ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

வோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்

பதிவு எண்  28/2017
 வோட்டுக்குப் பணம் வாங்கிய அனுபவம்
-இராய செல்லப்பா

திருமங்கலம் ஃபார்முலா என்கிறார்கள். அன்பளிப்பு என்கிறார்கள். தங்கக்காசு தருகிறார்கள். மளிகைக்கடை கூப்பன் தருகிறார்கள். அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்கிறார்கள். வோட்டுக்கு நாலாயிரம் தருகிறார்கள்.....

இதெல்லாம் தமிழர்களுக்குப் பழகிப்போன விஷயங்கள். தேர்தல் என்றால் இதெல்லாம் சகஜம் என்னும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொடுக்கிறார்கள், வாங்கிக்கொள்கிறோம் என்கின்றனர் மக்கள். 

கேட்கிறார்கள், கொடுக்காமல் என்ன செய்வது என்கிறார்கள் வேட்பாளர்கள்.

ஆனால் இதெல்லாம் இன்றுதான் ஆரம்பித்ததா? வோட்டுக்குப் பணம் கொடுக்கும் அல்லது கேட்கும் கூச்சமில்லாத வேட்கை எப்பொழுது முதலில் ஆரம்பித்தது என்று யாருக்காவது தெரியுமா?

***
நான் இரண்டாவது படிக்கும்போது நடந்தது. வருடம் 1957?

மாலை நேரங்களில் கூட்டமாகச் சுமார் பத்து இளைஞர்கள் தெருவில் போவார்கள். முன்னாள் போகிறவர் கையில் ஒரு விளம்பரத்தட்டி இருக்கும். அதில் கூஜா சின்னமும் ஒரு பீடிக்கட்டும் வரைந்திருக்கும். இவ்வாறு உரையாடிக்கொண்டே போவார்கள்:

கோபாலா
ஏன் சார்?
எங்கே போறே?
கடைக்குப் போறேன்

என்ன வாங்க?
பீடி வாங்க
என்னா-ஆ-ஆ-ஆ  பீடி?
கூஜா பீடி

அவ்வளவுதான். அந்த இடத்தில் நின்றுவிடுவார்கள். உடனே மக்கள் ஓடிச்சென்று அவர்கள் கொடுக்கும் சாம்பிள் பீடிக்கட்டை ஆர்வமாகப் பெற்றுக்கொள்வார்கள். பிறகு அந்த விளம்பரப் பயணம் தொடரும்.

அடுத்த வாரமும் இதே கூட்டம் வரும். அதே இளைஞர்கள். பீடியின் பெயர்தான் வேறாக இருக்கும். ராஜா பீடி, ஜாடிபீடி, மல்லிகை பீடி, சய்யது பீடி. சரோஜாதேவி பேரில் கூட பீடி இருந்தது. ‘கல்யாணப்பரிசு’ வெளிவந்தபோது. ஏன், தொப்பி பீடி  கூட இருந்தது.

பீடி வாங்காதவர்களுக்கு தீப்பெட்டி மட்டும் தருவார்கள்.

ஒருநாள் கூட்டமும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல் சிலர் வீடுவீடாக வந்தார்கள். வீட்டிலுள்ள பெரியவர்களைப் பார்த்து வணக்கம் சொன்னார்கள். ஒரு தீப்பெட்டியைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அப்பா வெளியில் போயிருந்தார். ஆகவே என்னிடம் கொடுத்தார்கள். 

‘அப்பா வந்ததும் குடுத்துடா தம்பி’ என்றார் ஒருவர்.

‘வேண்டாங்க, அப்பா பீடி பிடிக்க மாட்டார்’ என்றேன். சிரித்தார்கள். ‘பரவாயில்ல தம்பி. வெளக்கு ஏத்தறதுக்கு வேணுமில்லையா?’

அப்பா வந்ததும் கொடுத்தேன். தீப்பெட்டியைத் திறந்தார். உள்ளேயிருந்து அரை ரூபாய் நாணயம் (எட்டணா- அதாவது இன்றைய ஐம்பது பைசா) வெளியில் வந்து விழுந்தது.

‘ஓட்டுப் போடறதுக்காக கொடுத்தார்களோ? ஏன் வாங்கினாய்?’ என்றார்.

