பதிவு
எண்
30/2017
அவனுக்கு ‘கிரி’
என்று பேர்!
-இராய
செல்லப்பா
இன்று தமிழ்ப்
புத்தாண்டு (14-4-2017). எனவே ஒரு
மங்களகரமான சங்கதியோடு பதிவை ஆரம்பிக்கலாமா?
படிப்பு (எம்.எஸ்சி.)
முடிவதற்குள்ளேயே எனக்குத் திருமண வேட்புமனுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஆரணியில்
இருந்த உறவினர்கள் இருவர் தத்தம் மகளை எனக்குப் பார்க்கவேண்டும் என்று
விரும்பினார்கள். வேலை கிடைத்தபிறகுதான் கல்யாணம் என்றேன். ‘கல்யாணம் செய்துகொண்டும்
படிக்கலாமே’ என்று அவசரப்பட்டார் ஒருவர்.
எப்படியாவது பெண்ணைத் தள்ளிவிட்டால் தன் கவலை முடிந்துவிடும் என்பது அவர் எண்ணம். மாப்பிள்ளை
வேலைக்குப்போய்விட்டால் வரதட்சிணை அதிகம் தரவேண்டி இருக்குமோ என்று கலக்கம்
இன்னொருவருக்கு.
அந்த இரண்டு பெண்களும் பத்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தார்கள்
என்பதாலும், என்னுடைய படிப்பு முடிந்து நல்லவேலை கிடைத்தால் மட்டுமே திருமணம்
என்பதில் உறுதியாக இருந்ததாலும் நான் மறுத்தேன். ஆனால் ஒரு பண்டிகை சமயம் அந்த ஊருக்குப்
போகவேண்டியிருந்தபோது சொந்தபந்தங்கள் மூலம் வற்புறுத்தி, unofficial ஆகப்
பெண்பார்க்கும்படி நேர்ந்துவிட்டது. அந்தப் பெண்களின் மனத்தில் என்னென்ன ஆசைகள்
இருந்திருக்கும்! பெரியவர்கள் செய்யும் காரியத்தால் அவர்களுக்கு மனத்தளவில்
எவ்வளவு பாதிப்பு உண்டாகும்? ‘என்னை மன்னித்துவிடுங்கள் பெண்களே’ என்று இறைவனிடம்
வேண்டிக்கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியை எப்படியோ
தெரிந்துகொண்ட இன்னொரு உறவினர், கணக்குப்பிள்ளையாக இருந்தவர், தனது
தாசில்தாருக்குச் சொல்லவே, அவரும் அதே போல் unofficial ஆகப் பெண்பார்க்க
வரும்படி வற்புறுத்தினார். தாசில்தாருக்கு விரைவிலேயே புரோமோஷன் கிடைக்க
இருந்ததால், கணக்குப்பிள்ளைக்கு இந்த சம்பந்தத்தில் சுயநலம் இருந்தது. தாசில்தார்
பெரிய கார் அனுப்பியிருந்தார். போனோம். நல்ல குடும்பம். நல்ல பெண். பொன்னியின் செல்வனில்
முதல்பாதி அவர் பெயர்.
என்னைப்போலவே அவளுக்கும் திருமண எண்ணம் இல்லையாம். கிடைத்த
சில நொடித் தனிமையில் என்னிடம் சாடையாக, ‘நான் மேலே படிக்கவேண்டும் பிளீஸ்’
என்றாள். என்னுடைய ஜாதகம் அப்போது அவர்களிடம் இல்லாதது நல்லதாகப் போயிற்று. ஊருக்குப்
போய் கடிதம் எழுதுவதாகச் சொல்லிவிட்டு, ஜாதகம் பொருந்தவில்லை என்று எழுதவைத்தேன்.
கணக்குப்பிள்ளை அத்துடன்
விடுவாரா? அவருக்கு வேண்டிய பிரபலமான
கிரிமினல் லாயர் ஒருவர் அதே ஆரணியில் இருந்தார். வக்கீல்களுக்கு மட்டும் கல்யாண வயதில் பெண்கள் இருக்க மாட்டார்களா என்ன? அதிலும் இவருக்கு ஒரே
ஒரு பெண்தான். கணக்குப்பிள்ளை அவரை அழைத்துக்கொண்டு இராணிப்பேட்டைக்கே வந்துவிட்டார்.
‘படிப்பு எப்போது வேண்டுமானாலும் முடியட்டும். சென்னையில் நல்லவேலை வாங்கித்தந்து
விடுகிறேன். உடனே கல்யாணம் நடக்கவேண்டும்’ என்றார். அவரது தாயார் தகப்பனார்
இருவரும் தொண்ணூறு வயதானவர்கள். பேத்தியின் கல்யாணத்தைப் பார்த்துவிட்டுத்தான்
கண்மூடவேண்டும் என்று இருக்கிறார்களாம்.
நல்லவேளை, அவர்
வந்தபோது நான் வீட்டில் இல்லை. இதுமாதிரி விஷயங்களில் உளவுசொல்வதற்கு எதிர்வீட்டுப்
பையன் ஒருவன் இருந்தான். அவன் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால், நான்
வீட்டிற்கு வராமலே காலம் தாழ்த்தினேன். மாலையில் நான் வந்தபோது அப்பா எரிந்து
விழுந்தார். இதுவரை வந்ததிலேயே இதுதான் நல்ல சம்பந்தமாம். இவனுக்குப் புத்தி இல்லையே
என்றார். நான் பேசாமல் இருந்தேன். நன்றாகத் தெரிந்த விஷயத்தை நான் விவாதிப்பதில்லை.
****
கொஞ்சம் பின்னால்
போகலாமா?
ஒருநாள், இரண்டுநாள்
என்றால் பரவாயில்லை. ஒருமாதம் ஆகியும் வரவில்லை. வேணு, சந்திரன், கோபிநாத்
யாருக்கும் தெரியவில்லை. விடுமுறைக் கடிதமும் வரவில்லை. “என்னதான் ஆயிற்று
கிரிக்கு?” என்று பேராசிரியர் கேட்டார்.
பி.எஸ்சி. மூன்றாம்
வருடம் படித்துக்கொண்டிருக்கிறேன். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் என்று
நினைக்கிறேன். கிரி, என்னுடைய வகுப்பு தோழன். என்னைப் போலவே கீழ்-நடுத்தரக்
குடும்பம். (‘ஏழை’ என்பதைக் கௌரவமாகச் சொன்னேன்!) தினமும் பஸ்சில் வேலூரில்
இருந்து வருவான். தகப்பனாருக்கு நிலையான வருமானம் இல்லை. வருகிற வருமானத்தைச்
சிக்கனமாகச் செலவழித்து, இவனையும் கல்லூரியில் படிக்கவைக்க அவனுடைய அம்மா எவ்வளவு
கஷ்டப்படுகிறார் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறான். பொறுப்பான மாணவன். அடுத்தநாள்
கல்லூரிக்கு வரமுடியாதென்றால், என்னிடமாவது மற்ற வேலூர் பஸ்-நண்பர்களிடமாவது
சொல்லாமல் போகமாட்டான். இப்போது என்ன ஆயிற்று?
ஒரு ஞாயிற்றுக்கிழமை
காலையில் வேலூருக்குக் கிளம்பினேன். பதினேழு கிலோமீட்டர்தான். சைக்கிள் பயணம்.
கிரி இருந்த தெருவின்
பெயர் நீளமாக இருந்தது. ‘அரசமரம் பிள்ளையார் கோயில் தெரு’ என்பது போல. அதே தெருவிலிருந்துதான்
பிரபலமான ‘மாத ஜோதிடம்’, ‘மூலிகைமணி’
போன்ற மாத இதழ்கள் வந்ததாக நினைவு.
ஒன்றிற்குள் ஒன்றாக மூன்று குடித்தனங்களை அடங்கிய
வீடு. நீண்ட நடை. அதையொட்டி ஒவ்வொருவருக்கும் ஒரு படுக்கையறையும் சமையலறையும்
இருந்தன. ‘கடைசி வீடுதான்’ என்று கை
காட்டினார்கள்.
முதல் இரண்டு
வீட்டினரின் பொருட்கள் நடையெங்கும் இறைந்து கிடந்தன. குழந்தைகளின் விளையாட்டுப்
பொருட்கள், சின்ன சைக்கிள், காற்றுப்போன பலூன்கள், ஒரு நடைவண்டி போன்றவை வழியில்
கிடந்தன. என்னைப் பார்த்ததும் ஒரு குழந்தை ஓடிவந்து தரையில் கிடந்த தனது பொம்மை
ரயில்வண்டியை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டது. பயம்.
சமையலறையில் கதவுக்குப்
பதில் சேலையொன்று திரையாகத் தொங்கியது. படுக்கையறை கதவு, திறந்தும் திறவாமலும் இருந்தது. மெல்லத் தள்ளினேன். உள்ளே
அவனுடைய தாயார் படுத்திருந்தார். உடல்நலம் சரியில்லை.
என்னைப் பார்த்ததும்
சற்றே நிமிர்ந்தார். ‘கிரியோட ஃபிரண்டா?’ என்று எழுந்தார். ‘அடடே நீயா?’ என்று என்
பெயரைச் சொன்னார். ‘கிரி ஒன்னப் பத்தி நெறைய சொல்லியிருக்கான். நீ இராணிப்பேட்டைதானே?
சைக்கிள்ள தானே வந்திருக்கே? பூட்டினியா? இல்லேன்னா ஒரே நிமிஷத்துல காணாமப்
போயிடும். அப்படிப்பட்ட ஊர் இது’ என்றவர், முடியாத நிலையிலும் வெளியேபோய் என்
சைக்கிள் பூட்டியிருப்பதை உறுதிசெய்துகொண்டு திரும்பினார்.
‘ஒக்காருப்பா. மொதல்ல
தண்ணி குடி. இதோ காப்பி போடறேன்’ என்று ஒரு நாற்காலியை ஒழித்துக்கொடுத்தார்.
அதன்மீதிருந்த புத்தகங்களையும், இஸ்திரி
செய்யப்பட்ட பேண்ட்டு சட்டையையும் தரையில் ஓரமாக ஒரு தினத்தந்தியை விரித்து
அதன்மேல் வைத்தார்.
மிகச் சிறிய அறை.
இரும்புக்கட்டில் ஒன்று. சிறிய புத்தக அலமாரி. ஒரு டிரங்குப் பெட்டி. தரையெங்கும்
துணிமணிகள், விகடன், குமுதம், இங்க் பாட்டில்.
ஃபில்டர் காப்பி.
சூடாகவும் சுவையாகவும் இருந்தது. ‘அப்பா, அம்மா, அக்கா, தங்கை எல்லாரும்
சௌக்கியம்தானே?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘நல்லா படிக்கிறியா?’ என்றார் கவலையுடன். ‘நீங்கள்லாம்
படிச்சி வேலைக்குப் போனாத்தான் குடும்பத்துக்கு விடிவுகாலம் ஏற்படும்னு பெத்தவங்க
நாங்க ஆசையா காத்துக்கிட்டிருக்கோம். புத்திசாலித்தனமா நடந்துக்கணும்டா கண்ணு’
என்றார் உருக்கமாக.
‘புரியறது மாமி.
எங்களால முடிஞ்சவரைக்கும் நல்லாத்தான் படிக்கிறோம். கவலைப்படாதீர்கள். இப்ப நான்
ஏன் வந்தேன்னா...?’
மாமி சிரித்தார். ‘ஏண்டா
கண்ணா, ஒரு மாசமா காலேஜுக்கு ஒருத்தன் வரல்லேன்னா ஆளனுப்ப மாட்டாளோ? அதான் நீ
வந்திருக்கே. ஆனால் பாரு, இதே ஊர்லேருந்து மூணு நாலு பேர் அவனோட கிளாஸ்ல படிக்கறா.
ஒருத்தன் கூட வந்து பார்க்கலே...’
‘அரிசி ஒடச்சது
இருக்கு. உப்புமா பண்றேன், சாப்பிடறியா?’ என்று சமையலறைக்குப் போக முயன்றார். நான்
தடுத்தேன்.
‘கிரிக்கு என்ன
ஆச்சுன்னு தெரிஞ்சிக்கணும். இதுதான் கடைசி வருஷம். ஒருமாசம் வரலேன்னா மேக்-அப்
பண்றது கஷ்டம். கிரி எங்க இருக்கான்?’ எழுந்து நின்று கொண்டேன்.
மாமியின் கண்களில்
சொட்டுச்சொட்டாகக் கண்ணீர் வர ஆரம்பித்தது. ‘நீ காலேஜில யாருக்கும் சொல்லமாட்டியே?’
என்றார். இல்லை என்று தலையாட்டினேன்.
‘கிரியோட அப்பா ஒரு என்ஜினீயர்கிட்ட
வேலையா இருக்கார். வேலைன்னா என்ன, எல்லாம் எடுபிடி வேலைதான். எது சொன்னாலும்
செய்யணும். மொரீஷியஸ்லே இருந்து அவரோட சொந்தக்காரங்க ரொம்பநாள் கழிச்சு இந்தியா
வந்தாங்க. அவங்களோட கூடவே இருந்து இந்தியா முழுக்க சுத்திக்காட்டணும்னு கிரியை
அனுப்பிவைங்கன்னு சொல்லிட்டார். காலேஜுக்கு அவர்தான் பீஸ் கட்டறார். இவரால மறுக்க
முடியலே. பத்துநாள்ல வந்துருவாங்கன்னு பாத்தா, ஒரு மாசம் ஆச்சு இன்னும் வரல்ல. கடைசியா
சிம்லாவோ டார்ஜிலிங்கோ போனதாக் கேள்வி. இவரும் பதினஞ்சு நாளா கோயம்புத்தூர் போயிருக்கார்.
நடுவுல எனக்கும் முடியாமப் போய்டிச்சு. இதாம்ப்பா விஷயம். நான் நேரா வந்து புரபசர்
கிட்ட சொல்லணுமா?’ என்றார்.
‘பத்து மணிக்குமேல என்ஜினீயர்
வீட்டுக்குப் போனாத்தான் கிரி எப்ப வருவான்னு தெரியும். நீயும் கூட வரியா?
சைக்கிள்ல பின்னால ஒக்காந்துண்டு வரேன்.’
‘இல்லை மாமி, எனக்குப்
புரிஞ்சது. நீங்க காலேஜுக்கு வரவேண்டாம். ஆனா இப்பவே ஒரு மாசம் பாடம் போயிடுத்து.
அதனால கிரியைச் சீக்கிரமா வரச் சொல்லணும்.
அதோட, மெடிக்கல் சர்டிபிகேட்டும் கொண்டுவந்தாத்தான் காலேஜில உள்ள விடுவாங்க. அத
மறந்துடாதீங்க. நான் வர்றேன்’ என்று கிளம்பினேன்.
‘சாப்பிடாம போறியேடா கண்ணா!
ஒனக்கு அரிசி உப்புமா பிடிக்கும்னு கிரி சொன்னானே, பத்தே நிமிஷத்துல ஆயிடும்.
ஒக்காறேன்’ என்று மாமி வற்புறுத்தினார். பிடிவாதமாக மறுத்துவிட்டுக் கிளம்பினேன். அந்த
உப்புமா அவருக்கு இன்னொரு வேளைக்கு ஆகுமே!
****
அதன் பிறகும் கிரி
வரவேயில்லை. ஒரே ஒரு நாள் வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்திருக்கிறான். அன்று நான்
விடுமுறை. ஜனவரிக்குப் பிறகு ஃபைனல் மாணவர்களுக்கு ஸ்டடி லீவுதான். அதனால் கல்லூரிக்குத்
தினமும் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை. இடையில் ஒருநாள் கிரி, தன் அப்பாவுடன்
கல்லூரி முதல்வரைப் பார்த்து சமாதானம் சொல்லி ஹால்டிக்கட் வாங்கிக்கொண்டான் என்று தெரிந்தது.
தேர்வு நாட்களில்தான் அவனைப் பார்த்துப் பேச முடிந்தது.
ரிசல்ட் வந்தது. நான்
டி பிளஸ், அவன் ஏ பிளஸ். மேற்படிப்புதான் என் இலட்சியமாக இருந்தது. கிரியின் அப்பாவுக்கும்
இப்போது உடல்நிலை சரியில்லையாம். வருமானம் இல்லை. உடனடியாக வேலைக்குப் போனால்தான்
சாப்பாடு என்ற நிலை. அதே என்ஜினீயரிடம் சேர்ந்துவிடப் போகிறானாம். ஸ்டேட்பாங்கில் கிளார்க்
வேலை வாங்கித்தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.
****
அடுத்த இரண்டாண்டுகள்
நான் சேலம் போய்விட்டேன். எம்.எஸ்சி. படிப்பதற்காக. இறுதித்தேர்வு முடிந்து
இராணிப்பேட்டை திரும்பினேன்.
முதல்முதலாக,
எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கவலை எழுந்தது. படிக்கிற காலம் வரைக்கும்,
தேர்வு எழுதவேண்டும், ரிசல்ட் வரவேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இனி அதே
கல்லூரிக்குள் போனாலும் விடமாட்டார்கள். நான் அமர்ந்த வகுப்பில் வேறொரு மாணவன்
அமர்ந்திருப்பான். அடுத்த இரண்டாண்டுகள் அவனுக்குச் சொந்தம்.
எம்.எஸ்சி.யில் என்னோடு
பன்னிரண்டுபேர் படித்தார்கள். ஒருத்தி, முதலாண்டு முடிவில் ரிசர்வ் பேங்கில்
கிளார்க் வேலை கிடைத்துப் போய்விட்டாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் பேங்கில்
ஒரு வேலையாகச் சென்றபோது அவளுடைய கண்ணாடியை வைத்து அடையாளம் கண்டேன். தன்னை அந்த
பேங்கின் கவர்னர் என்று கருதிக்கொண்டார்போலும்,
என்னைத் தெரிந்தமாதிரி அதிகம் காட்டிக் கொள்ளவில்லை. (பெண்கள் இப்படித்தானோ?)
மூன்றுபேர்,
(ஆண்கள்), ஏதாவது ஒரு பேங்கில் கிளார்க் ஆவதுதான் பிறவி எடுத்த பயன் என்று தொடர்ந்து
முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இரண்டாவது ஆண்டில் வெற்றியும் பெற்றார்கள். ஒரு
மலையாளப்பெண் சொந்த ஊரில் வாத்தியாரிணியானாள். இன்னொரு பெண், பெரிய இடம்.
வேலைக்குப் போகவேண்டிய அவசியமில்லை. மற்ற ஐந்துபேர் என்ன ஆனார்கள் என்று தெரியாது.
எனக்கு நோபல் பரிசு மாதிரி கிடைத்தால் அப்போது உடன்படித்தவர் என்று சொந்தம்
கொண்டாடக்கூடும்.
நானும் வங்கிப்பணிக்கு முயற்சி
செய்தேன். ஆனால் கிளார்க் அல்ல, அதிகாரியாக. அதன்படியே, ஒரு தனியார் வங்கியில்
கிடைத்து சென்னைக்கு வந்தோம். (சிட்டி யூனியன் வங்கி.-அப்போது KCUB என்று பெயர். K
என்றால் கும்பகோணம்.)
****
சிட்டியூனியன் பேங்கில்,
தி.நகர் - மகாலட்சுமித் தெருவில் என்னோடு பணியில்
இருந்தவர் ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி. ஜி.ஆர்.கே. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட
அசல் கும்பகோணத்துக்காரர். யார் வந்து கேட்டாலும் உடலாலும் பணத்தாலும் உதவிசெய்யத்
தயங்காதவர். தன்னிடம் இல்லையென்றாலும்
கடன்வாங்கியாவது செய்வார். வங்கிக்கு டிபாசிட் திரட்டும் பணியிலும், கொடுத்த
கடனை வசூலிப்பதிலும், வங்கி ஊழியர்கள் யாராவது வாடிக்கையாளரிடம் கோபமாகவோ,
நாகரிகமின்றியோ நடந்துவிட்டால் அவர்களது வீட்டிற்கே போய் சமாதானப்படுத்திவிட்டு வருவதிலும்
அவருக்கு நிகர் அவரே. மனைவி மின்சாரவாரியத்தில் பணியாற்றினார். இரண்டே பிள்ளைகள்.
ஒருவர் ஜம்ஷெட்பூரில் டாட்டாவில் ஜி.எம். ஆக இருந்தார் என்று ஞாபகம். ஜிஆர்கே-யின் மைத்துனர்
மகாலிங்கம் இராணிப்பேட்டையில் எல்ஐசி-யில் பணியாற்றும்போது எனக்குப் பழக்கம். இருவரும்
நங்கநல்லூரில் அடுத்தடுத்த வீடுகள் கட்டிக்கொண்டு வசித்தார்கள்.
