பதிவு
எண்
27 / 2017
உள்ளிருந்து
பேசும் குரல்
-இராய
செல்லப்பா
மேற்கு மாம்பலத்தில்
என் பேரக்குழந்தைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஒரு சிறிய சாலையில் இருந்தது. பள்ளிநேரத்தின்போது
இருசக்கர வாகனங்கள் மட்டுமே அந்தச் சாலையில் எளிதாகச் செல்லமுடியும்.
எனவே ஒரு
புதிய ஸ்கூட்டி வாங்க முடிவு செய்தேன். குறைந்தது ஐம்பது பிராண்டுகள் இருந்ததால் எதை
வாங்குவது என்று குழம்பியபோது செய்தித்தாளில் வந்த டிவிஎஸ் வீகோ (Wego) விளம்பரம்
கண்ணில் பட்டது. புதிய வண்டி. அன்றுதான் ‘வெளி’விடுகிறார்கள். அதையே வாங்கலாம்
என்று எல்லோரும் விரும்பினார்கள். இரண்டே நாளில் கிடைத்தது. தங்கநிறத்தில் மினுமினுத்த
வண்டி குழந்தைகளுக்கும் பிடித்துவிட்டது.
நியூ ஜெர்சி-பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீன் பாடம் எடுத்த அரங்கம் படம்-2013 இல் எடுத்தது |
காலில் மூட்டு மாற்று
அறுவை சிகிச்சைசெய்து ஓய்வில் இருந்த நேரமாதலால் வண்டியை என் மகள்தான்
ஓட்டிக்கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு நாள் நாமே வண்டியை எடுத்து ஓட்டினால் என்ன என்று தோன்றியது. முன்னேற்பாடாக, கால்களை
உதறினேன். நடந்தேன். மாடிப்படிகளில் ஏறி இறங்கினேன். படுக்கையில் படுத்துக்கொண்டு கால்களை
உயர நீட்டி மடக்கினேன். சற்றும் வலிக்கவில்லை. அறுவை சிகிச்சை செய்த மூட்டு
இயல்பாக அசைந்து கொடுத்தது. சிகிச்சையின் பலன் கிடைத்துவிட்டது.
சுமார் முப்பது
கிலோமீட்டர் தொலைவில் (ஊரப்பாக்கத்தில்) குடியிருந்த என் நண்பரைப் பார்த்துவரலாம்
என்று கிளம்பினேன். புதுமெருகோடு பளபளத்தது டிவிஎஸ் வீகோ. ஓரளவுக்குப் பழைய லாம்பி
மாதிரியான கனமான வண்டி. கியர் இல்லை என்பதால் எளிதாக இயக்கமுடிந்தது.
விடுமுறைநாளின் காலை நேரம். சாலையில் போக்குவரத்து அதிகமில்லை. நேர்காற்றுவேறு. கத்திப்பாராவைத்
தாண்டும்போது மனதில் ஏதோ ஒன்று ‘இத்துடன் போதுமே! உன்னால் ஓட்ட முடியும் என்று தெரிந்துவிட்டதல்லவா? கால் சரியாகிவிட்டது
அல்லவா? வீட்டிற்குத் திரும்பிவிடேன்’ என்றது.
சில நேரங்களில்
எனக்குள்ளிருந்து இப்படி அழுத்தமாக ஓர் உணர்வு தோன்றுவதுண்டு. அதை நான் மதிப்பேன்.
குறிப்பாக எந்த நோக்கமும் இல்லாமல்தானே கிளம்பினேன்! சரி, திரும்பிவிடலாம் என்று
நினைத்தேன். சிவப்பு சிக்னல் விழுவதற்குக் காத்திருந்தேன். ஆனால்? சிக்னல்
பழுதுபோலும், ஒரு காவலர் கைவழியாக சிக்னல் காட்டி ‘நேரே போங்கள்’ என்றார். அவ்வளவுதான்
ஜிஎஸ்டி சாலையில் கலந்துவிட்டேன். அடுத்த சிக்னல் என்னை நிறுத்தியபோது தாம்பரம் வந்துவிட்டிருந்தேன்.
அப்போது மீண்டும் அதே குரல். ‘தாம்பரத்தில் இருக்கும் உன் நண்பர் ......ஐ ப்
பார்த்துவிட்டுத் திரும்பிப் போய்விடேன். ஊரப்பாக்கத்திற்கு இன்னொருநாள் போகலாமே’
என்றது.
என்னடா இது அபசகுனம் போல
என்று நினைத்தேன். முன்னும் பின்னும் வண்டிகள். சிக்னல் விழுந்துவிட்டது. வேறு
வழியில்லை. ஊரப்பாக்கம் பாதையில்தான் சென்றாகவேண்டும். இடதுபுறம் திரும்பமுடியாது.
நண்பரை நலம்
விசாரித்துவிட்டு, லேசான உணவருந்தியபின் கிளம்பினேன். பகல்நேரம். தாம்பரத்தில்
இருந்து அசோக்நகரை நோக்கி வரும்போது வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
எதிர்காற்றுவேறு. என்னதான் மற்ற டிவிஎஸ் ஸ்கூட்டிகளைவிட இது கனமாக இருந்தாலும்,
கியர் இல்லாத காரணத்தால் பிடிப்பு குறைவாகவே இருந்தது. நம்மோடு ஏதேனும் பஸ் ஒரே
திசையில் பயணித்தால் இந்த வண்டி சற்றே அசைந்தாடுவதாகத் தோன்றியது. அப்படியானால்
சிறுபெண்கள் ஓட்டும் குள்ளமான, கனமற்ற, பிற ஸ்கூட்டிகளின் நிலைமை எவ்வளவு ஆபத்தானதாக
இருக்கவேண்டும்?
விமான நிலையத்தை
நெருங்கும்போது கட்டுக்கடங்காத கும்பல் சாலையில் தெரிந்தது. நான்கு சக்கர
வண்டிகளையே தள்ளிக்கொண்டு போய்விடும் போல் இருந்தது மக்கள்சக்தி. எனவே ஓரமாக ஒதுங்கினேன். பல்லாவரத்தில் இருந்து மீனம்பாக்கம் செல்லும்போது விமான நிலைய மேம்பாலத்தில் ஒரு பஸ் லேசாக
மோதுவதுபோல் நெளிந்துசென்றது. ஜெயின்காலேஜ் அருகில் ஒரு தண்ணீர் லாரியை நான் நெருக்கமாகச்
சந்தித்துக்கொண்டே ஓட்டிடும்படி ஆயிற்று. ஒரு வழியாக அசோக்நகருக்கு வந்துவிட்டேன்.
பயந்து பயந்து
ஓட்டினேன். நல்லவேளை, ஒன்றும் ஆகவில்லை. இன்னும் இருநூறடியில்தான் என் வீடு.
அப்போது ஒரு சிறிய நாற்சந்தி என்னை நிறுத்தியது. சிக்னல் விழவேண்டும். எதிரில் ஒரு
கூட்டுறவு வங்கி.
அடுத்த நிமிடம் என்ன ஆயிற்றென்று தெரியாது, ‘டங்’கென்ற
சப்தமுடன் வண்டியோடு கீழே சாய்ந்தேன். யாரோ வந்து என்னை எழுப்பி உட்கார
வைத்தார்கள். ஹெல்மெட் இருந்ததால் கைகால்களில் சிராய்ப்புடன் தப்பினேன்.
வண்டிக்குத்தான் கொஞ்சம் சேதம். வாங்கி ஒருமாதத்திற்குள் விபத்து நேர்ந்ததே என்ற கவலைதான்
அதிகமாக இருந்தது. போகாதே என்ற போதும் போனதின் பலனோ? கோவலனைப் பார்த்து ‘வாரல்
என்பனபோல் மறித்துக் கைகாட்டியதாமே’ மதுரையில் பறந்த கொடிகள், அது ஞாபகம் வந்தது. கோவலனுக்கு
நான் பரவாயில்லை.
சிக்னலில் நான்
நின்றபோது, எனக்கு வலது புறம் இருந்து வந்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள், சிக்னலை
மதிக்காமல் போட்டி போட்டுக்கொண்டு விரைந்தனவாம். அதில் ஒன்று என் வண்டியின் முன் சக்கரத்தில் மோதி என்னைத் தள்ளிவிட்டதாகப்
பார்த்தவர்கள் சொன்னார்கள்.
‘உள்ளுணர்வு
எச்சரித்தும் ஏன் போனீர்கள்?’ மனையாட்டியின் கேள்வி.
***
நான் மங்களூரில்
பணியில் இருந்தபோது ஒருநாள். தில்லியில் இருந்து வந்திருந்தார் உடன்பணியாளர் யாதவ்.
இருவரும் ஒன்றாகத் தில்லியில் பணிசெய்திருந்தோம். இருபது வருடங்கள் முன்பு. அதன்
பிறகு அடிக்கடி தொலைபேசுவதோடு சரி, அன்றுதான் நேரில் பார்க்கிறேன். என் வயதே
ஆனவர். ஆனால் என்னைவிடப் பலமடங்கு முதுமையை அவர் முகம் காட்டியது. குறிப்பாக அவரது
தலைமுடியின் வெளுப்பு இதுவரை நான் காணாத நிறமாகத் தோன்றியது. அடர்த்தியான கூந்தல்.
ஆனால் ஒவ்வொரு மயிரிழையும் நெட்டுக்குத்தாக நின்றது, பற்குச்சியின் நைலான் இழைகள்போல்.
உடுப்பி போகவேண்டும் என்றார். எனது காரை அனுப்பினேன்.
அவர் போனபிறகு என்
அறைக்குள் வந்த உடன்பணியாளர் ஒருவர், ‘என்ன சார் இது, இவருடைய தலை ஒரு
விசித்திரமான வெண்மையாக இருக்கிறது!’ என்றார். இன்னும் சிலரும் அதேபோல் கூறினர். என்
உள்ளுணர்வு மீண்டும் ஏதோ சொல்ல முன்வந்தது. அடக்கினேன். ஆனால் விபரீதம் நடந்துவிடுமோ
என்று மனதிற்குள் அஞ்சினேன். உடுப்பியில் இருந்து அவர் திரும்பி வந்து விமானநிலையம்
போனபிறகுதான் மனம் நிம்மதி அடைந்தது.
ஆனால் அந்த நிம்மதி சில
நாட்களே நீடித்தது. காலையில் அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்தவர், தலை சுற்றுவதாக
உணர்ந்தாராம். BP மாத்திரை சாப்பிட மறந்துவிட்டதாம். பணியாளர் போய் வாங்கிவருவதற்குள்
தலை சாய்ந்துவிட்டதாம். ஐம்பத்தேழு வயதுதான்.
***
இளம்வயதில் எனக்கு
நன்றாக நினைவிருக்கிறது.
அம்மா சமையல்
செய்துகொண்டிருப்பார். திடீரென்று வெளியேவந்து ‘கிராமத்தில் இருந்து .... மாமா
வரப்போகிறார், பார்த்துக்கொண்டே இரு’ என்பார். ‘எப்படிம்மா’ என்பேன்
ஆச்சரியத்துடன். கடிதம் போட்டுவிட்டு
வருபவரில்லை. அப்பாவுக்கும் தகவல் இல்லை. அம்மாவுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?
சரியாக இரவு எட்டரை மணி
பஸ்சில் அந்த மாமா வந்து சேருவார். அம்மா என்னைப் பார்த்துப் புன்னகைப்பார்.
இன்னொருமுறை காலை
நேரம். பள்ளி விடுமுறை. வெயிலாக இருந்தாலும் நண்பர்களுடன் கில்லி-தாண்டல் விளையாடுவது
தடைப்படாது. அந்த விளையாட்டில் நான் கெட்டி. அந்த நிமிடம் வரை பத்தாயிரம்
பாயிண்ட்டுகள் எனக்குக் கிடைத்திருந்தது. ஒரு லட்சம் வெல்வது என் இலட்சியமாக
இருந்தது.
(கில்லி எவ்வளவு
தொலைவில் போய் விழுமோ, அந்தத் தூரத்தை அடிக்கோலால் அளந்து ‘அடி’களை பாயிண்ட்டுகள் என்போம். அளப்பதற்காக அடிக்கோல் எப்போதும் கையில் இருக்கும். முதலில் சில நிமிடங்கள் கடமை உணர்வோடு
ஒன்று, இரண்டு, மூன்று எனக் குனிந்து அளப்போம். அதன் பிறகு சோம்பல் வந்துவிடும்.
தோராயமாக நான் ‘ஐநூறு அடி’ என்பேன். எதிராளி, ‘போடா, முன்னூறுதான்’ என்பான்.
கடைசியில் நானூறு என்று முடிவாகும். இப்படித்தான் பாயிண்ட்டுகளைக் கூட்டிக்கொண்டே போகவேண்டும். இந்த
விதிகள் எல்லாம் ஊருக்கு ஊர் வேறுபடுவதுண்டு.)
அம்மா அவசரமாகக்
கூப்பிட்டு, ‘....மாமா இன்று வருவார்.
ஓடிப்போய் பாயம்மா வீட்டில், சாயந்திரம்
இரண்டு ஆழாக்குப் பால் அதிகம் தேவை என்று சொல்லிவிட்டுவா’ என்பார்.
அதேபோல் மாலையில் மாமா
வந்து நிற்பார்!
பலநாள் ரகசியம் ஒருநாள்
வெளிப்பட்டது. சமையல் செய்யும்போது, வெண்கலப் பாத்திரம் கை தவறி விழுந்து சாதம்
கொட்டிப் போனால், அல்லது, குழம்பு வைத்த பாத்திரம் அடிப்பிடித்துத் தீய்ந்துபோனால்,
அல்லது கண் எதிரே பாலைக் காய்ச்சிக்கொண்டிருக்கும்போதே அது பொங்கி வழிந்து
வீணாகிப் போனால், அல்லது சமையலுக்குக் காய்கறி நறுக்கும்போதோ, தேங்காய் துருவும்போதோ, விரலில்
அரிவாள்மணை பட்டு இரத்தம் வந்தால் .....அன்று அந்த மாமா வரப்போகிறார் என்று
அர்த்தமாம். ‘என்னோட உள்ளுணர்வு முன்கூட்டியே சொல்லிவிடும்’ என்பார் அம்மா.
மாமாவுக்குப் பள்ளி
செல்லும் வயதில் குழந்தைகள் இருந்தனர். கிராமத்தில் நடுநிலைப் பள்ளி இருந்தது.
அதற்குமேல் வெளியூர் போய்த்தான் படிக்கவேண்டும். தினமும் பஸ் பயணம். அதனால்
நகரத்தில் படித்துக் கொண்டிருந்த எங்கள் மீது அவருக்குப் பொறாமையாம். அந்த
எண்ணம்தான் அவர் வருவதற்கு முன்பே நமக்கு இழப்பை உண்டாக்குகிறது என்பார் அம்மா.
***
பிற்காலத்தில்
அரவிந்தரின் தத்துவங்களில் எனக்குப் பரிச்சயம் உண்டானபோது, அவர் சொன்ன ஒரு
வாக்கியம் என் கவனத்தைக் கவர்ந்தது. ‘நான் அவனுக்கு நல்லது செய்ததே இல்லையே! பிறகு
ஏன் அவன் எனக்குக் கெடுதல் செய்கிறான்?’ என்ற வாக்கியம். (சொற்கள் மாறியிருக்கலாம்.
அர்த்தம் இதுதான். Thoughts and Aphorisms
என்ற அவரது நூலில் இடம் பெற்றதாக ஞாபகம்.)
***
எனது நண்பர் ஒருவர் உதவி
கேட்டு வருவார். செய்வேன். அவர் போன சிறிது நேரத்திற்கெல்லாம், சுவர்க் கடிகாரம்
வேலை செய்யாமல் போகும். அல்லது காற்றாடி நின்றுவிடும். அல்லது டியூப்லைட் ஃபியூசாகிவிடும்.
அல்லது கேஸ் தீர்ந்துவிடும். மாற்று கேஸ் இருக்காது.
இன்னொரு நண்பர்.
அதிகாலையில் வாக்கிங் போவார். (டில்லியில்.) பால்கனியில் இருந்து பார்ப்பேன்.
குட்மார்னிங் சொல்வார். அன்று செய்தித்தாள் போடுபவன் ஹிந்துவுக்குப் பதில் ஹிந்துஸ்தான்
டைம்ஸ் போட்டிருப்பான். அல்லது பேப்பரே போடாமல் போயிருப்பான்.
இப்படி எத்தனையோ
நடந்திருக்கிறது.
***
உள்ளுணர்வு என்பது
சக்தி வாய்ந்த கருவி. உனக்கு வழிகாட்டவும் எச்சரிக்கை செய்யவும் வல்லது. அதற்கு நீ
செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. உன் மனத்தை மௌனமாக்குவது. -அரவிந்த அன்னை.
***
ஐன்ஸ்டீனும் இதையே தனது
ஆராய்ச்சிக்கு முக்கியப் பொருளாகக் கொண்டார். Special
Theory of Relativity -ஐ எடுத்துச் சொன்னவர், பின்னர், அண்டத்தில்
உள்ள அனைத்து சக்திகளும் ஒரே மூலத்திலிருந்து கிளம்புகின்றன. மின்காந்த அலைகள்,
புவிஈர்ப்பு விசை, அணு சக்தி ....இவற்றிற்கெல்லாம்
மூலம் ஒன்றே என்றார். அதை விளக்கும் Unified Field Theory
என்ற கோட்பாடே அவரது இறுதி ஆராய்ச்சியாக அமைந்தது. முழுமையடையாத நிலையில் அவர்
மரணம் அடைந்தார். இதன் சிறு விளக்கமாக Quantum Theory வந்தது.
அண்மையில் God Particles என்பதை CERN ஆராய்ச்சியாளர்கள் ஐன்ஸ்டீன் சொன்னபடியே கண்டுபிடித்தனர். இதனால் அவருடைய ‘ஒன்றிப்புக்
கோட்பாடு’ சரியானதே என்று நாளடைவில் தெரியவரலாம்.
தத்துவமும் அறிவியலும் ஒரே
தேடலைத்தான் மேற்கொண்டிருக்கின்றன என்றார் ஐன்ஸ்டீன். இரண்டிற்கும் அடிப்படை உள்ளுணர்வே.
இந்த இருக்கையில் ஐன்ஸ்டீன் அமர்ந்திருக்கவும் கூடும்...(படம் 2013) |
© Y Chellappa
Email: chellappay@gmail.com
For Unified Field Theory, please
read, among others, http://file.scirp.org/pdf/JMP_2014103011560385.pdf
Is Consciousness the Unified Field? A Field Theorist's
Perspective:
ஆமாம் சார் உள்ளுணர்வு எனக்கும் வரும் வேண்டாம் என்று தோன்றி விட்டால் அதுவும் இறைவனை வணங்கும் போது இந்த உள்ளுணர்வு அன்று நடக்கவிருப்பதைச் சொல்லும்...அது எதிர்மறையாக இருந்தால் செய்ய மாட்டேன்....சில சமயம் தோன்றும் போது பிரார்த்திப்பேன்...தப்பிக்கும் தருணங்களும் நடந்திருக்கிறது. ஆனால் சில சமயம் நடந்தும் விடும். அதனால் எச்சரிக்கை வந்தால் அதைச் செய்வதில்லை.
பதிலளிநீக்குகீதா: அட! நானும் இந்த உள்ளுணர்வைப் பற்றி ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன் சார். அதைப் போடும் முன் கதையை போட்டுவிட்டேன்....ஐன்ஸ்டின் மற்றும் அன்னை சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன். எனக்கும் உள்ளூணர்வு தோன்றும் போது அது நெகட்டிவாக இருந்தால் நிறைய பிரார்த்திப்பேன். பிரார்த்தனையில் எதிர்மறையிலிருந்து நான் காப்பாற்றப்படுவதாக பாசிட்டிவ் உணர்வு வந்துவிடும். அல்லது பல சமயங்களில் அது எனக்கு ஃபேவரபிளாக முடிந்துவிடும் சார். சில சமயங்களில் பிரார்த்தனையும் மீறி நடந்தே விடும் அதாவது பிரார்த்தனை செய்தாலும் அந்த உள்ளுணர்வு ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒலித்தால் அது நடந்துவிடும். சில சமயங்களில் தவிர்க்க முடிகிறது சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை. அப்படியான ஒன்றைத்தான் எழுதியிருக்கிறேன்...
ஆனால் ஒருவர் வந்தவிட்டுப் போவதால் ஏதேனும் நடப்பது அல்லது அப்படி நான் இதுவரை தொடர்புப் படுத்திப் பார்த்ததில்லை. கண்திருஷ்டி எனப்படுவதையும் நான் இதுவரை தொடர்புபடுத்தியதில்லை. ப்ரேயரை மிஞ்சும் ஒன்று எதுவுமில்லை என்ற நம்பிக்கையும் அதையும் மீறி நடந்தால் நடப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையாலும் இருக்கலாம்.
உங்களுக்கு அன்று ரொம்ப ஒன்றும் அடிபடவில்லையே..தாங்க் காட்..
சுவாரஸ்யமான நிகழ்வுகள் சார்.
இன்று இது போல விசு போட்ட பதிவு போல நானும் எழுதி வைத்து போடாமல் ட்ராஃப்டில் எடிட்டிங்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது...தலைமுறை என்று எழுதி வைத்திருக்கிறேன்...அவர் அடுத்த வாரிசு என்று போட்டிருந்தார்...
என்னங்க இது, எல்லாரும் ஒரே மாதிரி பதிவு போட்டால் வாசகர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடுமே! (அன்று லேசாகத்தான் அடி பட்டது.) நன்றி!
நீக்குஇவ்வாறான உள்ளுணர்வு நினைவுகள் பலருக்கும் வருகின்ற உணர்வே. ஒருவகையில் இவைபோன்ற உணர்வுகள் நமக்கு முன்னெச்சரிக்கை தருவன மற்றும் எதிர்மறை நிகழ்வினைத் தருவனவாகும். இவ்வாறான சில உள்ளுணர்வுகள் எச்சரிக்க நான் சுதாரித்ததும், ஏமாந்ததும் உண்டு. தங்களது பதிவு என்னுடைய அந்த நிலைகளை உணர்த்தியது. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!
நீக்கு...சுவாரஸ்யமான பதிவு. இனி ஏதாவது சம்பவம் நடந்தால் அதற்குக் காரணம் தேடத் தொடங்கி விடும் மனம்!
பதிலளிநீக்குஎல்லாவற்றிற்கும் காரண காரியங்களை தேட வேண்டாம். நம்மை மீறிக்கொண்டு உள்ளுணர்வு செயல்படும்போது நமக்கே புரியும்.
நீக்குஇந்த உள்ளுணர்வு கனவுகளால் நான் படாத பாடு இல்லை ..என் போதாத நேரம் உள்ளுணர்விலில் தோன்றினாலோ கனவு கண்டாலோ அப்படியே பலிக்கிறது..இது பற்றி ஒரு இரண்டு பதிவு எழுதினேன் பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன் ..
பதிலளிநீக்குஎனக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் எதற்கு என் கனவில் வருகிறார்கள் என்பது இன்னும் எனக்கு புரியல ..அப்படி ஒரு பெண்ணின் கணவர் இறந்த அன்றே இருவரும் என் கனவில் தோன்றினார்கள் இரண்டு நாள் கழித்து கேள்வி ப்பட்டேன் அவர் கணவர்
என் கனவில் வந்த அதே நேரம் இறந்துள்ளாராம் .
நம் மீது அன்பு கொண்டவர்கள், அல்லது நாம் யார் மீது அன்பு கொண்டுள்ளோமோ அவர்கள், தமக்கு ஓர் இடுக்கண் வரும்போது நமக்குக் கனவு வழியாகத் தெரிவிப்பது உண்டு. இது உலகம் முழுதுமே நடந்து வரும் நிகழ்வு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றாரே வள்ளுவர் இதனால் தானோ!
நீக்குசுவாரஸ்யமான பதிவு. அதிலும் உங்களுக்கே உரிய இயல்பான நடை. ரசித்துப் படித்தேன். எனக்கும் இது மாதிரியான அனுபவம் உண்டு.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குநடக்கும் என்பார் நடக்காது...
பதிலளிநீக்குநடக்காதென்பார் நடந்துவிடும்...!
கிடைக்கும் என்பார் கிடைக்காது...
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்...!
நீங்கள் வருவீர்கள் என்று நினைத்தேன். வந்துவிட்டீர்களே! இதற்கு என்ன சொல்வதாம்?
நீக்குவிளங்காதவிளங்கிக் கொள்ள இயலாத
பதிலளிநீக்குஇது போன்ற சுவாரஸ்யங்கள் தானே
வாழ்க்கையையும்
சுவாரஸ்யப்படுத்திப்போகின்றன
சுவாரஸ்யமான நடையில்
அத்தனை எளிதாகச் சொல்லி விளங்க
வைக்க முடியாததைச் சொல்லிச் சென்றவிதம்
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்....
தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்கு//கில்லி எவ்வளவு தொலைவில் போய் விழுமோ, அந்தத் தூரத்தை அடிக்கோலால் அளந்து ‘அடி’களை பாயிண்ட்டுகள் என்போம். அளப்பதற்காக அடிக்கோல் எப்போதும் கையில் இருக்கும். முதலில் சில நிமிடங்கள் கடமை உணர்வோடு ஒன்று, இரண்டு, மூன்று எனக் குனிந்து அளப்போம். அதன் பிறகு சோம்பல் வந்துவிடும். தோராயமாக நான் ‘ஐநூறு அடி’ என்பேன். எதிராளி, ‘போடா, முன்னூறுதான்’ என்பான். கடைசியில் நானூறு என்று முடிவாகும். இப்படித்தான் பாயிண்ட்டுகளைக் கூட்டிக்கொண்டே போகவேண்டும். இந்த விதிகள் எல்லாம் ஊருக்கு ஊர் வேறுபடுவதுண்டு.)//
பதிலளிநீக்குஇதே விதிகள் தான் நான் எங்கள் ஊரில் விளையாடிய போதும். ஆனால் அளப்பதற்கு அடி ஸ்கேல் என்று ஏதும் தனியாகக் கிடையாது. தாண்டு என கையில் ஸ்டெம்ப் போல உள்ளது அல்லவா. தேவைப்பட்டால் அதை வைத்தே அளந்து கொள்வோம். பெரும்பாலும் கண் அளவு மட்டுமே. குனிந்து முட்டிபோட்டு அளக்கவே மாட்டோம். 50-100 அதிகமாக நமக்கு நஷ்டமாகிப்போனாலும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு விட்டுவிடுவோம்.
>>>>>
அடடே, கில்லி தாண்டல், அந்த நாளிலேயே Universal Rules & Regulations -ஐ
நீக்குபின்பற்றி நடந்ததா? சபாஷ்!
