வியாழன், ஏப்ரல் 06, 2017

ஓடு கண்ணா, ஓடு! (1)

பதிவு எண்   25 / 2017
ஓடு கண்ணா, ஓடு ! (1)
-இராய செல்லப்பா

கல்லூரியில் இன்று வகுப்புகள் மூன்று மணிக்கே முடிந்துவிடும் என்று பேசிக்கொண்டார்கள். கல்லூரியின் நிறுவனரான கொடைவள்ளலின் பேரனுக்கு (வயது 70) உடல்நலம் சரியில்லை. எல்லா ஆசிரியர்களும் நேரில் மருத்துவமனைக்குச் சென்று பூங்கொத்து வழங்கி நலம்பெற வாழ்த்துவதென்று முதல்வர் முடிவு செய்திருக்கிறாராம்.

முஸ்தபா கட்டாயம் போக வேண்டும். அனாதைக் குழந்தையான அவனை வளர்த்து, இளங்கலைப் பட்ட முதலாண்டு  வரை கொண்டுவந்து விட்டவராயிற்றே! தாத்தாவின் கொடைக்குணம் இவருக்கும் இருந்தது. நல்ல மனிதர். அவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது. நிச்சயம் நேராது. ஏனென்றால் தர்மம் தலை காக்கும்.

தாத்தாவின் பெயர் தான் அவருக்கும். மெக்காவுக்குப் பலமுறை ஹஜ் யாத்திரை சென்று வந்ததால் ‘ஹாஜி’ என்ற கௌரவப் பட்டமும் சேர்ந்துகொண்டது. வயதாக வயதாக அவரது பெயரே மறந்துபோய், ஹாஜியார் என்றே அழைக்கப்பட்டார்.

ஆசிரியர்கள் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாணவர்களும் கிளம்பிவிட்டார்கள். பெரும்பாலும் வெளியூர் மாணவர்களே. சைக்கிள் ஸ்டாண்டில் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் சில நிமிடங்களில் பறந்துவிட்டன. தேநீர் குடித்துவிட்டுப் புறப்படலாம் என்று கேண்டீனுக்கு வந்தான் முஸ்தபா. கடைசி சமூசா விற்பனையாகும் வரை கடையை மூடுவதில்லை என்பது ஒப்பந்தக்காரரின் வழக்கம். எனவே இன்னும் அரைமணி நேரமாவது கேண்டீன் திறந்திருக்கும்.

என்ன தம்பி, ஐயாவைப் பார்க்க நீங்க போகல்லியா? என்று கேட்டபடியே தேநீரை நீட்டினார் டீ மாஸ்டர் ‘பாய்’. அவருக்கு வேறு பெயர் இருப்பதாக யாருக்கும் தெரியாது. கல்லூரியில் கேண்டீன்  திறந்த நாளில் இருந்து அவர் தான் டீ மாஸ்டர். ஒவ்வொருவரின் சுவையை அறிந்து டீ போடும் கலைஞர். அதனால் மாணவர்களிடம் நல்ல பேர் உண்டு. பணக்கார மாணவர்களிடம் தனிக் கவனம் காட்டுவார். கேட்டபோது கைமாற்று தருவார்கள். வசதி யில்லாதவர்களிடம் பரிவோடு நடந்துகொள்வார். காலையில் மீந்த   பண்டங்கள் மாலையில் இலவசம்.

இதோ, கெளம்பிட்டு இருக்கேன் மாஸ்டர்! என்ற முஸ்தபா, ஒருவாய் குடித்துவிட்டு கிளாசை அவரிடம் நீட்டினான்.  சர்க்கரை உறைக்கவில்லை.  

ஈர ஸ்பூனால் சர்க்கரையை கிளாசில் நுழைத்துச் சுழற்றிய மாஸ்டர், ஐயாவுக்கு ரொம்பத்தான் முடியலையாமே. ஆனா, இன்ஷா அல்லா, அவருக்கு ஒண்ணும் வராது. கேட்டவங்களுக்கெல்லாம் இல்லைன்னு சொல்லாதவர் என்றபடி, ஒரு பேப்பர் தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளை நீட்டினார். சாப்டுங்க, இப்பத் தான் சப்ளை வந்தது.

அவருக்கு ஒண்ணும் வராதுதான். எழுதப் படிக்கத் தெரியாத தனது தாத்தா, கல்விக்காகவென்று தனியாக எடுத்து வைத்திருந்த பெருந்தொகையைக் குடும்பத் தொழிலான  தோல் பதனிடும் தொழிலில் மூலதனமாக்கி, அதைப் பலமடங்கு பெருக்கி, இருபதே ஆண்டுகளில் அவரது கனவை நனவாக்கும் விதமாக ஒரு கல்லூரியை உருவாக்கி, சுற்றுவட்டாரத்தில் இருந்த மாணவர்களுக்கெல்லாம் உயர்கல்வியைக் கொடுத்தவர் அல்லவா, அவருக்கு நல்லதுதான் நடக்கும்.

ஆமாம் பாய், பயப்படவேண்டாம். நல்ல மனுஷர். எனக்கு எவ்வளவோ செஞ்சுருக்கார். உங்களுக்கு அவர்கிட்ட அனுபவம் உண்டா? என்று கேட்டான் முஸ்தபா. இன்னும் ரெண்டு பிஸ்கட் குடுங்க.

அத ஏன் கேக்கறீங்க தம்பி! ஒண்ணா ரெண்டா? அவரோட கம்பெனில தான் எங்கப்பாரு வேலை செஞ்சிக்கிட்டிருந்தாரு. தோல் பதனிடும்போது பயன்படுத்தற ரசாயனங்கள் அவருக்கு ஒத்துக்காம ஒடம்பெல்லாம் சொரியாசிஸ் மாதிரி வந்திட்டு ரொம்பநாள் அவதிப்பட்டார். ஐயா தான் லக்னோவுக்கு அனுப்பி யூனானி மருந்தெல்லாம் குடுத்து அவரைக் குணப்படுத்தி வெச்சாரு. ரொம்ப செலவாச்சின்னு கணக்குப்பிள்ள சொன்னாரு. இனிமே தோல் தொழில் ஒனக்கு வேண்டான்னு இந்த கேண்டீன்ல என்னெ வேலைக்கு  சேர்த்தாரு. பொண்டாட்டி வந்தப்புறம் எவ்வளவோ சின்னச்சின்னதா குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்துக்கிட்டே இருப்பாரு. எதையும் கேக்கமாட்டாரு. சம்பளத்துல பிடிக்கவும் மாட்டாரு. அவர் மட்டும் இல்லேன்னா இன்னிக்கு நான் இல்லேன்னுதான் சொல்லணும் என்று ஒரே இடத்தில் நின்று பயபக்தியோடு கூறினார் மாஸ்டர்பாய்.

கேண்டீனில் இருந்த சிலரும் கலையத் தொடங்கினார்கள். சரி, நானும் ஒங்களோட வரட்டுமா? என்றபடி கடையை மூடத் தொடங்கினார் மாஸ்டர்பாய்.

***
கல்லூரி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடந்து போய் டவுன் பஸ் பிடித்து கீழ் விஷாரம் மெயின்ரோடில் இருந்த ஹாஜியாரின் பங்களாவை அடைந்தபோது உள்ளே நுழைய முடியாதபடி பெரும் கும்பல் வாசலை ஆக்கிரமித்திருந்தது.   

மெயின்ரோடில் ஒரு வாசலும், அதிலிருந்து கிளைபிரிந்த சந்தில் ஒரு வாசலுமாக இருந்த பெரிய வீடு. இடைவெளி இல்லாதபடி சந்து முழுவதும் கார்கள் நிரம்பியிருந்தன. கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், இராணிப்பேட்டை என்று முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து முக்கியஸ்தர்கள்  வந்திருந்தனர். தொழிலால் அவர்களோடு சம்பந்தப்பட்டவர் என்பதையும் தாண்டி, தங்கள் சமூகத்தின் பிரதிநிதியாகவும் அவரைப் பார்த்தனர். எனவே அவருக்கு உடல்நலமில்லை என்றதும் பறந்து வந்திருந்தனர். பொதுவாகவே அப்பகுதி முஸ்லீம்கள் வெள்ளை லுங்கியும் வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்து, விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களைப்  பூசியிருப்பது வழக்கம். எனவே தெருவே வாசனை மிகுந்த வெள்ளைப்பூக்களால் நிரம்பியமாதிரி தோற்றமளித்தது.

கல்லூரி ஆசிரியர்கள் ஒரு குழுவாக நின்றுகொண்டிருந்தனர். முதல்வரும் நின்றிருந்தார். ஹாஜியார் படுத்திருந்த அறையில் அவர் நுழையவேண்டும் என்றால், அங்கிருந்த சிலராவது வெளியில் வந்தால்தான் முடியும். அவ்வளவு கும்பல் ஏற்கெனவே உள்ளே போயிருந்தது. எனவே தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

முஸ்தபாவும் மாஸ்டர்பாயும் ஒருவாறு  முண்டியடித்துக்கொண்டு கல்லூரி ஆசிரியர்கள் கும்பலில் கலந்து நின்றனர்.

அப்போது, உள்ளிருந்து ஹாஜியாரின் மருமகன் வெளியே வந்தார். மிகவும் களைத்துப் போயிருந்தார். கூட்டத்தினரைப் பார்த்து, ‘எல்லாரும் மன்னிக்கவேண்டும். ஹாஜியாருக்கு  இன்னும் முழுதாக நினைவு வரவில்லை. மாலைவரை யாரையும் பார்க்கவிட வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தயவு செய்து எல்லாரும் அமைதியாகக் கலைந்துபோகும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

கல்லூரி முதலவரை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டு உள்ளே போக நினைத்தவர், முஸ்தபாவைப் பார்த்து  ஏதோ நினைத்துக் கொண்டவராக, ‘முஸ்தபா, உனக்கு முக்கியமான வேலை இருக்கிறது. போய்விடாதே’ என்றார். அவனருகில் மாஸ்டர்பாய் இருப்பதையும் கவனித்தவர், ‘மாஸ்டர்பாய், நீங்களும் இருக்கவேண்டும். உள்ளே போய் வேலையைக் கவனியுங்கள்’ என்று சொல்லிவிட்டு அறைக்கதவை லேசாகச் சாத்திக்கொண்டார்.

ஆசிரியர்களை ‘அப்புறம் பார்க்கலாம், போய்வாருங்கள்’ என்று சொல்வதுபோல் சைகை காட்டிவிட்டு உள்ளே போனார் முதல்வர். அவர்கள் கலைந்தார்கள். மாணவர்களும் சிறிதுநேரத்தில் அங்கிருந்து வெளியேறினார்கள்.

மாஸ்டர்பாய்க்கு அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் தெரியும். நேராக சமையல் அறைக்குப் போனார். வந்திருந்தவர்களுக்கு தேநீர் தயாரிக்கும் பணிக்கு அவரைவிட்டால் தகுதியானவர்கள் யார்? அந்த வேலையில் இறங்கலானார்.

தனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கும் என்று முஸ்தபா சிந்தித்தான். ஒன்றும் மூளைக்கு எட்டவில்லை. ஹாஜியாரின் அறைக்கதவைச் சாத்திவிட்டதால், அந்த வழியில் போகமுடியாது. ஆகவே, சமையலறை வழியாகப் போனால், அங்கிருந்து ஹாஜியார் அறைக்கு வழி இருக்கும் என்று தோன்றியது.

ஹாஜியாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடம் என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால் கல்லூரி ஆசிரியர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமலா இருப்பார்கள்? ஒருவேளை அவரைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவையாகவும் இருந்துவிட்டால்? எனவே முதல் காரியமாக ஹாஜியாரின் முன்னால் போய்த் தனது மரியாதையைச் செலுத்தியாகவேண்டும். அது அவனுடைய தலையாய கடமை.

முஸ்தபா சமையல் அறைக்குள் நுழையக் காலை எடுத்துவைத்தான். அதற்குள் மாஸ்டர்பாய் ஓடிவந்து அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னார்:

‘இதற்கு மேல் ஒரு நிமிடமும் இங்கே நிற்காதே. ஓடிப்போய் விடு. நிலைமை சரியில்லை. இந்த மாதிரி சமயத்தில் வீண் தகராறு வேண்டாம். பெயர் கெட்டுப் போகும்.’  

முஸ்தபா திடுக்கிட்டு நின்றான். காரணம் புரியாமல் விழித்தான். ஹாஜியாரைப் பார்க்காமல் போவதா?

‘அதோ பார்’ என்று சமையலறை சன்னல் வழியே தோட்டத்துப் பக்கம் தெரிந்த ஓர் உருவத்தைக் காட்டினார் மாஸ்டர்பாய். ‘கிளம்பு. அவள் உன்னைப் பார்ப்பதற்குமுன் ஓடிப்போ..’ என்றார்.

அவளா? இங்கும் வந்து விட்டாளா?

‘ஹாஜியாரே, என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மானசீகமாக வேண்டிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் முஸ்தபா.
சிறிதுதூரம் நடந்துபோய் பஸ் பிடிப்பதற்குள் தகவல் வந்துவிட்டது: கொடைவள்ளல் ஹாஜியார் மரணம்.

‘பாத்திமா! படுபாவி. ஹாஜியார் மரணத்திற்கு நீ தானடி காரணம். உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று மனதில் கறுவிக்கொண்டான் முஸ்தபா.


© Y Chellappa


19 கருத்துகள்:

  1. ஹாஜியாருக்கு எமது இரங்கல்கள்

    இந்த ஃபாத்திமா யாரு ? வார்த்தைகளை பார்க்கும் பொழுது இளவயது போலவும் தெரிகிறதே... இருப்பினும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாத்திமா என்பவள் இளம்பெண்தான் என்று அடுத்த பதிவில் வருகிறதாமே!

      நீக்கு
  2. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது.. சடாரென கொண்டை ஊசி வளைவு!.. பயணம் பயங்கரமாக இருக்குமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே 'நெல்லைத்தமிழன்' கருத்துரைக்கு அளித்த பதிலைக் காண்க, பிளீஸ்!

      நீக்கு
  3. மிகவும் நிதானமாகப் போய்க்கொண்டிருந்தபோது என்ன திடீரென்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே 'நெல்லைத்தமிழன்' கருத்துரைக்கு அளித்த பதிலைக் காண்க, பிளீஸ்!

      நீக்கு
  4. ஆஹா... ஆரம்பத்திலேயே சஸ்பென்ஸ். மாஸ்டர் பாய்க்குக் கூட விஷயம் தெரிந்திருக்கிறது. எங்களுக்குத் தெரிய நாங்கள் காத்திருக்க வேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே 'நெல்லைத்தமிழன்' கருத்துரைக்கு அளித்த பதிலைக் காண்க, பிளீஸ்!

      நீக்கு
    2. அடடே... இது நல்ல டெக்னீக்! ஒரு பதில் அளித்து விட்டு அந்த பதிலை மற்றவர்களுக்கு கைகாட்டி விடுதல்!!!!!!!!!

      நீக்கு
  5. கதைகள்ல, 'தொடரும்' வார்த்தையைப் படித்து, அடுத்த பகுதிக்குக் காத்திருந்த அந்தக்காலப் பொறுமை போய்விட்டது.

    இரண்டு இடுகையையும் (?) ஒன்றாகப் போட்டிருக்கக்கூடாதா? இது உங்கள் அனுபவம் (அதாவது கேள்விப்பட்ட நிகழ்ந்த நிகழ்ச்சியைவைத்து எழுதப்பட்டது) என்று தோன்றுகிறது. கதை பின்னணி உங்கள் கல்லூரிக்காலம் அல்லவா?

    தொடர்கிறேன்.. நன்றாக இருப்பதால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ரகசியம் சொல்லட்டுமா? யாருக்கும் சொல்லி விடாதீர்கள். ஒரே பகுதியாகத்தான் போடுவதாக எண்ணம். பாத்திமா வந்தபோது பாதித்தூக்கத்தில் இருந்தேன். அதனால் தொடரும் போட்டுவிட்டேன். அச்சுப் பிழைகள் வந்துவிடக்கூடாதல்லவா? இனி வரும் நாட்களில் உங்கள் அறிவுரையை /அன்புரையைக் கவனித்தில் கொள்வேனாக!

      நீக்கு
  6. கொடைவள்ளல் ஹாஜியார் பற்றிய சிறப்பான தொடர். நகர்வு சிறப்பாக அமைகிறது. தொடருங்கள், தொடருவோம்.

    பதிலளிநீக்கு
  7. முஸ்தபா ....தப்பா கணக்கு போடுறே !நடந்ததை செல்லப்பா ஜி சொல்லுவார் ,கேட்டுக்க:)

    பதிலளிநீக்கு
  8. ஆகா
    இப்படி ஒரு திடீர் திருப்பத்துடன் தொடரும் போட்டால் எப்படி ஐயா?
    ஆவலுடன்கா த்திருக்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  9. ...சஸ்பென்ஸ்.....இதோ அடுத்த பகுதி}க்குப் போறோம்....

    ஹப்பா அதுக்குத்தான் கொஞ்சம் லேட்டா வந்தா இப்படி ஒரே நேரத்துல முழுஉசும் படித்து விடலாம்

    பதிலளிநீக்கு
  10. Try this website www.thiratti.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யலாம்தான். ஆனால் பெயரைப் பதிவு செய்யப்போனால்: தமிழில் எழுதினால் 'தெரியாத மொழி' என்று ஆங்கிலத்தில்சி வப்பு வண்ணத்தில் காட்டுகிறது. சரி, ஆங்கிலத்தில் எழுதினால், 'உங்கள் பெயரில் சிறப்புக் குறிகள் உள்ளன' என்று ஆங்கிலத்தில் வருகிறது!...முதலில் இதையெல்லாம் சரி செய்யுங்கள்.

      நீக்கு