வெள்ளி, ஏப்ரல் 21, 2017

எழுதிக் கிழித்த பக்கங்கள்

பதிவு எண்   31/2017
எழுதிக் கிழித்த பக்கங்கள்
-இராய செல்லப்பா

தில்லியில் இருந்த மூன்றாண்டுகள் என் வாழ்வின் பெருமைமிக்க நாட்கள். தமிழின்பால் உணர்வுபூர்வமான அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்த ஏராளமான எழுத்தாளர்களை எனக்கு நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஏற்படுத்திக் கொடுத்த காலம் அது.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமைகளில் எனது கவியரங்கம் நடைபெறுவது வழக்கம். மேலும் சங்கத்தின் சார்பிலும் பாரதி-200 அமைப்பின் சார்பிலும், தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் எனது கவிதை இடம்பெற்றதுண்டு. அவற்றுள் சில கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ என்றும், ‘தலைநகரில் தமிழ்க் குயில்கள்’ என்றும் இரண்டு புத்தகங்களாக வெளியாகின. நா.பா. அவர்களின் உறவினர், ‘தீபம்’ திருமலை அவர்களால் நவபாரதி பிரசுரத்தின் வாயிலாக வெளியிடப்பட்டன.


கல்லூரி நாட்களில் இருந்தே நான் எழுதிய  கவிதைகளும், வானொலி- தொலைக்காட்சியில் இடம்பெற்ற கவிதைகளுமாகச் சேர்த்து சுமார் எண்பது பக்கம் வரக்கூடிய புத்தகம் ஒன்றினைத் தயாரித்து, அதற்கொரு முன்னுரை வழங்குமாறு எனக்கு நன்கு அறிமுகமாயிருந்த தமிழறிஞர்  ஒருவரைக் கேட்டிருந்தேன். அப்போது தில்லியில் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் அவர் பதவியில் இருந்தார். ‘படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார் முதல் நினைவூட்டலின்போது. ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு சந்தித்தபோது, ‘அடடா, உங்கள் பிரதி காணவில்லையே, எங்கோ தவறிவிட்டது’ என்றார். அடுத்த மாதம் மீண்டும் பிரதி எடுத்துக் கொடுத்தேன். ‘பதினைந்துநாள் பொறுங்கள்’ என்றார்.

அதன்பிறகு அவருக்கு வேலைப்பளு அதிகமாகியது. அடிக்கடி சென்னைக்குச் சென்றுவந்ததால்  ஓய்வுநேரம் குறைந்தது. என் கவிதையைப் படிப்பதா தலையாய விஷயம்! மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரே ஒரு முறை நினைவூட்டிப் பார்க்கலாமே என்று முயன்றேன். ‘அப்படியா, என்னிடம் கொடுத்தீர்களா?’ என்று வியப்போடு பதில் வந்தது.

சிலநாட்களில் எனக்குச் சென்னைக்கு மாற்றல் வந்தது. தமிழ்ச் சங்கத்தில் சிறப்பான பிரியாவிடை கொடுத்தார்கள். சாமான் சங்கதிகளை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பும் நேரம் வந்தது. மேற்படி கவிதைப் புத்தகத்தின் மூலப் பிரதி என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.

விமானத்தில் செல்வதனால், குறைந்த எடையளவே பொருட்களை எடுத்துச் செல்லமுடியும். எனவே பாரம் மிகுந்த கவிதைப் பிரதியை தில்லியிலேயே மறந்துவிடுவது என்று தீர்மானித்தேன்.  

நான் குடியிருந்த காசியாபாத்தில் இருந்து கனாட்பிளேஸ் வரும் வரையில் யமுனா பாலம் இருந்தது. கடைசிநாள் பஸ் பயணம். கவிதைகளை கடைசிமுறையாகப் படித்தேன். அப்படியொன்றும் மோசமாக எழுதிவிடவில்லை என்ற திருப்தி ஏற்பட்டது. ஆனால் ஒரு பெரிய மனிதரிடம் முன்னுரை பெறுவதற்குக் கூடத் தகுதி இல்லாத கவிதையாகிப் போயிற்றே என்று ஆதங்கம் எழுந்தது. பஸ்சில் இருந்தபடியே பிரதியை ஒவ்வொரு தாளாகப் பிரித்து எட்டாக மடித்துக் கிழித்தேன். கிழித்த துண்டுகளைக் கீழே ஓடிக்கொண்டிருந்த (அழுக்கு நிறைந்த) யமுனா நதியில் வீசி எறிந்தேன். 

சில துண்டுகள் எதிர்க் காற்றில் பஸ்சிற்குள்ளேயே வந்து விழுந்தன. அவற்றை ஒரு வயதான பெண்மணி குனிந்து எடுத்துவந்து கொடுத்தார். ‘உங்கள் பிரார்த்தனை நிறைவேறட்டும்’ என்று வாழ்த்தினார். 

பிரார்த்தனைகளைக் காகிதத்தில் எழுதி, (நதியாகிய) யமுனாதேவியை  வேண்டிக்கொண்டு கிழித்தெறிவது அங்குள்ளவர்களின் வழக்கமாம். ‘சிறகு முளைக்காத கனவுகள்’ என்று அத்தொகுப்பிற்கு எதிர்மறையாகப் பெயர் வைத்ததாலோ என்னவோ, என் பிரார்த்தனை நிறைவேறவில்லை. விடுங்கள்.
****
நான் புகுமுக வகுப்பு மாணவனாக இருந்தபோதுதான் தமிழின் மீது தீவிரக் காதல் உருவாயிற்று. அதற்குக் காரணமானவர், எனது அப்போதைய தமிழ்ப் பேராசிரியர் (அமரர்) எஸ்.ஹமீது அவர்கள்தாம். நெல்லயில் இருந்து இயங்கிவந்த முத்தமிழ் இலக்கியக் கழகம் - பேராசிரியர் வளன்அரசு அவர்களைத் தலைவராகக் கொண்டது - நடத்திய இலக்கியக் கட்டுரை போட்டியில் நான் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியவர் அவர்தான். தலைப்பு ‘இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ என்பதாகும்.

கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் ஒரு தவம் போல அதற்காக நான் முயற்சி செய்தேன். நான்கைந்து நூலகங்களில் இருந்த முக்கால்வாசி நூல்களை அதற்காகப் படித்துமுடித்தேன். சுமார் 70 பக்கங்களில் ஆய்வுக்கட்டுரை தயாரானது. பேராசிரியர் ஹமீத் அவர்கள் அதைப் படித்துவிட்டு திருத்தங்கள் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். சுமார் மூன்று மணிநேரம் அதைப் படித்தவர், ‘எதையும் திருத்தவேண்டாம்; நன்றாக வந்திருக்கிறது. உனக்குப் பரிசு நிச்சயம்’ என்றார்.

கட்டுரைப் போட்டியின் முடிவு அந்த ஆண்டு ஜூன் மாதம் வந்திருக்கவேண்டும். புகுமுக வகுப்புத் தேர்வுகள் முடிந்து கல்லூரியைவிட்டு வெளிவந்தாயிற்று. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை. வெறுங்கை முழம்போடுமா? மேற்கொண்டு படிப்பதற்கு வைட்டமின் ‘ப’ வேண்டுமே! வருத்தத்துடன் இருந்த ஒரு நாளில், உள்ளூர் டிவிஎஸ் லாரி சர்வீஸ் நண்பர் அழைத்தார். ‘திருநெல்வேலியில் இருந்து பார்சல் வந்துள்ளதே, ஏன் எடுத்துக்கொண்டு போகவில்லை?’ என்றார். எனக்கு யார், என்ன அனுப்புவார்கள் என்று புரியவில்லை. நான்கு ரூபாய் கட்டணம் செலுத்திப் பெற்றுகொண்டேன். 

ஒரு புத்தகப் பார்சல். ந.மு.வே.நாட்டார் உரையில் ‘பத்துப்பாட்டு- மூலமும் உரையும்’ என்ற சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. கனமான புத்தகம். கூடவே ஒரு அழகிய பேனா. ஒரு சான்றிதழ். கட்டுரைப் போட்டியில் எனக்கு மூன்றாவது பரிசாம்! முதல் இரண்டும் எம்.ஏ. வகுப்பு மாணவர்களுக்குப் போயிருந்தது.

தகவல் பரவியதும், பேராசிரியர் கேட்டார்: ‘அந்தக் கட்டுரை பிரதியைக் கொடு, பைண்டு செய்து கல்லூரி நூலகத்தில் வைக்கவேண்டும்’ என்றார். என்னிடம் இல்லையே! இரண்டு மூன்று முறை அடித்தும் திருத்தியும் எழுதிய காகிதங்கள் மட்டுமே இருந்தன. இறுதிப் பிரதி தயாராகும்போது கட்டுரை சமர்ப்பிக்கும் கடைசிநாள் நெருங்கிவிட்டதால், பார்த்து எழுதி இன்னொரு பிரதியெடுக்கும் அளவுக்கு நேரம் இல்லாமல் போயிற்று. எனது பேராசிரியர் நினைத்திருந்தால் அவர்களிடம் கேட்டு வாங்கியிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் அவர்களின் விதியின்படி, முதல்பரிசு பெற்ற கட்டுரை மட்டும் அவர்களால் அச்சிடப்படும் என்றும் மற்றவற்றைத் திருப்பித்தர இயலாது என்றும் முன்பே அறிவித்திருந்தார்கள்.

பல ஆண்டுகள் கழித்து, எமது வங்கியின் கிளை நெல்லையில் தொடங்கியபோது பேராசிரியர் வளன்அரசு அவர்களின் மாணவர் ஒருவர்  எமது வங்கியில் பணியில் இருந்ததைக் கண்டேன். அவர்மூலம் எனது கட்டுரையின் படி கிடைக்குமா என்று விசாரிக்கச் சொன்னேன். எனது துரதிர்ஷ்டம், சில வாரங்களுக்கு முன்புதான் சுமார் முப்பது வருடத்துப் பழங்குப்பைகளை வீட்டில் இருந்து அகற்றினாராம். ஒரு மாதம் முன்னால்  கேட்டிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்குமாம்!
****
சேலத்தில் எம்.எஸ்சி. இறுதி ஆண்டில் பிரியாவிடை நிகழ்வின்போது வாசித்த என்னுடைய கவிதையை எனது பேராசிரியர் தி. கோவிந்தராஜன் அவர்கள் பல ஆண்டுகள்வரை நினைவில் வைத்திருந்தார். முப்பது விருத்தங்கள் கொண்டது. நானே பலமுறை படித்துக் காதலித்த கவிதை அது. என்னிடம் அதன் பிரதி இல்லை.

அதே போல், கவிஞர் சுரதா தலைமையில் நடைபெற்ற எனது முதல் கவியரங்கக் கவிதை ‘மரம்’ என்ற தலைப்பிலானது - என்னிடம் இப்போது இல்லை. கல்லூரி ஆண்டுமலரில் வெளியிட்டார்கள். 

வீடும் ஊரும் மாறியதில் கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டன. கிடைத்தவர்கள் அவற்றைக் கிழித்துப் போட்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
****
ஆனந்தவிகடனில் ‘தெருவிளக்கு’ என்ற மர்மத் தொடர்கதை வெளியாகிக்கொண்டிருந்த போது நான் ஏழாவதோ எட்டாவதோ படித்துக்கொண்டிருந்தேன். மாயாவின் ஓவியங்களில் சிறப்பாக வெளியான நாவல் அது. என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த கதை. விகடன் எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருந்து படிப்பார்.

‘தெருவிளக்கு’ வழங்கிய உத்வேகத்தில், நானும் ஒரு மர்மக் கதை எழுதினேன். அப்போது என் வீட்டில் மின்விளக்கு இல்லை. எனவே தெருவிளக்கில்தான் எழுதினேன்! ‘தெருவிளக்கி’ல் இன்ஸ்பெக்டர் மாதவமேனன் என்று ஒரு பாத்திரம் வரும். என் கதையிலும் ஒரு இன்ஸ்பெக்டர் வருவார். அவர் பெயரும் மாதவமேனனே. சுமார் 120 பக்கம்- வெள்ளைத்தாளின் ஒரேபக்கமாக- அழகான கையெழுத்தில் எழுதி முடித்தேன்.

ஐம்பது கிராம் எடையுள்ள புத்தக அஞ்சலுக்கு அப்போது எட்டு பைசா தபால்தலை ஒட்டவேண்டும். ஏற்கப்படாத கதையைத் திருப்பி அனுப்புவதற்கு உரிய தபால்தலையையும் வைத்து அனுப்பவேண்டும் என்பது அப்போதைய விதி. இரண்டுக்கும் சேர்த்து ஆன செலவு ஒரு ரூபாய்க்குச் சற்றுக் குறைவே.

சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள். பள்ளியில் உணவு இடைவேளையின்போது தபால்காரர் மிகப்பெரிய பார்சல் ஒன்றை என்னிடம் வீசினார். மற்ற மாணவர்கள் பொறாமையோடு பார்த்தார்கள். விகடன் முத்திரையிட்ட கவர்! ‘ஆஹா, நம்முடைய கதையை ஒருவேளை தீபாவளி மலரிலே வெளியிட்டிருக்கிறார்கள் போலும், அதுதான் இவ்வளவு பெரிய பார்சல்’ என்று எண்ணிக்கொண்டே பிரித்தேன். நான் அனுப்பிய கதைதான் திரும்பிவந்திருந்தது! ஒவ்வொரு பக்கத்திலும் வலது மேற்புறத்தில் Rejected என்ற ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை! 

கூடவே அன்பளிப்பாக விகடனின் சில பழைய பிரதிகள்! மற்றும் ஒரு கடிதம். ‘மாணவப் பருவத்தில் நிறையப் படிக்கவும். எழுதிக்கொண்டே இருக்கவும். தளரவேண்டாம்’ என்று ஆசிரியர் சார்பாக யாரோ கையெழுத்து இட்டிருந்தார்கள்.

அப்போது கன்னி.மாணிக்கம் என்ற தமிழாசிரியர் -எழுத்தாளர் -எங்களுக்கு ஆசிரியராக இருந்தார்.(தேன்கனிக்கோட்டை உயர்நிலைப்பள்ளி.) அவரது கதைகள் ‘தாமரை’ மாத இதழில் அவ்வப்பொழுது வெளியாகிக்     கொண்டிருந்தது. அவர் இந்தக் கதையைப் பார்த்து பிரமித்தார். இவ்வளவு பெரிய கதையை  எப்படி எழுதினாய் என்று பாராட்டினார். விகடனில் வேண்டாம் என்றால், குமுதத்தில் எடுத்துக்கொள்வார்கள். உடனே குமுதத்திற்கு அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார். அன்றே குமுதத்திற்கு அனுப்பினேன்.

ஆனால் குமுதத்தில் கதை வெளியாகவும் இல்லை. திரும்பிவரவும் இல்லை. திருப்பி அனுப்புவதற்குத் தபால்தலை வைத்து அனுப்பவில்லையே நான்!
நியூயார்க் மாடர்ன் ஆர்ட் மியூசியத்தில் இருந்து

கொஞ்சநாள் வைத்திருந்துவிட்டுக் கிழித்துப் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

***
கணினி வந்தபிறகு கையால் எழுதுவதும் இல்லை, கிழித்துப்போடும் கவலையும் இல்லை. எவ்வளவு தடவை வேண்டுமானாலும் எழுதலாம், அழிக்கலாம், சேமித்துவைக்கலாம். கைவேலை மட்டுமல்ல, கை வலியும் மிச்சம்!

ஆனால் கிழித்துப் போட்ட காகிதங்களின் நினைவு மட்டும் நெஞ்சைவிட்டு அகல மறுப்பது ஏனோ?
***
© Y Chellappa


16 கருத்துகள்:

 1. எழுதிக் கிழித்த பக்கங்கள்
  அவை - இன்னும்
  எத்தனையோ
  எழுதத் தூண்டும் பக்கங்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. பாம்பின் கால் பாம்பறியும். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 3. கணினி வந்தபிறகு கையால் எழுதுவதும் இல்லை, கிழித்துப்போடும் கவலையும் இல்லை.

  /////

  ஆனாலும் அவை பொக்கிஷங்கள்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கவிதையை கிழித்துப் போட்டதை வனையாகக் கண்டிக்கிறோம் சார். ஏன் சார் அவர் எழுதவில்லை என்பதால் உங்கள் கவிதை தரம் தாழ்ந்து போகாதே...வைத்திருந்தால் இப்போது கூட புஸ்தகாவில் வெளியிட்டிருக்கலாம்....என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க... பொக்கிஷம்...
  உண்மை.இப்போது கணினியில் எழுதுவது மிகவும் வசதிதான்...அழித்து,திருத்தி எத்தனை பிரதி கூட வைத்துக் கொள்ளலாம்....

  என்றாலும் உங்கள் கவிதை தொகுப்பை கிழித்தது வருத்தம்....


  பதிலளிநீக்கு
 5. போனது போகட்டும்! உடனே கவிதை எழுத வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 6. ஒரு கவிஞரை சிறந்த எழுத்தளரை பத்திரிகை உலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் இப்போதெல்லாம் படைப்பாளிகள் பத்தரிகைகளை போருட்படுத்தேவதே இல்லை. அவர்களே வலைப் படைப்புகளை வைத்துத்தான் ஒப்பேற்றுகிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையைச் சொன்னீர்கள். அதிலும் வலைப்பதிவருக்குச் சொல்லாமலேயே அவர்களுடைய படைப்புகளை வெளியிட்டுவிடுகிறார்கள். தனது படிப்பு வெளியானதே பலருக்குத் தெரிவதில்லை. தேங்காய் மூடி கச்சேரிதான்! தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 7. இரசித்து மிக முயன்று
  சிறப்பாகச் செய்த படைப்புக்களை இழந்தது
  நிச்சயமாக பெற்ற மகனை தொலைத்த
  சோகத்திற்கு எந்த விதத்திலும்
  குறைந்ததாய் இருக்க வாய்ப்பில்லை
  இழப்பு உங்களுக்கு மட்டுமானது இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருவில் சிதைந்த குழந்தையின் நினைவுபோல் அழியாது நிற்கும் துயரம் அது. தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 8. அவசரப்பட்டு கிழித்து விட்டோமே என்று வருத்தம் உள்ளதா? வைத்திருந்திருக்கலாம். கதை, கவிதை, கட்டுரை என்று ல்லாமே எழுதும் சகலகலாவல்லவருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. ஈடு செய்ய முடியா இழப்பு என்று இதைத் தான் சொல்ல வேண்டும். அவர் முன்னுரை எழுதாவிட்டால் என்ன? உங்கள் கவிதைக்கு முன்னுரை எழுத அவருக்குத் தகுதியில்லை என நீங்கள் நினைத்திருக்க வேண்டும். அதற்காகக் கிழித்ததை நினைக்கத் துயரம் தான். இழப்பு தங்களுக்கு மட்டுமல்ல; தமிழுக்கும் தான்!

  பதிலளிநீக்கு