நம் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதன்படி கேட்டு நடப்பதே எப்போதும் நல்லது. தங்களின் இந்தக்கட்டுரை பல விஷயங்களைச் சொல்லிச் சென்றுள்ளது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஆம், நமது உள்ளுணர்வு சொல்லும் முதல் கருத்தை ஏற்றுக்கொண்டால் பெரும்பாலும் சரியாகவே இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்கு/இந்த இருக்கையில் ஐன்ஸ்டீன் அமர்ந்திருக்கவும் கூடும்.. /
பதிலளிநீக்குஇப்போது அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவரே எனக்கு ஐன்ஸ்டீனாகக் காட்சி தருகிறார் .... :)
என்னே உங்கள் பெருந்தன்மை! உண்மையைச் சொல்லப்போனால், எம்எஸ்சி முடித்தவுடன் எனது பேராசிரியரின் சிறப்பு சிபாரிசால் எனக்கு PhD படிக்க வாய்ப்பு வந்தது. தியரி ஆப் ரிலேட்டிவிடி தான் எனது ஆராய்ச்சிப் பொருள். ஆனால் கிடைத்த இடம் கல்கத்தாவில்.அவ்வளவு தூரம் செல்ல, குடும்ப சூழ்நிலை இடம் தரவில்லை. சிடி யூனியன் வங்கியில் அதிகாரியாக சேரும்படி வாழ்க்கை மாறிவிட்டது. இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐன்ஸ்டீன் கோட்பாட்டைப் புரட்டிக்கொண்டுதான் இருக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
நீக்குமிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஉண்மைதான் ஜி. எச்சரிக்கை உணர்வு நம்மை விட்டுப் போகவில்லை.
பதிலளிநீக்குதங்களின் எழுத்தில்அருமையான பதிவு ஐயா
பதிலளிநீக்குஉள்ளுணர்வைப் பல நேரங்களில் நாம்தான் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்
வணக்கம்.
பதிலளிநீக்குஇதுபோன்ற உள்ளுணர்வு எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அனுபவமும் பெற்றிருக்கிறேன்.
சுவாரசியமான நடை.
தொடர்கிறேன்.
நன்றி.
These are hunches about which only on hindsight we think
பதிலளிநீக்குஅப்படியும் சொல்லலாம் தான் சார்!
நீக்குநானும் சில நேரங்களில் உணர்ந்துள்ளேன் சார...அனைவரையும் நினைவலைகளில் ஆழ்த்தும் பதிவு இது
பதிலளிநீக்குமிக்க நன்றி - தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும்!
நீக்குசில நிகழ்வுகள் நடந்து முடிந்த பின் பின்னோக்கி பார்க்கும்போது ஏதோ ஒன்று அதனை முன்னதாகவே உணர்த்தியதாக இருப்பதை பலரும் சொல்கிறார்கள்.ஆனால் பெரும்பாலோர் அதனை பொருட்படுத்துவதில்லை
பதிலளிநீக்குஆம் நண்பரே! தங்கள் வரவுக்கு நன்றி!
நீக்குஉள்ளுணர்வால் உந்தப் பெற்று
பதிலளிநீக்குஎதையும் மனிதன் செய்வான்...
சிறந்த பதிவு
ஆம் நண்பரே, பல நேரங்களில் நம்மை வழிநடத்துவது உள்ளுணர்வே. தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குநிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். ஆராய்ச்சியாளர்களுக்கும் அவர்கள் ஆராய்ச்சி தடைபடும்போது உள்ளுணர்வே அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.
பதிலளிநீக்குஎல்லோரும் யோசிக்கலாம். நமது மன சாட்சி என்பது என்ன? அது ஏன் எப்போதும் நம்மை, 'நீ செய்வது தவறு. இதைச் செய்யாதே' என்று எச்சரிக்கிறது? அதாவது, மனசாட்சி, சரியான நீதிபதியாக ஒவ்வொருவருக்கும் அமைவது எப்படி?
சிலசமயம், அவசர எண்ணம், நாம் தூங்கும்போதும் வரும் (உள்ளுணர்வு).
மன சாட்சியை மதித்து, உள்ளுணர்வை மதித்து நாம் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்தால், எல்லோரும் புத்தர்தான்.
உள்ளுணர்வு என்பதே மனச்சாட்சி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்கு