புதன், ஏப்ரல் 12, 2017

அப்துல்லாவிடம் ஏழு பசுக்கள் இருந்தன

பதிவு எண்   29 / 2017
அப்துல்லாவிடம் ஏழு பசுக்கள் இருந்தன 
-இராய செல்லப்பா

ஐந்தரை மணிக்குள் வீட்டை விட்டுக் கிளம்பினால்தான் நல்லது. அதற்குமேல் என்றால் வரிசை பெரிதாகிவிடும். எப்படியும் முப்பது பேராவது தேறும். பெண்கள்தான் அதிகம். அதில்  பாதிக்குமேல் இளம் பாட்டிகள். அவரவர் வசதிப்படி கையில் பித்தளை கூஜாவோ, எவர்சில்வர் கூஜாவோ, உயரமான தூக்கோ வைத்திருப்பார்கள். ஆண்களுக்கு ஒன்றும் பெண்களுக்கு ஒன்றுமாக இரண்டு வரிசை இருக்கும். முதல் பத்துப்பேருக்கு ஊற்றியவுடன் ஒரே வரிசையாக வரச்சொல்லுவார் அப்துல்லா பாய்.

சாணமிட்டு மெழுகி, சற்றே உயரமாக அமைந்திருந்த மண்மேடை மீது சப்பணமிட்டு உட்கார்ந்திருப்பார் அவர். சுமார் நாற்பது வயதிருக்கும். எதிரில் ஒவ்வொன்றும் சுமார் இரண்டடி உயரம் கொண்ட ஐந்தாறு பால் ‘கேன்’கள்.  


நாலு மணிக்கே எழுந்து பால் கறக்க ஆரம்பித்துவிடுவாராம் அப்துல்லா. ஷமீம் சொல்வான். அவருடைய கடைசித்தம்பி. என்னுடைய வகுப்பு தோழன். இராணிப்பேட்டை ஜேபிஜே எலிமென்ட்டரி பள்ளியில் நான்காவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். நடேச அய்யர் எங்கள் வாத்தியார்.

அப்துல்லாவிடம் ஏழு பசுக்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்திருந்தார். ஒவ்வொரு பசுவின் பாலையும் வெவ்வேறு ‘கேன்’களில் வைப்பார். ஏனென்றால், மாட்டின் பெயரைச் சொல்லி, அந்த மாட்டின் பால்தான் வேண்டும் என்று பாட்டிமார்கள் கேட்பார்களாம். லட்சுமி அப்போதுதான் கன்றுபோட்டிருந்தது. அதன் பாலுக்கு ஏக டிமாண்ட். கைக்குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாம். சில பசுக்களின் பால் கெட்டியாக இல்லாமல் நீர்த்திருக்குமாம். அதை வயதானவர்கள் விரும்பிக் கேட்பார்களாம்.

அளந்து ஊற்றிய பிறகும் மேற்கொண்டு சிறிது பால் ஊற்றுவார் அப்துல்லாபாய். அதற்குக் கொசுறு என்று பெயர். சில பாட்டிமார்கள் அவரிடம் போராடி அதிகப்படியான கொசுறு வாங்கிச் செல்வதை நான் பார்த்ததுண்டு.

காஜா பாய் எப்பொழுதும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் மட்டுமே கொண்டுவருவார்.  ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் இரண்டு ஆழாக்கு கொள்ளும். சிலநேரம் பால் நுரைத்துக் கொண்டிருந்தால் பாட்டிலை மீறி வழிந்துவிடும். அதை லுங்கியால் துடைத்துக்கொள்வார். லுங்கியின் அழுக்கு, பாலில் கலந்துவிடுமோ என்று பயப்படுவேன். அதைப் புரிந்துகொண்டவர் மாதிரி முறைப்பார். மற்றவர்களுக்கு அலுமினிய ஆழாக்கில் அளந்து ஊற்றும் அப்துல்லா பாய், காஜாபாய்க்கு மட்டும் அளக்காமல் ஊற்றுவார். எப்படியும் ஹார்லிக்ஸ் பாட்டிலில் இரண்டு ஆழாக்குக்கு மேல் கொள்ளாது என்று தெரியும்.