‘கையில் பணம்
இல்லாவிட்டால் என்ன, நாலாயிரம் ரூபாய்க்கு
ஒரு கிரவுண்ட் லட்சுமி தியேட்டர் அருகில் கிடைக்கும். பாலுசேரி பெனிபிட்
சிட்பண்டில் கடன்வாங்கித்தருகிறேன்’ என்று உறுதியளித்தார் ஜிஆர்கே. (1974). பலருக்கு உத்தரவாதக் கையெழுத்தும்
போட்டிருக்கிறார். சரி, நிலத்தைப் பார்க்கலாம் என்று ஒருநாள் மாலை வங்கி முடிந்தபிறகு
இருவரும் கிளம்பினோம்.
மாம்பலத்தில் ரயில்
ஏறினோம். அப்போதெல்லாம் நங்கநல்லூரில் (அதாவது பழவன்தாங்கலில்) ரயில் நிலையம்
கிடையாது. வண்டியைச் சற்றே மெதுவாக இயக்குவார்கள். இறங்கிக்கொள்ளவேண்டும். கால்,
கை முறிந்தால் எலும்புமுறிவு மருத்துவர் கோவிலுக்கருகில் குடியிருந்தார். கைராசிக்காரர்.
சீக்கிரமாக ஸ்டேஷன் அமைத்துவிடுவார்கள் என்றார் ஜிஆர்கே. (ஐந்து வருடம் ஆயிற்று!)
இறங்கினோம். அதே
நிமிடம் அடைமழை பிடித்துக்கொண்டது. தெரு என்பதே அப்போது நங்கநல்லூரில் கிடையாது.
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனி வீடுகள் இருந்தன. மின்சாரம் இருக்கும் என்று
சொல்லமுடியாது. இருந்தால், திடீரென்று போகும் என்பது மட்டும் நிச்சயம். அரைகுறை வெளிச்சத்தில்
முன்னால் தெரியும் ஒற்றையடிப் பாதையில் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ரயில்பாதையில் இருந்து
இரண்டு மூன்று கிலோமீட்டர் இருட்டில் நடந்துவிட்டோம். ஜிஆர்கே நின்றார். ‘இந்த
இடம் தான். மொத்தம் ஆறு கிரவுண்ட் இருக்கிறது. இரண்டை எனக்காக ரிசர்வ்
செய்திருக்கிறேன். கார்னர் பிளாட் வேண்டுமா, அல்லது நடுவில் வேண்டுமா?’ என்றார்.
சுற்றிலும் பார்த்தேன்.
பெய்த கொஞ்சம் மழைக்கே என்னைச் சுற்றி வெள்ளம் வந்திருந்தது. ‘நல்ல நஞ்சை நிலம்,
தண்ணீருக்குப் பஞ்சமே இருக்காது’ என்றார். இப்படி மழை பெய்யுமானால், நம்முடையே
பிளாட்டை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதே என் முக்கியக் கவலையாக இருந்தது. ஜிஆர்கே-க்கு
அந்த இடமெல்லாம் அத்துப்படியாகி இருக்கவேண்டும். இன்னும் சற்றுத் தொலைவு
அழைத்துக்கொண்டுபோனார். ‘இதுதான் மெயின்ரோடு’ என்றார். இன்னும் ஒரு பர்லாங் போனால்
நூறடி ரோடு வரும் என்றார். அதாவது அப்படி ஒரு ரோடு போடவேண்டும் என்று குடியிருப்பாளர்
சங்கத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். இவரும் அதில் உறுப்பினராம்.
மழையால் எல்லா இடமும்
சேறும் சகதியுமாகி விட்டிருந்தது. ஒவ்வொரு காலையும் தனித்தனியாகத் தூக்கி எடுத்து
வைக்கவேண்டி இருந்தது. இல்லையென்றால் சறுக்கிவிடும். அப்படிச் செய்ததில் ஒரு செருப்பின் வார் அறுந்துவிட்டது. புது
செருப்பு என்பதாலும், செருப்பு இல்லாமல் வெறும் காலைச் சகதியில் வைத்தால் பூச்சி
பொட்டுக்கள் இருக்கும் என்பதாலும், அறுந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டேன்.
பிளாட் வாங்குவது பற்றி
மழை இல்லாத ஒருநாளில் முடிவெடுக்கலாம் என்று தோன்றியது. இந்த மழைக்கெல்லாம்
பயந்தால் சென்னையில் வசிக்கமுடியாது என்று தன்னம்பிக்கை யூட்டினார் ஜிஆர்கே. (அவர் வாக்கு பலித்துவிட்டது. இன்று
சென்னையில் தண்ணீரே இல்லை.)
சற்றுநேரத்தில்
தெருவிளக்குகள் எரியத்தொடங்கின. எதிரே தெரிந்த ஒரு தனிவீட்டின் வெளிச்சம் எங்களை
அழைத்தது. காலையும் செருப்பையும் கழுவிக்கொள்ள தண்ணீர் கேட்கலாம் என்று போனோம். அந்த வீட்டில்
இருந்த பெண்ணுக்கு
இது அன்றாட நிகழ்வாக இருக்கவேண்டும்.
அனுதாபமான குரலில், ‘வாங்க, பிளாட் பார்க்க
வந்தீர்களா?’ என்றார். என் கையில் இருந்த அறுந்த செருப்பைப் பார்த்து, உள்ளே போய்
ஒரு தடித்த ஸ்டேப்ளர்-பின் கொண்டுவந்தார். அவசரத்துக்கு உதவும் என்றார்.
அடுத்தமுறை வரும்போது, எச்சரிக்கையாக இரண்டாவது செட் செருப்பும் கையோடு கொண்டுவந்துவிடுங்கள்
என்றார். (எல்லாருக்கும் சொல்வாராம்.)
‘நானும்
நங்கநல்லூரில்தான் இருக்கிறேன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் ஜிஆர்கே. யாராயிருந்தாலும் உடனே பழக ஆரம்பித்துவிடுவது
அவர் சுபாவம். தான் இருக்கும் தெருவின் பெயர் சொன்னார்.
‘தெருவே இல்லாதபோது
பெயரைத் தெரிந்துகொண்டு என்ன பயன்?’ என்று சிரித்தார் அந்தப் பெண். ‘நீங்கள்
எந்தக் கடையில் மளிகை வாங்குகிறீர்கள் என்று சொன்னால் போதும். அட்ரஸ்
கண்டுபிடித்துவிடலாம்’ என்றார். ‘இல்லாவிடில் உங்கள் பால்காரர் பெயரோ, வீட்டு
வேலைக்காரியின் பெயரோ தெரிந்தாலும் போதும்.’
இப்படியெல்லாமா வாழ்கிறார்கள்
சென்னையில் என்று எனக்கு மயக்கமே வந்தது.
தான் (கும்பகோணம்) சிட்டி
யூனியன் வங்கி யில் பணிசெய்வதாகச் சொன்னதும் அந்தப் பெண்ணின் முகத்தில் திடீரென்று
மின்னல் போல மலர்ச்சி தோன்றியதைப் பார்த்தேன். தனது நண்பர் ஒருவரும் அதே வங்கியில்
பணியாற்றுவதாகக் கணவர் சொன்னதுண்டாம். பெயர் கொடுத்தால் முகவரி கிடைக்குமா என்று
கேட்டார். நிச்சயம் கிடைக்கும் என்றார் ஜிஆர்கே.
அவருடைய கணவர் ஸ்டேட்பேங்கில்
பணியாற்றுகிறாராம். இரண்டு மாதம் முன்புதான் மாற்றலாகிச் சென்னைக்கு வந்தார்களாம்.
மாமனார் இல்லை, மாமியார் மட்டும் இருக்கிறாராம். ‘அப்பாவுக்கு நான் ஒரே குழந்தை. அப்பாதான்
இந்த வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்’ என்று பெருமையோடு சொன்னார். ஆரணியில் தன்
தந்தையார் பிரபலமான கிரிமினல் லாயர் என்றார்.
‘பெயர்
கிருஷ்ணமூர்த்தியா?’ என்றேன்.
‘உங்களுக்கு எப்படித்
தெரியும்?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார் அந்தப் பெண்.
‘பிரபலமான வக்கீல்
ஆயிற்றே! தெரியாமல் இருக்குமா?’ என்றேன். உங்கள் கணவர் பெயர் கிரி தானே என்று கேட்கவில்லை.
***
ஒரு வழியாக எனக்குத் திருமணம் முடிய மேலும் இரண்டு வருடங்கள் ஆயிற்று. கடைசிவரை நங்கநல்லூரில் பிளாட்
வாங்கவில்லை நான். ஜிஆர்கே -யும் தொடர்பில் இல்லை இப்போது.
***
அனைவருக்கும் இனிய
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
© Y Chellappa
உங்கள் கணவர் பெயர் கிரிதானே? என்று கேட்காததற்கான காரணம் புரிகிறது.
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீக்குநீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் கிரி ....சரிதானே :)
பதிலளிநீக்குஅப்படிப் பார்த்தால் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஜவகர்லால் நேரு இறந்தபோது அவருக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து வியந்தேன். எதிர்காலத்தில் எப்படியாவது பிரதமராகிவிட வேண்டும் என்று எண்ணினேன். இப்போது என் இடத்தில் இருப்பவர்...?
நீக்குகிரிவலம் அருமை ரசித்தேன் கதையின் போக்கை
பதிலளிநீக்குஅடடே, 'கிரி'வலம் என்பதே தலைப்பாக வைத்திருக்கலாம் போலிருக்கிறதே! தங்கள் வரவுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீக்குநடந்ததெல்லாம் நன்மைக்கே...!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
நிச்சயமாக! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. தங்கள் வரவுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீக்குசுவையான அனுபவங்கள். உலகம் உருண்டைதான் என்பதை உணர்த்துகிறது!
பதிலளிநீக்குவரவுக்கு நன்றி நண்பரே!
நீக்குஒரு திருமணதேடலில் துவங்கி இன்னொரு திருமணம் முடிந்தவிதத்தைச்சொல்லிப் போனது ரசித்தேன்
பதிலளிநீக்குதிருமணங்களை யார் நிச்சயிகிறார்கள்?
நீக்குஅனுபவத்தைச் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். அரிசிஉப்புமா நிகழ்வும் மனத்தை வருத்தியது.
பதிலளிநீக்குஆமாம் ... "நோபல் பரிசு" தெரியும். "நோபல் பரிசு மாதிரி" பரிசு உண்டா?
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அரிசி உப்புமா மிகவும் பிடிக்கும். எல்லாம் என் மனைவியின் கைவண்ணம்!
நீக்கு//நான் டி பிளஸ், அவன் ஏ பிளஸ்//
பதிலளிநீக்குவாவ் மனிதர்தான் அவர்
நல்ல மனிதன், நல்ல நண்பன், கிரி. பணியிட மாற்றம் காரணமாக இந்தியா முழுவதும் பயணிக்கும்போது நமது நட்புகள் எல்லாம் சிதறிப் போய்விடுகின்றன. தங்கள் வரவுக்கு மிக்க நன்றி.
நீக்குசர்குலர் காம்போஸிஸன் என்பார்கள்
பதிலளிநீக்குஎப்படி போகிறது என நாமே
யூகிக்கமுடியாதபடிப் போய்
மீண்டும் கிரியையும்
திருமணத்தையும் தொட்ட விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துரை அபாரம். நன்றி!
நீக்குஸார் நீங்க லக்கி சார்!! உங்க காலத்துலேயே பொண்ணு பார்க்கும் போது பேச விட்டுருக்காங்களே!!!
பதிலளிநீக்குபாவம் அந்த மாமி/கிரியின் அம்மா...அரிசி உப்புமா அன்புடன் செய்து தருகிறேன் என்று சொல்லி...ஏழ்மையிலும் அன்பு!! அதுவும் தாராள மனம்..
கூட ஒரு செட் செருப்பு// அஹஹஹஹஹ்ஹ நல்ல ஐடியா...
அன்றைய நங்கநல்லூர் இன்று ஒதுங்க இடம் இல்லாதபடி இருக்கிறதே....
ஹலோ சார்....//பெண்கள் இப்படித்தானோ// என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களா என்ன??!! என்றாலும் ரசித்தேன்...
நல்ல, சுவாரஸ்யமான, சுவையான விவரணம்...
கீதா
கிரியை என்றாவது பார்க்கமுடியும். அந்த அம்மாவை? வாழ்க்கையின் விசித்திரங்கள் என்றுமே புதிரானவை. தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குஅனுபவங்களைச் சுவையாகச் சொல்லிச் சென்றீர்கள். ஒரு சிறுகதை படித்த உணர்வு தோன்றியது. பாராட்டுகள் சார்!
பதிலளிநீக்குஉலகின் மிகவும் சுவாரசியமான கதை, நமது வாழ்க்கை கதைதானே! தங்கள் வரவுக்கு நன்றி. தங்கள் புத்தகங்களை புஸ்தகாவில் பார்த்தேன். படிக்கிறேன்! நிறைய எழுதுங்கள்.
நீக்கு