இரவில் தூங்கப்போகுமுன் பெரியவர்கள் காலாற நடப்பார்கள். அன்று நடந்த செய்திகளை அலசுவார்கள். எல்லா வீடுகளுக்கும் தீப்பெட்டி கொடுக்கப்பட்டது தெரிந்தது. கவுன்சிலர் தேர்தலில் நிற்கும் சுயேச்சை வேட்பாளர் கொடுத்ததாம். சிலருக்கு ஒருரூபாய் நாணயமும் இருந்ததாம். என்ன கணக்கு என்று தெரியவில்லை.

‘காங்கிரஸ்காரன் கொடுப்பானா இப்படி?’ என்றார் நாயக்கர். பெயர் தெரியாது. மிகவும் வயதானவர். ‘அந்த எட்டணாவுக்குப் புகையிலை வாங்கிவிட்டேன்’ என்று கணக்கும் கொடுத்தார்.

‘அவன் எதுக்குடா கொடுக்கணும்? நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தானே, அது போதாதா?’ என்பார் அவரைவிட வயதான இன்னொரு நாயக்கர். ‘எனக்கும் எட்டணா தான் இருந்தது’ என்றார்.
****
எனது கல்லூரிக் காலத்தில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழு என்ற அமைப்பை ஆதரித்துவந்தேன். ஈவெகி சம்பத், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோரோடு சம்பந்தப்பட்ட அமைப்பு. காமராஜரை முன்னிறுத்திய ஒன்று. அதன் மாவட்ட மாநாடு ஒன்றில் நான் நீண்ட கவிதை வாசித்ததுண்டு. காமராசருடன் போட்டோ எடுத்துக்கொண்டதும் உண்டு. (தேடவேண்டும்.)

தமிழகச் சட்டமன்றத்திற்கும், இந்திய நாடாளுமன்றத்திற்கும் ஒரே நாளில் பொதுத்தேர்தல் வந்தது. (அப்போதெல்லாம் இரண்டும் ஒரே நாளில் நடக்கும். பிற்பாடு இந்திரா காந்தி காலத்தில்தான் அவை பிரிந்தன.) 

1967ஆம் வருடம். இந்தி எதிர்ப்புப் பின்னணியில் நடந்த தேர்தல். 
இராணிப்பேட்டை காங்கிரஸ் கட்சியில் (அமரர்) சம்பத் நரசிம்மன் என்பவர் முக்கியமானவர். சுதந்திரப் போராட்ட வீரர், நகர காங்கிரஸ் தலைவர், நகர்மன்றத் தலைவர் என்று இருந்தவர். (அடுத்த பொதுத்தேர்தலில் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளாராகப் போட்டியிட்டுத் தோற்றவர்.) அவர்தான் எங்களுக்கு வழிகாட்டி. சுமார் இருபது இளைஞர்கள் அவரின்கீழ் தேர்தல் வேலை பார்த்தோம்.

நாங்கள் அப்போது ‘பிஞ்சி’ என்ற பகுதியில் குடியிருந்தோம்.(இப்போது அந்தப் பகுதி இல்லையாம். பைபாஸ் சாலை போட்டதில் அழிந்துவிட்டதாம்.) சம்பத் நரசிம்மன் வீட்டில் இருந்து பத்து நிமிட நடை தூரம். 

தேர்தலுக்கு முதல் நாள் இரவு பத்து மணிக்கு என் நண்பர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். திமுக-வினர் வீடுவீடாகச் சென்று பணம் கொடுக்கிறார்களாம். ஓட்டுக்கு இரண்டுரூபாய். உடனே சம்பத் நரசிம்மனிடம் ஓடினோம். அவரும் விழித்துக்கொண்டிருந்தார். சொன்னோம். அவர் சிரித்தார். 

‘நீங்கள் அனுபவம் இல்லாதவர்கள். அதனால் பதற்றத்துடன் இருக்கிறீர்கள். என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? போய்ப் படுங்கள். காலையில் ஐந்து மணிக்கே வந்துவிடவேண்டும்’ என்று வழியனுப்பிவைத்தார்.

‘அவர்கள் இரண்டு ரூபாய் கொடுக்கும்போது  நாம் மூன்று ரூபாய் கொடுத்தால் என்ன?’ என்று கேட்டேன் நண்பர்களிடம்.

நண்பன் சொன்னான்: ‘நம்ம கட்சிக்காரர்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. அவர்களே போடுவார்கள். எதிர்க்கட்சிக்காரன் என்று தெரிந்தால், அவனுக்குக் கொடுப்பதில் பயனில்லை. நமக்குப் போட மாட்டான். இரண்டும் இல்லாதவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும். அவர்களைத் தான் தேர்ந்தெடுத்து திமுக-வினர் கொடுத்துவிட்டார்களே!’

அடுத்தநாள் காலையில் ஐந்துமணிக்கே திமுக-வினர் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொரு தெருவுக்கும் ஐந்து பள்ளி மாணவர்களை ஏற்பாடு செய்துகொண்டு திமுக முக்கியஸ்தர் ஒருவர்  வீடுவீடாகப் போவார். வீட்டுக்காரரோ, காரியோ, வெளியே வந்தவுடன் இந்தப் பையன்கள் தடால் என்று அவருடைய காலில் விழவேண்டும். 

‘போடுங்கம்மா ஒட்டு-அரிசி வெலையப் பாத்து’ என்று ஒரே குரலில் கத்தவேண்டும். அடுத்த வீட்டுக்குப் போனால் வேறு வாசகம். ‘போடுங்கம்மா ஒட்டு - பருப்பு வெலையப் பாத்து’. அதற்கடுத்த வீட்டில் ‘போடுங்கம்மா ஒட்டு - சர்க்கரை  வெலையப் பாத்து’. இப்படி ஒவ்வொரு உணவுப்பொருளாக மாற்றிக்கொள்ளும் சுதந்திரம்  பையன்களுக்கு உண்டு. 

புதிதாகத் திருமண ஆன பெண்களை  அம்மா என்று விளிப்பது தகாது என்ற தமிழர் நாகரிகத்தையொட்டி, ‘போடுங்கம்மா’ என்பதைப் ‘போடுங்கக்கா ஒட்டு...’ என்று அவர்களாகவே மாற்றிக்கொள்ளலாம். பத்து வீடுகளில் காலில் விழுந்தவுடன் ஆளுக்கு ஒரு ரூபாய் தரப்படும்.

கிடைத்த பள்ளி மாணவர்களை எல்லாம் திமுக-வினர் இவ்வாறாக ‘கவர்’ செய்துவிட்டதால் எங்களுக்கு வேலை செய்யவோ காலில் விழவோ பையன்கள் கிடைக்கவில்லை.

ஆனாலும், பையன்களுக்குத் திமுக- அநீதி இழைத்துவிட்டதாகவே தோன்றியது. ஏனென்றால் ஓராண்டுக்கு முன்பு நான் பள்ளி மாணவனாய் இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, தார் டப்பாவும், பிரஷும் கொடுத்து, ‘இந்தி ஒழிக’ என்று எதன்மீது வேண்டுமானாலும் எழுதச் சொல்லி, ஒரு முறை எழுதினால் பத்து ரூபாய் கொடுத்தார்கள் திமுக-வினர். இப்போது மண்தரையில் விழுந்து கும்பிடுவதற்கு, அதுவும், பத்து வீட்டுக்குச் சேர்த்து ஒரே ஒரு ரூபாய் தானா? சில பையன்களுக்கு நெற்றியில் சிராய்ப்பும் ஏற்பட்டிருந்தது.

அந்தத் தேர்தலில் (1967) திமுக-கூட்டணி வென்றது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தானே! வாக்காளர்களுக்கு லஞ்சம் தராமல் திமுக வென்ற ஒரே தேர்தல் அதுவாகத்தான் இருக்கும்.
***
அடுத்த வருடம் இராணிப்பேட்டை நகரமன்றத்திற்கான கவுன்சிலர்கள் தேர்தல் வந்தது.  என்னுடைய வார்டில் (‘வட்டம்’) ஒரு திடீர் பஸ் அதிபருக்கு காங்கிரசில் இடம்கொடுத்துவிட்டார்கள். தேர்தலுக்கென்றே கட்சியில் சேர்ந்தவர் அவர். அதனால், அந்த வார்டில் நிற்பதற்குத் திட்டமிட்டிருந்த பச்சையப்ப முதலியார் என்ற  காங்கிரஸ்காரர் கோபித்துக்கொண்டு  கட்சியில் இருந்து  விலகி, சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

பஸ் அதிரை எங்களுக்குப் பிடிக்கவில்லை, எனவே பழம்பெரும் காங்கிரஸ்காரரான பச்சையப்ப முதலியாருக்கு வேலை செய்யலாம் என்று நண்பர் கஜராஜ் கூறினார். வெற்றி பெற்றவுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துவிடுவேன் என்று அவர் உறுதிமொழி கொடுத்திருந்தாராம்.

முதலியாருக்கு பஜாரில் மளிகைக்கடை இருந்தது. தகப்பனார் காலத்தில் தொடங்கியது. அவருக்குப்பின் இவருக்கு வந்தது. ஆனால் மேம்போக்காகத்தான் முதலியார் கடையைப் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, எப்பொழுது பார்த்தாலும் கல்லாவில் அமர்ந்து ‘தினமணி’யோ ‘நவ இந்தியாவோ’தான் படித்துக்கொண்டிருப்பார். நல்ல ஊழியர்கள் நாலு பேர் இருந்ததால் வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் வேலை முதலியாருக்கு இருக்கவில்லை. ஆனால் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். 

அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பார். ஊழியர்களையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். அதனால் ஊரில் நல்ல பெயர் இருந்தது.

கஜராஜும்  நானும் முதலியார் வீட்டுக்கு மிக அருகிலேயே குடி இருந்தோம். எனவே முதலியார் மட்டுமின்றி அவரது மனைவியும் எங்கள் வீடுகளுக்கு வந்து அவருக்காகப் பிரச்சாரம் செய்ய வேண்டிக்கொண்டார்கள். சரி என்றோம்.
***
அடுத்த தெருவில் ஒரு மாடியறை எங்களுக்கான ‘தேர்தல் அலுவலகம்’ ஆனது. தனது பெருத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு குறுகலான மாடிப்படிகளில் ஏறி வருவது முதலியாருக்கு ஆபத்தான விஷயமாக தோன்றியதால், ஒரே ஒருமுறைதான் வந்தார். எங்களுக்கு உட்காரவும் இரவில் படுத்துக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டதா என்று பார்வையிட்டார். எதிரில் இருந்த தேநீர்க் கடைக்காரரை அழைத்து நாங்கள் எது கேட்டாலும் கொடுக்கும்படி சொன்னார். அதிக பட்சம் தேநீரும் பொறை, பிஸ்கட்டும், சிறிய வெங்காய சமூசாவும் மட்டுமே அவரால் கொடுக்கமுடிந்தது. 

பிரச்சாரம் செய்ய ஒரு மைக் செட், சினிமாப் பாடல்கள் கொண்ட சில இசைத்தட்டுக்கள், அதற்கான பிளேயர் போன்றவையும் கிடைத்தன. இப்போதுபோல கட்டுப்பாடுகள் அப்போது இல்லை. எனவே இரவில் பத்துமணிக்குப் பிறகும் பிரச்சாரம் செய்வோம்.

எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் -அதாவது ஒரிஜினல் காங்கிரஸ் கட்சியினர்- காமராஜர் வாழ்க- நேருஜி வாழ்க- என்றெல்லாம் பேசினார்கள். எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையே! சுயேச்சை வேட்பாளரைப் பற்றி என்னத்தைச் சொல்வது! எனவே, புதிய உத்திகளைக் கண்டுபிடிக்கவேண்டி இருந்தது. நமது வேட்பாளர் மளிகைக்கடைக்காரர் என்பதால்,

அரிசியும் பருப்பும் வழங்கி மக்களை வாழவைக்கும்
 அன்பராம் பச்சையப்ப முதலியார் வாழ்க   - என்றும்,

பலமுறை இவர்கடைப் பொருட்களை உண்டாமே,
 ஒருமுறை இவருக்கு ஓட்டளித்தால் தவறென்ன? - என்றும்  

இதுமாதிரியும் வாசகங்கள் தயாரித்தோம்/தேன். 

தேர்தலுக்குப் பத்து நாட்கள் முன்புதான் பிரச்சாரம் தொடங்கியது. முதலியார் தரையில் நடந்து வோட்டுக்கேட்பதை மேலிருந்து பார்த்து, அதற்கு ‘sync ஆகுமாறு மேற்படி அடுக்குமொழிப் பிரச்சாரத்தை மாடியறையில் நடத்தினோம். ஆனால் இரண்டு முறை மேற்படி வாசகங்களைக் கேட்ட முதலியார், 'அதெல்லாம் வேண்டாம், வேண்டாம், வெறுமனே சினிமாப் பாடல்களைப் போடுங்கள்' என்று உத்தரவிட்டார்.

மொத்த வாக்காளர்கள் 526 பேர்தான். அதில் இறந்தவர்கள், வீட்டைக் காலி செய்துவிட்டு வேறெங்கோ போனவர்கள், தற்காலிகமாக வெளியூர் போனவர்கள் என்பதைக் கழித்தால் மீதி நானூற்று ஐம்பதுபேர்தான். எனவே வீடுவீடாகப் போவதே போதுமானது என்று முதலியார் முடிவு செய்தார். கடையில் பாக்கி வைத்துவிட்டுத் தலைமறைவாக இருப்பவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியும் என்பதால் அவருடைய துணைவியாரும் இதை ஆதரித்தார்.

கடைசியில் முதலியார் வெற்றிபெற்றார், இருபது வாக்குகள் வித்தியாசத்தில். காங்கிரஸ் வேட்பாளரின் பஸ் சர்வீஸ் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி அவருக்கு எதிரான முக்கிய வேட்பாளரான முதலியாருக்கு ஆதரவான வாக்குகளாக மாறிவிட்டது. வெற்றி பெற்றபிறகு ஒருவாரம் வரையில் தனது வார்டிலிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மேரி பிஸ்கட்டும் கால்கிலோ சர்க்கரையும் கொடுத்தாராம் முதலியார். இது லஞ்சத்தில் சேருமா என்று தெரியவில்லை.

பொதுவாக, தேர்தல் முடிந்தபிறகு, வாக்களித்த மக்கள்தானே பாதிக்கப்படுவது வழக்கம்! இந்தத் தேர்தலில் பாதிக்கப்பட்டவர், தேநீர்க் கடைக்காரர் தான். முதலியார் வீட்டுக்குப் போனால் கஜராஜை போய்ப்பார் என்று சொல்லிவிட்டார்களாம். அவரிடம் போனால் என்னிடம் கணக்கு சரிபார்த்து வரச்சொன்னாராம்.  சிறு கணக்குப் புத்தகத்துடன் என் வீட்டுக்கு வந்தவரை அப்பா கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டார். 

கஜராஜிடம் சென்று நடந்ததைக் கூறினேன். நான் ஒரே ஒருநாள் ஒரு காப்பி சாப்பிட்டதோடு சரி. ஆனால் கணக்கு நோட்டில் ஒவ்வொருநாளும் ஐம்பது தேநீர், இருபது காப்பி, அறுபது பொறை, நூறு சமூசா என்று இருந்தது. உண்மை என்னவென்று கஜராஜூக்குத் தான் தெரியும். ‘தேர்தல் கணக்குன்னா இப்படித்தான் இருக்கும்’ என்று சிரித்தார் அவர். 

‘நம்ப ஆள் ஜெயித்துவிட்டார் அல்லவா? இந்தச் சின்ன விஷயத்திற்கெல்லாம் விவாதம் பண்ணக்கூடாது. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பொறுப்பைத் தன்வசம் எடுத்துக்கொண்டார். மொத்தக் கணக்கில் இருபது சதம் தள்ளுபடிசெய்துவிட்டு, பாக்கித்தொகையை வாராவாரம் டீ, காப்பி, சர்க்கரை என்று முதலியார் கடையில் வாங்கிக் கழித்துவிடவேண்டும் என்று முடிவானதாம்.

தேர்தல் கணக்குகளைச் சமர்ப்பிக்கும்போது என் பெயரைக் குறிப்பிட்டு, பிரச்சாரத்திற்காக ஒரு தொகை எனக்கு வழங்கியதாக இருந்ததாம்....! பாவிகள். ஆண்டவரே, அவர்களை மன்னியும்.

(முதலியார் அதற்குப்பின் பல ஆண்டுகள் வாழ்ந்தார். தினமும் சைக்கிளில்தான் கடைக்குப் போவது வழக்கம். சாலையின் மீதே இருந்தது வீட்டுவாசல். தரையில் இருந்து வாசலை அடைய மூன்று உயரமான படிகள் உண்டு. உள்ளேயிருந்து சைக்கிளோடு இறங்கிவரும்போது அந்த மூன்று படிகளில் ஏதோ ஒன்றில் கால் தடுக்கி விழுந்து, வீட்டு வாசலிலேயே உடனடி மரணம் அடைந்துவிட்டார் அவர். அவர் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்  என்று நினைக்கிறேன். ஏனெனில், சொன்னபடியே, தேர்தலில் வென்றவுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.)

© Y Chellappa

23 கருத்துகள்:

 1. வாக்குகள் விழுந்து வெற்றி பெற்றபின் தரும் பரிசுகள் - அதுவும் முன்னரே உறுதி அளிக்கப்படாத பரிசுகள் - லஞ்சத்தில் சேராது என்று நினைக்கிறேன். மகிழ்ச்சியின் வெளிப்பாடு அது.

  57 களிலேயே அந்தக் காலகட்டங்களுக்கேற்ப லஞ்சம் இருந்திருக்கிறது. ஆனால் இன்னும் முன்னரே மன்னர் காலத்தில் கூட இருந்திருக்கும். சாணக்கிய நீதி படித்தால் அதில் இந்த விஷயமும் இருக்கலாம்!

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ...உங்கள் வரவை விடவும் தமிழ்மணத்தில் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவர்கள் அதை மறந்தே போய்விட்டார்கள்!
   இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

   நீக்கு
  2. நான் படிக்கும் எல்லா தளங்களிலும் தம இருக்கும் பட்சத்தில் தவறாது வாக்களித்து விடுவது வழக்கம்!

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்று காங்கிரஸ்காரர்கள் வோட்டுக்குப் பணம் கொடுக்காமல் இருந்தது தான் சரி என்று தோன்றுகிறது. இல்லையென்றால், இன்று நாலாயிரம் வீதம் கொடுத்துவிட்டு, தேர்தலையும் ரத்து செய்து விட்டார்களே, அந்த அதிர்ச்சியை தாங்கியிருக்க முடியுமா? எதிர்காலத்தில் ஆர்கே நகர் என்னவாகும்?

   நீக்கு
 3. இந்த லஞ்சம் என்பது நம்கலாச்சாரத்திலேயே ஊறிய ஒன்றா சிறு வயதில் எனக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் கலாச்சாரம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஒரு அம்சம்தான் லஞ்சம் என்று உலகம் முழுதும் பார்க்கிறேன். நாம் லஞ்சம் என்கிறோம். மேற்குநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் அதை கன்சல்டன்சி ஃபீஸ் என்று கௌரவமாக அழைக்கிறார்கள்.

   நீக்கு
 4. அன்பவங்களை சுவாரசியாமாகப் பகிர்கிறீர்கள். அண்ணாதுரை காசுக்கு ஓட்டு போடுவதைப் பற்றி பேசியதை இணையத்தில் கேட்டேன்.
  நானும் எந்த தளம் சென்றாலும் த.ம.போடாமல் செல்ல மாட்டேன்.தற்போது புதிய சிக்கல் ஒன்று முளைத்திருக்கிறது என்னவெனில் தம வாக்கு போட்டு விட்டால் பிரச்சனை இல்லை. முதலில் பின்னூட்டமிட்டு விட்டு பார்த்தால் வாக்குப் பட்டை காணாம போய்விடுகிறது. பேக் பட்டனை அழுத்தி பின் சென்று போடலாம்.வேறு சில வழிகளும் உள்ளன.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. தங்கள் வரவுக்கு நன்றி. தமிழ்மணத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. வோட்டுப் போட்டபிறகு சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது என்பதை தினமும் பார்க்கிறேன். குறைந்தது மூன்று நிமிடமாவது சுற்றுகிறது. அதன்பிறகே வெளிவருகிறது. வேகம் நிறைந்த wifi உள்ள அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது. அதே போல்,
  ranking இலும் ஒரு குழப்பம் தெரிகிறது. அமெரிக்காவில் பகல் நேரத்தில் எனது தளத்தின் rank 79 என்று வருகிறது. இரவு நேரத்தில்(அதாவது இந்தியாவின் பகல் நேரம்) 186 என்று வருகிறது. சிலபேர், கடைசியாக பதிவு எழுதி ஆறு மாதங்கள் ஆகிறது. அவர்களின் rank தினந்தோறும் குறைந்து வருவதையும், நூறுக்கும் கீழே இருப்பதையும் பார்க்கிறேன். நமக்கு rank எதுவும் வேண்டாம். கணக்கு படித்துவிட்ட கஷ்டம், எல்லாவற்றையும் கணக்குப் பண்ணச் சொல்கிறது!

  பதிலளிநீக்கு
 7. பழைய அனுபவங்கள் படிக்க சுவையாக இருக்கிறது.... ஆமாம் உங்கள் தளத்தில் followers gadgets இல்லையே ஏன். முடிந்தால் அடை சேர்க்கவும் இன்று ஏதோச்சையாக தமிழ்மணம் பக்கம் வந்த போது உங்கள் பதிவை கவனித்தேன்

  பதிலளிநீக்கு
 8. அக்கால அரசியல் வித்தியாசமாக இருந்ததை தங்கள் பதிவு உணர்த்தியது.

  பதிலளிநீக்கு
 9. சார் என்ன சார் அட நீங்களும் பிரச்சாரம் எல்லாம் செய்து தேர்தல் வேலை எல்லாம் கவனித்தீர்களா. ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது வாசிக்க!! அப்படிப் பார்த்தால் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது இல்லையா....ராமாயணம், மகாபாரதக் காலத்திலியும் இருந்திருக்கும் என்றுதான் தெரிகிறது.

  சர்க்கரையும் மேரி பிஸ்கட்டும் அப்போது பரிசுப் பொருளாக இருந்திருக்கலாம் வெற்றியைக் கொண்டாட...ஆனால் அடுத்த தேர்தலுக்கு அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்ற வகையில் லஞ்சமாக இருக்குமோ...!!!

  என்றாலும் சே உங்கள் பங்கு வரவே இல்லையே!! ஹும் இதுவும் ஏமாற்றல்தான்...வடை போச்சே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு எப்போதுமே இழப்புதான்! விடுங்கள், எல்லாம் ஓர் அனுபவம்தானே! அந்த அனுபவத்தைப் பெறுவதற்குக் கொடுத்த விலையாகக் கருதவேண்டியதுதான்!

   நீக்கு
 10. வோட்டுக்குப் பணம் வாங்குவது
  வருவாய் எனலாம் - அது
  அன்றைய நாள் மட்டுமே!
  வோட்டுப் போட்டு
  நல்லவரைத் தெரிவு செய்தால்
  ஐந்தாண்டு வருவாய் எனலாம் - அதை
  எவர் தான் சிந்திக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய வருவாயைத்தானே 'வருவாய்!' என்று வரவேற்கிறார்கள் பொதுமக்கள்!

   நீக்கு
 11. உங்கள் அனுபவம் நல்லா ரசனையா இருந்தது.

  யாருமே உங்ககிட்ட கேட்கலையே... மேரி பிஸ்கட் எப்படி இருந்ததுன்னு. அந்த வாரத்துல என்ன ஸ்வீட் உங்க வீட்டுல பண்ணாங்க?

  பதிலளிநீக்கு
 12. உங்கள் அனுபவம் நல்லா ரசனையா இருந்தது.

  யாருமே உங்ககிட்ட கேட்கலையே... மேரி பிஸ்கட் எப்படி இருந்ததுன்னு. அந்த வாரத்துல என்ன ஸ்வீட் உங்க வீட்டுல பண்ணாங்க? (சும்மா.. ஜாலியாத்தான் கேட்கிறேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையைச் சொன்னால் அந்த நாட்களில் ஸ்வீட் செய்கிற பழக்கமே இல்லை எனலாம். அதிக பட்சம் ஒரு ரவாகேசரிதான்!

   நீக்கு
 13. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது என்பது இதற்கு மிகவும் பொருந்தும் :)
  த ம 7

  பதிலளிநீக்கு