வாரத்தில் மூன்று நாட்களாவது நான் போய் பால் வாங்கிவர நேரிடும். (மற்ற நாட்களில் அப்பாவே போவார்.) கையில் இரண்டு கூஜாக்களை ஏந்திக்கொண்டு இருட்டும் வெளிச்சமுமாக இருக்கும் அதிகாலைப் பொழுதில் சில்லென்று வீசும் குளிர்காற்றைத் தாங்கிக்கொண்டு, தெரு நாய்களின் குரைப்புகளுக்கு அஞ்சாமல் வீரநடை போட்டு அப்துல்லா பாயின் கியூ வரிசையில் நிற்பேன்.

ஆனால் என்னைப் போன்ற சிறுவர்களை அதிகநேரம் நிற்கவிடமாட்டார் அவர். கையால் அழைத்து, கூஜாவை அவரே வாங்கித் திறந்து, ஒன்றில் ‘திக்’கான பசும்பாலும், இன்னொன்றில் சற்றே நீர்த்த பசும்பாலும் நிரப்பிக்கொடுப்பார். மற்றவர்களை ‘எவ்வளவு ஆழாக்கு வேண்டும்’ என்று கேட்பவர், என்னிடம் கேட்கமாட்டார். கொண்டுபோகும் பாத்திரம் எதுவானாலும் நிரப்பிக்கொடுத்துவிடுவார்.

அப்பாவைப் பார்க்க மாதம் ஒருமுறையாவது வருவார்.  வரும்போதெல்லாம் கையில் ஒரு சொம்பில் சிறிதளவு பால் கொண்டுவருவார். முகர்ந்து பார்த்தால் ஒருமாதிரி நாற்றம் வரும். மாட்டின் பெயரைச் சொல்லி, ‘அதற்கு உடம்பு சரியில்லை என்று நினைக்கிறேன் சாமி, ஒங்க கையால தண்ணி மந்திரிச்சிக் குடுங்க’ என்பார். பல வருடங்களாக அப்பாவிடம் அவர் மந்திரித்துக்கொள்வது வழக்கம்.

அப்பாவுக்கு மந்திரங்கள் தெரியும் என்று சொல்வதைவிட, அக்கி, தேள்கடி, கண்திருஷ்டி போன்றவற்றிற்கு அப்பாவிடம் மந்திரித்து விபூதி வாங்கிக்கொண்டால் உடனே குணமாகும் என்று பலருக்கு நம்பிக்கை இருந்தது என்பதே சரி. இந்துக்கள் மட்டுமின்றி, கிறித்தவர்களும் முஸ்லீம்களும் கூட வருவதுண்டு. அப்துல்லாபாயும் அப்படி வந்தவர்தான். யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கமாட்டார் அப்பா.

அப்துல்லா பாய் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்து பசுமாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக வாங்கி, இப்போது ஏழு மாடுகள் ஆகிவிட்டன. சொந்தமாக வீடும் கட்டிவிட்டார். பால்வியாபாரமும் நேர்மையாக நடத்தி நல்ல பெயர் வாங்கிவிட்டார். அதனால் உறவினர்களுக்கு அவர்மீது பொறமை என்றும், தனது முன்னேற்றத்தைக் கெடுப்பதற்கு  பில்லி சூனியம் வைக்கவும் அவர்கள் முயற்சிப்பதாக அப்பாவிடம் கூறுவார். அதன் முதல்படியாக, நன்றாகக் கறந்துகொண்டிருக்கும் மாடுகள் திடீரென்று  குறைவாகக் கறக்கும் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டு அறவே கறக்காமலும் போகும். அப்போதெல்லாம் அப்துல்லா பாய் அப்பாவிடம்தான் வருவார்.

அவர் கொண்டுவந்த பாலைக் கீழே கொட்டிவிட்டு, சொம்பை நன்றாகக் கழுவிவிட்டு கிணற்றிலிருந்து புதிய தண்ணீரை அதில் நிரப்புவார் அப்பா. வாசலில் இருந்த வேப்பமரத்தில் இருந்து ஒரு கொத்தைப் பறித்து, அந்தக் கொத்தால் சொம்பு நீரை நன்றாகக் கலக்கி, ஏதோ மந்திரங்கள் சொல்லி, பாயின் மீது லேசாகத் தெளிப்பார். பிறகு அக்கொத்தை வெளியில் எடுத்து சொம்பை மூன்றுமுறை சுற்றி வடக்குப் பக்கம் வீசுவார். இன்னொரு புதிய வேப்பிலை கொத்தைப் பறித்தெடுத்து, நன்றாகக் கழுவி, பாயிடம் கொடுப்பார்.  

அதன்பிறகு என்னசெய்யவேண்டும் என்று அப்துல்லா பாய்க்குத் தெரியும். வேப்பிலை கொத்தால் சொம்புத் தண்ணீரைப் பால் மடியின்மீது தெளிக்கவேண்டும். நோய்வாய்ப்பட்ட பசு மட்டுமின்றி, வீட்டில் உள்ள எல்லாப் பசுக்களுக்கும் தெளிக்கவேண்டும். வேப்பிலை கொத்தை வாசல் நிலைப்படியின் உச்சியில் செருகிவைக்கவேண்டும். 

அப்துல்லா பாய் சொம்பையும் வேப்பிலை கொத்தையும்  வாங்கிக்கொண்டு எழுந்திருப்பார். ‘ஒங்க கைராசி எனக்கு எப்பவும் பலிக்குது ஐயரே!’ என்று நன்றியோடு சொல்லுவார். அதற்குள் அம்மா காப்பி கொண்டுவருவார். அதைக் குடித்தபின், என்னைப் பார்த்து, ‘நல்லாப் படிக்கிறியா? என்பார். தலையாட்டுவேன். ‘ஷமீம் வீட்டுல படிக்கிறதே இல்ல. எப்பவும் கன்னுக்குட்டிகளோட வெளையாடிட்டே  இருக்கான். நீ அப்பப்ப வந்து அவனுக்குச் சொல்லிக் குடுக்கிறியா?’ என்று கேட்பார். அப்பாவும் ‘தாராளமா போய்ட்டு வாடா!’ என்று அனுமதிப்பார்.  

சில நாட்கள் கழித்து நான் பால் வாங்கப் போனால் அப்துல்லா பாய் முகம் மலர்ந்து சிரிப்பார். ‘அந்தப் பசு இப்போ நல்லாக் கறக்குதுன்னு அப்பா கிட்ட சொல்லிடுப்பா’ என்பார். ஒரே ஒரு ஆழாக்குப் பால் தான் அன்று வாங்கிவரச் சொன்னார்கள். அதற்கு முக்கால் ஆழாக்கு ‘கொசுறு’ ஊற்றினார் அவர்.
***
எதிர் வீட்டில் ஓர் இளம் தம்பதி குடியிருந்தனர். ஒரு கைக்குழந்தை இருந்தது. ஒரு பாட்டியும் இருந்தார். வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் கோவிலுக்குத் தவறாமல் போவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளிலும் பிற விடுமுறை நாட்களிலும் திருவலம், வள்ளிமலை, சோளிங்கர்  என்று போவார்கள். பக்தி மிகுந்த குடும்பம்.

ஒரு நாள் அதிகாலையில் அவர்கள் வீடு பரபரப்பாக இருந்தது. வாசலில் ஒரு ஜட்கா வண்டி வந்து நின்றது. குழந்தையை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறினார்கள் கணவனும் மனைவியும். பாட்டி மட்டும் ஏறவில்லை.

‘நெறைய பேர் வரிசையில் நிற்பார்கள். சின்னக் குழந்தை, அழும், என்று சொல்லி முதலாவதாகப் போய்விடு’ என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

ஜட்கா வண்டி கிளம்பிப் போனதும், பாட்டியிடம் கேட்டேன். குழந்தை வயிற்றால் போகிறதாம். லேசாக ஜூரமும் இருக்கிறதாம். பஸ் நிலையம் அருகில் உள்ள தர்காவில் சாம்பிராணி ஊதிக்கொண்டு வருவதற்காகப் போகிறார்களாம்.

நீண்ட தாடி வைத்த ஒரு முஸ்லீம் முதியவர், கையில் நீண்ட கைப்பிடி கொண்ட சாம்பிராணிக் கிண்ணத்தை ஏந்திக்கொண்டு, அதில் வரும் புகையை ஒரு நீண்ட மயிலிறகினால் குழந்தைகளின் முகத்தில் பட்டும் படாமலும் ஊதிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். முஸ்லீம் குடும்பங்களை விட அதிகமாக இந்துக்களே அங்கு இருப்பார்கள்.

பாட்டி சொன்னார்: ‘சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் தர்காவில் சாம்பிராணி ஊதினாலே போதும். டாக்டர்களிடம் போகவேண்டியதில்லை. உடனே சரியாகிவிடும்’.

அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு! என் மதம் வேறு, உன் மதம் வேறு என்று யாரும் பேசியதில்லை. மனிதாபிமானம்தான் முக்கியமானதாக இருந்தது.
***
அப்துல்லாபாய் இப்போது இல்லை. ஏழு பசுமாடுகளும் இல்லை. ஷமீம் சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறானாம். 

என் அப்பாவும் இல்லை. இராணிப்பேட்டையைவிட்டு நாங்கள் சென்னைக்கு வந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. சென்னையிலிருந்து வேலூர் போகும்போதெல்லாம் அந்த தர்கா தெரிகிறதா என்று எட்டிப் பார்ப்பேன்.

நீண்ட கைப்பிடியுள்ள சாம்பிராணிக் கிண்ணம் ஒன்று தெரிகிறது. அதிலிருந்து நறுமணம் பஸ் வரை பாய்கிறது. நீண்ட மயிலிறகைக் கையில் ஏந்தியபடி, ஒருவர் தயாராக நிற்பதைப் பார்க்கிறேன். தாடியிலிருந்து தெரிகிறது, இவர் வேறு யாரோ.

கைக்குழந்தையோடு சில தாய்மார்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். சிலர் முஸ்லீம்கள். பலர் முஸ்லீம் அல்லாதவர்கள்.
***
© Y Chellappa


35 கருத்துகள்:

  1. இருபுறமும் கலந்து அருமையான நிகழ்வுகளை சொன்னவிதம் அழகு

    அன்று மதம் இல்லை மனிதம் மட்டுமே வாழ்ந்தது இன்று ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே, அன்று மனிதர்கள் இருந்தார்கள். சுயநலம் என்பது ஓர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. காலம் மிகவும் மாறிவிட்டது.

      நீக்கு
  2. மிகவும் அருமையானதோர் படைப்பு.

    இதையெல்லாம் நானும் என் அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன்.

    ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அன்பும், நேர்மையும், மனித நேயமும் மட்டுமே இவற்றில் நிறைந்துள்ளன.

    அனுபவங்கள் ஒவ்வொன்றையும் அப்படியே சொற்களாக ஆக்கி, எழுத்தில் கொண்டு வந்து, படிப்போருக்கு ஓர் போதை ஏற்படுத்துவது என்பது, தங்களைப்போன்ற வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.

    மனம் நிறைந்த பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டை மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதுகிறேன். தாங்கள் எழுதியதில் பத்தில் ஒரு பங்குதான் நான் இதுவரை எழுதியிருக்கிறேன். மேலும் எழுத உற்சாகம் தருகிறது உங்கள் கருத்தூட்டம்.

      நீக்கு
  3. பாருங்கள்! அன்று முஸ்லிம், கிறித்தவர், இந்து என்ற பாகுபாடு இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று இப்படி ஏன் மதக்கலவரம், வெறுப்பு என்று மனிதம் போகிறது? அன்றும் அரசியல்வாதிகள் இருந்தார்கள்தானே!!!

    சுவாரஸ்யமான நிகழ்வுகள் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று காந்தியம் என்ற கொள்கையின் பாதிப்பு இருந்ததால், அரசியல்வாதிகளின் சுயநலம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்றோ 'இந்திராகாந்தியம்', 'கருணாநிதீயம்', 'அம்மாவியம்' போன்றவையன்றோ நிலவுகின்றன!

      நீக்கு
  4. சென்னையில் சிறுவயதில்1944 வாக்கில் இருந்தபோது வீட்டு முன்னே பால் கொடுக்கும் பசுவைக் கட்டி பால் கறந்து கொடுப்பார்கள் கன்று இல்லாவிட்டால் வைக்கோலை கன்று மாதிரிக் காட்டிக் கறபதையும் பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1990 வாக்கில் கூட, சென்னையில் வீட்டுக்கு வீடு மாடுகளைக் கொண்டுவந்து கட்டி, பால் கறந்து கொடுப்பது வழக்கத்தில் இருந்தது. இடங்களின் விலை உயர்ந்துபோனதாலும், நகரத்திற்குள் மாடு வளர்க்கத் தடை விதிக்கப்பட்டதாலும், இந்த வழக்கம் நின்றுபோயிற்று. பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகம் வந்தபிறகு மக்களும் அவற்றையே ஆதரிக்க ஆரம்பித்தனர். எல்லாம் கால மாற்றம்தான்!

      நீக்கு
  5. மனிதாபிமானம் இன்னும் பல இடங்களில் (இங்கு) உள்ளது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக! நம்மால் முடிந்த அளவுக்கு நாமும் பரப்புவோம் மனிதநேயத்தை!

      நீக்கு
  6. மதம் தாண்டிய மனித நேயம், நட்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சேதி நண்பரே! மனிதநேயம் ஒன்றுதான் எல்லா வேறுபாடுகளையும்ம கடந்து மனிதர்களை ஒன்றாக்கும். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  7. மாற்று மத நம்பிக்கையிலும்
    நம்பிக்கை கொள்ளுதல்
    மனித நேயத்திற்கு ஒரு
    அடிப்படை அம்சம்

    அதைத் தகர்க்கத்தான்
    இருபுறம் உள்ள அடிப்படைவாதிகள்
    ஆவன் செய்து கொண்டிருக்கிறார்கள்

    அற்புதமான கதை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நிகழ்வுகள் அனைத்தும் கண்ணெதிரில்..

    தங்களுடைய கைவண்ணம் அருமை..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. மதம் வேறாக இருந்தாலும் பெரும்பாலோர் பேதமின்றித்தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூற்றுக்கு தொண்ணூறு சதம் அமைதியாகத்தான் பழகுகிறோம் என்பதில் ஐயமில்லை. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  10. அனுபவம் நல்லா இருக்கு. ஷமீம் இன்னும் வேலை பார்ப்பதாக எழுதியிருக்கீங்க. உங்கள் வகுப்புத் தோழன். ..??

    காணாமல் போன மனித நேயத்தை நல்லாக் கொண்டுவந்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷமீம் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறான்.

      நீக்கு
  11. என்ன ஒரு நினைவோடை.. நானும் கூட என் முதல் பையனுக்கு தர்காவில் சென்று ஓதி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். பாய் வீட்டு பசுமாட்டுக்கு பாத்திமா என்று பெயர் வைக்கவில்லை பாருங்கள். லட்சுமி என்றுதான் பெயர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இராணிப்பேட்டையில் பார்த்திருக்கிறேன். கிறித்தவர் வீட்டு பசுமாட்டுக்கும் லட்சுமி என்றுதான் பெயர் இருக்கும்!

      நீக்கு
  12. இன்றும் இங்கே மதுரை தெற்கு வாசல் தர்காவில் ,மதத்தை மறந்து சாம்பிராணி மயிலிறகு ஒத்தடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது !மதத் தீவிரவாதிகள்தான் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார்கள் :(

    என் வருகை ,த ம வாக்கு போடாமல் நிறைவு பெறாது ,போன பதிவில் வரும் த ம வாக்குப் பெட்டி இந்த பதிவிலே காணாமே ,எந்த காக்கா தூக்கிட்டுப் போச்சு :)

    பதிலளிநீக்கு
  13. இப்போது வந்தேன் ,வாக்குப் பெட்டி வந்து விட்டதால் ,என் ஜனநாயகக் கடமையைச் செய்து விட்டேன் :)

    பதிலளிநீக்கு
  14. தங்கள் கடமை உணர்ச்சிக்கு வாழ்த்துக்கள் தோழரே! தமிழ்மணம் மனம்போலச் செயல்படும் இளம்பெண்ணாக இருக்கிறதே! என்ன செய்வது!

    பதிலளிநீக்கு
  15. அப்துல்லாவிடம் ஏழு பசுக்கள் இருந்தன
    அது தலைப்பு - அப்பால்
    பால் வணிகம், பண்பாடு என
    அருமையாகச் சொன்னீர்கள்!

    பதிலளிநீக்கு
  16. அன்றும் இந்து.முஸ்லீம் கிறிஸ்து அடையாளத்துடன்தான் இருந்திருக்கிறார்கள் என்றுதான் எனக்கு தோன்நுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மனிதர்கள் ஏதேனும் ஒரு மதத்துடன் தங்களை அடையாளப்படுத்தித்தான் வாழ்ந்திருந்தார்கள். ஆனால் மதம் சார்ந்த வெறுப்புணர்வுகள் அப்போது குறைவே. தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  17. அருமையான நடை.

    வேறு வேறு மதத்தவர்களானாலும் சாதாரண மக்களிடையே பாகுபாடு இருப்பதில்லை.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என் சிறுகதை ‘மதம்’ படிக்க என் வலைத்தளத்திற்கு வாருங்கள்.

    இணைப்பு: http://manammanamveesum.blogspot.in/2017/04/blog-post_1.html

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வரவுக்கு நன்றி. தங்கள் தளத்திற்கு இன்றே வருவேன். சரியா?

      நீக்கு
  18. மனம் கவர்ந்த பதிவு. தலைப்பைப் படித்தவுடன் என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்ற மலையாள பஷீர் அவர்களின் கதை தலைப்பு நினைவுக்கு வந்தது. என் அம்மா ஊர் நாகூர். என் சிறுவயதில் பல நாட்கள் அம்மாவுடனும் பாட்டியுடனும் நாகூர் தர்கா சென்று பாத்தியா ஓதியிருக்கிறேன். முஸ்லீம்களும் இந்துக்களும் தாயாய்ப் பிள்ளையாய் வாழ்ந்த காலம். இப்போதோ? எல்லாம் சில பிரிவினைவாதிகள் செய்கின்ற சதி! நடை சுவையாயும் அற்புதமாயும் உள்ளது பாராட்டுகள் செல்லப்பா சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி. இந்தியாவின் அமைதியைக் குலைப்பதற்காக சில வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்கள் தொடர்ந்து செய்யும் சதியே, இன்று மதங்களுக்கு இடையே வேற்றுமையைப் பெரிய விரிசலாக்க முற்படுகிறது. நம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய தருணம் இது.

      நீக்கு
  19. எழுத்தோவியம் தீட்டியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு