வெள்ளி, ஏப்ரல் 07, 2017

ஓடு கண்ணா, ஓடு! (2) (இறுதி)

பதிவு எண்  26/  2017
 ஓடு கண்ணா, ஓடு!  (இறுதி)
-இராய செல்லப்பா

இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

சம்பளம் குறைவுதான். ஆனால் அதிகாரம் அதிகம். ‘பாஷா ஷூ ஃபாக்டரி’ யில் டெக்னிக்கல் சூபர்வைசர் என்றால் முன்னூறு தொழிலாளர்களும் அதிருவார்கள். ‘இனா சார்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இனாயத்துல்லா, கண்டிப்பானவர். ஏற்றுமதிக்குப் போகும் ஷூக்களுக்கு அவர்தான் இறுதியான பொறுப்பாளர். கொடுக்கப்பட்ட அளவீடுகளில் இருந்து இம்மியளவும் பிறழுவதை அனுமதிக்கமாட்டார். 

வெளிநாடுகளில் இருந்து சரக்குகளுக்கு ஆர்டர் கொடுக்க வரும் நபர்களைத் தனது தொழில் அறிவினால் எளிதாகக் கவர்ந்துவிடுவார். அவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் இவரிடம் பதில் இருக்கும். புதிய வடிவமைப்புகளுக்கு இவரே ஆலோசனைகள் தருவார். பெரும்பாலும் அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுவிடும். ஒன்றை ஆர்டர் செய்ய வந்தவர்கள் மேலும் சிலவற்றையும் ஆர்டர் செய்யத் தூண்டுதலாகும்.   கம்பெனிக்கு எதிர்பாராத வருமானம். எனவே இனாவின் செயல்பாடுகளில் அரிதாகவே தலையிடுவார், முதலாளி.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்தவுடன் ஐ.டி.ஐ. சேர்ந்து காலணிகள் தயாரிப்பில் பட்டயம் பெற்றாள் பாத்திமா. படிப்பு நன்றாக வந்தது. ஆனால் தொடர்ந்து தன்னைப் பட்டப்படிப்புவரை படிக்கவைக்கும்  நிலையில் குடும்பம் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஆகையால் தானாகவே தொழில்படிப்பை மேற்கொண்டாள். பிறகு இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள்.

ஷூக்கள் தயாரிப்பதில் நுட்பமான அம்சங்கள் எல்லாம் அவளுக்கு எளிதில் பிடிபட்டன. குறிப்பாகப் பெண்களுக்கான ஷூக்களின் வடிவமைப்பில் அவளால் பல ஆலோசனைகளைக் கூறமுடிந்தது. அதை வெளிநாட்டு வர்த்தகர்களும் வரவேற்றதால், பாத்திமாவுக்கு எளிதாகப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தது.

இனா சாரும் அவளுக்கு அதிகபட்ச சுதந்திரம் கொடுத்திருந்தார். தரக் கட்டுப்பாட்டுக்கு அவளையே அதிகாரியாக நியமித்தார். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பரிசோதிக்கும் அவளது கடமை உணர்ச்சியை முதலாளியிடம் அடிக்கடி  சொல்லிக்கொண்டே இருப்பார். இவளால் இன்னும் அதிக உயரத்துக்குப் போகமுடியும்; ஆனால் அந்த அளவுக்கு நமது கம்பெனி பெரியதாக வளரவேண்டுமே என்பார். அதில்தான் விளைந்தது விபரீதம்.

வாணியம்பாடியிலும், அருகில் இருந்த ஆம்பூரிலும் காலணி, கைப்பை, முதலிய தோல்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக நூறுக்கும் மேல் இருந்தன. இந்த நிறுவனங்களில் மிகப்பல, முஸ்லீம்களால் தலைமுறை தலைமுறையாக நடத்தப்பட்டு வருபவை. திருமண உறவினால் இவற்றின் உரிமையாளர்களில் பலர் பங்காளிகளாகவோ, சம்பந்திகளாகவோ ஆகி இருந்தனர். அதனால் ஒரு நிறுவனத்தின் தொழில் இரகசியங்கள் எளிதாக இன்னொரு நிறுவனத்திற்குக் கிடைக்க வழி ஏற்பட்டது. குடும்பத்தகராறுகள், நிறுவனத்தகராறுகளாகி,   நல்ல நிறுவனங்கள் கூட, பிளவுபட நேர்ந்ததுண்டு.

ஆனால் ‘பாஷா ஷூ ஃபாக்டரி’ யின் தரத்துடன் மற்றவைகளால் போட்டியிட முடியாமல் இருந்தது. ஏற்றுமதிக்கான அகில இந்தியப் பரிசையும் தொடர்ந்து மூன்று வருடங்களாக அதுவே பெற்றுவந்தது. எதிரிகள் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்ததில், இனாவும் பாத்திமாவும் இருக்கும்வரை அந்தக் கம்பெனியை யாராலும் அசைக்கமுடியாது என்று தெரிந்தது. எனவே இருவரில் ஒருவரையாவது தன் கம்பெனிக்கு இழுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தது ஒரு போட்டி நிறுவனமான ‘ஷூ-22’ எக்ஸ்போர்ட் கம்பெனி. மத்தியக் கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகள் எண்ணெய் நிறுவனமொன்றில் உயர்பதவியில் இருந்தவரான அலீம் என்பவரால் தொடங்கப்பட்டிருந்த கம்பெனி. முதலீடு செய்யக் கோடிக்கணக்கில் பணம் இருந்தது.  

முதலில் உள்ளூர்ப் பெரியமனிதர்கள் மூலம் இரகசியமாகத் தூது அனுப்பினார். கம்பெனியை விலைக்கு வாங்கிவிடச் செய்த முயற்சி பலந்தராததால்,  இனாவைக் குறிவைத்து காய் நகர்த்தினார். ஆனால், ‘பாஷா ஷூ ஃபாக்டரி’ தன் தாய்வீடு மாதிரி என்றும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் போட்டிக் கம்பெனிக்கு மாறும் உத்தேசம் இல்லை என்றும் இனா தெரிவித்துவிட்டார். இதனால் அடுத்த இலக்கு பாத்திமாவை நோக்கித் திரும்பியது.  

பாத்திமாவுக்கும் அவளது மேலதிகாரியான இனாவுக்கும் ஒருநாள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. தான் ஆர்டர் செய்திருந்த சரக்குகளை ஒரு மாதம் முன்னதாகவே அனுப்ப முடியுமா என்று ஒரு வெளிநாட்டு வர்த்தகர் கேட்டிருந்தார். முடியாது என்று இனா தீர்மானமாகச் சொல்லி விட்டார். ஆனால் பாத்திமாவுக்கோ வேறு யோசனைகள் இருந்தன. அவளோடு தொழில்நுட்பம் படித்தவர்களில், திறமையான, ஆனால், சரியான சம்பளம் இல்லாமல் வேறு கம்பெனிகளில் இருக்கும் நான்கு பேரை உடனடியாக நமது கம்பெனிக்கு அழைத்துக்கொண்டால், உரிய காலத்திற்குள் அந்த ஆர்டரைத் தன்னால் நிறைவேற்றித்தர முடியும் என்றாள் பாத்திமா. தொடர்ந்து ஆர்டர்கள் வழங்கிவரும் அந்த வர்த்தகரை நாம் விட்டுவிடக்கூடாது, அவருக்கு ஒரு நெருக்கடி என்றால் நாம் உதவியாக இருக்கவேண்டும் என்றாள்.

இனாவுக்குக் கோபம் வந்தது. ‘உனக்கு அதிகப்படியான சலுகை வழங்கி விட்டது நிர்வாகம். அதனால் தான் இப்படிப் பேசுகிறாய். அவசரகோலத்தில் வெளிநாட்டு ஆர்டர்களை இப்படிக் கையாண்டால் நம் பெயர் கேட்டுப் போவதுதான் பலனாக இருக்கும். இதையெல்லாம் புரிந்துகொள்ள உனக்கு அனுபவம் போதாது’ என்றார்.

முதலாளியைப் பார்த்து, ‘இவள் பேசுவதைக் கேட்டால், இவளே இந்தக் கம்பெனிக்கு முதலாளி மாதிரி இல்லையா?’ என்று உசுப்பினார்.

முதலாளிக்கு யாரைப் பரிந்து பேசுவது என்று தெரியவில்லை. இரண்டுபேரும் கம்பெனியின் நல்லதற்குத்தான் பேசுகிறார்கள். ஆனால் இவள் சிறிய பொறுப்பில் இருப்பவள். இனாவோ உயர்பதவியில் இருப்பவர். அனுபவசாலி. ஆகவே இனா சொல்வதையே கேட்பது  என்று முடிவு செய்தார்.   

பாத்திமாவைப் பார்த்து, ‘இங்க பாரும்மா, இனா சார் சொல்றதுதான் ஃபைனல். தெரிஞ்சுதா? மிஸ்டர் இனா, இந்த விஷயம் இத்தோடு முடிந்தது. மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பாத்திமாவுக்கு அவர்கள்மீது ஏனோ கோபமே வரவில்லை. அவர்கள் அனுபவசாலிகள் என்பது சரியே. இத்தனை வருடங்களாக அவர்கள்தாம் கம்பெனியின் பெயரைக் காப்பாற்றி வந்திருப்பவர்கள். எனவே தம் கீழ், சிறிய பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து வரும் ஆலோசனைகளை அவர்கள் வரவேற்காமல் போவதில் வியப்பில்லை.

***
இரவு எட்டு மணிக்குத் தன் வீட்டுக் கதவைத் தட்டுபவர் யாராயிருக்கும் என்று வியப்போடு திறந்தாள் பாத்திமா. வந்தவள், ஆமினா. மேல்விஷாரம் கல்லூரியில் கேண்டீன் நடத்தும் மாஸ்டர்பாயின் மகள். பாத்திமாவைவிட சில வருடங்கள் மூத்தவள்.

‘வாங்க அக்கா, ஏது ரொம்ப தூரம் வந்துட்டீங்க?’ என்று வரவேற்றாள் பாத்திமா. பக்கத்து தெருவில் குடியிருந்தாலும் அடிக்கடி வரமாட்டாள்.

உள்ளே வேறு யாராவது இருக்கிறார்களா என்று கண்களை அகலமாக விரித்துப் பார்த்துக் கொண்டே வாசல் கதவைத் தாழிட்ட ஆமினா,
உணவருந்தும் நாற்காலியில் உட்கார்ந்தாள்.

இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்த பாத்திமா, ‘அப்பாரு நல்ல இருக்காறா அக்கா’ என்றாள்.

‘நல்ல இருக்காரும்மா. நீ எப்படி இருக்கே?’

‘எனக்கு என்ன கொறச்சல்? நல்லாத்தானே இருக்கேன்’ என்று சிரித்தாள் பாத்திமா. ஆனால் அன்று இனாவுடன் நடந்த வாக்குவாதம் மனத்தைக் குடைந்துகொண்டிருந்ததை அவளிடம் சொல்லவா முடியும்?

ஆனால் ஆமினாவுக்கு அது தெரிந்திருந்தது. ‘நான் கேட்டது, ஒங்க ஆபீஸ்ல எப்படி இருக்கேன்னுதான். ஏன்னா, என்னென்னவோ விஷயங்க என் காதுல விழுகுது..’ என்று நிறுத்தி அவள் முகத்தைச் சற்றே தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, ‘நமக்குப் பிடிக்காதவங்க மத்தியிலயும் சரி, நம்மளப் பிடிக்காதவங்க மத்தியிலயும் சரி, வேலை செய்யவே ஆகாதுன்னு எங்க அப்பாரு சொல்லுவார். ஏன்னா நம்மால முன்னேறவே முடியாது பாரு’ என்றாள்.

இவள் ஏதோ ஒரு திட்டமாகத்தான் வந்திருக்கிறாள் என்று பாத்திமா புரிந்துகொண்டாள். அவளை ஆழம் பார்க்கவென்றே, ‘அதனால? இருக்கற வேலையை விட்டுட்டு ஓடிட முடியுமா அக்கா?’ என்று கொக்கி போட்டாள்.

‘நீ எதுக்கு ஓடணும்? ஒன் தெறமைக்கு நாலுபேர் தானா ஒன்னெத் தேடிக்கிட்டு வரமாட்டாங்களா? இப்பக்கூட எங்கிட்ட ஒருத்தர் வந்து பேசினாரு. எங்க அப்பாரு மூலமா வந்தவரு...’

‘அப்படியா அக்கா?’ முகத்தைப் பிரகாசமாக வைத்துக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டாள் பாத்திமா.

‘ஆமாம் பாத்திமா. நீ தெனம்தெனம்  அந்த இனாயத்துல்லா கிட்ட மோதிக்கிட்டு நிக்க வேண்டாம். ‘ஷூ-22’ கம்பெனியில ஒன்னை இப்பவே ஜெனரல் மேனேஜரா எடுத்துக்கத் தயாரா இருக்காங்களாம். மொத்த எக்ஸ்போர்ட்டுக்கும் நீ தான் முழுப் பொறுப்பா இருக்கணுமாம். சம்பளம் மாசம் அம்பதாயிரம். அது மட்டும் இல்ல பாத்திமா...’ என்று சன்னல் பக்கம் யாராவது ஒட்டுக்கேட்பார்களோ என்று பயப்படுபவள்போல் அவள் காதருகே வந்து சொன்னாள் ஆமினா: ‘அந்தக் கம்பெனி மொதலாளியோட பையன் ஒன்ன விரும்பறானாம். அவங்களும் ஏழையா இருந்து முன்னுக்கு வந்தவங்க தானாம். நீ யெஸ்னு சொல்லிட்டா ரெண்டே மாசத்துல நிக்காவாம். கம்பெனிக்கும் நீ ஜிஎம் ஆயிடுவே. என்ன சொல்றே?’ ஆமினா அவளது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டாள்.

இனா சாருக்கும் தனக்கும் நடந்த விவாதம் எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் ஊருக்குத் தெரிந்துவிட்டது என்று பாத்திமாவுக்குப் புரியவில்லை. யாரோ உளவாளிகள் கம்பெனியில் இருக்கவேண்டும். அதே சமயம் தனக்கு இப்படியொரு புதுவாழ்வு வரும் என்பது அதைவிட நம்பமுடியாததாக இருந்தது. ஆமினா பொய் சொல்ல மாட்டாள். மாஸ்டர்பாயின் பெண். அப்பாவைப்போலவே நல்ல குணம்.

பாத்திமாவுக்கு வியர்த்தது. அம்மா இல்லாத பெண். அப்பா சின்னச் சின்னக் கட்டுமான வேலைகளுக்கு  உதவியாளராகப் போய்க்கொண்டிருந்தார். இவளுடைய சம்பளம்தான் சோறு போடுகிறது. அப்படிப்பட்ட  தனக்கு, பணக்கார இடத்தில் சம்பந்தம் வரும் என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? ஆனால் ஷூ-22 கம்பெனி தனக்கு வேலை தரும் என்பதில் அவளுக்கு ஆச்சரியம் எழவில்லை. வர்த்தகப் போட்டியாளர்களிடையே இது சகஜமே.

ஆமினாவின் கைகளை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டே, ‘அக்கா, எனக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது. வேலை கொடுக்கறாங்க சரி, எதுக்கு நான் அவங்க வீட்டுக்கு மருமகளாப் போகணும்? அந்த ஆளுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையா? கைகால் ஊனமா?’ என்றாள்.

அவளைக் கட்டிக்கொண்டு சிரித்தாள் ஆமினா. ‘என் முட்டாள் தங்கையே! அதுதாண்டி பொம்பளைங்களோட அதிர்ஷ்டம்ங்கறது. தானா வர்றதை சந்தேகப்பட்டு வேணாம்னு ஒதுக்கலாமா? அதனால் தான் சொல்றேன், சனிக்கிழமை மேல்விஷாரம் போய் வரலாம். நானும் வர்றேன். அப்பா ஒன்ன ஹாஜியார் கிட்ட அறிமுகம் செய்றேன்னு சொல்லியிருக்கார். விஷயம் தெரியுமா, இந்த ஷூ-22 ஆசாமியும் ஹாஜியாருக்கு சொந்தம்னா பாரேன்!’  

கடைசியில் சனிக்கிழமை ஹாஜியார் வீட்டுக்குப் போவதென்று முடிவானது. யாருக்கும் துரோகம் செய்யாத மனிதர். அவரிடம் ஆலோசனைகேட்டு நடப்பதுதான் நல்லது என்று பாத்திமா நினைத்தாள். ஆமினாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் காதோடு காதாக, ‘முஸ்தபாவை எப்படி சமாளிக்கறது?’ என்றாள் பாத்திமா.

‘அத நான் பாத்துக்கறேன். அப்பாரு கிட்டயும் சொல்றன். நீ கவலைப்படாம இரு’ என்று உறுதியளித்தாள் ஆமினா.  
***
மறுநாள் அதிகாலை, ஆமினா தொலைபேசியில் முஸ்தபாவிடம் பேசினாள்.

‘முஸ்தபா, நான் சொல்றத கவனமா கேட்டுக்க. பாத்திமா வாழ்க்கையில தலையிடாதே. அவ பெரிய எடத்துக்கு வாழ்க்கைப்படப்போறா. நீ இன்னும் ரெண்டு வருஷம் படிப்ப முடிச்சி வேலைக்குப் போனாத்தான் ஒன் கையில நாலு காசு இருக்கும். அதுக்கு முன்னால காதல் கீதல்னு மனச வழிதவற விட்டுடாத. அவ்வளவுதான் சொல்லமுடியும். மீறி நடந்தா...’

யார் இவள், தன்னை மிரட்டுகிறாள்? முஸ்தபாவுக்குக் கோபம் எல்லை கடந்தது.

‘யார் நீங்க? இவ்வளோ காலம்கார்த்தால கூப்பிட்டு அனாவசியமா பேசறது? எங்கேருந்து பேசறீங்க?’

‘நான் எங்கேருந்து பேசினா என்ன முஸ்தபா? ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன். பாத்திமா கிட்ட ஏதாச்சும் நீ கலவரம் பண்ணினே, அவ்ளோதான். ஹாஜியார்கிட்ட சொல்லி ஒன்ன காலேஜ்ல இருந்தே தூக்கிடுவேன். அது மட்டுமில்ல, ஹாஜியார் கிட்ட நீ லட்ச ரூபா கேட்டதாகவும் அவர் இல்லேன்னு சொன்னப்ப அவர்மேலே ஆசிட் ஊத்த முயற்சி பண்ணினேன்னும் அவரோட மருமகப்புள்ள கிட்ட ஏற்கெனவே சொல்லி வெச்சிருக்கேன். அதனால், ஒன்ன எங்கப் பார்த்தாலும் அவர் விடப்போறதில்ல..தெரிஞ்சுதா?’

முஸ்தபா திடுக்கிட்டுப் போனான். தன் காதல் விவகாரம் இவ்வளவு சீரியசாகப் போகும் என்று அவன் நினைக்கவில்லை. அதுவும் தன்மீது பொல்லாத பழியையும் அல்லவா இவள் சுமத்துகிறாள்! தான் தெய்வத்திற்குச் சமமாகப் பாவித்திருக்கும் ஹாஜியாரின் காதுகளில் இந்த விஷயம் போனால் என்ன ஆகும்? தன்னையே கொல்ல முயற்சிக்கும் மோசமான ஒருவனுக்கா இவ்வளவு நாளாக உதவிசெய்து கொண்டிருந்தேன் என்று ஆதங்கப்பட்டு  உயிரையே விட்டுவிடுவாரே!

‘பாருங்க மேடம்’ என்றான் முஸ்தபா. ‘நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்குங்க. ஹாஜியார் எனக்கு தெய்வம் மாதிரி. அவருக்கு ஒரு நாளும் நான் தீங்கு நெனைக்க மாட்டேன். ஒங்களுக்கு என்ன வேணும்? பாத்திமாவ நான் பாக்கக்கூடாது, அவ்வளோ தானே? அவ எக்கேடாவது கேட்டுப் போகட்டும். இனிமே அவ யாரோ. நான் யாரோ. போதுமா?’ என்று போனை வைத்துவிட்டான்.
***
‘கொடைவள்ளல் ஹாஜியார் மரணம்’ - என்ற செய்தி வந்ததும், பஸ் நிலையத்தில் இருந்து திரும்பினான், முஸ்தபா.  

‘பாத்திமா! படுபாவி. ஹாஜியார் மரணத்திற்கு நீ தானடி காரணம். இல்லாத பழியை என்மீது சுமத்தி, என்னை ஒரு நம்பிக்கை துரோகியாக ஆக்கிவிட்டவள் நீதான். அதனால் மனம் உடைந்துதான்  அவர் இறந்துபோயிருக்கிறார். அது நிச்சயம். பாவி! நான் உன்னைக் காதலித்த குற்றத்திற்காக ஒரு உத்தமரைக் கொன்றுவிட்டாயே’ என்று குமுறிக் கொண்டே ஹாஜியார் வீட்டை நோக்கி நடந்தான்.
***
சிலமாதங்களுக்குப் பிறகு முஸ்தபாவுக்கு ஒரு பார்சல் வந்தது. ஒரு ஜோடி ஷூக்கள் இருந்தன. எக்ஸ்போர்ட் குவாலிட்டி. ‘ஷூ-22 நிறுவனத்தின் ஜிஎம்-மின் நல் வாழ்த்துக்களோடு’ என்ற சிறிய அட்டை தொங்கியது. யார் அந்த ஜிஎம், தனக்கு ஏன் பரிசு அனுப்பவேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை.  
****
(பின்குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையே.)


© Y Chellappa
Email: chellappay@gmail.com   

29 கருத்துகள்:

 1. ....அந்த ஜோடி ஷூ பாத்திமா அனுப்பியதுதானே....பாவம் முஸ்தபா...கதை நன்றாக இருந்தது சார்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரமாக எழுதிய கதையையும் நன்றாக இருக்கிறது என்று சொல்பவர்களைப் பற்றி என்ன சொல்வது..? மிக்க நன்றி.

   நீக்கு
 2. சே... நான் அவசரப்பட்டு ஃபாத்திமாவை தவறாக நினைச்சுட்டேனே... பாவம் ஹாஜியார் இயக்கையாகத்தானே... மவுத்தாகி இருக்கார்.

  முஸ்தபாவுக்கு இன்னும் விளங்கவில்லையே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாத்திமா சின்னப் பொண்ணு சார்..அவளோட பாத்திரத்தை இன்னும் சிறப்பாகக் கொண்டுவரணும்னு பார்த்தேன். மூன்றாவது பகுதி எழுதவேண்டி வரும் போல் இருந்தது. நம்ம வாசகர்கள்தான் 'தொடரும்' போட்டாலேஅடிக்க வருகிறார்களே! அதனால் முடித்துவிட்டேன்.

   முஸ்தபாவையும் வேறு மாதிரி கொண்டுபோயிருக்க வேண்டும். எல்லாம் அவசரம்தான். பார்க்கலாம், இந்தக் கதையை நாவலாக விரித்தால்தான் அவனுக்கு நியாயம் கிடைக்கும்போல் இருக்கிறது.

   நீக்கு
 3. / (பின்குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையே.)/ யார் இல்லை என்று சொல்வது முஸ்டபாவுக்கும் ஃபாத்திமாவுக்கும் ஒரு இது இருந்ததா சொல்லி யிருக்கிறீர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாத்திமா மீது முஸ்தபாவுக்கு ஒரு 'இது' இருந்தது என்பதை ஆமினா பேசும்போது காட்டியிருக்கிறேன். விளக்கமாக எழுத இடமில்லாமல் போய்விட்டது. இருவரும் ஏழைகள்தானே, விடுங்கள்! ஏழையின் காதல் அம்போன்னுதானே முடியும்!

   நீக்கு
 4. விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால் இனி அவசரம் வேண்டாம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நமக்கெல்லாம் அப்போதே அரிந்து, அப்போதே மாவில் தோய்த்து, அப்போதே எண்ணெயில் போட்டு, அப்போதே சுடச்சுடப் பரிமாறும் வாழைக்காய் பஜ்ஜி மாதிரி இருக்கவேண்டும் எழுத்து' என்ற எண்ணம் ஆழமாக ஊன்றிவிட்டதால், அவசரமாகத்தான் எழுதமுடிகிறது. (இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா? அவசரம் இல்லாவிட்டால் எழுதவே வரமாட்டேன் என்கிறது!)

   நீக்கு
 5. ஹாஜியார் - முஸ்தபா உறவு
  இடையே பாத்திமா
  கதை அருமை

  பதிலளிநீக்கு
 6. கதையின் முந்தைய பகுதி
  படித்ததும் ஏதோ அதிர்ச்சியாக
  இருக்கும் என எதிர்பார்த்தேன்...

  அருமையான கதை நண்பரே ....

  பதிலளிநீக்கு
 7. படித்துக்கொண்டே வந்தபோது கதை விறுவிறுப்பாக இருந்தது. ஏதோ பெரிசா நடக்கப்போகுதோன்னு ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது. ஏனோ டக்குன்னு கதை முடிந்துபோனதுபோலத் தோன்றியது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்! நான் நினைத்த மாதிரி எழுதியிருந்தால் இன்னும் ஒரு அத்தியாயம் அதிகமாகிவிடும் போல் இருந்த்தது. எனவே முடிவை மாற்றிவிட்டேன். அதனால் தான்....

   நீக்கு
 8. இரண்டு பகுதிகளையும்சேர்த்து
  இன்றுதான் படித்தேன்
  முதல் பதிவுக்கும் இரண்டாம் பதிவுக்கும்
  நடையில் ஒத்த தன்மை ( நிதானம்/வேகம் )இல்லாததை
  என்னால் உணர முடிந்தது

  முடிச்சு விழுந்த விதம் பிரமாதம்
  அதை அவிழ்த்தவிதத்தில்தான்
  ஒரு அவசரம் தெரிகிறது

  பின்னூட்டம் எழுதும் முன்தான்
  தங்கள் கருத்தும் அதுவாகவே இருந்ததை
  அறிந்தேன்

  தொகுப்பில் பிரமாதப்படுத்திவிடுவீர்கள்

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. தேர்வு நெருக்கடியிலும் தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 10. இது போன்ற பிரச்சனைகள் ஒரு பிஸ்னசில் ஏற்படுவது சகஜம் . இஸ்லாமியர்களை வைத்து கதை புனைந்தது அழகு / இஸ்லாமியர்களோடு பழகியது கதை தோன்ற உதவியிருக்கலாம் . கதை முடிவு அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! நான் பிறந்த இராணிப்பேட்டை, முஸ்லீம்கள் நிறைந்த ஊர். படித்த அப்துல் ஹக்கீம் கல்லூரி-மேல்விஷாரம், முஸ்லீம்கள் நிறைந்த இடம். எனவே எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இக்கதை எழுதவும் அதுவே உதவியது! தங்கள் வரவுக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 11. முதல் பகுதியை இன்னும் படிக்கவில்லை. இரண்டாம் பகுதி மட்டுமே ஒரு கதையாக அமைந்திருக்கிறது.இதன் இப்பதிவின் இரண்டாவது பகுதியில் ஒரு தெளிவின்மை காணப்படுகிறது.முதல் பகுதியை படித்தால் புரியும் என்று நினைக்கிறேன். படித்து விட்டு வருகிறேன். கதைக் களங்களை அற்புதமாக தேர்ந்தெடுக்கிறீர்கள்.சூழலும் விவரிப்பும் அருமை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்வித் துறையில் இருப்பவராயிற்றே, சரியாக எடை போட்டு விடுகிறீர்கள்! தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. இரண்டு பகுதிகளையும் வாசித்தேன் ..சுவாரஸ்யமா அப்படியே வாணியம்பாடி ஆம்பூர் பக்கம் மக்கள் பேசும் பேச்சு அப்படியே கேட்கிறறபோலிருந்தாது ..ஒரே மூச்சாக படித்து முடித்தேன் மிக அருமை ஐயா ..முஸ்தபா நல்லவரா கெட்டவரா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முஸ்தபா நல்லவர் தான். ஆனால் கதையை அவசரமாக முடிப்பதாகக் கருதிக்கொண்டு அவரை அம்போ என்று விட்டுவிட்டேன். அவரிடம் மன்னிப்பு கேட்டுகொள்வதே சரி.

   நீக்கு
 13. முதல் பகுதி வாசித்தால் கதை புரிந்தது

  பதிலளிநீக்கு
 14. கதையை முழுவதுமா வாசித்தேன். கதை நிகழும் சூழல், விவரணம் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு 'தொடர்கதை' என்றாலே, அந்தத் தொடர் முடியும்வரை, போகவே மாட்டேன். (படிக்கமாட்டேன்). சஸ்பென்சுல முடியும், அடுத்து எழுதும்போது, திரும்பவும் முதல் பகுதியை விரைவா படிக்கணும் போன்ற சிக்கல் இருக்கு.

  ரொம்ப நல்ல ப்ளாட். நல்ல விவரிச்சிருக்கீங்க. ஒன்பது கஜம் புடவை நெய்வதற்குத் திட்டமிட்டு 5 கஜத்திலேயே முடித்துவிட்டதுபோல் தோன்றுகிறது. இன்னும் சிறப்பாக வந்திருக்கவேண்டிய ப்ளாட். ஏன் 'குறைப்பிரசவமாக்கிட்டீங்க'.

  கதையை ரசித்ததனால்தான் இப்படி எழுதியிருக்கேன். தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மையே. நான்கு பகுதிகள் வருவதாக மனத்தில் திட்டமிட்டே ஆரம்பித்தேன். ஆனால் இரண்டுக்குமேல் போனால் வாசகர்கள் கோபிக்கிறார்கள் என்று தெரிந்தது. எனவே கதையின் கழுத்தை இறுக்கினேன். புத்தகமாக வரும்போது பெரிதாக்க எண்ணம். பார்க்கலாம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. இந்த முடிவும் (அதாவது சுருக்கப்பட்ட வடிவம் பிளாக்கிற்கு, நீண்ட வடிவம் புத்தகத்திற்கு) சிறப்பான ஒன்றுதான். தொடர்கதை புத்தகமாக்குவதற்கும் பிளாக் எழுத்துக்கள் புத்தகமாவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொடர்கதையைத் தொடர்ந்து படித்திருந்தாலும் பலதும் மறந்திருக்கும். அதனால் புத்தகம் வாங்கவோ (அல்லது பைண்ட் பண்ணி மீண்டும் படிக்கவோ) எண்ணுவார்கள். பிளாக்கில் முழுவதுமாகப் படித்தது, புத்தக வடிவில் வரும்போது, பயணத்தில் படிக்கமட்டும்தான் உபயோகமாக இருக்கும்.

   நீக்கு