடனடியாக ‘ஹிந்து’ வுக்கு ‘லெட்டர்ஸ் டு தி  எடிட்டர்’ எழுதப்போவதாகச் சபதம் எடுத்துக்கொண்டார் ஒரு முதியவர். எழுதினாலும் அவன் போடுவானா, ஆளெல்லாம் மாறிவிட்டார்களே என்று அலுத்துக்கொள்ளவும் செய்தார்.

வண்டி தரையிறங்கி அரைமணிக்கு  மேல் ஆனபிறகும் லதாவிடமிருந்து போன் வராதது ஆச்சரியமாக இருந்தது. நியூயார்க்கிலிருந்து கிளம்பியபோதும் சரி, துபாயில் வந்திறங்கியபோதும் சரி, உடனே பேசினாளே! ஒருவேளை குழந்தை படுத்துகிறானோ?

எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும் என்று தோன்றியது. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் முடிந்து வர. பிறகு பெட்டிகளைச் சரிபார்த்து டிராலியில் ஏற்றிக்கொண்டு வரவேண்டும். யாராவது உதவி செய்தால் தேவலை என்று தோன்றியது. எப்படியும் மூன்று பெட்டிகள் இருக்கும். குழந்தை வேறு. வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் சாந்தி.

அப்போது ஒரு காவலர் வேகமாக அவ்விடம் வந்தார். திருமதி சாந்தி என்பவர் இங்கு இருக்கிறாரா? அவரது மகள் லதா அழைக்கிறார் என்றதும் நான் தான் என்று பரபரக்க முன்னால் வந்தாள் சாந்தி. அடையாள அட்டை ஏதும் இருக்கிறதா? என்றதற்குத் தன் வருமானவரியெண் அட்டையைக் காட்டினாள். உள்ளே அழைத்துக்கொண்டுபோனார். என்னவோ ஏதோ என்று புரியாமல் அவர் பின்னால் நடந்தாள் சாந்தி.

சரக்குகள் வந்திறங்கும் சுழல்மேடைக்கு அருகில் லதா கலக்கத்துடன் நின்றிருந்தாள். குழந்தை அங்கும் இங்கும் ஓட எத்தனித்து அவளின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டிருந்தான். அருகில் அவளது பெட்டி ஒன்று பாதி உடைந்த நிலையில் கிடந்தது. சாமான்கள் தரையெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன.

சாந்திக்குப் புரிந்துவிட்டது. சுழல் மேடையிலிருந்து ஒரு கையால் பெட்டியை இழுக்க முயன்றபோது பெட்டியின் கைப்பிடி எகிறிக்கொண்டு வந்ததில் பெட்டி சற்று தூரத்தில் போய் விழுந்திருக்கிறது. உள்ளிருந்த பொருள்கள் சிதறிப்போய் விட்டன.

அம்மா, சாரிம்மா! என் மொபைல் போனும்  உடைந்துபோய் விட்டது. அதனால் தான் ஆளை விட்டுக்கூப்பிடச் சொன்னேன் என்றாள் லதா. குழந்தை பாட்டியைப் பார்த்து ஹாய் என்பதுபோல் கைதூக்கிக்கொண்டு அவளருகில் ஓடிவந்தான்.  அவனைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிட்டபின் கீழிறக்கி விட்டாள் சாந்தி. 

சிதறியிருந்த பொருள்களைச் சேகரித்துப் பெட்டிக்குள் ஒவ்வொன்றாக வைத்தாள். உடைந்த பெட்டியை ஒருவாறு மூடி அங்கிருந்த ஒரு பணியாளிடம் பிளாஸ்டிக் டேப் வாங்கிச் சுற்றினாள். ஒரு டிராலியில் அதை மட்டும் தனியாகவும், மற்ற பெட்டிகளை இன்னொரு டிராலியிலும் வைத்து வாசலுக்கு வந்தார்கள். லதா மீண்டும் மீண்டும் சாரி சொல்லிக்கொண்டே வந்தாள். புத்தம்புதுப்  பெட்டிதானம்மா, அதற்குள் கைப்பிடி இற்றுப்போனது எப்படி என்று தெரியவில்லை என்றாள்.

கோபால் அதற்குள் அவர்கள் இருக்குமிடம் தேடி டாக்சியைக் கொண்டுவந்தான். உடைந்த பெட்டியை முன்சீட்டில் வைத்துவிட்டு மற்ற பெட்டிகளை டிக்கியில் அடுக்கினான். சாந்தியும் லதாவும் குழந்தையும் பின்சீட்டில் அமர்ந்தனர்.

அப்போது டிராலியில் ஒரு நீலப் பெட்டியுடன் அவர்களை வேகமாகப் பின்தொடர்ந்து வந்தான் ஓர் இளைஞன், மேடம், மேடம் என்று கலவரத்துடன் கூவியபடி. 

சாந்தி  வேகமாக இறங்கினாள். யாரப்பா, என்ன வேண்டும்? என்பது போல் பார்த்தாள்.

மன்னிக்க வேண்டும் மேடம்! இது உங்கள் பெட்டியா என்று பாருங்கள். அவசரத்தில் என்னுடைய பெட்டி உங்களிடம் மாறி வந்திருக்குமோ என்று எண்ணுகிறேன். என் பெட்டியின் கைப்பிடி மட்டும் இதோ இருக்கிறது! என்று ஆங்கிலத்தில் கூறினான்.

லதா இறங்கினாள். என்ன ஆச்சரியம்! அந்த இளைஞன் சொன்னது சரி தான். அவன் கொண்டு வந்த நீலப் பெட்டி தான் அவளுடையது. அதில் தொங்கிய எமிரேட்ஸ் விமான அடையாள அட்டையைப் பார்த்தாள். அவளுடைய பெயரும் விமான டிக்கட்டின் எண்ணும் சரியாக இருந்தன. அப்படியானால் உடைந்து சிதறிய பெட்டி யாருடையது?

நன்றியோடும் அதே சமயம் குழப்பத்துடனும் அவனைப் பார்த்தாள் லதா. மிக்க நன்றி நண்பரே! ஆனால் அவசரத்தில் எடுத்தபோது உடைந்துபோன ஒரு பெட்டி என்னிடம் இருக்கிறது. அதுவும் இதே பிராண்டுள்ள நீல நிறப் பெட்டி தான். அது உங்களுடையதாக இருக்குமா பாருங்கள்! இவ்வளவு நேரம் இந்த வித்தியாசத்தைக்கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேனே, எவ்வளவு பெரிய முட்டாள் நான்! என்றாள் தழுதழுப்புடன். அவனுடைய பெட்டி உடைந்ததற்குக் காரணம் தன்னுடைய தவறுதான் என்ற குற்ற உணர்வு அவள் முகத்தில் தெளிவாக எழுதியிருந்தது. 

அடுத்த நிமிடம் அவன்முகம் வெளிச்சமானது. ஆம், இதுதான் என்னுடைய பெட்டி. கைப்பிடி பொருந்துகிறது பாருங்கள். அடடா, உடைந்துவிட்டதா? இன்னும் கொஞ்ச நாளாவது வரும் என்று பார்த்தேனே! உண்மையில் உங்கள் மீது தவறேதுமில்லை. இதன் கைப்பிடி கொஞ்ச நாளாகவே ஆடிக்கொண்டு தான் இருந்தது. அமெரிக்காவில் இதை சரிசெய்யும் பணத்தில் இந்தியாவில் புதிய பெட்டியே வாங்கிவிடலாமே என்று இருந்தேன். என்னுடைய தவறு தான். மன்னிக்க வேண்டும் என்றான் அவன்.

ஒன்று மட்டும் சொல்வீர்களா? பெட்டிக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் பத்திரமாக இருக்குமல்லவா? எதுவும் தவறிப்போயிருக்க வாய்ப்பில்லையே! ஏனென்றால்   முக்கியமான சில பத்திரங்களும் தபால்களும் அதில் இருந்தன என்றான்.

சாந்தி முந்திக்கொண்டு கூறினாள். பயப்படாதே அப்பா! எல்லாம் பத்திரமாக இருக்கிறது. நானே எடுத்து வைத்தேன் என்றவள், நான் சொல்வதைக் கேட்பாயா? உன்னிடம் இருக்கும் சாமான்களையும் இந்த வண்டியிலேயே வைத்துக்கொண்டு எங்களுடன் வா. வீட்டில் வந்து எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொள். குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். அதற்குள் கோபாலிடம் சொல்லிப் புதிய பெட்டி வாங்கிவரச் சொல்கிறேன் என்று அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

அவனுக்கு வயது சுமார் இருபது, இருபத்திரண்டு இருக்கும். கல்லூரி மாணவன்போல் தோன்றினான். தமிழ் அவ்வளவாகப் பேச வரவில்லை. ஆனால் தமிழன்தான்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. எனக்காக வண்டி வந்திருக்கும். அதில்தான் நான் போகவேண்டும். ஏனென்றால் எனக்கு சென்னையைப் பற்றி எதுவும் தெரியாது. நான் துபாயில் பிறந்து வளர்ந்தவன். இங்கு வருவது இதுதான் முதல்தடவை. உங்கள் அறிமுகம் ஏற்பட்டதிலும், என் பெட்டி திரும்பக் கிடைத்ததிலும் மிக்க மகிழ்ச்சி. நான் இந்த முகவரியில்தான் இருப்பேன். வீட்டுக்காரரின் பெயரும் தொலைபேசி எண்ணும் இதில் இருக்கிறது. வரட்டுமா? என்று ஒரு முகவரி அட்டையை சாந்தியின் கையில் திணித்துவிட்டு, லதாவையும் குழந்தையையும் பார்த்துப் புன்னகைத்தபடியே கிளம்பினான் அந்த இளைஞன். கையசைத்து ‘பை,பை' சொன்னான் குழந்தை.

கார் கத்திப்பாராவைத் தாண்டிய பிறகுதான் முகவரியைப் பார்த்தாள் சாந்தி. ‘ராஜேஷ் வாசுதேவன், அபிராமபுரம் சென்னை’ என்ற பெயரைப் படித்ததுமே  உடம்பெல்லாம் இரத்தம் கொதிப்பது போலாகியது. முகமெல்லாம் வேர்த்துப்போயிற்று. அயோக்கிய ராஸ்கல்! நீ இன்னும் சென்னையில் தான் இருக்கிறாயா? என்று மனதிற்குள் முனகினாள். தண்ணீர் குடிக்கவேண்டும்போல் இருந்தது. பாட்டிலைக் கையில் எடுத்தாள்.

‘அயோக்கிய ராஸ்கல்’ என்ற வார்த்தை மட்டும் லதாவின் காதில் விழுந்த மாதிரி இருந்தது. யாரையாவது திட்டுகிறாயா அம்மா? என்று மெதுவாகக் கேட்டாள்.

அதற்குள் ஒரு கையில் தண்ணீர் பாட்டிலும் மறுகையில் அந்த விசிட்டிங் கார்டுமாக அப்படியே மூர்ச்சையானாள் சாந்தி. அம்மா என்று அலறினாள் லதா. காரை அவசரமாக நிறுத்தினார் கோபால்.
    (தொடரும்)
***** 
(c) Y Chellappa
email: chellappay@gmail.com

32 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கொஞ்சம் பொறுக்கவேண்டும். திடீர் சஸ்பென்ஸ் வரப்போகிறது!

      நீக்கு
  2. சஸ்பென்ஸ்.....சஸ்பென்ஸ்....ஐயோ இப்படி..மூர்ச்சையான ஷாந்தியை அம்போன்னு விட்டுட்டு.... தொடரும்ன்உ சொல்லிட்டீங்களே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்போன்னு விடலீங்க! பக்கத்திலேயே பொண்ணும் பேரனும் இருக்காங்க இல்லியா?

      நீக்கு
  3. சென்னை விமான நிலையத்தின் வர்ணனை அருமை..

    திக்..திக்.. தொடரும்.. தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சிறப்பாக அமையவேண்டும் சென்னை விமான நிலையத்தின் மராமத்து. ஆனால் ஊழியர்கள் உழைக்க மறுக்கிறார்களே!

      நீக்கு
  4. சுவையோ சுவை!தொடருங்கள் தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  5. //கனியுதிர்சோலை// படத்தைப்பாத்தா கண்ணாடியுதிர் சோலைன்னுதானே தோணுது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் சொல்லலாம். மேற்கொண்டு கண்ணாடி உதிர்வதற்குள் கதையை அங்கிருந்து நகர்த்திவிட்டால் போயிற்று!

      நீக்கு
  6. சிறுகதை என்று பார்த்தேன் ஒரு பதிவில் அடங்காததா இது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதை என்று சொன்னால் மக்கள் படிப்பதில்லை என்றார் ஒரு வலை நண்பர். அதை verify செய்வதற்காக எழுதிய கதை இது.

      நீக்கு
    2. சிறுகதை என்று சொன்னால் பலரும்படிப்பார்கள் நெடுங்கதை என்றால்தான் முடியும் வரை காத்திருந்து சிலர் படிப்பார்கள்

      நீக்கு
  7. ரொப்ப சாரி... தொடர்கதைன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா எல்லாப் பதிவும் முடிஞ்சபின்தான் படிக்கவே ஆரம்பித்திருப்பேன்.

    பெட்டி உடைந்தது ஓகே. உள்ள உள்ள பொருளைப் பாத்தபின்னுமா தன்னுடையதில்லை என்று தெரிந்திருக்காது? அடுத்தவங்க பொட்டியை டேப் போட்டு ஒட்டி எப்படி கார் வரைல கொண்டுவருவாங்க..

    இரண்டாவது, யாரும் துபாயிலேயே பிறந்து அங்கயே 20 வருடம் வளர முடியாது. அவன் அப்பா,அம்மா மும்பையைச் சேர்ந்தவர்கள், இல்லைனா பெங்களூர் அல்லது மற்ற சிட்டிகளுக்குத்தான் வந்திருக்கிறேன் என்பதைச் சேர்க்கணுமோ?

    ரொம்ப ஆராயக்கூடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதறிக் கிடந்த பொருளை, அவளுடைய அம்மாதானே எடுத்து வைத்தார்? அதனால்தான் அவளுக்குத் தெரியவில்லை. (2) இருபது வருஷம் வளர்ந்தான் என்றால் இடையிடையே வெளியில்போய் படித்துவிட்டுவந்தான் என்றும் பொருள் எடுத்துக்கொள்ளலாமே! (sincere வாசகர்களுடன் அதிகம் விவாதிக்கக்கூடாதோ?)

      நீக்கு
  8. இப்டி இருக்குமா,அப்படி இருக்குமா என்று நாமே யோசிக்கும்படி சிந்தனையைத் தூண்டிவட்ட அழகான கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா? உங்கள் அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்.

      நீக்கு

  9. "அம்மா என்று அலறினாள் லதா.
    காரை அவசரமாக நிறுத்தினார் கோபால்." என்றதும்
    அடுத்த பகுதியை நாடி நிற்கிறது
    வாசகர் உள்ளம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் விரைந்து இயங்கமுடியுமா என்று தெரியவில்லையே! பார்ப்போம். நன்றி.

      நீக்கு
  10. எதிர்பாராதத் திருப்பம்தான்
    முன்னம் அதிகமாக சுத்தம் இத்யாதி
    விஷயங்களைச் சொல்லிக் கொண்டு
    வந்ததால் அது குறித்து மாறுதலாக
    வித்தியாசமாக இருக்குமோ என
    யோசித்துக் கொண்டு வருகையில்...

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  11. இப்படியா.... செய்வது எனக்கும் நெஞ்சு அடைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது சார், இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான். திடீரென்று ஏதாவது செய்துவிடுவார்கள்.

      நீக்கு
  12. காதலித்து கைவிட்ட ராஜேஷ் வாசுதேவனா அவன் இருக்கக் கூடாது ,இவன் வேற ஆளாய் இருந்தால் நல்லது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா, எடுத்துக் கொடுக்கிறீர்களே! அவன் ராஜேஷ் வாசுதேவன் அல்ல. ஆனால் "காதலித்துக் கைவிட்ட" என்று வழக்கமான theme படி அவன் இயங்கமாட்டன் என்பது உறுதி. பார்க்கலாம் என்ன நடக்குமென்று.

      நீக்கு
  13. என்ன சார் சாந்திக்கு இன்னும் ட்ரீட்மென்ட் முடியலையோ? இன்னும் அவள் கண் திறக்கவில்லையா? தொடரும்னு போட்டுட்டு இப்படிச் செய்யலாமா?

    இதுக்குத்தான் இந்தத் தொடர் கதை படிப்பதில் உள்ள சிரமம்...எல்லாம் வெளியான பிறகு வாசித்திருக்கலாம்...இப்ப பாருங்க சாந்திக்கு என்னாச்சுனு ஒரே கவலையா இருக்கு...அவளுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்க சார்...ஹெல்பு சும்மா மயங்கினதுக்கு இத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியா ரொம்ப பணக்காரியோ....ஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதையை முழு நீள நாவலாக எழுதும்படி சாந்தியும் ராஜேஷ் வாசுதேவனும் கேட்டுக்கொண்டுள்ளனர்.எனவே, இதன் அடுத்த பகுதி இந்த வலைப்பதிவில் வராது என்ற செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அச்சிலோ, மின்-புத்தகமாகவோ வரலாம். கோபம் இல்லைதானே?

      நீக்கு
    2. ஓ! அப்படியா!! அப்ப ஓகே!!!கோபமா அதெல்லாம் இல்லை சார்....வாழ்த்துகள் சார்!

      நீக்கு
  14. அடடா. என்ன இப்படி எதிர் உச்சகட்டம் ஆகிவிட்டது! Anti climax !! கோபமே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபம் வரத்தானே செய்யும் - உங்களுக்கல்ல, எனக்கு! பிளாகில்தொடர்கதை எழுதினால் படிக்கமாட்டேன் என்கிறார்களே! ஆகவே சிறுகதை என்று போட்டேன். மீதிப்பகுதியை நாவலாக வரும்போது படிக்கவேண்டியதுதான். பொறுங்கள். அவசரம் வேண்டாம்.

      நீக்கு
  15. வார இதழ்களில் தொடர்கதை படித்தது நினைவுக்கு வருகின்றது. இது போன்ற சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்திவிடுவார்கள். அடுத்தவாரம் வரை பொறுத்திருக்க வேண்டும். யார் அந்த ராஜேஷ் வாசுதேவன்> அவனுக்கும் சாந்திக்கும் என்ன தொடர்பு என்று அறிந்து கொள்ள ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இதை நாவலாக எழுதிகொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் மின்னூலாக வரலாம்! தங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு